SY4

SY4

சரி – 4

சம்யுக்தாவும், யாஷிகாவும் ரிதுவந்திகாவின் வீட்டிலிருந்து புறப்பட்டனர். திலோத்தமை பிடிகொடுத்து, தங்களுக்கு சாதகமாக பேசாமல் பேச்சை முடித்தது மூவருக்குமே என்னவோபோல் இருந்தது. ஆனால், ரிது பயப்படாமல் இருந்தது மற்ற இருவருக்கும் ஆறுதலாக இருந்தது.

 

ரிது போல் வசதி படைத்தவர்கள் இல்லை மற்ற இருவரும்.  ஆனால் மூவரும் கல்லூரிப் பருவத்திலிருந்தே மிகவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். மூவரின் எண்ண அலைகளும் ஒரே மாதிரி எழுவதும், நட்பு பலப்பட்டதற்கு காரணம்.

 

சென்னை, பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் பிபிஏ படித்து முடித்தனர்.  சம்யுக்தா இளங்கலை பட்டம் முடித்தவுடன், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி, சென்னை, டி.ப்பி.ஐ வளாகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இளநிலை உதவியாளராக அரசு உத்தியோகத்தில் சேர்ந்துவிட்டாள். 

 

யாஷிகா தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அலுவலகத்திற்குத் தேவையான கணினிப் பயிற்சியை ஈடுபாட்டுடன் பயின்று நன்கு தேறி, தனியார் நிறுவனத்தில் கணினி இயக்குபவராக உள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மீண்டும் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

 

யாஷிகா வெளியூர், செங்கல்பட்டு மாவட்டம். சம்யுக்தா சென்னை, ஸ்டெர்லிங் ரோடில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

 

யாஷிகா கல்லூரியில் படிக்கும்போது சம்யுக்தாவின் வீட்டிலேயே பேயிங் கெஸ்ட்டாக தங்கி படித்தாள். பின்பு வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், சம்யுக்தாவின் வீட்டிற்கு அருகிலேயே பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலைக்குப் போய் வருகிறாள்.

 

சம்யுக்தாவின் வீட்டில் தந்தை தாமோதரன் ஒரு அரசு உயர் அதிகாரி.  உதவி வட்டாட்சியர், தற்போது திருவாடானை வட்டம்.  அரசாங்க வேலை என்பதால் அடிக்கடி அவருக்கு இடமாறுதல் வந்தாலும், குடும்பத்தை மட்டும் சென்னையில் வைத்து கவனித்துக்கொள்கிறார்.

 

மாதத்தின் சில நாட்களில், குறிப்பாக அரசு விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவார். மகள் சம்யுக்தாவுடனும், மகன் திலீபனுடனும் பாசம், கண்டிப்பு இரண்டையும் சமஅளவில் வெளிப்படுத்துபவர்.  மனைவி அனுசியாவிடமும் அன்புக்குக் குறைவின்றி அனுசரணையாக இருப்பவர். குடும்பத் தேவைகளை குறைவின்றிப் பார்த்துக்கொள்வார்.

 

யாஷிகா தன் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த காலங்களில் அவளையும் தன் மகளாக பாவித்து பாசத்துடன் பார்த்துக் கொண்டவர்.

 

யாஷிகாவின் தந்தை ஜெயபாலன், செங்கல்பட்டில் கட்டிடங்கள் கட்டும் கட்டுமானத் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். சிறந்த நிறுவனம் என்னும் பெயர் பெற்றது அவரது நிறுவனம். தற்சயம் தொழில் சற்று மந்த நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

 

தாயார் விஜயலெட்சுமி பொதுப்பணித் துறையில் தட்டச்சராக பணிபுரிபவர். அலுவலகப் பணிக்கு இடையிலும் யாஷிகாவை நல்லவிதமாக வளர்த்து, பள்ளிப் படிப்பில் நன்மதிப்பெண்கள் எடுக்க பெரிதும் உதவியவர்.

