உதிரத்தின்… காதலதிகாரம்! 5

UKA-14a93335

உதிரத்தின்… காதலதிகாரம்! 5

உதிரத்தின்… காதலதிகாரம்!

காதலதிகாரம் 5

          உண்ணும்வரை பிரகதியின் நினைவுகளோடு வேகமாக உணவை உள்ளே தள்ளியவன், கை கழுவியதும் தள்ளி வைத்திருந்த அலைபேசியை தனதாக்கி பிரகதியிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளைக் காணும் ஆவலில்  பார்த்தான் கௌதம்.

          சில குறுஞ்செய்தி கண்ணில் பட்டதும் மின்னல் போன்ற இளநகை கௌதமின் இதழில் தோன்றியது.

தந்தையும் அருகே இருப்பதால் அதற்குள் மூழ்கிவிடாமல் மேலோட்டமாக எடுத்து பார்த்தபடி வந்தவனுக்கு ஒரு குறுஞ்செய்தியில் இருந்த தகவல் மட்டும் அவனைக் கவர்ந்திட அச்செய்தியில் தேங்கி அதில் கவனமானான் கௌதம்.

‘நம்மை விரும்பறவங்களை நமக்குப் பிடிக்கலைன்னாலும் அவங்களையே கல்யாணம் பண்ணிட்டா, வாழ்க்கை வேற லெவலா இருக்குமாம்’ 

அதன்கீழ், ‘இது பழசுதான்!’

அடுத்து, ‘ஆனா, இதுல இருந்து உனக்கு என்ன புரியுதுனு சொல்லு பாக்கலாம்?’

‘புடிக்காத நான், உனக்குப் பொண்டாட்டியா வந்தா நம்ம டச்சிங், கிஸ்ஸிங், இப்படி சிலபல ங்குனால நீ ஓஹோனு இருப்ப…’ அதனருகே லவ் சிம்பலோடு கூடிய மாறுபட்ட பல எமோஜிகள்.

‘இல்லைன்னா… நீ ஓனு… ஓணான்டி மாதிரி ஒன்னுமில்லாம தேஞ்சு போயிருவ’ என்றிருந்தது.

அதைக் கண்டதும் கௌதமிற்கு  சிரிப்பு வர, அதனை முயன்று அடக்கியவாறு அடுத்தடுத்து வந்திருந்த குறுஞ்செய்தியைக் காணும் பொருட்டு தனதறைக்குள் செல்ல முயன்றவனை, தனது பேச்சால் இடையூறு செய்து நிறுத்தியிருந்தார் கௌதமின் தந்தை ஞானசேகரன்.

          உண்ணுபவனை தொந்திரவு செய்ய வேண்டாமென அதுவரை பொறுமையோடு காத்திருந்தவர் அவனது முகத்தில் மாறி மாறி வந்த நவரச உணர்வினைக் கண்டுகொண்டாலும் காணாததுபோல, “புது சம்பந்தம் ஒன்னு வந்துச்சுனு அம்மா சொன்னா…” சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவாறே மகனிடம் கேட்டார்.

          கௌதமிற்கு சட்டென ஏதோ இறுக்கம் வந்து ஆட்கொண்ட உணர்வு.

சிறு இடைவெளிக்குப்பின் தொடர்ந்த சேகரன், “உனக்கு வயசும் போகுது!” என நிறுத்தினார்.

பிறகு, “உனக்குச் சரினா… அந்தச் சம்பந்தத்தையே பேசி முடிச்சிரலாமே…!” மகனது முகத்தில் அவனது மனதை அளவிட்டார்.

எந்த உணர்ச்சியையும் காட்டாது சிலை போல் நின்ற மகனிடம், “எதுக்குப் போட்டுத் தயங்குற?” தந்தையின் கேள்வியில் பேவென விழித்தபடி தாயைத் தொடர்ந்தது கௌதமின் பார்வை.

தாய் உமா, கணவரது பேச்சுகளை உள்வாங்கினாலும் எதையும் காட்டாது அவரது பணியில் கவனமாக இருந்தார்.

