ரகசியம் 10 💚

ei9FORT85220-f771cd8e

திருமணமாகி அன்றையநாள் இரவே குடித்துவிட்டு வந்திருந்த வீரஜ், அடுத்தநாள் காலை சீக்கிரமாகவே எழுந்துவிட்டான். எழுந்ததுமே ஹேங்கோவரில் அவனுக்கு தலை வலிக்க, விழிகளை மூடியவாறு நெற்றியை பிடித்து முணங்கிக்கொண்டே எழுந்தமர்ந்தவன், சிலநிமிடங்கள் கழித்தே மெதுவாக விழிகளைத் திறந்தான்.

விழிகளைத் திறந்ததுமே எதிரேயிருந்த சுவரைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி! “எங்க என் சமந்தா?” பதறியடித்துக்கொண்டு எழுந்த வீரஜ், தனதறைச் சுவற்றை  சுற்றி சுற்றிப் பார்க்க, இத்தனைநாள் ஆசையாக கண்விழித்த முகமெதுவும் சுவற்றில் இல்லை.

‘எவன்டா அவன் என் தேவதைங்க மேலயே கை வைச்சது?’ உள்ளுக்குள் கோபமாக நினைத்தவனுக்கு நிச்சயமாகத் தெரியும் இது தன் வீட்டாற்களின் வேலை இல்லையென்பது. அப்போது சரியாக அவன் காதுகளில் விழுந்தது “அப்பா… அப்பா…” என்ற முணங்கல் சத்தம்.

அதில் திடுக்கிட்டவன், சத்தம் வந்த திசையை நோக்க, அங்கு தரையில் படுத்திருந்தவளை பார்க்கும் வரை தனக்கொரு மனைவி இருப்பதும் அவள் தனதறையில் இருப்பதும் சுத்தமாக ஞாபகத்திற்கு இல்லை அவனுக்கு.

‘ஓ மை காட்! கல்யாணம் ஆனதே மறக்குற அளவுக்கு இருக்கடா வீரா. ஆனாலும் இவளுக்கு எவ்வளவு தைரியம்? என் ரூம்ம அவ இஷ்டப்படி பண்ணி வச்சிருப்பா’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவன், அங்கு க்ளாஸிலிருந்த தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றிவிட, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள் கயல்.

வீரஜ்ஜோ பாவமாக முகத்தை வைத்தவன், “அச்சோ சோரி பாப்பா, லேசா தெளிச்சி எழுப்பி விட நினைச்சேன். தெரியாம மொத்தமும் உன் மூஞ்சுல கொட்டிருச்சு” என்றுவிட்டு உதட்டைப் பிதுக்க, இத்தனைநாள் அவனை நம்பிய கயலுக்கு ஏனோ அது பொய்யாக தோன்றியது. இருந்தும் அதை வெளிக்காட்டாது எழுந்து நின்றவள், எதுவும் பேசாது தரையை வெறித்தவாறு நிற்க, அவளை உற்றுப் பார்த்தான் அவன்.

“உங்களுக்கு இந்த பழக்கம் கூட இருக்கா?” கயல் அவனைப் பார்க்காதுக் கேட்க, ‘ஙே’ என முழித்த வீரஜ், “எதே தண்ணி ஊத்துற பழக்கமா?” கேலியாகக் கேட்க, வேமாகத் திரும்பி “இல்லை, தண்ணி அடிக்கிற பழக்கம்” உதட்டைச் சுழித்துக்கொண்டுக் கேட்டாள் அவள்.

அப்போதுதான் நேற்றிரவு குடித்ததே அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. ஆனாலும் அலட்சியமாக, “ஆமா இருக்கு. அப்பப்போ தோனும் போது” என்றுவிட்டு அவன் பாட்டிற்கு குளியலறைக்குள் நுழைய, கயலுக்கு தன்னைத்தானே மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழித் தெரியவில்லை.

ஆழ்ந்த பெருமூச்செடுத்து அறையிலிருந்து மெல்ல வெளியேறியவள், வீட்டை விழிகளைச் சுழலவிட்டு நோட்டமிட்டாள். இந்த வீட்டிற்கு வந்து இரண்டுநாட்கள் ஆகிவிட்டது. ஆனால், இங்கு வந்ததும் இருந்த பதட்டம், திருமண பதட்டம் அவளை நிதானமாக இருக்க விடவில்லை. அறையிலேயே அடைந்துக் கிடந்தவளுக்கு வீட்டைச் சுற்றிப் பார்க்கும் எண்ணமும் எழவில்லை.

