உயிரின் ஒலி(ளி)யே 7

பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த அலுவலகம்.

எப்போது கிம்ஜின் நிறுவனம் தங்கள் ப்ராஜெக்ட்டை இவர்களிடம் கொடுக்க விருப்பமிருக்கிறது என்று சொன்னார்களோ, அப்போது ஆரம்பித்த பரபரப்பு இன்னும் முடியவில்லை.

சுழல் போல நிற்காமல் சுழன்று கொண்டிருந்த அந்த அலுவலகத்தையே அதிதியின் கண்கள் அளவிட்டு கொண்டிருந்தது.

அவள் விழிகளுக்கு ஏனோ, சுற்றியிருந்த அனைவரும் உணர்வு ததும்பும் மனிதர்களாகவே தெரியவில்லை, கடிவாளத்தில் அகப்பட்ட பந்தய குதிரைகளைப் போலவே தெரிந்தனர்.

எதற்காகவோ நிற்காமல் ஓடி கொண்டிருந்தனர். ஒன்றுமில்லாத அந்த மாய கயிற்றை முதலில் சென்று தொட இத்தனை பிரயத்தனங்கள் அவசியம் தானா?

கேள்வி நூல்கள் அவள் இதயத்தை சிக்கலாக்கிக் கொண்டிருந்த பொழுது “நோ” என்று அலறியது ஒரு குரல்.

வேகமாய் திரும்பிய அதிதியின் விழிகளில் விழுந்தது ஆதினியின் நடுங்கிய உருவம்.

அதுவரை  யோசனை வலையில் மீனாய் அடைப்பட்டு கிடந்தவள், கண்ணீரில் நீந்தி கொண்டிருந்த ஆதினியை நோக்கி வேகமாக ஓடினாள்.

“என்ன ஆச்சு?” அதிதி பதற்றமாய்க் கேட்க ஆதினியிடம் விசும்பல் அதிகரித்தது.

கையில் வைத்திருந்த கோப்புகளை பிடிக்க முடியாமல், மழையில் நடுங்கும் மலராய் நடுங்கி கொண்டிருந்த ஆதினியைக் கண்டு அவளுக்கு பதற்றம் மேலும் கூடியது.

“என்னமா ஆச்சு ஆதினி?” ஆறுதலாய் அதிதி தொட சட்டென்று அவள் தோளுக்குள்  தஞ்சம் புகுந்தாள் ஆதினி.

அவள் முதுகை வருடிக் கொடுத்தபடியே எதிரிலிருந்த விக்ரமை அளவிட்டாள்.

அவன் முகம் சங்கடம் சங்கமிக்கும் கடலாய்.

அதைக் கண்டவளுக்கு எல்லோர் முன்பும் நின்று விவாதிப்பது சரியில்லை என்று புரிய வேகமாக பக்கத்திலிருந்த அறைக்கு கூட்டி சென்றாள்.

“ஏன் ஆதினி இவ்வளவு பயந்துப் போய் இருக்கா? என்ன நடந்தது?” அவளின் கேள்வி விக்ரமை மேலும் சங்கடப்படுத்தியது.

“என் கை தெரியாம ஆதினி மேலே பட்டுடுச்சு. இட்ஸ் ஜஸ்ட் எ ஆக்ஸிடென்ட் எனக்கு எந்தவிதமான தப்பான இன்டென்ஷனும் இல்லை.பட்…” தயக்கத்தில் ததும்பியபடி சொன்னவன் முழுவதாய் வாக்கியத்தை முடிக்காமல் ஆதினியின் முகத்தை இயலாமையோடு பார்த்தான்.

அதுவரை அதிதியின் இதய பலூனில் நிறைந்திருந்த அழுத்தக்காற்று அவன் வார்த்தைகளில் சட்டென உடைந்துப் போனது.

‘சே இந்த சின்ன விஷயத்திற்காகவா, இவள் இத்தனை பிரளயங்கள் நிகழ்த்தினாள்?’ ஆயாசத்தோடு திரும்பி ஆதினியைப் பார்த்த சமயம் கதவைத் திறந்து கொண்டு கார்த்திக்ராஜ் வேகமாக உள்ளே வந்தான்.