சட்டென வடிந்த ஆர்வத்தோடு கையில் எடுத்த மொபைலில் உள்ள இதர குறுஞ்செய்திகளைப் பார்க்க வேண்டும் என எண்ணியது பற்றிய பிரஞ்ஞை இன்றி, கவனத்தைத் தந்தையிடம் முழுவதுமாகத் திருப்பி அவரைப் பரிதாபமாக நிமிர்ந்து பார்த்தவன், ஏனோ அடுக்களைக்குள் புகுந்து கொண்ட தாயை தனக்காக பேச வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தான்.

          அடுக்களையில் பாத்திரங்கள் தேய்த்த கையோடு தாய் ஹால் பகுதிக்கு வந்ததைக் கண்டதும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தான் கௌதம்.

ஆனால் உமாவோ கௌதம் உண்டு முடித்து வைத்திருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்றிருந்தார்.

          தனது தாய் அனைத்தையுமே தந்தையிடம் கூறியிருப்பார் என்பது கௌதமிற்கு நிச்சயமே. 

ஆனால் எதுவுமே தெரியாததுபோல, தனது பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டி முதன் முறையாகக் கேட்பதுபோல கேள்வியைக் கேட்ட தந்தையிடம், தாயிடம் பேசியதுபோல பட்டென பேச முடியாமல் தயங்கி அவரையே பார்த்தவாறு பேச்சற்று நின்றிருந்தான் கௌதம்.

          தாய் அளவிற்கு தந்தையிடம் அவனுக்கு ஒட்டுதல் இல்லை.

‘கண்ணைக் கட்டுதே’ மனதில் ஓட தந்தையிடம் பேச தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

          “உங்கிட்டத்தான் கேக்குறேன் கௌதம்.” தந்தையின் நினைவூட்டலில் நடப்பிற்கு வந்தவன், பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் தானிருப்பதை உணர்ந்து,

“அதான் அம்மாகிட்டத் தெளிவாச் சொல்லிட்டேனேப்பா” தாயின் மீது பொறுப்பைத் தள்ளிவிட்டு விலக எண்ணிப் பேசினான் கௌதம்.

          ஞானசேகரனுக்கு மகனது உடல்நலக் குறைபாடு பெருங்குறையாக இருந்தாலும், மகனது பொறுப்பான செயல்களில் மிகுந்த பெருமையும் இருந்தது.

          இதுவரை எதற்காகவும் இது ஏன்? எப்படி? எனும் கேள்வியைத் தன்னிடம் எழுப்பாத தந்தை இன்று தன்னிடம் வந்து பேசுவதே கௌதமிற்கு வியப்புதான்.

          “அவ கிடக்கறா!  நீ சொல்லு எங்கிட்ட!  என்ன முடிவு பண்ணியிருக்கனு!” தன்னிடம் பேச வேண்டிய விசயத்தை தயங்காது பேசு, நல்ல முடிவாக எடுக்கலாம் எனும் ரீதியில் இருந்தது ஞானசேகரனின் பேச்சு.

          தாயிடம் பேசியதை அப்படியே கூற முடியாமல் தந்தையிடம், “கல்யாணம் இப்ப வேணானு தோணுதுப்பா…” என்றான் தயங்கி.

          அதுவரை சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவர் நிதானமாக நிமிர்ந்து அமர்ந்தபடி, “இப்ப வேணானு தோணுதா? இல்லை…” என இழுத்தவர்,  

“வேற என்ன தோணுதுன்னு தெளிவாச் சொல்லு” என்று கேட்டார்.

          தாயிடம் கூறியதை தயக்கமாக, ஆனால் தந்தையிடம் தெளிவாகக் கூறத் துவங்கினான் கௌதம்.

மகன் கூறும்வரை இடையுறாது தலையை தரையை நோக்கிக் குனிந்தபடியே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவரைப் பாராமல், தாய் வேலையாக அங்குமிங்கும் செல்வதைப் பார்த்தபடியே, தாய் நிமிர்ந்து தன்னை பார்த்துவிட மாட்டாரா என்கின்ற எதிர்பார்ப்போடும், ‘என் முகத்தைப் பாக்காம இப்டி சதி பண்றியே தாயே’ எனும் பரிதவிப்போடும் ஒரு வழியாக தந்தையிடம் சொல்லி முடித்திருந்தான் கௌதம்.

