சமர்ப்பணம் 19

சமர்ப்பணம் 19

stop human traffickingக்கான பட முடிவுகள்

அஞ்சலி கங்கம்மா வாயால் கேட்ட விஷயம் சாதாரணமானது இல்லை. எங்கேயோ, யாருக்கோ நடப்பதாகத் தினம் தினம் பேப்பரில், செய்திகளில் நாம் கேள்விப்படும் விஷயம்.

‘பாவம் யார் பெத்த பிள்ளையோ’ என்று ஒரு கணம் நம் மனதையும் அசைத்துப் பார்க்கும் கொடூரம்.

ஒரு நொடி கவலைப்பட்டு விட்டு அத்தோடு நாம் மறந்து விடும் விஷயம்.

ஆனால் மகாநதி படத்தில் வரும், ‘கிருஷ்ணசாமி என்கிற கமல்ஹாசன் கொல்கத்தா சிகப்பு விளக்குப் பகுதிவரை காவேரியை தேடி ஓடும் ஓட்டம்’ பல குடும்பங்கள் செய்து கொண்டு இருப்பது.

‘அந்தப் பொண்ணு பிஞ்சில் பழுத்தது… வீட்டை விட்டு ஓடிடுச்சு’ என்று ஜஸ்ட் லைக் தட் என்று, ph.d அளவுக்கு ரிசெர்ச் செய்து அறிக்கை விடும் மக்கள் அறிவதில்லை, பெண்கள், குழந்தைகள் மாயமாவதற்கு எல்லாவற்றின் பின்னாலும் காதல் இருப்பதில்லை என்பதை.

பாலியல் தொழிலுக்காகப் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவது பல பில்லியன் டாலோர் புழங்கும் தொழில் என்று.

இன்னும் பல சிகப்பு விளக்கு பகுதிகளில் கங்கம்மாவின் ரூபாக்கள் லட்சக்கணக்கில் உண்டு என்பதை.

‘எங்கேயோ போய்ட்டா நல்லா இருக்கட்டும்.’என்று மனதை தேற்றி கொள்ளும் பெற்றோர் அறிவதில்லை அவர்களின் மலர்கள் நன்றாக இல்லை என்பதை.

தினம் தினம் எரிமலை வெப்பத்தில் கருகி கொண்டு இருக்கிறது என்பதை.

ஒரு பேச்சை, ஒரு ரிப்போர்ட் நம்பும் பெற்றோர், ‘என் மகள் அப்படி எல்லாம் காணாமல் போகிறவள் கிடையாது ‘ என்று கங்கம்மாவை போல் தெரு தெருவாய் தேடி அலைவதும் இல்லை.

கங்கம்மா, கிரிஷ்னசாமிகள் நடக்க கூடாத ஒன்று…..

ஆனால் தினம் தினம் நடந்து கொண்டு இருக்கும் ஒன்று…

கேட்டதை நம்ப முடியாமல் திக்ப்ரமை பிடித்து அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

அவள் நிலையை உணர்ந்த கெளதம், “வாய் விட்டு அழுத்துடு அஞ்சலி… இங்கே பார்… மூச்சை விடு… இங்கே பார் நாம ரூபாவை தேடலாம்… மூச்சு விடு… அஞ்சலி, அஞ்சலி.” என்று அவள் கன்னத்தைத் தட்டியும் அஞ்சலி மீளவில்லை என்று தெரிந்ததும்,

“சந்தோஷ் இங்கே வாங்க.” என்று அலறினான்.

கௌதமால் அஞ்சலியின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அஞ்சலி முன்பு கட்டியிருந்த போட்டோ, வீடியோ, ஆவலுடன் இருந்த கங்கம்மாவின் அன்பான குடும்பம், அது காட்டிய அழகான ஓவியம் போன்ற வாழ்க்கை, இங்கே எந்த அளவிற்கு சிதைத்து போயிருக்கிறது என்று கங்கம்மா வாயால் கேட்ட அவனுக்கே கண்ணை இருட்டி கொண்டு தான் வந்தது.

‘எதுவும் செய்ய முடியவில்லையே’ என்று சாமானிய மக்களின் கோபம் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தாலும், அப்போதைக்கு அஞ்சலி, கங்கம்மா உடல் நிலை தான் முக்கியம் என்று அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

கெளதம் குரல் கேட்டுச் சந்தோஷ் உடன் சில டாக்டர்கள் உள்ளே வர, சந்தோஷ் அஞ்சலியையும், மற்றவர்கள் கங்கம்மாவையும் கவனித்து கொண்டனர்.

சந்தோஷ் அஞ்சலி நிலையை ஊகித்து, அவளைத் தூங்க வைக்கச் செடேடிவ் செலுத்தினான்.

“எல்லா கவலையும் மறந்து தூங்கி எழட்டும் கெளதம். ஆல்ரெடி உங்க மேட்டரில் ஸ்ட்ரெஸ்லே தான் இருந்திருக்கா… நிறைய நாள் பாலில் செடேடிவ் கொடுத்துத் தான் தூங்க வைத்திருக்கிறேன்.

உங்களை நினைத்தே அவள் உறங்கியது இல்லை…. இப்போ இவங்க விஷயம் அஞ்சலியை ரொம்பவே டிஸ்டர்ப் செய்து இருக்கு போலிருக்கு.    சோ தூங்கட்டும். தூக்கம் எல்லா கவலைக்கும், மன அழுத்தத்திற்கும் சிறந்த மருந்து.” என்றான் சந்தோஷ்.

வாழ்க்கையில் நாம் ஒருவரை சந்திக்கிறோம் என்றால் காரண காரியம் இல்லாமல் இல்லை.

ஏதோ புள்ளியில் உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இருப்பது தான் வாழ்க்கை.

எத்தனையோ வருடம் முன் காணாமல் போன மகளைத் தேடி கெளதம் ஹோட்டலுக்கு கங்கம்மா வந்ததும், சரியாக அதே சமயத்தில் அஞ்சலி அங்கு இருந்தும் கூட நாம் எடுக்கும் முடிவால் தான்.

