பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை

 
அத்தியாயம் -16
 
மார்த்தாண்டன் அகன்றதும் அறைக்குள் தனித்துவிடப்பட்ட மைத்ரேயி அந்த அறையை ஒருமுறைக் கண்களால் சுற்றி பார்த்தாள்.
 
அறை நல்ல விசாலமாக ராஜ விருந்தினர்கள் தங்கும் இடம் போல இருந்தது. அறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மஞ்சமும் அதில் போடப்பட்டிருந்த பஞ்சணையும் பட்டு விரிப்புகளும் கண்ணைப் பறித்தன.
 
“தேவி…” அழைப்பு குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் மைத்ரேயி. எதிரே ஒரு பணிப்பெண் கதவிற்கருகில் கையில் பழக்கூடையோடும் ஆடையோடும் நின்றிருந்தாள்.
 
“உள்ளே வரலாமா?” புன்னகையோடு அவள் கேட்ட விதம் மைத்ரேயியின் அப்போதைய நலிந்த இதயத்திற்கு மிகவும் இதமாக இருந்தது.
 
“வாருங்கள்.”
 
“அடடா! இது என்ன தேவி? பணிப்பெண்ணான என்னை இத்தனை மரியாதையாக அழைக்கிறீர்கள்?!” சிரிப்புடன் கேட்ட பெண் பழக்கூடையை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு ஆடையை மைத்ரேயியிடம் நீட்டினாள்.
 
“இது என்ன?”
 
“உங்களுக்கான ஆடை தேவி.”
 
“அதுதான் என்னிடமே இருக்கிறதே?”
 
“இதைத்தான் நீங்கள் உடுத்த வேண்டும் என்பது இளவலின் உத்தரவு.” மர்மமாக புன்னகைத்தாள் அந்த பெண். 
 
“எந்த இளவலின் உத்தரவு?”
 
“கங்க நாட்டு இளவல்.”
 
“யார்? உபாத்தியாயரா?”
 
“ஓ… உங்களுக்கு அவர் உபாத்தியாயரா?”
 
“ஏன்? அவர் உங்களுக்கெல்லாம் உபாத்தியாயர் இல்லையா?”
 
“உபாத்தியாயர்தான்…” வாய்மூடி சிரித்தபடி அந்த பெண் சொல்ல மைத்ரேயி இப்போது குழம்பிப்போனாள்.
 
“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?”
 
“சரிதான்… அதை விடுங்கள் தேவி, ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டேன்.”
 
“என் பெயர் மைத்ரேயி.”
 
“அழகான பெயர்!”
 
“அப்படியே அழைக்கலாமே.”
 
“ஐயையோ! தங்களை நான் பெயர் சொல்லி அழைப்பதா?!”
 
“ஏன்? அழைத்தால் என்ன?”
 
“அதை விடுங்கள் தேவி, நேரம் போகிறது… சீக்கிரம் நீங்கள் ஸ்நானத்தை முடிக்க வேண்டும் என்பது இளவலின் உத்தரவு.” சொல்லிவிட்டு இப்போதும் கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்தாள் பெண்.
 
உபாத்தியாயரைப் பற்றி பேசும்போதெல்லாம் அந்த பெண்ணின் கண்களும் முகமும் சிரிப்பதை மைத்ரேயியால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 
 
இரவு ஏறியிருந்த அந்த வேளையில் தன்னை அவர் அழைத்து வந்தது மட்டுமல்லாமல் இப்படி அக்கறையும் எடுத்துக்கொள்வது இங்கிருப்பவர்களுக்குள் வீணான கற்பனைகளை விதைத்திருக்கிறது என்று பெண்ணிற்கு விளங்கியது.
 
ஆனால் எதையும் மறுத்து கூறவோ விளக்கம் சொல்லும் மனநிலையிலோ அவள் இல்லாததால் கண்டும் காணாமல் இருந்துவிட்டாள்.
இருந்தாலும்… உபாத்தியாயரின் செய்கைகளில் இருந்த மாறுபாடு அவளை வாயடைக்க செய்திருந்தது. வாள் சுழற்ற பயிற்சி அளித்த போது அவள் பார்த்த உபாத்தியாயர் இவரல்ல. அப்போது அவரிடம் தான் கண்ட கடினம் இப்போது காணாமல் போய்விட்டதே! 
 