அதிதியின் அணைப்பிலிருந்தவள் ராஜ்ஜின் வருகையை உணர்ந்ததும்  வேகமாய் அவன் தோளில் சரண் புக எத்தனித்தாள். ஆனால் அதிதி விடவில்லை.

ஆதினியின் கைகளை இறுகப் பற்றியபடி ராஜ்ஜை நிமிர்ந்து நோக்கியவள்

“நான் ஆதினியைப் பார்த்துக்கிறேன். நீங்க போய் உங்க வேலையை கவனிங்க” கதவை சுட்டிக் காட்டி சொன்னாள்.

ஆனால் ராஜ் அசையவில்லை. அவன் பார்வை பெண்டுலம் ஆதினிக்கும் அதிதிக்கும் இடையில் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது.

“ராஜ், பண்ண சத்தியம் மறந்து போயிடுச்சா?” இந்த கேள்வி அதுவரை அசையாமல் இருந்தவனை தடுமாற செய்தது.

‘ஒரு வாரத்துக்கு ஆதினி விஷயத்திலே தலையிடக்கூடாது’ அதிதி அன்று கேட்ட சத்தியம் இன்று மனச்சுவற்றில் எதிரொலித்து அடங்கவும் அவன் முகமெங்கும் இயலாமையின் ஊற்று.

‘என் துயரை துடைத்துவிடேன்’ என்ற கோரிக்கையை கண்களில் சுமந்தபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த  ஆதினியை கண்டு மேலும் கலங்கிப் போனான்.

அவனுக்கு அவள் துயரைப் போக்க ஆசை தான், ஆனால் இடையில் தடையாக அதிதி நிற்கின்றாளே.

எதுவும் செய்ய முடியாமல் மௌனமாய் அந்த அறையை விட்டு  வெளியேறினான் கார்த்திக் ராஜ்.

அவன் சென்றதும் நேராக ஆதினியின் புறம் திரும்பியவள் “விக்ரம் கிட்டே சாரி கேளு” என்றாள் கண்டிப்பாக.

கண்ணீரோடு நிமிர்ந்த ஆதினி, “நானா? ஆனால் அவர் தானே என்னை தப்பா தொட்டாரு” தந்தியடித்தபடி கேட்டவளைக் கண்டு  விக்ரமின் முகத்தில் ரௌத்திரம் குடிக் கொண்டது.

“ஆதினி, நான் ஏன் உன்னை தப்பா தொடணும். ஆம் ஐ வுமனைசர்?” அவன் வார்த்தைகளில் கோப குமிழிகளின் வெடிப்பு.

அந்த கோபத்தை எதிர் கொள்ள முடியாமல், ஆதினியின் உடல் ஒட்டு மொத்தமாய் நடுங்க துவங்கியதைக் கண்டு இயலாமையோடு தலையிலடித்துக் கொண்ட விக்ரம் வேகமாய் கதவை நோக்கி நடந்தான்.

ஆனால் வெளியே செல்லும் முன்பு ஆதினியை திரும்பி கூர்மையாய் ஒரு பார்வை பார்த்தான். குரலிலும் அதே கத்தியின் கூர்மை.

“ஆதினி, டோன்ட் பீ சோ சென்ஸிடிவ். மறுபடியும் முட்டாள் மாதிரி, முன்னாடி பண்ண அதே தப்பை பண்ணி வைக்காதே. நான் என்ன சொல்றேனு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” அழுத்தம் திருத்தமாக சொன்னவன் அங்கே நிற்க பிடிக்காமல், வேக வேகமாக சென்றுவிட்டான்.

விக்ரமின் வார்த்தைகளில் ஆதினியின் முகம் அவமானத்தில் சுருங்க, அதிதியோ புரியாத பாவனையை முகத்தில் காட்டினாள்.