இப்போதுதான் நிதானமாக அளவிட்டாள். மூன்று அறைகளோடு ஹோல், சயைலறை, சிறிய மேல்மாடி, சிறு முற்றம் என்றிருந்த வீரஜின் வீட்டை ஊரிலிருக்கும் மாளிகை போன்ற அவள் வீட்டின் ஒரு மாடியுடன் ஒப்பிட்டால் கூட பாதியைதான் அடைத்திருக்கும்.

அங்குமிங்கும் மூட்டை மூட்டையாக மளிகைப் பொருட்கள் கிடக்க, அதைப் பார்த்ததும்தான் கயலுக்கு வீட்டிலேயே இவர்கள் செய்யும் வியாபாரமும் புரிந்தது. மாடிக்குச் செல்வதற்காக சிறு ஏணி வீட்டின் ஓரத்திலிருக்க, ஒரு ஆர்வத்தோடு மேலே ஏறச் சென்றவள், “பாப்பா…” என்ற வீரஜின் அழைப்பில் அப்படியே நின்றாள்.

“எங்க போற? அங்க எதுவும் கிடையாது. எல்லா விக்குறதுக்காக வச்சிருக்க மளிகை சாமானுங்கதான் இருக்கு” சொல்லிக்கொண்டே சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவன், “சீக்கிரம் டீ போட்டு எடுத்துட்டு வா!” என்றுவிட்டு திரையில் பார்வையைப் பதிக்க, இதுவரை நடந்ததை மறந்து பொறுப்பான மனைவியாக நீண்ட தலைமுடியை கொண்டையிட்டவாறு சமையலறைக்குள் ஓடினாள் கயல்.

சமையலறைக்குள் நுழைந்து வேலை செய்வது கயலின் வாழ்க்கையில் இது இரண்டாவது முறைதான். ஒருதடவை பார்த்திபனுக்காக சமையல் செய்கிறேன் பேர்வழியென்று அவள் கையை சுட்டுக்கொண்டதிலிருந்து சமைலறைக்குள் நுழைவது வீட்டில் அவளுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. 

உள்ளே நுழைந்தவளுக்கு பொருட்களை கண்டுபிடிப்பதற்கே அரைமணிநேரம் தேவைப்பட்டது. கூடவே, சமையலறையிருந்த அலங்கோல இலட்சணத்திலும் உணவுக்கெட்டுப் போன மணத்திலும் அடிக்கடி முகத்தைச் சுழித்துக்கொண்டாள் அவள்.

எப்படியோ தன்னவனுக்காக தேநீரை போட்டு முடித்தவள், ஒரு ஆர்வத்தோடே சோஃபாவிலிருந்த வீரஜிடம் கொண்டு சென்று நீட்டிவிட்டு விழிகளில் ஆர்வத்தோடு அவனை நோக்க, ஒரு மிடறு அருந்தியவனிடத்தில் எந்த பதிலும் இல்லை. கிட்டதட்ட அவளை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை அவன். கயலும் அதே இடத்தில் அசையாது அவன் பதிலுக்காக காத்திருந்து நின்றுப் பார்த்தவள், ஒரு கட்டத்தில் முடியாமல் அங்கிருந்து நகர்ந்து அறைக்குள் நுழையப் போக, “ஏய்…” என்ற அழைப்பு.

சட்டென்று நின்று திரும்பிப் பார்த்த கயல், எதிரே ருபிதா நின்றிருந்ததைப் பார்த்ததும் “அத்தை…” என்றவாறு அவரை நோக்கிச் செல்ல, அலட்சியமாக அவளை நோக்கியவர், “இதோ இந்த லிஸ்ட்ல இருக்குற சாமானுங்கள எடுத்துட்டு வா! சீக்கிரம், கஸ்டமருக்கு இன்னைக்கு கொடுத்தாகணும்” என்க, அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

அவள் அதிர்ந்து நிற்க, அப்போதுதான் உணர்வு வந்தவன் போல் வீரஜ்ஜோ, “மாதாஜீ, அந்த இடம் ரொம்ப தூசியா இருக்கும்னு என்னை மேல போகவே விட மாட்டீங்க” புரியாதுக் கேட்க, “கண்ணா, அது உனக்குடா, இவளுக்கில்லை” என்ற ருபிதா, “எம்புட்டு நேரம் இப்படியே இருக்குறதா உத்தேசம்? பெக்கபெக்கன்னு முழிச்சிக்கிட்டு இருக்காம சீக்கிரம் போ! ஏகப்பட்ட வேலை இருக்கு. அதுவும் உனக்கு” என்றவர், அவர் பாட்டிற்கு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

கயலுக்கு ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை.

