தூறல் போடும் நேரம் – 13

 பகுதி – 13

 

எத்தனை முறை அழைத்தும், அவளிடம் பேச முடியாத கடுப்பில் இருந்தாலும், முகூர்த்த நேரத்திற்கு செல்லாமல், அதற்கு முன்பே சென்று நேரிலேயே சரி பார்த்து விடலாம் என்ற முடிவோடு தான் கிளம்பினான்.

அதிகாலை ஆறு முப்பது முதல் ஏழு மணி வரை முகூர்த்தம், அதனால் சென்னையில் இருந்து பேருந்தில் வந்தவன், அருகில் இருக்கும் அவர்கள் ஊருக்கு கூட செல்லாமல், நேரே குன்றக்குடியில் நடைப் பெற இருக்கும் திருமண மண்டபத்திற்கு தான் விரைந்தான்.

அதற்குள் மணி ஆறேகால் ஆகி விட்டது. மண்டபத்திற்குள் நுழைந்து, முதல் வரிசையை எட்டிப் பிடித்து, அமர்ந்தவனுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. ஏனெனில் மணமேடையில் பெண்ணையும், மாப்பிள்ளையையும் காணவில்லை.

அய்யர் மட்டும் அமர்ந்து மந்திரங்கள் ஓதிக் கொண்டிருந்தார். சுற்றியுள்ளவர்களின் பேச்சு வார்த்தையில், இருவரும் முகூர்த்த நேர உடுப்புகளை உடுத்த சென்றிருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது.

முதலில் மணமகன், மணமேடை வர, தன் சந்தேகம் ஊர்ஜிதம் அடைந்ததைத் தொடர்ந்து அவன் மீது அதீதக் கொதிப்பில் இருந்தான். கொதித்து கொண்டிருந்தாலும், நான்கு பேர் முன் நிதானம் இழக்கக் கூடாது என்று பொறுமையாய் முள் மீது அமர்ந்திருப்பவன் போன்று அவஸ்தையாய் அமர்ந்திருந்தான்.

‘இதற்கு… இதற்கு தானே அவளிடம் கேட்க நினைத்தேன். பாவிப் பெண் கடைசியில், தட்டிக் கேட்க யாருமில்லாத பேதையாய் படுகுழியில் விழ போகிறாளே’ என ராதாவைப் பற்றி வருந்த ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் மணப்பெண் மணமேடையை நோக்கி வர, அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், ஏதோ அதலபாதாளத்திற்கு செல்ல, அவள் எடுத்து வைக்கும் அபாய தடமாய் அவனுள் பதிவானது.

‘இதை எப்படி தடுப்பது? கடவுளே! வழியைக் காட்டி விட்டு, நீயே கதவையும் அடைக்கிறாயே… அவனை…’ என வன்மம் கூடினாலும், ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால், வன்மம் கூட வருத்தமாய் தான் மாறியது.

“ராம்… ப்ளீஸ் ஏதாவது பண்ணு டா…” என மணமேடையில் இருந்தவனைக் கண்டதில் இருந்து, அவனுள் ஒரு பெண் குரல் ஒலித்து கொண்டே இருந்தது. இப்போது அது அவனின் மனதில் இருந்து மூளையை வியாபித்து கொண்டிருந்தது.

அவனுள்ளிருந்த குரல் ‘பாவம் டா… அந்தப் பொண்ணு’ எனக் கூறினாலும், கைமுஷ்டி இறுக அப்படியே அமர்ந்திருந்தான்.

மீண்டும் ‘கண் முன்னாடியே அநியாயம் நடக்கப் போகுது. நீ இன்னும் உக்கார்ந்துகிட்டு இருக்கியா’

‘என்ன மாதிரியே அந்தப் பொண்ணையும் ஆக்கப் போறியா?’ என அடுத்து அடுத்து அடுக்கப்பட்ட கேள்விகளால் முடக்கப்பட்டு எழுந்தான்.

நேரே மணமேடை ஏறியவன், அங்கு முதிர்ச்சியின் காரணத்தால், நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருந்த ராதாவுடைய பாட்டியின் அருகில் நின்றான்.

