பல்லவன் கவிதை
பல்லவன் கவிதை
- Posted on
- shanthinidoss
- December 12, 2020
- 0 comments
பல்லவன் கவிதை 17
தன் கால்களில் விழுந்த பரிவாதனியை தூக்கி நிறுத்தினார் மகேந்திர பல்லவர். அவர் கண்களில் தெறித்த கோபம் பெண்ணின் கண்ணீரைப் பார்த்த பின்பும் சற்றும் குறையவில்லை.
“என்ன நடந்தது பரிவாதனி? எதற்காக எனக்கு இத்தனைப் பெரிய தண்டனையைக் கொடுத்தாய்?” அவர் கேட்டுக்கொண்டே போக பெண்ணின் கண்ணீர் கூடிக்கொண்டே போனது.
“இந்த அழுகைக்கு அர்த்தம் என்ன? என்னைச் சாகடித்துவிட்டு எதற்காக நீ அழுகிறாய்? நித்தமும் துடித்தது நான், அப்படியிருக்க நீ ஏன் கண்ணீர் வடிக்கிறாய்?”
“துன்பம் உங்களுக்கு மட்டுமல்ல பல்லவேந்திரா, எனக்கும்தான்.” கண்ணீரோடு புலம்பியது பெண்.
“அப்படி நீ நினைத்திருந்தால் உன் கஷ்டத்தை என்னோடு பகிர்ந்திருப்பாய், அதற்கு தீர்வு காண முயன்றிருப்பாய்… இவை எதையும் செய்யாமல் நீயாக ஒரு முடிவெடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்தால் அது என்ன நியாயம்?”
“எனக்கு என்றைக்கும் நீங்கள் முக்கியம்… நீங்கள் மட்டுந்தான் முக்கியம்!” அந்த குரலில் அவ்வளவு பிடிவாதம்.
“நீ செய்த காரியம் அப்படி சொல்லவில்லையே பரிவாதனி… நான் முக்கியம் என்றால், உனக்கு என் நலனில் அக்கறை இருந்திருந்தால் என்னை இப்படி தீராத துயரில் நீ ஆழ்த்தி இருப்பாயா?”
“பல்லவேந்திரா! உங்கள் மனதில் ஆயிரம் குறை இருக்கலாம், ஆனால் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தில் இருக்கும் ஒரு ஈ, எறும்பு கூட பல்லவ சக்கரவர்த்தியின் மேல் குறைச் சொல்லாது… அது தெரியுமா உங்களுக்கு?” இப்போது பரிவாதனியின் முகத்தில் அளவுகடந்த பெருமைத் தெரிந்தது.
“அதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் பரிவாதனி? நீ என் பட்டமகிஷி ஆவதால் மாத்திரம் இதிலெல்லாம் மாற்றம் வந்திருக்குமா?”
“நிச்சயம் வந்திருக்கும் பல்லவேந்திரா!” இப்போது பரிவாதனியின் குரல் விம்மியது.
“புரியவில்லை!”
“நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது… தெரிந்துகொள்ள முயற்சித்தேன், ஆனாலும் பலன் இருக்கவில்லை.”
“நான் யாரென்பது உங்களிடமிருந்து மறைக்கப்பட்டது.” அந்த வார்த்தைகளில் மகேந்திர பல்லவர் திடுக்கிட்டார்!
“அதுதான் ஏனென்று எனக்கும் புரியவில்லை.”
“உங்கள் தந்தை உங்களிடமிருந்து ஒன்றை மறைக்கிறார் என்றால் அதில் நியாயமான காரணம் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும்… ஆனால் அது என் ஆசைக்குக் குறுக்கே நின்றதே… அதை நான் எப்படி ஏற்க முடியும்?”
“ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும், அதனால்தான் மாயமாக நான் மறைந்து போக நினைத்தேன்.”
“மீண்டும் மீண்டும் அதை என்னிடம் சொல்லாதே பரிவாதனி!” மகேந்திரர் இப்போது கோபத்தின் உச்சத்தில் பற்களைக் கடித்தார்.
இன்றைக்கும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆனால் அதையெல்லாம் பெண் கண்டு கொள்ளவில்லை.
“மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி என்றால் அத்தனைச் சாதாரணமா?!” இப்போது பரிவாதனியின் முகம் மலர்ந்து விகசித்தது. அந்த மலர் முகத்தை இமைக் கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் பல்லவேந்திரர்.