          மகன் பேசி முடித்ததும், “நீ சொல்றது எல்லாம் சரிப்பா.  ஆனா, அந்தப் பொண்ணு வந்து பெத்தவங்களை விட்டு நம்ம வீட்டுல பேசச் சொல்றவரை எதுக்கு மறுப்பு சொல்லாம, அதுபோக்குக்குப் போறவரை விட்டுட்டு இருந்த…?” தந்தையின் கேள்வியில் இருந்த நியாயம் புரிய,

“நான் வேணானு பலமுறை எடுத்துச் சொன்னாலும் விடாம கல்யாணம்வரை கொண்டு வந்து என்னை இக்கட்டுல நிறுத்திட்டா!” என்று பட்டவர்த்தனமாக உண்மையைக்கூறி பிரகதியை தந்தையிடம் விட்டுக் கொடுக்கவும் முடியாமல்,

அவளுக்காக தற்போது பரிந்து பேசினால் இன்னமும் சிக்கல் என்பதும் புரிய, அவ்வாறு தொடரவும் முடியாமல் தோன்றிய விசயங்களை தனக்குள் விழுங்கியவன், “அவகிட்ட ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்பா…!  இது ஒத்து வராதுனு!  ஆனா… கல்யாண விசயத்துல ரொம்ப பிடிவாதமா இருக்கா!” என தர்மசங்கடத்தோடு மெல்லிய குரலில் தனக்குத் தெரிந்த வகையில் பாலீஷாக  இருவர் பக்கமும் தவறில்லாததுபோலக் கூறினான்.

          “நீ சொல்ற விதமா… சொல்ல வேண்டிய நேரத்தில சரியாச் சொல்லியிருந்தா… இந்தளவுக்கு வந்திருக்காதே!” என மகனை மேலும் கீழுமாகப் பார்த்தவர், மகன் நின்றிருந்த தோரணையில் அவனது நிலையை உணர்ந்து கொண்டார்.

“புள்ளையக் கிள்ளி விட்டுட்டுத் தொட்டிலையும் ஆட்டுன கதையா என்னத்தையோ ரெண்டு மனசாப் பண்ணியிருக்க…  அதான் அந்தப் புள்ளை உன்னையே சுத்தி சுத்தி வந்திருக்குது!” ஞானசேகரன் கூறியதுமே,

‘நம்மளை நேருல நின்னு பாத்த மாதிரிப் பேசறாறே!’ என்றிருந்தது கௌதமிற்கு.

சேகரன் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார், “இப்பப் போயி வேண்டாமுனு சொன்னா அந்தப் புள்ளையோட நிலைமைய யோசிச்சுப் பாரு” என்று.

          “அவளோட நல்லதுக்காகத்தான சொல்றேன்.  என்ன மாதிரிப் பிறந்தவங்களோட வாழ்க்கை எப்போ என்னாகும்னே தெரியாதப்ப, எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்குனுதானே வேணாங்கறேன்பா!” தயங்கியவாறே தனது எண்ண ஓட்டத்தை மெல்லிய குரலில் எடுத்துரைத்தான் கௌதம்.

          “அந்தப் புள்ளை நல்லாயிருக்கணும்னு… உண்மையிலேயே நீ நினைச்சிருந்தா… ஆரம்பத்திலேயே மூஞ்சியில அடிச்சமாதிரி நாலு பேருக்கு எதுக்க பேசி… விரட்டியிருக்கணும்!  நீ அப்படிச் செஞ்ச மாதிரித் தெரியலையே!” என சேகரன் கூறக் கேட்ட கௌதம் தலையை கவிழ்ந்து கொண்டான். 

தொடர்ந்தவரோ, “யாருமில்லாத இடத்தில தனியா அந்தப் புள்ளை மட்டும் இருக்கும்போது என்னத்தை எடுத்துச் சொல்லிருந்தாலும் அதுக்குப் புரிஞ்சிருக்காது” என்றதுமே அதுவரை தலையைக் கவிழ்ந்தபடி  நின்றவன் தந்தையை நிமிர்ந்து நோக்கினான்.