தன் பல வருட கேள்விகளுக்குப் பதில், இவளின் குடும்பம் சிதைந்து போனதற்கான காரணமும், இத்தனை வருடமாய் விடை தெரியா கேள்வியுடன் இவர்கள் வாழ்க்கையை இழந்து விட்டுத் தவித்தற்கான பதிலும்  கங்கம்மாவிடம் தான் இருக்கிறது என்பதை அறியாத அஞ்சலி மருந்துகளின் உதவியால் நன்றாக உறங்கி எழுந்தாள்.

கெளதம் அவர்களைப் பார்த்துக் கொள்வதாய் சொல்லியிருக்க, இரவில் அங்கு வந்த இரு குடும்பமும் கிளம்பி சென்றிருந்தார்கள்.

அது சந்தோஷ் அறை என்பதை புரிந்து கொண்ட அஞ்சலி, தன் படுத்திருந்த படுக்கைக்கு அருகே கெளதம் சேரில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டவள், சத்தம் போடாமல் எழுந்து கங்கம்மாவை காண சென்றாள்.

அஞ்சலி உள்ளே வரும்போது அவரும் விழித்துத் தான் இருந்தார்.

“அம்மா!” என்று அஞ்சலி ஓடிச் சென்று, அவர் கையைப் பிடித்துக் கொள்ள.

“கவிமா!… நீ தானா கண்ணு… நான் நீ என் கற்பனை என்று நினைத்துப் பயந்துட்டே இருந்தேன்…

நான் பைத்தியமாம் கண்ணு… எல்லோரும் சொல்றாங்க.” என்றார் அவர் விழி நீர் வழிய.

அதைத் துடைத்து விட்ட அஞ்சலி அவரை அணைத்து கொண்டாள்.

“சொல்றவங்க ஆயிரம் சொல்லிட்டு தான் மா இருப்பாங்க.எனக்கு என் கங்கம்மாவை பத்தி தெரியாதா…. நான் இருக்கேன் மா உங்களுக்கு…. பாண்டியன் அப்பாவும் நானும் வருஷா வருஷம் உங்க ஊருக்குப் போய் உங்களைப் பற்றி விசாரித்துட்டு தான் மா வருவோம்….எங்க கிட்டே வேலை செய்யப் பிடிக்காமல் விலகிப் போயிட்டிங்க என்று நினைத்தோம்…

ஆனால் இப்படி என்று தெரிந்து இருந்தால் சத்தியமாய் சொல்றேன் அம்மா அப்பவே உங்க கூட நின்று இருந்திருப்போம்.  அம்மா, என்ன ஆச்சு சொல்லுங்க.” என்றாள் அஞ்சலி.

“என்னத்தை சொல்லுவேன் கண்ணு, திருவிழாவுக்கு உன் கையில் சொல்லிட்டு கிளம்பினோம். எனக்குப் பொறந்த நாள் வருதுன்னு ரூபா எனக்குப் புடவை வாங்கி கொடுக்கக் கடைக்குக் கூட்டி போச்சு….

அது ரொம்ப பெருசா இருந்துச்சு… தஞ்சாவூர் அரண்மனை கணக்கா அம்புட்டு பெருசு.சுத்தி பார்த்துக் காலு கை எல்லாம் வலிச்சு போச்சு.

புடவை எல்லாம் எடுத்துட்டு கீழே வரும் போது அதான் கண்ணு நின்னா அதுவா மேலே போகும், கீழே வருமே…” என்று பெயர் சொல்ல தெரியாமல் அவர் விழிக்க,

“எஸ்கேலெட்டெரா அம்மா?” என்றாள் அஞ்சலி.

“ஆஹாங், கண்ணு அதே லெட்டர் தான். அதில் ரூபா புள்ள உருண்டு விழுந்து கால் எலும்பு முறிஞ்சு போச்சு. அதைத் தூக்கினு… அண்ணா நகரில் இருக்கே பெரிய ஹாசுபித்திரி… அதான் கண்ணு விஷ்ணு தம்பியும், ராம் தம்பியும் வேலை பார்த்தாங்களே!…” என்றார் அவர்.

“விஷ்ணு, ராம் வேலை பார்த்த ஹாஸ்பிடல் என்றால் அது இது தான்… லைப் கேர்… இந்த ஹாஸ்பிடல்லா?” என்றாள் அஞ்சலி.

“ஆமாம் கண்ணு இதே தான்… அந்தச் சிவா அய்யா ஏழைகளுக்கு என்றே கட்டிய ஹாஸ்பிடல் இது தானே!… இங்கே தான் கொண்டு வந்து சேர்த்தோம். புள்ள ஒரு வாரத்திற்கு மேல் கண்ணே முழிக்கலை. அப்படியே முழிச்சாலும் மயங்கி மயங்கி விழுந்துச்சு.” என்றார் அவர்.

“உடனே எங்களுக்குப் போன் செய்ய வேண்டியது தானே அம்மா… நாங்க வந்திருப்போம் இல்லை.” என்றாள் அஞ்சலி.

“நீங்களும் எங்கேயோ வடக்கே குளிர் ஊருக்குக் கிளம்பிட்டிங்க கண்ணு. நீங்க இருந்தா இப்படியா நடந்து இருக்கும்? எல்லாம் நாசமாய் போச்சே…” என்று கதறி அழுதார் அவர்.

அவரைச் சமாதானம் செய்து, “அப்புறம் என்ன ஆச்சு அம்மா?” என்றாள் அஞ்சலி.

“இங்கேயே தான் கண்ணு மூணு வாரத்திற்கு மேல் தவம் கிடந்தோம் எங்க புள்ள கண் விழிக்க. எங்களுக்குத் தான் படிப்பு இல்லை. இங்கே டாக்டர்ருங்க தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசினது, சொல்வது ஒன்றும் புரியலை…

உயிரைக் கையில் பிடிச்சுட்டு வெளியவே காத்து கிடந்தோம். அப்போ தான் கடவுள் அனுப்பியது மாதிரி ராம் தம்பி வந்துச்சு.” என்றார் அவர்.

