உனக்காக ஏதும் செய்வேன் – 3

அத்தியாயம் – 3

நேற்று அகத்தியனை பார்த்த பின் இருவர் மனதிலும் ஆயிரம் உணர்வுகள் எழுந்தாலும் அதை பொருட்படுத்தாது அவர்களின் அளவில்லாத காதலால் அவற்றை புறம் தள்ளியவர்கள் இயல்பாகவே இருந்தனர்.

அதுவும் மகா இன்று தேதியை பார்த்ததும் அவள் மனதில் இருந்த சிறு வருத்தமும் காற்றில் பறந்தது.

உடனே சூர்யா விடம் போக அவனோ புத்தகத்தையும் நோட்டையும் வைத்துக் கொண்டு க்ளாஸ் க்கு லெசன் எடுக்க பிரிப்பேர் செய்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்றவள் “என்னங்க….?”,என ராகம் பாட,

அவளை திரும்பி பார்த்தவன் அவள் ராகத்தில் சிரித்துக் கொண்டே              “என்ன ம்மா?”, என மென்மையாக வினவினான்.

“இன்னைக்கு என்ன நாள் னு சொல்லுங்க பார்க்கலாம்?” , என சந்தோஷமாக கேட்க,

ஃபோன் சார்ஜ் ஏற அந்த பக்கம் இருந்ததால், உட்கார்ந்திருந்த இடத்தின் அருகில் சுவற்றில் மாட்டியிருந்த மாத காலண்டரை பார்த்து ” புதன் கிழமை மகா. “, என இயல்பாக கூறினான்.

அவன் பதிலில் அந்த உணர்வு மறைந்து கடுப்பாகி அவனை முறைத்தவள் , “அது தெரியுது”, என,

“அப்புறம் ஏன்டி கேட்கற?”, என கூறியவன் மீண்டும் புத்தகத்தை எடுக்க,

அதை வேகமாக பிடுங்கியவள், “அப்படி தெரிஞ்சே கேட்டா அது ஏதோ ஒரு முக்கியமான நாள் னு அர்த்தம். ஸோ காலண்டரை நல்லா பாருங்க “, என்றாள். 

அந்த காலண்டரில் முன்பே ஒரு நாள் அவள் இன்றைய தேதியை வட்டமிட்டு ஹார்ட்டின் சிம்பல் போட்டு வைத்திருந்தாள்.

முதலில் பார்க்கும் போது சரியாக கவனித்திருக்க மாட்டான் ஸோ மீண்டும் பார்த்தால் கண்டுபிடித்து விடுவான் என்ற எதிர்பார்ப்பில் அவனை பார்க்க, அவன் கூறியதை கேட்ட பின் அவனை வெட்டவா, குத்தவா என்பது போல பார்த்து வைத்தாள்.

அவன் கூறியது யாதெனில், “ஆமா மகா இன்னைக்கு பௌர்ணமி. அந்த முக்குல உள்ள கோவில் அ இன்னைக்கு நைட் பூஜை பண்ணி பொங்கல் போடுவாங்க ல. நைட் கண்டிப்பா போயிட்டு வரலாம் விடு”, என புன்னகையுடன் கூற ,

‘என்னது….? நான் என்னவோ பொங்கலுக்கு தவம் கிடக்கற மாதிரி பேசறாரே’ என மனதுக்குள் கறுவியவள்,

‘இந்த மனுஷன் என்ன கல்யாணம் பண்ண அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டாரு போல’ என நொந்தாலும்,

சற்று பொறுமையாக “நான் அத சொல்லல ங்க”, என சிணுங்கியவாறு கூற,

“மகா….நான் லெசன் பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன். சும்மா என்ன நாள் , என்ன ஸ்பெஷல் னு கேள்வி கேட்டு கிட்டு , அதுக்கு பதில் சொன்னா நான் அத சொல்லல னு சொல்லிக்கிட்டு. டிஸ்டர்ப் பண்ணாம போய் வேலைய பாரு” , என சலிப்பாக கூறவும்,

