வானம் காணா வானவில்-11

அத்தியாயம்-11

 

விடியல், விண்ணென்று தெரிக்கும் தலைவலியுடன் விடிந்திருந்தது, விசாலினிக்கு.

அரசவையில் அமர்ந்திருக்கும் மன்னனின் கிரீடம்… கீழிறக்கி வைக்க முடியாதது போல, விடாத தலைவலியுடன்… பள்ளிக்கு வழமைபோல கிளம்பியிருந்தாள்.

அறையை விட்டு வெளிவந்தவளின் முகம் பேயறைந்தது போலிருந்தது.

டைனிங்கில் காலை உணவில் இருந்த கிருபாகரன்,“ஷாலுமா, உடம்புக்கு என்ன செய்யுது”, என மகளின் முகம் பார்த்து கேட்டிருந்தார்.

“ஒன்னுமில்லப்பா, நல்லாதான் இருக்கேன்”, புத்திசாலி அதிபுத்திசாலியை ஏமாற்றியது.

பொய் பேசாத வாய், மெய் பேச, அவளின் மெய் காட்டிக் கொடுத்தது.

அழகம்மாள், கற்பகம் இருவரும் கவனித்தபடியே அவரவர் பணிகளில் பந்தயக் குதிரையாக இயங்கினர்.

காலை உணவைத் தவிர்க்க எண்ணியவளை, கட்டாயப்படுத்தி நான்கு வாய் உணவைக் கொடுத்து அனுப்பியிருந்தார், கிருபாகரன்.

————————

காதலனின் கெஞ்சலுக்கு பெண் மிஞ்சினாள்.

மிஞ்சியவள், அரவிந்தனின் அருகாமை வேண்டிய தனது உணர்வுகளால் கெஞ்சினாள்.

கெஞ்சல், மிஞ்சல், கொஞ்சல், அவனின் பழைய நினைவுகளால், செல்லாக் காசாகி இருந்தது.

 

பேச்சைக் கேட்டே உயிர் வாழ எண்ணியவன், பேசாமல் மரித்திருந்தான்.

கும்மிருட்டுக்கு பயந்த குழந்தையாய், இருவரும் பேசப் பயந்திருந்தனர்.

சுயம் தொலைத்து, சுயத்தைத் தேடித் திரிந்தனர்.

துனி[i] தொடர்ந்தது.

——————

சிங்கப்பூர் நேரம்… காலை 07.00

 

அழைக்க விரும்பாதபோதும், அழைத்திருந்தான்.

இரண்டே ரிங்கில் எடுத்தவள், “ஹாய் அர்வி, என்ன சர்ப்ரைஸ்… எனக்கு நீ கால் பண்ணத… என்னால நம்பவே முடியல… ஒரு நிமிசம் இரு… என்னை நான் கிள்ளி பாத்துக்கறேன்”, என சிரித்தபடியே மதன்தாரா மது உண்ட தேனீயின் குரலில் பேசியிருந்தாள்.

“ஸ்ருதி… எனக்கு உங்கிட்ட ஒரு ஹாஃப் அன் ஹார் பேச வேண்டியிருக்கு, போன்லயே பேசலாமா…”, அரவிந்தன்.

பணிகள் கடல் போல பரந்து கிடக்க, அதைக் கிடப்பில் வைத்துவிட்டு, எதிர்பாரா பணியைக் கையில் எடுத்திருந்தான்.

ஸ்ருதியில் சுருதி கூட்டியவன், ஸ்வரம் குறையாமல் பேசியிருந்தான்.

அரவிந்தனின் ஸ்ருதியில், உடலில் இருந்த நரம்புகள் அனைத்தும் மீட்டப்பட்டிருக்க, இன்ப ஸ்வரங்களை… உத்வேக உணர்வுகளாக மீட்டி தனக்குள் ஆகர்சித்திருந்தாள், ஸ்ருதி (எ) மதன்தாரா.

“நீயே ஒரு ப்ளேஸ் சொல்லு அர்வி, நேருலயே பேசுவோம்.  போன்லலாம் வேண்டாம்”, நடிகைக்குரிய நளினங்கள் வெளிநாடுகளில் கடைபிடிக்காததால், மேக்கப் இல்லாமல் வர பிளான் பண்ணியிருந்தாள்.