“ராம் அண்ணா உங்களைப் பார்த்தானா?” என்றால் அஞ்சலி. ஏதோ புரிவதும் போலவும், புரியாதது போலவும் இருந்தது.

“எப்போ வந்தான் கங்கம்மா.”என்றாள் அஞ்சலி.

“அதான் பாப்பா… ராம் தம்பி கல்யாண பத்திரிகை மாடல் கொடுத்துட்டு, நீங்க ராம் தம்பி கட்டிக்க போற பொண்ணொடு வடக்கு பக்கம் கிளம்பி போனீங்களே… அந்த வாரம் கண்ணு “என்றார் கங்கம்மா.

தனு, ராம்மிற்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்க, தனு மன அழுத்தத்தில் இருப்பதாய் ரேணுகா புலம்பிக் கொண்டு இருக்க, தனுவுடன் இவர்கள் கிளம்பி ஷிம்லா போயிருந்தார்கள்.

ராம் கோபித்து கொண்டு வழக்கம்போல் காணாமல் போனான்.

கெளதம் அவன் ஒரு பக்கம் ராமை கண்டால் வெட்டுவேன், குத்துவேன் என்று எகிறி கொண்டு இருந்தான்.

ராம், தனு காதல் கேள்வி பட்டவுடன் விஷ்ணு அமெரிக்கா போனவன், போனவன் தான்.

இவர்கள் எல்லோரையும் பிரியாமல் காக்க பேசி சமாதானம் செய்து குடும்பத்தில் மற்றவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்த நேரம் அது.

அதி முக்கியமாய் அஞ்சலி.

ஷிம்லா சென்றும் ஆளுக்கு ஒரு விட்டத்தை பார்த்துக் கொண்டு, டைட்டானிக் கப்பல் முழுகிய பீல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் என்பது தனி கதை.

இயற்கைக்கு மனதை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு தான் என்றாலும், நாம் வெல்ல வேண்டியது நமக்குள் இருக்கும் மனதை அல்லவா…சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

அப்பொழுது பின்னால் இருந்து ரெண்டு நிஜ ஷைத்தான்கள் ரூபேஷ், பிங்கி என்ற இரு அரக்க ஜென்மங்கள் தான் குட்டையை குழப்பி விட்டுக் கொண்டிருக்கிறது என்று இவர்கள் அறியாத தருணம்.

எல்லோரும் ராம் மேல் காரணமே இல்லாமல் கோபமாய் இருந்தார்கள்.அவன் கோபம், விலகல் தார்மீக கோபம் என்பதை அறியாதவர்களாக.

ராம் வழக்கம்போல் பார்ட்டி, ட்ரிங்க்ஸ், பெண்கள் என்று ஊர் சுற்றி கொண்டு இருப்பதாய் தான் அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்க, ராம் லைப்கேர் ஹாஸ்பிடலில் தான் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறான்.

இதை அறியாத இவர்கள் ராம்மை வகை வகையாக அல்லவா திட்டிக் கொண்டு இருந்தார்கள்.

தன் எண்ணத்தில் உழன்று கொண்டு இருந்த அஞ்சலியைக் கங்கம்மாவின் அழைப்பு கலைத்தது.

“என்ன பாப்பா….என்ன ஆச்சு…. “என்றார் கங்கம்மா.

“ஒன்றும் இல்லை மா. அப்போ நடந்த சில விஷயங்களை நினைச்சி பார்த்தேன்… சொல்லுங்க மா… ராம் இங்கே இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தான்.”என்று அஞ்சலி சொல்ல,

“ராம் தம்பி வந்துச்சு… எங்களைப் பார்த்துட்டு விவரம் தெரிந்து கொண்டு ஓடிச்சு ரூபா அறைக்கு. அங்கே அதுக்கு கொடுக்கும் டிரீட்மென்ட் பற்றி எல்லாம் அங்கே இருந்த நர்ஸ் கிட்டே கேள்விமேல் கேள்வி கேட்டுச்சு.

ஏதேதோ டெஸ்ட் எழுதிக் கொடுத்தது.அந்த டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் பார்த்துட்டு ரூபாவுக்கு பக்கத்திலேயே என்னை இருக்க சொல்லிட்டு, ‘மருந்து வாங்கி வரோம்’ என்று சொல்லி ரூபா அப்பாவையும்  கையோடு கூட்டிட்டு போச்சு. திரும்ப வரும்போது அவுக… ரூபா அப்பா முகத்தில் சுரத்தே இல்லை.

அப்பவே இந்தப் பாவி மகளுக்கு உள்ளே சுருக்குன்னு தான் இருந்தது. மனசு கிடந்து அடிச்சுக்குச்சு… மனசு போட்டு அப்படியே பிசைந்துட்டு இருந்தது கண்ணு…

என்னன்னு சொல்லத் தெரியலை… அடி வயறு ஏதோ கெட்டது நடக்க போகுதுன்னு கலங்கிகிட்டே இருந்துச்சு…பெத்த வயிறு இல்லையா…ஆனா அப்போ இந்தப் பாவி சிறுக்கிக்கு எதுவும் புரியலையே…” என்றார் கங்கம்மா கண்களில் நீர் வழிய,

“ரெண்டு பேர் கிட்டேயும் என்னவென்று நீங்க விசாரிக்கவில்லையா?” என்றாள் அஞ்சலி.

actor ms bhaskar cryingக்கான பட முடிவுகள்

“என்னன்னு கேட்டதுக்கு, ‘தம்பி இன்னும் நல்ல மருந்தாய் வாங்கி தரேன்ன்னு சொல்லியிருக்கு கவலைப்படாதே’ என்றார்.

நானும் அதை நம்பி இருந்துட்டேன். அந்த மனுஷன் அப்படியே உடைஞ்சி போனார் பாப்பா.நான் கூடப் புள்ள உடம்பு கவலைபோல் இருக்குன்னு அவரைச் சரியா கவனிக்காம விட்டுட்டேன்…ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ஆச்சே…

ரெண்டு நாள் கழிச்சி, ‘இதோ வரேன்’ என்று சொல்லிட்டு வெகுவேகமாய் எங்கோ போனார். அது தன அவரைக் கடைசியா நான் பார்த்தது.