“பல்லவ சக்கரவர்த்தியின் பட்டமகிஷியை இந்த பூலோகமே திரும்பி பார்க்குமே அன்பரே!” பரிவாதனியின் அந்த ஒற்றை வார்த்தையில் மகேந்திர பல்லவர் தொய்ந்து போய் அந்த குடிசையின் நிலத்தில் தொப்பென்று அமர்ந்தார்.
“பல்லவேந்திரா!”
“இதற்கு முன் ஏதோ சொல்லி எனை அழைத்தாயே பரிவாதனி!” இதைக் கேட்ட மாத்திரத்தில் பெண்ணின் முகத்தில் லேசான நாணத்தின் சாயல் தெரிந்தது.
அன்று அடர்ந்த காட்டில் அருவிக்கரை ஓரத்தில் தான் கடைசியாக பார்த்த பரிவாதனியை மீண்டும் இத்தனைக் காலம் கழித்து பார்த்தார் மகேந்திரர்.
“பார் போற்றும் மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி ஆவதில் அப்படி உனக்கென்ன கஷ்டம் வந்தது பரிவாதனி?”
“கஷ்டமா? எனக்கா? அதற்கு நான் புண்ணியம் செய்திருக்கவில்லை என்றல்லவா நான் சொல்கிறேன்!”
“ஏன் செய்திருக்கவில்லை? இந்த மகேந்திரனின் ஒட்டுமொத்த உள்ளத்தையும் உடலையும் ஆட்சி செய்த ஒரே பெண் நீதானே? இந்த மகேந்திரனுக்கு காதலைக் கற்றுக்கொடுத்ததும் நீதானே?”
“அதுவெல்லாம் போதாது அன்பரே!”
“வேறெது வேண்டும்?”
“சிக்கலில்லாத பிறப்பு வேண்டும்!”
“புரியவில்லை, உபாத்தியாயரின் மகள் எந்த வகையில் புவன மகாதேவிக்கு குறைந்துவிட்டாள்?”
“அன்பரே! உபாத்தியாயர் என் தந்தை அல்ல!” நிதானமாக சொன்னார் பரிவாதனி.
“என்ன? என்ன சொல்கிறாய் நீ? இது நிஜந்தானா?”
“ஆமாம்.”
“அப்படியென்றால்… நீ…”
“வாதாபிக்கு சென்றிருந்த உங்கள் பெற்றோர் திரும்ப காஞ்சிக்கு வரும்போது கொண்டு வரப்பட்ட குழந்தை நான்.”
“பரிவாதனி!”
“வாதாபியின் மன்னர் மங்களேசரின் மகள் நான்!”
“என்ன?! அப்படியென்றால்… புலிகேசி… விஷ்ணுவர்த்தனன்?”
“என் பெரிய தந்தையின் பிள்ளைகள்.”
“ஓ…” அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார் மகேந்திர பல்லவர். பேச நா எழவில்லை. உதடுகள் இரண்டும் அசைய மறுத்தன.
“பல்லவேந்திரா! அதனால்தான் சொல்கிறேன், இந்த பரிவாதனி உங்களுக்கு வேண்டாம்.” அந்த வார்த்தைகளைப் பெண் உச்சரித்தபோது மட்டும் மகேந்திர வர்மரின் முகம் சட்டென்று அவளை அண்ணார்ந்து பார்த்தது.
“என் ஆரம்பம் சிக்கலானது, அதற்குள் வீணாக நீங்கள் அகப்பட்டுக்கொள்ள வேண்டாம்.” பரிவாதனி பேசி முடித்த போது அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமாக சிறிது நேரம் நடந்த சக்கரவர்த்தி சட்டென்று நின்றார்.
“மைத்ரேயி என்பது யார்?” அந்த கேள்வியில் இப்போது பரிவாதனி ஆடிப்போய்விட்டார்.
“பரிவாதனி, உன்னைத்தான் கேட்கிறேன்… மைத்ரேயி என்பது யார்?” பதிலேதும் சொல்லாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நின்ற பெண்ணை மீண்டும் அதட்டி கேட்டார் சக்கரவர்த்தி
“அ… அது… பல்லவேந்திரா…”
“நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை பரிவாதனி!”
“மைத்ரேயி… மைத்ரேயி…”
“அதைத்தான் நானும் கேட்கிறேன்… மைத்ரேயி என்பது யார்?”
