எந்நாளும் தீரா காதலாக – 21

th (1)-82c18dbd

 💝21

அர்ஜுனிடம் விடைப்பெற்று தனது வேலைக்குச் சென்ற சிவாத்மிகாவிற்கு, வேலை தான் ஓட மறுப்பதாய்.. அன்று கேசவனைப் பார்த்தது, அவர் பேசியது என்ற மனதின் அலைப்புறுதலும், அலைச்சலும் வேறு சோர்வைக் கொடுத்திருக்க, வேலை நீண்டுக் கொண்டே சென்றது. அதை விரட்டி அடித்தது அர்ஜுனின் அன்பும், அவன் அனைவரிடமும், பெருமையாக அவளை அறிமுகப்படுத்தியதும் தான்..

தான் அர்ஜுனின் பக்கத்தில் சுமாராக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்க, கேசவனின் மகன் கூறிய, ஜோடிப் பொருத்தம் அவளது மனதை குளிர்வித்து இருந்தது. அதோடு அவளைப் பார்த்த அர்ஜுனின் படத்தின் ஹீரோயின், ‘யு லுக் கார்ஜியஸ். அர்ஜுன் அன்னைக்கு அப்படி சிரிச்சு பேசிட்டு இருக்கும்போதே நான் கேட்டேன்.. பதில் சொல்லாம சிரிச்சே சமாளிச்சுட்டு போயிட்டார்.. அப்போவே ஏதோ ஸ்ட்ரைக் ஆச்சு..’ என்று அவளிடம் சொன்னவள்,

‘அர்ஜுன்.. சூப்பர் செலெக்ஷன்..’ என்று அவனிடம் கையைக் காட்ட, சிவாத்மிகாவின் மனதில், தனது அழகைப் பற்றி இருந்த சிறு நெருடலும் விலகுவதாய் இருந்தது.. அன்றைய நாளின் கோபம், துக்கம், சந்தோஷம் என்று அடுத்தடுத்து நடந்த உணர்ச்சிப் போராட்டத்தில் அவளது மனமும், உடலும் சோர்வடைந்து போனது.      

வேலை செய்யத் தொடங்கியதும், அவ்வப்பொழுது அவனது நினைவுகளும் மனதினில் வந்து மோத, விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் தத்தளித்தவளின் நாள் முடியாமல் நீண்டுக் கொண்டிருந்தது.         

அப்படி அவள் வேலை முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்க, அந்த டென்ஷனில் ராதாவிற்கு போன் செய்து, வரத் தாமதமாகும் விஷயத்தை சொல்லவும் மறந்து போனாள்.

ராதா பலமுறை அவளது போனிற்கு முயன்று தோற்று, அவளது பொட்டிக்கின் எண்ணிற்கு அழைக்க, அங்கு வேலை செய்யும் பெண்கள் வேலை நேரம் முடிந்து கிளம்பிக் கொண்டிருக்கவும், சிவாத்மிகா கிளம்புவதற்காக காத்திருந்த ப்ரியா போனை எடுத்தாள்.

“ஹலோ.. நான் ராதா பேசறேன்.. உங்க மேடம் அங்க இருக்காங்களா? அவங்க போன் ஏன் எடுக்கல?” என்று கேட்க,

“இங்க தான் இருக்காங்க.. கொஞ்சம் பிஸியா இருக்காங்க.. கூப்பிடவா?” என்று ப்ரியா கேட்கவும்,

“இல்லைங்க.. வேண்டாம்.. நான் போன் பண்ணினேன்னு மட்டும் சொல்லிடுங்க..” என்ற ராதா போனை வைக்கவும், அவளிடம் சொல்லச் சென்ற ப்ரியா, அவள் ஒரு டிசைன் துணியை தவறாக வெட்டி குப்பையில் போடவும், சொல்ல வந்ததை மறந்தவள்,

“என்னாச்சு மேடம்.. டிசைன் வரலைன்னா இன்னைக்கு விட்டுட்டு காலைல ஃப்ரீயா மைன்ட் ஆனதும் செய்ங்களேன்.. இன்னைக்கு நீங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கறது போல இருக்கு.. டயர்ட்டா வேற இருக்கீங்க.. காலையில ஃப்ரெஷ்ஷா பண்ணினா உடனே முடிச்சிடலாம்..” என்று சொல்ல, ‘ஹ்ம்ம்..’ என்று தலையசைத்தவள்,

“டைம் ஆச்சுன்னா நீங்க கிளம்புங்க ப்ரியா.. நான் இதை முடிச்சிட்டு போறேன்.. இதை நாளைக்கு அந்த ஸ்கூல்க்கு அனுப்பி அப்ரூவல் வாங்கிட்டா.. அந்த ஆண்டு விழா டிரஸ்க்கு ரெடி பண்ணிடலாம்.. இதே போல டிசைன்ல இருபது டிரஸ் கேட்டு இருக்காங்க.. அதோட அந்த ரியா ஹீரோயினோட டிரஸ் எல்லாம் ரெடி பண்ணனும்.. அடுத்த வாரம் அவங்களுக்கு புது படத்தோட ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றாங்க..” என்று அவள் வேலையிலேயே யோசனையோடு சொல்லவும், அதற்கு மேல் அவள் சொன்னால் கேட்கப் போவதில்லை என்று புரிந்த ப்ரியா, 