 

ஆனால், தந்தையின் ‘ஏதாவது இளங்கலை பயின்றால் போதும்’ என்ற வார்த்தையை ஏற்று கல்லூரி படிப்பிற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் சென்னை பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் பிபிஏ பயின்றாள்.

 

அங்குதான் ரிதுவந்திகா மற்றும் சம்யுக்தாவுடன் நட்பு ஏற்பட்டது. சம்யுக்தாவின் ஆர்வத்தால் தானும் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு படித்தாள்.

 

சம்யுக்தா போல் தானும் தேர்ச்சியடையாவிட்டாலும் சோர்வடையாமல் மீண்டும் முயற்சித்துக்கொண்டு இருக்கிறாள். மேலும் மூவரும் தொலைதூரக் கல்வி (Distance Education) முறையில், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகின்றனர்.

 

ரிதுவந்திகாவிற்கு ப்ரொபசனல் படிக்கும் அளவிற்கு மதிப்பெண்ணும், திறமையும் இருந்தாலும், அவளாகவே தனது தந்தையின் வியாபாரம் சம்பந்தமாக படித்தால் நன்றாக இருக்குமே என்று பிபிஏ பட்டப் படிப்பை முடித்துவிட்டு, மேலும் அவர்களுடன் எம்பிஏ பயில்கிறாள்.

 

vvv

 

ரிதுவந்திகாவின் வீட்டிலிருந்து கிளம்பிய சம்யுக்தாவும், யாஷிகாவும் சம்யுக்தாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். உள்ளே வரும்போதே சம்யுக்தாவின் தம்பி திலீபன் எதிர்ப்பட்டான்.

 

“என்னடா, காலேஜ் போகலையா?”, சம்யு.

 

“என்னக்கா, வேலைக்குப் போகலையா?”, திலீப்.

 

“டே, பதிலச் சொல்றா”, என்றாள் சம்யு நக்கலாக.

 

“என்ன சத்தம்?”, என்றவாறே சம்யுக்தாவின் அன்னையார் அனுசியா அடுப்படியில் இருந்து ஹாலுக்கு வந்தார்.

 

“வந்துட்டியாம்மா, அடடே யாஷிகா, எப்டி இருக்க? வந்தே ரொம்ப நாள் ஆச்சே”, அனு.

 

“நல்லாருக்கேம்மா, நீங்க எப்படி இருக்கீங்க? தம்பி என்ன சொல்றான்? நல்லா படிக்கிறானா?”

 

“ம், அவனுக்கென்ன? ராஜா வீட்டு கண்ணுக் குட்டியாட்டம் துள்ளித்தாந் திரியுறான்”, அனு.

 

“போனீங்களே, என்னாச்சும்மா? இப்ப எப்படி இருக்கான் அந்தப் பய, ரொம்ப அடியோ?” என்று சம்யுக்தாவின் தாயார் சித்தார்த்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

 

“இல்லம்மா, நேத்துக்கு இன்னக்கி பரவால்ல. ஆனா ஆர்த்தோ நாங்க போனவரைக்கும் வரல. அதுனால இன்னும் சரியாத் தெரியல”

 

“இன்னாமே, யாரையோ கவுத்தீட்டிகளாமே?”, திலீப்.

 

“யாரையும் ஒன்னும் கவுத்தவுமில்ல! நிமித்தவுமில்ல! நீ கிளம்பு”, என்று தம்பியுடன் பேசிக்கொண்டே வெளியில் சென்று அவனை வழியனுப்பிவைத்துவிட்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா.

 

“அம்மா, அந்த சித்தார்த்தோட ஃப்ரண்டு நம்ம ரிதுவோட ஏஆர் மால்லதான் வேல பாக்குறார்மா”, என்றாள் சம்யு.

 

“ஓ! அப்ப ரிதுவுக்கு தெரிஞ்சிருக்குமே?”, அனு.