“எப்போ வரமுடியும் உன்னால”, உண்மை தெரிய உளவாளி தயாராகினான்.

“மதியம் லன்ச் நாம சேந்து சாப்பிடலாம்”, அரவிந்தனை தன்வசமாக்க ஐடியா இலவசம்.

“ம்… அப்ப லிட்டில் இண்டியா, ஒன் டூ ஒன் தர்ட்டி ஓகே வா உனக்கு”, காரியம் சித்தி பெற… காய் நகர்த்தினான்.

“ம்… அரை மணி நேரம்தானா… ஒரு டூ தர்ட்டி வர எனக்காக எக்ஸ்டன்ட் பண்ணு”, மோகவலைக்குள் விழவைக்க நேரம் நீட்டிக்க கேட்டிருந்தாள்.

“பாக்கலாம்… ஃப்ரீயா இருந்தா இருக்கேன்”, கழுவுற மீனுல… நழுவுற மீனா பதில் சொல்லியிருந்தான்.

­—————————

நேரம் காலை 07.20

 

ஸ்ருதியுடன் பேசி வைத்தபின்… தனக்கு தோன்றிய கேள்விகளை பேப்பரில் எழுதினான்.

தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை குறித்துக் கொண்டான்.

 

காலை 07.30

தனக்கு நம்பகமான, அதிவிரைவு ‘பெர்சனல் டேட்டா கலெக்டருக்கு’, அழைத்து, ஸ்ருதி பற்றி கடந்த பத்து ஆண்டு கால டேட்டாவை ஐந்து மணி நேரத்திற்குள் தருமாறு கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான்.

 

காலை 08.55

அலுவலகம் வந்தடைந்து, கோப்புகளை பார்வையிட ஆயத்தமானான்.

 

நன்பகல்[ii]

அலுவலக பணிகளை கன நேரமும் வீணாக்காமல், அடுத்தடுத்த உத்தரவுகளை, அதற்குரிய நபர்களை அழைத்து செய்து வரப் பணித்தான்.

 

நண்பகல் 12.00 மணி

அலுவலகத்திலிருந்து லிட்டில் இண்டியா நோக்கி கிளம்பினான்.

 

12.10 – 12.40

அதிவிரைவாக வந்த காரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து, தனது அலைபேசியின் துணையுடன் தனக்கு வேண்டிய தகவல்களை சேகரித்தவாறே வந்தான்.

 

12.40 பிறகு…

பதிலுக்காக காத்திருந்தாவனுக்கு, பதிலாக பல விடயங்கள் பெர்சனல் டேட்டா கலெக்டரிம் இருந்து கிடைக்க, அதை தேர்விற்கு தயாராகும் மாணவன் போல, நுணுகி, ஆராய்ந்து, இரு முறை வாசித்து, அதில் இருந்த ஐயங்களைக் குறித்து, மீண்டும் பேசியில் ஐயம் தெளிவு பெற பேசினான்.

 

12.55

மதிய உணவிற்கு… இருவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே… அடுத்தடுத்து லிட்டில் இந்தியா வந்திருந்தார்கள்.

 

வந்த பிறகு இருவருக்கும் வெளிநாட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே போயிருக்க… முகமன்கள் முடிந்து உணவிற்கான இடத்தை தெரிவு செய்தனர்.

 

மதிய உணவிற்கான அற்புதமான இடம். அங்கு பல இந்திய உணவகங்கள் இருந்தன. தோசையிலிருந்து தந்தூரி சிக்கன் வரை பிராந்திய இந்திய உணவு முறைகள் திரும்பிய திசையெங்கும் கிடைத்தது.

 

வேண்டிய உணவை இருவருக்கும் ஆர்டர் செய்தவன், நேரடியாக விடயத்திற்கு வந்திருந்தான், அரவிந்தன்.

ஸ்ருதியும்… தான்… பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்ததை மறைக்கவில்லை.  ‘ஆமென’ தனது செயலை ஒத்துக்கொண்டாள்.

எதற்காக இப்படிச் சொன்னாய் எனக்கேட்டவனிடம்,

 

தாய் மொழியுடன், தமிழையும் கலந்து தலையாளத்தில் பேச ஆரம்பித்து இருந்தாள், ஸ்ருதி.

