தூறல் போடும் நேரம் – 4
தூறல் போடும் நேரம் – 4
பகுதி – 4
ஆனால் நேரம் கரைந்ததே தவிர, அவளால் மனதை ஒருமுகப்படுத்தி கற்பனைகளை கவி வடிவில் எழுத்துக்களால் வடிக்க முடியவில்லை. ‘என்னடா! இன்று வந்த சோதனை… சரி எடுத்து வைத்து தூங்கலாம்’ எண்ணியவள், அதை செயல்படுத்தியவளாய் கட்டிலில் படுத்து கண்ணை மூடினாள்.
ஆனால் மூடிய கண்ணுக்குள் களிகாலமாகிப் போச்சு என்ற வசனத்தோடு அவளது பாட்டி தோன்றினார். ‘கலிகாலம் என்பது இப்போது தான் ஆரம்பிக்கிறதா?… அதான் எப்பொழுதோ தோன்றி விட்டதே… என் சிறுவயதிலேயே… எடுத்துக்காட்டாய்… நம் குடும்பத்திலேயே’ ஒரு கசந்தப் புன்னகையோடு எண்ணியவள், அதனைத் தொடர்ந்த எண்ணங்கள் வரிசையாய் அணிவகுத்து அவளின் மனதிற்குள் புகுந்து, மண்டைக்குள் சண்டித்தனம் செய்ய, தலை வலிப்பது போல் உணர்ந்தாள்.
சட்டெனக் கண்ணைத் திறந்தவள், எழுந்தமர்ந்து, மேஜை மீதிருந்த நீர் குவளையை எடுத்து அருந்தினாள். சற்றே ஆசுவாசப்பட்டது போல் தோன்றினாலும், ஏதோ ஒரு இறுக்கமான உணர்வு ஏற்பட, சிறிது நேரம் இயற்கைக் காற்றை வாங்கினால் தேவலாம் என்றெண்ணி அவள் அறையின் வலப்பக்க முடிவில் இருக்கும் மேல் மாடிக்கு சென்றாள்.
செட்டிநாட்டு கட்டிடம் என்பதால், இவள் இருக்கும் மாடிப் பகுதி முழுவதும் செவ்வக வடிவில், சுற்று பாதையோடு, நடுவில் எட்டிப்பார்த்தால், கீழே வீட்டின் முற்றமும், நடுவில் இருப்பக்க மாடி அறைகளும், மேல் மாடியின் எதிர் எதிர் திசையில் நின்று பார்த்தால் தெரியும்படி, திறந்தவெளியாய் இந்தப் பின்பக்க மொட்டைமாடி அமைந்திருக்கும்.
மேலும் இந்த மாடியின் முன்பக்கம், முழுவதும் திறந்தவெளி இல்லாமல், மூடாக்கு போட்டவாறு அரண்மனைகளிலும், கோவில்களிலும் கட்டப்படும் வளைந்த கூரை போல், கூம்பு வடிவில் சற்று அகலமாய் கோபுரம் போன்று அமைக்கப்பட்டிருந்தது.
இதை செட்டிநாட்டின் இரண்டு கட்டு வீடு என்று சொல்வார்கள். அதையே கொஞ்சம் சிறியதாக இருந்த இடத்தில் இவர்கள் கட்டி இருந்தார்கள்.
திறந்தவெளியான பின் மாடி முழுவதும் ஒரு சுற்று நடந்து வந்தவள், முன்பக்க மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சிறிது களைப்பை உணரவும், அங்கிருந்தக் கோபுரத்தின் சரிவில், ஒற்றைக் காலை ஊன்றி சாய்ந்து நின்றவாக்கிலேயே படுத்தாள்.
ஏற்கனவே கோபுரத்தின் மறுபக்கம் படுத்திருந்தான் அவன். வானத்து விண்மீன்களைக் கூர்மையாய் கண்டு எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தான். பின், வந்து நெடுநேரம் ஆனதை உணர்ந்தவனாய் எழுந்து கீழே செல்வதற்கு நடந்தான்.
அப்போது தான் இருட்டில், தன்னைப் போலவே வேறு யாரோ கோபுரத்தின் மீது படுத்திருப்பது தெரிய, அது யாரென அறிய அருகே சென்றான். அப்படி அருகில் செல்கையில் தான், நீளக் கூந்தல் அசைவினால், அது ஒரு பெண் என்பதை அறிந்து மேலும் நெருங்கினான்.
