(181-தமிழ்நாட்டின் 24 மணி நேர ஹெல்ப்லைன் உடல், மன, பாலியல், உணர்ச்சி அல்லது நிதி துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈவ்-டீசிங், பின்தொடர்தல், தொலைபேசி தொடர்பான துஷ்பிரயோகம் போன்றவற்றை பதிவு செய்ய அமைக்கப்பட்டது.துன்பத்தில் உள்ள பெண்கள் 1091, வீட்டு துஷ்பிரயோகம் 181(வீட்டினர் கொடுமை) பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW) 011-23237166, 23234918 போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம்.)
(பாலியல் கடத்தலுக்கு ஆளானவர்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், மீளமுடியாத உளவியல் சேதங்களுக்கு ஆளாகிறார்கள் மற்றும் பலவிதமான பாலியல் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவார்கள். புனர்வாழ்வு என்பது உளவியல் சிகிச்சைமுறை, பொருளாதார வலுவூட்டல் மற்றும் ஒரு குடிமை அடையாளம் உள்ளிட்ட பல செயல்முறைகளின் மொத்தமாகும். வழக்கின் சட்டபூர்வ நிலை, குடும்ப ஏற்றுக்கொள்ளல், குடும்பப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து பாதுகாப்பான வீட்டில்/safe house தங்குவதற்கான காலம் தனிப்பட்டதாகும். புனர்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தீர்க்க ‘பிரஜ்வாலா‘ போன்ற திட்டங்கள் மறுவாழ்வு அளிக்கிறது.)
மரணத்தின் பிடியில் வலி, வேதனையில் துடித்துக் கொண்டு இருப்பவனை கொல்லும் வெறி எழுகிறது என்றால், எந்த அளவிற்கு அவன் கேடுகெட்ட வேலைகளைச் செய்து இருக்க வேண்டும்.
சந்தோஷ் ராமையும், சுமித்ரா அஞ்சலியையும் பிடித்து இழுத்து வைக்க மிகவும் போராடினார்கள்.
திலீப்புக்கும் இவர்களுக்கும் நடுவே கண்ணாடி தடுப்பு உள்ளது என்றாலும் அதை உடைத்து கொண்டாவது சென்று அவனைக் கொல்லும் அளவுக்குக் கோபத்தில் இருந்தார்கள் அந்த அண்ணன் தங்கை இருவரும்.
“விடுடா சந்தோஷ்…. விடுன்னு சொல்றேன் இல்லை… இவனை எல்லாம் ஆயிரம் தடவை கொன்றால் கூடத் தப்பில்லை… நட்புக்காக உயிரே கொடுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்…. ஆனால் நண்பன் என்ற பெயரில் கூட இருந்தே குழி பறித்துட்டானே… நம்பினேன்…
நம்பி இவனுடன் போனேன்… கடைசியில் என் கழுத்தையே அறுத்துட்டானே….நான் பாதித்தது போதாது என்று இவன் செய்த செயலால் தனுவை இழந்தேன்…இதோ ஆறு வருஷம் என் தங்கை யாரோ ஒருத்தரின் வீட்டில் வேலைக்காரி மாதிரி இருந்திருக்கா…
இவங்க ரெண்டு பெறும் எங்க வீட்டு இளவரசிங்க…ஆனா ஒருத்தரை கூட என்னால் அப்படி உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக்க முடியாமல் செய்துட்டானே…”என்று சந்தோஷ் கையில் திமிறிக் கொண்டு இருந்தான் ராம்.
இன்னொரு பக்கம், “விடுங்க சுமித்ரா…இவன் எல்லாம் உயிரோடு இருக்க கூடாது…பெண்கள் ஒரு வயசுக்கு மேல் பெத்தவங்க கிட்டே கூடத் தன் உடம்பை காட்ட மாட்டாங்க.கட்டின புருஷனுக்கு மட்டுமே பார்க்கும் உடலை, உடல் நலம் தேற என்று பெண்கள் வந்து அந்தரங்கமாய் காட்டுவது இடம் மருத்துவமனை ஒன்றில் தான்.எந்த அளவிற்கு இந்தத் தொழிலின் மேல் மதிப்பு, மருத்துவம் பார்ப்பவர்களின் மேல் நம்பிக்கை இருந்தால் பெண்கள் இங்கே வருவார்கள்.
அந்தத் தொழிலை இவனைப் போல் சில அரக்க ஜென்மம் தவறாய் பயன் படுத்தறானுங்க… ரூபா சின்னப் குழந்தைடா … என் கையில் வளர்ந்த என் தங்கை… பள்ளி சென்றவளை…. கால் உடைந்து வந்தவளை….பாவிங்களா இன்னும் எந்த அளவுக்குத் தாண்டா எங்களை ஓட ஓட விரட்டுவீங்க… விடு சுமி….” என்று அஞ்சலி கோபத்தின் உச்சத்தில் கொதித்து கொண்டு இருந்தாள்.
“ராம்…. ஏற்கனவே அஞ்சலி ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கா…உடல் நிலை இன்னும் பாதிக்கப் போகுது….நீ தான் அவளைப் பார்க்கணும் …” என்று சந்தோஷ் ராம் கவனத்தை அஞ்சலிமேல் திருப்ப, அஞ்சலி முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க, காளி தேவி மாதிரி நின்ற தோரணை கண்டு ராம் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
தன்னை மீட்டு கொண்ட ராம், திமிறிக் கொண்டு இருந்த அஞ்சலியை அணைத்து கொண்டான்.
“வேண்டாம் அஞ்சுமா…தெய்வம் நின்று கொல்லும் என்பது மாதிரி…உலகின் மிகக் கொடிய எலும்புப் புற்றுநோய் அதன் வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறான். கொன்றால் கூட உயிர் உடனே போய்டும்…ஆனால் இந்த நோயின் வலி நொடிக்கு நொடி நரகத்தை காட்டி கொண்டு இருக்கும்…நீ இவனுக்காக உன் உடல் நலத்தை கெடுத்துக்காதே….ரிலாக்ஸ்.”என்றான் ராம்.