“சரிங்க மேடம்.. டைம் ஆச்சு.. நான் கிளம்பவா? நீங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவீங்கன்னா நான் வெயிட் பண்றேன்..” மீண்டும் கேட்கவும்,

“சரி ப்ரியா.. கிளம்புங்க.. எனக்கு இது எப்போ முடியும்ன்னு தெரியல..” என்றவள், நிமிர்ந்துப் பார்க்காமல் தனது வேலையைத் தொடர, ப்ரியா தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அப்பொழுதும் எதுவும் சரி இல்லாமல் போகவும், தலையில் கை வைத்து அமர, அந்த நேரம் ஷூட்டிங் முடித்து கிளம்பிய அர்ஜுன், வழமை போல அவளிடம் பேசுவதற்கு கால் செய்தான். அவளது செல்போன் வைப்ரேஷனில் அசையவும், அவளது கவனம் அதன் மீது செல்ல, அதில் அர்ஜுனின் போட்டோ வரவும், அவசரமாக எடுத்து போனை காதிருக்கு கொடுத்தாள்.  

“என்னடா சிட்டு.. வீட்டுக்கு போயாச்சா? எப்படி இருக்க? ஒண்ணும் நீ ஃபீல் பண்ணலையே..” என்று கேட்கவும்,

“இன்னும் கிளம்பவே இல்ல அஜ்ஜூ.. நாளைக்கு ஒரு ஸ்கூல் ஆனுவல் டேக்கு டிரஸ் டிசைன் கேட்டு இருந்தாங்க.. இது பிடிச்சு இருந்தா அவங்க அந்த பங்க்ஷன்க்கு தேவையான டிரஸ் எல்லாம் நம்மக்கிட்டயே தரேன்னு சொல்லி இருக்காங்க.. பெரிய ஸ்கூல் அஜ்ஜு.. அது தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. ஒரு மிஸ் இது போல வேணும்னு சொல்லி இருக்காங்க.. நானும் டிசைன் வரஞ்சு வச்சு கட் பண்றேன்.. எனக்கு கட் பண்ணவே வரல.. தப்புத் தப்பா போகுது.. கடுப்பா இருக்கு.. எல்லாருமே கிளம்பிட்டாங்க.. ஒண்ணே ஒண்ணு செஞ்சிட்டா கூட நாளைக்கு கொடுக்க கொஞ்சம் தைரியமா இருக்கும்..” அவள் தனது நிலையைச் சொல்லவும்,

“தனியா எல்லாம் நீ இருக்க வேண்டாம்.. அந்த துணி எல்லாத்தையும் நீ எடுத்துக்கிட்டு கிளம்பு.. ஒரு அஞ்சு நிமிஷத்துல நான் வரேன்.. என் கூட வீட்டுக்கு வர.. கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் ஆகிட்டு நீ செய்வியாம்.. நான் உன் கூட பேச்சுத் துணைக்கு நைட் முழிச்சு இருக்கேன்.. இப்போ கிளம்பி வெயிட் பண்ற.. என்ன?” எனவும்,

“சரி.. வரேன்.. இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியா இல்ல..” என்று புலம்பியவளிடம்,

“இன்னைக்கு நாளை நாம சிறப்பா முடிக்கலாம்.. நீ கிளம்பி ரெடியா இரு.. இனிமே இப்படி தனியா இருந்தன்னு வை.. பிச்சிடுவேன்.. இல்ல.. வினயோட கடையும் அங்க பக்கத்துல வந்துடும்.. நியாபகம் வச்சிக்கோ.. போனை வச்சிட்டு கடகடன்னு கடையை எடுத்து வை பார்ப்போம்..” அவன் கேலி செய்ய,

“என்னாது.. கடையா? இது பொட்டிக்..” அவள் அலற, அர்ஜுன் சிரித்தபடியே டைரக்டரின் காரில் இருந்து இறங்கி, அவருக்கு கை அசைத்து விடைப்பெற்று, கடையின் உள்ளே நுழைய, சிவாத்மிகா அவனைப் பார்த்து கண்களை விரித்து, வேகமாகச் சென்று அவனைத் தழுவிக் கொண்டாள்.

“என்னடா லட்டு? டூ யூ மிஸ் மீ?” என்றபடி அவளது கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டே அவன் கேட்க,

“வீட்டுக்கு கிளம்பலாம்.. அஞ்சே நிமிஷம்.. எல்லாமே எடுத்து வச்சிடறேன்..” என்றவள், அடுத்த ஐந்தாவது நிமிடம் அர்ஜுனுடன் காரில் பயணமானாள்.