ஸ்நான அறையில் பதமான வெந்நீர் பன்னீர் கலக்கப்பட்டு இதமான வாசனையோடு இருந்தது. அருகே வகைவகையான ஸ்நான பொடிகளும் வைக்கப்பட்டிருக்க ஆச்சரியமாக பார்த்தாள் மைத்ரேயி. இது என்ன?! எதற்காக எனக்கு இத்தனை ஏற்பாடுகள்?!
 
“தேவி… நீராட்டத்திற்கு நான் உதவி புரியட்டுமா?”
 
“இல்லையில்லை… நானே பார்த்து கொள்கிறேன்.”
 
“ஆகட்டும் தேவி… நான் வெளியே இருக்கிறேன், ஏதும் உதவி தேவை என்றால் என்னை அழையுங்கள்.”
 
“சரி…” அந்த பெண் அகன்றதும் மைத்ரேயி துரிதமாக ஸ்நானத்தை முடித்தாள். உபாத்தியாயரின் உத்தரவின் பெயரில் கொடுக்கப்பட்டிருந்த பட்டுச்சேலையை கையில் எடுத்தவள் அதன் அழகில் ஒரு நொடி சிந்தையைப் பறிகொடுத்தாள்.
 
இள ஊதா வண்ண புடவையில் ஜரிகை வேலைப்பாடு மிக நேர்த்தியாக இருந்தது. மைத்ரேயிக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.
 
இதுவெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லை. இப்படியெல்லாம் அனுபவித்து வாழ அவர்கள் வீட்டில் வசதி இருந்ததில்லை. இருந்திருந்தாலும் அவளுக்கு இதிலெல்லாம் நாட்டமிருந்திருக்குமா என்றும் தெரியவில்லை.
 
புடவையை எப்போதும் பஞ்சகச்சம் போலவே உடுத்துவாள். குதிரை ஏறுவதற்கும் வாள் சுழற்றுவதற்கும் அதுதான் வசதி. ஆனால் ஏனோ இன்று அப்படி உடுத்த தோன்றவில்லை.
 
சாதாரணமாக புடவையை உடுத்தி கொண்டவள் தன் நீண்ட கூந்தலை விரிய விட்டு வெளியே வந்தாள்.
 
“மிகவும் சீக்கிரமாக ஸ்நானத்தை முடித்துவிட்டீர்களே தேவி?!”
 
“ஆமாம்.” அதற்குமேல் மைத்ரேயி எதுவும் பேசவில்லை. தனக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அறைக்கு அவள் வந்துவிட அவள் பின்னோடே அந்த பணிப்பெண்ணும் கூட வந்தாள்.
 
அவள் கையில் மைத்ரேயியின் கூந்தலை உலர்த்துவதற்கான அகில் புகை இருந்தது.
 
மைத்ரேயியின் கூந்தலை மென்மையாக உலர்த்திய அந்த பெண் காதோரமாக இரு புறமும் சிறு மயிர்கற்றைகளை எடுத்து நடுவே பின்னல் போட்டாள். இரவு நேரம் என்பதால் பூவை அதிகமாக வைக்காமல் முத்துச்சரம் ஒன்றையும் மைத்ரேயியின் கூந்தலோரமாக சொருகிவிட்டாள்.
 
ஒரு சில ஆபரணங்களையும் அவள் அணிவித்துவிட தன் பிம்பத்தைப் பார்த்த மைத்ரேயி மலைத்துப்போனாள். தான் இத்தனை அழகு என்பது இன்றைக்குத்தான் அவளுக்குத் தெரிந்தது!
 
“தேவி… நீங்கள் மிகவும் அழகு!” சொன்ன பணிப்பெண் மஞ்சத்தில் இன்னும் கொஞ்சம் உதிரிப்பூக்களைத் தூவிவிட்டு மைத்ரேயிக்கு இரவு உணவையும் கொண்டு வந்து கொடுத்தாள்.
 
“தேவி… இன்னும் ஏதேனும் வேண்டுமா?”
 
“இல்லை.”
 
“நல்லது… இராப்போஜனத்தை முடித்துக்கொண்ட பிறகு உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பது இளவலின் உத்தரவு.”
 
“இப்போது உபாத்தியாயர் எங்கே?”
 
“மன்னரைக் காண சென்றிருக்கிறார்கள்.”
 
