Kanavu 10

கனவு – 10

வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்த அம்ரிதா துரிதமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு “அச்சு நீ நம்ம ஸ்கூல் பஸ் –ச வர சொல்லி போ இன்னைக்கு மட்டும். நான் ஸ்கூட்டி எடுத்துட்டு போறேன்” என்றாள்.

அனேகனை பார்க்க போகலாம் என எண்ணியிருந்தவளிடம் இரு சக்கர வாகனத்தை கேட்கவும் என்ன சொல்வதென அறியாது அமைதியாய் இருந்தாள் ஆஷ்ரிதா.

“சின்ன பாப்பா.. தனியாவா போறீங்க?” – பொன்னம்மா கேட்டார்.

“ஆமா பொன்னம்மா.. என்ன?” – அம்ரிதா.

“அச்சு பாப்பா.. நீங்களும் கூட போயிட்டு வரலாம்ல” – பொன்னம்மா.

‘எப்பவுமே என்ன அம்முகிட்ட மாட்டிவிடுற வேலையதான் பார்க்குறாங்க இந்த பொன்னம்மா’ என ஆஷ்ரிதா மனதினுள் நினைக்க

“ஏன் பொன்னம்மா.. நான் என்ன சின்ன குழந்தையா” – அம்ரிதா.

“அதுக்கு இல்ல பாப்பா.. நல்லவனோ கெட்டவனோ.. இந்த மாதிரி காரியத்துக்கு ஒரு எட்டு தலைய காட்டிட்டு வரனும் பாப்பா” – பொன்னம்மா.

சூழ்நிலை கைதியாக நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“என்ன பேசுறீங்க பொன்னம்மா.. அவன் பொறந்ததே தப்பு.. இதுல அவன மேலோகத்துக்கு வழியனுப்ப சகல மரியாதையோட எல்லாரும் போகனுமா?” – அம்ரிதா.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது பாப்பா.. எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் காரியம் பண்ணி அனுப்புறப்ப எல்லாரும் அவன் செஞ்ச நல்லதை மட்டும் தான் சொல்லி அழுவாங்க” – பொன்னம்மா.

“நல்லது செஞ்சா தானே” – அம்ரிதா.

“அப்படி இல்லை பாப்பா” – பொன்னம்மா.

“அட.. எந்த காலத்துல இருக்கீங்க பொன்னம்மா.. இப்ப நான் கூட என் மேனேஜர் செத்துட்டாரேனு போகல.. போன ஏதாவது தெரிஞ்சிக்கலாம்னு தான் போறேன்.. இவனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்லை.. நீங்க வீட்ட பார்த்துக்கோங்க.. பாடி எடுத்ததும் நான் வர்றேன்.. பாய் டி அச்சு” என்று சொல்லியவாறு ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டாள் அம்ரிதா.

“என்ன பாப்பா நீங்களாவது சொல்ல கூடாதா? அமைதியாவே இருந்துட்டீங்க?” – பொன்னம்மா.

“கொஞ்சம் நேரத்துல காரியத்தையே கெடுக்க பார்த்தீங்க போங்க” – ஆஷ்ரிதா.

“என்னது காரியத்தை கெடுக்க பார்த்தேனா? என்ன ஆச்சு பாப்பா?” – பொன்னம்மா.

நேற்று இரவு நடந்ததை சொல்வதா வேண்டாமா என யோசித்து தெளிந்தவள், “நான் அம்மு விஷயமா ஒரு முக்கியமான ஆள பார்க்க போகணும் இன்னைக்கு” என்று மட்டும் சொல்லி வைத்தாள்.

பொன்னம்மாவிடம் மறைக்கும் எண்ணம் எதுவும் இல்லை ஆஷ்ரிதாவுக்கு. உண்மைகளை சொன்னால் பொன்னம்மாவின் வயதிற்கு இதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார், இந்த அதிர்ச்சியை அவர் மனதால் தாங்க முடியுமா என்ற ஐயமே ஆஷ்ரிதாவை வாய் திறக்க விடவில்லை.

“இப்போ எல்லாம் நான் என்ன பேசினாலுமே தப்பா போய்டுது என்ன பாப்பா?!” பாவமாய் கேட்டார் பொன்னம்மா.