நின்றவன், மேடையில் இருந்த நெருங்கிய சொந்தத்திடம் ஆசி வாங்க, கொண்டு வந்த பொன் தாலியினை, ராதாவின் பாட்டி ஆசிர்வதிக்க, தொட்டு தான் முடித்திருப்பார்; மறுநொடி அதை தன் கையில் எடுத்தவன், கண் இமைக்கும் நேரத்தில் பாட்டிக்கு முன் அமர்ந்திருந்த ராதாவின் கழுத்தில் கட்டி முடித்திருந்தான்.

வேத மந்திரங்கள் ஓதிய அய்யர், வாயடைத்து வியர்த்திருக்க, பக்கவாட்டில் அமர்ந்திருப்பவன் கட்ட வேண்டிய தாலியை பின்னே இருந்து எவனோ கட்டியதை உணர்ந்த ராதை யார்? எவர்? எனப் பதைப்போடு எழுந்து விட்டாள்.

பதைப்போடு எழுந்தவள், ராமைக் கண்டதும் ‘இவனா?’ எனத் திகிலோடு “நீ… நீங்க…?” என்ற கேள்வியோடு, அந்த இடமே தட்டாமாலைத் தட்ட தொடங்க, மயங்கி சரிந்தாள்.

சரிந்தவளைத் தாங்கியவனை ஒன்றும் புரியாமல் அனைவரும் பார்க்க, “ஏய்! யாரு டா நீ?” என மணமகனான சுதர்சனின் தந்தை வடிவேல் தான் முதலில் எகிறினார்.

பின் அவரோடே,  அதே கேள்வியின் பொருளை பல்வேறு வாக்கியங்களாக சுதர்சனும், அங்கிருந்த பெரியவர்களும் மாறி மாறி கேட்டனர்.

அங்கிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியிடம், “ஆன்ட்டி, ப்ளீஸ் இவளைப் பார்த்துக்கோங்க” என தன் புத்தம் புது மனைவியை ஒப்படைத்தவன், அமைதியாகவே திரும்பினான்.

இவ்வளவு நேரம் அவனுள் இருந்த ஒரு பரபரப்பு, இதயத்தின் படபடப்பு எல்லாம் சற்று மட்டுப்பட்டது போல் உணர்ந்தவன், அமைதியை தத்தெடுத்து கொண்டான்.

அந்த நீண்ட நெடிய நொடிக்குள் “எங்க வந்து என்ன காரியம் பண்ணிருக்க?”

“எவ்வளவு தைரியம் இருந்தா, இப்படி பண்ணிருப்ப?” என ஆளுக்கு ஒருவராய் மாப்பிள்ளை பக்கம் பரிந்து வந்து கேட்க,

“பொண்ணு கொடுத்த தைரியமா இருக்கும் பா”

“இப்படி கல்யாணம் வரைக்கும் வந்து, சட்டுன்னு தாலி கட்டுறான்னா… அந்தப் பொண்ணுக்கு சம்பந்தம் இல்லாமலா இருக்கும்”

“யார் கண்டது வேலைக்கு போன இடத்துல ரெண்டு பேரும் லவ்கிவ் பண்ணிருச்சுங்களோ என்னவோ?” யார் சார்ப்பும் இல்லாத ஒரு கும்பல் பதில் உரைத்தது.

“ஏண்டா, கல்யாணம்னா உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போச்சா?” என ஒருவர் வினவ.

“இந்தக் காலத்து பசங்களுக்கு கல்யாணமே தேவை இல்லாம இருக்கறப்போ… கல்யாணத்த பற்றியா தெரியப் போகுது” மீண்டும் அதே கும்பல் பதில் சொல்ல…

“காத்திருந்தவன் பொண்டாட்டிய, நேற்று வந்தவன், தட்டிட்டு போனக் கதையால இருக்கு” பெண்கள் பக்கம் சலசலப்பு ஆரம்பமாகியது.

“இவ்ளோ கேக்குறோமே… வாய துறக்குறான பாரேன்” என எல்லோரின் பேச்சு வார்த்தைகளால், வடிவேல் வெகுண்டெழுந்து அவன் சட்டையைக் கைப்பற்றினார்.

“பதில் சொல்லுடா நாயே!” எனப் பொறுமையை மீறி அடாவடியாய் மாறினார் அவர்.

“அதான் எல்லோரும் சொல்லிட்டாங்களே… கேட்கலையா உங்களுக்கு?” என அவரின் கைகளை, தன் சட்டையில் இருந்து நிதானமாய் விடுவித்தான்.

