இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 17

இருவரும் குளித்து கிளம்பி, ஸ்ரீ கரண் வீட்டுக்கு வந்திருந்தனர் அவரிடம் சொல்லி கிளம்பலாம் என்று.

நேற்று அவன் அணிவித்த தாலியும், கூடவே ஒரு சின்ன செயினுமாக இவள் கிளம்பி இருக்க அதைப் பார்த்த ஷிவானி தன் அறைக்கு சென்று  அவளது நகைகளை எடுத்து வர,

“கொஞ்ச இரு ஷிவானி” என்ற ஸ்ரீ கரண் அவர் அறைக்கு சென்றார்.

அவரது மனைவி நகைகளும், ஷிவானி அம்மாவின் பழைய நகைகளும் எடுத்து வந்தவர்,

“இந்தா வைஷு இதெல்லாம் நம்ம குடும்ப நகை, இனி உனக்குதான்” என அவள் கையில் கொடுக்க,

“இல்லை வேண்டாம் தாத்தா, இதெல்லாம் ஷிவானிக்கு சேர வேண்டியது. அவளதை அவளுக்கே குடுங்க” ஸ்ரீ கூற,

“என்னப்பா ஸ்ரீ இப்படி சொல்லுற?”

“இல்ல வேண்டாம் தாத்தா, ஷிவானிக்கு உள்ளதை அவகிட்டவே குடுங்க இப்போ இதுல ஒரு ஆரம் மட்டும் எடுத்துக்கிறேன்” என்றவன் அதை அவன் கையாலையே வைஷுவுக்கு அணிவித்தான்.

சின்ன சின்ன விசயத்தையும் அவளுக்காகப் பார்த்து பார்த்து செய்தான் ஸ்ரீ. ஒவ்வொன்றிலும் ‘இவள் என் மனைவி’ என்ற செய்தி இருந்தது.

இங்கிருந்து நடந்து செல்லும் தூரம்தான் இருந்தாலும், முதல் நாள் செல்லும் பொழுது நடந்து அவளை கூட்டி செல்வது அவனுக்கு பிரியம் இல்லாமல் இருக்க, அவனது பைக்கில் சென்றனர்.

 அங்கே வீட்டின் முன் பைக் நிறுத்திய ஸ்ரீயால் மேற்கொண்டு அவர்கள் வீட்டின் உள்ளே  செல்ல மனம் வரவில்லை.

இதுவரை இப்படி யார் வீட்டுக்கும் அவன் சென்றதில்லை. அது அவனுக்கு மட்டுமல்ல ஸ்ரீ கரணுக்குமே பிடிக்காதது. மிகவும் தயக்கமாய் இருந்தது அவனுக்கு.

பைக் விட்டு இறங்கி அவனையேப் பார்த்திருந்தாள் வைஷு.

அப்பொழுது பார்த்து, அன்று ஸ்ரீ, ஷிவானியிடம் கூறிய ‘சரி வராது’ வார்த்தை காதில் ஒலிக்க அவளின் உள்ளே ஒருவலி. அது அவளின் கண்களில் பிரதிபலித்தது.

அவளின் முகச்சுணக்கத்தினைக் கண்டுக்கொண்ட அவனது மனமோ அவனை மானவரியாக திட்டியது. அவளின் சொந்தமெல்லாம் அவனதுமல்லவா…  

 ‘என்ன ஸ்ரீ நீ. இதெல்லாம் இனி பழகிக்கணும். அவளுக்காக இது கூட உன்னால பண்ணமுடியாதா? அவளையே உனக்கு சொந்தம் ஆக்கிட்ட பிறகு என்ன தயக்கம்’

நீ அவளை மதித்து அங்க போனாதானே அவ உன்கூட சந்தோசமா வாழுவா. பேசாம உள்ளே போ ஸ்ரீ’ மனம் எடுத்துரைக்க,

“வா வைஷு” என்றபடி அவளது கையை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல, வாசலில் வைத்து ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார் கோதை.