“மைத்ரேயி… என் பெண்…” தயக்கத்தோடு வந்தது பதில்.
“ஓஹோ! உன் பெண் என்றால்?”
“அதைப்பற்றி நாம் பேச வேண்டாமே!” சொன்ன பெண்ணின் அருகில் வந்து அந்த பங்கஜ முகத்தை ஆழ்ந்து பார்த்தார் சக்கரவர்த்தி.
“அதைப்பற்றி பேச வேண்டாம் என்றால் வேறு எதைப்பற்றி பேசவேண்டும் என்று
சொல்கிறாய் பரிவாதனி?!”
“……………….”
“சொல்! மைத்ரேயி யார்? நீ குந்திதேவி அல்ல என்று எனக்கு நன்றாகவே தெரியும்.” சக்கரவர்த்தி எவ்வளவு அதட்டியும் பரிவாதனி அந்த கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் சக்கரவர்த்தி களைத்துப்போனார்.
“பரிவாதனி, என் மேல் ஆணையிட்டு கேட்கிறேன்… மைத்ரேயி பற்றிய உண்மைகளை என்னிடம் சொல்.” அதற்கு மேல் பெண் எதையும் மறைக்கவில்லை. மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டார்.
“என் பெண் எங்கே? மைத்ரேயி எங்கே பரிவாதனி?” சக்கரவர்த்தியின் குரல் இப்போது வெகுவாக கலங்கி இருந்தது.
“அதை உங்கள் தங்கையிடம்தான் கேட்க வேண்டும்.” இப்போதும் நிதானமாக பதில் சொன்னது பெண்.
“என் பெண்ணைப் பெற்றவள் நீ, சொல்ல வேண்டிய நேரத்தில்தான் சொல்லவில்லை… இப்போதாவது சொல், என் பெண் எங்கே?”
“எனக்குத் தெரியாது.”
“என்ன?! தெரியாதா?”
“தெரியாது பல்லவேந்திரா.” திட்டமாக வந்தது பதில்.
“நீ என் பெண்ணின் தாய்தானே?!” குழப்பததோடு கேட்டார் சக்கரவர்த்தி. குரலில் கவலை மிதமிஞ்சி இருந்தது. பரிவாதனி இப்போது லேசாக நகைத்தார்.
“நான் உங்கள் பெண்ணின் தாய்தான், அவள் உங்கள் குழந்தை என்று இந்த உலகிற்குத் தெரிந்தால் ஏற்படப்போகும் விபரீதங்களை நன்கு அறிந்த தாய்!” பரிவாதனியின் வார்த்தைகளில் சக்கரவர்த்தி ஒரு கணம் நிதானித்தார். அந்த பேச்சில் இருந்த உண்மை அவரைத் தைத்தது. இதுவரைப் பொங்கி கொண்டிருந்த அவர் உணர்ச்சிகள் சட்டென்று நீர் தெளிக்கப்பட்ட பால் போல அடங்கி போயிற்று.
பெண்ணின் வார்த்தைகளில் இருந்த நியாயம் அவரைச் சிந்திக்க வைத்தது. சற்று நேரம் நிதானமாக யோசித்தவர் ஒரு முடிவிற்கு வந்தவர் போல பரிவாதனியை நிமிர்ந்து பார்த்தார்.
“இந்த உலகம் ஆயிரம் சொல்லட்டும் பரிவாதனி… மைத்ரேயிதான் என் முதல் வாரிசு என்பதில் எந்த ஐயமும் எனக்கு இல்லை, அவளுக்குச் சேர வேண்டியது அனைத்தும் எந்த தடையுமின்றி அவளுக்குக் கிடைக்கும்.”
“வேண்டாம் பல்லவேந்திரா.”
“நான் உன்னிடம் எந்த அபிப்பிராயமும் கேட்கவில்லை பரிவாதனி, உன் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ள உனக்கு அதிகாரம் இருக்கலாம், ஆனால் மைத்ரேயியை பற்றி முடிவெடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை.”
“அவளைப் பெற்றவள் நான்!”
“அந்த நினைப்பு உனக்கு இருந்திருந்தால் அவள் உரிமைகளை நீ பறித்திருக்கமாட்டாய்.”
“எனக்கு நீங்கள் முக்கியம், பல்லவ சாம்ராஜ்யத்தின் நலன் முக்கியம்.”