“அய்யய்யோ.. அப்படி இல்லை பொன்னம்மா” பதறியே போனாள் ஆஷ்ரிதா.

“விடுங்க பாப்பா. கட்டையில போற வயசுல வாய வச்சிக்கிட்டு நான் தான் சும்மா கிடக்கனும்” – வலியுடனே வந்து விழுந்தது வார்த்தைகள்.

வயது முதிர்ச்சி அடைய அடைய மனம் என்னவோ குழந்தையாய் தான் மாறிப்போகிறது. உரோமங்கள் நரைத்த காலங்களில் உள்ளமும் தளர்ந்திடுமோ என்னவோ அதீத அன்பான மென்மையான சொற்களுக்கு மட்டுமே ஏங்கி நிற்கின்றது அவர்களது மனம். காண்போர் எல்லாம் தன்னை தூக்கிக் கொஞ்ச வேண்டுமென்ற குழந்தையின் அப்பட்டமான அடம்பிடிப்பே அவர்களுக்குள் அகிம்சையாய் நடக்கிறது. அநேக நேரங்களில் நாம் விளையாட்டாய் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் கூட விலையின்றி அவர்களை மனதளவில் வதம் செய்து விடுகிறது.

“ஏன் பொன்னம்மா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. இந்த மாதிரியெல்லாம் சொன்னா அப்புறம் நான் உங்க கூட பேசவே மாட்டேன்” – கடிந்துக் கொண்டாள் ஆஷ்ரிதா.

“அது வந்து பாப்பா…” – பொன்னம்மா.

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு இன்னைக்கு நீங்கதான் சாப்பாடு ஊட்டி விடனும். இதுதான் தண்டனை உங்களுக்கு. சீக்கிரம் இந்த தோசையை ஊட்டி விடுங்க. நான் கிளம்புறேன்” என தனது கையில் வைத்திருந்த தட்டை பொன்னம்மாவின் கையினில் திணித்தாள் ஆஷ்ரிதா.

உணவினை உண்டு முடித்தவள் அனேகனிடம் தன் வரவை தெரிவிப்பதற்காக அழைப்பு விடுக்க அவனோ அழைப்பை எடுத்த பாடில்லை.

‘ஆமா. நேரம் கெட்ட நேரத்துல தான் இவனும் படுத்துவான்’ எண்ணியவள் மீண்டும் முயற்சித்தாள். அப்பொழுதும் தோல்வியே கிட்டியது.

“கடவுளே இப்ப நான் என்ன செய்ய?” – சோர்ந்து போய் அமர்ந்தாள் ஆஷ்ரிதா.

தற்பொழுது அவளது அலைபேசி சிணுங்கிட அழைப்பது அனேகனே என எண்ணி வேகமாக எடுத்துப் பார்த்தாள். அலைபேசியின் திரை திரவியத்தின் பெயரை காட்டியது.

“இவன் எதுக்காக கூப்பிடுறான்” என வாய்விட்டு புலம்பியவள் அழைப்பை துண்டித்து வைத்தாள். மீண்டும் அலைபேசி மணியடிக்க “என்னதான் வேணுமாம் இவனுக்கு ச்சே” என்றவள் அடுத்த கணம் அமைதியாய் யோசித்தாள்.

‘கோவத்துல நாம அடிச்சிட்டோமே. அது தப்புதானே. அதுக்காக ஒரு மன்னிப்பு கேட்டுவிடுவோமா?’ என்று தோன்றவும் இரண்டாம் அழைப்பை ஏற்று காதில் வைத்து “சா” என்பதற்குள் எதிரில் அவன் முடித்திருந்தான்.

“சாரி அச்சு.. நான் அப்படி பேசிருக்க கூடாது.. அதுக்காக இப்படியா இருப்ப? ஒரு கால் அட்டண்ட் பண்ண கூடாதா?” – நட்பின் தவிப்பில் கேட்டான் திரவியம்.

“இல்ல.. அது.. நான்.. அயம் சாரி.. நானும் கை நீட்டியிருக்க கூடாது” – ஆஷ்ரிதா.

“அத எல்லாம் விடு அச்சு.. நான் அந்த அனேகனை போய் பார்த்தேன்” என்று திரவியம் சொல்லவும் மீண்டும் முருங்கை மரம் ஏறினாள் ஆஷ்ரிதா.

