தூறல் போடும் நேரம் – 12

பகுதி – 12

முதலிரவு அறை, நேரம் நள்ளிரவு பதினொன்று முப்பது.

மலர் தோரணங்கள் தொங்க, பூக்களை விரிப்பாய் வரிய கட்டிக் கொண்டு சிருங்காரமாய் காத்திருந்தது மெத்தை. ஆம், சிருங்காரிக்க வேண்டிய தலைவனும் தலைவியும் அவ்விடத்திற்கு வந்து சேராததால், சிறிது சோர்வாய் காத்திருக்கத் தொடங்கியது.

அங்கிருக்கும் பூக்கள் கூட, தேவியின் வெட்கம் மிகும் வதனத்தைக் காணாது வாட தொடங்கியது.

முதலிரவு அறைக்குள் இருக்க வேண்டிய மணமக்களோ மாடத்தில் ஒருவரும், மாடியில் ஒருவருமாய் மதி மயங்கி கொண்டிருந்தனர்.

மஞ்சத்தில் இருக்க வேண்டிய தலைவியோ, மாடியில் தலைவலியோடு போராடிக் கொண்டிருந்தாள். தலைவியின் மடியில் இருக்க வேண்டிய மணமகனோ, அறையின் மாடத்தில் நடைப் பயின்று கொண்டிருந்தான்.

பட்டு வேஷ்டி சரசரக்க, பட்டுச் சட்டை மினுமினுக்க, நாயகன் நடைப் பயின்று கொண்டிருக்கிறான் என்று நாம் நினைத்தால் அது தவறு. இது வரை பார்த்திராத வகையில், மணமக்களின் காதல் ஓசைகள் அற்று, எவ்வாறு  முதன் முறையாய் ஒரு முதலிரவு அறையைக் காண நேர்ந்ததோ, அதே போல் தான் மணமகனும் முதன் முறையாய் பட்டுச் சொக்காய் இன்றி ஒரு சாதாரண சொக்காய் மற்றும் கால்சட்டையில் இருந்தான்.

ஏனெனில் மணமகனான அவனுக்கு யாரும் பட்டுச் சட்டை-வேஷ்டி எடுத்து தரவில்லை. என்ன இது அநியாயம் என்று நாம் எண்ணலாம். பெண் வீட்டினர் கஞ்சம் என்றும் கூட குறைக் கூறலாம். ஆனால் நடந்ததோ வேறு.

சினிமாக்களில் வேண்டுமானால், திடீர் மாப்பிளைக்கு பட்டு சொக்காய் பட்டு வேஷ்டி உடனடியாய் கிடைக்கும். ஆனால் இது திருமண மண்டபம் வரை வந்து, கடைசி தருணத்தில் திசை மாறிய திருமணம் அன்றோ! அதுவும் திடீர் மாப்பிளையாக, நம் ராம் மணமேடை ஏறுவான்… மணமகளின் கைப்பற்றுவான் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

ஏன் மணப்பெண்ணான நம் ராதா கூட இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அன்று, பேருந்தில் அவனைச் சந்தித்ததோடு சரி, அதன் பின் அவனைப் பார்க்கவும் இல்லை ஏன் கனவிலும் கூட அவள் அவனை நினைக்கவில்லை.

அன்று அதிகாலையில் இருவரையும் சென்னையில் இறக்கி விட்டது பேருந்து.

“நீங்க எங்க போகணும் ராதா?” என அடுத்த உள்ளூர் பயணத்திற்கு தயாரானான் ராம்.

“ம்ம்… டெல்லி போகணும்” என அவனின் ஆர்வத்திற்கு ஆணி அடித்தாள் ராதா.

அவன் பெருங்குடி செல்ல வேண்டும், ஆதலால் அது போல் சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியைக் கூறுவாள் என நினைத்தவன், அவளின் பதிலால் அவன் விழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

“என்ன… டெல்லியா?” என அவளின் பதிலைக் கேள்வியாக்கினான்.