“என் மாமியாரு புது மருமகன்னு என்னை எந்த வேலையும் செய்ய விடுறதில்லை. அம்புட்டு பாசம்டி”

“அப்போ என் மாமியாரு மட்டும் என்னவாம்? நீயாச்சும் புது மருமக, நானு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆக போகுது. இப்போவும் அவங்களோட வேலைய என்கிட்ட சொல்ல மாட்டாங்க. சிலநேரம் என் வேலைய சேர்த்து அவங்களே பார்த்துடுவாங்க”  என்ற திருமணான தன் தோழிகள் பேசிக்கொள்ளும் உரையாடல்களே அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தன.

‘பர..பரவாயில்லை கயல். மொதல்லயே சலுகை கொடுத்து அப்றம் அதை சொல்லிக்காட்டி குத்திக்காட்டி மாமியார் மருமக சண்டை வந்த கதை ஏகப்பட்டது இருக்கு. நம்ம அத்தை மொதல்லயே இந்த வீட்டுக்கு ஏத்த மாதிரி என்னை பழக்கணும்னு நினைக்கிறாங்களோ, என்னவோ?’ ஏதேதோ காரணங்கள் தேடி மனதை சமாதானப்படுத்திக்கொண்டவளுக்கு வீரஜின் மௌனத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அடுத்த ஒரு மணிநேரம் அவர் சொன்ன பொருட்களை தேடி எடுத்து கொண்டு வருவதற்குள் கயலுக்கு மூச்சே நின்றுவிட்டது. அதுவும், அவளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை வேறு. ஒரு பெரிய மூட்டை ஒன்றை மேலேயிருந்து கீழே கொண்டு வந்தவளுக்கு நீண்டநேரம் தூசியிலிருந்ததாலும், முதல்தடவை இதுபோன்ற வேலை செய்ததாலும் மூச்சுத்திணற ஆரம்பிக்க, மூட்டையை தூரப் போட்டுவிட்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள் கயல்.

“ஏய்…” கத்திக்கொண்டே ஓடி வந்த ருபிதாவோ பக்கத்தில் மூச்சுக்காக திணறுபவளை விட்டுவிட்டு முதலில் கவனித்தது மூட்டையிலிருந்த பொருட்களைதான். “அப்பாடா! எதுவும் ஆகல” நிம்மதி பெருமூச்சுவிட்டவர், தன் செயலால் அந்த நிலையில் அதிர்ந்த கயலின் நிலையைப் பார்த்து, “டேய் வீரா! சீக்கிரம் வந்து இவளுக்கு என்னன்னு பாரு” என்றுவிட்டு ஓரமாகச் சென்று அமர்ந்துக்கொள்ள, வேகமாக வந்தான் வீரஜ்.

அவளைப் பார்த்ததும் நிலைமை புரிந்துவிட, “இன்ஹலர் எங்க?” கோபமாக கேட்டவாறு அவளை நெருங்கியவன், அறையை நோக்கி கயல் கைக் காட்டியதும், முறைத்துவிட்டு அவளின் மருந்தை கொண்டு வந்துக் கொடுத்தான்.

வேகமாக அதை உபயோகித்தவளுக்கு மெல்ல மூச்சுத்திணறல் அடங்க, விழிநீரை துடைத்துவிட்டு கயல் தன்னை ஆசுவாசப்படுத்தி முடிக்கவில்லை, “அறிவில்லை உனக்கு?” என்ற வீரஜின் கோபக்குரல்.

அவள் தன்னவனை அதிர்ந்து நோக்க, அவளின் அதிர்ந்த பாவனையெல்லாம் அவன் கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை. “அதான் நோய் இருக்குன்னு தெரியும்ல, அப்றம் இதை கூட வச்சிக்காம ரூம்ல வச்சிக்கிட்டு என்ன சாம்பிராணி பிடிக்கிறியா? நீ போய் சேர்ந்து அது என்னை வந்து தொலைக்கணும். அதானே உனக்கு வேணும்?” வீரஜ் கத்திக்கொண்டேச் செல்ல, கயலுக்கு உள்ளுக்குள் சுள்ளென்ற வலி.

ஒருவகையில் தன் நல்லதுக்காகத்தான் தன்னை திட்டுவதாக அவள் தன்னைத்தனே சமாதானப்படுத்திக்கொண்டாலும், இன்னொரு வகையில் அவன் பேசும் விதம் அவளை மொத்தமாக நொறுக்கியது. கூடவே, “என்னடா, மூச்சுக்கே இம்புட்டு திணறுரா? போயும் போயும் கூட்டிட்டு வந்திருக்கான் நல்ல மருமக” என்ற ருபிதாவின் வார்த்தைகள் ஒருபக்கம் என்றால், அவள் மூச்சுக்காக திணறும் போது கூட கண்டும் காணாதது போல் அலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்த ஏன்ஜல் மறுபக்கம்.