“ஓ…”
 
“ஆமாம் தேவி… உங்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாதாம்! மிகவும் களைப்பாக தெரிகிறீர்கள், இனியும் தாமதிக்காமல் தூங்குங்கள்.” அந்த பெண் பதவிசாக கூறிவிட்டு அறைக் கதவை மூடிக்கொண்டு செல்ல மஞ்சத்தில் சாய்ந்தாள் மைத்ரேயி.
 
இரண்டு நாட்களில் தலைகீழாக மாறிப்போன அவள் வாழ்க்கை வெகு விந்தையாக இருந்தது மைத்ரேயிக்கு. உடம்பில் தோன்றிய களைப்பையும் தாண்டி சிந்தனைகள் எங்கெங்கோ சஞ்சரிக்க வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருந்த பெண் லேசாக கண்ணயர்ந்தாள்.
 
அடுத்த நாள் முழுவதும் கூட உபாத்தியாயரை அவளால் பார்க்க இயலவில்லை. பணிப்பெண்கள் வந்து அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் கவனித்து கொண்டார்கள். ஆனால் உபாத்தியாயரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
 
ஓரிரு முறை மைத்ரேயி வாய்விட்டே அந்த பெண்களிடம் கேட்டும் பார்த்தாள். ஆனால் அவர்களுக்கே அது தெரியாது எனும்போது மேலும் என்னதான் செய்வது.
 
வேளை தவறாமல் தங்கத்தட்டில் உணவு வந்தது, ஆடை அலங்காரங்களுக்கும் எந்த குறைவும் இருக்கவில்லை. எந்த தடையும் இல்லாமல் அவள் தங்கியிருந்த மாளிகையிலும் அதையடுத்திருந்த நந்தவனத்திலும் உலவ முடிந்தது. ஆனால் எதிலும் மனம் லயிக்காமல், ஒன்ற முடியாமல் தவித்து கொண்டிருந்தாள் மைத்ரேயி.
 
அடுத்த நாள் இருள் கவிந்துவிட்ட பிறகும் உபாத்தியாயர் அவளைக் காண வராததால் சற்றே கோபமடைந்த பெண் அவள் அறையை விட்டு வெளியே இருந்த தாழ்வாரத்திற்கு வந்தாள். நேற்றைக்கு இதே நேரந்தான் இந்த மாளிகைக்குள் அவள் நுழைந்தாள். ஆனாலும் ஏனோ பல நாட்கள் இங்கேயே அடைந்து கிடந்தது போல மனம் சலிப்படைந்திருந்தது.
 
மாடி தாழ்வாரம் எந்த ஆள் அரவமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. வானில் நிலா பால் போல காய்ந்து கொண்டிருக்க எதிரே ரம்மியமாக பூத்து குலுங்கிக்கொண்டிருந்த நந்தவனத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் பெண்.
 
“மைத்ரேயி!” அந்த குரலில் ஆவலே வடிவாக திரும்பினாள் மைத்ரேயி.
 
“உபாத்தியாயரே! நீங்கள்தானா?” அவள் கேட்ட விதத்தில் மார்த்தாண்டன் சத்தமாக சிரித்தான்.
 
“ஏன் மைத்ரேயி? அதிலென்ன சந்தேகம் உனக்கு?”
 
“நேற்று போனவர்தான், அதன் பிறகு உங்களைப் பார்க்கக்கூட முடியவில்லையே?”
 
“ஆமாம்… ஒரு சில ராஜாங்க காரியங்கள் இருந்தன, அதைப் பார்ப்பதற்காகவே சென்றிருந்தேன்.”
 
“ஓ… நேற்றைக்குக் கூட அந்த பெண் நீங்கள் மன்னரைக் காண சென்றிருப்பதாக சொன்னாள், உபாத்தியாயரே! எதற்காக நாம் இங்கே தங்கி இருக்கிறோம்? நீங்கள் இந்த ராஜாங்கத்தில்தான் உத்தியோகம் பார்க்கிறீர்களா?” முகத்தில் மிதமிஞ்சிய குழப்பத்தோடு பெண் கேட்டபோது மார்த்தாண்டன் திண்டாடி போனான்.
 
“என்னோடு வா மைத்ரேயி.” பெண்ணின் கையைப் பிடித்து அவளை அழைத்துக்கொண்டு உப்பரிகையின் படிகளில் இறங்கியவன் மாளிகையை அடுத்திருந்த நந்தவனத்திற்குள் நுழைந்தான்.
 