“அதுக்கு ஏண்டா இப்படி பண்ண? முன்னாடியே அவள இழுத்துக்கிட்டு ஓடிப் போய் தொலைய வேண்டியது தான…

போதுமாடி… அண்ணன் பொண்ணு… அநாதரவா இருக்கான்னு சொன்னியேடி… இப்போ உன்ன மட்டுமில்ல மொத்தமா அசிங்கப்படுத்திட்டா” என அவனிடம் ஆரம்பித்து, அவர் மனைவியிடம் நிறுத்தினார்.

“சொன்னா புரிஞ்சுக்காத ஜென்மம்னு தான்… செஞ்சு காமிக்க வேண்டியதா போச்சு” எனச் சுதர்சனை முறைத்த வண்ணம் கூறினான்.

“டேய்… என்னடா சொன்ன? செய்யுறதையும் செஞ்சிட்டு மரியாதை இல்லாம பேசுறியா?” என அவன் மீது பாய ஆரம்பித்தவரை, “வடிவேலு விடுப்பா… ஊர் உறவு கூடி இருக்க நேரத்துல, எதுவும் கைகலப்பு பண்ணாதப்பா…” என மத்தியஸ்தர்கள் சிலர் அவரை மதமிழக்க வைத்தனர்.

ராமும் ராதாவும் காதலித்து, வேறு வழி தெரியாமல் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர் என்ற முடிவுக்கு வந்தனர் அங்கிருந்த எல்லோரும்.

“அவுக பாட்டிக்காக சம்மதிச்சு இருப்பா, அதான் அந்த பையன் இவ்வளவு தூரம் வந்து, துணிச்சு இப்படி செஞ்சிருக்கான்”

மற்றவர்களின் பேச்சில் இருந்து, உடம்பு முடியாத பாட்டி, ராதாவிற்கு தன் மகள் வழி பேரனையே திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததை அறிந்தான் அவன்.

அவர் இவ்வாறு முடிவெடுக்க ஒரு காரணமும் உண்டு. பிள்ளைப் பூச்சியாய் இருக்கும் தன் மகளுக்கு ஒரு ஆதரவாக ராதாவும், தனக்கு பின் அநாதரவாய் இருப்பவளுக்கு ஆதரவாய் தன் மகள் புவனியும் இருப்பாள் எனச் சிந்தித்து தான் முடிவு செய்தார். ஆனால் அதை இப்படி ராதா கலைப்பாள் என அவர் எதிர்பார்க்கவில்லை.

மேலும், சிலர் “நடந்தது நடந்துருச்சு… இனி ஆக வேண்டியதப் பாருங்கப்பா… என்ன இருந்தாலும் பொம்பள புள்ள வாழ்க்கையில்லையா? அதுவும் அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு. ஏதோ அறியாம பண்ணிருச்சு. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்ருங்கப்பா” என எல்லோரும் கூடி ஒரு நல்ல முடிவுக்கு வந்தனர்.

இது எதுவும் அறியாத ராதா, கண் விழிக்கும் போது எல்லோரும் சமரசம் ஆகி இருந்தனர். ஆனால் சுதர்சனும், வடிவேலும் அங்கு நிற்க கூட பிடிக்காமல் கிளம்பியிருந்தனர்.

சற்று பணம் படைத்த ஆணவக்காரருக்கு விழுந்த சரியான சவுக்கடியாய் மற்றவர்கள் எண்ணி சமாதானம் அடைய, தனக்கு நேர்ந்த கௌரவ பிரச்சனையாக அவர் இதைக் கருதி வெளியேறினார்.

பின் மற்ற சடங்குகளை, இருவரையும் மேடையில் அமர்த்தி மேற்கொண்டு அய்யர் ஆரம்பித்தார். மண்டபத்தில் இருந்து இருவரையும் ராதாவின் வீட்டிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் வரை புவனி உடன் இருந்தார்.

ஏனோ அவருக்கு, இந்நிலையில் ராதாவை விட்டு செல்ல என்பதை விட, அவரின் தாயாரை விட்டு செல்ல விரும்பவில்லை. மேலும் அவருக்கு, வீட்டிற்கு செல்ல மனதே இல்லை.