“ம்ம்… ஏர்போர்ட்டுக்கு போகணும். நீங்க போங்க. நான் டாக்ஸி பிடிச்சு போயிக்குவேன்” என அவனை வழியனுப்ப நினைத்தாள்.

“எப்போ ப்ளைட்?” என விசாரித்தவன், அந்த கருக்கல் கரையும் அதிகாலை நேரத்தில், அவளை தனியே அனுப்ப மனமில்லாமல், “சரி வாங்க, நான் உங்கள ஏர்போர்ட்ல விட்டுட்டு போறேன்”

அவள் பரவாயில்லை எனத் தடுத்தும் “வாங்க” என அவளின் பெட்டியைக் கையில் தூக்கி கொண்டு, அவ்வழியே சென்ற ஒரு சிற்றுந்தைப் பிடித்து, அவளுக்கு வழி துணையாய் வந்தான் அவன்.

தன் வாழ்க்கை துணையாகவும் வர இருக்கிறவன் அவன் தான் என அப்போது அவள் நினைக்கக் கூட இல்லை. ஏன் அவனுமே எண்ணியிருக்க மாட்டான் தான். ஆனால் விதி, அவர்கள் இருவரையும் ஒரே சேனைக்குள் அடைத்து வழி நடத்தி சென்றது.

விமான நிலையம் வந்தடையவும், பசித்த தன் வயிற்றுக்கு தேநீராவது வழங்குவோம் என எண்ணி, “டீ குடிப்பீங்களா?” என அவளிடம் கேட்டான்.

மறுப்பேதும் இல்லாமல் ம்மியவளிடம் “இருங்க, நான் போய் வாங்கிட்டு வரேன்” எனக் கடைக்கு சென்றவன், வரும் பொழுது இரு தேநீர் குவளைகளைக் கைகளில் ஏந்தி வந்தான்.

இருவரும் அமைதியாய், ஒரு சொட்டு உஜாலா கலந்த ஒரு வாளி நீர் போல, ஒரு சொட்டு நீலம் கலந்த அந்த அதிகாலை வேளையின், சற்றே வெளிறிய இளநீல வானை ரசித்தவாறே தேநீரைப் பருகினார்கள்.

தனது விமானத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு மேலேயே கால அவகாசம் இருப்பதால், வள்ளியம்மை கட்டித் தந்த புளியோதரை பொட்டலத்தை எடுத்தாள்.

கையில் எடுத்தவள், அவனிடம் தான் முதலில் நீட்டினாள். முதல் நாள் இரவு பயணத்தின் அவசியத்தால், முன்னிரவுக்கு முன்னமே இருவரும் சாப்பிட்டது. ஆகையால் கண்டிப்பாய் பசிக்கும் என்பதால், தன்னிடம் இருந்த இரண்டு பொட்டலத்தில் ஒன்றை அவனுக்கு நீட்டியிருந்தாள்.

அவன் நெற்றி சுருக்கி பார்க்கவும், “உங்க பெரியம்மா கட்டிக் கொடுத்தது தான். சாப்பிடுங்க. நான் டெல்லிக்கு ட்ரைன்ல போறேன்னு நினச்சு இரண்டு பொட்டலம் கட்டிக் கொடுத்தாங்க” என விவரம் கூறினாள்.

இம்முறையும் ‘அப்போ எல்லோருக்கும், அவ டெல்லிக்கு போறது… கல்யாணம் ஆகப்போகுதுன்னு… அவள பத்தின விசயம் எல்லாம் தெரிஞ்சிருக்கு. நாம தான் இது எதுவும் தெரியாம அவுட்டுக்கு மேல அவுட் ஆகிட்டே இருக்கோமா?’ எனப் பகிரங்கமாகவே தலையில் கை வைத்து கொண்டான்.

அதைக் கண்டவள், புருவத்தாலேயே கேள்வியை வரைந்தாள். அவனோ ஒன்றுமில்லை என்பதாய் தலை ஆட்டலோடு நிறுத்தியவன், பொட்டலத்தைப் பிரிக்க ஆரம்பித்தான்.

“இந்தாங்க… இத வீட்ல போய் சாப்பிட்டோங்கங்க…” என தன்னிடம் இருந்த இன்னொன்றையும் அவனிடமே தள்ளினாள்.