 எல்லாரிடமும் இன்முகமாகவே பேசினான் ஸ்ரீ. அதிலும் வசந்த் பேச்சு அவனை கவர சில வார்த்தைகள் அவனிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் ‘மாமா’ என்றழைப்பதே அவனுக்கு ஒரு வித மகிழ்ச்சியை உண்டாக்கியது.

அதற்குள் சிவா, ‘லோடு சென்ற வண்டி வழியில் ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டது’  என அழைக்க, வைஷுவை அங்கு விட்டு இவன் வேக வேகமாய் சென்றான்.

அவன் சென்றதில் கோதைக்கு மனதில் சின்ன வருத்தம் ஆனாலும் அவனின் சூழ்நிலை அறிந்து அமைதியாக இருந்துக் கொண்டார்.

 இவனுக்காக வீட்டில் விருந்து தயாராக அவன் வரவேயில்லை. வைஷ்ணவி பலமுறை அழைத்தும், ‘வந்துவிடுவேன் வந்துவிடுவேன்’ என்று மட்டும் கூறினான்.

அவனுக்காய், இவர்கள் காத்திருக்க மணி மூன்று ஆனா பிறகும் வராமல் போக, அவர்களுக்கு அழைத்து விசயத்தை கூறியிருந்தான்.

“நான் வர லேட் ஆகும் போல் தெரிகிறது. நான் வரும் வரை வைஷு அங்கு இரு” என்பது போல் கூறினான்.

இவன் வைஷுவை அழைக்க வரும் பொழுது மணி சரியாக ஆறு. கடைசியில் இவன் அவர்கள் வீட்டில் விருந்து உண்ணவே இல்லை.

‘ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க’ ஸ்ரீ கரண் கூறி அனுப்பவே அங்கு சென்று உடனே அவளை அழைத்து வந்துவிட்டான்.

இவர்கள் வீட்டுக்கு வந்த நேரம், ஷிவானியும் இவர்களை நோக்கி வந்திருந்தாள்.

“அண்ணா, நீ வைஷு வீட்டுல சாப்டலியாமே?” ஷிவானி அவனிடம் கேட்க,

“உனக்கு யார் சொன்னா?”

“அதெல்லாம் நியூஸ் வந்திச்சு சொல்லு ஏன் சாப்டல” என்றாள். ஒருவேளை அவர்கள் வீட்டில் சாப்பிட இவன் தயங்கிறானோ என்ற எண்ணத்தில் கேட்டிருந்தாள்.

“நம்ம வண்டி ஒன்னு போற வழில ஆக்ஸிடென்ட் ஆகிட்டு ஷிவானி, லோடு எல்லாம் அப்படியே ரோட்டுல விழுந்திட்டு, அதை தனி வண்டில ஏத்தி போலீஸ் வந்து நிறைய வேலை வந்துட்டு ஷிவானி அதுதான் அங்க போகமுடியல” என்றவன், “இன்னைக்கு இல்லன்னா இன்னொருநாள் போகலாம்” என்றான் வைஷுவைப் பார்த்து.

வைஷுவுக்கு சின்ன வருத்தம் இருந்தது என்னவோ உண்மைதான். அவன் அவர்கள் வீட்டில் சாப்டாதது அவளுக்கு வருத்தமாகியது. அந்த வருத்தத்தில்தான் ஷிவானியிடம் கூறியிருந்தாள்.

‘அவன் வீட்டுக்கு வரவில்லை’ என்று. இப்பொழுது அவன் கூறியதை கேட்டதும் வருத்தம் எல்லாம் போக, அவனைப் பார்த்து கொஞ்சமாய் சிரித்தாள்.

அவள் சிரிப்பு அவனுக்கும் ஒரு நிறைவைக் கொடுக்க, “சரி நீ வீட்டுக்கு கிளம்பு” என்றான் ஷிவானியை பார்த்து.

“ஏன்… ஏன்… நான் வீட்டுக்கு போகணும் அதெல்லாம் போகமுடியாது” என்றாள் சட்டமாய் அமர்ந்துக் கொண்டு.