திரும்ப அவரைப் பிணமாய் தான் ராம் தூக்கிட்டு வந்துச்சு. என்ற ராசா என்னை விட்டுட்டு போய்டுச்சு… ராம் தம்பி தான் அவருக்கு எல்லாத்தையும் செய்துச்சு ஒரு மகனாய்.” என்றார் கங்கம்மா கதறலுடன்.

அவரை அணைத்து கொண்ட அஞ்சலியின் கண்களும் கலங்கி போனது தனக்கு இன்னொரு தந்தையாய் இருந்து பார்த்துக் கொண்ட கண்ணப்பாவிற்காக.

“அந்த மனுஷன் குடிக்கவே மாட்டார் கண்ணு… அன்னைக்கு பார்த்து குடிச்சிருந்தார்.” என்றார் கங்கம்மா.

“ஏன், என்ன ஆச்சு கங்கம்மா…” என்றாள் அஞ்சலி அவர் பருக நீர் கொடுத்து அவர் தன்னை சற்று தேற்றி கொண்டதும்.

“என்னன்னு சொல்வேன் கண்ணு…” என்று ஆரம்பித்த கங்கம்மா பெருமூச்சை விட்டு, “அவுக… ரூபா அப்பாவுக்குக் குடி பழக்கமே கிடையாது. தண்ணீ, பீடி எந்தப் பழக்கமும் கிடையாது….   உனக்கே தெரியும் தான் கண்ணு.

அன்னைக்குன்னு பார்த்து அந்த மனுஷன் முதல் முறையாய் குடிச்சி இருக்கார். குடிச்சா மன கவலை தீரும் என்று எவன் சொன்னான்ன்னு தெரிலை… குடிச்சிட்டு ரோட்டில் நடந்து வந்த மனுஷனை கார் அடிச்சிடுச்சு….

உதவிக்குன்னு வர அந்தச் சமயம் அந்தத் தெருவில் யாருமே இல்லை…அடிபட்டவுடனே தூக்கி வந்திருந்தாலாவது உயிரைக் காப்பாற்றி இருக்கலாமா என்று ராம் தம்பி அழுத்துச்சு…யாருமே உதவிக்கு வரலை…தரையில் ஓடின ரத்தம் என் பொட்டை எடுத்துகிச்சி….

அடிபட்டு உயிர்க்கு போராடும் ஒருவரின் ரத்தம் என்பது அந்த ஆளின் பொண்டாட்டி பூவும், பொட்டுமாய் இருக்கலாம்…. அவனுங்க பிள்ளையின் அன்பும், பாதுகாப்புமாய் இருக்கலாம்…

ஒரு குடும்பத்தின் அழிவாக இருக்கலாம் என்று கூடத் தெரியாமல் ஸ்பீடா வண்டி ஓட்றது, குடிச்சுட்டு வண்டி ஓட்றது, சோக்கு காட்ட வண்டி ஓட்றதுன்னு இந்த பாவி பசங்க ஓட்டும் வண்டியில் இன்னும் எத்தனை குடும்பங்கள் தான் அழியுமோ….” என்று  கலங்கிய கங்கம்மா போல் இன்னும் எத்தனை பெண்களின் கண்ணீரை சுமந்து கொண்டு இருக்கிறதோ, இனி இருக்க போகிறதோ மக்களின் அலட்சியம், கவனக்குறைவால் ஏற்படும் சாலை விபத்துகள்.

ஆனால் அது சாலை விபத்தே இல்லை, திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு கொலை என்பது இவர்கள் இன்னும் அறியவில்லை.

“நான் ரூபா புள்ளை கண் விழிக்க இங்கே ஹாஸ்பிடலில் காத்திருந்தேன் கண்ணு… உடம்பு ஊருக்கு எடுத்துப் போகும் வரை தாங்காது, இங்கே ரூபாவையும் தனியே விட்டுட்டு போக வேண்டாம் என்று ராம் சொல்லிச்சு.

ஊருல ராசா மாதிரிச் சொந்தம், பந்தம் என்று வாழ்ந்த மனுசன் முகத்தைக் கூட அவர் ஊர்க்காரங்க பார்க்க முடியாமல் போய்டுச்சு…. எங்களுக்கு மகன் இல்லாத குறையாய் ராம் தம்பி தான் தீர்த்து வச்சிச்சு.

அவுக புலம்பிட்டே இருப்பாங்க கண்ணு…கொள்ளி வைக்க ஒரு மகன் இல்லையே என்று… கட்டை வேகுமோ வேகாதோ என்று… அவர் மகனாய் வளர்த்த புள்ள கையில் தான் எல்லாம் நடக்கணும் என்று இருந்திருக்கு…” என்றார் கங்கம்மா.

ஆயிரம் அசுவமேத யாகம் செய்வதற்கு சமம், இறந்தவரின் கடைசி யாத்திரையை நிறைவேற்றி வைப்பது.

“ரூபா கண் விழித்தாளா?” என்றாள் அஞ்சலி.

“ஹ்ம்ம்… என் புள்ள கண் விழிக்கும் வரை கூடவே இருந்து ராம் பார்த்துக்கிச்சு. ஒரு வாரம் அந்த அறையை விட்டு இங்கே அங்கே நகரலை…

வெளியே போச்சுன்னா கூட என்னை அறைக்குள் இருக்க சொல்லிட்டு தான் போகும்… பாவம் அதுக்கு வேலை தலைக்கு மேல் இருந்துச்சு… கம்ப்யூட்டர் பெட்டியுடன் தான் அலைஞ்சிட்டு இருக்கும்…

ரெண்டு மணி நேரம் கூட அதுக்கு உறக்கம் இல்லை.நிறைய ஆளுங்களை கூட்டி லெப்ட் ரைட் வாங்கிட்டு இருந்துச்சு…”என்றார் கங்கம்மா.