“ஏன்னா… அந்தப் புள்ளமேல நீ கரிசனப்படறது, பிரயாசப்படறது, கவனிக்கறது, அதோட விசயத்தில நீ நல்லது கெட்டது பத்தி யோசிக்கறது… எல்லாமே அதுக்கு இன்னேரம் தெளிவாப் புரிஞ்சி போயிருக்கும்! 

அப்போ… அந்தப் புள்ளை என்ன செய்யும்?  நம்ம மேல அக்கறைப்படதுக்கும் அனுசரிக்கிறதுக்கும் ஒருத்தன் இருக்கானு, உம்மேல கொள்ள(அதிகமாக) ஆசைப்படத்தானே செய்யும்!” என்ற தந்தையின் பேச்சைக் கேட்ட கௌதமிற்கு தலையைச் சுற்றுவது போன்ற உணர்வு.

‘நான் ஒன்னு நினைச்சுப் பண்ணா, இதுல இவ்ளோ பிரச்சனை வருமா’ என்பதுபோல தந்தையையே இமை சிமிட்டாமல் பார்த்தபடி நின்றிருந்தான் கௌதம்.

சற்று இடைவெளி விட்டுப் பேசிய சேகரனோ, “அதுமேல எந்தத் தப்புமில்லை!” என மகனை நோக்கி நேராகக் கூறிவிட்டு,

“தப்பு எல்லாம் உம்மேல வச்சிட்டு இப்ப வந்து வேணானு சொன்னா… நல்லாவா இருக்கு!” மகனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டவர்,

          “பேசாம அந்தப் புள்ளையவே கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழற வழியப் பாரு கௌதம்.  உன்னை மாதிரி…” என தயங்கியவர், தன் மகனை தானே குறைபாடுடையவன் என்று கூறுவது அவருக்குமே வலித்தது.  ஆனால் சொல்லியே ஆகவேண்டிய நிலை. 

அதனால் வார்த்தைகளை மென்று முழுங்கி “…பையனுக்கு கடைசிவரை ஒத்தாசைக்கு ஒரு ஆளு வேணும்ல…! அதுக்கு நாமபோயி தேடித் திரியற அளவுக்கு இல்லாம, அதுவா வந்து கட்டிக்கிறேன்னு ஒத்தக்கால்ல நிக்கிது.  நீ ஏன் வேணாங்கற?” என்றிட,

          கௌதம், “எனக்கு ஒத்தாசைக்கு ஆளு வேணுங்கறதுக்காக அந்தப் பொண்ணோட ஃபியூச்சரை ஸ்பாயில் பண்ண முடியாதுல்லப்பா…” என்றான் கௌதம்.

          “எதுக்கு ஸ்பாயில் ஆகுது?  வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கத்தான செய்யும்.  எப்போவுமே சந்தோசமா வாழ யாராலையும் முடியாது.  எல்லாம் கலந்து வந்தாதான் வாழ்க்கையும் சுவராஸ்யமா போகும்.  அப்டி ஒரு நல்ல வாழ்க்கை நீங்க ஏன் வாழமாட்டீங்கனு நினைக்கற!” என்றதோடு,

“நல்ல துணை ஒன்னு அதுவா அமையுது. எங்க காலம் உள்ளவரை எங்களால முடிஞ்சதை உங்களுக்கு செய்வோம்.  அப்புறம் அந்தப் புள்ளை உன்னை கடைசிவரை பாத்திக்கிரும்ல…

நாமலா… தேடித் திரிஞ்சாலும் இப்படி ஒரு புள்ளை உனக்குக் கிடைக்கிறது கஷ்டந்தான கௌதம்?” என்று மகனிடம் நேரடியாகக் கேட்டவர்,

“உம்மேல இருக்கற பிரியத்துக்காக… உன்னைக் கல்யாணம் பண்ணிக்கற பொண்ணுதான் கடைசிவரை உன்னோட நல்லது கெட்டது அத்தனையிலயும் பின்வாங்காம உங்கூட தொணையா நிக்கும். 

அதுனால பெரியவங்க எல்லாரும் பேசி அடுத்த முடிவுக்கு வரலாம்.  எல்லாம்… உன்னோட நல்லதுக்காகத்தான கௌதம் சொல்றோம்.” தனது முடிவை மகனிடம் நைச்சியமாகப் பேசி திணிக்க எண்ணினார் ஞானசேகரன்.