“உபாத்தியாயரே! இந்த வேளையில் எதற்காக இங்கே வந்திருக்கின்றோம்?”
 
“பேச வேண்டும் மைத்ரேயி… உன்னோடு நான் கொஞ்சம் மனம்விட்டு பேச வேண்டும்.”
 
“பேசுங்களேன்… உங்களை யார் தடுத்தது?”
 
“யாரும் தடுக்கவில்லைதான்… தடுக்கவும் முடியாது…” அந்த குரலில் ஆணவத்தோடு லேசான பிடிவாதமும் தெரிந்தது.
 
“அப்புறம் எதற்காக இந்த தயக்கம்?”
 
“தயக்கம்தான் மைத்ரேயி… உன்னைப் பார்த்தது முதல் எனக்கு எல்லாவற்றிலும் தயக்கம்தான்…”
 
“புரியவில்லை உபாத்தியாயரே! என்னைப் பார்த்தது முதல் அப்படியென்ன தயக்கம் உங்களுக்கு?!” தன் கண்களைப் பார்த்து நிதானமாக கேட்ட பெண்ணை இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தான் மார்த்தாண்டான். 
 
இது மைத்ரேயிக்கு புதிது. உபாத்தியாயர் அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டதுண்டு. வாள் வீச கற்றுக்கொடுக்கும் போது பல முறை அவளை உரிமையோடு கடிந்ததுண்டு. கைப்பிடித்து சொல்லிக்கொடுத்ததும் உண்டு. ஆனால் இந்த நெருக்கம்…
 
“மைத்ரேயி…” அந்த கரகரப்பான குரல் பெண்ணை ஏதோ செய்தது!
 
“மைத்ரேயி… நான்…” மார்த்தாண்டன் தடுமாறினான்.
 
“உங்களுக்கு என்ன ஆனது உபாத்தியாயரே? ஏன் இப்படி தடுமாறுகிறீர்கள்?!”
 
“தடுமாற்றம்… இன்றைக்கு வந்தது அல்ல மைத்ரேயி.”
 
“புரியவில்லை உபாத்தியாயரே!” 
 
“என் மனது இன்னும் உனக்குப் புரியவில்லையா? என் கண்களில் தெரிந்த உனக்கான காதலை அமரா தேவி புரிந்து கொண்டார், உன் சித்தி புரிந்து கொண்டார்… ஆனால் உனக்கு மட்டும் புரியவில்லையா மைத்ரேயி?”
 
“உபாத்தியாயரே!” பெண் ஸ்தம்பித்து உறைந்தது.
 
“பேசாதே… எதுவும் இப்போதைக்குப் பேசிவிடாதே… என்னை மறுத்து நீ சொல்லும் ஒரு வார்த்தையைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது மைத்ரேயி… உன்னைக் கண்ட நாள் முதலாக, செய்ய திட்டமிட்ட காரியத்தைத் தாமதிக்க வைத்துவிட்டு அந்த ஆற்றங்கரை மண்டபத்திலேயே தவம் கிடந்தேனே… அப்போதே உனக்குப் புரியவில்லையா?”
 
“உபாத்தியாயரே!”
 
“போதும்! இந்த வார்த்தையைத் தவிர உன் வாயில் வேறு வார்த்தையே வராதா?”
 
“நீங்கள்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” மருண்டு விழித்த பெண்ணின் இடையை லேசாக வளைத்தது மார்த்தாண்டனின் கரங்கள்.
 
“இந்த மென்மையான பெண்மைக்குள் இருக்கும் வீரம், பார்த்த முதல் நொடியிலேயே என்னை உன் காலடியில் வீழ்த்திவிட்டது பெண்ணே! வாள் சுழற்றிய உன் கையின் லாவகம் மட்டுமல்ல, அப்போது சுழன்ற உன் கருவிழிகளும் என்னைக் கவர்ந்து விட்டன மைத்ரேயி!”
 
உபாத்தியாயர் பேசும் மொழிகளின் அர்த்தம் புரியாமல் அசைவற்று அவன் கைகளுக்குள் அப்படியே நின்றிருந்தாள் இளையவள். இதுவரைத் தன் எதிரில் நிற்கும் அந்த வாலிபரை அவள் பார்த்த விதம் வேறு. அவனை வைத்திருந்த ஸ்தானம் வேறு. ஆனால் இன்று அவர் ஏதேதோ பேசுகிறாரே?!
 