ராம் சொன்னதில் உண்மை புரிய, அஞ்சலியின் தன்னை மீட்டு கொண்டாள்.
அஞ்சலி, ராம் கோப விழிகள் திலீப் மேல் மீண்டும் படிந்தது.
இத்தனை வருடமாய் விடை தேடியும் கிடைக்காத கேள்விகளுக்குப் பதில், இவர்கள் வாழ்க்கை தடம் மாறிய கதையின் சூத்திரத்தாரியான இவர்களிடம் தானே இருக்கிறது.
“யார் இதை எல்லாம் செய்தது திலீப்?” என்ற அஞ்சலியின் குரலில் அத்தனை சீற்றம்.
“சொல்லு என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கி, என் குழந்தையைத் தனுவையும் கொல்ல முயன்றது யார் சொல்லுடா” என்று ஓங்கி ஒலித்தது ராம்மின் குரல்,
“ரூபேஷ், பிங்கி…” என்றவனுக்கு மூச்சு இழுக்க ஆரம்பிக்க நர்ஸ் அவர்களை வெளியேற்றினார்.
கடைசியில் அத்தனை கொடுமைகளையும் செய்தது ரூபேஷ், பிங்கி.
திலீப் இவர்களுடன் பணத்திற்காகச் சேர்ந்தான் என்றால், இவர்கள் பெண்ணாசை, காமத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று இருக்கிறார்கள்.
ரூபாவை மயக்கத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது, ராம் மேல் சித்தூரில் தாக்குதல் நடத்தியது, கர்ப்பிணி பெண்ணுக்கு டெலிவெரி சமயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பணம் பார்க்க அவர்களைக் கொன்றது, தனு, சுமித்ரா, அஞ்சலிக்குக் குறி வைத்தது எல்லாம் ரூபேஷ் வேலை.
தனு, ராம் ஏழாம் மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையைக் குப்பை தொட்டியில் போட்டது, தனுவை குழப்பி குழப்பி அவளை அடிக்கடி தற்கொலைவரை கொண்டு சென்றது, ராம் ஒரு ஸ்திரீலோலன் என்ற பிம்பம் உருவாக்கியது, கெளதம் திருமணத்தின்போது அல்டிமேட்டம் கொடுக்கக் காரணமாய் இருந்தது பிங்கி.
நுங்கம்பாக்கத்தில் ஹோட்டலில் தேவதைகள்போல் வந்த தனு, அஞ்சலி, சுமித்ராவை குறி வைத்து, ராம் மேல் தாக்குதல் நடத்தி, பல குடும்பங்களின் வாழ்வை சிதைத்து ரூபேஷ்.
பெண்ணாசை, பொன்னாசை கொண்டு ஆட்டம் போட்ட ஒரு மிருகம் கடைசி நொடிகளில் சித்திரவதை பட்டு மெல்ல அங்கே இறந்தது.
poetic justice.
அந்த அறையை விட்டு வெளியே வந்தவர்களை எதிர் கொண்டான் கெளதம்.
அவன் கரம் கூப்பி இருக்க, கண்களில் நீர் அருவியாய் வழிந்து கொண்டிருந்தது. “என்னை மன்னிச்சுடு ராம்.” என்றான் கெளதம்.
“ராம்… யார் ராம்?” என்றான் ராம்.
“எல்லாம் தெரிஞ்சு போச்சு ராம். இனியும் மறைக்காதே…” என்றவனை இழுத்து அணைத்து கொண்டான் ராம் புன்னகையுடன்.
“என்னையும் நீ மன்னிக்கணும் கெளதம். இதுக்கெல்லாம் நீ தான் காரணம் அவன் சொன்ன பொய்யை எல்லாம் நம்பியது என் முட்டாள்தனம். அஞ்சலி உன்னைப் பிரியவும் நான் தான் காரணம்.” என்றான் அவன் கண்களில் கண்ணீர் வழிய
ராமும் கௌதமும் சேர்ந்து கையை நீட்ட, அவர்கள் கைவளைவில் மிகச் சந்தோஷத்துடன் சரண் புகுந்தாள் அவர்கள் இருவரின் உயிரான அஞ்சலி.
மறுநாள் காலை டிவியில் பிளாஷ் நியூஸ் ஓடி கொண்டிருந்தது .
“பிரபல வக்கீல் பிள்ளைகள் போதை மருந்தால் மரணம். அண்ணன் தங்கை ஒன்றாய் மறித்த பரிதாபம். சென்னை தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற திரு.தேவநாயகம் அவர்களின் பிள்ளைகள் இவர்கள் இருவரும்.”
இதை கண்ட பலர் தங்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டதே என்று வருந்தினார்கள்.
லட்சம் முறை திரும்ப திரும்ப கொன்றால் கூட போதாது தான்.
“இது மாதிரி அரக்க ஜென்மங்களுக்கு மரணம் என்பது கூட கம்மி தான்.” என்றான் கெளதம்.
அஞ்சலி, கெளதம், விஷ்ணு, சந்தோஷ், சுமி எல்லோரும் லைப்கேர் தொண்டு நிறுவன அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது உள்ளே வந்த சிவசாமி அய்யா, “ரூபாவை மீட்டுட்டாங்க. தேவநாயகம் சார் அழைச்சிட்டு வராங்க.” என்றார்.
அரை மணி நேரத்திற்கு பிறகு வந்த காரில் இருந்து இறங்கினாள் ஸ்வாதிரூபா.
ஏழு வருடமாய் பாலியல் அடிமையாய் ஒரு அரக்கனிடம் சிக்கி தன் வாழ்வையே தொலைத்து இருந்த அவளின் வலி, வேதனை வாங்கி கொண்டு அவளை தலை நிமிர செய்ய பல உதவி கரங்கள் அங்கே நீண்டன.
