தூறல் போடும் நேரம் – 16

பகுதி – 16

எதிலுமே ஒரு பற்றில்லாத தன்மையை ஏற்படுத்திக் கொண்டாள் ராதா. எந்தச் சலனதிற்கும் சஞ்சலப் படாமல், எதற்கும் ஆசைக் கொள்ளாமல், எந்த விசயத்திற்கும் அலட்டிக் கொள்ளாமல், ஒரு நிதானத்தைத் தன்னுள் அவதானித்து கொண்டாள் எனலாம்.

மற்றவர்களிடம் அன்பை எதிர்நோக்கி, ஏமாந்து விடுவோம் என்ற அச்சத்தினால் இந்த நிலையை அவள் தன்னுள் விதைக்கவில்லை. தன்னை தானே தற்காத்துக் கொள்ள போட்டுக் கொண்ட ஒரு பாதுகாப்பு வளையம் தான் அது.

ஒரு குழந்தையாய் பெற்றவர்களின் மீது மாசற்ற அன்பை வைத்திருந்த அந்தச் சின்னஞ்சிறு சிறுமியை, அவர்கள் எண்ணிக் கூட பாராமல்… பிரிவை மேற்கொண்டனர். அந்தப் பிரிவு அவர்களிடையே மட்டும் பிளவை ஏற்படுத்தவில்லை, அவர்களின் காதல் வாரிசான அவளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

அது தான் அன்பு விரிசல். அன்பைப் பொழியும் பாட்டியிடம் வளர்ந்தாலும், தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றம் அவளைச் சுட்டி பேசும் பேச்சுக்களாலும், பல சமயம் அவளின் வயதையொத்த அத்தை மைந்தன் கூட, இவ்விசயத்தால் தன்னைக் கிண்டல் கேலி செய்யவும், அவள் அந்த முடிவினை மேற்கொண்டாள்.

யாரிடமும் அன்பை எதிர்பார்க்கக் கூடாது என்ற தாரக மந்திரத்தினை மனனம் செய்து கொண்டாள். அந்தப் பிஞ்சின் மனதில் விதைத்த விதை, இன்று துளிர் விட்டு பெருமரமாய் நின்று அவளையே காத்து கொண்டிருந்தது.

குடும்பத்தில் பற்றில்லாதவர்கள் தான் இவ்வாறு இருப்பார்கள் என்றில்லை, பல விசயங்களில் இருந்து தங்களைக் காத்து கொள்ளவும், இந்த உத்தியைக் கையாளலாம் என உணர்ந்தவர்களின் வரிசையில் ராதாவும் இருந்தாள். இது ஒரு வகையான ஈஸ்கேபிசம் என்று கூட சொல்லலாம்.

ஆனால், அந்தப் பற்றற்ற தன்மை அவளை நிறைய விடயங்களில் காத்து வந்தது. எதற்கும் சட்டென உணர்ச்சி வயப்பட மாட்டாள், எந்த விசயத்திற்கும் ஒரு தடவைக்கு நான்கு தடவை அலசி ஆராய்ந்தே முடிவு செய்வாள். அதே போல் உடனே எதிர்வினையும் புரிய மாட்டாள்.

சிறுவயதில் இருந்தே இதைப் பழக்கப்படுத்தியதாலோ என்னவோ, மிகவும் நிதானமாய் இருப்பாள். அவளிடம் இருக்கும் ஒரே ஒரு பலவீனம், டெப்ரஷன் மட்டுமே.

அதையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு தான் இருப்பாள். ஆனாலும், எல்லோருக்கும் இலகுவாய் அமையும் அம்மா – அப்பா, அண்ணன் – தங்கை எனக் கட்டமைப்பில் வாழும் ஒரு பாக்கியம் கூட, தனக்கு வாய்க்கவில்லை என்ற சுயப்பச்சாதாபம் அவளை வாட்டும்.

அவள் ஒரு சாதாரண மனுஷி தான் என்பதற்கு இது ஒன்று தான் சாட்சியாய் காட்சி தருகிறது.

இல்லையெனில் இவளும் சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் தான் ஆகியிருப்பாள். திருமணத்தன்று இரவு கூட ஏன் தனக்கு மட்டும் இப்படி ஒரு நிலை என அன்று ஒரு பொழுது மட்டுமே எண்ணினாள். மறுநாள் காலை வழக்கம் போல் எல்லாவற்றையும் ஒடுக்கி, ஒதுக்கி விட்டு, தன் சமன்நிலையை கையில் எடுத்து கொண்டாள்.