“ம்க்கும்…. அப்படியே நீங்க பிரிப்பேர் பண்ணி பாடம் எடுத்துட்டாளும்”, என அவன் பதிலில் கோபமாகி நக்கலாக பேச,

“ஏன் நான் நல்லாத்தான் பாடம் எடுப்பேன். நீ….என்ன சொல்ற….? குழந்தைகளுக்கு சொல்லி தர மொதல்ல உனக்கு அஆஇஈ, வாய்ப்பாடு லாம் தெரியுமா?”, என்றான் வம்பாக,

“என்ன பார்த்தா இதுலாம் தெரியாத மாதிரியா இருக்கு?”, என பாவமாக வினவ,

“நான் மட்டும் என்ன. நானும் ஒரு நல்ல லெக்சுரர் (Lecturer) தான்”, என பெருமையாக தன்னம்பிக்கையுடன் கூற,

“ம்க்கும் பெரிய லெக்சுரர்…. நீங்க பாடம் நடத்துனா அப்படியே எல்லாருக்கும் புரிஞ்சிடும் பாருங்க”, என அவள் தோளில் முகத்தை இடித்தாள்.

“அதெல்லாம் புரியும். நான் என்ன உன்ன மாதிரி குழந்தைகளுக்கு தாலாட்டா பாடறேன்”, எனவும் அவனை முறைத்தவள் மேலும் சண்டைக்கு வர தயாராவதை உணர்ந்து அதை தடுக்க “விட்டா பேசிட்டே இருப்ப போடி”, என விரட்டினான்.

அவன் விரட்டவும் ‘மகா சரியான டியூப்லைட் அ கல்யாணம் பண்ணிருக்க நீ. ச்சே இந்த மனுஷனுக்கு எதையும் நேரா சொன்னதான் புரியுது. இவ்வளோ க்ளூ கொடுத்தும் பௌர்ணமி பொங்கல் னுட்டு’ என நொந்தவள் குளிக்க சென்றாள்‌.

அவள் சென்றதுதான் தாமதம் டக்கென சத்தமில்லாமல் வீட்டை சாத்தியவன் விரைந்து சென்று சில பொருட்களை வாங்கி வந்து அமைதியாக தன் பேக் ல் வைத்து விட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தான்.

அவள் வந்ததும் அவனும் சென்று குளித்து விட்டு சாப்பிடும் போதும், ரெடி ஆகும் போதும், கிளம்பும் போதும் என அத்தனை நேரமும் அவள் மீண்டும் மீண்டும் கொடுத்த க்ளூ வை கண்டுக்காதவாறு பேசியவன் அவளை நன்றாக வெறுப்பேற்றினான்.

அவனுக்கு புரிந்தது அவள் கூற வருவது. ஆனால் அதை உடனே ஒப்புக் கொண்டால் அவன் சூர்யா அல்லவே….! அவளை வேண்டும் என்றே சும்மா வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள் நடக்க ஆரம்பிக்க, அந்த கோவில் அருகில் வர நாம நேராவே சொல்லிடுவோம் என அவனிடம் திரும்ப,

அவனோ, “மகா வா கோவிலுக்கு போய்ட்டு போலாம்”, என கூற அவள் முகம் பிரகாசமானது.

“எதுக்கு கோவிலுக்கு போகனும்?”, என அவள் அவனுக்கு நியாபகம் வந்து விட்டதோ என ஆவலாக கேட்க,

“யார்ட்டயாச்சம் இன்னைக்கு நைட் பூஜையில பொங்கல் மட்டும் தானா இல்ல தக்காளி சாப்பாடும் போடறாங்களா னு கேட்க தான்”, எனவும் அவ்வளவுதான் அவளுக்கு டென்ஷன் எகிறிவிட்டது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்தவள், நங்கென அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.