“விக்ரம் என்ன சொல்லிட்டு போறார்?” இவளின் கேள்விக்கு ஆதினியிடம் அழுகையின் வெடிப்பு.

“நான் இந்த ஃபீல்டுக்கு கொஞ்சமும் ஒத்து வர மாட்டேன், அதிதி. இந்த வேலையை விட்டுட்டு ரிஸைன் பண்றது தான் எல்லாருக்கும் நல்லது” என்றாள் அழுகையின் ஊடே.

‘இந்த சின்ன விஷயத்திற்கு இத்தனை பெரிய முடிவு அவசியம் தானா!’ அதிதி குழப்பமாய் எதிரிலிருந்தவளைப் பார்த்தாள்.

இன்னும் அச்சம் விலகாமல் அழுது கொண்டிருப்பவளைக்  கண்டு அதிதி லேசாக இளகினாள்.

“ரிலாக்ஸ்” என்றபடியே பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட, வேகமாய் வாங்கிய ஆதினி தன் தொண்டையில் சரித்துக் கொண்டாள்.

அவள் நிதானப்படுவதற்கு இரண்டொரு நிமிடங்கள் தந்த அதிதி, மெதுவாக ஆரம்பித்தாள்.

“இங்கே பாரு ஆதினி, இது சின்ன விஷயம். இதுக்காக யாராவது ரிஸைன் பண்ணுவாங்களா?” கண்டிப்பும் மென்மையும் ஒரே விகிதத்தில் கலந்திருந்தது அவள் குரலில்.

“எது சின்ன விஷயம்? என்னை தொட்டதா! அவர் கைப்பட்ட இடம் எனக்கு இன்னும் எரியுது” ஆதினியின் விழிகளில் மீண்டும் கண்ணீர் வெடித்தது.

“ஆனால் அது தப்பான தொடுதல் இல்லையே,” அதிதி முயன்றவரை பொறுமையை இழுத்துப் பிடித்து பேச, ஆதினியின் முகத்தில் இன்னும் சமாதான சுடர் ஒளிரவில்லை.

“ஆதினி ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோ, எல்லா தொடுதலிலேயும் காமத்தோட ரேகை படிஞ்சு இருக்காது” என்ற வார்த்தைகளுக்கு இடம்வலமாய் தலையசைத்து மறுத்தவள் “இருக்கும்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“அன்னைக்கு அடிப்பட்ட சமயம் ராஜ் உன்னை தூக்குனாரே, அது தப்பான தொடுதலா?” வார்த்தைகளால் மடக்க முயன்றாள்.

அந்த கேள்வி ஆதினியை தவிப்புடன் நிமிர வைத்தது.

“என் அப்பாவுக்கு அப்புறம் ராஜ்ஜை மட்டும் தான் இந்த உலகத்துலே நான் நம்புறேன்” அவள் வார்த்தைகளில் நம்பிக்கையும் நெகிழ்வும் ஒருசேர போட்டி போட்டது.

“ஆனால் அவங்க ரெண்டு பேரை தவிர இந்த உலகத்துலே இருக்கிற எல்லா ஆம்பளைங்களையும் நான் சந்தேகப்படுவேன்” அதுவரை கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த ஆதினியின் முகம் இப்போது அக்னி ஜீவாலையாய்.

ஆதினியின் இந்த முகத்தைக் கண்டு அதிதி வேகமாய் பின்வாங்கினாள்.

கால்களைப் போல அதிதியின் காலமும் மெதுவாக பின்னோக்கி நடந்தது.

காலப்பெருவெளிகளில் எப்போதோ அடித்து செல்லவிட்டுப்பட்டதாக எண்ணிய நினைவுகள் மீண்டும் அதிதியின் மன கரையை உடைக்க பார்த்தது.

எந்த வேட்டை நிலத்திலிருந்து வேகமாய் தப்பித்தோடி வந்தாளோ, அதே வனத்தின் பொறிக்குள் அகப்பட்ட மானாய்  மருங்கி நின்றாள்.