“உங்கிட்ட சொல்றதுக்கு என்ன அர்வி, ஏதோ தெரியாம இந்த ஃபீல்டு மேல இருந்த மோகத்தில… இங்கு வந்நு… பட்சே… நிறைய விசயம் எதிர்பாராம நடக்குது.

இப்ப ரெண்டு மாசமாயிட்டு… நம்ம நாட்டிட எம்பி… ஒருத்தரு என்ன கல்யாணம் கழிக்கான் கேக்குது.  எனிக்கு இஷ்டம் இல்ல.

ஆயாளுட்ட இருந்நு எப்டி தப்பிக்கனு வழி தேடும்போ… உன்னை அன்னு ஏர்போட்டில கண்டு…

எண்ட குருவாயூரப்பனை நேரில் கண்ட போலாகி எனிக்கு…”, என வானம் பார்த்து கைகூப்பியபடியே தனது உரையாடலைத் தொடர்ந்தாள்.

ஸ்ருதியின் பாதி பேச்சிற்கு இடையில் வந்த உணவை, அவரவர் ஆர்டர் செய்திருந்ததை எடுத்து உண்ண ஆரம்பித்தபடியே… பேச்சில் கவனமாக இருந்தனர்.

“…. இதில எண்ட அம்மையோ, அச்சனோ ஒன்னும் செய்ய முடியாது.  என் லைஃப் நான் தான் சேஃடி பண்ணணும்.  அதான் உங்கூட பேசினவுடனே ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் வந்நு நின்னு.. நின்னை யாரானுனு.. சோயிச்சு…

அப்பலானு… எனிக்கு நல்ல வழிகிட்டினு… ஞான் அங்கன பரஞ்சது.

எனிக்கும் அப்டியொரு இஷ்டம் எப்பவும் உண்டு.

உனக்கு இஷ்டம் இல்லங்கிலும்… எனிக்காக ஆ… இஸ்யூவினை… இப்போ உடனே அப்போஸ் செய்யண்டா… என்ட… அர்வி…

இப்ப ஞான் அது இல்லனு பறஞ்சா… எனிக்கு… ஆயாளுனால ரிஸ்க்கானு…

எனிக்கு இது ஒரு ஹெல்பாயிட்டு செய்யி அர்வி…

இது மட்டும் என் ஜீவிதத்தில்… எனிக்கு… நீ செஞ்சா மதி…”, என அரவிந்தனை அறிந்தவளாதலால்… அவளே திரைக்கதை வசனம் எழுதி… அரவிந்தனை நம்ப வைக்கலாம்… என எண்ணி நடித்திருந்தாள்.

“……. ஐம்பது வருசமா எங்களுக்கும், சினி ஃபீல்டுக்கும் தொடர்பிருக்கு… இது வெளிய யாருக்கும் நாங்க சொல்றதில்ல…

நீ சொன்னதுல…. எவ்வளவு உண்மை… எவ்வளவு பொய்யினு… எனக்கு சென்ட் பர்செண்ட் தெரியும்…

ஒரு விசயம்…. நல்லா புரிஞ்சிக்கோ…

இதுக்கு நான் ஆளு கிடையாது.

உன் வாழ்க்கைல… என்ன டெசிஷன் வேணாலும் நீ எடுக்கலாம்.  ஆனா உனக்கு நான் பகடையா ஆக முடியாது….

இப்ப அந்த எம்பியோ… இல்ல… எந்த தும்பி கதை… எப்டி இருந்தாலும்… எனக்கு அது பத்தின அக்கறை இல்ல.

ஊருல இருக்கிறவங்க எல்லாரும் அவங்கவங்க தகுதி, தராதரம்… வசதி… வாய்ப்பு… இதுக்கு ஏற்றமாதிரி பிரச்சனைகளோட தான் வாழ்ந்துட்டு இருக்காங்க…

அது போல உனக்கும் இருக்கலாம்.  ஆனா… அதுக்கு என்னால எதுவும் செய்ய முடியாது…

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒருத்தவங்களோட முதுகுக்கு பின்ன போயி… ஒளிய நினைச்சா… பிரச்சனை முடியாது…

எதுத்து நின்னு என்னானு பாரு… முடியலனா… பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கேட்கணு ஆயிரம் அமைப்புகள் இருக்கு…