“உங்க கார் என்னாச்சு? யார் கூட வந்தீங்க?” அவள் கேட்க,

“காரை வினய் எடுத்துட்டு ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டுக்கு போயிட்டான். டைரக்டர் கூட தான் வந்தேன்.. இது போற வழி தானே.. நீ வீட்டுக்கு கிளம்பி இருந்தா அவர் என்னை வீட்ல டிராப் பண்ணி இருப்பார்.. இல்லைங்கவும் இங்க வந்து இறங்கி வந்துட்டேன்..” என்றவன், அவளுக்கு வீட்டில் காத்திருக்கும் அதிர்ச்சியை சொல்லாமல் கூட்டிச் சென்றான்.                  

சிவாத்மிகா வார்த்தையால் அவரைக் குதறிவிட்டு கிளம்ப, அர்ஜுனோ  அவர் தன்னை சந்தேகப்பட்டு பேசியதற்கு சிறிது கூடக் கோபம் கொள்ளாமல், அவளது மனநிலை மட்டுமே முதன்மையாகக் கருதிச் செயல்பட்டதும், கேசவனுக்கு அர்ஜுனின் மேல் மதிப்பு கூடியது. அதை விட, அவன் காரில் அவளை சமாதானம் செய்த விதமும், சிவாத்மிகா அவனிடம் காட்டிய நெருக்கமும், அவளுக்கு அவன் மீது இருந்த நம்பிக்கையை சொல்லாமல் சொல்ல, ஜார்ஜ் கேசவனை அர்த்தப் பார்வை பார்த்தார்.

“போன தடவ அவளைப் பார்த்த பொழுது கூட, அவளோட கல்யாணம் பத்தி கேட்டேன்.. அப்போ கூட வெறுப்பா.. ‘எங்க அப்பா அம்மாவைப் பார்த்தும் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீங்க எப்படி அங்கிள் நினைக்கறீங்க? கல்யாணம்னாலே வெறுப்பா இருக்கு’ன்னு சொன்னவ.. இப்போ அவர் கூட அந்த அளவு இருக்கான்னா.. அர்ஜுன் எந்த அளவுக்கு அவளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தந்திருக்கணும்? நீங்களே புரிஞ்சிக்கோங்க..” என்ற ஜார்ஜிடம், அவர் குற்றம் செய்த வலியுடன் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“எனக்கு அர்ஜுனோட அம்மா அப்பாவைப் பார்க்கணும்.. அவங்ககிட்ட ஒரு தடவ.. பெத்த அப்பனா ஒரு வார்த்தை பேசிட்டு போயிடறேன்.. அவங்க வீடு எங்க இருக்குன்னு கேட்டுச் சொல்லுங்க..” கேசவன் கேட்கவும்,

“அர்ஜுனுக்கு அப்பா இல்லைன்னு நினைக்கிறேன்.. அம்மா மட்டும் தான்.. கூட வினய்ன்னு அர்ஜுனுக்கு எல்லாமா ஒரு பையன் இருக்கான்.. ஆனா.. அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும்ன்னு தெரியலையே..” ஜார்ஜ் யோசித்தார்.  

“சிவா பேசும்போது அம்மாகிட்ட பேசி.. நாள் பார்க்கச் சொல்லுங்கன்னு சொன்னா. அப்போ அவங்க அம்மாவுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்..” கேசவன் சொல்லவும், நினைவு வந்து தலையசைத்த ஜார்ஜ், தான் விசாரித்த வட்டத்தில், அர்ஜுனின் செயலாளர் நம்பரைப் பிடித்து வாங்கி, உடனே அவனுக்கு அழைத்தார்.

அவனது செயலாளர் நம்பர் என்று கிட்டியது வினயின் நம்பர் தான்.. அவனுக்கு அழைத்த கேசவன், தான் அர்ஜுனின் தாயை சந்திக்க விரும்புவதாகச் சொல்ல, வினய் திகைப்புடன், அருகில் இருந்த அர்ஜுனிடம் விஷயத்தைச் சொல்ல,

“சரி.. மீட் பண்ணட்டும்.. அம்மாகிட்ட போன் பண்ணி சொல்லிடலாம்.. என்ன இருந்தாலும் அவர் சிவாவை எனக்கு கொடுத்தவர்.. அந்த ஒரே ஓரு காரணத்துக்காக தான்” என்று அர்ஜுன் சொல்லவும், ஜார்ஜ் அதைக் கேட்டு சிரிக்கத் துவங்க, கேசவனின் முகத்திலும் புன்னகை எட்டிப் பார்த்தது..

“அர்ஜுன்.. சிவாவுக்கு நீங்க கிடைக்க அவ கொடுத்து வச்சு இருக்கணும்.. அவ சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்..” என்று ஜார்ஜ், மனம் நிறைந்து வாழ்த்த,

“தேங்க்ஸ் சார்.. நான் அம்மாகிட்ட பேசறேன்.. எனக்கு ஷூட்டிங் இருக்கு.. மதியமே நான் டைம் கேட்டுட்டு வந்தேன்.. இப்போவும் உடனே கிளம்பினா நல்லா இருக்காது.. வினய் உங்களை வந்து பிக்கப் பண்ணிப்பான்.. நீங்க அவன் கூட போங்க.. ஒருவேளை சிவா சீக்கிரம் வீட்டுக்கு வந்திருந்தான்னா.. அவளை அவன் பார்த்துப்பான்..” அர்ஜுன் சொல்லவும்,

“ரொம்ப தேங்க்ஸ் அன்ட் சாரி அர்ஜுன்.. வீட்டுல மீட் பண்ணலாம்..” என்ற கேசவன், போனை அமர்த்த, அர்ஜுன் நிர்மலாவிடம் பேசிவிட்டு, வினயை ஜார்ஜின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தான்.