அப்பனும் மகனும், ராதா அழகாய் தீபம் ஏற்றினாலே பிடிக்காமல், தாம்தூம் எனக் குதிப்பார்கள். இப்பொழுது ஒரு அணுகுண்டையே கொளுத்தி போட்டிருக்கிறாள், இனி என்ன என்ன ஆட்டம் ஆடப் போகிறார்களோ? அவர்களின் ஆட்டத்திற்கு எல்லாம் அடிபடும் பந்தாய் இருப்பது புவனி தான். அதனாலேயே இந்த வெடிக்குண்டின் அதிர்வு அடங்கும் வரை இங்கிருப்பதே உசிதம் என எண்ணினார்.

ராதா தன் மகனிடம் மாட்டாத வரைக்கும் அவருக்கு மகிழ்ச்சியே! அந்த ஆனந்தத்தோடு தான் மேற்படி வேலைகளைச் செய்தார். இவர் இவ்வாறு இருக்க, காதலித்து மணந்த இருவரும் வெவ்வேறு திசையில் இருந்ததை யாரும் அறியவில்லை. இதற்கு காரணம், அவர்களின் திடீர் திருமணத்தின் அதிர்வலை இன்னும் மிச்சம் இருந்தது தான்.

இருவரையும் தனித்து விடப்பட்ட அறையில் இருந்த ராம் தான் முதலில், “சாரிங்க… ஆனா எனக்கு வேற வழி தெரியல” என மௌனத்தை தன் மன்னிப்பால் உடைத்தான்.

தன் மௌனத்தை உடைத்தும், உடையவளின் மௌனம் கலையாத நிலை… அலங்கரிக்கப்பட்ட கற்சிலையென வடிவம் கொண்டது. மேலும் அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் விலகி சென்றான்.

அவ்வாறு, மதியம் வீட்டை விட்டு வெளியேறியவன் தான், இரவு பள்ளியறை செல்லும் நேரத்திற்கு தான் வந்தான். அதுவும் புவனியின் “என்ன தம்பி இவ்வளவு லேட்டா வர்றீங்க? என்ன பிரச்சனையா இருந்தாலும், உங்களுக்குள்ள பேசி தீர்த்துக்கோங்க…” எனக் கூறியவரை யாரென்றே தெரியவில்லை அவனுக்கு.

யாரேனும் சொந்தமாக இருக்கும், இல்லை காலையில் எங்கோ பார்த்தோமே என நினைவு கூர்ந்தும், இனி என்ன செய்ய போகிறோம் என்று திக்கு தெரியாத இந்த சூழ்நிலையில், அவரைப் பற்றி அதற்கு மேல் அவன் ஆராயவில்லை.

அதற்கு பின் நடந்தது எல்லாம் அவசர கதியில் ஆழ சிந்தியாமல், அவள் மீது பழி போட்டு விட்டு அவர்களின் திருமணத்தைப் பலிக்கடாவாய் விட்டுவிட்டு வந்தான்.

ஏதோ உந்துதலில் தாலியைக் கட்டி விட்டு, தன் உளப் பிரச்சனையைத் தீர்த்து கொண்டான். ஆனால் இனி உலா வரும் பிரச்சனைகளை எவ்வாறு கடந்து கரை சேர்வது என ஒரு யோசனையும் அவனுக்கு பிறக்கவில்லை.

இதற்கிடையே அவனுக்கு தெரியாத ஒன்றும் நடந்து இருந்தது. ராதாவின் திருமணத்திற்கு உதயாவால் தான் வர முடியவில்லை.

ஆனால் அவர்கள் குடும்பத்தின் சார்பாய், வீட்டின் மூத்தவர் வெங்கடாசலம் ‘நம் ஊர்ல இருந்து பக்கம் தான… சும்மா ஒரு எட்டு போய், தலையக் காமிச்சுட்டு விரசா வந்துடலாம்’ என முகூர்த்த நேரத்திற்கு சற்று தாமதமாய் மெல்லமாய் வந்து சேர்ந்திருந்தார்.

வந்தவரின் விழியில், ராமின் கையால் ராதாவிற்கு தாலி கட்டும் காட்சி விழுந்தது. அதற்கு பின் நிகழ்ந்த கலவரத்தையும் கண்டவர், வந்த சுவடு தெரியாமல் ஊர் திரும்பி விட்டார்.