ராதா, தன் வலக்கையின் கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் சேர்த்து இருகண்களும், மூக்கும் சந்திக்கும் இடத்தை, கண்களை மூடியவாறு அழுத்தம் கொடுத்து கொண்டிருந்தாள்.
அப்படியே அழுத்தி அழுத்தி மூக்கு வரை கொண்டு சென்றாள், மீண்டும் மூக்கிலிருந்து அந்த முச்சந்திக்கு அழுத்தத்தை மேலேற்றினாள்.
மேலும் இடது கையை தூக்கி தலைக்கு மேல், கோபுரத்தைப் பிடித்திருப்பது போல் வைத்திருந்தாள்.
அவளின் அந்த நிலை, கடலில் நீந்திக் களைப்புற்றதால், பாறையின் மீது படுத்து ஓய்வெடுக்கும் கடற்கன்னியாய் அவனுக்கு தெரிந்தாள்.
உள்ளுணர்வின் எச்சரிக்கையால், சட்டென விழித்த ராதையிடம், “அதுக்குள்ள மூக்கு ஷார்ப்பாகிடுச்சா?” என வினவினான்.
கேள்விக் கேட்டவனையே கேள்வியாகப் பார்த்தவளிடம், அவளைப் போலவே மூக்கை அழுத்திக் காட்டவும், மூடிய இதழ்களுக்குள்ளேயே சிரித்தவாறு எழுந்து நின்றாள்.
“என்ன தூக்கம் வரலையா?” என அவன் கேட்க, ஆம் என பதில் அளித்தால், அதனைத் தொடர்ந்து ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற காரணத்தினால், “அதுக்குள்ள… நீங்க வந்துட்டீங்களா? கிரேட்… குட் ஸ்டாமினா” என வியப்பை அவன் மீது கொட்டினாள்.
இந்த முறை குழம்புவது அவன் என்றாலும், சிறிது நொடியிலேயே அவளின் கூற்றைப் புரிந்தவன், ஏனோ அவள் வழியிலேயே பேச ஆரம்பித்தான்.
“ம்ம்… என் ஸ்டாமினா குட் தான். ஏன்? சந்தேகமா?” என சோம்பலாய் இரு கைகளையும் உயர்த்தி, உடம்பை முறுக்கினான்.
“இல்ல… இவ்ளோ சீக்கிரம்…” எனப் புருவம் உயர்த்தினாள்.
“எல்லாத்துக்கும் ஒரு நேரம்… காலம் தானே… இதுல உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆச்சரியம். யூ வானா ட்ரை மீ…” என அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான்.
“வாட்..?” என மீண்டும் புருவம் சுருக்கியவள், நொடியில் “இப் ஐ நீட்… வில் ஷ்யூர்லி டெல் யு” என அவனை உறைய வைத்து விட்டு சென்றாள் அவள்.
இருவரின் சம்பாஷணையிலும் ஏதோ பதிலுக்கு உரைக்க வேண்டுமென்ற முனைப்பு இருந்ததே தவிர, அவர்கள் பேசிய பாடத்தின் மீது ஈர்ப்போ இல்லை அக்கறை இருந்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
‘இரவு அவ்வாறு பேசி விட்டு, இப்போது சிறுகுழந்தையாய் சுந்தரிடம் சொல்லி கேட்கும் பாட்டைப் பார்த்தால்… இல்லை இல்லை கேட்டால்…’ என நினைத்தவன், அதற்கானப் பதிலை, அவனே தன் இதழ்களில் சிரிப்பாய் சிந்தி விட்டு சென்றான்.
ஆம், அவள் சுந்தரித்திடம் போட சொல்லி கொடுத்த பாடல்கள் தான் தற்போது ஓடிக் கொண்டிருந்தது. முதலில் “கற்பூர நாயகியே கனகவல்லி…” என அம்மன் பாடல்களில் ஆரம்பித்து, “அடி என்னடி ராக்கம்மா… பல்லாக்கு நெளிப்பில்… என் நெஞ்சு குலுங்குதடி…” ஓடிக் கொண்டிருந்தது.
அன்று பார்த்து அருணாசலம் கூட எதுவும் கூறவில்லை, எப்படிக் கூறுவார்? இதெல்லாம் அவர்கள் காலத்து பாடல்கள் அல்லவா?