கேசவனைப் பார்த்ததும் வினயின் முகத்திலும் கோபம் கொப்பளித்தது.. காரை வெளியில் நிறுத்திவிட்டு, அவன் தனக்கு வந்த நம்பருக்கு அழைக்க, “உள்ள வாங்க வினய்.. ஒரு அஞ்சு நிமிஷம் கிளம்பிடலாம்..” என்று ஜார்ஜ் அழைக்கவும், வினய் உள்ளே சென்றான்.

வினய் வெயிட்டிங் ஏரியாவில் சென்று நிற்க, “நீங்க.. நீங்க தான் வினயா?” அங்கு இருந்த கேசவன் கேட்கவும்,

“ஆமா.. நான் தான்.. நீங்க?” சிவாத்மிகா அவரது ஜாடையை ஒத்து இருந்தாலும், அவரை வினய் அடையாளம் கண்டுக் கொண்டாலும், வேண்டுமென்றே அவன் கேட்க,

“நான் கேசவன்.. சிவாத்மிகாவோட அப்பா..” அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,

“நான் சிவாத்மிகாவோட அண்ணன்.. அர்ஜுனோட மச்சான், வினய்..” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வினய்,

“போகலாமா?” என்று கேட்க, அவர்களைப் பார்த்துக் கொண்டே ஜார்ஜ் நிற்க, வினய் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“நான் ஜார்ஜ்.. சிவாத்மிகாவோட வக்கீல்..” என்று அவர் தன்னை கேலியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவும், அவரது கேலி புரிந்த வினய் புன்னகைத்தான்.

“இப்போ தான் ஏன், ‘சிவா வீட்டுக்கு வந்திருந்தாலும் நீங்க பார்த்துப்பீங்க’ன்னு அர்ஜுன் சொன்னார்ன்னு புரியுது..” குறிப்பாக ஜார்ஜ் சொல்ல, வினய் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“அவ என் தங்கை.. அவளை யாராவது ஹர்ட் பண்ணினா நான் சும்மா விட மாட்டேன்.. அது அவனுக்குத் தெரியும்.. அதனால சொல்லி இருப்பான்.. இப்போ கிளம்பலாமா சார்.. அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நேரமாச்சுன்னா அம்மா ரொம்ப டென்ஷன் ஆகிடுவாங்க..” என்றவன்,

“வாங்க..” என்று அழைத்துவிட்டு காருக்கு முன்னால் நடக்க, இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர். காரில் ஏறியதும் ஜார்ஜ் அவர்கள் எப்படி அறிமுகம் ஆனார்கள் என்று கேட்க,

“நானும் என் தங்கையும் பக்கத்து பக்கத்து வீடு.. ஒரே ஃப்ரோபஷன்..” என்ற வினய், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் காரை செலுத்தினான்.

வீட்டின் அருகே நெருங்க நெருங்க, இருவரும் அவனை ஆச்சரியமாகப் பார்க்க, “இங்க தானே சிவா வீடு இருக்கு..” என்று ஜார்ஜ் கேட்க,

“ஆமா.. பக்கத்துல இருக்கற ட்வின் ஹவுச நாங்க வாங்கி இருக்கோம்..” என்ற வினய், வாசலில் நின்று ஹார்ன் அடிக்க, வாட்ச்மேன் கேட்டைத் திறக்கவும், வினய் காரை வீட்டின் உள்ளே சென்று நிறுத்தினான்.

அதே நேரம், சிவாத்மிகாவை எதிர்ப்பார்த்து காத்திருந்த ராதா, வினயின் கார் வரவும், “இவங்க கூட ஷூட்டிங் முடிச்சிட்டு வந்துட்டாங்க.. இந்தப் பொண்ணை இன்னும் காணுமே..” என்று புலம்பியபடி, வேகமாக கதவை மூடிக் கொண்டு, அவர்களிடம் சொல்லுவதற்காக செல்ல, அங்கு இருந்தவர்களைப் பார்த்த ராதா அதிர்ந்து நின்றாள்.       

காரில் இருந்து இறங்கிய வினய், “வாங்க சார்…” என்று தன்னுடன் வந்தவர்களை அழைக்க, கேசவன் தயங்கியபடி நின்றார். அவரது விழிகள் அருகில் இருந்த அவரது வீட்டின் மீது படிந்து மீள, ஜார்ஜ், அர்ஜுனின் வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டினார்.