“என்ன அனேகனை போய் பார்த்தியா? என்ன தைரியம் திரு? அவரு என்ன பத்தி என்ன நினைப்பாரு? யார்கிட்ட கேட்டு அவர பார்க்க போன நீ” பொரிந்துத் தள்ளினாள் ஆஷ்ரிதா.

“ஹேய்.. பார்த்தேன் –னு தானே சொன்னேன். பேசினேன் –னு சொல்ல்லையே. அவரும் என்ன பார்க்கல.. நான் தான் அவர பார்த்தேன்” – திரவியம்.

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லேன்” – கடுப்புடன் கூறினாள் ஆஷ்ரிதா.

“ஃபோன் –ல பேசுற விஷயமில்லை இது.. நீ நேர்ல வா கிளம்பி.. நான் மால் –க்கு தான் போறேன்..” – திரவியம்.

“நான் அனேகன பார்க்க போகனும். நீ ஃபோன் –ல யே சொல்லு” – ஆஷ்ரிதா.

“இப்ப நீ அவன பார்க்க முடியாது.. சொல்லுறத கேளு.. வா கிளம்பி..” – திரவியம்.

“ஏன் அவன பார்க்க முடியாது?” – ஆஷ்ரிதா.

“உன்ன கிளம்பி வா –னு சொன்னேன்” – திரவியம்.

கோபத்தில் பல்லை கடித்தவள் “வந்து தொலையுறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அலைபேசியின் திரையை பார்த்த திரவியம் “இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றான்.

அப்பொழுது அருகே வந்த அவன் அம்மா திரவியத்திடம் “அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா பா? பிடிச்சிருக்குனா சொல்லு மாமாகிட்ட சொல்லி பேசிப் பார்ப்போம்” என்றார்.

“அம்மா.. அவ என் ப்ரெண்டு மா.. உனக்கு எப்ப பாரு என் கல்யாணம் பத்திதான் நினைப்பா? நான் எந்த பொண்ணுகிட்ட பேசினாலும் இதையே கேட்குற?” என்றான் திரவியம்.

“இந்த வயசுல எனக்கு வேற என்ன கவலை டா இருக்க போகுது. ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கேன். உங்க அப்பாவும் இல்லை. நான் கண்ண மூடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி என் பேர புள்ளைங்கள பார்க்கனும்னு ஆசை இருக்காதா டா?” – நியாயமான கேள்வியை தான் கேட்டார் திரவியத்தின் அம்மா.

“அம்மா.. அவ்வளவு சீக்கிரம் உனக்கு எதுவும் ஆகாது.. கவல படாம இரு.. நான் மாலுக்கு கிளம்புறேன்.. பின்ன அச்சு வந்து வெயிட் பண்ண போறா..” என்றவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

“அன்னைக்கு ஆஸ்பத்திரியில அவ கத்திட்டு இருக்கறத பார்த்ததும் என்ன ஓரமா உட்கார வச்சிட்டு அவகிட்ட பேச ஓடிட்டான். அவளுக்காக யாருனே தெரியாத ஒருத்தன தேடி கண்டுபிடிச்சு பார்த்துட்டு வந்திருக்கான், ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததும் விடாம ஃபோன் போட்டு சாரி கேட்குறான், இப்ப அவள காத்திருக்க வைக்கக் கூடாதுனு ஓடுறான்.. கல்யாணம் பண்ணிக்கறயானு கேட்டா ப்ரெண்டு –னு சொல்லுறான்.. என்னத்த சொல்லுறது.. இறைவா என் புள்ளைக்கு ஒரு நல்ல பொண்ண காட்டுப்பா” என்று வாசலை தாண்டி சென்றுக்கொண்டிருக்கும் தன் மகனை பார்த்து புலம்பிக்கொண்டிருந்தார் திரவியத்தின் அம்மா.

சிறிது நேரத்தில் தன் வீட்டை விட்டு கிளம்பிய ஆஷ்ரிதா ஒரு ஷேர் ஆட்டோவை பிடித்துக்கொண்டு திரவியம் வேலை செய்யும் மாலுக்கு விரைந்தாள். அந்த நான்குவழி சாலையின் போக்குவரத்து நெரிசலில் ஷேர் ஆட்டோ நின்று கொண்டிருக்க ஆஷ்ரிதாவுக்கு மீண்டும் ஒரு சிந்தனை தோன்றியது.