 

“அவளுக்கு யாரத் தெரியும்? வீடு, காலேஜ், அதவிட்டா நம்ம வீடு. அவ்ளோதான்”, சம்யு.

 

“ஆமாம்மா, அவ எங்க வீட்டுக்கே இவ்ளோ நாள்ள ரெண்டு மூனு தடவதான வந்திருக்கா”, யாஷிகா.

 

“அவளும், அவளோட அம்மாவும் கடைக்கோ இல்ல மாலுக்கோ அவசியமில்லாம போக மாட்டாங்கம்மா”, சம்யு.

 

“சித்தார்த்தோட ஃப்ரண்டு வந்து கொஞ்ச நாள்தான் ஆகி இருக்கும்போல. ஆனா வீடு வரைக்கும் வந்து போற அளவுக்கு கம்பெனில நல்ல பேருமா”, யாஷிகா.

 

“அப்ப நல்ல பசங்களாத்தான இருப்பாங்க”, அனு.

 

“பாத்தா அப்புடித்தான் தெரியுது. ஆனா என்ன ஆச்சுன்னுதான் தெரியல. ரிது சீக்கிரமா கிளம்பிட்டா”, சம்யு.

 

“ஏஆர் மால்ல வேல பாக்குறவன்னு தெரிஞ்சவொடனே கிளம்பிட்டா”, யாஷிகா.

 

“கொஞ்ச நேரம் இருந்திருந்தா ஆர்த்தோ வந்திருப்பாரு. என்ன, ஏதுன்னு கேட்டுட்டே வந்திருக்கலாம்”, சம்யு.

 

“எக்ஸ்ரே இருந்திருக்குமேமா, பாக்கலயா?”, அனு.

 

“அய்யோ, என் ஜீனியஸ் மதரே! அதப் பாக்கலயே?”, சம்யு.

 

“போங்கப்பா, எதப் பாக்கனுமோ அதப் பாக்காம. என்னத்த பாத்தீங்க”, சளித்துக்கொண்டாள் அன்னை.

 

“ரிது கம்ப்யூட்டர்ல பாத்திருப்பான்னு நெனக்கிறேன், சித்தார்த்கிட்ட சொல்லிட்டிருந்தா”, யாஷிகா.

 

“ஆனா, ஆன்ட்டிதான் கொஞ்சம் கோபப்பட்டாங்கம்மா”, சம்யு.

 

“ஏம்மா, என்னாச்சு?”, அனு.

 

“என்னாச்சா, கடைசில வச்சாங்க பாருங்க ஒரு ட்டாஸ்க்கு…”, என்று இழுத்தாள் யாஷிகா.

 

“என்ன ட்டாஸ்க்கு?”, அனு.

 

“ஒன்னுல்லம்மா, அங்கிள்ட்ட சொல்லி அவங்கள கவனிச்சக்கலாம்னு சொல்லிட்டாங்க”, என்று விரைந்து முடித்தாள் சம்யு.

 

“அதுவும் சரிதான”, அனு.

 

“ஆனா, அங்கிள் எங்களையும் சேத்துல்ல திட்டுவாரு. அப்பறம் அந்தப் பக்கம் போகவே பயமா இருக்கும்”, யாஷிகா.

 

“ரிதுவ காரையே எடுக்க விடமாட்டார்மா அங்கிள்”, சம்யு.

 

“ஆனாலும் கொஞ்சம் ஸ்பீடாத்தான் போறா ரிது. நானே ஒருதடவ போயிருக்கேன்ல”, அனு.

 

“ஸ்பீட கொறக்கிறதுக்குள்ள அவங்க வந்து விழுந்துட்டாங்க, நாங்க என்ன செய்ய?”, யாஷிகா.

 

‘அவங்களா விழுந்தாங்க?’ என்று எண்ணிக்கொண்டே, “சரி விடுங்க. நடக்கறது நடக்கட்டும்”, என்று அன்னை அந்த பேச்சை முடித்தாள்.