அப்பொழுது அவரது பார்வை மாடி பால்கனிக்குச் செல்ல, “ஓ.. ரெண்டு பேரும் ரூட் போட்டு காதலை வளர்க்கறாங்களா?” இரு பால்கனிக்கும் நடுவில் போடப்பட்டிருந்த பாதையைப் பார்த்து கேலி செய்ய,

“அது அர்ஜுன் அவ கூட பேசிட்டு இருக்க, இங்க இருந்து அங்க ஏறி குதிப்பான்.. அவளுக்கு உடம்பு சரி இல்லாம இருந்த பொழுது, நாங்க ரெண்டு பேரும் சிவா வீட்டுல இருந்தோம்.. சிவா அர்ஜுன் ரூம்ல இருந்தா.. அப்போ அவ ஒரே ரூம்ல இருந்ததுனால ஸ்ட்ரெஸ் ஆகிட்டா. அதுனால அவன் பாதி நாள் அவ கூட பேசிக்கிட்டே அந்த பால்கனில இருப்பான். அதுக்கு இப்படி தான் ஏறி குதிச்சு போவான்.. ஏன்னா எங்க அம்மாவுக்கும் கொரோனா.. சோ உள்ள போக முடியாது..

அவன் அப்படி போகும்போது கொஞ்சம் எல்லாருக்குமே பயமா இருந்தது.. அது தான் இப்படி கட்டியாச்சு.. ஷூட்டிங் இல்லாத நாள்ல, தினமும் ராத்திரி ரெண்டு பேரும் ஊஞ்சல் ஆடிக்கிட்டே பேசிட்டு இருப்பாங்க..” வினய் சொல்லவும், ஜார்ஜ் அவனைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தார்.

வினயிடம் விஷயத்தைச் சொல்ல ஓடி வந்த ராதா, அங்கு நின்றிருந்த கேசவனைப் பார்த்து திகைத்து நிற்க, அவளைப் பார்த்த வினய், புருவத்தை உயர்த்தி புன்னகைக்க, வினையை அவள் முறைத்துக் கொண்டு நின்றாள்.

“இன்னும் சிவா வீட்டுக்கு வரல.. போனை கூட எடுக்க மாட்டேங்கிறா.. அர்ஜுன் தம்பி எங்க? இவர் இங்க வரதுனால தான் அவ வீட்டுக்கே வரலையா?” அவளது வார்த்தையில் தான் அத்தனை வெறுப்பு..

“அப்படியா? இன்னும் அவ வரலையா? ஏன் லேட் ஆகுது? இத்தனை நேரம் வந்திருக்கணுமே..” அருகில் இருந்த இருவரையும் மறந்து, உடனே தனது போனை எடுத்து சிவாத்மிகாவிற்கு அழைக்க, அவளது அழைப்பு பிசியாக இருக்கவும், உடனே அர்ஜுனுக்கு அழைத்தான். அவனது செல்லும் பிசியாக இருக்கவும்,

“ரெண்டும் கடலைப் போட்டுட்டு இருக்கு போல.. ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சுப் பேசலாம்.. இல்ல அர்ஜுனே என் நம்பர் பார்த்துட்டு கூப்பிடுவான்..” என்று கேலி செய்த வினய், தனது அருகில் நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து,    

“நீங்க வாங்க” என்று இருவரையும் அழைத்து,

“நீங்களும் வாங்க மேடம்.. டென்ஷன் ஆகாதீங்க.. சிவாவுக்கு இவர் இங்க வரது கண்டிப்பா தெரிஞ்சு இருக்க சேன்ஸ் கம்மி.. அர்ஜுன் சொல்லி இருக்க மாட்டான்.. கஸ்டமர் கிட்ட பேசிட்டு இருப்பாளா இருக்கும்.. பேசி முடிச்ச உடனே கால் பண்ணுவா..” என்றவன், ராதாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

ஹாலில் அமர்ந்து நிர்மலா டிவி பார்த்துக் கொண்டிருக்க, வினய் அவர்களை அழைத்துக் கொண்டு வரவும், டிவியை அனைத்தவர், எழுந்து கரம் கூப்பி, “வாங்க..” என்று பொதுவாக அழைக்க, இருவரும் பதிலுக்கு கரம் கூப்பவும்,

“உட்காருங்க..” என்று அவர்களிடம் சொன்னவர், ‘மாணிக்கம்..’ என்று குரல் கொடுக்கவும், மாணிக்கம் இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தான்.  

பொதுவான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, “அர்ஜுன் போன் பண்ணி நீங்க வரேன்னு சொன்ன விஷயத்தைச் சொன்னான்.. சொல்லுங்க..” நேரிடையாக அவர் விஷயத்திற்கு வர, அவரைப் பார்த்த கேசவனுக்கும், ஜார்ஜிற்கும் அவர் மீது மதிப்பு கூடியது. 

ஆளுமையாகவும், அமர்த்தலாகவும், அதே சமயம் சாந்தமாகவும் இருந்தவரைப் பார்த்த ஜார்ஜிற்கு அவர் மீது மரியாதை எழுந்தது.  