ஆதினியின் வார்த்தைகளும், கலங்கிய முகமும் அதிதியின் உள்ளத்தை உடைக்க பார்த்த சமயம், “நான் எல்லாருக்கும் சைக்கோ மாதிரி தெரியலாம். ஆனால் எனக்கு எல்லா தொடுதலும் தப்பா தான் தெரியுது, அதான் உண்மை”  தலையில் அடித்துக் கொண்டு கேவினாள்.

அதுவரை நினைவு சுழலில் சிக்கிக் கிடந்த அதிதி, வேகமாய் ஆதினியின் வார்த்தைகளில் கரை அடைந்தாள்.

“ஆதினி, சேன்ஞ் யுவர் மைண்ட்செட் ஃபர்ஸ்ட்” என்றவளுக்கோ ஆதினியை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

நேற்று தனக்கும் ராஜ்ஜுக்கும் இடையில் நிகழ்ந்த சம்பவங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைய நம்பிக்கையோடு நிமிர்ந்தவள், எல்லாவற்றையும் ஆதினியிடம் விளக்கிவிட்டு தீர்க்கமாய் பார்த்தாள்.

“ராஜ் சடனா இழுக்கவும் இரண்டு பேரோட லிப்ஸ் முட்டிக்குச்சு. பட் நான் ராஜ் சட்டையை பிடிச்சு ஏன்டா இப்படி முத்தம் கொடுத்தேனு சண்டை போடலை. சட்டுனு கண்ணீர் விட்டு அவனை சங்கடத்துலே தள்ளலை..” அதிதி முழுவதாய் முடிக்காமல் இடைவெளிவிட்டாள்.

அதுவரை அழுகையில் அமிழ்ந்து கிடந்த ஆதினி, “ஏன்?” என்றாள் வேகமாக.

“ஏன்னா அவன் என்னை கிஸ் பண்ணனும்ன்ற இன்டென்ஷனோட பண்ணலை. அப்புறம் ஏன் நான் அவன் மேலே கோவப்படணும்?” அதிதியின் கேள்வி ஆதினியை யோசிக்க வைத்தது.

“மோர் ஓவர் எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எந்த ஃபீலிங்க்ஸ்ம் இல்லாதப்போ அந்த முத்தம், காரு மேலே மண்லாரி மோதுன ஃபீல் தான் கொடுத்துச்சு. காவிய உணர்வும் இல்லை கோவ உணர்வும் வரலை. இட்ஸ் ஜஸ்ட் எ ஆக்ஸிடென்ட் புரியுதா?” அதிதி அழுத்தம் கொடுத்து கேட்க, ஆதினிக்கு எதுவோ புரிவது போல புரிந்தது.

“அதே போல தான் விக்ரம்மோட கை உன் மேலே தெரியாம பட்டு இருக்கு, அதை அவர் உன் கிட்டே தெளிவா விளக்கின அப்புறமும் இப்படி அழறது சரியா? அது அவரை அசிங்கப்படுத்துறா மாதிரியிருக்காதா?”

அவளின் இறுதி கேள்வி ஆதினியை யோசிக்க வைத்தது.

“ஒருவேளை விக்ரம் உன்னை தப்பான இன்டென்ஷனோடவே தொட்டிருந்தாலும் இப்படி அழக்கூடாது. செவுலேயே ஒரு அறைவிடணும்” என்றாள் உக்கிரமாக.

“இங்கே பாரு ஆதினி நான் ரொம்ப அட்வைஸ் பண்றது உனக்கு எரிச்சலா கூட இருக்கலாம். பட் ஒரு விஷயம் மட்டும் தெளிவா புரிஞ்சுக்கோ. ஒரு பையன்,  பொண்ணோட சம்மதமில்லாம உடம்பை அபகரிக்கிறது மட்டும் கற்பழிப்பு இல்லை. ஒரு பொண்ணு  யோசிக்காம பையன் மேலே பழி போடறது இதுவரை அவன் பாதுகாத்து வந்த கற்பை அழிக்கிறா மாதிரி தான். அதுவும் கற்பழிப்பு தான்” அவள் குரலில் கடினத்தின் படிமங்கள். 