 

யாஷிகா சிறிது நேரம் இருந்து, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.

 

vvv

 

மாதங்கள் சில உருண்டோடின, டி-நகர், டீ கஃபேயில் (D Cafe) சித்து, யோகி எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.

 

“என்ன மச்சி, திடீர்னு வண்டிய இந்தப் பக்கம் திருப்பிட்ட. நீ இதெல்லாம் லைக் பண்ண மாட்டியே!”, சித்து.

 

“எல்லாம் காரணமாத்தான்டா மச்சி”, யோகி.

 

மெனுவைப் பார்த்துக்கொண்டிருந்தான் யோகி. வேலையாள் (Server) ஒருவரும் வரவில்லை. சுற்றுப்புறத்தை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான்.

 

நல்ல ரம்மியமான சூழல், பச்சை வண்ணத்தில் செடி, கொடிகள் ஏராளம். சென்னையின் மிகவும் பரபரப்பான இடத்தில், அமைதியை விரும்பும் வசதி படைத்தவர்கள் தாராளமாக வந்துசெல்ல, மிகவும் சிரத்தை எடுத்து அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு போல் தெரிந்தது.

 

வந்த அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்த சித்து, யோகியையே கவனித்துக்கொண்டிருந்தான்.

 

யோகி சூழலை பார்த்துவிட்டு, தூரத்தில் நின்று மற்றொரு மேசையைக் கவனித்துக்கொண்டிருந்த வேலையாளையே பார்த்துக்கொண்டிருந்தான். இவனது பார்வையின் தீவிரத்தை அறிந்தவன் அருகில் வந்து, “வாட் யூ வான்ட் சார்?”, என்றான்.

 

அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சித்துவிடம் மெனுவில் ஒரு வரியைக் காட்டி, சொல்லவா என்றான். அவனும் சரி என்பதுபோல் கட்டை விரலை உயர்த்தினான்.

 

“டூ மிக்ஸ்டு மஷ்ரும் சூப்ஸ்”, யோகி.

 

அங்கிருந்து விலகிய வேலையாள், அடுத்த மேசை அருகில் இருந்த மற்றறொரு மேசையில் இருந்தவர்களிடமும் ஏதோ கேட்டுவிட்டுச் சென்றான்.

 

வாசலை நோக்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சித்துவின் கண்களில் திடீர் பளீச்.  வேகமாக பேச்சை முடித்துவிட்டு மொபைலை அணைத்தான்.

 

“இப்பத்தாண்டா புரியுது, நீ இன்னக்கி இங்க ஏன் வந்தன்னு”, சித்து.

 

“ஏன்?”, யோகி.

 

“பின்னாடித் தெரியும் மச்சி, பாரு”, என்று யோகியின் பின்னால் காண்பித்தான்.

 

பார்த்த யோகி சற்று யோசித்தான், “இதுக எங்கடா இங்க?”

 

அங்கே ரிதுவும் சம்யுக்தாவும் வந்துகொண்டிருந்தனர். சட்டென திரும்பியதால் யோகியை கவனித்தவர்கள் எதிரில் இருந்த சித்துவையும் பார்த்துவிட்டு அருகில் வந்தனர்.

 

“சும்மா கதை உடாதடா. தெரிஞ்சுதான வந்த”, சித்து.

 

“ஹாய்” என்று ரிதுவும் சற்று யோசனையாகவே பார்த்தாள். இவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது வந்திருந்த ரிது மற்றும் சம்யுக்தாவின் கண்களில் நன்றாகத் தெரிந்தது.

 

“இதுதான் நீங்க வழக்கமா காஃபி சாப்டுற எடமா?”, சம்யு.

 

“இல்ல, இன்னக்கித்தான்”, என்றான் யோகி உண்மையாக.

 

“நீங்கதான் இங்க ரெகுலர் கஸ்டமர்னு நாங்க நெனக்கிறோம்”, சித்து.

