அன்பின் மொ(வி)ழியில் – 16.
இரு மனங்களின் இணைவுக்காக நடக்கும் திருமணம் நடைபெறும் நாளாக இன்று அமைந்தது கயலுக்கு, ராமிற்கும்.
ராமின் மனது முழுவதும் காதலுடன் அதை எதிர்பார்த்தான் என்றால், கயல் மனம் நிறைந்த நம்பிக்கையுடன் திருமணத்தை எதிர் நோக்கினாள்.
செல்வம் கட்டிலில் கன்னத்தில் கை வைத்தவாறு சோகமே வடிவாக, அமைதியாக அமர்ந்திருந்தான்.
பாவம் அவனும் தான் என்ன செய்வான், காலையில் இருந்து கல்யாண மாப்பிள்ளையான, ராம் செய்யும் அலும்புகள் அப்படி.
பத்து மணிக்கு தான் முகூர்த்தம் அதற்கு மூன்று மணிக்கு ஆளுக்கு முந்தி எழுந்ததும் இல்லாமல், நிம்மதியாக ரமியுடன் கனவில் கடலை வறுத்து கொண்டு இருந்தவனையும் எழுப்பி விட்டு, ஐந்து மணி நேரமாக ரெடி ஆகி கொண்டிருக்கும் ராமை கண்டு பல்லை கடித்தவன்.
செல்வம் – “ஏலே, கிறுக்காலே புடிச்சுருக்கு, உனக்குதாமுலே இன்னைக்கி கல்யாணம் அதுக்கு என்னைய ஏன்டா படுத்துற?, அதுலயும் கல்யாணத்துக்கு கருக்கலுல எழுந்தா குத்தமில்லலே, ஒரு ஆர்வ கோளாறுன்னு சொல்லலாம், நீ என்னன்னா சாமத்தில எழுந்து சண்டித்தனம் பண்ணுற” என்றான் கடுப்பாக.
ராம் – “பொறாமை புடிச்சவன்லே நீ, இன்னக்கி நான் கல்யாணத்துல பாக்க அழகா இருக்க வேணாமாலே, பக்கி மாதிரியா வர முடியும்” என்றவன், ஏழாவது முறையாக உடையை மாற்றினான்.
“அழக பத்தி யோசிக்க நீ என்ன என்னைய மாதிரி கருப்பு சிங்கமாவா இருக்க, என் மாமன் தான் உங்க இரண்டு பேரையும் நல்ல வெள்ளை காக்கா மாதிரி கலரா இல்ல பெத்திருக்காரு” என்றான் செல்வம் தன் மாமன் மகனை பார்த்து நக்கலாக.
தன் அத்தை மகனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட கிண்டலை உணர்ந்தவன், “யார பார்த்துலே வெள்ளை காக்கான்னு சொல்லுறே” என்றவன் சிலிர்த்து கொண்டு சிங்கமென, கட்டிலில் அமர்ந்திருந்தவன் மீது பாய்ந்தான்.
ராம் தன் மேல் விழுவதற்குள் சுதாரித்துக் கொண்டு நகர்ந்த செல்வம்.
“இன்னைக்கு ரவக்கி அறைக்குள்ள செய்ய வேண்டியத, மறந்து இப்போ என் கிட்ட போய் உன் பாய்ச்சலை காட்டுற, அதுக்கு தானே என் தங்கச்சிய கட்டி கொடுக்க போறோம், மச்சான் உன் வீரத்தை பொறவு கயலுக்கு காட்டு” என்றவன் கிடைத்த இடைவெளியில் ராம் சுதாரிக்கும் முன் அறையில் இருந்து வெளியே வந்து விட்டான்.
முகம் முழுவதும் புன்னகையுடன் வந்தவன் வசமாக சுசிலாவின் கையில் மாட்டிக் கொண்டான்.