“இல்லப்பா…” தயங்கிய மகனை நோக்கியவர்,

“வேற என்ன பண்ணலாம்னு சொல்ல வர்ற?” என்றார் கடுமையாக.

“எனக்கு இருக்கற பிரச்சனை பத்தின விசயத்தை அவங்க வீட்ல சொல்லிருங்க.  அதுக்குமேலயும் அவங்க வீட்டுப் பெரியாளுங்க ஒத்துக்கிட்டாப் பாத்துக்கலாம்” தனது முடிவை தந்தையிடம் தெளிவாகப் பகிர்ந்தான் கௌதம்.

தன் விசயம் மறையாது பகிரப்படும் நிலையில், நிச்சயம் திருமணத்திற்கு தடை வரும் என்று எண்ணியே அவ்வாறு கூறினான் கௌதம்.  அதனைக் கண்டு கொண்டார் சேகரன்.

“அதைச் சொன்னா… அவங்களே வேணானு போயிருவாங்கனு, வீம்புக்குப் போயி சொல்லச் சொல்றியா?” கோபமாகக் கேட்ட தந்தையை நோக்கித் தயங்கியவாறு தலையைக் குனிந்தபடியே தொடர்ந்தான் கௌதம்.

“அந்தப் பொண்ணு அதுவா என்னைத் தேடி வந்து பேசும்போது என்னால அதை ஒரு அளவுக்கு மேல தவிர்க்க முடியலை!” எனத் தயங்கியவன்,

“தவிர்க்க முடியலைங்கறதைவிட அந்த சந்தோசத்தை வேணானு என்னால ஒட்டு மொத்தமா ஒதுக்க முடியலை.  நானும் ரத்தமும் சதையும் உள்ள சாதாரண மனுசந்தான…” அவனது விரல் நகங்களை பார்வையிட்டபடியே தந்தையிடம் பேசியவன்,

“நான் பண்ணது எல்லாம் தப்புதான்.  ஆனா அதுக்காக அவளோட எதிர்காலத்தையே எனக்காக அவ பணயம் வைக்கணும்னு நான் ஆசைப்பட்டா அது பேராசைனு தோணுதுப்பா” தயங்கியவாறு உரைத்தவன், 

“அதுனால வேற எதாவது அவங்க வீட்டுப் பெரியாளுங்ககிட்டச் சொல்லி கல்யாணமே வேணானு சொல்லியிருங்க” என்றான் கௌதம்.

“அந்தப் புள்ளை உன்னை பாக்க வந்து போனதுல சந்தோசம்னு நீயே ஒத்துக்கற!  நாங்க இப்ப என்ன செய்யச் சொல்றோம்?” என மகனிடம் கேட்டவர் அவன் பதில் பேசாது நிற்பதைப் பார்த்து,

“அந்தப் புள்ளையவே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழுன்னுதான சொல்றோம்.  ஆனா நீ அந்தப் புள்ளையவும் வேணானு சொல்லிட்டு, எங்க காலத்துக்குப் பின்ன தனி ஆளா என்னடா செய்வ?” என மகன் வளர்ந்தபின் எப்போதும் டா போட்டுப் பேசாதவர் முதன் முறையாக அவ்வாறு பேச்சினூடே கத்தினார் ஞானசேகரன். 

அவருக்கு மகன் தன் முடிவில் பின்வாங்காமல் இருப்பதை எண்ணி உண்டான கோபம் அவ்வாறு பேசச் செய்திருந்தது.

தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கும் அவரின் தற்போதைய நிலைய புரியவே செய்தது.

அதற்காக தற்போது பேசாமல் இருந்தால் தவறாகிப் போகும் என எண்ணியவன், “என்னோட நல்லதுக்கு இன்னொருத்தவங்க வீட்டுப் பொண்ணை பகடையாக்க நினைக்கற நீங்க” எனத் தாய் தந்தை இருவர் மீதும் பழியைக் கூறியபடி மாறி மாறிப் பார்த்தவன்,

“எனக்கு ஒரு தங்கச்சியோ, தம்பியோ ஏன் நீங்க பெத்துக்கலைப்பா…” எனக் கேட்டான்.