‘சரி இருந்துக்கோ’ என்பதுப் போல் ஷிவானியைப் பார்த்தவன், “தலை வலிக்குது வைஷு, ஒரு காபி கொண்டுவாயேன்” என்று அங்கு நின்றிருந்த வைஷுவிடம் உரைக்க, சமையல் அறை நோக்கி செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

அவனின் பார்வையை கண்ட ஷிவானி, “ஓஹோ… இதுக்குதான் என்னை விரட்டுறியா?” என்றாள் ரகசியமாய்.

 “நீ உன் வாயை எப்போடி மூடுவ?” என்றான் அவளை நோக்கி.

“சரி… சரி… பூஜை வேளை கரடியாய் நான் ஏன் இருக்கனும்” எழுந்துக் கொண்டவள், “வைஷு கிளம்புறேன்” இங்கிருந்தே கத்தி வெளியே சென்றாள்.

“நில்லு ஷிவானி” என வைஷு சமையல் அறையில் இருந்து வெளி வர, ஷிவானி அதை காது கொடுத்து கேட்காமலே வெளியே சென்றுவிட்டாள்.

“இந்த கொசு தொல்லை தாங்கலடா சாமி” ஸ்ரீ சத்தமாய் கூற,

“எந்த கொசு” இவள் கேட்க,

“ஷிவானிதான். என்னமோ நான் எப்பவும் ரொமான்ஸ் மூட்ல இருக்க போலவே பில்டப் பண்ணிட்டு போறா, அவளுக்கு எங்கே தெரியபோகுது நான் இன்னும் ஒரு கிஸ் கூட குடுக்க வழி இல்லாம இருக்கன்னு” இவன் போலி வருத்தம் காட்டி பேச,

அவன் கூறியதை கேட்காதவள் போல் திரும்பி அவள் செல்ல, டக்கென்று அவள் கையைப் பிடித்தான் ஸ்ரீ.

இதை எதிர் பார்க்காத வைஷு, அவனிடம் இருந்து கையை உருவப்பார்க்க,

   “கல்யாணம் முடிஞ்சு மறுவீடு வரைக்கும் போயிட்டு வந்தாச்சு இன்னும் பொண்டாட்டி கிட்ட ஒரு கிஸ் கூட வாங்கல என்னடா ஸ்ரீ நீ” சத்தமாய் அவனுக்குள்ளே கூற,

“அச்சோ… நடு ஹால்ல்ல நின்னு என்ன பேசுற நீ?”

“அப்போ நம்ம ரூம்னா பேசலாமா?” என்றான் அவளை அருகில் இழுத்து.

அவனுள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துக் கொண்டிருந்தாள் வைஷு.

‘நீ என்னை என்னமோ பண்ணுறடா?’ அவளுக்குள்ளே கூறிக் கொண்டாள்.

மிக அருகில் நெருங்கி நின்று, “என்ன சத்தத்தையே காணும், மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா?” என்றான் அவளது காதில் மெதுவாய்.

அவளை பின்னோடு அணைத்தார் போல் நின்றவன், பிடித்திருந்த கைகளை விட்டு, அவளது இடையை அணைக்க எத்தனிக்கும் அந்த ஒரு நொடியில் அவனை விட்டு விலகி சென்றாள்.

இவனும் அவளின் பின்னே செல்ல, அவள் காபியை கப்பில் ஊற்றிக் கொண்டிருப்பதை கண்டவன், “எப்படியும் இங்கே தானே வந்தாகணும்” என்றபடியே அவர்களது அறைக்கு சென்றான்.

  அவனது மூச்சு காற்றை அவளது கழுத்து இன்னும் உணர்த்திக் கொண்டிருந்தது. அதே நேரம் அவன் கூறிய தலைவலியும் நியாபகம் வர, அவனை நோக்கி சென்றாள்.