அங்க போயி முறையா… முறையிடு…! அங்க போனா உனக்கு வேண்டிய நியாயம் கேட்டு சொல்லுவாங்க…

அதவிட்டுட்டு என்னை உன்னோட விசயத்துக்கு… நீ யோசிச்சதே தப்பு…

முக்கியமான விசயம்… எப்பவும்… ஒரு மனைவி… அப்டிங்கற மாதிரியான அபிப்ராயம்… உம்மேல எனக்கு வந்தது இல்ல… இனியும் வராது…

உனக்கு சேஃப்டி வேணுமினா… உங்க ரிலேடிவ்ஸ், உன் ஃபேன்ஸ் மாதிரி யார பிரியப்படறயோ அவங்கள… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கறது நல்லது.

அதவிட்டுட்டு என்னைய இக்கட்டுல மாட்டி விட பாக்குற…

ஒன்னா படிச்சோம்… வேற எதாவது சப்போர்ட்னா கண்டிப்பா யோசிச்சிருப்பேன்.

ஆனா உன் ஃபியூச்சர் லைஃப் ரிலேட்டடா… ஒரு கணவனா… இல்ல பாதுகாப்பு அப்டிங்கற வளையத்துல… உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற… ஒரு நபரா என்னால நிச்சயமா… எப்பவும் என்னால இருக்க முடியாது”, என தனது தரப்பு நியாத்தை நிதானமாக உண்டபடியே பேசினான்.

 

இருவருக்குமிடையேயான திருமண விடயம் பற்றிய செய்தி, இதற்கு மேல் வளராமல் இருக்க வேண்டும்.

இல்லையெனில் கூட படித்தவளானாலும், பார்க்காமல் மான நஷ்ட வழக்கு தொடுப்பதாக கூறி மிரட்டிவிட்டு, உண்டு முடித்தவன்… அவளுக்கும் சேர்த்து பணம் செலுத்திவிட்டு சென்றிருந்தான்.

வழக்காடியவளை, வாயடைக்கும்படியாக பேசிவிட்டு கிளம்பியிருந்தான்.

 

03.30 மணி

கிளம்பியவன் நேராக அலுவலகம் வந்திருந்தான்.

மதன்தாரா (எ) ஸ்ருதியுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகும் தொழிலதிபர் என போஸ்ட் இடப்பட்டிருந்த… ஆன்லைன் பத்திரிக்கைகளுக்கு, அதில் இடப்பட்டிருந்த செய்தியை மறுத்த தகவலை… தனது அலுவலகம் மூலமாக அனுப்பியிருந்தான்.  மேலும் தனது அனுமதியில்லாமல் திரையுலக நபர்களுடன் வரக்கூடிய பத்திரிக்கை ஆன்லைன் செய்திகளை, எதிர்த்து மான நஷ்ட வழக்கு அப்பத்திரிக்கைகளின் மீது தொடுக்க இருப்பதாகவும், இனி கவனத்துடன் தன் சார்ந்த விடயங்களை பதிவிடுமாறும் அத்துடன்  செய்தி அனுப்பியிருந்தான், அரவிந்தன்.

 

சந்திரபோஸ் துவங்கிய, போஸ் பினான்ஸ் பிரைவேட் லிட்., என்ற நிறுவனம் மூலம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக திரைப்படம் சார்ந்தவற்றிற்கு மறைமுகமாக பணப்பட்டுவாடா செய்து வருகிறது.  ஆகையால் பல வளர்ந்த முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நபர்களிடம் நல்ல பழக்கம் இருப்பதால் அவர்களிடமும், இது சார்ந்த விடயங்களைப் பகிர்ந்திருந்தான், அரவிந்தன்.

இனி இதுபோல் ஒரு விடயம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென விசாரித்து அவர்களிடம் இதுபற்றி பேசியிருந்தான்.

ஆனாலும், இந்தப் பிரச்சனை இத்துடன் முடிந்துவிட்டதாக அரவிந்தனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஆஸ்கார் வாங்க எண்ணி நடிக்காமல், சிம்பதியில் சிக்க வைக்கும் எண்ணத்தில் நடித்தவளை எண்ணி, விழிப்புணர்வுடன் தனது பணிகளைக் கவனிக்க ஆயத்தமானான், அரவிந்தன்.

———————————-

 

பத்து நாட்கள், பத்து யுகங்களாக விசாலினிக்கும், அரவிந்திற்கும் சென்றிருந்தது.