ஊர் திரும்பியதில் இருந்து, இதை எப்படி குடும்பத்தாரிடம் பகிர்வது? மற்றவர்கள்… குறிப்பாக குடும்பம் கௌரவம் எனக் குதிக்கும் தன் தம்பி எப்படி ஏற்பான்? அதை விட அவரின் மனைவி ராதாவை ஒரு வழி பண்ணிவிட மாட்டாளா? என அனைத்தையும் எண்ணிப் பார்த்தவர், ஒரு மார்க்கமாகவே இருந்தார்.

அதைக் கண்டு கொண்ட வள்ளியம்மைக் கூட, “என்னங்க கண்ணாலம் நல்ல படியா நடந்துச்சா… இல்லையா?” என இரவின் தனிமையில், அவர்களின் தனி அறையில், சந்தேகம் கொள்ள…

“ஏன் கேக்குறவ? நல்லா தான் நடந்துச்சு” எனச் சொல்லும் போதே அவர் கண்ணில் ஒரு கலவரம் வந்து சென்றது.

“பெறவு ஏன்? வந்ததுல இருந்து குட்டி போட்ட பூனையாட்டம்… யோசனையாவே குறுக்காலும் நெடுக்காலும் நடக்கீக” என விசயத்தை எட்டிப் பிடித்தார்.

“அது… அது வந்து…” அதற்கு மேல் அவரால், எதுவும் சொல்ல வழி தெரியாமல், நெஞ்சின் மீது கைவைத்து கொண்டு வழி கண்டார்… இல்லை இல்லை வலிக் கொண்டார்.

அடுத்த கணம், வள்ளியம்மை இட்ட கூச்சலில், அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையில் தான் காண நேர்ந்தது.

மறுநாள் மதியம் வரை பார்த்து விட்டு, பிள்ளைகளுக்கு சொல்லி விடலாம் என எண்ணிக் கொண்டார் அருணாசலம். எப்படியும் அதிகாலையிலேயே, பிள்ளைகள் பள்ளிக்கும், ஆண்கள் வேலைக்கும் சென்றிருப்பார்கள் என உத்தேசித்தே இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் மாலை வரை, அவரை அவசர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்திருக்கவும், மகள்கள் இருவருக்கும், மகன் ராமிற்கும் அலைபேசியில் சுருங்க சொல்லி வரவழைத்தார்.

ராமோ, சுரேந்திரனின் அறிவுரைப் படி, என்ன இருந்தாலும், எப்படி இருந்தாலும் கரம் பிடித்து விட்ட ராதாவை ஒரு கணவனாய் காண கிளம்பியிருந்தான்.

இதற்கிடையே, இக்கட்டான சூழலில், தனக்கு திருமணமான விசயத்தை, அலுவலக மேலாளரிடம் கூறி விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தான்.

ஆனால் தந்தையின் அழைப்பில், குன்றக்குடி செல்ல வேண்டியவன் காரைக்குடிக்கு சென்றான். பேருந்தில் பயணப்பட்ட போது, குன்றக்குடி வந்த போது, இடையிலேயே இறங்கி விட இதயம் பரபரக்க மூளையோ அதற்கு தடையிட்டது.

ஊருக்கு சென்று பெரிய தந்தையைப் பார்த்தான். அவன் வந்ததை அறிந்ததும் தான், கண் விழித்து இயல்பு நிலைக்கு வந்தார் அவர். அதனைத் தொடர்ந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார்.

எல்லோரும் சங்கடமான நிலையில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பினர். ராமைக் கண்ட வெங்கடாசலம், அவனிடம் “நானும் ராதா கல்யாணத்துக்கு வந்திருந்தேன்ப்பு…” என அவனுக்கு ஆப்பை வைத்தார்.

“பெரிப்பா…”  எனக் கேட்டும் கேட்காத குரலில் விளித்தான்.

“உங்க பெரியம்மா… நோண்டி நோண்டி கேள்வி கேட்கவும், எங்க உண்மைய சொல்லிடுவோம்னு தான், நெஞ்ச பிடிச்சு சாஞ்சிட்டேன்” என உண்மையைக் கூறினார்.