சேகரன் அமைதியாக மகனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ‘நீ என்ன பேசணுமோ மொதல்ல பேசி முடி’ என்பதுபோல இருந்தது.

இடையில் மகனை அதட்டி அடக்க வந்த கௌதமின் தாயை கண்ணாலேயே அடக்கி அங்கிருந்து போகச் செய்திருந்தார் சேகரன்.

கௌதமும், “ஒன்னு பையன் பிறந்தா என்னை மாதிரியே பிறந்துட்டா கஷ்டம்னு நினைச்சிருப்பீங்க…

பொண்ணுனா இன்னமும் கஷ்டம்னு யோசிச்சிருப்பீங்க” இடைவெளிவிட்டவன்,

பிறகு, “இவனைக் காப்பாத்தணும்னே இருந்த சொத்து எல்லாத்தையும் அழிச்சிட்டோம்.  அப்புறம் பொண்ணு பெறந்தா என்னத்தைப் போட்டுக் கட்டிக்குடுக்கனு பயந்துதானப்பா வேணானு இருந்திருக்கீங்க. 

எங்கூட யாராவது பிறந்திருந்திருந்தா இன்னும் என்னை நல்லாப் பாத்துக்கிட்டு இருந்திருப்பாங்கள்ல!  அப்ப ஏன் என்னைப் பத்தி நீங்க அப்பவே யோசிக்கலை.

அடுத்தவங்க வீட்டுப் புள்ளைன்னதும் எதையும் யோசிக்கமா பண்ணா… எப்டிப்பா?” எனக் கேட்டுவிட்டு தந்தையையே ‘நான் சொல்றது சரிதான’ என்பதுபோல பார்த்தான் கௌதம்.

கௌதமாக யோசித்துத்தான் அவ்வாறு கேட்டிருந்தான்.  அவனைப் பொருத்தவரையில் அவனைப்போல பாதிக்கப்பட்டிருக்கும் சிலரின் குடும்ப நிலை அவ்வாறு அவனோடு பகிரப்பட்டிருந்ததைக் கொண்டு, தனது குடும்பத்தின் நிலையும் அதுதான் என அவனாகவே நினைத்துக் கொண்டிருந்தது இன்று அவன் வாயில் வந்திருந்தது.

மகனது கேள்வியில் பெருமூச்செரிந்தவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் அங்குமிங்குமாக வேலையாகத் திரிந்த கௌதமின் தாய் இருந்த திசையை நோக்கி, “உமா…” மனைவியை அழைக்க,

அதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, தனது கணவரின் அருகே வந்து என்ன என்பதுபோல கௌதமின் தாய் நிற்க, “சொல்லு… உம்மயன் கேக்குறான்ல…” வருத்தமாகவே மனைவியிடம் கூறினார் சேகரன்.

முந்தானையில் ஈரமான கைகளைத் துடைத்தபடியே கணவனையும், மகனையும் மாறி மாறிப் பார்த்தவர், “நீங்களே சொல்ல வேண்டியதுதான!” என்று கணவனிடம் கேட்டவர், கணவரின் நீயே சொல் எனும் உடல்மொழியினைக் கண்டுகொண்டு,

“வேற புள்ளைங்க வந்துட்டா, உன்னைக் கவனிக்க முடியாமப் போயிருமே…! அதுனால உனக்கு எதாவது சங்கடம்னு வந்திர வேணானு மட்டுந்தான் அப்ப யோசிச்சமே தவிர, இப்டி எல்லாம் நிக்க வச்சி நீ கேப்பனே… எங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு” என மனவருத்தத்தோடு கூறிய உமா,

“உன்னோட சுகத்தைத் தவிர வேறு எதையும் நாங்க எப்பவும் பெருசா யோசிக்கலை கௌதம்” என்றவர்,

கணவனைப் பார்த்து, “என்னங்க…” என்றிட, அவரும் தலையை அசைத்து மனைவியின் பேச்சை ஆமோதித்தார்.

சற்றுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை.  அமைதி.

தனது பேச்சால் பெற்றவர்களின் மனம் வருந்தியதை உணர்ந்தவன், சற்று நேரம் அமைதியாகவே இருந்தான்.