செல்வம் பேச எந்த வித சந்தர்ப்பமும் கொடுக்காமல், “கல்யாண வேலை தலைக்கு மேல கடக்கு, அத பாக்காம, காலை வெயிலு கண்ணுல படுற வரையுமா தூக்கம் வேண்டியது இருக்கா உனக்கு, அந்த புள்ளைக்கு அண்ணா வா இருந்து செய்ய வேண்டியத செய்யுலே” என்றவர், சிறிது நேரம் அவனை வறுத்து எடுத்து விட்டே சென்றார்.
பாவம் செல்வம், ராம் செய்த கொடுமையில் தூங்கவே செய்யாதவன், அன்னை சொன்ன வார்த்தைகளில் நொந்து போய், எதையும் சொல்ல முடியாமல் ராமை மனதிற்குள் மானசீகமாக நறுக்கென்று நான்கு ஐந்து முறை கொட்டிய பிறகே அவன் மனம் திருப்தி பட்டது.
செல்வம் – ‘ஊருக்குள்ள ஏழு, எட்டு கூட்டாளி வச்சுருக்கவன் எல்லாம் நிம்மதியா, சும்மா ஜகஜோதியா இருக்கான், இவன் ஒருத்தனை வச்சு நான் படுற பாடு இருக்கே அய்யய்யய்யோ ஸ்ஸ் முடியல’ என்று புலம்பியவாறு தன் தாய் சொன்ன வேலைகளை செய்ய சென்றான்.
*************************
அந்த பெரிய அறையில், கலை நயம் வாய்ந்த நிலைக் கண்ணாடியின் எதிரில் அமர்ந்திருந்தவள்.
தன் பெயருக்கு ஏற்றது போல் அமைந்திருந்த அந்த அழகிய பெரிய விழிகளில் மையிட்டு, பொன்னியின் வற்புறுத்தலின் காரணமாக அவளிடம் தன்னை ஒப்படைத்தாள் கயல்விழி.
பொன்னி கிராமத்து பெண்ணாக இருந்தாலும், தன்னை அழகு படுத்த விரும்பாத பெண்ணே இல்லை அல்லவா, தனது திறமை அத்தனையையும் கயலிடம் காட்டி விட்டு நிமிர்ந்தவள் ஒரு நொடி திகைத்து போய் விட்டாள்.
தான் செய்த எளிமையான ஒப்பனையில், அமைதியான அந்த மலர் முகத்தில் இருந்த அந்த அகன்ற மீன் போன்ற விழிகள் அவளின் அழகை பன்மடங்காக மாற்றியிருக்க, தன் அழகு என்ற கர்வம் இல்லாத அவளின் அமைதி கயலை பேரழகியாக காட்டியது.
அதிலும் அவளது வதனம், அம்மம்மா!.. வேந்தனின் குடும்ப வழக்க படி, அரக்கு சிவப்பில் தங்க நிற கொடி திராசை, அந்த திருமண பட்டு புடவை முழுதும் படர்ந்திருக்க அதன் பூக்களில், காய்களில், கனிகளில் அழகிய பல வண்ண கற்கள் பதித்திருந்த அந்த சேலை பந்தமாக, கயலின் உடலை தழுவியிருக்க.
தன் அன்னை வள்ளி நெருக்க தொடுத்திருந்த மல்லிகை சாரம் தோள்களில் இரு புறமும் சார்ந்திருக்க, கூந்தலில் ஒவ்வொரு பின்னல் முடிச்சிற்கும் வேந்தனின் அன்னை பயன்படுத்திய தங்கத்தில் உருவாக்க பட்ட மலர்கள் பொருத்தப் பட்டு, பரம்பரை பரம்பரையாக உள்ள குடும்ப நகைகளை அணிந்து, மணப் பெண்ணவளோ மாநிறத்தில் கோவில் சிற்பம் எழுந்து வந்தது போல் உடல் வாகுடன் தோற்றம் அளிப்பதை கண்ட பொன்னி.