அவளை மீட்கவும் அவள் சிறகுகளை விரிக்க உதவவும், தலைநிமிர்ந்து ஸ்வாதி இனி வாழவும் அவளை தங்களில் ஒருத்தியாய் தாங்கி கொண்டார்கள் வாழ்விற்கு அர்த்தம் கற்பித்து கொண்டிருக்கும், பாரதியாரின் புதுமை பெண்கள்.
இனி அவள் மீண்டு விடுவாள்.
‘மன வைராக்கியம் மட்டும் இருந்தால் எதையும் உடைத்து எறியலாம்’ என்ற நெருப்பு அவள் மனதில் பற்றவைக்க பட்டது அங்கிருந்த அக்னி தாரகைகளால்.
“பார்த்துக்கோ ராம்…. என் சொத்து முழுவதையும் இந்த நிறுவனத்திற்கும் இவர்களுக்கும் என்று எழுதி இருக்கேன்.” என்றவர் விடை பெற, அவரை பின் தொடர்ந்து ஓடினாள் அஞ்சலி.
“மாமா!…” என்ற குரல் கேட்டு திரும்பியவர் ஒரே நாளில் மூப்பாய் தெரிந்தார்.
“எங்கே மாமா போறீங்க?” என்றாள் அஞ்சலி.
“என் பிள்ளைகள் சேர்த்து வைத்திருக்கும் பாவத்தை கழுவ வேண்டுமே.” என்றார் அவர்.
“எப்படி, எங்கே ஸ்வாதி கிடைச்சா மாமா?.” என்றாள் அஞ்சலி.
“நீ இவர்கள் செய்யும் வேலைகளை என்னிடம் சொன்ன பிறகு இவர்களை கண்காணிக்க ஆள் போட்டு இருந்தேன். செத்து போன திலீப் பெயரில் ஒரு பண்ணை வீடு இருப்பது தெரிய வந்தது.
அங்கே தான் ஸ்வாதியை அடைத்து வைத்திருந்தான்.
ஏழு வருஷம் வெளி உலகத்திற்கே தெரியாமல் அந்த பெண்ணை அங்கே நாயை போல் அடைத்து வைத்து… மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகும் கூட, அந்த பிஞ்சுகளையும் அங்கேயே அடைத்து வைத்து…
ரூபா இருந்த அறையை நீ பார்த்து இருந்தே நெஞ்சு வெடித்து போய் இருக்கும் அஞ்சுமா…
ஒற்றை அறை, ஏழு வருடம் சூரிய ஒளி கூட மேல் படாமல்… கடவுளே இந்த அளவிற்கெல்லாம் போய் இருப்பார்கள் என்று நான் நினைக்கவேயில்லை அஞ்சலி. எங்கே தவறி போனேன்?” என்று அவர் குலுங்கி அழ, அஞ்சலிக்கும் கண்ணீர் சுரந்தது.
எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகி விட்டாரே என்று.
“அவங்க எப்படி மாமா இறந்தாங்க?” என்றாள் அஞ்சலி.
“ஓவர் டோஸ் மா. வரேன் மா” என்ற அவர் இதழில் விரக்தி புன்முறுவல்.
காரை கிளப்பி கொண்டு அவர் செல்ல,அவர் cd பிளேயர் பாடியது
“வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
கொலைவாளினை எடடா
மிகு கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர்குணமேவிய தமிழா
தலையாகிய அறமே புரி சரி நீதியும் தகுமா?” என்ற பாடலைக் கேட்ட அவர் முகத்தில் அதுவரை இருந்த சோகம் சுத்தமாய் இல்லை
கண்களில் எரிமலை வெடித்து கொண்டிருந்தது.
அரக்கர்களை வதம் செய்த நிறைவு அவர் முகத்தில்.
தேர்க்காலில் அன்று ஒரு பசுவின் கன்று இறந்ததற்காக அன்று மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றார் மனுநீதி சோழன்.
இன்று பிள்ளைகள் தவறே செய்தாலும், என் பிள்ளை அப்படி இல்லை…அவனைவிட உலக மகா மெகா உத்தமன் எவனும் இல்லை என்று சொல்லும் பெற்றோர்களின் நடுவே, தன் சொந்த பிள்ளைகள் செய்த தவறுகளுக்கு நீதிபதியாய் இருந்து தண்டனை கொடுத்து விட்டார்.
அதுவும் உடனே சாகும் மரணம் இல்லை…
போதை மருந்து அளவுக்கு அதிகமாய் எடுத்துக் கொண்டதன் விளைவாகத் துடி துடித்து மரணம்.
மூச்சு விட முடியாமல், தவித்து, திணறி, வாந்தி, மயக்கம் பயம், படபடப்பு, நடுக்கம், குளிர், உடலின் வெப்பம் குறைதல், Hallucination என்று காற்றாடி கூடத் தன்னை துரத்துவது போன்ற மனப்பிராந்தி ஏற்பட்டு தேவையான மருத்துவ உதவி கிடைக்காமல் பல மணி நேரம் கத்தி கதறி, பைத்தியம் போல் ஆடைகளைக் கிழித்து, அண்ணன் தங்கை ஒருவரை ஒருவர் பிராண்டி, கடித்து என்று வலி நிறைந்த மரணம்.
காரைக் கூவம் ஆற்றங்கரையில் நிறுத்தியவர் அதிலிருந்து இறங்கினார்.
ஒரு காலத்தில் பளிங்கு போல் நீர் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இப்பொழுது சாக்கடை ஓடுகிறது.
படகு சவாரி விடப்பட்ட ஆறு இன்று குப்பை, கழிவு கொட்டப்படும் இடம்.
அந்தக் கரையோரம் நாற்றம் குடலை பிடுங்கினாலும் அங்கே வந்தவர், காரிலிருந்து தான் கொண்டு வந்த பாக்கெட் ஒன்றை பிரித்துச் சாக்கடை ஓடும் ஆற்றில் கொட்டினார்.