அழகம்மாள், தனது பேத்தியின் ஒட்டாத நடவடிக்கைகளை கண்டு, மகன் கிருபாகரனிடம் பேசியிருந்தார்.

“என்னபா… நம்ம வேணி வீட்டுக்காரர்கிட்ட பேசுறியா…

அந்த அரவிந்து பயலும் போனு போட மாட்டிங்கறான்… அவ பேசலனாலும் எங்கிட்ட பேசுவான்… என்னனு தெரியல… வேலயா இருக்கான் போல…

இந்த ஒரு வாரம்… பத்து நாளா… என்ன இதுக ரெண்டுக்கும் பிரச்சனைனு தெரியல நமக்கு…

இவ ஒரு மார்க்கமா இருக்கா… கேட்டா ஒன்னுமில்லனு பயபுள்ள சொல்லுது…

இவ வயசப் பத்தி நமக்கு  தெரியாமயா இருக்கும்…!

ஒன்னு செய்யி… இன்னிக்கு அவர முடிஞ்சா நேருல பாத்து பேசுறியா…

இல்ல அவர நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி பேசுறியா?”, என தனது இளைய மகனிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டார், அழகம்மாள்.

தாயின் வழிகாட்டலுக்குபின், தடங்களின்றி தனது அடுத்த கட்ட பணிகளை காணச் சென்றிருந்தார், கிருபாகரன்.

—————————————-

 

சந்திரபோஸை அலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தார், கிருபாகரன்.

இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தனர்.

விசாலினி, அரவிந்தன் திருமண விடயம் விவாதிக்கப்பட்டது.

“வேணி அக்காட்டயும் பேசிட்டு சொல்லுங்க… தம்பிட்டயும் அவருக்கு எப்ப இண்டியா வர தோதுணு கேட்டிட்டு மேற்கொண்டு முடிவு செய்யலாம்”, கிருபாகரன்

“எனக்கு ஒரு ரெண்டொரு நாள் அவகாசம் குடுங்க… நான் நீலாட்ட சமயம பாத்து பேசிட்டு சொல்றேன்”, சந்திரபோஸ்.

உடல்நிலையினைக் கருத்தில் கொண்டு இரு பழச்சாற்றை மட்டும் வாங்கி ஆளுக்கொன்றாக அருந்திவிட்டு, பேசி முடித்ததும்… அவரவர் வீடு நோக்கிக் கிளம்பியிருந்தனர்.

______________________

 

இரு நாட்களுக்குப்பின்…

“நீலா… அத்தம்மாட்டனா நான் நேருல அரவிந்த் மேரேஜ் பத்தி பேசலாம்னு இருக்கேன்… இதுல உன் அபிப்ராயம் ஏதும் இருந்தா சொல்லு…நீலு…”, சந்திரபோஸ்

“…”, போஸை அமைதியாக நிமிர்ந்து பார்த்துவிட்டு அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தவள்,

“எங்கம்மா… எங்க பாட்டி சொல்லிக் கொடுத்த அத்தனையும் அப்டியே ஃபாலோ பண்ணுவாங்க…

இப்டி நம்ம வீட்ல மாப்பிள்ளை எடுக்க… அவங்களுக்கு மனசு ஒப்பாது.

நாம போயி அவங்க வீட்லகூட பேசலாம்.  ஆனா அவங்க மறுத்தா மன வருத்தம்தான் வரும்.

அவங்களுக்கும்… எதுக்கு நாம அந்த சங்கடத்தைக் கொடுக்கணும்.

நம்ம அரவிந்த… கன்வின்ஸ் பண்ணி… வேற எடத்துல பொண்ணு பாப்போம்”, நீலா

“நீ சொல்றது எல்லாம் சரிதான்… ஆனா நாம யாருனு தெரியுமுன்னே… கோவில்ல வச்சு பாக்க ஒத்துட்டு தான அங்க குடும்பமா வந்திருந்தாங்க… அப்ப நம்ம வேற இனம்னு எப்டி தெரியாமயா இருந்திருப்பாங்க…”, சந்திரபோஸ்

“உங்க விருப்பம்… போகலாம்.  ஆனா அங்க உங்களுக்கு மரியாதைக் குறைவான வரவேற்பு இருந்தா… என்னால அத தாங்கிக்க முடியாது.  அதனால நான் மட்டும்… அங்க போயி பேசிட்டு வரவா…?”, என ஆர்வமாகவே கேட்டார் நீலா.