அது உண்மை தான் என்று உறுதி படுத்துவது போல், அடுத்து வந்த பாடலில் ஒலிச்சித்திரத்தை மட்டும் கேட்காமல், ஒளிச்சித்திரத்தையும் காண நேர்ந்தது. வீட்டில் உள்ள அனைவரும் பாடல்களைக் கேட்ட வண்ணம், தத்தமது வேலைகளைச் செய்ய, இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் நாதஸ்வர இசையிலேயே எல்லோரும் லயித்து போயினர்.
அதன் தொடர்ச்சியாய்,
‘ஆகாயப் பந்தலிலே… பொன்னுஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா… உள்ளம் அங்கே ஓடுதம்மா…’ என சரணம் ஆரம்பிக்க, அங்கு வளவு பகுதிக்கு எதற்கோ வந்த வெங்கடாசலம் தன் மனைவியைக் கண்களால் தேட, அவரோ இவரின் குரலைக் கேட்ட நிமிடமே, செய்த வேலையை விட்டுவிட்டு, அவரை நோக்கி வந்தார்.
வந்தவரின் பார்வை மாற்றத்தை உணர்ந்த வள்ளியம்மை, இடுப்பில் ஒரு கொங்கை இறுக்கி சொருகிய தன் முந்தானையை, முதுகுக்கு பின்னே இருந்து எடுத்து தன் தோள்களில் போர்த்தியவாறு, அவரின் கண்ணுக்கு பட்டும் படாமலும் வெட்கத்தோடு, தன்னைத் தூணின் பின்னே மறைத்து கொண்டார்.
தான் வந்து கொண்டிருந்த பாதையில் இருந்த தூணின் அருகே வெங்கடாசலமும் தேங்கி விட… ஒரு கையால் அந்த தூணையே அணைத்தப்படி தன் மனைவியை, யாரும் அறியா வண்ணம் காதலோடு நோக்கி, தங்களின் இளமைக் காலத்திற்கு சென்று விட, வள்ளியம்மையும் அவர் பின்னேயே சென்று விட்டார்.
ஆனால் இருவரை தவிர, இதனை யாரும் காணாமல், அவரவர்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். முதலில் பெரியவர் வந்தாலே உமையம்மை நேரில் வர மாட்டார். அதனால் அடுப்படியில் அவர் தன் வேலையைத் தொடர, அவருக்கு உதவியாய் இருந்த உதயாவும், உமையாளும் அவ்வண்ணமே உள்ளே பலகார வேலையில் மும்முரமாய் இருந்தனர்.
ஆனால், மாடியின் தாழ்வாரத்தில் அலைபேசியை நோண்டிக் கொண்டு நின்றிருந்த அழகேசன், தன் பெரிய மாமனாரின் குரலில் உந்தப்பட்டு… கவனம் சிதறப்பட்டு… அவரை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினான்.
அதிசயத்தில் அதிசயமாய் தன் பெரிய மாமியார் வெட்கப்படுவதைக் கண்டவன் ‘இங்கு என்ன நடக்கிறது?’ என்றெண்ணி, அவரின் திடீர் வெட்கத்தின் காரணத்தை நோக்கி, மாமியாரின் பார்வை வழியே சென்றான்.
அவரின் பார்வை வெங்கடாசலத்திடம் நிற்க, பின்னேயே வந்த அவனின் பார்வையும் நிற்க, ‘என்ன இது ரெண்டு பேரும் ஏன் இப்படி பார்த்துக்கிறாங்க?’ என்று தன் துப்பறியும் மூளையை தட்டி விட்டான்.
அப்போது தான்
‘பூச்சூடி… புது பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா…’ என்ற பாடல் வரிகள் அவன் செவி வழியே மூளைக்குள் சென்று மின்சாரத்தை உற்பத்தி செய்தது.
‘ஓ! காதல் பண்றாங்களா காதல்… அட இன்லாக்களா… நானே இன்னும் அங்க போகலையே’ என தனக்குள் முனுமுனுத்தவன், மேலும் பாடல் வரிக்கு ஏற்ப இருவரின் முக பாவத்தையும், மேசைப் பந்தாட்டத்தைப் பார்ப்பவன் போல் இங்கும் அங்கும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது வீட்டிற்குள் ஏதோ வேலையாய் வந்த சுந்தரம், இருவரையும் பார்த்து பொங்கி விட்டான். “யம்மோவ்…” எனச் சிறிது சத்தமாய் அழைத்தான்.