பல கழிவுகளை உள் வாங்கி கொள்ளும் அந்த ஆறு, அந்த வெள்ளை நிற துகள்களுக்குப் பின் இருந்த மிகப் பெரிய ரகசியம் ஒன்றையும் தனக்குள் புதைத்துக் கொண்டது.
பலவருடமாய் பிள்ளை இல்லை என்று அவரும் அவர் மனைவியும் கோயில் கோயிலாய் ஏறித் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளைகளை இன்று அவரே வதம் செய்து விட்டார்.
சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே
நீண்ட காலத் தவமாய் நானே
வாங்கி வந்த வரம் நீ மானே
கண்ணே கண்ணே.” என்ற பாடல் எங்கிருந்தோ தேவநாயகம் காதில் வந்து விழ அவர் கண்களில் தாரைத் தாரையை கண்ணீர்.
அன்று மாலை லைப் கேர் இல்லத்தில் அங்கிருந்த குழந்தைகளுடன் குழந்தையாய் புன்னகையுடன், எது நிஜ காதல் என்று புரிந்து தன் வாழ்க்கையை மீட்டு கொண்ட தனுஸ்ரீ விளையாடி கொண்டிருந்தாள்.
“ஸ்ரீ.” என்றவாறு அவள் அருகில் வந்தார் சிவசாமி அய்யா.
“சொல்லுங்க அய்யா.” என்றாள் தனு.
“கொஞ்சம் மனசை தேத்திக்கோமா… ராம் கோவாவில் இறந்து ஏழு வருடம் ஆச்சு. போதை மருந்து ஓவர் டோஸ் ஆகி இறந்துட்டான்.
யார் என்று தெரியாததால் அங்கே இருந்த போலீஸ் அவன் உடலை கிரேமேட் செய்துட்டாங்க என்று இப்போ தான் நியூஸ் வந்தது.” என்றார்
“கடவுளே …” என்று கண்கள் கண்ணீரை சிந்தினாலும் தனு முகத்தில் தெளிவும், ஏதோ தளையில் இருந்து விடுபட்ட நிம்மதியும் தெரிந்தது.
“என்ன மா எதுவும் சொல்ல மாட்டேங்கிற… வாய் திறந்து பேசு.” என்றார் சிவசாமி.
“இதில் நான் சொல்ல என்ன அய்யா இருக்கு?
அஞ்சலி அடிக்கடி சொல்ல கேட்டு இருக்கேன், ‘நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நல்லதோ கெட்டதோ, நம் வாழ்வை மட்டும் அல்ல யாரோ, எங்கோ ஒருவரின் வாழ்க்கையை கூட பாதை மாற்றி விடும்’ என்று.
ராம் எடுத்த முடிவு இத்தனை நல்ல குடும்பம் இருந்தும், எங்கோ ஒரு அனாதை பிணமாய் இறக்க காரணமாய் இருந்து இருக்கிறது.அதே தவறை நான் செய்து விட கூடாது….
என் வாழ்வு,உயிர் என்றால் அது என் விஷ்ணு தான்.விஷ்ணு தான் உண்மையான காதல் என்றால் என்ன வென்று புரிய வைத்தார். இனி அவரும் என் ரெண்டு பிள்ளைகளும் தான் என் உலகம்.
ஒரு முறை கேட்பார் பேச்சை கேட்டு எடுத்த முடிவு, இவர்களை என்னிடம் இருந்து பிரித்து இருக்கும். விஷ்ணு மாதிரி ஒரு கணவன், அஞ்சலி மாதிரி ஒரு தோழியை இழந்து இருப்பேன்.
என் அண்ணனும் கூட என் முட்டாள் தனத்தால் ரொம்பவே கஷ்ட பட்டு விட்டான் அய்யா…என்னால் ரெண்டு குடும்பத்திற்கும் மன வருத்தம் தான் வீணாக…இப்போ தான் வாழ்க்கை என்றால் எது என்று புரிந்து இருக்கு….
ராம்மிற்கு நான் நன்றி தான் சொல்ல வேண்டும். இப்படி ஒருவரோடு என் வாழ்க்கை அமைந்ததற்கு.ராம் ஆத்மா எங்கிருந்தாலும் சாந்தி அடையட்டும். இந்த விஷயம் ராம் அப்பா, அம்மா, அஞ்சலிக்கு தெரியவே வேண்டாம் அய்யா.
எங்கோ யார் கூடவோ இருப்பதாய் நினைத்து கொள்ளட்டும்… ராம் பெயரில் அன்னதானம் நடத்த சொல்லிடுங்க அய்யா… அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனையை நடத்துங்கள்.
கிளம்பறேன் அய்யா… அவுங்க கூப்பிடுறாங்க.” என்று அவரை கை கூப்பி வணங்கிய தனு, புன்னைகையுடன் தன் கணவனை நோக்கி சென்றாள்.
“நீ காரில் இரு… நான் சொல்லிட்டு வந்திடுறேன்.” என்ற விஷ்ணுக்கு சரியென்று தலை அசைத்து விட்டு தங்கள் காரை நோக்கி சென்றாள்.
“அப்போ நாங்க கிளம்பறோம்.” என்ற விஷ்ணு விடை பெற, “விஷ்ணு.” என்ற அவர் குரல் தடை செய்தது.
“நீ ஜெயிச்சிட்டே விஷ்ணு… உன் காதல் உன் கைக்கு கிடைத்து விட்டது.
இனி ராமின் ஸ்ரீ இல்லை அவள். உன் தனு மட்டும் தான். என்னை ஜெயிச்சிட்டே விஷ்ணு… போ உன் காதல் அங்கே காத்திருக்கு” என்று புன்னகையுடன் எழுந்து நின்றான் சிவசாமி என்கிற ராமச்சந்திரசேகர்.
விஷ்ணு கண்களில் கண்ணீர் பெறுக தன் தம்பியை அணைத்து கொண்டான்.
“நான் ஜெயிச்சிட்டா நான் கேட்பதை…” என்ற விஷ்ணுவை, தடை செய்த ராம், “இன்றே நடக்கும்.” என்றான்.