தன்னை மறந்து கயலின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு “அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க, அதுலயும் உங்க பெரிய கண்ணு மை தீட்டின அப்புறம் அருமையா இருக்கு ” என்றவள், தன்னுடைய கண்களில் இருந்த மையினை எடுத்து கயலின் காதுகளின் ஓரம் கண்படாமல் இருக்க வைத்து விட்டாள்.
பொன்னியின் செயலில் முகம் சிவந்தவள், “சும்மா சொல்லாத பொன்னி நான் கலரு கம்மியா தான் இருக்கேன், என்னைய விட நீ தான் அழகா இருக்க” என்றவளின் வாரத்தைகளில் கயலுக்கு தன்னுடைய அழகு பற்றி உள்ள அறியாமையை உணர்ந்து புன்னகைத்தவள், மறுப்பாக தலையசைத்து, “எங்க மச்சான் உங்களை பார்த்து மயங்க போறாரு” என்றாள்.
பின் தன் அன்னை சொன்ன நேரத்தில் பொன்னி, கயலை அழைத்துக் கொண்டு வெளியில் வந்த போது, சரியாக எதிர்புறம் இரு அறைகள் தள்ளி, கயலின் புடவைக்கு பொருத்தமாக சட்டையும் பட்டு வேஷ்டியும் அணிந்து கழுத்தில் இருந்த மெல்லிய தங்க சங்கிலி அவனின் சட்டையில் இருந்து சிறிதாக வெளியே தெரிய அடர்த்தியான முடியினை கைகளை கொண்டு கோதியவாறு, விஷ்ணுவுடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த ராம், திருமணத்திற்கான அலங்காரத்துடன் உலகில் உள்ள அழகை எல்லாம் தன்னில் புதைத்து கொண்டது போல, சற்று முன் பொன்னியின் செயலால் வெக்க சிவப்புடன் நடந்து வந்தவளை கண்டு இமைக்க மறந்து, கிரேக்க சிலை என நின்று விட்டான்.
கயல், ராமை கவனிக்கவில்லை, தன் தலையை குனிந்தவாறு பொன்னியின் கைகளைப் பற்றி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவள் கவனிக்காதது ராமிற்கு மிகவும் வசதியாக போய் விட்டது, அவனின் கூர்மையான விழிகள், தன் மனதை ஆளும் பெண்ணவளை அணு அணுவாக ரசிக்க, தன் கைகளை கட்டி கொண்டு இருந்த இடத்தை விட்டு நகராமல் அமைதியாக அவனின் அறையின் வாசலில் சாய்ந்து நின்று விட்டான்.
விஷ்ணு – தன் மாமன் மகனின் நடவடிக்கையை கண்டவன் மெல்லிய சிரிப்புடன், “மச்சான் செத்த நேரம், உன் வாட்டர் பால்ஸ் ஆஹ் மடைய கட்டி நிறுத்து, பொன்னி, கயலை கூட்டி போய் பத்து நிமிஷம் ஆச்சு, நீ வானத்தில் இருந்து இறங்குனா, நாம இப்ப படியிறங்கலாம்” என்றான் நக்கலாக, நானும் செல்வத்திற்கு சளைத்தவன் அல்ல கிண்டலில் என்பதை போல.
ராமிற்கு விஷ்ணுவின் வார்த்தைகளில் முகம் சிவந்து விட்டது வெட்கத்தால்.
பெண்களுக்கு மட்டும் சொந்தமா அது, ராமை போல் ஒருவனின் முக சிவப்பு அத்துணை அழகாக இருந்தது.
செல்வம், ராஜ் இருவரும் சிறிய இரட்டையர்களை(ரவி, ஆதி) அழைத்துக் கொண்டு முதலே திருமணம் நடக்கும் இடம் சென்றிருக்க
மணமக்கள் கீழே வந்தவுடன் பெண்ணை அழைத்துக் கொண்டு ராமின் அத்தைகள், மாமா, ரமி, பொன்னி எல்லோரும் இரண்டு காரில் முதலில் கிளம்பி விட, பின்னர் ஜாஸ் தன் மக்களை, கிளப்பிக் கொண்டு கோவிலுக்கு சென்றார்.