“உபாத்தியா…” ஏதோ சொல்லப்போன மைத்ரேயியின் வாயில் கையை வைத்து தடுத்தான் மார்த்தாண்டன்.
 
“வேண்டாம் மைத்ரேயி… அவசரப்பட்டு எதுவும் பேசிவிடாதே, நீ என்ன சொல்ல போகிறாய் என்று எனக்கு நன்றாகவே தெரியும், நீ என்னை இந்த நொடி வரை உன் உபாத்தியாயனாகத்தான் பார்க்கிறாய்… அதை விடுத்து உன்னிடம் வேறு எண்ணம் இல்லை, அதையும் நான் நன்கறிவேன்.” அவள் இடை வளைத்திருந்த அவன் கரங்கள் இப்போது லேசாக வருடி கொடுத்தன. மைத்ரேயி அவனை விட்டு விலக முயன்றாள். ஆனால் அது நடக்கவில்லை.
 
“விட்டுவிடும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை பெண்ணே! வீணாக முயற்சிக்காதே!” 
ஏதேதோ பேச நினைத்து அவன் வருகைக்காக காத்திருந்த பெண் அனைத்தையும் மறந்து அவன் கண்களையே பார்த்திருந்தாள், அவன் கைகளுக்குள் சிறைப்பட்டிருந்தாள்.
 
***
 
“பல்லவேந்திரா!”
 
“சொல் மாறா, ஏதாவது தகவல் கிடைத்ததா?”
 
“காவலாளி ஒருவனை அழைத்து வந்திருக்கிறேன்.”
 
“நல்லது, வரச்சொல்.” மகேந்திர பல்லவர் சொன்ன சிறிது நேரத்திலெல்லாம் வீரன் ஒருவன் உள்ளே நுழைந்து சக்கரவர்த்திக்கு வணக்கம் வைத்தான்.
 
“உன் பெயர் என்ன?”
 
“முருகன் மன்னவா.”
 
“இதுதான் உனது சொந்த ஊரா?”
 
“ஆமாம் மன்னவா, பிறந்தது முதல் கொற்கையில்தான் வசிக்கிறேன்.”
 
“நல்லது, காவிரிக்கு அண்மையில் இருக்கும் மண்டபத்தை நீ அறிவாயா?”
 
“நன்றாக அறிவேன் மன்னவா.”
 
“அங்கே… உபாத்தியாயர் யாராவது வசிக்கிறார்களா?”
 
“ஆமாம் மன்னவா.” அந்த ஒற்றைப் பதிலில் மகேந்திர பல்லவர் மகிழ்ந்து போனார்.
 
“அவர் பெயர் கந்தன்.” காவலாளி மேலும் சொன்னான்.
 
“கந்தனா?” சக்கரவர்த்தியின் முகத்தில் குழப்பத்தைக் காணவும் அந்த வீரன் இன்னும் சற்று விளக்கினான்.
 
“ஆமாம் மன்னவா, சமஸ்கிருத கடிகையில் பணி புரிகிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.”
 
“இல்லையில்லை…‌ நான் சொல்லும் உபாத்தியாயர் வயதானவர், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக காஞ்சியிலிருந்து கொற்கைக்கு வந்து இங்கேயே வாழ்கிறார்கள்.”
 
“ஆமாம் ஆமாம், அவர்கள்தான் மன்னவா, உபாத்தியாயரின் மாமனார் கூட உபாத்தியாயர்தான், அவர்தான் காஞ்சியிலிருந்து கொற்கைக்கு வந்தவர்.”
 
“அவர் பெயர் சேந்தன், அது தெரியுமா உனக்கு?”
 
“அப்படியா… வயதானவர் என்பதால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை, மரியாதை நிமித்தம் உபாத்தியாயர் என்றே அழைப்போம்.”
 
“சரி, அவர்கள் வீட்டிற்கு என்னை அழைத்துக்கொண்டு போ, யாரிடமும் எதுவும் சொல்லாமல் இப்போதே கிளம்பு.”
 
“ஆகட்டும் பல்லவேந்திரா.” அதன் பிறகு மகேந்திர பல்லவர் கண நேரம் கூட தாமதிக்கவில்லை.
அந்த வீரன் வழிகாட்ட, பொதிகை மாறனும் கூட வர, படபடக்கும் நெஞ்சத்தோடு அந்த ஆற்றங்கரை வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
 
வந்தவர்களை வரவேற்க அங்கே யாரும் இருக்கவில்லை. ஆனால் யாரும் எதுவும் சொல்லாமலேயே அது உபாத்தியாயர் வீடுதான் என்று புரிந்துகொண்டார் சக்கரவர்த்தி.
 