அவன் பார்வை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சுமித்ரா மேல் பதிந்தது. விஷ்ணு விடைபெற ராம் அருகில் வந்த சுமித்ரா அவன் கண்களில் தனக்கான காதலை கண்டு விக்கித்து நின்றாள்.
“சுமி…” என்று அவள் கையை பிடித்து கொண்ட ராம், அவளின் சேகர்.
“சுமி… என் இருண்ட காலத்தில் எனக்கு வழிகாட்டியாய், துணையாய், தாதியாய், தோழியாய், என் பலமாய் இருந்தாய்… இனிமேல் என் மனைவியாக இருப்பாயா?” என்றான் ராம், இல்லை அவளின் சேகர் மட்டுமே இனி.
கண்களில் நீர் வழிய எதை கேக்க இத்தனை வருடமாய் தவம் இருந்தாளோ, அவனே அறியாமல் அவன் மேல் காதல் கொண்டு அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த அவள், அழுகைக்கு இடையே தன் சம்மதத்தை தெரிவிக்க, அந்த நிறுவனத்தில் இருந்த சிறு கோயிலுக்கு அவளை அழைத்து சென்ற சேகர், அங்கிருந்த இல்ல வாசிகளின் முன்னிலையில் சுமித்ராவின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டி முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாய் அவளை தன் சரிபாதியாய் இணைத்து கொண்டான்.
நாத்தனார் முடிச்சை போட்ட அஞ்சலியின் கண்களில் கண்ணீர்.
விலைமதிப்பில்லாத ஆனந்த கண்ணீர்.
அண்ணனையும், அண்ணியையும் அணைத்து கொண்ட அவள் அவர்களுக்கு முத்தத்தை வாரி வழங்கினாள்.
வாழ்க்கையை தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த தன்னை மீட்டு, போதை, குடியை விட உயர்ந்த வாழ்க்கை அது மற்றவர்களுக்காக வாழ்வும் வாழ்க்கை என்று புரிய வைத்த பெரியவர் சிவா அய்யாவுக்கு அந்த நொடி மனதார நன்றி சொன்னான் சேகர்.
குடித்து விட்டு ஒட்டிய வண்டி யாரும் இல்லாத இடத்தில் அச்சிடேன்ட் ஆகி இருக்க, காப்பாற்ற கூட ஆள் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தவனை காக்க தேவதூதனாய் வந்தவர் தான் சிவகுருநாதன் அய்யா.
அடி பட்டு இருந்தவனை காப்பாற்றி, பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்து, ராம் கண் விழிக்கும் வரை உடன் இருந்தவர் அந்த தெய்வம்.
தங்கம் ஜொலிக்க பொடம் போட வேண்டியது அவசியம்.ராம் என்ற தங்கத்தை அன்பு என்ற நெருப்பால் பொடம் போட்டு ஜொலிக்க வைத்தார் சிவகுரு நாதன்.
ராம் என்ற கெட்டவனை, “சாமி” என்கிற நல்லவனாய் மாற்றியவர் அவனின் இன்னொரு அப்பா.
‘எய்யா நீ இந்த சிவாவோட, சாமி அய்யா… சின்ன வயசுல செத்து போன, ‘என் பிள்ளை சிவசாமி’ திரும்ப கிடைத்திருக்கான்.” என்று தன் மகனாய் அவனை தத்து எடுத்து, தான் செய்து கொண்டிருக்கும் தர்ம காரியங்களுக்கு அவனை பொறுப்பில் வைத்து அழகு பார்த்தவர்.
‘நாம் ஒரு உயிர்க்கு உதவினால் நமக்கு உதவ உலகமே ஓடி வருமையா. உனக்கு முன் மற்றவர்களை வைத்துப் பார்க்கப் பழகிக் கொள் ராம். அப்போ புரியும் நம்மிலும் கேடு உண்டு நாட்டில் கோடி என்று.
எல்லாம் நன்றாக இருந்தும் எதையோ தேடி ஓடிக் கொன்டு இருக்கிறாய் ராம். நல்ல குடும்பம், அன்பான பெற்றோர், ஆசைக்குத் தங்கை, வழிகாட்ட அண்ணன், உன்னையே நம்பி ஒரு பெண், அழகான காதல், உயிரை அந்த ஆண்டவனுக்கு அடுத்து காக்கும் மருத்துவ படிப்பு என்று உனக்கு இருக்கு.
இது எதுவும் இல்லாமல் யாரும் அற்றவர்களாக, உடல் நோய், மன நோய் வந்து மனநலம் பாதிக்கப் பட்டு என்று நிறைய இருக்கிறார்கள்…. இவர்களை விடவா உன் வாழ்வு தாழ்ந்து விட்டது….
உன் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்க வேண்டும் என்றால், மனம் சரி இல்லை, சோர்வா இருக்கு என்று சொல்வதற்கு பதில் இந்த இல்லங்களில் வந்து பாரு….” என்று பொதுநலத்தை பாடமாய் நடத்தியவர் சிவகுருநாதன். என்று அன்று அவர் சொன்னது எவ்வளவு உண்மை.
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.”
‘என்று சொல்வது உண்மை தான் என்று நினைத்து கொண்ட சேகர் முகத்தில் நிறைவான புன்னகை.
எவ்வளவு உன்னதமான வார்த்தைகள்.
ராம் வாழ்வையே காப்பாற்றிய வரிகள்.
ரூபேஷ் நடத்திய ஆசிட் தாக்குதலால் நடு ரோட்டில் கதறி துடித்து, முகம், கை, கால் எல்லாம் சிதைத்து துடித்து கொண்டிருந்தவனை, சிவா அய்யாவோடு அவன் செய்த தர்மம் தக்க சமயத்தில் சுமித்ரா ரூபத்தில் வந்து அவனை காத்தது.