“என்னைப்பற்றி நீ கவலைப்பட்டதில் நியாயம் இருக்கிறது, பல்லவ சாம்ராஜ்யத்தைப் பற்றி நீ எதற்குக் கவலைப்பட்டாய்? அதற்குத்தான் நான் இருக்கிறேனே? எப்பாடுபட்டாவது பல்லவ சாம்ராஜ்யத்தை நான் பாதுகாத்திருக்க மாட்டேனா? அத்தனை வீரமில்லாதவனா இந்த மகேந்திர வர்மன்?”
“அன்பரே! இது என்ன பேச்சு? ஏன் இப்படியெல்லாம் பேசி என்னை வதைக்கிறீர்கள்?”
“உன் செயல்களுக்கு நான் வேறு எப்படி அர்த்தம் கொள்வது பரிவாதனி?”
“நான் உங்கள் வாழ்க்கையில் நுழைந்திருந்தால் வேதனைதான் மிஞ்சி இருக்கும்.”
“தன் மனைவி மக்களுக்காக வாழ்பவன்தானே ஆண்மகன்?”
“உங்கள் மனைவி மக்களை விட நாட்டு மக்கள்தான் உங்களுக்கு முதன்மை.”
“இல்லையென்று நான் சொல்லவில்லை… போதும் பரிவாதனி, தர்க்கத்திற்கு இப்போது நான் ஆயத்தமாக இல்லை, உனக்கொன்று தெரியுமா?”
“என்ன?”
“கொற்கையின் சிறையில் இப்போது மைத்ரேயி இல்லை.”
“என்ன?! என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?”
“நேற்று இரவு மைத்ரேயி சிறையிலிருந்து தப்பிவிட்டாள்.”
“என்ன?! இது எப்படி சாத்தியம்? மைத்ரேயி வீரமிக்கவள்தான், அதற்காக சிறையிலிருந்து தப்பிக்கும் அளவிற்கு அவளுக்குத் துணிச்சல் இருக்காது.”
“இருந்திருக்கிறது… அதனால்தானே தப்பி இருக்கிறாள்.”
“இல்லை பல்லவேந்திரா…” பரிவாதனியின் முகத்தில் குழப்பம், சிந்தனை என பலதும் போட்டி போட்டது.
“அவளைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனைப் பிரமாதம் இல்லை, கவலைப்படாதே… என் பெண்ணைப் பற்றி மேலும் சொல்லு பரிவாதனி, அவள் வீரமிக்கவள் என்று சொன்னாயே… அது உண்மையா?” ஆவலோடு கேட்டார் சக்கரவர்த்தி.
“அதற்கு பதில் நான் சொல்கிறேன் மன்னவா? உங்கள் மக்கு பரிவாதனியிடம் இதைப் போய் கேட்கிறீர்களே!” கேலியாக சொல்லியபடி மகிழினி இப்போது உள்ளே நுழைந்தாள்.
சக்கரவர்த்தியும் பரிவாதனியும் ஒன்றாக இப்போது திரும்பி மகிழினியை பார்த்தார்கள்.
“வீரமென்றால் வீரம் அப்படியொரு வீரம்! சாதாரண பெண்ணா அவள்? பல்லவ ராஜ வம்சத்தின் குல விளக்கு அல்லவா?”
“உண்மையாகவா மகிழினி?!” சக்கரவர்த்தியின் முகம் சந்தோஷத்தில் பூத்தது.
“ஆமாம் பல்லவேந்திரா! சமயத்தில் எனக்குச் சந்தேகம் கூட வருவதுண்டு, கோழைகளுக்குக் கூட இவ்வளவு வீரமிக்க குழந்தைகள் பிறப்பதுண்டா என்று!” தன் தோழியைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு பேசினாள் மகிழினி. இப்போது சக்கரவர்த்தி வாய்விட்டு சிரித்தார்.
“குதிரை ஏறக்கூட தெரியாத அம்மாவிற்கு இப்படியொரு பெண்ணா மகிழினி?”
“அப்படி சொல்லுங்கள் பல்லவேந்திரா! அந்த கிழட்டு உபாத்தியாயரும் இவளுமாக சேர்ந்து அவள் கையில் வீணையைக் கொடுத்தார்கள், அவள் இரண்டே நாளில் அந்த வீணையைத் தூக்கி அடுப்பில் போட்டுவிட்டு வாளைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிட்டாள் என்றால் பாருங்களேன்!”