கண்ணீரோடு நிமிர்ந்தவளின் தோளை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவள், “டேக் யுவர் டைம் ஆதினி. உனக்கு எப்போ நெருடல் விலகுதோ அப்போ போய் விக்ரம் கிட்டே சாரி கேளு” என்றவள் ஆதினிக்கு தனிமை கொடுத்துவிட்டு அறைக் கதவை திறந்தாள்.

எதிரே பரிதவித்த முகத்தோடு ராஜ்.

ஆதினியின் மீது அவன் கொண்டிருக்கும் அளவிட முடியாத பாசம் இவள் புருவத்தை உயர வைத்தது.

கலக்கத்துடன் நின்றிருந்தவனை நோக்கி ஆறுதலாக முறுவலித்தவள், “ஷீ வில் பீ ஆல்ரைட். நான் சொன்ன விஷயம் அவளை பாதிச்சு இருந்தா கண்டிப்பா விக்ரம் கிட்டே சாரி கேட்பாள்” என்றாள் நம்பிக்கையாக.

ஆனால் அவளின் நம்பிக்கையை முறியடிக்கும் விதமாய் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள் ஆதினி.

“நான் அனுபவிச்ச வலிகள் என்னை இந்த உலகத்தை நம்பவிட மாட்டேங்குது. சாரி அதிதி” உடைந்த குரலில் சொல்லிவிட்டு சென்றவளை இயலாமையோடு பார்த்தபடி நின்றனர் இருவரும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

மாலை ஆறரை மணி.

கண்ணாடி கூண்டில் அடைப்பட்டிருந்த ஊழிய பறவைகள் வெளிவரும் தருணம்.

மிராண்டா பாட்டிலைப் போல பேருந்தில் கூட்டம் நிரம்பி வழியும் தருணமும் அது தான்.

வரிசையாய் கடந்துப் போன பேருந்துகளைப் பார்த்தபடியே அலைப்பேசியை கையில் எடுத்தவள் ராஜ்ஜுக்கு குறுஞ்செய்தி தட்டிவிட்டாள்.

 

‘ஆதினியோட பொறுப்பு இந்த ஒரு வாரம் என்னோடது. சோ நீங்க ட்ராப் பண்ண வேண்டாம். அவளைக் கொண்டு வந்து பஸ் ஸ்டாப்லே விடுங்க’

இந்ந  தகவலைப் பார்த்தவனின் கைகள் திறக்க போன கார் கதவை வேகமாய் அறைந்து சாத்தியது.

அவளுக்கு சத்தியத்தை கொடுத்தது ரயில் தண்டவாளத்திற்கு அடியில் தலையை கொடுத்ததைப் போல இருந்தது அவனுக்கு.

‘ஒருவித பதற்றத்திலேயே மனிதனை வைத்திருக்கிறாளே இவள்’ இயலாமை பொங்கி வழிந்தது அவன் முகத்தில்.

தன் முக பாவனைகளையே குழப்பமாய் பார்த்து நின்ற ஆதினியைக் கண்டவன் வேகமாய் சுயம் மீண்டு ‘கார் வொர்க் ஆகலை. பஸ்ல போலாமா?’ என்று தட்டச்சு செய்து காண்பித்தான்.

ஆதினி சம்மதமாக தலையாட்டவும் அவளை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தான்.

‘ஏன் ஆஃபிஸ் பஸ்லே போகாம அவுட் பஸ்க்கு நிற்கிற’ அவன் வாயசைவைப் படித்தவள் “ஒரு  காரணமா தான்” என்று புதிராக பதிலளித்துவிட்டு கூட்டம் நிரம்பி வழியும் பேருந்தில் ஏற முயன்றாள்.

ஆனால் ராஜ் இடையில் புகுந்து தடுத்து அலைமோதிய கூட்டத்தை சுட்டிக் காட்டி மறுத்தான்.