அவன் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் முன்னே அமைதியாய் கப்பை நீட்ட, ஒரு கையால் கப்பை வாங்கியவன், மறு கையால் அவளை பிடித்து இழுக்க, அவன் அருகில் பொத்தென்று அமர்ந்தாள் வைஷு.

“என்ன பண்ணுற நீ?” அவனை முறைக்க,

“என்ன பண்ணுறேன் நான்” என்றான் அவளை போலவே,

அவள் அவனைப் பார்க்க, அவன் கொஞ்சமாய் அவளை நோக்கி நகர்ந்தான்.

 அவன் அருகில் வரவும், பயத்தில் வேர்க்க ஆரம்பித்திருந்தது. இத்தனை நேரம் இருந்த தைரியம் சட்டென்று மறைய முகத்தில் வேர்வை துளிகள் அரும்ப ஆரம்பித்தது.

“என்ன இப்படி வேர்க்குது” என்றபடி அவளது முகத்தை நோக்கி கையை நீட்ட, முகத்தை அந்த பக்கமாய் திருப்பிக் கொண்டாள் வைஷு.

“நான் உன்னை இப்படி கிஸ் பண்ணவா வந்தேன் முகத்தை திரும்புற” என்றபடி அவன் அவள் கன்னத்தை நோக்கி குனிய,

அவசரமாய் அவனை விட்டு பல அடிகள் நகர்ந்தாள்.

“நீ எங்க போனாலும் நானும் வருவேனே” இவன் கண்ணடித்து கூறியபடி அவளை நோக்கி பல அடிகள் நகர,

“ஏன் இப்படி வம்பு பண்ணுற”

“உன்கிட்ட பண்ணாம வேற யார் கிட்ட பண்ணுவேன்?” இவன் கேட்க,

அதே நேரம் அவன் கூறிய ‘சரி வராது’ என்ற வார்த்தை வைஷு காதில் ஒலிக்க, அவனை விட்டு எழுந்தாள் அவள்.

‘இவளுக்கு என்ன ஆச்சு, இவ மனசுல என்னவோ இருக்கு’ யோசனையாக காபியை அருந்தியப்படியே செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

***       

   திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது,  வைஷு மனதில் என்ன இருக்கிறது என்று பல விதமாக யோசித்தும் அவனால் அறியமுடியவில்லை.

வீட்டை நினைத்து வருத்தத்தில் இருகிறாளோ, என்று எண்ணி நேற்றே கூறிவிட்டான். ‘முன்ன போல் எல்லா கணக்கு வழக்கையும் பார்த்துக்கோ உன் வீட்டுக்கு என்ன செய்யணும்னு நினைச்சியோ அதை தாராளமா பண்ணிக்கோ’ என்றும் கூறியாகி விட்டது ஆனால் அவள் முகம் இன்னும் ஏதோ ஒரு யோசனையில் இருந்தது.

‘கொஞ்சம் விட்டு பிடிப்போம்’ என்று எண்ணிக் கொண்டான்.

அவனிடமும் சரிக்கு சரி வாயடிக்கும் வைஷுவால் அவனிடம் கேட்க பிடிக்கவில்லை.

அவன் ஏன் தன்னை ‘சரி வராது’ என்றுக் கூறினான் என்று கேட்க முயலவில்லை. அவனாக ஏதாவதுக் கூறுவான் என்று இவள் பார்த்திருக்க, அவள் ஏதாவது கூறுவாள் என்று இவன் பார்த்திருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் கேட்காமலே நாட்களை கடத்தினர். அவனுக்கு பார்த்து பார்த்து இவள் செய்ய இவளுக்கு பார்த்து பார்த்து அவன் செய்தான்.

அவளை அறியாமலே ‘இவன் என் கணவன்’ என்ற பந்தம் வந்திருந்தது.

***

அன்று ஷிவானியும், வைஷ்ணவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, “உன்னை தாத்தா கூப்டுறாங்க ஷிவானி” என்றபடி வந்து நின்றான் ஸ்ரீ.