“ஆமாங்க.. என் பொண்ணு சிவாத்மிகாவும் உங்க பையன் அர்ஜுனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க.. அந்த விஷயம் உங்களுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்மா.. இன்னைக்கு என் மேல இருக்கற கோபத்துல கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லுங்கன்னு அர்ஜுன் கிட்ட சொல்லிட்டா.. அது தான்.. ஒரு தகப்பனா உங்களை பார்த்து பேசலாம்ன்னு வந்தேன்..” தயங்கித் தயங்கி, கேசவன் ஒருவாரு தான் வந்த விஷயத்தைச் சொல்ல,

“ஓ.. நீங்க சிவாவோட அப்பா இல்ல.. சொல்லுங்க.. அது இன்னைக்கு தான் நினைவு வந்து அவளை வரச் சொல்லி கண்டிச்சீங்க போல..” என்று கேட்ட நிர்மலா, கேசவன் தலைகுனியவும்,

“அர்ஜுன் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான்.. நான் சிவா கிட்ட நேரா பேசிட்டு தான் நாள் பார்ப்பேன்.. ஏன்னா அந்த பொண்ணு எமோஷனலா எடுக்கற எந்த முடிவுக்கும் நான் ஒத்துக்க மாட்டேன்.. இத்தனை நாளா அவ, அர்ஜுன் கேட்ட பொழுது எல்லாம் அர்ஜுனை உயிரா விரும்பினாலும், அவனுக்கு கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல ரொம்ப யோசிச்சா.. ஏன்னா.. அவ சின்ன வயசுல பார்த்து, அனுபவிச்ச சம்பவங்களால அவ மனசு ரொம்ப காயப்பட்டிருக்கு.. அதோட விளைவுகளால எங்கயாவது அர்ஜுனைக் காயப்படுத்தி.. அதுனால இவங்க வாழ்க்கை பாதிச்சு.. அர்ஜுன் வாழ்க்கையையும் பாழாக்கிடுவேனோன்னு பயப்படறா.. அந்த அளவு அவ மனசுல காயம் இருக்கு..” என்றவர், கேசவன் தலை குனியவும்,

“இல்ல தெரியாம தான் கேட்கறேன்.. உங்க ரெண்டு பேரோட பிணக்கை தீர்த்துக்க உங்களுக்கு கொஞ்சம் கூட தோணவே இல்லையா? அந்த குழந்தை முகத்தை பார்த்து கூடவா உங்களுக்கு சேர்ந்து வாழணும்ன்னு தோணல? ஒரு சின்னப் பிள்ளைக்கு அந்த அளவா காயம் கொடுப்பீங்க?

சரி.. சேர்ந்து வாழ முடியலை.. பிரிஞ்சிட்டீங்க.. உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு தான்.. நான் இல்லைன்னு சொல்லல.. அந்த பிள்ளைங்களுக்கு காட்டற அன்புல கொஞ்சம் கூட இந்தப் பொண்ணு மேல காட்டத் தோணல? இவளும் உங்க ரத்தம் தானே.. அட்லீஸ்ட் போன்லயாவது மாசம் ஒரு தடவ அவ கூட அன்பா நாலு வார்த்தை பேசி இருக்கலாமே.. அந்தப் பொண்ணு அதுக்கு கூட ஏங்கிக்கிட்டு இருக்க என்ன பாவம் பண்ணிச்சு? பணத்தை அனுப்பினா போதுமா?

பாவத்தை பண்ணினது நீங்க ரெண்டு பேரும்.. தண்டனை அவளுக்கா? அட்லீஸ்ட் நீங்களாவது ஏதோ வந்து இருக்கீங்களே.. ஆனா.. அவளைப் பெத்தவள நான் மன்னிக்கவே மாட்டேன்..” அவரது குரல் அடக்கப்பட்ட கோபத்தில் நடுங்கியது.. அவரது மனநிலை புரிந்த வினய், அவரது தோளை அழுத்தினான். 

ஜார்ஜ் அவர்கள் பேசுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, நிர்மலா கேட்டதில் கேசவனின் கண்களும் கலங்கி விட, “முதல்ல சிவா எனக்கு பொண்ணு மாதிரி.. அதுக்கு அப்பறம் தான் எனக்கு அவ அர்ஜுனோட பொண்டாட்டி.. அவளை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. ஒரு தாயா அவ தனியா இருக்கான்ன உடனே அவளை பத்திரமா பார்த்துக்கணும்ன்னு தான் முதல்ல எனக்கு எண்ணம் வந்துச்சு.. அதுக்கு அப்பறம் தான் எனக்கு அர்ஜுனும் அவளும் லவ் பண்ற விஷயமே தெரியும்.. அந்தப் பொண்ணைப் போய் எப்படிங்க அப்படி விட முடிஞ்சது?

பெத்தவங்களுக்கு அந்த ரத்த பாசம் கூடவா இல்லாம போகும்? கதையில தனியா ஒரு சின்னப்பிள்ளை கஷ்டப்படறது போல வந்தாக் கூட, மனுஷத் தன்மை உள்ள எல்லாருக்குமே வலிக்கும்.. உங்களுக்கு எல்லாம் அந்த மனுஷத் தன்மை கூடவா இல்லாம போச்சு..