அவன் பெரிதாய் விழிக்க, “அப்புறம் எப்படி ஐசியுலன்னு பார்க்குறியா. நம்ம டாக்டர்ட்ட பக்குவமா விசயத்த சொல்லி இப்படி ஏற்பாடு பண்ணேன். அவள கூட்டிட்டு வந்திருக்கியா? யாரும் பிரச்சனை பண்ணலேல” தான் இப்படி படுத்ததால், அந்தப் பெண்ணை ஏற்றிருப்பார்கள். அதனால் பிரச்சனை இல்லை என எண்ணி தான் கேட்டார்.

அவனோ, தான் இன்னும் அவளைப் போய் பார்க்கவில்லை என்று நடந்ததைக் கூற, “அடப்பாவி…” என உண்மையிலயே நெஞ்சைப் பிடித்து சாய்ந்தார்.

“இத்தன நாளும் நல்லா இருந்த மனுஷர… இப்படி உண்மையிலேயே நெஞ்சு வலி வரவச்சுட்டியே… அப்படி என்ன சொன்ன ராமு” என அவனை அழைத்து விவரம் கேட்டார் குடும்ப நண்பரான அந்த மருத்துவர்.

விவரம் சொன்னவனிடம் “உங்கப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சுச்சு… பெரிய பூகம்பமே வெடிக்கும். உங்க பெரியம்மா உன்ன குடும்பத்துலேயே சேர்த்துக்க மாட்டாங்க” என வெங்கடாசலம் சொன்னதையே தான் அவரும் கூறினார்.

ஏனெனில் அவ்வளவு சாஸ்திரம், சம்பிரதாயம் பார்க்கும் சுத்த செட்டிநாட்டு குடும்பம் அவர்களுடையது. செட்டிநாட்டு வழக்கங்களில் ஒன்று வீட்டு சாமி அதாவது குலசாமி கும்பிடும் போது, ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு புள்ளி என வந்து கலந்துக் கொள்வார்கள்.

அதாவது சிலர் வழக்கங்களில் குலசாமி கும்பிடும் போது, தலைக்கட்டு வரி என ஒவ்வொரு குடும்பத்திலும் வசூலிப்பார்கள். அதில், ஒரு குடும்பத்தில் உள்ள இள வயது ஆண்கள், திருமணம் முடித்து விட்டால், அவர்கள் தந்தை ஒரு தலைக்கட்டு வரியும், மணமான மகன் தனியே ஒரு தலைக்கட்டு வரியும் செலுத்த வேண்டும். இதனால் அவர்களை ‘தலக்கட்டு’ என சுருங்க அழைப்பார்கள்.

அதே போல் இவர்கள் குடும்பத்தில், வெங்கடாசலம், அருணாசலம் என தனித்தனியே ஒரு புள்ளிகளாக இருந்து வந்த படைப்பு வீட்டில், சுந்தரமும் தற்பொழுது திருமணம் முடிந்து ஒரு புள்ளியாகி விட்டிருந்தான்.

தற்பொழுது உள்ள காலகட்டத்தில், நிறைய பேர் காதல் திருமணம் புரிந்து கொள்கிறார்கள். சிலர் அவர்களையும் ஒரு புள்ளியாய் ஏற்று கொள்கிறார்கள். சிலரோ மிகவும் கட்டுக்கோப்பான குடும்பம் எனில், அவர்களை புள்ளியிலிருந்து நீக்கி விடுகிறார்கள்.

அதை எண்ணி தான் அவனைப் பயமுறுத்தி இருந்தார் வெங்கடாசலம். அவருக்கு ராதாவை ஏற்கனவே பிடித்திருந்த படியால், அவளை ஏற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை தான், மற்றவர்கள் அவளை ஏற்பதில் தான் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்து சொன்னார்.

உண்மை தெரியும் நாளில், இவருக்கும் மிக பெரிய தீபாவளி நடக்கும் என்பதை உத்தேசித்து தான் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்திருந்தார்.

மனைவியைக் காண்பதற்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்த ராம், தங்கள் ஊரிலேயே அதைக் கழித்தான். பெரியப்பாவின் உடல்நிலைப் பற்றி உண்மைநிலை தெரிந்ததனால் சற்று இலகுவாய் இருந்தவன், தன் நிலைப் பற்றி தெரிய வரும் போது, உண்டாகும் விளைவுகளை எண்ணி சிறிது அச்சம் கொண்டான்.

எனினும் நடந்ததை மாற்ற முடியாதே!

 

 

தூறல் தூறும்…