என்றுமே இப்படி எடுத்தோம் கவிழ்த்தோமென்று இதுவரை யாரிடமும் பேசியிராதவனுக்கு இன்று என்ன ஆனது என்று அவனுக்கே புரியவில்லை.

பெற்றோரின் வருத்தமான முகத்தைக் கண்டவனுக்கு நெஞ்சைப் பிசைந்தது.

இதுவரை தான் உயிரோடு இருப்பதற்கு அவர்களின் பங்கு எத்தகையது என்பது புரியாதவனா அவன்.

அனைத்தும் நினைவடுக்கில் இருக்கும்போது, இப்படி தான் யோசியாமல் பேசியது எத்தனை பெரிய தவறு என்பதும் புரிய, “சாரிமா… சாரிப்பா” என அவனது குரல் அவனுக்கே கேட்கவில்லை.  குறைந்த டெசிபலில் பெரியவர்களிடம் மன்னிப்பைக் கோரினான் கௌதம்.

பிரகதியை இக்கட்டில் நிறுத்திவிடக்கூடாதே என்று எண்ணி பெற்றவர்களை தனது கேள்வி மூலம் இக்கட்டில் நிறுத்தியவனுக்கு மிகுந்த வருத்தம்.

இருவரும் தலையை அசைத்து விரக்தியாய் புன்னகை ஒன்றை இதழில் பரவவிட்டனர்.

அதைக் கண்ட கௌதமிற்கு உயிர் போகும் வேதனை.  தான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ என்று காலம் கடந்து வருந்தினான்.

மகன் வருந்துவது புரிய, மிகுந்த மனஅழுத்தம் வேறு பிரச்சனைகளை மகனுக்கு கொண்டு வந்துவிடக்கூடும் எனப் பயந்தவர்கள் ஒருவரையொருவர் பார்வையாலேயே விசயத்தைப் பகிர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

அதற்குமேலும் மகனை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாமென நினைத்த சேகரனோ, “நாளைக்கு காலையில நல்ல முடிவாச் சொல்லு.  இப்பப் போயித் தூங்கு” என்றவர், எழுந்து அவர்களுக்கான அறைக்குள் நுழைந்தார்.

சற்று நேரம் கழித்து அறைக்குள் வந்த மனைவியிடம், “அம்புட்டு ஆசை அந்தப் புள்ளைமேல உம்மகனுக்கு…” என்றவர், “ஆனா அவனோட நிலைய நினைச்சு தயங்குறான்.  நீ பயப்படற அளவுக்கு ஒன்னுமேயில்லை.  நாளைக்கு நல்ல விசயமாச் சொல்லுவான்” என்றதோடு கண்களை மூடிக் கொண்டார் சேகரன்.

***

மனதோடு வருத்தம் இருந்தாலும் அறைக்குள் நுழைந்தவன் சிறிது நேரம் தான் பேசியதைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான்.

‘கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பேசியிருக்கணும்’ தனக்குத்தானே கூறிக்கொண்டவன், அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்தியின் சத்தத்தில் அலைபேசியை சுரத்தின்றி எடுத்து நோக்கினான்.

பிரகதிதான்.

‘ஆன்லைன்ல நான் பேசுறதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணாம, வேற யாரோட இவ்ளோ நேரம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்க?’

பிரகதியின் மெசேஜைவிட வீட்டிற்கு வரும்வரை மனதிற்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த விசயம் நினைவில் வர, “ட்டீட்டீ போட்டியா?” என டெக்ஸ்ட் செய்தான்.

“இல்லை” என்று அவளிடமிருந்து உடனே பதில் வந்தது.

“ஏன்?” என கௌதம் கேட்டதும்,

“நீதான் என்னைப் புடிச்சு தள்ளி விட்டுட்டுப் போயிட்டியே… அதான்” பதில் வர,

“பைத்தியம் மாதிரிப் பேசாத.  அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என வாய்ஸ் மெசேஜ் செய்தவன், ‘ஒழுங்கா நாளைக்கு காலையில போயி ஒரு டீட்டீ போடு” என அடுத்து மெசேஜ் செய்தான்.