உள்ளேயிருந்து தவழ்ந்து வந்த வீணையின் இன்ப நாதம் அவரைப் பரவசப்படுத்தியது.
 
பொதிகை மாறனை நோக்கி அர்த்தம் பொதிந்த புன்னகை ஒன்றைச் சக்கரவர்த்தி புரிய வீரனிடம் ஒரு சிறு பணப்பையைக் கொடுத்து அவனை அப்புறப்படுத்தினார் உப சேனாதிபதி.
 
வாசலிலேயே குதிரையை நிறுத்திவிட்டு மகேந்திர பல்லவர் விடுவிடுவென்று யாருடைய அனுமதியும் இன்றி வீட்டினுள் நுழைய சற்றே தயங்கிய படி அவரைப் பின் தொடர்ந்தார் பொதிகை மாறன்.
 
வீட்டிற்குள் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வீணை நாதம் வழிகாட்ட அந்த திசையில் சென்ற சக்கரவர்த்தி கண்டதெல்லாம் கண்மூடி அமர்ந்திருந்த பரிவாதனியைத்தான்!
 
அவள் இசைத்துக்கொண்டிருந்த ராகம் முகாரியாகவே இருந்தாலும் பல்லவ சக்கரவர்த்திக்கு பரம சுகமாகவே இருந்தது. கண்களை மூடிய நிலையில் கூட அவள் விரல்கள் மெட்டுக்களை தவறாமல் தடவிக்கொடுத்தது.
 
சாட்சாத் கலைவாணியே தன் முன் அமர்ந்திருப்பது போல தன்னை மறந்து சக்கரவர்த்தி நின்றிருக்க, வீட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று ஆராய்ந்தார் பொதிகை மாறன்.
 
அவர் ஆவலைப் பொய்யாக்காமல் வீட்டின் பின்புறமாக இருந்து உள்ளே நுழைந்தாள் மகிழினி. வந்தவள் திகைத்து நிற்க இது எதையும் கவனிக்கும் நிலையில் சக்கரவர்த்தி இல்லை. அவர் கண்கள் வீணை மீட்டும் பெண்ணை மொய்த்து நிற்க அவர் சிந்தையை அவள் மீட்டிய கானம் மொய்த்து நின்றது.
 
இந்த மோன நிலை இன்னும் எத்தனைக் காலம் நீடித்திருக்குமோ! ஆனால் அதற்கு இடம் கொடாமல் பேச்சை ஆரம்பித்தார் பொதிகை மாறன்.
 
“பல்லவேந்திரா…” அந்த ஒற்றை வார்த்தையில் அங்கே அதுவரை நேரமும் அனைவரையும் கட்டியிருந்த மாயக்கயிறு ஒன்று சட்டென்று அறுபட பரிவாதனி திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.
தான் கனவிலும் எதிர்பார்த்திராத தனது கணவரை அங்கே, அந்த கணம் பார்த்த மாத்திரத்தில் மடிமீதிருந்த வீணையையும் மறந்து அவசரமாக எழுந்தாள்.
 
“பரிவாதனி!” மகிழினி ஓடிவந்து வீணையைப் பிடித்த பின்புதான் அதை மறந்து தான் எழுந்திருப்பது பரிவாதனிக்கு புரிந்தது. வீணையை அதற்குரிய இடத்தில் வைத்த மகிழினி சக்கரவர்த்தியை நிமிர்ந்து பார்த்தாள்.‌ அதுவரை யாரும் எதுவும் பேசியிருக்கவில்லை.
 
“வாருங்கள் பல்லவேந்திரா! இந்த அடிமையின் வாசலுக்கு நீங்கள் வந்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி!” அந்த குரலில் தொனித்த ஏளனத்தில் பொதிகை மாறனின் கை வாளைத் தடவியது.
 
“உங்கள் வாசலுக்கு நான் வரவே கூடாதென்று ஓடி ஒளிந்து விட்டு இப்படிப் பேசுவது நியாயமா மகிழினி?” கேள்வி மகிழினியை நோக்கி வந்தாலும் கூரிய பார்வை என்னவோ பரிவாதனியைத்தான் பதம் பார்த்தது.
 