ஆ….என தலையை தேய்த்தவாறு அலறியவன் “எதுக்கு டி தும்பிக்கை யில தட்டன?”, என பாவமாக வினவ,

“ஹன்….ஹன்….என்ன சொன்னீங்க திருப்பி சொல்லுங்க”, என ‘நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு’ என்பது போல பார்க்க,

‘உண்மையா இருந்தாலும் இப்படியா சூர்யா சொல்லுவ’ என மனதில் தன்னை திட்டியவன்,

“எதுக்கு டி தலையில கொட்டன னு கேட்டேன்”, என அவனை நம்பாது பார்த்தவள் அதை விடுத்து அவனுக்கு நியாபகம் வராததால் உண்மையில் முகம் சோகமாக மாற,

அதைக் கண்டு விளையாட்டை விட்டவன், அவன் பேக் ஐ ஓபன் செய்து அதில் உள்ள டைரி மில்க் சில்க் (Dairy Milk Silk (Rs.160)) ஐ எடுத்து சிரிப்போடு நீட்ட, அதை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வாங்கியவள் பின் அவன் கையில் குத்தியவாரு,

“ஏங்க இப்படி பண்றீங்க? உங்களுக்கு நியாபகம் வரல னு நான் எவ்வளவு ஃபீல் பண்ணேன் தெரியுமா?”, என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

( அந்த சாக்லேட் 🍫 ஐ தான் அவர்கள் ஸ்பெஷல் டே யில் அவன் அவளுக்கு வாங்கி கொடுப்பான். அதில் உள்ள அதிகமான தித்திப்பு போல தங்கள் காதலும் எப்போதும் இவ்வாறு அதிமாக தித்தித்துக் கொண்டே இருக்கும் என அவன் கூறுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் அதை தரும்போதே அவனுக்கு நியாபகம் உள்ளது என புரிந்து கொண்டாள்.)

அவள் கையை பிடித்தவன் “எப்படி மகா மறப்பேன். எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. இன்னைக்கு தான் நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆடிய கண்ணாமூச்சிய விட்டுட்டு பரஸ்பரம் லவ் பண்ண ஆரம்பிச்ச நாள். அத போய் மறப்பனா?”, என்றவன்,

“சும்மா விளையாட்டுக்கு பண்ணேன். வா போய் சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சண்டை போடுவோம்”, என அவளை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

தன் பேக் கில் இருந்து பூஜைக்கு தேவையானவற்றை வெளியே எடுக்க, “இந்த பேக் ல நான் எதிர் பார்க்காத, எனக்கு தெரியாம நிறைய பொருள் இருக்கில்ல ங்க” , என அவள் அழுத்தமாக கூற , திருதிருவென முழித்தவன் அவளை பரிதாபமாக பார்த்தான்.

“முழிய பாரு. சரியான திருட்டு பையன் நீங்க”, என அவனை திட்ட,

அதை பொருட்படுத்தாது அவளை சமாதானம் செய்ய “ம்…ஆமா அது உண்மதான் மகா…. ஆனால் நான் திருடனதுலையே ரொம்ப பிரீஷியஸ் ஆனது உன் ஹார்ட் தான் தெரியுமா” , என லவ் டையலாக் விட அவளுக்கு கோபம் மறைந்து வெட்கமும் சிரிப்பும் வந்துவிட்டது.

அதை இரசித்தவன் அந்த பொருட்களை அங்கிருந்த ஐயரிடம் கொடுத்து அவர்கள் இருவர் பெயரையும் சொல்லி, பூஜை செய்ய சொல்லிவிட்டு கண்களை மூடி இருவரும் தெய்வத்தை வணங்கினர்.

அவளை எப்போதும் சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அவனும், அவனோடு என்றும் இதே போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவளும் வேண்டி கொண்டனர்.

மேலும் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து சீக்கிரம் நல்லது நடக்க வேண்டும் என்றும் வேண்டிய பின் கண்களைத் திறந்தனர்.