இதுவே, அவளுடைய வீடென்றால் சின்ன கீறலுக்காக கூட துடிக்கும் சொந்தங்கள். அவளால் நடப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் இது அத்தனையும் நடந்து முடிந்தது அவளுக்கு திருமணமான அடுத்தநாளே.

தலையைக் குனிந்து அழுகையை கீழுதட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திய கயல், சிலநொடிகள் கழித்தே அங்கிருந்து நகர்ந்தாள். குளித்து, உடை மாற்றி நிமிடங்கள் கடக்க விழிகளை மூடியே கட்டிலில் அமர்ந்திருந்தவளுக்கு, “மருமகளே…” என்ற மனோஜனின் அழைப்பு.

விழிகளை பட்டென்று திறந்து அறையிலிருந்து வெளியேறியவளுக்கு, உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை பார்த்ததும் ‘ஒருவார்த்தை என்னை கூப்பிடணும்னு தோனல்லையா இவங்களுக்கு, ஏன் வீருக்கு கூட?’ என்ற ஏக்கம் தோன்றினாலும், அவள் விழிகள் மாமனாரை கேள்வியாக நோக்கின.

“வந்து சாப்பிடும்மா, நீ எதுவுமே சாப்பிடலன்னு வீரா சொன்னான்” அவர் இழித்துக்கொண்டுச் சொல்ல, உணவுத் தட்டில் முகத்தைப் புதைத்து பேசிக்கொண்டிருந்த தன்னவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு அவனருகில் சென்று அமர்ந்துக்கொண்டாள் கயல்.

அந்த நால்வருக்குள் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ? அதிசயமாக இரண்டு சப்பாத்தியை கயலின் தட்டில் வைத்த ருபிதா, “சாப்பிடும்மா” வரவழைத்து பாசத்தோடுச் சொல்லி, அவள் ஒருவாய் சாப்பிட்டு முடிக்கவில்லை, அதற்குள் “அப்பாக்கிட்ட எப்போ போய் பேச போறம்மா?” என்று கேட்டார் ஆர்வத்தோடு.

அந்த கேள்வியில் கயலுக்கு புறை ஏற, வேகமாக தண்ணீரை மடமடவென குடித்தவள், “என்..என்ன, இப்போவேவா?” அதிர்ந்த குரலில் கேட்டாள். “பின்ன, அதான் கல்யாணம் ஆகிருச்சுல்ல?” மனோஜன் குறுக்கிட்டுக் கேட்க, இவர்களின் நோக்கத்தை அப்போதும் கயல் அறியவில்லை.

“அது மாமா… நேத்துதானே கல்யாணம் ஆச்சு. இப்போ போய் எப்படி அப்பாக்கிட்ட சேர்த்துக்க சொல்றது? கண்டிப்பா ஏத்துக்க மாட்டாரு. கொஞ்சநாள் போகட்டும், அப்றம் பொறுமையா…” அவள் சொல்லிமுடிக்கவில்லை, “என்ன, பொறுமையாவா?” என்று கோபமாகக் கத்திய ருபிதா, மனோஜனின் எச்சரிக்கைப் பார்வையில் தன்னை அடக்கி “அவருக்கு ஒரே பொண்ணு நீ, அது எப்படி ஏத்துக்காம இருக்க முடியும்? அதுவும், என் வீரா கண்ணாவுக்கு என்ன குறைச்சல்? அவன் சொக்க தங்கம்” என்றார் பெருமையாக.

“எத்தனை கேரட் மாதாஜீ?” வீரஜ் சாப்பிட்டுக்கொண்டே தன் தாயை கலாய்க்க, ஏனோ கயலுக்கு கூட அவனின் கேலியில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

தன் மகனையும் மருமகளையும் முறைத்துப் பார்த்து, “க்கும்! ரொம்பதான்” நொடிந்துக்கொண்ட ருபிதா, “ஏய், சாப்பிட்டுட்டு போய் தூங்கிடாத! இன்னைக்கு நிறைய ஆர்டர்ஸ் வந்திருக்கு. அளந்து பேக் பண்ணனும். சீக்கிரம் பாத்திரங்களை கழுவிட்டு எனக்கு ஒத்தாசைக்கு வந்துரு” என்றுவிட்டு எழுந்துச் செல்ல, அலைப்பேசியை நோண்டியவாறு கயலை ஏளனமாக நோக்கிய ஏன்ஜல், சாப்பிட்ட தட்டிலே கையை கழுவி தட்டைக் கூட எடுக்காது அவள் பாட்டிற்கு அறைக்குள் நுழைய, கயலின் பார்வை தன்னவனைத் தழுவியது.