*************************
பூம்பொழில் மக்களுக்கு அன்றைய தினம் மிகுந்த குதூகலமாகவும், கொண்டாட்டமாகவும் தொடங்கியது.
நேற்று ராஜ் வில்லியம்ஸ், அந்த ஊரை சேர்ந்த அனைவருக்கும், தங்கள் குடும்ப திருமணத்திற்கு ஜாஸ்ஸின் சார்பாக, புது ஆடைகள் கொடுத்து மணவிழாவிற்கு அழைப்பு விடுத்து வந்திருந்தான்.
தங்கள் மன்னன் என்று போற்றிய ஒருவரின், மைந்தனின் கல்யாணம் அவர்கள் இடத்தில் நடப்பதில், கள்ளம் கபடம் அறியாத தூய உள்ளம் கொண்ட மலைசாதி மக்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.
அத்துடன் இவ்வளவு நாள் மலைகுடில் மூலமாக அனைத்து விதமான உதவியும், அதே நேரத்தில் தங்களை மரியாதையாக நடத்தும் அவர்களுள் ஒருவராக கடந்த ஆறு வருட காலம் வாழ்ந்து வந்த கயலுடன் என்பது அவர்களுக்கு கூடுதல் மகிழ்வு.
ஆதி, ரவி இருவரும் பிறந்தது முதல் அப்பகுதி மக்களுக்கு செல்ல பிள்ளைகள் அல்லவா!..
அன்னை வந்த அன்றே அவர்கள் வழக்கப்படி, தேன், திணை, மற்றும் மலையில் அவர்கள் உருவாக்கிய பழங்களை கொண்டு சென்று மிகவும் மரியாதையாக ஜாஸ்ஸை பார்த்தவர்கள்,
அழகாக அவர்களின் அன்பினை உணர்த்தினார்கள்.
அரசியின் கம்பீரத்துடனும், அதே சமயம் அன்னையின் அன்புடனும் அவர்களிடம் என்றும் போல, தற்போதும் நடந்து கொள்ளும் ஜாஸ், அம்மலை பகுதியில் உள்ள மக்கள் மனதில் எப்போதும் ராணி தான்.
பிள்ளைகள் இருவரும் ராஜின் அருகில் விளையாடி கொண்டிருக்க, அவர்களின் அருகில் வந்து நின்றது அந்த விலையுயர்ந்த வெளிநாடு கார்.
காரில் இருந்து இறங்கிய அவர்களின் அம்முவை கண்டு, கயலின் அருகில் வந்தவர்கள் பார்வை அன்னையை அதிசயமாக நோக்கியது.
கயல் எப்பொழுதும் உடையை அசங்களாக உடுத்தியது இல்லை என்றாலும், இதனை ஆடம்பரமாக எப்போதும் அணிந்ததில்லை, எளிமையாக, அதே நேரத்தில் அவள் செய்யும் பணிக்கு ஏற்றவாறு உடுத்திக் கொள்வாள்.
எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஆதி, எதையும் சொல்லாமல் அன்னையை ஒட்டி உரசி, கைகளை பிடித்து நின்றுகொண்டான் என்றால், பொறுமையே வடிவான ரவி துள்ளி குதித்து அன்னையின் இடுப்பை கட்டி கொண்டவன்.
“என் அம்மு தான், இந்த உலகத்திலே ரொம்ப குயூட், பிரிட்டி, பியூட்டி எல்லாம் ” என்றான் குதூகலமாக.
மைந்தனின் வார்த்தைகளை கேட்டவள், எவ்வளவு முயன்றும் நாணத்தை மறைக்க முடியவில்லை.
ரவியை கைகளில் ஏந்தி கொண்டவள், ஆதியின் நெற்றியில் முத்தமிட்டு.