“நீங்க என்னன்னு கேக்கலையா அம்மா.”என்றாள் அஞ்சலி யோசனையுடன்.

ராம் எதையும் அஞ்சலியிடமோ, கங்கம்மாவிடமோ மறைக்க மாட்டான்.ஹேமா கூட அடுத்த படி தான்.

இவ்வளவு நடந்து இருக்கும் போது இதை பற்றி ராம் ஏன் தனக்கு ஒன்றும் சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்தது அஞ்சலிக்கு.

“சொல்லுச்சு…ஏதோ நடக்க கூடாதது இங்கே நடந்துட்டு இருக்கும்மா…அதை சரி செய்யும் பொறுப்பு என்னிடம் தான் கொடுத்து இருக்காங்க….அதை தான் செய்துட்டு இருக்கேன்.

“வேறு எதாவது சொன்னானா…. எதை பற்றி என்று?”என்றாள் அஞ்சலி.

“இல்லையே கண்ணு…. எனக்கு நான் இருந்த நிலையில் அதை பத்தி கேக்க தோணலையே…”என்றார் கங்கம்மா.

“ரூபா டிரீட்மென்ட் ராம் கொடுத்த பிறகு உடல் நிலை ஏதாவது மாற்றம் வந்துச்சா… ரூபா உடல் நலம் தேறிட்டா தானே…”என்றாள் அஞ்சலி.

“ஹ்ம்ம்… ராம், விஷ்ணு தம்பி கைராசிகார டாக்டருங்கன்னு உனக்குத் தெரியாதா கண்ணு… என் புள்ளை அத்தனை நாள் சுயநினைவு இல்லாமல் இருந்த பொண்ணு, ராம் தம்பியால் தான் கண் முழுச்சுச்சு.”என்று சொன்னவர் மீண்டும் கதற ஆரம்பிக்க அஞ்சலியின் மனம் அடித்துக் கொண்டது.

‘இனிமேல் தான் இதயம் இன்னும் வலிக்கப் போகிறது’ என்று உள்ளுணர்வு சொல்ல, வரப் போவதற்கு தன்னை சமாளித்து கொண்டாள் அஞ்சலி.

பாவம் அஞ்சலி அறியவில்லை, இது எல்லாம் எவ்வளவு மனதை தேற்றி கொண்டாலும், எழும் வலி தவிர்க்க முடியாத ஒன்று என்பதை.

என் புள்ள கண் விழிச்சதுன்னு சந்தோசபட்டால் என் தலையில் அன்று இரவே இடி விழுந்து போச்சு…

காலையில் கண் விழிச்சி பார்த்தால் என்ற புள்ளையை காணோம். அந்தளவிற்கு நான் அசந்து தூங்கிட்டேன்… நான் எல்லாம் என்ன ஆத்தாக்காரின்னு தெரிலை கண்ணு…

‘கண் விழிச்சி பார்த்துகோங்கோ’ என்று ராம் தம்பி சொல்லுச்சு… ஆனா இந்த பாவி தூங்கிட்டேன் கண்ணு.

போலீஸ் வந்துச்சு விசாரணை எல்லாம் செய்தாங்க… ராம் தம்பி தான் அவங்களுக்கு உதவிட்டு இருந்தது.” என்றார் அவர் கண்ணீருடன்.

“ராம் எதையும் செய்யலையா?” என்றாள் அஞ்சலி, தன் அண்ணன் எப்படி அமைதியாய் இருந்தான் என்று புரியாமல்.

“அந்த புள்ளை தெய்வத்திற்கு சமம் கண்ணு. அதுக்கு திருமணம் வச்சாங்க இல்லை அன்று இரவு கூட, என் வீட்டுக்கு வந்து, “அம்மா தங்கை இருக்கும் இடம் பற்றி தகவல் வந்திருக்கு… நான் போய் தங்கையை அழைச்சிட்டு வரேன் மா…’ என்று பட்டு வேட்டி சட்டையோடு என் ராஜா போச்சு…

அதன் பிறகு அது கிட்டே இருந்து தகவலேயில்லை…” என்றார் கங்கம்மா.

“வீட்டுக்கு வந்திருக்க வேண்டியது தானேம்மா….”என்றாள் அஞ்சலி.

“சுப காரியம் நடக்கும் வீடு…நான் அறுத்தவ…நான் எப்படி அங்கே வர முடியும்….” என்றார் கங்கம்மா.

“என்ன மா நீங்க மனுஷ உயிரை விட வா இதெல்லாம் பெருசு… ரூபாவை விட நாங்க இதை தானா பெருசா நினைக்க போகிறோம்… பாண்டியன் அப்பா எத்தனை பெண்களுக்கு மறுத்திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இத்தனை வருடம் எங்களுடன் இருந்தும் எங்களை பற்றி நீங்க புரிஞ்சுக்கலையா அம்மா…அப்பவே எங்க கிட்டே சொல்லியிருந்தீங்க என்றால் போலீஸ்ன்னு போய் இருக்கலாமே…”என்றாள் அஞ்சலி வேதனையுடன்.

“முதலில் அப்படிக்கா நினைச்சி தான் கண்ணு வீட்டு பக்கம் வரலை… அப்புறம் எனக்கே தோணுச்சு….  அய்யா, அம்மா அப்படி இல்லையே என்று… வந்தேன் கண்ணு. உங்க வீட்டில் வந்து பார்த்தா ஒரே போலீசா இருந்துச்சு… என்னென்று விசாரிக்க தம்பியை காணோம் என்று சொல்ராங்க. எனக்கு ஒரே திகிலா போச்சு.

அங்கே நெட்டையா இருந்த தம்பி ஒண்ணு…சினிமா ஹீரோ கணக்கா இருந்துச்சு… அது தான் அப்படியே கருப்பண்ண சாமி மாதிரி, அறிவாலும் கையுமா நின்னுட்டு இருந்துச்சு…

கத்தின கத்தில் எனக்கு ஜூரமே வந்துடுச்சு… இங்கேயே ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, என் பிரச்சனையை வேற என்னத்தை சொல்லன்னு வந்துட்டேன்…”  என்றார் கங்கம்மா.