 

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் பக்கத்தில் காலியாக இருந்த மற்றொரு மேசையை தேர்வு செய்து அமர்ந்தனர். சித்து சொன்னது உண்மை என்பதுபோல் வேலைக்காரன் உடனே ரிதுவின் அருகில் வந்தான்.

 

“டூ ச்சில்லி ஃபிஸ், ப்ளீஸ்”, என்று வேலையாள் கேட்கும் முன்னரே, மெனுவைப் பார்க்காமலேயே பழகியது போல் உத்தரவிட்டாள் ரிது.

 

‘இவனுந்தான் இருக்கானே மெனுவையே அரைமணி நேரமா பாத்துட்டு அத வேற எங்கிட்ட காமிச்சான். நானும் புதுசுன்னு இன்னேரம் பேரருக்கும் தெரிஞ்சிருக்குமே’, சித்து.

 

“ஹவ் இஸ் யுவர் லெக்?, சரியாயிடுச்சுல்ல?”, ரிது.

 

“ம், வெரிவெல் நௌவ்”, சித்து.

 

“சாரி, அன்னைக்கு அவசர வேல. அவளுக்கு கம்பெனில லீவு குடுக்கல. அதான் ஒடனே புறப்பட்டு வந்துட்டோம்”, சம்யு.

 

“ஆனா, அடுத்த நாள்கூட நாங்க அங்கதான இருந்தோம்!”, யோகி.

 

பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு, சம்யு அமைதியான குரலில், “ரிது வீட்ல ரொம்ப பேசிட்டாங்க. அவளோட அம்மாவே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அதான் நாங்க அத அப்டியே டிராப் பண்ணிட்டோம்”, சம்யு.

 

“ஏதும் பிரச்சனையில்லயே? நீங்க டிஸ்சார்ஜ் ஆகற வரைக்கும் நல்லா கவனிச்சிக்கிட்டாங்களா?”, ரிது.

 

“ம், வெல் கேர்”, யோகி.

 

“டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வரும்வரை ஒரு பைசா கூட கேக்கலயே! நல்ல பழக்கமா?”, சித்து.

 

“ம், அப்பாவுக்கும் அங்கிளுக்கும் ரொம்ப வருஷ பழக்கம்”, ரிது.

 

“உங்க பேரன்ட்ஸ் ரொம்ப திட்டிட்டாங்களோ?”, யோகி.

 

“அப்பா ஒன்னும் சொல்லல. அம்மாதான் பிடிகுடுத்தே பேசல. ஆனா அப்பாக்கிட்டயும் சொல்லாம அம்மாவே கிளினிக்க கான்ட்டாக்ட் பண்ணி எல்லாத்தையும் பாத்துக்கிட்டாங்க”, ரிது.

 

“நாங்க ஏதாவது கேட்டா, கோபப்படுவாங்களோன்னு எதுவும் கேட்டுக்கல”, சம்யு.

 

“உங்க நம்பராவது வாங்கிட்டு வந்திருக்கலாம். வாங்கிருந்தா, உங்களப் பத்தி விசாரிச்சு இருப்போம். அவசரத்துல அதக்கூட வாங்கணும்னு தோனல”, ரிது.

 

“பரவால்லங்க, இந்தக்காலத்துல இவ்ளோ பாத்ததே பெரிசு”, சித்து.

 

அதற்குள் அவர்கள் உத்தரவிட்டிருந்த சூப்பும், மீன் வறுவலும் வந்தன. சாப்பிட ஆரம்பித்தார்கள்.

 

“நீங்க எங்கருக்கீங்க? என்ன பண்ணிட்டிருக்கீங்க”, யோகி இருவரையும் பொதுவாகக் கேட்டான்.

 

“எங்களுக்கு இதே சென்னைதான். அவளுக்குத்தான் செங்கல்பட்டு. எம்பிஏ டிஸ்டன்ஸ் எஜுகேசன்ல பண்ணிட்டிருக்கோம்”, ரிது.