அதில் சந்தோசப்பட்ட அழகேசன், “நல்லவேள… காதல் முத்துறதுக்குள்ள வில்லன் என்ட்ரி கொடுத்துட்டான்’ எனத் தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், மேலும் “அப்பச்சி… உங்கள சின்னப்பச்சி கூப்ப்பிடுறார்” என இருவரையும் கலைத்து விட்ட சுந்தரத்தை, “வெரி குட் டா என் வெல்லக்கட்டி” என அங்கிருந்தவாறே மச்சானை மெச்சினான்.
யம்மோவ் என்று சுந்தரம் விளித்ததிலேயே, கனவுலகில் இருந்து விழித்து கொண்ட இருவரும் சட்டென சுதாரித்தனர். முதலில் வள்ளியம்மை இடத்தை காலி செய்ய, வெங்கடாசலம் என்ன சொல்லி சமாளிப்பது எனச் சங்கடப்பட்டு நிற்கும் போதே ஆபத்பாந்தவனாய் அவனே அவரையும் அனுப்பி விட்டான்.
‘நாமளே இங்க பொண்டாட்டி பக்கத்துல இல்லையேன்னு கடுப்புல சுத்திட்டு இருந்தா…” என அவன் முடிக்கக் கூட இல்லை, “சேம் ப்ளட் மாப்பிள்ள. நல்ல வேள ரெண்டு பேரும் டூயட் பாடுறதுக்குள்ள வந்து சேர்ந்த” என அழகேசன் மேலிருந்து கூறினான்.
அழகேசனின் கூற்றால், நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணில், அழகேசனுக்கு பக்கவாட்டில் சிறிது தள்ளி, உமையாளின் குழந்தைகளோடு நின்றிருந்த ராதாவும் சேர்ந்து பட்டாள்.
என்ன தான் தாய் தந்தை மீது கடுப்பைக் கொட்டினாலும், அதை விருந்தினளான ராதா கண்டு விட்டதால், சற்று மௌனமாகி விட்டான். மேலும் அழகேசனுக்கு கண்களால் ஜாடைக் காட்டினான்.
ஆனால், காலையில் அவனுக்கு டீத்தண்ணியைகொடுத்த உதயாவை, அதன் பின் இதோ மதிய பொழுதாயிற்று, இன்னும் பார்க்க நேரவில்லை அழகேசன். அந்தக் கடுப்பு தான் இப்போது வெடித்து கொண்டிருந்தது.
மேலும் சுந்தரத்தின் ஜாடையை உணராமல், “பிள்ள இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்ட கதையாள இருக்கு மாப்பு… உங்க வீட்டுல” எனக் கூறியவாறே எதார்த்தமாய் திரும்புவதற்கும், ராதா கண்ணில் படுவதற்கும் சரியாய் இருந்தது.
‘அடியாத்தி… இது எப்போ இருந்து பார்க்குதுன்னு தெரிலையே… சும்மாவே குடும்பத்துல நாம ஒன்னு சொன்னா குமுறுவானுங்க… இப்போ இந்தப் புள்ள எதுக்க சொல்லிட்டோமே! முந்தியாவது ஒருத்தன் தான் இருப்பான். இப்போ அண்ணனும் தம்பியும் கச்சேரி பண்ணாம விட மாட்டாங்களே’ என மனதுக்குள் எண்ணும் போதே, “ஏன் இரண்டு பேரும் இப்படி பண்றீங்க? ஏன் வயசான லவ் பண்ணக் கூடாதா? நாளைக்கு நீங்களும் அவங்க வயசுக்கு போவீங்க, அப்போ உங்க வைஃப்ப லவ் பண்ண மாட்டீங்களா? ஏன் அழகேசன் அண்ணா நீங்க பண்ண மாட்டீங்களா?” என பெரியவர்களைக் கலைத்த ஆதங்கத்தில் அவர்களைக் கேள்விகளால் தாக்கினாள்.
“அத ஏன்மா… என்ன பார்த்து குறிப்பா கேட்குற? அவனும் தான…” என கேட்டுக்கொண்டே கீழே பார்க்க, சுந்தரம் அவ்விடத்தில் இல்லை. ‘அடப்பாவிகளா! எல்லார்கிட்டயும் சிக்குறது நான் தானா’ என எண்ணியவன், “தப்பு தான்மா… தப்பு தான்… என்ன மன்னிச்சிரு… நடந்த விசயத்த உதயாட்ட சொல்லிடாத” என மன்னிப்பால் ஒரு உதவியும் கோரினான்.
ராதாவோ ஒரு புன்னகையால் விலகி சென்றாள்.
மீண்டும் தூறும்…