யோசனையில் ஆழ்ந்தாள் அஞ்சலி.

அன்றைய தினம் அஞ்சலிக்கு நன்றாக நினைவுக்கு வந்தது.

திருமண முகூர்த்தம் கடந்த பின்னும் அதன் பிறகும் பல நாள் கடந்தும் ராம் வரவில்லை.

தனு தற்கொலைக்கு முயன்று இருக்க, கெளதம் போலீஸ் உடன் வீட்டிற்கு வந்து கத்தி கொண்டு இருந்தான்.

அன்று தான் கங்கம்மா வந்திருக்கிறார்.

‘சோ ராம் இந்த காரணத்திற்காக தான் திருமண மண்டபத்தை விட்டு வெளியே போய் இருக்கான். ரூபாவை மீட்டு வர… போன இடத்தில் இவன் மீது தாக்குதல் நடந்து இருக்கு.

இவன் குறியா, இல்லை உடன் சென்ற திலீப் தான் குறியா?

தாக்கியது கெளதம் ஆட்களா இல்லை வேறு ஒருவனா?

திலீப், கெளதம் இந்த ரெண்டு ஆங்கிளில் மட்டும் தானே இது வரை சந்தேகப்பட்டோம்.

ரூபா பற்றிய தகவல் ராம் இதுவரை ஏன் சொல்லவில்லை? ‘என்று மனம் கேள்வி கேட்க, தீவிர யோசனையில் இருந்தாள் அஞ்சலி.

எதோ ஸ்ட்ரைக் ஆக, போன் எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்தாள்.

“அஞ்சு… ரெசெப்சன் ரொம்ப நல்லா நடந்துச்சு டாக்கண்ணா…மனசு நிறைஞ்சி இருக்கு…நீயும் கௌதமும் மேடையில் நிற்கும்போது அவ்வளவு பாந்தமாய் இருந்தது.என் கண்ணே பட்டுடும் போலிருந்தது.அம்மா கிட்டே சொல்லிச் சுத்தி போடச் சொல்லு…”என்று பேசிக் கொண்டே போனவன், ஏதோ தோன்ற,

“என்ன கண்ணா இந்த நேரத்தில் போன் செய்து இருக்கே… உனக்கும் கௌதமிற்கும் ஏதாவது பிரச்சனையா… திரும்பவும் என்னைப் பத்தி கேட்டுக் கெளதம் உன்னை ஏதாவது சொல்லிட்டானா…” என்று பதற ஆரம்பித்தான்.

“டேய்… டேய்… நிறுத்துடா… நீயே திரைக்கதை, வசனம், டைரெக்ஷன் எல்லாம் செய்யாதே…. முதலில் சொல்வதை கவனி… எனக்கும் கௌதமிற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை…

கெளதம் தூங்கிட்டு தான் இருக்கான்.நான் எங்களைப் பத்தி உன்னிடம் பேசக் கூப்பிடலை… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.”என்ற அஞ்சலி, “ராம்… நீ ஏன் ரூபா மேட்டரை சொல்லவே இல்லை?” என்றாள் அஞ்சலி.

“அடியேய்!… வேணாம் வலிக்குது அழுத்துடுவேன்… இப்போ எந்த ரூபாடீ வந்து நின்னு இருக்கா… ‘ராம் தான் என்னை கெடுத்துட்டான் என்று…’

தனியா வந்திருக்காளா… இல்லை நண்டு சிண்டுன்னு என் பிள்ளைங்க என்று சொல்லிட்டு மினி ஸ்கூல் ஒன்றை கூட்டி வந்திருக்காளா!….

சத்தியமா சொல்றேன் அஞ்சு…. பெயரில் மட்டும் இல்லை நிஜத்தில் கூட நான் ஸ்ரீராமன் தாண்டீ.” என்றான் ராம்.

“டேய், அண்ணா… உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் ஷோ இல்லைன்னு எனக்கும் தெரியும்டா நட்டு போல்ட் கழண்டவனே…

ஆனா என்ன ஒண்ணு வடிவேலு, ‘நானும் ரௌடி தான்… நானும் ரௌடி தான்னு’ கூப்பாடு போட்டும் யாரும் அவரை நம்பலை…

நீயும் தீ மிதிச்சி, காவடி எடுத்து, அலகு குத்தி நான் உண்மையிலே நல்லவன், வல்லவன், அமுல் பேபி, பச்சை மண்ணுன்னு தான் சொல்றே… பட் உன் கிரகம் எவனும் உன்னை நம்ப தயாராய் இல்லை… வாட் டு டூ டா அண்ணா…

அது என்னவோ உன் லீலைகள் லிஸ்ட் மட்டும் பெட்ரோல் விலை மாதிரி, ‘சர்’ என்று நாளுக்கு நாள் உயர்ந்துட்டே போகுது…

ஆனா நான் சொல்வது உன் அந்தப்புர பெண்கள் லிஸ்ட் என்று அந்த கெளதம் லூசு கொடுத்த லிஸ்ட் பற்றி இல்லை…  நம்ம கங்கம்மா பொண்ணு ஸ்வாதிரூபா…” என்றாள் அஞ்சலி.

தங்க பிறை ஹோட்டல் வளாகத்தில்  காரில் இருந்தவனுக்கு வந்த அழைப்பில் ஹாஸ்பிடலிலிருந்து ஒருவன், ‘போலீஸ் வந்து காணாமல் போன ஸ்வாதி என்ற பெண்ணைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் சொல்லப்பட்ட   அதே ஸ்வாதி கங்கம்மாவின் மகள் ஸ்வாதிரூபா.

ராம் பக்கத்தில் இருந்தவர் எதையோ சொல்ல, ராம் அவர்களிடம் கத்துவது கேட்டது.

“இதை ஏன் முன்னரே சொல்லலை… அப்போ அஞ்சலி, கெளதம் கங்கம்மாவுடன் லைப் கேர்ரில் தான் இருக்காங்களா…” என்று சத்தம் போட்டான்.