ஆம், ரூபாவை தேடி திலீப் உடன் சென்ற ராம் மேல் ஆசிட் தாக்குதல் நடத்தி இருந்தான் ரூபேஷ்.
தாக்குதல் நடத்தியது ரூபேஷ் என்று அறிந்தவன் திலீப் ஒருத்தன் தான்.
ராமிற்கும் திலீப் இறப்பதற்கு முன் சொல்லும் வரை கெளதம் ஏற்பாடு செய்த அட்டாக் என்று நினைத்தே பெங்களூருவில் அஞ்சலி மேடையேறி பாடிய பின் அவளை அங்கிருந்து துரத்தி அனுப்பினான்.
சித்தூர் பக்கம் மெடிக்கல் கேம்ப் முடிந்து, திரும்பி கொண்டிருந்த சுமியும் அந்த கேம்ப் டாக்டர்களும் சேர்ந்து தான் ராம் உயிரை காப்பாற்றியது.
முதலுதவி கொடுத்து, சென்னைக்கு, ‘ரொம்ப கிரிட்டிக்கல் என்ற நிலையில் கொண்டு வந்து, பிழைப்பான மாட்டானா’ என்று முழுதாய் ஒரு வருடம் கோமாவில் இருந்தவனை மீட்டது சுமியும், அஞ்சலியும் தான்.
ஆணழகன், பெண்களின் ஹீரோ என்று கல்லுரியில் பட்ட பெயர் எல்லாம் பெற்று இருந்த ராம் , ஆசிட் அட்டாக் நடந்து, முகம் முழுவதுமாய் சிதைந்து, தண்டுவடம் பாதிக்கப்பட்டு, முடியெல்லாம் கருகி வாழ்வா, சாவா என்று ஹாஸ்பிடல் அவசர சிகிச்சை பிரிவில் போராடி கொண்டு இருக்க, மற்றவர்கள் ராம் ஏதோ ஒரு பெண்ணுடன் அலைந்து கொண்டு இருக்கிறான் என்று பொய்யை நம்பி இருந்தனர்.
விஷ்ணு, தனு கிளம்பி விட, அங்கேயே இருந்தார்கள் கௌதமும், அஞ்சலியும்.
புதுமண தம்பதிகளான ராம்மையும், சுமித்ராவையும் அந்த இல்லத்தில் இருந்தவர்கள் வாழ்த்தி கொண்டு இருக்க, அருகில் இருந்த மர நிழலில் அமர்ந்தார்கள் கௌதமும், அஞ்சலியும்.
அத்தனை வருடம் உள்ளத்தை அழுத்தி கொண்டு இருந்த மனபாரம் குறைய, ஆனந்த கண்ணீர் வழிய தன் அண்ணனையும், அண்ணியையும் பார்த்து கொண்டு இதழில் புன்னகையுடன் இருந்த அஞ்சலியை தன் மேல் சாய்த்து கொண்டான் கெளதம்.
கெளதம் கண்களும் கலங்கி தான் இருந்தது.
“எவ்வளவு பெரிய விஷயம் நீயும் உன் அண்ணனும் செய்து இருக்கீங்க அஞ்சலி. என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என்ற கெளதம் அவளை பார்த்து தன் கையை கூப்ப
“என்ன கெளதம் இது சின்ன பிள்ளையை போல்… கண்னை துடைங்க… எதோ நடக்க கூடாதது நடந்து போச்சு.விடுங்க.” என்றாள் அஞ்சலி .
“ராம் உயிரோடு இருப்பதை சொல்லி விடலாம் தானே? எதுக்கு அவனை கோவாவில் வைத்து கதை முடிச்சீங்க?” என்றான்.
“தேவை இல்லாத குழப்பம் தான் வரும். ராம்க்கு என்ன ஆனது என்று தெரிந்தால் தனு தாங்க மாட்டா. அவ மட்டுமில்லை அப்பா, அம்மாவும் கூட தான். தவிர அப்போது ராம் உயிர் பிழைப்பாரா என்பதே சந்தேகமாய் தான் இருந்தது. இதை எல்லாம் ஏற்று கொள்ளும் நிலையில் வீட்டில் யாருமே இல்லை.
தவிர இப்போ ராம் உயிரோடு இருப்பதை சொன்னால் நிலாவை பற்றியும் சொல்ல வேண்டி வரும்.”என்ற அஞ்சலி சுமியுடன் விளையாடி கொண்டிருந்த நிலாவை கை காட்டி, “ராம் அண்ணா மகள்… தனுவின் முதல் குழந்தை.” என்றாள்
“என்னது?” என்று எழுந்தே நின்று விட்டான்.
‘இப்போ தான் சுமி-ராம் திருமணமே நடக்கிறது என்றால் நிலா எப்படி அவர்கள் மகளாய் இருக்க முடியும்? இதை யோசிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று தன்னை தானே கேட்டு கொண்டான்.
“என்னிடம் சொல்லி இருக்கலாமே அஞ்சு” என்றான் கண்ணில் கண்ணீர் வழிய.
திலீப் சொன்னது அனைத்தையும் சொன்ன அஞ்சலி, “அப்போ அந்த நேரத்தில் நீங்க தான் அண்ணாவின் இந்த நிலைமைக்கு காரணம், குழந்தையை கொல்ல சொன்னது உங்க குடும்பம் தான் என்று நினைத்தோம். உங்களுக்கு உண்மை தெரிந்தால்… எங்கே நிலாவை…” என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.
“தனு கர்ப்பம் என்பதே எங்களுக்கு தெரியாது அஞ்சலி. ரத்த வெள்ளத்தில் இருந்தவளை ஹாஸ்பிடலில் சேர்த்தால், தாய் இல்லை சேயை தான் காக்க முடியும் என்று சொல்லிட்டாங்க. நாங்க தனுவை காக்க சொன்னோம்” என்றான் கெளதம் வேதனையுடன்.