“அப்டி பேசினாலும் ஒன்னுமில்ல… நாம ரெண்டுபேருமே போயிட்டு வரலாம்.  உன்னை தனியால்லாம் எங்கயும் அனுப்ப முடியாது.  எப்பனு சொன்னா நான் கிருபாக்கு போன் பண்ணி பேசிருவேன்”, என தன்னை மீறி கிருபா பற்றிய செய்தியை மனைவியிடம் கூறிவிட

கணவனின் பேச்சைக் கேட்டு, கணவனை நோக்கித் திரும்பிய நீலவேணி

ஆழமான ஒரு பார்வையை கணவன் மீது பதித்துவிட்டு…

“எங்கிட்ட எதையோ மறைக்கிறீங்களா…?”, எனக் கேட்டிருந்தார்.

“மறைக்கல… கிருபாதான்… ரெண்டு நாளு முன்ன… நாம மேற்கொண்டு கல்யாண விசயம் பேசலாமானு கேட்டார்… அதான்…”, எனத் தயங்க

“அப்ப இதுல கிருபாவுக்கு விருப்பமா…? எங்கம்மா, அப்பா அவங்கள அவன் கலந்துக்களயா…?”, என கோபமாகவே கேட்டார், நீலா.

“எதுக்கு இவ்வளவு கோபம்… அங்க போயி பாத்தா… விசயம் என்னனு தெரிய போகுது…

என்னிக்கு போகலாம்னு மட்டும் சொல்லு… போயிட்டு வரலாம்…

ரெண்டு பேரா வேணாம்.  சஞ்சய், மிருணாவயும் கூட்டிட்டு போவோம்.”

“இல்லங்க… அங்க என்ன நிலைமைனு தெரியாம அவங்கள ஏற்கனவே கூட்டிட்டு போயி அசிங்கப்பட்டது போதும்.  முதல்ல ஒத்து வந்தா பின்ன எல்லாரையும் கூட்டிட்டு போயி பாக்கலாம்”, என தனது முடிவை தீர்க்கமாகக் கூறியிருந்தார், நீலா.

————————————

நல்ல நாள், நேரம் பார்த்து இருவரும் ஒரு மாலை வேளையில் கிளம்பி விசாலினியின் வீட்டிற்குச் சென்றனர்.

வருவதை முன்பே கூறியிருந்ததால், இருவீட்டு பெரியவர்களும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து… அதிர்ச்சியை அடகு வைத்து, நிர்மல மனதுடன் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

அழகம்மாள், எந்த சுணக்கமும் இல்லாமல் இருவரையும் வரவேற்று இருந்தார்.  வயோதிகம் காரணமாக பெரும்பாலும் படுக்கையில் இருக்கும் சதாசிவம் அறைக்குள் இருந்தார்.

கிருபாகரன், கற்பகம் இருவரும், வீட்டிற்கு வந்திருந்த இருவரையும் மலர்ந்த மலரைப் போன்ற வதனத்துடன் வரவேற்றிருந்தனர்.

சுகங்கள் உறுதிசெய்யப்பட்டது.

அரவிந்த், விசாலினி இருவரது திருமணம் பற்றி விவாதிக்கப்பட்டது.

“மாமம் புள்ள, அயித்த புள்ளைக்கு ஜாதகம்லாம் நம்ம பக்கம் பாக்கறதில்ல… மனசு ஒப்பி பண்றது தான்.  அதுனால கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்.

எப்படிப்பட்ட ஜாதகமா இருந்தாலும்…கோவில்ல வச்சு மாங்கல்யம் ஏறுனா… எல்லா அல்லலும் காணாமப் போயிரும்னு சொல்வாங்க…

எந்த கோயில்ல வச்சு செய்யலாம்.  எப்ப முகூர்த்தம் வைக்கலாம்னு மட்டும் ஐயருக்கிட்ட குறிச்சு வாங்குவோம்.

அப்பறமா வரவேற்பு வச்சுக்குவோம்.

பொண்ணுக்கு… தேதி மட்டும் தோது… கேட்டுக்கிட்டு சொல்றேன், வேணி.