“டேய்….டேய் கோட்ஜில்லா…அடங்குடா…எப்போ எதுக்கு அவங்களை குதறி எடுக்கறே நீயி… ஊருக்கு இலச்சது அரசமரத்தடி பிள்ளையார் என்று சொல்வது மாதிரி உனக்கு அவங்களா…மவனே… பூரி கட்டையை வாங்கி வந்து கொடுத்து உதைக்க சொல்வேன்…

நீ தூங்கிட்டு இருந்தே என்று சொன்னாங்க… நான் தான் உடனே சொல்ல வேணாம் என்று அவங்க கிட்டே சொல்லி வச்சேன்…நீ அடங்கறியா…” என்றாள் அஞ்சலி

” சரி… சரி….  கங்கம்மா, எப்படி இருக்காங்க?” என்றான் ராம் ஆவலுடன்.

“இன்னும் காணாமல் போன தன் பெண்ணை தேடிட்டு தான் இருக்காங்க. இங்கே லைப் கேரில் தான் அட்மிட் செய்து இருக்கேன்.

அவங்க, நீ தான் உன் திருமண நாள் அன்று வந்து சொல்லிட்டு, ‘ரூபா இருக்கும் இடம் தெரிந்து விட்டது அழைத்து வரேன்’ என்று சொல்லி சென்றதாக சொன்னார்கள். இதை பற்றி நீ எதுவுமே சொல்லலையே.” என்றாள் அஞ்சலி.

“நம்ம திலீப் தான் தகவல் கொடுத்தான்… சித்தூர் பக்கம் ஒரு பெண்ணை போலீஸ் மீட்டு இருப்பதாக…. போய் பார்த்தோம் அது நம்ம ரூபா இல்லை.

எல்லாம் பிஞ்சு குழந்தைங்கடீ…. எல்லாத்தையும் வீட்டின் வெளியே விளையாடும் போது, டியூசன் போகும்போது, திருமண மண்டபத்தில், ஷாப்பிங் மால்லிலிருந்து கடத்தி இருக்கானுங்க…

எல்லாம் சோனாகாஜிக்கும், மலேஷியா, தாய்லாந்து மசாஜ் பார்லர் என்ற பெயரில் நடக்கும் விபசார விடுதிக்கும் கடத்தி விற்கும் கும்பல்….நெஞ்சை அப்படியே உருவி எடுத்தார் போல் வலியாகி போச்சு அஞ்சுமா….

கண் கொண்டு பார்க்க முடியலை அந்தப் பசங்க இருந்த நிலையை….ரெண்டு பேர் ரொம்ப சீரியஸ்…என்ன சொல்றேன்னு புரியுதில்லை… நானும் திலீப் தான் தேவையான மெடிக்கல் ஹெல்ப் செய்தோம்…

அந்தப் பிள்ளைங்களை பார்த்துட்டு அதன் பிறகு வேறு எதன் மீதும் கவனம் செல்லவேயில்லை.ஒரு குழந்தை செத்து போச்சுடீ… யாரிடமும் பேசும் நிலையில் அப்போ நான் இல்லை.ஒரு மாதிரி உறைந்து தான் போயிருந்தேன் மனிதர்களின் வக்கிரம் போகும் அளவை நினைத்து.

நான் டாக்டர்… தினம் தினம் ஆயிரம் உயிர் போவதை பார்த்தவன் தான். ஆனால் சில மரணம் நடக்க கூடாதா ஒன்று அஞ்சு…”என்றவன் குரலில் அன்று அவன் அனுபவித்த வேதனை, வலி இங்கு அஞ்சலியால் நன்றாக உணர முடிந்தது.

தன்னை சமாளித்து கொண்ட ராம்,  “தவிர அந்த இடம் அந்த மினிஸ்டர் இடம் என்று தெரியாமல் போய்ட்டோம். திலீப்புக்கும் அந்த மினிஸ்டருக்கும் ஆகாது என்று தான் தெரியுமே…அந்தாளு மகன் பெண்களிடம், குழந்தைகளிடம் தவறாய் நடந்தான்.

அதை திலீப் வெளியே சொல்லிவிட, போலீஸ் அவனை உள்ளே போட்டு நொங்கி எடுத்தாங்க…ஜெயிலில் தற்கொலை செய்துட்டான்…அதற்கு திலீப் தான் காரணம் என்று அந்த ஆள் நேரம் பார்த்து காத்திருந்தான். அதன் பிறகு நடந்தது உனக்கே தெரியுமே.” என்றான் ராம்.

“இரு நீ எதுக்கு கண்ணப்பா அப்பாவை தனியே அழைத்து போனே, நிறைய டெஸ்ட் எடுக்க சொல்லி சொல்லி இருந்தியாமே” என்றாள் அஞ்சலி.

“ஆமா அஞ்சு… அது தான் உனக்கே தெரியுமே… ஊரில் உலகில் இருக்கும் எல்லாம் பெண்களிடமும் நான் தான் தவறாக நடந்து கொண்டு இருக்கிறேன் என்று தனுவும், கௌதமும் ரொம்ப பேசி இருந்த சமயம்.

எனக்கு நீ சப்போர்ட்டாய் இருந்தாய் தான்… ஆனா இந்தப் பாண்டி, ஹேமா, தனு பேச்சைக் கேட்டுட்டு, ‘பெண் பாவம் பொல்லாதது’ என்று பாடம் நடத்த ஆரம்பித்ததில் எனக்குக் கடுப்பாகி போச்சு…

சும்மா தவறே செய்யாதவனை நம்பாமல், எவனோ சொல்வதை நம்பிட்டு இருந்தால், அதான் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்ஸாகி போனேன்….மொபைல் எல்லாம் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன்.