 

“வேல பாக்குறதாச் சொன்னாங்க”, சித்து.

 

“மூனுபோரும் பண்றதச் சொன்னேன். மத்தபடி சம்யு டி.ப்பி.ஐ-ல வேலபாக்குறா, யாஷிகா டி-நகர்ல பிரைவேட் கம்பெனில ஒர்க் பண்ணிட்டிருக்கா”, ரிது.

 

“இதுல யாரு சம்யு? யாரு யாஷிகா? ஒங்க பேரென்ன? சம்யுன்னா சின்னதா இருக்கே, பேரே அவ்ளோதானா?” என்று கேள்விகளை அடுக்கினான் யோகி.

 

அப்பொழுதுதான் தெரிந்தது தாங்கள் யாரும் ஒருவருக்கொருவர் பெயரைக்கூட கூறி அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்று.

 

ஒருவருக்கொருவர் பெயர்களை விரிவாகக் கூறிக்கொண்டதோடு ஆண்களின் எண்கள் பெண்களால் பெறப்பட்டது. ஆனால், பெண்களின் எண்களைக் கேட்க ஆண்கள் இருவரும் சற்று சங்கடமாக உணர்ந்ததால் தெரிந்துகொள்ளவில்லை. ரிதுதான் இருவர் எண்களையும் குறித்துக் கொண்டாள்.

 

டீ கஃபே வேலைக்காரன் பில்லை நீட்டினான். அவர்களின் பில்லையும் சேர்த்து எடுத்துக்கொண்டாள் ரிது.

 

யோகி சற்று பதறினான், “வீ வில் ப்பே, ப்ளீஸ் கிவ் இட் டு மீ” என்றான்.

 

“நோ ப்ராப்ளம் கைஸ். கூல்”, என்று கூறிக்கொண்டே டிப்சையும் சேர்த்து வேலையாளிடம் கொடுத்தாள் ரிது.

 

சித்துதான் லேசாக சிரித்தான். அதைப் பார்த்த சம்யு அவனிடம், “என்ன சிரிக்கிறீங்க?” என்றாள்.

 

“இல்ல…, இப்டித் தெரிஞ்சிருந்தா நைட் டின்னரயே முடிச்சிருப்போம்” என்றான் குறும்பாக.

 

“முடிங்களேன்”, என்றாள் ரிது அலட்டிக்கொள்ளாமல்.

 

“ஏன், இந்த கஃபே ஓனரும் உங்கப்பாவும் நல்ல ஃப்ரண்ட்ஸா?”, என்று கேட்டான் யோகியும் சற்றுக் குறும்பாக.

 

“இருக்கலாம். யாரு கண்டா?”, என்று பொதுவாக பேசிவிட்டு, தோழிகள் இருவரும் கிளம்புவது போல் பாவனை செய்தனர்.

 

“கிளம்பியாச்சா? என்ன அவசரம்?”, சித்து.

 

“யாஷிகாவ பாக்க வந்தோம். பாதி தூரம் வந்ததும் அவ கால் பண்ணி கம்பெனில இருந்து கிளம்ப கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லிட்டா. அதான் அதுவரை இங்க டைம் பாஸ் பண்ணிட்டுப் போகலாமேனு வந்தோம். இப்ப அவகிட்ட இருந்து மிஸ்கால்”, காண்பித்தாள் ரிது.

 

“…”

 

“கிளம்பிட்டா. ஸோ நாங்களும் கிளம்பறோம்”, ரிது.

 

“அஸ் யூஸ்வல் ஷாப்பிங்கா?”, யோகி.

 

“ஷாப்பிங்தான். ஆனா யூஸ்வல் இல்ல இது கொஞ்சம் ஸ்பெஷல்”, என்று சம்யுவை பார்த்தாள் ரிது.

 

‘வேண்டாம்’ என்பது போல் பார்த்தாள் சம்யு.