பரிவாதனி தன்னை மறந்து நின்றதென்னவோ சிறிது நேரந்தான். இவர்கள் பேச்சில் சுயநினைவிற்கு மீண்டவர் நிலத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தார். எதிரே தன்னை விழிகளால் துளைத்து நிற்கும் மனிதரைப் பார்க்கும் துணிவு அவருக்கு இருக்கவில்லை.
 
“சக்கரவர்த்தி நினைத்திருந்தால்…” மகிழினி வார்த்தைகளை முடிக்கவில்லை.
 
“நான் மட்டும் நினைத்து என்ன லாபம் மகிழினி? இரு கைகள் தட்டினால்தானே ஓசை வரும்?” இப்போதும் அந்த ராஜ பார்வைப் பெண்ணையே வலம் வந்தது.
 
“அது சரி… இங்கே யாரெல்லாம் வசிக்கிறீர்கள்? உபாத்தியாயர் எங்கே?” இடக்காக கேட்டார் மகேந்திரர்.
 
“உபாத்தியாயர் வெளியே போயிருக்கிறார், பக்கத்தில் இருக்கும் வீட்டில் நான் என் கணவர் மகனோடு வசிக்கிறேன் மன்னவா.”
 
“ஓஹோ! இந்த வீட்டில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் மகிழினி?” சக்கரவர்த்தி எங்கே வருகிறார் என்று புரிந்த மகிழினி அந்த கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. உரியவளே பேசட்டும் என்று அமைதியாக நின்றிருந்தாள்.
 
“மௌனம் எந்த காயத்திற்கும் மருந்தாகாது மகிழினி!” இப்போது சக்கரவர்த்தியின் குரலில் கோபம் தெரிந்தது. அந்த ஆவேசத்தில் பரிவாதனியின் உடல் லேசாக நடுங்கியது. மகிழினியின் முகத்திலும் இப்போது லேசாக ஆத்திரம் ஏறியது.
 
“இத்தனைக் காலம் கடந்த பின்பு இங்கே யார் வசித்தால் உங்களுக்கென்ன இல்லாவிட்டால்தான் உங்களுக்கென்ன மன்னவா?”
 
“பெண்ணே! நீ பேசுவது சக்கரவர்த்தியிடம் என்பது நினைவிருக்கட்டும்!” பொதிகை மாறனின் கை பேசியபடியே வாளை மெதுவாக உருவியது.
 
“ம்!” மன்னரின் அந்த ஒற்றை ஹூங்கார அதட்டலில் உப சேனாதிபதியின் வாள் மீண்டும் உறைக்குள் போனது.
 
“உப சேனாதிபதி அவர்களே! நான் இப்போது பேசுவது சக்கரவர்த்தியிடம் அல்ல! இதோ நிற்கிறாளே… என் தோழி, அவள் கணவரிடம்!”
 
“பரவாயில்லையே மகிழினி, உனக்காவது நான் உன் தோழியின் கணவன் என்று ஞாபகம் இருக்கிறதே!”
 
“ஏன் இல்லை மன்னவா! நன்றாக நினைவில் இருக்கிறது! ஏனென்றால் உங்கள் காதலுக்கு நானும் ஒரு சாட்சி அல்லவா?”
 
“ஓஹோ! அப்படியென்றால்… இன்னும் வேறு யாராவது சாட்சிக்கு இருக்கிறார்களா மகிழினி?”
 
“ஏனில்லை மன்னவா? திவ்யமாக இருக்கிறார்கள்! ஆனால் இப்போதாவது உரியவர்கள் வாய் திறந்தால் நன்றாக இருக்கும், ஓடி ஒளிந்து, தந்தை பெயர் தெரியாமல் வளர்த்து…” 
அதற்கு மேல் அமைதியை இழந்த மகேந்திர பல்லவரின் கைகள் இதுவரை ஒதுங்கி நின்றிருந்த பரிவாதனியை தன்னை நோக்கி ஆவேசமாக இழுத்தது.
 
“பல்லவேந்திரா!” ஓவென்று கதறியபடி தன் காலடியில் வீழ்ந்த பெண்ணை சட்டென்று தாங்கிக்கொண்டார் சக்கரவர்த்தி. மகிழினியும் பொதிகை மாறனும் அதற்கு மேல் அங்கே தாமதிக்கவில்லை. அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டார்கள்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!