“ஹா… ஹா…” சக்கரவர்த்தி தன்னை மறந்து சிரித்தார்.
“போதும் உன் விகடம், அவளைக் கெடுத்ததே நீதான்!” குறைக் கூறினார் பரிவாதனி.
“பின்னர் என்ன செய்ய சொல்கிறாய்? உன்னைப் போல முதுகெலும்பு இல்லாமல் அவளை வளர்க்க சொல்கிறாயா? பல்லவேந்திரா… அவள் ஆளப்பிறந்தவள்!”
“அது நிச்சயம் நடக்கும் மகிழினி!”
இங்கே பல்லவ சக்கரவர்த்தி மகிழினிக்கு உறுதிமொழி கூறிக்கொண்டிருந்த பொழுது அங்கே மைத்ரேயி தன் அறையில் சிந்தனையின் வசம் சிக்கி இருந்தாள்.
நேற்று இரவு நந்தவனத்தில் உபாத்தியாயர் நடந்துகொண்ட விதம் அவளுக்குப் பெரு வியப்பாக இருந்தது. இதுவரை அவள் மனதில் இதுபோன்ற எண்ணங்களுக்கு இடமிருந்ததே இல்லை. இனிமேலும் இருந்திருக்குமா என்றும் அறுதியிட்டு அவளால் கூறமுடியாது. ஆனால் உபாத்தியாயர்!
அவர் வார்த்தைகளின் அர்த்தம் புரியாத பச்சைக் குழந்தை அல்ல மைத்ரேயி. ஆனால் அவளால் அந்த வார்த்தைகளின் கனத்தைத் தாங்க முடியவில்லை.
அப்படியென்றால்… என்னைப் பார்த்த முதல் நாளே அவர் மனதில் இந்த எண்ணம் தோன்றிவிட்டதா? இந்த எண்ணத்தைச் சுமந்து கொண்டுதான் என்னோடு பழகியிருக்கிறாரா?
‘விட்டுவிடும் எண்ணம் இல்லையாமே!’ இதை நினைத்தபோது மைத்ரேயியின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
சட்டென்று அறைக்கதவு அனுமதியின்றி திறக்கப்பட திரும்பி பார்த்தாள் பெண். அவள் எண்ணத்தின் நாயகன்தான் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
‘இது என்ன பழக்கம்? அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவது?!’ மனதிற்குள் நினைத்தாலும் வாய்விட்டு கேட்கவில்லை. இருந்தாலும் அவள் முகம் அகத்தைப் பிரதிபலித்ததோ!
“கதவைத் தட்டி அனுமதி கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை.” அவன் செயலுக்கு அவனே விளக்கம் சொன்னான். மைத்ரேயி பதிலேதும் சொல்லவில்லை, அமைதியாக நின்றிருந்தாள்.
“மைத்ரேயி… ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?”
“எப்படி இருக்கிறேன் உபாத்தியாயரே?”
“நீ எப்போதும் போல இல்லை, மிகவும் அமைதியாக உற்சாகம் இல்லாதது போல தெரிகிறாய்.” இப்போது மைத்ரேயி லேசாக சிரித்தாள்.
“நீ எனக்குப் புதிதாக தெரிகிறாய் பெண்ணே!”
“என்னைச் சுற்றி எல்லாமே புதிதாகத்தான் நடக்கிறது உபாத்தியாயரே.”
“நீ என்னைச் சொல்கிறாயா?”
“நீங்களும்தான்.”
“அப்படியென்றால்… உன் மௌனத்திற்கு வேறு ஏதோ காரணமும் இருக்கிறதா?” இப்போது மைத்ரேயி உபாத்தியாயரை இமைக் கொட்டாமல் பார்த்தாள். அந்த பார்வை இளவலைப் பாதித்திருக்க வேண்டும். அவள் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.
“மனதில் என்ன குழப்பம் மைத்ரேயி?”
“பார்ப்பது, கேட்பது அனைத்துமே குழப்பமாகத்தான் இருக்கிறது.”
“புரியும்படி பேசு.”
“நான் யார்?” அந்த கேள்வியில் மார்த்தாண்டன் சிறிது திணறினான்.
“இது என்ன கேள்வி மைத்ரேயி?”