பூஜை முடிந்து நீட்டிய குங்குமத்தை அவள் வகிட்டில் வைத்தவன், நெற்றியில் வைத்து கண்ணில் படாமல் இருக்க மெதுவாக கண்ணை மறைத்தவாறு ஊதி விட, அவளும் அவன் நெற்றியில் திருநீற்றை பூசி அவ்வாறு ஊதினாள்.

இனிமையான அழகான அந்த நேரத்தை இரசித்தவாறு கோவிலில் சற்று நேரம் உட்கார்ந்து விட்டு கிளம்பினர் தங்கள் பணிக்கு.

******

அன்று காலையிலிருந்து மனையாளின் மனதில் என்ன இருக்கிறது என அறிய முயன்று ஒன்றும் புரியாமல் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அகத்தியன்.

அவள் முகத்தில் கோபமும் தெரியவில்லை அதே சமயம் அவள் இயல்பாக இல்லை என்பதும் அவனுக்கு புரிந்தது. ஆனால் என்ன நினைக்கிறாள் என புரியவில்லை.

எதையும் காட்டாது புறப்பட்டவன் மொபைலை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

வேகமாக அவன் நின்றிருந்த இடத்தை தாண்டி சென்றவள் அங்கிருந்த மேசையில் காலை இடித்து கொண்டாள்.

அதை பார்த்ததும் சட்டென அருகே அவன் செல்ல அதை கூட உணராது அவள் கண்மூடி வலியில் ‘ஸ்’ என முனகி கொண்டிருந்தாள்.

“கீர்த்தி” என்ற அழைப்பில் கண்ணைத் திறக்க, அவள் முகத்தில் வலியை உணர்ந்தவன், எந்த தயக்கமும் இல்லாமல் குனிந்து அவள் பாதத்தை பிடித்து பார்த்தான். அவன் அதை செய்யவும் சங்கடத்தால் நெளிந்தவள், “ஒன்னுமில்ல விடுங்க”, என விலக முற்பட்டு கூற,

அவனோ “ப்ச் இரு…. கண்ண இங்க பார்த்து நடந்து வரனும். நினப்பு லாம் எங்க தான் இருக்கோ”, என கடியவும் அமைதியானாள்.

“கால அசை…. வலிக்குதா” என்று வினவ, அவளோ அசைத்து விட்டு

லைட் ஆ வலிக்குது ங்க”, எனவும்,

“சுளுக்கி கிச்சு னு நினைக்கிறேன்”, என்றவன்,

அவளை அருகில் உள்ள சோஃபாவில் உட்கார வைத்து, மருந்தை எடுத்து வந்து அவளுக்கு அழுத்தமாக ஆனால் நிதானமாக தேய்த்து விட்டான்.

அவன் பாதத்தை அவன் சாதாரணமாக பிடித்திருந்தாலும் அவளுக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது.

“யாரும் வந்துட போறங்க ங்க. பார்த்தா எதும் நினச்சிப்பாங்க. கொடுங்க நான் போட்டுக்கறேன்”, என தயக்கமாக அவள் கேட்க,

“யார் வந்து என்ன நினச்சா என்ன. நீ கம்முனு உட்காரு”, என கண்டிப்புடன் கூறியதும் அவள் வாயை மூடிக் கொண்டாள்.

அவன் பாதத்தை பிடித்து இருப்பது அவளுக்கு என்ன உணர்வை கொடுக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவன் அருகாமை அவளுக்கு மிகவும் பிடித்தது.

அவனோ வலியில் இருப்பவளிடம் உதவியாக அதே சமயம் தயங்காமல் பாதங்களில் மருந்திட்டு அவளின் வலியை குறைக்க முற்பட்டான்.