“நினைச்சோம்.. இப்படி தான் ஏதாவது நடந்து இருக்கோம் என்று நினைத்தேன்… எனக்கு மட்டும் நம்பிக்கை இருந்தது, நீங்களோ உங்கள குடும்பமோ இதை எல்லாம் செய்யமாட்டிங்க என்று.
ஆனால் ராம் அப்போ இருந்த நிலையில் அவன் யாரையும் நம்ப தயாராய் இல்லை… நீங்க தனுவை சேர்ந்திருந்த சென்னை லைப்கேர் மருத்துவமனை ஹாஸ்பிடலில் தான் ராமிற்கு டிரீட்மென்ட் நடந்துட்டு இருந்தது. வெளியே தெரியாமல் அங்கே தான் ராம் இருந்தான்.
விஷயத்தை கேள்வி பட்டு நானும் சுமியும் தான் ஓடி வந்தோம். வந்து பார்த்தா பின் புறம் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையை தூக்கி போட்டுட்டு போறாங்க.இறந்த குழந்தை என்றாலும் அது என் அண்ணா குழந்தை. அதை இப்படியே குப்பை போல் தூக்கி போட முடியாமல், இறுதி காரியம் செய்ய தான் கையில் எடுத்தேன்.
பார்த்தால் நிலா உயிரோடு தான் இருக்கா… சந்தோஷ் தான் பல வருடம் இரவு பகல் பாராமல், நிலாவை தூக்கிட்டு டாக்டர் டாக்டராய் ஓடுவான்.யப்பா… அண்ணாவும், நிலாவும் பிழைக்கும் வரை நரகம்.” என்றாள் அஞ்சலி.
“அப்போ சுமி?” என்றான் கெளதம்.
” ராம் அண்ணாவை கண்ட நொடி முதல், அவன் மேல் காதல் கொண்டு ‘ஒரு தலை ராகம்’ பாடிட்டு இருந்தாள்.
இவ காதலிப்பது எனக்கும் சந்தோஷிற்கும் மட்டும் தான் தெரியும். எத்தனையோ தடவை சொன்னோம்… போய் சொல்லுன்னு… அப்போ எல்லாம் சொல்லலை.
சுமி தன் காதலை சொல்ல போன சமயம் தான் ராம், தனுவை ‘என் வருங்கால மனைவி’ என்று இன்ட்ரோ செய்திருக்கான்.
மனசு உடைஞ்சு போய் துறவறம் வாங்க போகிறேன் என்று போனவளை சிவா அய்யா தான், ‘உன் பாதை சேவை’ என்று திருப்பி விட்டார்.சித்தூர் கேம்ப் அனுப்பியதும் அவர் தான். ‘உனக்கான பாதை தெரியும்’ என்று தீர்க்கதரிசனமாய் அவர் சொன்னது தான் பலித்தது.
ராம் உயிரை காப்பாற்றியது சுமியும், சந்தோசும் தான். முதலில் இங்கே சென்னை லைப் கேரில் தான் யாருக்கும் தெரியாமல் சேர்த்து சிவா அய்யா நேரடி கண்காணிப்பில் டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்தோம்
யாரோ தீகாயம், ஆசிட் அட்டாக் ஆகி சேர்ந்திருக்காங்களா என்று விசாரிப்பதாய் தகவல் வந்ததும் பெங்களூரு ஹாஸ்பிடலுக்கு மாற்றிட்டோம்.” என்றாள் அஞ்சலி.
“அப்போ சேகர்… சுமியின் கணவன் என்று?”என்று இழுத்தான் கெளதம்.
“ராம் அண்ணா முழு பெயர் ராமச்சந்திரசேகரன்.எங்க கொள்ளு தாத்தா பெயராம்… பெயர் ஸ்டைல்லா இல்லை என்று விஷ்ணுசந்தர் சமமாய் இருக்கணும் என்று, ‘ராம்சந்தர்’ என்று மாற்றி கொண்டான்.
இப்படி வந்து விசாரிக்கறாங்க என்று தகவல் வந்ததும் ராம் என்பவனை மறைத்து, ‘சுமியின் கணவன் சேகர்’ என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினோம்.
அவன் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பதாகவும், இன்னொரு பெண்ணுடன் லிங்க் என்று சுமியே தான் புரளி கிளப்பி விட்டாங்க.
ஆனால் அந்த நான்கு வருடமும் ராம் அண்ணா சேகர்ராக எங்கள் கூட அந்த பெங்களூரு வீட்டில் தான் மேல் மாடியில் இருந்தான்… அது அங்கு வேலை செய்பவர்களுக்கே தெரியாது.
அப்படி ஒரு பாதுகாப்பு கதவு, கை ரேகை லாக் எல்லாம் பக்காவாய் சுமி ஏற்பாடு செய்திருந்தாள். டிரீட்மென்ட் செலவு கூட ‘என் கணவனுக்கு நான் செய்கிறேன்’ என்று தான் சொல்வாள்.
ராம் உயிரோடு இருக்க காரணம் சுமி என்றால், நிலா உயிரோடு இருக்க காரணம் சந்தோஷ் தான்.
சுமி ராம் பக்கத்தை விட்டு கொஞ்சம் கூட நகர மாட்டாள். அவனை முகம் சிதைந்து நேராய் பார்த்தவள் இல்லையா அந்த பயம்.
சந்தோஷ் தான் நிலாவை தூக்கிட்டு டாக்டர் கிட்டே ஓடுவான்… நம்ம திருமணம் நிற்கும் வரை இவங்க ரெண்டு பேரும் மட்டும் தானே பார்த்துட்டு இருந்தாங்க…” என்றாள் அஞ்சலி பெருமையுடன்.
“இதில் நான் வேற உன்னை ராம் இருக்கும் இடத்தை சொல்லு என்று டார்ச்சர் செய்தேன் இல்லை.சாரி டீ…ரொம்ப சாரி.” என்றான் கெளதம்.