பாத்து நிதானமா செய்வோம்.

அப்டியே பேரங்கிட்டயும் பேசிரு…”, என அழகம்மாள் பழையது எதையும் மனதில் வைக்காமல் இலகுவாகப் பேசினார்.

திருமணநாள் குறிக்குமுன், இருவரிடமும் விடயம் பகிரப்பட, எந்த உணர்ச்சியையும் விசாலினி காண்பிக்கவே இல்லை.

அரவிந்தனின் முக அமைப்பைக் காணும் வாய்ப்பை அலைபேசியில் அழைத்ததால், நீலாவும் காணவில்லை.

 

————————–

திருமண செய்தி கேட்ட நம்மட…

 

அரவிந்த் போஸ்…

 

‘கன்னித்தீவு மாதிரி கல்யாண வாழ்க்கை ஆகிருமோன்னு நினச்சிருந்தேன்.

யாரு பண்ண நல்ல விசயம்னு தெரியல…

பெரியவங்கள்லாம பெரிய மனசு பண்ணி என்னன்மோ செய்றாங்க…

இவ… என்ன பண்ணுறானு தெரியலயே…

ஷாலுட்ட பேசித்தான் பாப்பமா… இல்ல…. வேணவே வேணாம்.

எதேச்சையா பேச ஆரம்பிச்சு… எக்ஸ்பெக்ட் பண்ணாம ஏலியன் கணக்கா எதுவாது வந்து வாயில நிக்குது… வேண்டாம்டா சாமி…

கல்யாணத்தப் பண்ணி… நேருல பேசிக்குவோம்.

அலைபேசில பேசுனா… மனசு கிடந்து அலைபாயும்… அப்புறம் எல்லா வேலயும் கெட்டு… அவகிட்ட போயி நிப்பேன்…

ஷாலுமா… வாயத் தொறக்காமலே… பாலு ஊத்ற அளவுக்கு என்னைய வச்சு செய்வா…’, இப்படி பலவாறாக எண்ணி தன்னைத் தேற்றி பணிகளில் கவனம் செலுத்தினான்.

 

விசாலினி…

‘வில்லங்கம் எப்டி இப்டி வளைஞ்சுதுனு தெரியலயே… (யோசித்துப் பார்க்கிறாள், ஒன்றும் பிடிபடவில்லை)

என்ன நடக்குது… வீட்டுக்குள்ள… நமக்கு தான் ஒன்னியும் பிரிய மாட்டுது… இன்னும் வளரணுமோ…

சே இப்பவே நிறைய எடத்துல குனிஞ்சு போக வேண்டிக் கிடக்கு… இன்னும் வளந்தா அப்புறம் குதி காலத்தான் வெட்டி விடணும்… (சீரியசாக எண்ணம் போகிறது)

பச்ச மண்ணா இருக்கங்காட்டியும்… எல்லாம் நம்ம கன்சிடர் பண்ணாம அவங்கவங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்குறாங்க…

எடுக்கட்டும்… எல்லாரும் முடிவு எடுக்கட்டும்.

கல்யாணம் ஆனபின்ன நான் எடுக்கறதுதான முடிவு…

ஆட்டமா ஆடற அரவிந்த் அத்தான்…

வா… அப்புறம் இருக்கு…

சின்ன புள்ளகிட்ட விட்டுக் குடுத்து போகத்  தெரியல உனக்கு… எவ்வளவு விட்டுக் குடுக்கணும்னு வாழ்க்கை ஃபுல்லா நான் உனக்கு சொல்லித் தருவேனாம். (சிரித்துக் கொள்கிறாள்)

போனுல பேசக் கூட காசு கேக்காரே இந்த அத்தான்… (வருத்தம் கொள்கிறாள்)

ரொம்பத்தான் கோவப் படுத்திட்டேனோ… இனி யோசிச்சு பேசணும்’, என விசாலினியும் தனிமையில் தங்களைப் பற்றிய எண்ணங்களை சாடியும், ஓடியும், ஆடியும், தேடியும் கழித்தாள், விசாலினி.

———————-

 

ஆஸ்திரேலியா தவிர, அனைத்து இடங்களிலும் நேரடியாகச் சென்று தனது நிறுவனங்களைப் பார்வையிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சென்னை வந்திருந்தான், அரவிந்தன்.