“அப்போ உங்களுக்கு?”

“இல்ல இருக்கட்டும்… இங்க ப்ளைட்ல…” என இழுத்தவளைப் புரிந்து கொண்டவன், “சரி கொடுங்க” என வாங்கி வைத்தவன், “இதுலயாவது ஷேர் பண்ணிக்கலாமே. வாங்க, எடுத்துக்கோங்க” என அழைத்தான்.

ஒரே இலையில் இருவரும் சாப்பிடுவதா?’ எனத் தயங்கினாள். அவளின் தயக்கத்தினை, முகத்தில் படித்தவன், அதை தயங்காமல் ஏற்றவன், “இந்த போர்ஷன்ன… நீங்க சாப்பிடுங்க. இத நான் சாப்பிட்டுக்கிறேன். நீங்க முத சாப்பிடுங்க” எனப் புளியோதரையைப் பாகப்பிரிவினை செய்து பரிமாறினான்.

முதல் நாள் அவனின் அறிமுகமும், அன்றைய இரவே மற்றவர்கள் அறியா அவனின் முகமும், மற்றைய நாளில் அவனின் வேடிக்கைப் பேச்சுக்களும், ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாய் அவனைக் காட்டியது.

ஏனெனில் நகரத்தார் மத்தியில் இவர்களும், கோட்டைப் போல் அல்லாமல் போனாலும், சிறிய கோட்டையாய் அவர்களுக்கென சொந்தமாய் கட்டியிருக்கிறார்கள். மேலும் நிலபுலன்கள் என பத்து ஏக்கருக்கு குறையாமல் வைத்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட கனவான், அவளின் கல்யாணப் பத்திரிக்கையால் கண்ணியவானாய் மாறியது அவளுக்கு வியப்பைத் தந்தது.

ஆனால் இன்றோ, இந்தக் காரிகையின் கரம் பற்றி கண்ணியவான் என்ற அவளின் கணிப்பைக் குன்ற வைத்திருந்தான். அதை நினைக்கையில், ராதாவின் கண்களில் இருந்து ஏனோ கண்ணீர் உருண்டது.

எல்லோரையும் போல், அவர்களின் குடும்பத்தின் சார்பாய் இவனும் திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்று தான் அவள் நினைத்தாள். ஏனெனில் அவர்களின் குடும்பத்தில் இருந்து எவரையும் காண இயலவில்லை.

உதயா கூட தற்பொழுது வர முடியாத சூழல் என முன்னமே  காரணம் கூறியிருந்தாள். ஆனால் வந்தவன், முகூர்த்த நேரத்தில் நெடு நெடுவென்று மணப்பந்தலுக்கு வந்து, பெரியோர்களின் ஆசிகளுக்கு சென்ற தாலியினைக் கைப் பற்றுவான் என்றோ, அதைக் கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவாய், ராதாவின் கழுத்தில் கட்டுவான் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஏன் அவனே தாலி கட்டிய பின் தான் நிதர்சனத்தையே உணர்ந்தான் எனலாம். அவளுக்கு தாலி கட்டும் வரை அவன் வேறு உலகத்தில் இருந்தான் என்றால் மிகையில்லை.

அவன் திருமணத்திற்கு வரும் பொழுதே, ஏதோ குழப்பத்தோடு தான் வந்தான். மேலும், மிகுந்த மன உளைச்சலினால் உந்தப்பட்டு தான் அவ்வாறு நடந்து கொண்டான்.

தன் திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் சமயம் தான் உதயா வீட்டிற்கு வந்து சென்றாள் ராதா. அதனால் தான் திருமணத்தை ஒட்டி வேறு, விடுப்பு எடுக்க வேண்டிய நிலையிலும், தன் வேலைப் பளுவின் நிர்பந்தத்தால் தான், திருமணம் முடிந்த அன்றே கிளம்பியிருந்தாள் ராதா.