“லேட்டாக ஆக தான் பஸ்லே இன்னும் கூட்டம் நிரம்பி வழியும். ஒழுங்கா ஏறுங்க” அதட்டியபடி ஏறியவளைக் கண்டு இம்முறையும் இயலாமையோடு பெருமூச்சுவிட தான் அவனால் முடிந்தது.

பழரசம் போட விரும்புவோர் பழத்தை எடுத்துக் கொண்டு அந்த பேருந்திற்குள் ஏறினால் மட்டுமே போதும் உள்ளிருப்பவர்கள் நசுங்கும் நசுக்கலில் அதுவே ஜுஸ்ஸாக மாறிவிடும்.

அப்படியொரு இடிபாட்டில் அவன் சிக்கி அவஸ்தை பட்டு கொண்டிருக்கும் போது பக்கத்திலிருந்த ஆதினியும் அந்த கூட்டத்தில் திணறினாள்.

ஒரு ஆண் தன் மொத்த எடையையும் அவள் மீது சாய்த்துக் கொண்டு அத்துமீற முயல்வதைக் கண்டு ஆத்திரமானவன் கையை முறுக்கிக் கொண்டு அடிக்க எத்தனிக்க வேகமாய் அதிதி அவன் கைகளைத் தடுத்துப் பிடித்தாள்.

எரிச்சலோடு திரும்பி அதிதியைப் பார்த்தவன் ‘கையை விடு’ என்றான் ஆத்திரமாக.

இடம் வலமாய் தலையசைத்து மறுத்தவள் கண்ணீர் அலையில் நனைந்து கொண்டிருந்த ஆதினியின் கைகளை வேகமாய்ப் பிடித்து கூர்மையான  ஒரு சேஃப்டி பின்னை கொடுத்தாள்.

கை நடுங்க வாங்கியவளுக்கு முதலில் அந்த பின்னை வைத்து என்ன செய்வதென்றே ஓரிரு கணம் புரியவில்லை. ஆனால் பின்னாலிருந்தவனின் அத்துமீறல் அதிகமாகிக் கொண்டு போவதை உணர்ந்தவளுக்கு ஏதோ ஒன்று புரிய அந்த கூரிய பின்னை சட்டென்று அவன் தொடையில் இறக்கினாள்.

‘ஆஆஆ’ என்ற மெல்லிய சப்தத்தோடு அவன் விலகிக் கொள்ளவும் அடுத்தடுத்து ஆதினியை உரச வந்தவர்களும் ஆ என்ற அலறலோடு வேகமாய் பின்வாங்கிய சமயம் ஆதினி இறங்கும் இடத்திற்கு பேருந்து வந்து நின்றது.

ராஜ் கைகளால் அரண் அமைத்தபடி முன்வாசல் வரை கொண்டு வந்து அவளைவிட்டான்.

அவனுக்கு கண்களாலேயே நன்றி சொல்லி இறங்கியவள், அதிதி தன் கையில் கொடுத்த பின்னைப் பார்த்தாள். வல்லூறுகளின் கொடிய ரத்தம் அதில் சொட்ட சொட்ட வழிந்து கொண்டிருந்தது.

இதுவரை இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் கொள்ள முடியாமல் பயந்து ஓடிக் கொண்டிருந்தவள் முதன்முறையாய் எதிர்த்து நின்றதன் சந்தோஷம் அவள் முகத்தை கவ்விப் பிடித்தது.

வேகமாய் ஜன்னல் வழியே அதிதியைப் பார்த்தவள் “தேங்க்ஸ்” என்று கண் கலங்க உரைக்க சிறுபுன்னகையோடு மறுத்து தலையசைத்தாள் அதிதி.

அவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு படியில் நின்று கொண்டிருந்த ராஜ் புன்னகையோடு மேலேறினான்.

பேருந்தும் அந்த நிறுத்தத்திற்கு பிறகு காலியாகிவிடவும் அதிதி கிடைத்த இடத்தில் வேகமாய் சென்று அமர்ந்தாள்.