 

திருமணம் என்ற ஒன்றை எதிர்பார்த்த நாட்கள் போயிருக்க, தன்னவளை காணும் ஏக்கம் மனதில் தோன்றினாலும்… தன்னைக் கட்டுப்படுத்தி இருந்தான், அரவிந்தன்.

ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது.

வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்தவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு மஹால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு…, சந்திரபோஸ் குடும்ப சார்பில் வட இந்திய முறையில் நடந்தது.

உறவுகளின் முன் உணர்வுகள் மறைக்கப்பட்டது.

உல்லாசமாக இல்லாதபோதும், மகிழ்ச்சியோடு அருகாமை உணரப்பட்டது.

இலகுவான பேச்சுகள் குறைந்திருக்க, இம்சையான பார்வைகள் பரிமாறி, தேகம் சிலிர்த்திருந்தனர்.

கண்களால் படமெடுத்து, உறங்காமல் மகிழ்ந்திருந்தனர்.

உறங்கினாள் உருவங்கள் மறைந்து போவதை எண்ணி

உறங்காது நினைவுகளோடு நிசப்தமாகக் கழித்தனர்.

 

மகிழ்ச்சி இருவரையும் மலர்ச்சியாக காட்டியது.

இருவரின் மலர்ச்சி, குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டியது.

 

விசாலினியின் வீட்டில், கருணாகரன் குடும்பத்தார்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் ஒரு வாரம் முன்பே சென்னை வந்திருந்தனர்.

விசாலினியின் அக்காமார்கள் இருவரும் அவரவர் குடும்பத்துடன் திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

மற்ற உறவினர்கள் அனைவரும் மஹால் அருகே தனியாக அறை எடுத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

———————

வளர்பிறை அதிகாலை முகூர்த்தம் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும் என எண்ணி கோவிலுக்கு வந்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே.

அன்றைய தினம் ஏகப்பட்ட திருமணங்கள், அக்கோவிலில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திரும்பிய திசையெங்கும், அலங்காரத்துடன் காட்சியளித்த மணப்பெண்களும், மணமகன்களுமாக இருந்தனர்.

வழிபாட்டிற்காக வந்திருந்த கூட்டம் ஒருபுறமிருக்க, திருமண வைபவத்தைக் காண மாபெரும் மற்றொரு கூட்டமும் நெருக்கியடித்தபடியே நின்றிருந்தது.

பெரும்பாலும் மெரூன் வண்ண நிறை சரிகையிட்ட புடவை உடுத்திய மணமகள்கள் அதிகமிருந்தனர். ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்ய இருபது மண ஜோடிகள் அக்கோவிலுக்குள் அவரவர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக வந்திருந்தனர்.

அழகம்மாள் வயோதிகம் காரணமாக, விசாலினியின் பெரிய அக்கா ஜெயலினியிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தார்.

அருகருகே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மணமகள், மணமகன் என நின்றிருந்தனர்.

தாலியை ஐயர் அரவிந்தன் கையில் கொடுத்திருந்தார்.  அதற்கிடையில் ஏற்பட்ட எதிர்பாரா தள்ளுமுள்ளு காரணமாக நின்றிருந்தவர்கள் இடம் மாறியிருந்தனர்.  நேராக நிற்க முடியாமல் கூட்டம் நெட்டித் தள்ளியபடி இருக்க…

கையில் வைத்திருந்த தாலியுடன், அரவிந்தன்… விசாலினியின் கழுத்தருகே கொண்டு வருவதைக் ஓரக் கண்ணில் கவனித்தபடியே, அரவிந்தன் தன்னை நெருங்குவதை மட்டுமே பார்த்தபடியே இருந்தாள்.

விசாலினியின் தலைக்குமேல் இரு கைகளை உயர்த்திய கரங்களில் இருந்து திடீரென மற்றொரு தாலி தனது கழுத்தை ஒட்டி வந்ததை உணர்ந்து, சுதாரித்து தாலியை கையில் எடுத்திருந்தாள், விசாலினி.

அதற்குள், விசாலினியின் சங்கு கழுத்தின் பின்புறம் வேறொரு மணமகன் முதல் முடிச்சு போட்டிருந்தான்.

——————————-

[i] ஊடல் நீட்டித்தல்

[ii] நல்ல பகல்