“நான் டீட்டீ போட்டா எனக்கு நீ என்ன தருவ?” என்ற அவளின் செய்தியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,

‘இது திருந்தவே செய்யாது’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அதேநேரம் சற்று முன் பேசிய விசயங்கள் சார்ந்து சிந்தனையில் இருந்தமையால், பெற்றவர்கள் கண்டிப்பாக தனது குறையைப் பற்றி பிரகதியின் வீட்டில் வாயைத் திறக்க மாட்டார்கள் என்பதும் புரிந்தது.

இதுபோல இனியொரு சம்பந்தம் மகனுக்கு அமைவது குதிரைக்கொம்பு என்று புரிந்துபோனதால் பிரகதியை விட்டுவிடும் எண்ணம் சாமான்யத்தில் இருக்காது என்பதும் தெளிவானதால், எப்படியும் தன்னைச் சம்மதிக்க வைத்துவிடுவர் என்பதும் புரிய, தனது விசயத்தைப் பற்றி பிரகதியிடம் தானே கூறும் எண்ணத்திற்கு வந்திருந்தான் கௌதம்.

அலைபேசியில், “உங்கிட்ட நாளைக்கு ஒரு முக்கியமான விசயம் பேசணும்.  எப்ப ஃப்ரீனு சொன்னா நானே கால் பண்றேன். மெசேஜ் பண்ணு” என்று வாய்ஸ் மெசேஜ் செய்துவிட்டு, படுக்க ஆயத்தமானவனுக்கு அடுத்தடுத்து மெசேஜ் வரும் சத்தம்.

அலைபேசியை எடுத்து குறுஞ்செய்திகளைப் பார்க்காமல் அணைத்தவன் படுக்கையில் சரிந்தான்.

அலைபேசியை அணைக்காது படுத்தால் விடியல்வரை உறங்க விடமாட்டாள் பிரகதி என்பது தெரிந்தே அதனை அணைத்துவிட்டுப் படுத்திருந்தான் கௌதம்.

என்றும் தன்னிடம் இத்தனை இலகுவாகப் பேசாதவன், இன்று முக்கியமான விசயம் பேசவேண்டும் என்று கூறியதும் பிரகதிக்கு விசயம் என்னவென்று உடனே தெரிந்து கொள்ள வேண்டுமெனும் ஆர்வத்தில் மெசேஜ் செய்திருந்தாள்.

‘நம்ம மேரேஜ் விசயமாவா?’

‘ஹப்பா… இப்பவாவது உனக்கு புத்தி வந்துச்சே…’

‘எப்போ மேரேஜ்?’

இப்படி பிரகதி அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பார்த்தமைக்கான சுவடில்லாமல் இருந்தது.

அதனை அவன் பார்க்கவில்லை என்றதுமே அவனுக்கு அழைத்துப் பார்த்தாள்.

அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கும் செய்தி வரவே, விடியல்வரை யோசனையோடு இருந்தவள், மறுநாள் மருந்தகம் சென்றவனை வரவேற்கும் விதமாக காலையிலேயே வந்து தரிசனம் தந்திருந்தாள் பிரகதி.

விடியலுக்குப்பின் வீட்டில் நடந்த பேச்சு வார்த்தையில் மண்டை காய்ந்து வந்திருந்தான் கௌதம்.

அவனது நிலை புரியாமல், “என்ன தம்மு.  ஏதோ ரொம்ப முக்கியமான விசயம் எங்கிட்டப் பேசணும்னு சொன்னியே?” கேட்டவளிடம்,

“அதுக்கு… எந்திரிச்சதுமே அப்டியே கிளம்பி இங்க வந்துட்டபோல!” அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கிண்டலாகக் கூறிவிட்டு அகன்றிருந்தான் கௌதம்.

          அவனது பேச்சைக் கேட்டு கோபம் கொள்ளாமல் சிரித்தபடியே உள்ளுக்குள் குதூகலத்தோடு அவனோடு பின்னே நடந்தாள் பிரகதி.

கௌதம் தான் கூற எண்ணிய விசயத்தைப் பிரகதியிடம் தெரிவித்தானா? பிரகதி என்ன முடிவெடுத்தாள்?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!