ஏன் உங்களுக்கு இப்போ ஒரு பொண்ணும் ஒரு பையனும் இருக்காங்க இல்ல.. அவங்களுக்கும் தேவைக்கு அதிகமா பணம் கொடுத்து ஹாஸ்டல்ல போடுங்களேன்.. அதே போல அந்த அம்மாவோட பொண்ணுங்க ரெண்டு பேரையும் செய்ங்க.. ஏன் அவங்களை வீட்டுல வச்சு பாராட்டி சீராட்டி வளர்க்கறீங்க? இவ மட்டும் என்ன பாவம் பண்ணினா? அந்த அம்மாவை நான் மனுஷியா கூட நினைக்க மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன்..” காட்டமாக அவர் பேச, கேசவன் வார்த்தைகள் இன்றி தவித்தார்.

“சிவா வீட்டுக்கு வந்த உடனே அவகிட்டப் பேசிட்டு ஒரு நல்ல நாளா பார்த்து நான் முஹுர்த்தத்தைக் குறிச்சு.. அவங்க கல்யாணத்தை ஜாம்ஜாம்ன்னு நடத்துவேன்.. அர்ஜுன் அவளை இப்போவே பத்திரமா பார்த்துக்கறான்.. நானும் அவளைப் பார்த்துப்பேன்.. ஏன் இதோ இருக்காளே ராதா.. அவ அவளைக் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறா.. அவளுக்கு தாய்க்குத் தாயா பார்த்துக்கிட்டு இருக்கா.. அவ இதத்துக்கு மடி தேடி வரதும் இவகிட்ட தான்..

இதோ அவளுக்குத் தோள் கொடுக்க, அவ அண்ணன் இருக்கான்.. நீங்க ரெண்டு பேரும் கொடுக்காம, அவ ஏங்கின பாசத்தை கொடுக்க நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. இந்த அளவுக்கு நீங்க அவளுக்காக வந்து பேசணும்ன்னு நினைச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..” என்ற நிர்மலாவைப் பார்த்த கேசவன் மலைத்தே போனார்..   

தனது மகளைச் சுற்றி இப்படி நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே என்ற நிம்மதி கேசவனுக்கு மனதில் பரவியது. அதை அவளது நடத்தையில் சாம்பாதித்தது அவருக்கு அதை விட மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.  

சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு, “அந்த அம்மாவைப் பார்த்தா மட்டும் சொல்லுங்க.. தப்பித் தவறி சிவாவை அடையாளம் கண்டுக்கிட்டா உறவு கொண்டாடிக்கிட்டு வந்துடப் போறாங்க.. அப்பறம் நான் நானா இருக்க மாட்டேன்.. அவளுக்கு பிள்ளைப் பிறப்புல இருந்து நாங்களே பார்த்துக்கறோம்..” நிர்மலாவின் குரல் சுருதி ஏறிக் கொண்டே போக, வினய் அவரது கையை அழுத்தி அமைதிப்படுத்தினான்.  

அப்பொழுது காரில் வந்துக் கொண்டிருந்த அர்ஜுன், “சிவா.. மறந்தே போயிட்டேன் பாரு.. நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது வினய் கால் பண்ணி இருந்தான்.. கால் பண்ணி என்னன்னு கேளு..” என்று தனது போனை அவளிடம் நீட்ட, அதை வாங்கிய சிவாத்மிகா வினய்க்கு அழைத்தாள்.

அர்ஜுனின் நம்பரில் இருந்து கால் வரவும், “அர்ஜுன் தான் கால் பண்றான்..” என்றவன் போனை இயக்க,

“ஹலோ அர்ஜுன் சொல்லுடா..” என்று அவன் கேட்க,

“அண்ணா.. நான் சிவா பேசறேன்.. நீங்க எதுக்கு கால் பண்ணினீங்கன்னு அவர் கேட்கச் சொன்னார்..” அர்ஜுனின் போனில் இருந்து சிவாவின் குரல் கேட்க,

“சிவாம்மா.. நீ எங்க அர்ஜுன் போன்ல இருந்து பேசற? நீ ஏன்ம்மா உன் போனை எடுக்கவே இல்ல.. ராதா உனக்கு கூப்பிட்டு நீ எடுக்கலன்னா உடனே பயந்தே போயிட்டா.. உன் போன் என்னாச்சு? அர்ஜுன் அங்க எங்க வந்தான்? நீ எப்படி அவன் கூட வர?” வினய் கேள்விகளை அடுக்க,

“ஹய்யோ.. அக்கா போன் பண்ணி இருந்தாங்களா? நான் கவனிக்கவே இல்லையே.. சாரி.. சாரிண்ணா.. ஒரு வேலை எனக்கு முடியவே இல்ல.. நான் மாடல் கட் பண்ணிப் பண்ணி டைம் போனது தான் மிச்சம்.. அது தான் மூடே இல்ல.. சைலென்ட்ல போட்டதை நான் மறந்துட்டேன்.. அக்கா ரொம்ப பதறிட்டாங்களா?” என்று கேட்க,    

“ஆமா.. கொஞ்சம் பதறிட்டா.. நீ வா நேர்ல பேசிக்கலாம்.. நீ எப்படி அர்ஜுன் கூட வர? அவனை போய் பிக்கப் பண்ணிக்கிட்டு வரியா?” வினய் கேட்க,    

“அர்ஜுன் எனக்கு போன் பண்ணின பொழுது நான் கடையில இருக்கறது தெரிஞ்சு அப்படியே அங்க வந்துட்டார்.. அவர் கூட நான் கிளம்பி வந்துட்டேன்.. அவர் தான் கார் ஓட்டறார்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவோம்.. அக்காகிட்ட சொல்லிடுங்கண்ணா..” அவள் சொல்லவும்,

“சரி.. ராதா இங்க தான் இருக்கா.. நேரா நீ இங்க வந்துடு..” என்றவன், போனை வைக்க, ராதா அவனது முகத்தைப் பார்த்தாள்.