“என் பட்டு செல்லம் இரண்டும் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப குயூட், பிரிட்டி, பியூட்டி எல்லாம்” என்றவள் பின் அமைதியாக வள்ளி, சுசிலா அருகே நின்று விட்டாள்.
ராஜின் பார்வை சில நொடி கயலின் அருகே ஓவியம் போல இருந்த பொன்னியின் மீது படிந்து மீண்டது.
பிள்ளைகளிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே, ராம், மற்ற அனைவரும் வந்து விட்டனர்.
இத்தனை நேரம் அன்னையை ஒட்டிக் கொண்டு இருந்தவர்கள், ராமை கண்டதும் அவனிடம் தாவினார்கள்.
அந்த அழகிய தருணம் வஞ்சம் நிறைந்த ஒருவனுக்கு புகைப்படமாக சென்றடைந்தது.
இவற்றை பற்றி ஏதும் அறியாமல், கயலும், ராமும் தங்கள் மைந்தர்கள் கைகளை பற்றி கொண்டு மணமேடை அருகில் சென்றனர்.
அதன் பிறகு நடந்தவைகள் அனைத்தும் சடங்குகளும், திருமண ஏற்பாடுகளும் தான்
சுற்றம் சூழ, அவர்களின் குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் கொண்ட பூம்பொழில் மக்களின் மத்தியில்.
ஜாஸ் கண்கள் நிறைவுடன் மகனின் திருமண கோலத்தை மனம் என்னும் பெட்டகத்திற்குள் சிறை செய்து கொள்ள, அனைத்து உறவுகளும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்,
கயலின் கழுத்தில் ராம் அவர்கள் வழக்க படி தாலியை கட்ட, நாத்தனாருக்கான முடிச்சை போட்டு அண்ணனின் வாழ்வில் கயலை பிணைத்து வைத்தாள் அக்குடும்பத்தின் செல்ல பெண்ணான வெண்ணிலா.
அதன் பின்னர் தன்னவளின் மென்மையான பாதத்தில் மெட்டியை அணிவித்தான் ராம்.
கயலுக்கு நடப்பது அனைத்தும் கனவு போல தோன்றியது.
அவள் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று எண்ணிய அத்துணை நிகழ்வுகளும், அவளை உயிரென நேசிக்கும் ஒருவனுடன் நடப்பதில் வியந்து தான் போனாள். அம்மி மிதித்து, அருங்கதி பார்த்து, பெரியவர்களின் ஆசியுடன் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது.
அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்ற இருவரும் ராஜின் அருகில் வந்தபோது, தன் அண்ணனை தழுவி கொண்டவன்.
கயலை பார்த்து புன்னகைத்தவன் “வெல்கம் டு அவர் பேமிலி அண்ணி” என்றவன் அவர்களின் அருகில் நின்ற தன் உடன் பிறந்தவனின் மைந்தர்களை கைகளில் ஏந்தி கொண்டான்.
கோவிலில் இருந்த மண்டபத்தில் திருமணத்தை முடித்து விட்டு, அதன் அருகில் மலைகுடிலுக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து, பூம்பொழில் மக்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தான் ராஜ்.
தென்னிந்திய கல்யாண விருந்தாக இருபத்தியோரு வகை உணவுகள், இனிப்புடன் தலைவாழை இலையை அலங்கரிக்க.
பந்தியில் ராமை, கயலுக்கு ஊட்டி விட சொல்லி கலாட்டா செய்தார்கள், பொன்னியும், ரமியும்.
ராம் சிறிது தயங்கினாலும், அவனவளுக்கு ஊட்டி விட கசக்குமா என்ன, இலையில் இருந்த இனிப்பை எடுத்து கயலுக்கு கொடுக்க, அவள் மெல்ல வாய் திறந்து அதை பெற்று கொண்டாள்.
அவ்வாரே கயலும் ராமிற்கு ஊட்ட அங்கு மகிழ்வு மட்டுமே குடி கொண்டிருந்தது.
ரவியும், ஆதியும் சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல அங்கும் இங்கும் ஓடி திரிந்தனர்.