பாட்டிக்கு மட்டும் உடம்பிற்கு முடியாமல் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் இருந்திருந்தால், இவள் இந்நேரம் டெல்லியில் அலுவலகத்தில் இருந்திருப்பாள்.

அதனால் “நீ எங்க போற?” என ராம் கேட்டதற்கு, “நானா… மாடிக்கு போறேன்” எனப் பதிலளித்தாள்.

“ஏன் தூக்கம் வரலையா?” என இவள் வழக்கம் போல் மொட்டை மாடிக்கு செல்கிறாள் என எண்ணி கேட்டான்.

கண்ணில் குழப்பத்துடன் “இல்ல… தூங்க தான் போறேன்” என்று அவள் சொன்ன பின்னே தான், மாடியில் அவளறையில் உறங்க செல்கிறாள் என உணர்ந்தவன், “உனக்கு… நான் யார்ன்னாவது புரியுதா?” எனக் கல்யாணம் வரை வந்து, அவன் தாலி கட்டியது வரை, என எல்லாம் தெரிந்தவளிடம் தான் புரிகிறதா எனக் கேட்டு அவளை ஆராய முற்பட்டான்.

அவனது கேள்வியில் சிறிது நேரம் தன் புத்தியைச் செலவிட்டவள், ‘ஓ! அவன் கணவன் எனச் சொல்லாமல் சொல்கிறானா?’ என உணர்ந்து, “புரிஞ்சதால தான், மாடிக்கு போய் பால் பழம் வச்சு… பூத்தூவி… ரூம்ம டெகரேட் பண்ணப் போறேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்றீங்களா ஹஸ்பன்ட் சார்” எனக் கேலியில் இறங்கினாள்.

அவளின் கேலியை உணர்ந்தாலும், “நான் அந்த அளவுக்கு எதிர்பார்க்கல… மை டியர் வைஃப். ஆனா இதையும்… ரெண்டு பேரும் தனி தனி ரூம்ல… சத்தியமா எதிர்பார்க்கல” என உண்மையை மறையாமல் கூறியவன், “எனக்கு ஒன்னும் இல்ல யாராவது பார்த்தா உன்ன தான் தப்பா நினைப்பாங்க” என அழகாய் எடுத்துரைத்தான்.

“நீங்க தான தாலி கட்டுனீங்க… சோ நீங்க தான் பதில் சொல்லணும்” எனக்கொன்றும் அக்கறை இல்லை என்ற நோக்கில் கூறி விட்டு படியேறியவளை, என்ன சொல்லி தன்னுடன் தங்க வைத்து கொள்வது எனப் புரியாமல் விழித்தான்.

முழுதும் தெரியாமல் எனக் கூற முடியாது தான், ஏதோ கொஞ்சமாய் தெரிந்து, சிறிது பழகியவள் தானே சமாளித்து விடலாம் என எண்ணி வந்தவனுக்கு தண்ணி காட்டி விட்டு போய் கொண்டிருந்தாள் ராதா.

இனி அவனின் வீட்டைச் சமாளிப்பதைக் காட்டிலும், இவளைச் சமாளிப்பது தான் தலையாய வேலையாய் அமையும் என்பதைப் புரிந்து கொண்டவன், அதை எப்படி எவ்வாறு செயல்படுத்துவது என யோசித்து கொண்டே உறங்கி போனான்.

மறுநாள் மருத்துவமனையில் உணவு கொண்டு செல்லும் நேரத்திற்கு ராதாவுடன் ராமும் செல்ல, “வாங்க தம்பி, ராதா நல்லா கவனிச்சியா தம்பிய” எனப் புவனி கேட்ட பின்பு தான், இவன் நேற்று நேரே வீட்டிற்கு வரவில்லை, இங்கு வந்து விட்டு வந்திருக்கிறான் என்ற விவரம் தெரிந்தது.

“ம்ம்…” மட்டும் சொன்னவளை நம்பாத பார்வையை செலுத்தி விட்டு ராமைப் பார்க்க, அவனோ “அதெல்லாம் நல்லாவே கவனிச்சுக்கிட்டா ஆன்ட்டி” என மர்ம புன்னகை புரிந்தான்.

“நான் அவளுக்கு தான் ஆன்ட்டி தம்பி, உங்களுக்கு சின்னம்மா முறை வரும்” எனத் திருத்தியவரிடம், டிஸ்சார்ஜ் விவரங்களை கேட்டறிந்து கொண்டான்.