“அவளுக்கு வேலை முடிய நேரமாச்சு போல.. ஏதோ மாடல் சரியா வரலையாம்.. அதுல டென்ஷனாகிட்டா போல.. வரட்டும்.. நான் என்ன ஏதுன்னு பார்க்கறேன்.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா சூப்பரா செஞ்சிடுவா..” என்றவன், மாணிக்கம் காபியை எடுத்துக் கொண்டு வர,

“எடுத்துகோங்க சார்..” என்ற படி வினய், கேசவனுக்கும், ஜார்ஜ்ஜிற்கும் தர, கேசவன் தயக்கத்துடனேயே வாங்கிக் கொண்டார்.

நிர்மலா அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க, “அவ சாதாரணமா இருக்கா தானேங்க.. சாதாரணமா பேசினாளா?” தவிப்புடன் ராதா கேட்கவும்,

“அவ ரொம்ப சாதாரணமா பேசறா.. நீ கவலைப்படாதே..” வினய் அவளை சமாதானப்படுத்த, நிர்மலாவின் பார்வை இருவரையும் ஆராய்ந்துக் கொண்டிருக்க, ஜார்ஜ் புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். திரும்பிய பொழுது, அவரது பார்வையைப் புரிந்துக் கொண்ட நிர்மலாவும், கண்களை மூடித் திறந்து புன்னகைக்க, ஜார்ஜிற்கு அவர் மீது பெருமதிப்பு உண்டானது.

அர்ஜுன் காரை தனது வீட்டின் உள்ளே கொண்டு நிறுத்த, “அஜ்ஜு வந்துட்டான்..” நிர்மலா சொல்லவும், ராதா பதட்டத்துடன் வாசலுக்குச் சென்று சிவாத்மிகாவைப் பார்க்க,

அவளைப் பார்த்ததும், “அக்கா.. சாரிக்கா.. போனை சைலென்ட்ல போட்டுட்டு மறந்தே போயிட்டேன்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன்க்கா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”  கண்களைச் சுருக்கிக் கெஞ்ச,

“அதெல்லாம் விடு.. அது தான் அவங்க நீ சொன்ன காரணத்தைச் சொன்னாங்களே.. நீ உள்ள வா..” அவள் பதட்டத்துடன் அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே அழைக்க,    

“நான் பார்த்துக்கறேன்க்கா.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றபடி, அவளது கையைப் பிடித்த அர்ஜுன், அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைய, அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்த சிவாத்மிகா திகைத்து நின்றாள்.

அவளது முகத்தைப் பார்த்த அர்ஜுன், அவளது கையில் அழுத்தம் கொடுத்து, அவளது விரலுடன் தனது விரல்களை இறுக கோர்த்துக் கொண்டு, அவளை உள்ளே அழைத்துச் செல்ல, அவனுடன் ஒட்டிக் கொண்டு வந்தவள், “வாங்க அங்கிள்..” ஜார்ஜை மட்டும் அழைத்து, கேசவனைக் கண்டுக் கொள்ளாமல், நிர்மலாவின் அருகே அமர்ந்தாள்.  

வினய் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, “அண்ணா.. எனக்கு ஒரு டிசைன் சரியா கட் பண்ண வர மாட்டேங்குது.. ஏன்னே தெரியல.. எனக்கு இன்னைக்கு சுத்தமா நாளே சரி இல்ல.. நாளைக்கு நான் அந்த டிசைன் அப்ரூவல் வாங்கணும்.. கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிட்டு.. சாப்பிட்டு நாம பார்க்கலாமா? எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா? எனக்கு இன்னைக்கு மூளை ரொம்ப பாக் வாங்குது..” அவர்கள் எதற்கோ வந்திருக்கிறார்கள் என்பது போல, அவர்களைக் கண்டுக் கொள்ளாமல், வினய்யிடம் அவள் பேசிக் கொண்டிருக்க, ஜார்ஜ் அவளை வேடிக்கைப் பார்த்தார்.

நிர்மலாவின் அருகில் வந்து உரிமையாக அமர்ந்திருந்தவளின் அருகில் அர்ஜுன் அமர்ந்துக் கொள்ள, உரிமையாக ராதாவை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு, வினய் அதன் கைப்பிடியில் அமர்ந்துக் கொண்டு, நிர்மலா அடுத்து பேசப் போவதை ஆவலுடன் பார்த்தனர்.