இந்த கூட்டம், இவ்வளவு கொண்டாட்டம் வியப்பாகவும், விருப்பமாகவும் அமைந்தது அந்த சிட்டு குருவிகளுக்கு.
திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட அழகிய குங்கும சிமில் பரிசாக வழங்கப்பட்டது.
வந்தவர்கள் வயிறும், மனமும் குளிர மணமக்களை வாழ்த்தினர்.
அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படங்களாக விஜய்க்கு அவனின் ஆளின் மூலம் அனுப்ப பட, வஞ்சம் நிறைந்தவனின் மனம் அவர்களின் சிரிப்பை அழிக்க சரியான நேரம் பார்த்து கொண்டு இருந்தது.
ராமின் அத்தைகள் இருவரும் ஆலம் சுற்றி தம்பதிகளை வீட்டினுள் அழைத்து வந்தனர்.
ஜாஸ் – “ராம், கயலை கூட்டி போய், அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க” என்றவரின் வார்த்தைகள் வேந்தனை எண்ணி கலங்கியே ஒலித்தன.
பூஜை அறையில் சாமியை வணக்கியவர்கள், பின் வேந்தனின் படம் முன்பு கண்களை மூடி சிலநிமிடம் நின்றனர்.
கயல் இயல்பாக அங்கு இருந்த குத்து விளக்கை ஏற்ற, அவ்வறையில் பார்க்க, அந்த காட்சி ரம்மியமாக இருந்தது.
அருகில் இருந்த கயலின் கைகளை பிடித்துக்கொண்ட ராமின் கண்கள் முழுதும் தந்தையின் மீது தான் இருந்தது.
மனமோ! ‘என்னவளை இறுதிவரை என்னுடனே இருக்கும் படி என்வாழ்வு அமைய வேண்டும்’ என்று வேண்டின.
************************
ராஜ்- பொன்னியின் பின்னே யாரும் அறியாமல் வந்து நின்றவன், தன் உதடுகளை குவித்து அவளின் கழுத்து முடிகளில் ஊத , அவை சிலிர்த்துக் கொண்டு நின்றன.
அருகில் இருப்பது தன்னவன் என்று உணர்ந்து கொண்டவள், முயன்று எந்தவித உணர்வுகளையும் காட்டாமல், தன்னை கட்டுப்படுத்தி கொண்டு சிலையென நின்றிருக்க,
“குட்டிமா, நாமளும் இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா” என்றவனின் குரல் குலைவாக ஒலித்தது.
அவனை நம்ப சொல்லி மனது கதற, அவளின் அறிவோ இத்தனை வருடமாக செல்வியின் தவறான போதனையில் இருந்து அவளை, அவளுடைய மனதில் உள்ள காதலை வெளி வர முடியாத நிலையில் நிறுத்தியது. “பொழுதனைக்கும் எதையாவது சொல்லி கிண்டல் பண்ணுவீங்களா, பட்டணத்துல இருக்க பொண்ணு தானே உங்களுக்கு சரியா வரும்” என்றவள் வார்த்தைகள் இப்போதும் அவளவனை நம்பாமல் வந்து விழுந்தன.
கண்களை இறுக மூடிக் கொண்டு எதையும் நம்பமாட்டேன் என்னும் அவளின் முட்டாள்தனத்தில் கடுப்பானவன், எதுவும் பேசாமல் விஷ்ணுவின் அருகில் சென்று நின்று விட்டான்.
அவன் அருகில் இருந்தபோது தவிப்புடன் இருந்த அந்த மடந்தையின் மனம், ராஜின் விலகலில் வேதனையில் துடித்தது.
பொன்னியின் வலிகள் அனைத்துக்கும் அவளே காரணம் என்பதை பேதையவள் அறியவில்லை.