அவளின் மேலிடம் வேறு திடீர் பணியின் காரணமாய் அவசரப்படுத்தியதால், தான் ரயிலில் பதிவு செய்திருந்த பயணச்சீட்டைக் கூட ரத்து செய்து விட்டு, அலுவலகம் பதிவு செய்திருந்த விமானத்தில் வர நேர்ந்தது.

ஏனெனில் அவளின் பணி தன்மை அவ்வாறு. மேலும், ஒரு வாரம் தலையைக் கூட நிமிர்த்த முடியாமல் தலைவலியாய் ஒரு பெரிய தொழிற்சாலையின் கணக்குகளைச் சரிப்பார்க்க வேண்டி இருந்தது.

அதனால் மற்ற சிந்தனைகளில் சிந்தையை சிதற விடாமல், கவனத்தை எல்லாம் பணியில் குவித்திருந்தாள். அதனால் ராம் அவளுக்கு அழைப்பு விடுத்ததையோ, அதைப் பார்த்தும் பெரிதாய் நினையாமல் விட்டதையோ இன்று வரை தவறாய் நினைக்கவில்லை அவள்.

ஆனால், தான் அத்தனைத் தடவை அழைத்தும், ஒரு மறு அழைப்பு கூட செய்யாமல் இருந்ததை, அவளின் குற்றமே என அவனின் இதயக் கூண்டில், கைதியாய் அவளை ஏற்றினான் அவன்.

‘எத்தனை தடவை அழைத்திருப்பேன்? ஒரு முறை கூடவா எடுக்க தோன்றவில்லை’ இதயக் கூண்டில் நின்றவளிடம் வாதியாய் மாறி விவாதம் புரிந்தான்.

அவன் அழைத்ததோ எண்ணி மூன்றே மூன்று முறை தான். ஆனால் அவள் எடுக்காமல் விட்டது உண்மையே. (பிரதிவாதி இல்லாததால் பிரதியுபகாரமாய் விளக்கம் பதிவு செய்யப்படுகிறது.)

‘சரி வேலைப் பார்க்கிறவள், அதுவும் அக்கௌன்ட் செக்ஷனின் பணி சுமையை உணர்ந்து தானே… வேலை நேரம் தொல்லைச் செய்யக் கூடாது என்று தானே வாராவாரம், ஞாயிறுகளில் செய்தேன். எடுத்தாளா அவள்?’

காரணம் ஒன்று, அவனே கூறிய அவளின் வேலைப் பளு. இரண்டு, இவனுக்கு வேறு வேலை இல்லை என்ற அசட்டையான, அவன் மீதான அவளின் மனோபாவம்.

‘அப்படி அவள் எடுத்திருந்தால், இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.’

அது உண்மையே. அவன் வாரவாரம் ஞாயிறுகளில், அதாவது அவள் சென்ற அந்த வாரத்தின் ஞாயிறு, அதன் பின் வந்த இரண்டு ஞாயிறும் செய்தான் தான்.

கடைசி ஞாயிறுக்கு பின் அவளின் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இடைவெளியே இருக்க, அப்போது எப்படி மணப்பெண்ணிற்கு அலைப்பேசியில் அழைப்பது என்று கண்ணியவானாய் யோசித்தவன் தான், இன்று தாலி கட்டியிருந்தான்.

‘நானும் விவரம் கேட்டிருப்பேன்… ஏதேனும் யோசித்திருக்கலாம்… இல்லையென்றால்  நான் ஏன் இவளுக்கு தாலி கட்டப் போகிறேன்’

இதுவும் மெய்யே!

‘எல்லாம் இவளாக இழுத்துக் கொண்டது.’

இது பொய்! இவன் தாலி கட்டி விட்டு, அவளை இதில் இழுத்து விடுகிறான்.

‘எல்லாம் திமிரான மனோபாவம். நமக்கென்ன அனுபவிக்கட்டும்’

தவறான புரிதல், சரியான சமயத்தில்…

விதியும் சரியான சமயத்தில் சடைப் போட்டு பின்னுகிறது. பார்க்கலாம், சடையைப் பிரிக்கிறானா, இல்லை மேற்கொண்டு பின்னுகிறானா என்று.