 

“என்ன ஸ்பெஷல்?”, சித்து.

 

“வித்தின் எ வீக், எங்களுக்குள்ள ஒருத்தருக்கு பர்த்டே”, ரிது.

 

“ஓ, நைஸ். மே வீ நோ ஹூஸ் தட் ஏஞ்சல்?”, யோகி.

 

“எனக்கு தெரிஞ்சுரிச்சு”, என்றான் சித்து.

 

“நானுந்தான்டா கெஸ் பண்ணிட்டேன். ஆனா அத அவங்க வாயால சொல்லட்டுமேன்னு கேட்டேன்”, என்றான் யோகி.

 

“சரி, நீங்க கெஸ் பண்ணத பண்ணதாவே வச்சிக்கோங்க நாங்க போறோம்”, என்று வெளியேற ஆயத்தமானாள் சம்யு. உடன் ரிதுவும் பின்தொடர்ந்தாள்.

 

அவர்களுடன் இணையாக இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.

 

“மறுபடியும் எப்ப, எங்க பாக்கலாம்?”, என்றான் சித்து.

 

“தெரியல, பாப்போம், பாக்கலாம். நா கால் பண்றேன்”, என்றாள் ரிது.

 

“நம்பிட்டோம்”, என்றனர் இருவரும் கோரசாக.

 

“ப்ராமிஸ்” என்றாள் ரிது.

 

“அது யாரு இன்னொரு மிஸ்”, சித்து.

 

“அப்பறமா கால் பண்ணி சிரிக்கிறேன்”, என்றாள் ரிது.

 

“சிரிக்காட்டிக் கூட பரவாயில்ல. தனியா சிரிச்சுராதீங்க”, யோகி.

 

“அந்தளவுக்கு போயிர மாட்டோம்”, ரிது.

 

“அப்ப எந்தளவுக்கு போவீங்க?”, யோகி.

 

சிறிய சிரிப்பொன்றை வெளிப்படுத்தி, பதில் பேசாமல் யோகியை சற்று ஆழமாக பார்த்தவாறே, பேசிக்கொண்டே அனைவரும் அவர்களிருவரும் வந்திருந்த காருக்கருகில் வந்துவிட்டதை உணர்ந்து உள்ளே செல்ல கதவைத் திறந்துகொண்டே, “ஓக்கே, பை” என்றாள் ரிது.

 

அதற்குள் சித்துவிடம் விடைபெற்று சம்யு காருக்குள் ஐக்கியமாகி இருந்தாள். யோகியிடமும் ‘பை பை’ என்று கையைக் காட்டினாள். இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.

 

“பரவாயில்ல இன்னைக்காவது அவசரமில்லாம சொல்லிட்டு போகுதுக”, சித்து.

 

“அன்னைக்கு ஏன் அவ்வளவு அவசரமா போச்சுங்கன்னு தெரியலையே?”, யோகி.

 

“சம்யுவுக்குத்தான பர்த்டே?”, என்று வேறு ட்ராக்கிற்கு சென்றான் சித்து.

 

“ஆமா, தெரியாதா பின்ன!  தன்னோட பர்த்டேன்னா நிச்சயம் ரிது உளறிருக்காது. தன்னோட பர்த்டே இல்லன்னா சம்யுவும் வேண்டாம்னு சைகை செஞ்சிருக்காது. ஸோ சிம்ப்பிள் லாஜிக்”

 

“நானும் அதப் பாத்துட்டுதான்டா மச்சி சொல்றேன்”

 

“நீ அத மட்டுந்தாண்டா பாத்துட்டு இருந்த. அதயும் நா பாத்துட்டேன்டா மச்சி”

 

“ச்சே ச்சே, நா கேசுவலாதான பாத்தேன், பேசுனேன்”

 

“இருக்கட்டுமே. கேசுவலாவே இருக்கட்டும்”

 