“இங்க வந்தா கூப்ட்டாங்க. எனக்கு சத்தம் கேட்கலியே?” என்க

“இப்போ தான் எனக்கு கால் பண்ணி உன்னை கூப்டாங்க”

“என்கிட்ட போன் இருக்கே, எனக்கு கால் பண்ணாம உனக்கு பண்ணுனாங்களா?” சந்தேகமாய் கேட்க,

“எனக்கு வேற பேச கால் பண்ணுனாங்க, அப்படியே உன்னையும் வர சொன்னாங்க போடி…”

“என்னமோ நம்பமுடியல ஆனாலும் பார்த்துட்டு வாரேன்” என்றவள், “அண்ணி, இப்போ வந்திடுறேன்” என்றபடி எழுந்து சென்றாள் ஷிவானி.

“வைஷு, நீ நம்ம ரூம்க்கு வா” என இவளை அழைக்க,

“எதுக்கு?” என்றாள் இவள்.

“பேசணும் வா?” என்றான் கடுப்பாக.

அவனை முறைத்தபடியே எழுந்து அவனுக்கு முன்னே நடக்க, டக்கென்று அவளை பிடித்து சுவற்றில் சாய்த்தவன் அவளுக்கு அணைவாக இரு கைகளையும் சுவற்றில் வைத்திருந்தான்.

அவள் மீண்டும் அவனை விட்டு நகரப்பார்க்க, “என்னடி, உனக்கு அவ்ளோ திமிரா? ஒரு கிஸ் குடுக்க மாட்ற? என்னையும் குடுக்க விடமாட்ற தள்ளி தள்ளிப் போற?” அவள் மேல் குற்றம் வைக்க,

அவனை முறைத்தவள், முகத்தை அந்த பக்கம் திருப்ப,

“நீ தரலன்னா என்ன? நான் தாரேன்” என்றபடி அவளது முகத்தை பிடித்து  அவளைப் பார்த்தான்.

அவள் இதழ் சுழித்து, அவனிடம் இருந்து முகத்தை வலுகட்டாயமாக திருப்ப, அவளை நேராகப் பிடித்து அவளது இதழ் நோக்கி குனிய,

கிடைத்த இடைவெளியில் அவள் நகர பார்க்க, அவளை இடையோடு அணைத்துக் கொண்டான்.

“நான் தந்தா கூட, இடத்தை காட்டமாட்டியா நீ?” என்றபடி அவளின் இடையை வருட,

“உன் கையை வச்சுக்கிட்டு உன்னால சும்மா இருக்க முடியாதா?” நெளிந்தபடியே அவனது கையை விலக்க முற்பட்டாள்.

“நீயா இடத்தைக் காட்டினா, சின்னதா பண்ணிட்டு விடுவேன், நானா இடத்தை கண்டுபிடிச்சா, அப்புறம் நான் பொறுப்பில்லை” கண்ணடித்து கூறியவன் கைகளோ இடையில் அழுத்தமாய் பதிந்தது.

‘உன் கன்னத்தை காட்டவில்லை என்றால், இங்கு தான் என் முத்தத்தை பதிப்பேன்’ என்பதாய் இருந்தது அவனது செய்கை.

 “ஐயோ ஷிவானி!” இவள் பதறி அவனுக்கு பின்னே பார்க்க,

இவன் பின்னால் திரும்பிப் பார்த்த நொடியில், அவனை தள்ளி விட்டு நகர்ந்திருந்தாள் அவள்.

“இன்னும் எத்தனை நாள் இந்த ஒட்டம்ன்னு நானும் பாக்குரேன்” இவன் சிரித்தபடியேக் கூற,

சிரித்தபடியே சென்றாள் அவள். மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

அவளை போலவே அவளது கொலுசும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து இனிய ஓசையை வெளியிட்டு அவளின் பின்னே சென்றது!

எப்பொழுதும் போல் அவளையும், அவளது கொலுசின் ஓசையையும் ஆசையாய்! காதலாய்! பார்த்திருந்தான் ஸ்ரீ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!