தன் வாழ்க்கையில் மட்டும், ஏன் குளறுபடி மிகுந்த தருணங்களாகவே நகர்கிறது என எண்ணினாள் அவள். எண்ணியது தான் தாமதம், அவளின் மழைத் தோழி தூறலை தூவி அவளை ஆசிர்வதித்தாளோ? இல்லை ஆறுதல் படுத்தினாளோ?

மழையின் தூறல் வலுக்கவும் தான் எழுந்து கீழே அறைக்கு சென்றாள். அப்போது சரியாய்

“அவள் எழுதும்… கவிதைகளை

விதி புகுந்தே திருத்துதம்மா…

அங்கும் இங்கும் பாதை உண்டு

இன்று நீ எந்தப் பக்கம்…

ஞாயிறு உண்டு திங்கள் உண்டு

எந்த நாள் உந்தன் நாளோ…”

எனக் கனமழையோடு எங்கிருந்தோ வந்த காணமழை, அவளின் நிலையை, முதல் இரண்டு வரிகள் மூலம் அழகாய் அவளின் செவிதனில் உரைத்தது.

நனைந்தது கூட உரைக்காமல், உடையை கூட மாற்றாமல், அப்படியே கட்டிலில் படுத்து உறங்கி விட்டாள். அவளின் மன வெப்பத்தை, அந்தக் குளிர்ச்சி சமன் செய்தது போலும்.

வந்தவளோ கணவனான அவனைக் காணவில்லையே எனத் தேடவும் இல்லை. கட்டிலின் அருகில் கீழே அவன் உறங்கி விட்டதைப் பார்க்கவும் இல்லை. கதவை தாழ் போடவும் இல்லை.

மாடத்தில் நடைப் பயின்றவனோ, கால்களின் வலியை உணர்ந்து, உடல் சோர்வை தரவும், மலர்கள் தூவிய பஞ்சணையில் படுக்க மனமில்லாமல், தரையில் போர்வை விரித்து படுத்ததும், கண்கள் சொருக நித்திரையில் ஆழ்ந்தான்.

தாலிக் கட்டியவள் எங்கு போனாள்? ஏன் இன்னும் அறைக்கு வரவில்லை என்றெல்லாம் அனாவசியமாய் ஆராயவில்லை அவன். குற்றத்தை எல்லாம் அவள் மீது சுமத்தி விட்டு குப்புற கவிழ்ந்து கொண்டான்.

மறுநாள், சென்னை வந்தவனை, அவனின் நண்பன் சுரேந்திரன் பிடித்து கொண்டான். தன் அறைக்கு சென்றவன், நேற்று இருந்து ஒரே விசயத்தைச் சிந்தித்து சிந்தித்து மூளை சோர்வடையவும், ‘இன்னும் இங்கே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும்’ என மதியம் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டான்.

அவனின் மாறுதலை உணர்ந்த சுரேந்திரன், “என்னடா விஷயம்?” எனக் கேட்டான்.

“எதடா கேக்குற?” என அவன் விளக்கம் கேட்கவுமே, ஏதோ நிறைய விசயங்களை வைத்திருக்கிறான் என்பதை அவனுக்கு விவரித்தது.

“சாப்பிட்டியா?” என அவன் கேட்டதற்கு, இல்லையென தலையாட்டியவனிடம், “சரி வா… கான்டீன் போய் சாப்பிடலாம்” என அவன் தோள் மீது கைப் போட்டு அணைத்து சென்றான்.

ஒரு மினி மீல்ஸ் வாங்கி அவனிடம் நீட்ட, அவனோ ஒரு கவளம் சாப்பிடுவதும், பின் சாப்பாட்டில் வரைபடம் வரைவதுமாய் இருந்தவனிடம் “சொல்லுடா என்னாச்சு? தெரிஞ்சவங்க கல்யாணத்துக்கு போறேன் சொன்ன… போயிட்டு வந்ததுல இருந்து பேயறஞ்சவன் மாதிரி இருக்க. அங்க தான் போனியா இல்ல… வேற எங்கயாச்சும் போயிட்டியா” என சரியான முடிச்சைத் தொட்டான்.