அந்த நேரம் அவனுக்கு அவள் மீது அக்கறை மட்டுமே இருந்தது. அன்பை தான் வெளிப்படுத்த இயலவில்லை அக்கறையையாவது வெளிப்படுத்தலாம் என நினைத்தானோ….!

அவன் அந்த நேரத்தில் வேறெதுவும் சிந்திக்காமல் அவள் வலியை குறைக்க தன்னால் ஆனாதை செய்தான்.

ஆனால் அவள் அந்த அருகாமையை இரசித்தாள். இதுக்காகவே டெய்லி கால இடிச்சிக்கலாம் போலயே. இத்தன நாள் தெரியாம போச்சே….! என கிறுக்குத் தனமாக மனதில் நினைத்தவள் அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவனோ இயல்பாக மருந்தை தேய்த்து முடித்து விட்டு கையை கழுவிய பின், “ஓவர் ஆ ஓடிட்டே இல்லாம கொஞ்சம் உட்காரு”, என கூறிவிட்டு டைம் ஐ பார்த்தவன் நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பிவிட்டான்.

இன்றும் அவன் சொல்லாமல் சென்றது வருத்தமாக இருந்தாலும், அவனின் இந்த அருகாமையும், அக்கறையும், அந்த கண்டிப்பும் கூட அவளுக்கு தேனாக இனித்தது.

மெதுவாக அந்த மேசைக்கு அருகே சென்றவள் “தேங்க் யூ ஸோ மச்”, என சந்தோஷமாக அதனிடம் கூறிவிட்டு,

மெதுவாக தன் வேலையை முடித்தவள் தன் கணவனின் சொல்லுக்கு ஏற்ப தங்கள் அறையில் ஓய்வு எடுக்க சென்றாள்.

தலையனையில் சாய்ந்தவாறு அமர்ந்தவள் மனதில் நேற்றைய நிகழ்வால் வருத்தம் இருந்தாலும் இப்போது அதை விடுத்து மனதில் ஒரு வித இதமான உணர்வு இருந்தது.

எழுந்ததில் இருந்து ஏனோ என்றும் அவன் அன்பு கிட்டாதோ, இதே போல உரிமையுடன் பேச இயலாமல் அமைதியாகவே தன் வாழ்க்கை முடிந்து விடுமோ என்றெல்லாம் பயந்தே ஒரு வித அமைதியுடன் உலாவினாள்.

ஆனால் அவன் அவளிடம் இன்று காட்டிய அக்கறை அந்த மாதிரி இல்லை போல என அவளுக்கு சிறு நம்பிக்கையை தந்தது.

மேலும் பொதுவாக அவளுக்கு அவள் காலை யார் தொட்டாலும் பிடிக்காது. அவள் அம்மா கூட என்றாவது மருதாணி இட அழைத்தாலும் மறுத்து விடுவாள். அதனால்தான் இன்று அவன் காலை தொட்டதும் கூச்சம் வர விலக முற்பட்டாள். 

என்ன இருந்தாலும் அவன் இதை செய்ய யாரும் பார்த்து பொண்டாட்டி காலை நடு வீட்டில உட்கார்ந்து பிடிச்சிட்டு இருக்கான் னு பேசிட்டா. 

முக்கியமா அந்த பக்கத்து வீட்டு அக்கா…. ஐயோ ஊருக்கே பரப்பிடும். அதனால் தான் அவள் மறுத்தாள்.

ஆனால் அவனோ யார் வந்து என்ன நினச்சா என்ன என்றதும் வாயை மூடிக்கொண்டாள். மேலும் மேலும் அவனை மறுத்து பேச அவளுக்கு வரவில்லை.

தான் கொண்ட மகிழ்ச்சியில் அறையில் உள்ள அவன் புகைப்படத்தை பார்த்து வழக்கம் போல பேச ஆரம்பித்தாள்.

ஸ்டேஷனில் அகத்தியனோ இதையெல்லாம் அறியாது தன் வேலையில் மூழ்கி இருந்தான்.

தொடரும்….