“சரி நீ ஏன் இங்க வந்த? அதச்சொல்லு மொதல்ல. நா கூப்டா கூட இதுவரைக்கும் வர மாட்ட. எப்பவுமே வராத நீ வந்ததும் கரெக்ட்டா அதுங்களும் வந்திருக்குதுக”

 

“ச்சே ச்சே. அது ஒரு கோஇன்சிடென்ஸ் மச்சி”

 

“இன்னும் பதில் வரலையே”

 

“எங்க பாஸ்தான் அவரோட பிஸினஸ வித்யாசமா இம்ப்ரூவ் பண்ணலாமேன்னு ஐடியாப் பண்ணிருக்காரு. அதுல ஒன்னுதான் இது மாதிரி கஃபே”

 

“ஏஆர் கஃபே ஆரம்பிக்கப் போராறா?”

 

“மால் பேருதாண்டா ஏஆர்.  மற்ற பிஸினஸெல்லாம் வேற வேற பேர்ல இருக்கும்டா. இன்னும் அவருக்கு எத்தன பிஸினஸ், என்னென்ன பேர்ல, எங்கங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஏஆர் மால். அவ்ளோதான்”

 

“சரி இந்த கஃபேல என்னத்த நீ ஸ்டடி பண்ண?”

 

“மொதல்ல கவனிச்சது கொசுத் தொல்ல. நல்ல செடி, கொடி வச்சு பராமரிக்கறது முக்கியமில்ல மச்சி. ஆனா இந்த மாதிரி கொசுவல்லாம் வராம பாத்துக்கணும்”

 

“…”

 

“நாம பேண்ட், ஷூவெல்லாம் போட்ருந்ததால ஒன்னுந் தெரியல. ஆனா நாகரிகம்னு பயலுக சாட்சும், பொண்ணுங்க மிடி, மினின்னு போட்டுட்டு வந்தா கொசு கொன்னுரும் போல”

 

“ஓக்கே, வேற”

 

“பேரர் பார்சியாலிட்டி பாக்குற மாதிரித் தெரியுது. அப்பறம் ஆர்டர் பண்ணது வர கொஞ்சம் லேட்டாகுது. இதெல்லாம் ரெக்டிஃபை பண்ணா நல்லாருக்கும். அத ‘பாஸ்’ட்ட சொல்லனும்”

 

“எல்லாத்துக்கும் சேத்து எடுத்துட்டு வந்துரலாம்னு நெனப்பான்”

 

“அது தப்புடா. ரிது லேட்டா ஆர்டர் பண்ணது நாம ஆர்டர் பண்ணதோட சேந்தே வந்திருச்சு பாத்தியா?”

 

“அது ஃபிஸ்டா (Fish). மசாலால்லாம் தடவி ரெடியா வச்சிருப்பாங்க. சொன்னவுடனே எண்ணெல போட்டு எடுத்துட்டு வரவேண்டியதுதான. ஈசியான வேல”

 

“சூப்பும் ரெகுலராக கேக்குறதுதான, அதுவும் ரெடியாத்தன இருந்திருக்கும்?”

 

தனது டூவீலரை ஓட்டிக்கொண்டிருந்த சித்து இதைக் கேட்டதும் மிகவும் சிந்திப்பது போல் தோன்றிற்று யோகிக்கு. அவன் பின்னால் இருந்த யோகி, “என்ன மச்சி ரொம்ப யோசிக்கற மாதிரி தெரியுது?”

 

“எல்லா விசயத்திலும் நாம ரெண்டு பேருமே ஒன்னாவே யோசிச்சாலும் வேலைன்னு வந்துட்டா மாத்தித்தான யோசிக்கிறோம்?”, சித்து.

 

“மாத்தி யோசிக்கிறதுல தப்பில்ல மச்சி. ஆனா யோசிக்கிறத சரியா யோசிக்கணும்”, என்றான் யோகி தத்துவம் போல்.

 

யோசிப்பதெல்லாமே சரியாக இருக்குமா?

©© ¨ ©©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!