“போனேன்டா. ஆனா…” என இழுத்தவன், “ம்ம்ம்… அப்புறமென்ன அங்க வேற யாரையாச்சும் பார்த்து கவுந்துட்டியா” என விளையாட்டாய் தான் கேட்டான்.

மறுத்து தலையசைத்தவன், “அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் டா” என முடிச்சை சட்டென அவிழ்த்தான்.

“என்ன… கல்யாணம் பண்ணிக்கிட்டியா! எந்தப் பொண்ண டா?” என அதிர்ச்சியில் அமிழ்ந்தவன், ஆழமாய் வினவ, “அதான்டா… அந்தப் பொண்ணு… ராதா…” என இன்னும் அவனை அதிர்ச்சியின் ஆழத்தில் தள்ளினான் ராம்.

பின் நடந்ததை விவரமாய் கூற, “ஏண்டா… என்ட்ட சொல்லிருக்கக் கூடாதா? நானாவது போன் பண்ணி சொல்லிருப்பேன்ல” என இந்த அளவிற்கு சிக்கல் வந்திருக்காதே எனப் பொருள் பட அவன் கூறினான்.

“இல்லடா… எனக்கே கன்பார்ம் ஆகல… லாஸ்ட் மினிட்ல… என்னப் பண்றதுன்னு தெரியாம… ஆனா ஏதாவது பண்ணியே ஆகணும்னு… இப்படி பண்ணிட்டேன் டா” என விளக்கவுரைக் கொடுத்தான்.

விளக்கவுரை எல்லாம் நன்றாக தான் உள்ளது. ஆனால் உரையை தான் காணவில்லை.

எது எப்படியோ ராதா மீது அக்கறை இருப்பதால் தான், அது அன்பாய் உருமாறி, அவனைத் துணிகரமாய் இச்செயலை செய்ய வைத்துள்ளது என்ற உரையை உணர்ந்தான் அவனின் நண்பன்.

“எல்லாம் சரி டா… இங்க ஏன் வந்த? ராதா எங்க? ரூம்ல விட்டுட்டு வந்திருக்கியா? ஊருக்கு போகலையா? அம்மா அப்பாட்ட சொல்லலையா?” எனச் சரியான கேள்விகளைச் சரமாரியாய் அடுக்கினான்.

“இல்லடா… அவ… அவங்க வரல… ஊருக்கு சொல்லணும்” எனத் திக்கு தெரியாத சிறுவன் போல், என்ன செய்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு, இளவட்ட வேலைகளைச் செய்தவனின் பதிலில் “அவங்க வரலையா? இல்ல நீ கூட்டிட்டு வரலையா? இரு இரு… ஆமா, நீ இங்க வந்தது அவங்களுக்கு தெரியுமா? இல்ல சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டியா?” எனக் கவனமாய் கேட்டான்.

அவளிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல், விடிந்தும் விடியாத வேளையில் அங்கிருந்து வந்தவன் தானே, அதனால் “சொல்லிட்டு வர மாதிரி, அவளுக்கு யாரும் இல்ல டா”

சிறிது நேரத்திற்கு முன் தான், அப்பெண்ணின் மீது அன்பாய் உள்ளான் என அவனை நல்லவனாய் நினைத்திருந்தான், அவனின் பதிலால் அதை அழிப்பான் போட்டு அழித்து கொண்டிருந்தான்.

சொல்லிக் கொள்ளும் படியாய் உறவுகள் யாரும் இல்லாதவளிடம், இவன் தானே எல்லாமுமாய் இருக்க வேண்டும். அந்தப் பந்தத்தை ஏற்படுத்தியவனும் இவன் தானே, பின் ஏன் ஓட்டப்பந்தயத்து வீரன் போல் திரும்பி ஓடி வந்து விட்டான் என யோசித்தான் நண்பன்.

கேட்டவனுக்கு புரிந்து விட்டது. புரிய வேண்டியவனுக்கு கேட்குமா, அவளின் வாடும் அன்பு.

 

தூறல் தூறும்….