“அப்படி நீங்க பேசியதும் நல்லதாய் தான் போனது. நீங்க அல்டிமேட்டம் கொடுத்த பிறகு தான் அண்ணா இந்த நிலையில் இருக்கும் போது என்னால் திருமணம் என்ற ஒன்றை அதுவும் ராம் தன்னை அட்டாக் செய்தது நீங்கள் தான் என்று நம்பும் உங்களை மணக்க என்னாலும் முடியவில்லை.
ராம் உடல் நலம் தேற வேண்டும்.நீங்களும் இதை செய்யவில்லை என்று ராம் உணர வேண்டும்.அதான் கிடைச்சது சான்ஸ் என்று ஊரை விட்டு பெங்களூரு ஓடினேன்.நாலு வருஷம் அங்கே தான்.
உங்க அப்பா, அம்மா, தனு, விஷ்ணு சீப் கெஸ்ட்டாக அங்கே பள்ளிக்கு வரும் வரை அங்கே தான் சுமி, நான், ராம் அண்ணா,சந்தோஷ் இருந்தோம்.
தனுனுக்கு என்னை பார்த்ததும் டெப்ரேஷன் அதிகமாகி விட, என்னை கொல்லும் முயற்சியில் நடுவே வந்த நிலாவுக்கு அடி பட்டுடுச்சு.
ராம் அண்ணா என்னை லெப்ட் ரைட் வாங்கினான்.உன்னை எவன் இப்போ ஸ்டேஜ் ஏறி பாடவில்லை என்று அழுதது என்று செம்ம டோஸ்.தனுவும் உங்களிடம் போனில் விஷயத்தை சொல்லி இருப்பா…நீங்க வந்தா உங்களிடம் மறைக்க முடியாது என்று தெரிந்து மீண்டும் ஓடினேன்.அப்படி ஓடிய போது தான் காயத்ரி அண்ணிக்கு அச்சிடேன்ட் ஆகி, அவர்கள் குடும்பத்துடன் இத்தனை வருஷம் இருந்தேன்.
ராக்கி மூலமாய் பிரிதிவிராஜ் சம்யுக்தாவை தூக்கியது போல் நீங்க என்னை தூக்கிட்டீங்க…
நீங்க தான் இதையெல்லாம் செய்தீர்களா என்று தெரியாமல் உங்க கூட வாழவும் என்னால் முடியாது என்று தோன்றி விட்டது. அண்ணாவுமே வாய் பேச்சாய் சொன்னாலும் நீங்க செய்து இருக்க மாட்டீங்க என்று சொல்லிட்டே தான் இருந்தார்.
நீங்க செய்திருக்க மாட்டீர்கள் என்று தெரிந்தாலும், தனு, ராம், நிலா அப்படி இருக்கும் போது எனக்கு ஒரு வாழ்க்கை என்றால் குற்ற உணர்வாய் தான் இருந்தது.
இது எல்லாம் தெரிந்தால் தனு தங்கமாட்டாள் என்று ராம் சொல்லிட்டான். அவனும் நிலாவும் பிழைப்பதே கடினம் என்று இருந்தது இல்லை…
தனு வாழ்வை மீட்க விஷ்ணுவை மீண்டும் கொண்டு வந்தோம். மீதம் எல்லாமே உங்களுக்கே தெரியும்.” என்ற அஞ்சலியை இழுத்து அணைத்தான் கெளதம்.
‘இவர்கள் அன்பிற்கு, காதலுக்கு, பாசத்திற்கு எதை ஈடாக கொடுக்க முடியும்?
காதலிக்கவில்லை என்றால் கொன்று விடுவதும், காதலித்து விட்டு கை கழுவி விட்டும் செல்லும் நபர்களுக்கு நடுவே இப்படியும் ஒரு காதலன்.
தன்னை மறைத்து கொண்டு, சிவசாமி என்ற முகம் சிதைந்த மனிதனாய் கூடவே இருந்து தனு வாழ்க்கையை மீட்டு கொடுத்து இருக்கிறான்.
இன்று தனுவிற்காக தன்னையே கோவாவில் கொன்று விட்டான். தான் காதலித்த பெண்ணின் வாழ்க்கையை மீண்டும் உடன் இருந்து மலரச்செய்தவன்.
‘பணத்திற்காக அடித்து கொள்ளும், கோர்ட் படியேறும் இந்த காலத்தில் அண்ணனுக்காக தன் வாழ்க்கையே துறக்கும் ஒரு தங்கை’.
ஒரு தலையாக காதலித்தாலும், காதலித்தவனின் முகம் சிதைந்து கோராமையாக இருந்தாலும், அவனை விட்டு விலகாமல் அவனே வாழ்க்கை என்று கண்ணனை நினைத்து வாழும் பக்த மீராவாக வாழ்ந்த சுமித்ரா.
இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் வாழ்க்கை அழகாகிறது.
மனிதம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் கிடைக்கிறது’ என்று எண்ணி கொண்ட கெளதம், அஞ்சலியின் கையை பிடித்து கொண்டு இல்லத்திற்க்குள் சென்றான்.
“கவிமா, சுமிமா…” என்று குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தவர்களை அழைத்தாள் நிலா.
“என்ன நிலா?” என்று அவளின் இரு அன்னையரும் கேட்க அவர்கள் இருவரின் கையை பிடித்து கொண்டு பின்னால் இருந்த வீட்டிற்கு சென்றவள்,
“பிரபு அப்பாவுக்கும், சேகர் அப்பாவுக்கும் உடனே பாப்பா வேண்டுமாம். சொல்ல சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு சிட்டாக அவள் பறக்க, பற்களை நறநறவென கடித்து கொண்டு பத்திரகாளிகளாய் திரும்பிய அஞ்சலி, சுமி அவர்கள் துணையின் கண்களில் கண்ட காதலை, அவர்களுக்கான தேடலை கண்டு செங்கொழுந்தாகி நின்றார்கள்.
இவர்கள் நால்வரும் தங்கள் உள்ளத்தை தங்கள் இணைக்கு சமர்ப்பித்து, வாழ்வை ஜெயித்தவர்கள்.
முற்றும்…