ராதாவின் பாட்டிக் கூட அவனிடம் சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தார். இதைக் கண்டவள், தனக்கு தெரியாமல் ஏதோ செய்திருக்கிறானோ? என ஐயம் கொண்டவள் அதைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

மேலும் தன் அத்தையிடம் “அத்த… நீங்க அங்க… உங்க வீட்டுக்கு போகலையா? மாமா ஏதாவது நினைச்சுக்கப் போறார். அதான் பாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்கள. நான் பார்த்துக்கிறேன் இனி” எனத் தன்னால் ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் மாமனுக்கு, அவரின் மனைவி இன்னும் தனக்கு உதவிக் கொண்டிருப்பதை அவர் விரும்பமாட்டார் என எண்ணி தான் கேட்டாள்.

ஏனெனில் நல்ல நாளிலேயே தங்களுக்கு எதுவும் செய்ய என்ன? மனைவியை ஒரு மகளாய் கூட இவர்கள் வீட்டிற்கு அனுப்ப மாட்டார். போனால், வடிவேலின் சம்சரமாய் அவருக்கு சாமரம் வீசும் சொற்களை மட்டுமே புவனியின் வாய் பேச வேண்டும் என எதிர்பார்ப்பவர் அல்ல நிபந்தனை இடுபவர்.

இவரின் குணம் அறிந்தே புவனி அதிகம் வரவும் மாட்டார், தாயும் மருமகனின் இந்த முகத்தை அறிந்ததனால், வீட்டில் அல்லாமல், களத்து மேட்டில், கிணற்றடியில் மகளைச் சந்தித்து நலம் விசாரித்து கொள்வார்.

“இனி அங்க போகறதா இல்ல ராதா” என தன் முடிவை பறைசாற்ற, “என்ன அத்த சொல்றீங்க” என அதிர்ந்தாள்.

“அம்மா இப்ப தான் உறங்குறாக… கொஞ்சம் மெதுவா பேசுமா… வா… நாம செத்த காத்தாட வெளிய போய் பேசுவோம்” என அறையில் இருந்து வெளியேறினர்.

மருத்துவரைச் சந்திக்க ராம் சென்றிருந்ததால், இவர்கள் தனியே பேசலானார்கள். “கட்டுனவன் தான் மோசமானவனா போயிட்டான் பார்த்தா… நான் பெத்ததும் பொல்லாதவனா இருக்கான்.” என விட்டேற்றியாய் வருந்த, “அத்த… உங்களுக்கு…” எனத் தயங்கியவளிடம்.

“எல்லாத்தையும் அந்த தம்பி சொல்லிடுச்சு… ஆனா அந்த தறுதலைய பெத்தது நான் தான்னு தெரியாமலே சொல்லிட்டு போயிடுச்சு”

அவருக்கு உண்மையை உரைத்திருக்கிறான் என அவளுக்கு புரிந்தது. முதல் நாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றவன், பின் ஊருக்கு திரும்பியவன், இடையில் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது இவள் மருத்துவமனையில் இருந்ததால், புவனியிடம் மறையாமல் எல்லா உண்மைகளையும் கூறியிருந்தான்.

அவனுக்கு அந்நேரம், தன் மனதில் குவிந்த எண்ணங்களை எல்லாம் யாரிடமாவது இறக்கி விட துடித்த நிமிடங்கள். தன் வீட்டில் யாரிடமும் கொட்ட முடியாது, மீனு இருந்திருந்தாலாவது அவளிடம் சொல்லியிருப்பான்.

ஏனெனில் அந்த ராட்சசி தான் அப்படி அவனைப் பழக்கி விட்டு போய் விட்டாளே. எதையும் வெளிப்படையாய் பேசி, எல்லா விசயங்களையும் பங்கிட்டு கொள்ளும் பங்குதாரனியாய் இருந்தவள் ஆயிற்றே.

ஆதலால், அவனுக்கு தான் செய்தது சரியோ தவறோ யாரிடமேனும் கொட்டி தீர்த்து விட வேண்டும் என்ற உளைச்சலில் தான், தன் தாயைப் போன்று தோற்றத்திலும், பேச்சிலும் அமைதியை கொண்டிருந்த அந்த தாயிடம் கூறினான்.

ஏனோ சற்றும் யோசிக்காமல் எல்லா உண்மைகளையும் கூறினான். மனதில் ஏதோ ஒரு பாரம் இறங்கிய உணர்வு வந்தது. மணம் முடிந்து இத்தனை நாளும், ராதாவிடம் மட்டுமல்ல ஏன் அவனின் சுற்றத்தார்களிடமும் கூட அவனால் தலை நிமிர்ந்து இயல்பாய் கூட பேச முடியாமல், ஏதோ ஒரு குற்ற உணர்வு குறுகுறுக்க தான் செய்தது.