அவளுக்கு அருகே காலியாய் இருந்த இன்னொரு இருக்கையில் ஒரு ஆண்மகன் அமரப் போவதைக் கண்ட கார்த்திக் ராஜ் சட்டென்று  ஓடி வந்து அந்த இருக்கையில் அமர்ந்தான்.

“மியூசிக்கல் சேர் கேம் விளையாடுறீங்களா ராஜ்?” அவள் குரலில் கேலி தொனித்தது.

அவன் பதில் பேசாமல் மௌனித்திருக்கவும் “அந்த கிறுக்குப் பயலை அட்டாக் பண்றதுக்காக இந்த பின்னை எடுத்து வெச்சு இருந்தேன். பட் நீங்க வந்து உட்கார்ந்ததாலே  பின்னுக்கு வேலை இல்லாம  போயிடுச்சு” ராஜ்ஜுக்கு மட்டுமே புரியும் படி வாயசைத்தவள் கையிலிருந்த பின்னை பைக்குள் போட்டுவிட்டு இலகுவாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

ஆனால் ராஜ்ஜால் அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை. முதன் முறையாக பேருந்துக்குள் நடக்கும் அத்துமீறல்களை பார்த்தவனின் உள்ளம் எரிமலையின் கொதிப்பாக.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு அவன் பெரும்பாலும் பொது பேருந்துகளில் பயணித்ததே இல்லை.

அலுவலகப் பேருந்து அதை விட்டால் தன்னுடைய தனிப்பட்ட கார். இதில் மட்டுமே பயணித்து பழகியவனுக்கு இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி பெண்கள் படும் அவஸ்தைகளின் வலியை வேதனை தருவதாய்.

வேகமாய் திரும்பி அதிதியைப் பார்த்தவன், “இனி பஸ்லே வராதே. நானே இனி உன்னை ட்ராப் பண்றேன்” என்றான் தீர்க்கமாக வாயைசத்து.

அதைக் கண்டு நமட்டு முறுவல் பூத்தவளின் உதடுகள் “ஏன்?” என்றது கேள்வியாக.

“இங்கே நிறைய கேவலமானவனுங்க இருக்காங்க. இவங்களுக்கு இடையிலே நீ வர வேண்டாம்னு தான்” இறுக்கமாய் வாயசைந்தது அவன் உதடுகள்.

“என்னாலே இந்த கேடு கெட்ட ஜீவன்களை தைரியாம எதிர்த்து நிற்க முடியும் போது நான் ஏன் பயந்து வேற வழியிலே ஓடணும்” அதிதியின்  கூர்மையான கேள்வி ராஜ்ஜை ஆச்சர்யமாக பார்க்க வைத்தது.

“பொண்ணுங்களை பாதுகாக்கிறது இவ்வளவு மெனக்கெடுறதுக்கு பதிலா,  எப்படி எதிர்த்து நிற்கணும்னு அவங்களுக்கு கத்து கொடுத்தா போதும் அவளே தன்னை பாதுகாத்துப்பா, யாரையும் நம்பி நிற்க வேண்டிய அவசியம் வராது பாருங்க” அதிதியின் முதிர்வான பேச்சால் ராஜ்ஜின் முகத்தில் ஆச்சர்யத்தின் ரேகைகள் படர்ந்தது.

“நான் ஆதினியை பாதுகாக்கணும்னு நினைக்கலை, எதிர்த்து நிற்க கத்துக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். நான் ஏன் உங்களை ஆதினி கிட்டேயிருந்து விலகி நிற்க சொல்றேன்ற காரணம் இப்போ புரியும்னு நினைக்கின்றேன். விலகி நிற்பிங்க தானே இனி?” அதிதியின் கேள்வியும் வார்த்தைகளும் அவனை தன்னால் தலையாட்ட வைக்க,

“இந்த ஒரு வாரம் இனி உன் ராஜ்ஜியம் தான். நடத்துங்க மேடம்” என்றான் முகத்தில் குறும்பு கூத்தாட.