அவளின் கலங்கிய முகத்தினை கண்ட ஆதி, பொன்னியின் அருகில் வந்து “கோல்டன் பேபி, என்னை தூக்கு, ஏன் இப்படி இருக்க, சிரி பேபி” என்று அவளின் கரங்களில் ஏறிக் கொண்டவன், அவளில் கன்னத்தில் முத்தமிட நிமிடத்தில் பொன்னியின் முகம் மலர்ந்து விட்டது.
முகம், பேச்சு வார்த்தை, நடவடிக்கைகளில் கூட தன் சிறிய தந்தையை கொண்டிருந்தவனின் விருப்பம் கூட ஒரே மாதிரி தான் இருக்கும் போல.
அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒட்டிக் கொண்டாலும், அவனின் அம்மு, ரமி குட்டிக்கு பிறகு, காரணமே இல்லாமல், ஆதியை பெரிதும் கவர்ந்தது, பொன்னி தான்.
அதேபோல் அவளுக்கும் தன்னுடன் ஒட்டி உரசிக் கொண்டு, மயக்கும் விதமாக பேசும் ஆதியை மிகவும் பிடிக்கும்.
ராஜிற்கோ தான் பேசியதற்கு எந்த வித பிரதிபளிப்பும் இல்லாமல், குழந்தையுடன் சிரித்த முகத்தோடு இருப்பவளை கண்டு எரிச்சலாக இருந்தது.
சுசிலா, புது மண தம்பதிகள் இருவருக்கும் பால் பழம் கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி கயலை, பட்டுவுடன் அனுப்பியவர், ராமை செல்வத்துடன் செல்ல சொல்ல, கையில் இருந்த, தேன்மிட்டாயை பறி கொடுத்த பிள்ளையை போல முகத்தை வைத்துக் கொண்டு அத்தை மகனை பார்த்தவனை கண்ட செல்வம், “இப்படி பார்க்காதலே காண சகிக்கல” என்றவன், புன்னகை மன்னனாக தன் மாமன் மகனை அறைக்கு அழைத்து சென்றான்.
ராம் கடுப்புடன் சென்று கட்டிலில் அமைதியாக படுத்துவிட்டான்.
அவனை தொந்திரவு செய்யாமல், காலை தொலைந்த தூக்கத்தை தொடர்ந்தான் செல்வம்.
அன்றைய இரவு மூன்றாம் பிறை வானத்தில் அழகாக தெரிய, நட்சத்திரங்கள் எல்லாம் அடர்ந்த காட்டுக்குள் உள்ள தீ கங்குகள் போல ஒளி வீசி கொண்டிருந்தன, அந்த மோகனமான இரவு நேரத்தில், மங்கையவளை அழகாக அலங்கரித்து, கனமான திருமண சேலையை விடுத்து, மெல்லிய மயில் கழுத்து வண்ணத்தில் தங்க நிற கற்கள் ஆங்காங்கே மின்ன இருந்த புடவையை கட்டி விட்டு கயலை ராமின் அறை வரை அழைத்து சென்ற வள்ளி, எதையும் பேசி அவளை கலங்க வைக்காமல் “பாத்துக்கோ தங்கம், இது உன்னோட வாழ்க்கை, பழச நினைச்சு ஒலட்டிக்காம, அத சூதானமா கொண்டு போகணும் கண்ணு” என்று கூறி மென்மையாக தலையை தடவி விட்டு அவர் பிரிந்து செல்ல,
கயலுக்கு தான் பாதங்கள் இரண்டும் அசைய மறுத்து, அந்த இடத்திலே அவளை நிறுத்தி விட்டன.
மனதை திட படுத்தி விட்டு, ‘இதுதான் உண்மை கயல், இதுக்கு மேல நீ ஓட முடியாது, உனக்கான இடத்தை பிடித்து கொண்டு அதன்படி செல்ல வேண்டியதை மட்டும் யோசி’ என்ற மனதின் அறிவுரையை ஏற்றவள்.
கதவினை திறந்து கொண்டு தன்னவனின் அறையில் முதல் முறையாக அடி எடுத்து வைத்தாள்.