அன்று அவரிடம் பேசிய பின் “நான் செஞ்சது தப்பா சரியான்னு கூட தெரில. ஆனா என்னால அவள அவன்கிட்ட விட முடியலமா. இனி நீங்க தான் சொல்லணும். எல்லாத்தையும் விட, முத என்ன மன்னிச்சுடுங்கமா” என ராதாவின் உறவிடம் தன் சார்பாய் மன்னிப்பை யாசித்தான்.

“நீங்க ஏப்பா மன்னிப்பு கேட்டுக்கிட்டு, நல்ல காரியம் தான பண்ணிருக்கீங்க. நல்ல வேளை இந்தப் பொண்ணு அந்தப் பயலுட்ட சிக்கல” என ராதாவிற்காக மகிழ்ந்தாலும், தன் மகன் வருத்திய அந்தப் பெண்ணுக்காகவும் வருந்தினார்.

“அப்போ… நான் கிளம்புறேன்ங்க” எனக் கிளம்பியவனிடம், ராதாவைப் பார்த்து விட்டு செல்லும் படி கூற, “பார்க்குறேன் மா” என வெளியேறியவன், அவளுக்காக இல்லையென்றாலும் பாட்டிக்காக வேணும் சென்று பார்க்க வேண்டும் என எண்ணியவன் அதைச் செயல்படுத்தினான்.

ஆனால் பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டது எனக் கூறிய செவிலியரிடம் சில பொய்களைக் கூறி, கெஞ்சி பார்க்க அனுமதி பெற்றான். பாட்டியை சென்று பார்த்தவன், அங்கு பணியில் இருந்த செவிலியரிடம் ராதா பற்றி கேட்க, அவள் கான்டீன் சென்றிருப்பதாகக் கூற, அவளைப் பார்க்கும் தைரியமின்றி வீடு வந்து சேர்ந்தான்.

ஏனோ அன்று அவ்வாறு பாராமல் சென்றவன் இன்று சிறிது தன் மனதை கொஞ்சம் தயார்படுத்தி, நடைமுறைகளை ஒத்திகைப் பார்த்து, ப்ளான் ஏ ப்ளான் பி என திட்டம் தீட்டியே அவளைக் காண வந்தான்.

ஆனால் எந்தத் திட்டமும் அவளின் திடத்தின் முன் நிற்காது எனத் தெரிந்து கொள்ளும் நேரம் வெகு சீக்கிரமே வரும் என அவனே எதிர்பார்க்கவில்லை.

“இத்தனை நாளும் பெத்த பிள்ளைக்காக தான் பல்லைக் கடிச்சுக்கிட்டு, அந்த மனுஷன் கூட குப்ப கொட்டுனேன். இத்தன நாளும் அம்மாக்கு பாரமாகிடக் கூடாதுன்னு நினைச்சு வராம இல்ல.

ஏற்கனவே அண்ணா வாழ்க்கையும் சரியா இல்லாம… அப்புறம் அதுவும் இல்லாம போயிடுச்சு. இதுல நானும் அங்கிருந்து வந்துட்டா, என் வாழ்க்கையும் இப்படி பாதியிலேயே பட்டுப் போச்சேன்னு நினச்சு மனச விட்டுடும்”

மேலும் “அப்போ அப்போ சொல்லும், மாப்பிள்ள எப்படி இருந்தாலும் கொஞ்சம் அனுசரிச்சு இருந்திடு சாமி, அப்படிங்கும். நீயும் வாழாம வந்துட்டேன்னா… பிள்ளைக்கும் வாழ தெரில, பொண்ணுக்கும் வாழ தெரில…

என்ன வளர்த்திருக்கா ஆத்தான்னு, என்ன தான் காரி துப்புவாக ஊருசனம். இதுக்கு தான் ஒத்தை ஆளா இருந்து கஷ்டப்பட்டேனான்னு கேக்கும்” எனத் தன் தாயின் கஷ்டத்தை உணர்ந்த மகளாய், மேலும் அவரை நோகடிக்க விரும்பாத ஒரு தியாகியாய் தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று உணர்ந்தாள்.

ஏனெனில் இவளே சமயத்தில் நினைப்பது உண்டு. எதற்கெடுத்தாலும் குத்தல் பேச்சுக்களும், ஜாடைமாடை ஒப்புவமையும் சொல்லும் அந்தக் காட்டானோடு, எப்படி தான் இந்த அத்தை வாழ்கிறதோ? நானாக இருந்தால், ‘போடா நீயுமாச்சு… உன் தாலியுமாச்சு’ என மூஞ்சியில் வீசிவிட்டு வந்திருப்பேன் என நினைத்திருக்கிறாள் தான்.