‘ஆமா எவளையோ ஏதோ செய்துட்டு இருக்கேன் என்று நம்பிகோங்கோ என்று… நீங்களும் அந்த அம்மிணியை, ‘ஆத்துறேன் தேத்துறேன்’ என்று சிம்லா கூட்டிட்டு போய்க் கூல் செய்யறேன் என்று போனீங்க…

நான் லைப் கேரில் தங்கிட்டேன்…பாவம் நோயாளிங்க நோயைத் தீர்த்தலாவது புண்ணியம் கிடைக்கும் என்று… அப்போ தான் கங்கம்மாவை, கண்ணப்பாவை  பார்த்தேன்.

அவங்க இருவரும் பயத்தில் இருந்த நிலை பார்த்ததும் தனு, கெளதம் சண்டை போட்டது கூட இவங்களை நான் மீட் செய்ய தானோ என்று தான் நினைக்க தோன்றியது.

அந்த சண்டை வந்திருக்காவிட்டால் நான் திருமணத்திற்கு லீவு போட்டு விட்டு வீட்டில் தானே இருந்திருப்பேன்.நமக்கு இன்னொரு அப்பா,அம்மாவாய் இருந்த இவர்களுக்கு உதவ தான் எனக்கு அப்படி ஒரு அவ பெயர் வந்ததோ என்னவோ…

ரூபாவை செக் செய்தால் அவள் கால் காயம் ஏற குறைய ஆறி இருக்கு. ஸ்கேன், லேப் ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல் தலையில் அடிபட்டு எந்த பிளாக் இல்ல என்று தான் காட்டியது.

மயக்கம் அடிக்கடி வருவதால் சந்தேக பட்டு தான் லேப் டெஸ்ட் எழுதி கொடுத்தேன். என் சந்தேகம் உறுதியாகிடுச்சு. ரூபா இஸ் ப்ரெக்னென்ட்.

அதை தான் அப்பாவை தனியே கூட்டி போய் சொன்னேன் கங்கம்மாவுக்கு தெரிந்தால் தாங்க மாட்டாங்க என்று.” என்றான் ராம் குரலில் வேதனையுடன்.

“ஆனால் இந்த விஷயம் கங்கம்மாவிற்கு தெரிந்து இருக்கிறதே.” என்ற அஞ்சலி அவர் மயங்குவதற்கு முன் சொன்னதை சொல்ல ராம் குழம்பி போனான்.

“சான்ஸே இல்லை கங்கம்மாவுக்கு தெரிய… கண்ணப்பா வயசை கூடப் பார்க்காமல் என் பொண்டாட்டிக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் தம்பி…அவ தாங்க மாட்ட…பொண்ணை கொன்னுட்டு தானும் செத்துடுவா…ரோசக்காரி….கை எடுத்துக் கும்பிடறேன்…இந்தக் கருவைக் கலைக்க உதவுங்க…

ஊருக்குக் கூட்டி போய்ச் சில வருஷம் கழித்து யாருக்காவது கட்டி கொடுத்துடறேன்… பெண் பிள்ளை விஷயம்…போலீஸ்ன்னு போன டீவியில் வருவது எங்கள் மானம் தான்.’என்று கையைப் பிடிச்சுட்டு அழுதார்.

நானும் ஒரு தங்கைக்கு அண்ணன்.ஒரு பெண்ணின் கூட வளர்ந்தவன்.ஸ்வாதியும் நான் தூக்கி வளர்த்த தங்கை தானேடீ…ஒரு அண்ணனாய் அந்தத் தந்தையின் கண்ணீர், துடிப்பு, வலி வேதனை எனக்கும் புரிந்தது.

அங்கே ஹாஸ்பிடலில் தெரிந்த லேடி டாக்டர் கிட்டே பேசி, ரகசியமாய் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்தோம்.ஒரு கொலை தான் என்றாலும் ஸ்கூல் படிக்கும் ஸ்வாதியும் குழந்தை தானேடீ…அவள் எதிர்கால வாழ்க்கையை பார்க்கணும் என்று தான்….

மறுநாள் வந்து ஸ்வாதியை லேடி டாக்டர் கிட்டே கூட்டி போக வந்தால்…அங்கே அவளே இல்லை. நிச்சயமா கண்ணப்பா அவங்களிடம் சொல்லி இருக்கவே மாட்டார்.இந்த விஷயம் தன்னோடு புதைந்து போக வேண்டிய ஒன்று என்று தான் சொல்லிட்டு இருந்தார்.

போலீஸ் கிட்டே கூட ஆஃபீசியல் கம்பளைண்ட் கொடுக்கலை…என் நண்பன் ACP கமலநாதன் இருக்கான் இல்லை….அவன் தான் வந்து விசாரித்துட்டு இருந்தான்.

நானும் சொல்லலை…கண்ணப்பாவும் அவங்களுக்கு சொல்லியிருக்க மாட்டார்.”என்றான் ராம்.

“இரு… அவங்களுக்கு எப்படி தெரியும் என்று விசாரிக்கிறேன்.” என்ற அஞ்சலி கங்கம்மாவிடம்  வந்து கேள்வியை கேட்க,

“அதுவாமா.. இங்கே ஒரு நர்சம்மா இருந்துது. ரூபாவை அது தான் பார்த்துக்கும்…. எங்க கிராமமம் பக்கெந்தேன். மூணு நாலு வருஷம் முன்னே என்னை ரோட்டில் பார்த்து என் காலிலேயே விழுந்துடுச்சு.

என்ன என்று கேட்டதுக்கு என் தலையில் இடியை இறக்கிடுச்சு…” என்றவர் மீண்டும் கதறி அழ, அவரை சமாதானம் செய்த  அஞ்சலி அவரை மேலே சொல்லும் படி சொன்னாள்.

“கால் உடைஞ்சிடுச்சுன்னு போன பிள்ளைக்கு அளவுக்கு அதிகமாய் மயக்க மருந்து, கொடுத்து, கொடுத்து மயக்கத்தில் வைத்திருந்து, அங்கேயே என் பிள்ளையை சிதைச்சி இருக்காங்க பாவி பசங்க…

யாருன்னு தெரியலையே..  அய்யோ! மாரியாத்தா… உனக்கு கண்ணு இல்லாம போச்சே” என்றார் அவர் .

இதயம் சமர்ப்பிக்கப்படும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!