‘தன்னவன் புது மனைவிக்காக எதுவும் பரிந்து பேசமாட்டானா?’ என்று அவனை நோக்கிய அவளின் பார்வை இருக்க, வீரஜோ கொஞ்சமும் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

“இதோ வர்றேன்டா, நீ அங்கேயே இரு” தன் நண்பனுடன் அலைப்பேசியில் வளவளத்தவாறு அப்படியே எழுந்து சென்றுவிட, உதட்டைப் பிதுக்கிக்கொண்டாள் கயல். ‘கடவுளே! இது என்ன சோதனை?’ சுற்றி நடப்பதில் உண்டான தலைவலியில் தலைமேல் கைவைத்து சிறிதுநேரம் யோசித்தவளுக்கு அடுத்து ருபிதா கொடுத்த வேலையில் முதுகெலும்பே உடைத்துவிட்டது. புது மருமகள் என்ற கலையே காணாமல் போக, வியர்த்து விறுவிறுத்து இரவு அறையில் அடைந்தாள் அவள்.

ஏனோ அடுத்துவந்த நாட்கள் கயல் வாழ்க்கையையே வெறுக்குமளவிற்கு ஆகிவிட்டது. காலையில் செல்லும் கணவன் இரவு கேளிக்கை விருந்து, பப்பு என கூத்தடித்துவிட்டே வீட்டுக்கு வர, வீட்டிலோ அன்னியாரின் சில குத்தல் பேச்சுக்கள் அவளை வதைத்தது என்றால், அத்தையார் அவருடைய வியாபாரத்தில் கயலை அப்ரன்டீசாக வைத்து அவளை ஒருவழிச் செய்துவிட்டார்.

ஆரம்பத்தில் புகுந்த வீடுக்காக என்று அவள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாலும் ஒருகட்டத்தில் அந்த சமாதானங்கள் அவள் மனதிற்கே எடுபடவில்லை. இவ்வாறு திருமணமாகி ஒருவாரம் கழிந்திருக்க நேற்றிரவு வீரஜ் குடித்துவிட்டு வந்திருந்ததில் தரையில் பாயை விரித்துப் படுத்திருந்த கயல், காலை தன்னவனுடன் பேசியே தீர வேண்டுமென்ற தீவிரத்தில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டு தன்னவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவனும் எட்டுமணி கடந்தே விழிகளைத் திறந்தவன், எதிரே அமர்ந்திருந்தவளின் கலைந்த தலைமுடி இமை மூடாத பார்வையில் பயந்து “அய்யோ பேயு!” என்று கத்தியேவிட, கயலோ அப்போதும் அசைந்தபாடில்லை.

“நான் உங்ககூட பேசணும்” தீர்க்கமாக அவள் சொல்ல, அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு “பேசணும் அவ்வளவுதானே! அதை ஏன்டீ பேய் மாதிரி சொல்ற?” பயந்த குரலிலேயே வீரஜ் கேட்டுவிட்டு, “என்ன சீக்கிரம், சொல்லு” என்றவாறு கட்டிலிலிருந்து எழுந்து குளியலறை நோக்கிச் சென்றான்.

“அது.. அது வந்து… ஊருல உங்கள பார்த்த மாதிரி இல்லை நீங்க. அப்போ இருந்த காதல் இப்போ இல்லையோன்னு தோனுது எனக்கு. ஏன் வீர், நான் ஏதாச்சும் தப்பு பண்ணேனா?” அவள் கிட்டதட்ட அழும் குரலில் கேட்க, ‘காதலே இல்லை. இதுல அப்போ இப்போன்னு காலையிலேயே நொய்யு நொய்யுன்னுக்கிட்டு’ சலித்துக்கொண்டவன், “ஐயா ரொம்ப பிஸிம்மா, இதையெல்லாம் போட்டு மனசை குழப்பிக்காத பாப்பா!” என்றுவிட்டு நகர, கயலுக்கு அழுகையே வந்துவிட்டது.

பூட்டிய குளியலறைக் கதவையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, “கண்ணம்மா…” என்ற அழைப்பு. அதில் விழி விரித்தவள், வேகமாக அறையிலிருந்து வெளியேறினாள்.