ஆனால் அவரின் அமைதிக்கு பின், இவ்வளவு அர்த்தங்கள் புதைந்து இருக்கும் என நினைக்கவில்லை. “இப்போ எல்லாம் ஆச்சு… பெத்தெடுத்தவன தோளுக்கு மேல தேத்தியும் விட்டாச்சு. அப்போ முறிச்சுக்கிட்டு வந்து நின்றிருந்தா…

கட்டிக்கிட்டவனோடு வாழாம… குமரி எவன கணக்கு பண்ணி வச்சு, வெட்டிக்கிட்டு வந்து நிக்காளோ?ன்னு நல்லா பேசும்.

உல வாய அடச்சாலும், ஊர் வாய அடைக்க முடியாது தாயி. நம்மூருக்கு அப்போ, அவ்வளவு தான் அறிவும் இருந்துச்சு” என அந்த காலத்திய சமூகத்தின் பிம்பத்தை அவர் கண்களிலேயே கண்டாள்.

“இனி அம்மா கூடவே அவங்களுக்கு துணையா இருந்திடுறேன். நீ போய் உன் வாழ்க்கைய பாரு. இப்போ அதான் முக்கியம்” என தன் முடிவை இயம்பினார்.

“இல்ல அத்த, மாமா… அவரு இப்போ…” என ஏதோ சொல்ல வந்தவளை, “இனிமேயும் அந்த மனுஷன் கூட வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறேன்? சின்ன வயசுல… பச்ச மண்ணு உன்ட்ட கூட ஒட்ட விடமாட்டான்” என்றவரின் கோபம் கணவனின் மீதுள்ள மரியாதையை கீழிறக்கியது.

“சரி சரி அப்புறம் பேசிக்கலாம், தம்பி வருது” என்று பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்தார்.

“ராதா, டாக்டர்ட்ட கேட்டுட்டேன். ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டார். வேற எதுவும் கம்ப்ளைன்ட்னா வர சொன்னார்” எனச் சுருக்கமாய் முடித்தவன், “சின்னம்மா… எதுவும் திங்க்ஸ் இருந்தா கொடுங்க, இப்போ கொண்டு போய் வீட்டுல வச்சிடலாம், அப்புறம் பாட்டிமா கூப்பிட்டு வரும் போது கொஞ்சம் சிரமம் இல்லாம இருக்கும்” என பேக் செய்ய துவங்கினான்.

‘எப்படி இவனால் சட்டென ஒட்ட முடிகிறது? ஒரு வேளை இவ்வாறெல்லாம் செய்தால் அவனிடம் மயங்கி விடுவேன் என்ற நினைப்போ?’ என்ற தன் சந்தேகப் புத்தியை பிரயோகித்தாள்.

புவனி கொடுத்த பொருட்களோடு ராதாவையும் அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மதியம் சமையலுக்கு ராதாவிற்கு காய்கறி நறுக்க உதவ முன் வந்தவனை, ஒரு மார்க்கமாய் பார்த்தவள், “என்ன கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?” என நேரிடையாய் கேட்டே விட்டாள்.

அதற்கு அவனோ ஏதோ ஹாசியத்தைக் கேட்டவன் போன்று “ஹா ஹா…” என வாய் விட்டு சத்தத்தோடு சிரித்தான்.

முதலில் அவளுக்கோ இதற்கு ஏன் சிரிக்கிறான் எனக் குழம்பியவள், அவனின் சிரிப்பு மேலும் தொடரவும், அவளின் குழப்பம் கோபமாய் உச்சம் அடைய, “ஏய்!!! ஏன் சிரிக்குறீங்க?” எனப் பல்லைக் கடித்தாள்.

அவனோ சிரிப்போடே, மூச்சு வாங்கியபடி, “இல்ல… ஹா… உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்திருக்கியா?” என சம்மந்தமில்லாமல் பதில் வினா எழுப்பினான்.

அவனின் கேள்வியில் மேலும் புரியாமல் விழித்தவளிடம் “இல்ல… கரெக்ட் பண்ற அளவுக்கு உன் மூஞ்சி வொர்த்தான்னு யோசிச்சேன், சிரிப்பு வந்திருச்சு” என அவளின் வதனத்தை வதங்க வைத்தான் ராம்.

 

தூறல் தூறும்…