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் உபாத்தியாயரே! நான் யார்? என் தந்தை யார்?” தந்தை என்ற வார்த்தை மார்த்தாண்டனை லேசாக உலுக்கியது. மைத்ரேயிக்கு அவள் பிறப்பு இரகசியம் தெரிந்துவிட்டதா! இருக்காதே…
“நீ யாராய் இருந்தால் எனக்கென்ன பெண்ணே! என் மனதை முழுதாக கொள்ளை அடித்துவிட்டாய், அது போதாதா?” அவன் பேச்சை மாற்றினான்.
“சாமர்த்தியமாக பேச்சை மாற்றுகிறீர்கள் உபாத்தியாயரே!” மைத்ரேயியின் பேச்சில் மார்த்தாண்டன் திடுக்கிட்டான்.
“மைத்ரேயி! நீ என்ன சொல்கிறாய்?”
“இதைப் படித்து பாருங்கள்.” தன் முந்தானை ஓரமாக முடிந்து வைத்திருந்த அந்த சிறிய ஓலையை எடுத்து உபாத்தியாயரிடம் நீட்டினாள் பெண். மார்த்தாண்டன் குழப்பத்தோடு ஓலையை வாங்கி படித்தான்.
ஓலையில் இருந்த எழுத்து படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் அதில் கண்டிருந்த செய்தி மார்த்தாண்டனை ஆச்சரியப்பட வைத்தது.
“மகிழினி சித்தி கொடுத்த மூட்டையை அவிழ்த்த போது அதில் இந்த ஓலையும் இருந்தது.”
“ஓ…” மார்த்தாண்டன் சட்டென்று எதுவும் பேசிவிடவில்லை. சிறிது நேரம் அமைதியாக சிந்தனையின் ஆழ்ந்திருந்தான்.
அவனிடம் பாதி மறைத்து மகிழினி சொன்ன மைத்ரேயியின் பிறப்பு ரகசியத்தை முழுவதுமாக அந்த ஓலையில் எழுதி இருந்தார்.
ஆனால் நல்லவேளையாக அதைவிடுத்து அவர் மைத்ரேயியின் வேர்களைப் பற்றி பேசி இருக்கவில்லை.
மார்த்தாண்டன் பெண்ணை மெதுவாக தன்னருகில் அழைத்து அவள் தலையை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.
அந்த செய்கை இதுவரை நேரமும் அவள் கடைப்பிடித்திருந்த அமைதியைக் குலைக்கவும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் இளையவள்.
“அழாதே மைத்ரேயி!”
“என்னால் தாங்க இயலவில்லை உபாத்தியாயரே!”
“எப்போது தெரிந்தது?”
“நேற்று.”
“ஏன் நேற்றே என்னிடம் சொல்லவில்லை?”
“சொல்லுவதற்காகத்தான் நேற்று வெகுநேரம் ஆகியும் உங்களுக்காக காத்திருந்தேன்.”
“பிறகு சொல்வதற்கென்ன?”
“நான் ஒரு கதையோடு காத்திருக்க நீங்கள் வேறு கதைப் பேசினீர்கள்!” அவள் சொல்லிமுடித்த போது மார்த்தாண்டன் சிறிதே சங்கடப்பட்டான்.
நேற்று இரவு நந்தவனத்தில் அவளிடம் தன் காதல் சொன்னது ஞாபகம் வந்தது. மனதில் எத்தனையோ குழப்பத்தோடு அவள் இருந்திருக்க, நேரம் காலம் தெரியாமல் நான் காதல் சொல்லி இருக்கிறேனே என்று அவன் மனம் உறுத்தியது.
“மன்னித்துவிடு மைத்ரேயி.”
“உபாத்தியாயரே! இது என்ன வார்த்தை?!” பதறிப்போய் அண்ணார்ந்து அவன் முகம் பார்த்தாள் பெண்.
“எனக்கு வாள் பிடிக்க கற்றுக்கொடுத்தவர் தாங்கள்… என் குரு நீங்கள்.”
“என்னிடம் வாள் பிடிக்க மட்டுந்தான் நீ கற்றுக்கொள்வாயா? வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள மாட்டாயா?” உபாத்தியாயரின் கேள்வியில் மைத்ரேயியின் கன்னங்கள் லேசாக சிவந்தன.
மீண்டும் அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டாள்.
இப்போது மார்த்தாண்டன் சிலிர்த்து போனான். இது மைத்ரேயிதானா? தானாக தன்னோடு இழைந்து நிற்பது தன் மனம் கவர்ந்த பெண்தானா?!
மார்த்தாண்டன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான்!