‘இப்ப எதுக்கும் ஒருமுறை அனேகனை கூப்பிட்டு பார்ப்போமா?’ என எண்ணியவள் அழைக்கவும் செய்தாள். அப்பொழுதும் அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை.

“என்னதான் செய்யுறான் இவன்” என்று எரிச்சலுடன் தனது கைப்பையினுள் அலைபேசியை போட்டாள் ஆஷ்ரிதா. போட்ட மறுகணம் மீண்டும் அலைபேசி ஒலிக்க “ச்சீ என்ன டா இது இரிட்டேட்டிங் டே” என்றவள் தடார் படார் என அலைபேசியை பையில் இருந்து எடுத்தாள்.

ஆஷ்ரிதாவுக்கு அருகில் அமர்ந்திருந்த பாட்டி ஒருவர் “ஏம்மா.. பக்கத்துல மனுஷங்க எல்லாம் இல்ல? கூட்டத்துல ஒழுங்கா உட்கார்ந்து வா மா. நானும் அப்பத இருந்து பார்த்துட்டே இருக்கேன் ச்சை த்தொய் –னு” என்று திட்ட கண்கள் அவளை கேட்காமலேயே கலங்கிப்போனது ஆஷ்ரிதாவுக்கு.

‘கார் –அ இந்த நேரத்துலயா சர்வீஸ்க்கு விடுவேன்? அவசரத்துல ஒரு கேப் புக் பண்ணி வரனும்னு மூலைக்கு எட்டல.. எல்லாம் என் நேரம்’ என்று தன்னை நொந்துக்கொண்டவள் திரவியத்தின் மால் வந்ததும் வேகமாக கீழே இறங்கி ஓட்டுனரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதி சில்லரை கூட வாங்காமல் மாலுக்குள் ஓடினாள்.

“ஏம்மா.. மிச்ச காசு இந்தா மா.. ஏய்..” என்று அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் கத்த, அது ஆஷ்ரிதாவின் மூலையை எட்டவில்லை. அவள் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த்து எல்லாம் திரவியம் என்ன சொல்ல போகிறான் என்பது மட்டுமே.

“இன்னைக்கு உனக்கு லாட்டரி தான் அடிச்சுருக்கு.. கலக்கு மணி கலக்கு” என்று அந்த ஷேர் ஆட்டோவில் இருந்த ஒருவர் கூற ஆஷ்ரிதா கொடுத்த ஐந்நூறு ரூபாயை பார்த்து சிரித்துவிட்டு தன் சட்டை பைக்குள் வைத்துக்கொண்ட ஓட்டுனர் மணி தன் சவாரியை தொடர்ந்தான்.

மாலுக்குள் வேகமாக சென்ற ஆஷ்ரிதா அங்கிருந்த வாட்டர் ப்யூரிஃபையரில் இருந்து தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு திரவியம் வேலை செய்யும் பொக்கே ஷாப்பிற்கு சென்றாள்.

“வந்துட்டியா? வா அச்சு” என்று அவர்கள் அங்கிருந்த காஃபி டே அரங்கிற்கு சென்று அமர்ந்தனர். அமர்ந்ததில் இருந்து ஏதோ அச்சு ஏதோ அசெளகரியமாய் உணர்வது திரவியத்திற்கு தெளிவாய் தெரிந்தது.

“அச்சு… ஆர் யூ ஓகே…” என்றான் கேள்வியாக.

“இல்லை திரு… அன்னைக்கு இங்க தானே ஒரு லேடி வந்து என்ன அசிங்கமா பேசிட்டு போனாங்க?” என்றாள் பாவமாக.

“எந்த லேடி?” என கேட்ட திரவியத்தை பார்த்து முறைத்தாள் ஆஷ்ரிதா.

“ஓ… சாரி… சாரி… அந்த ப்ளூ ஷர்ட் விஷயம் தானே… இன்னுமா அதை நினைச்சிட்டு இருக்க அச்சு?” என கேட்டான்.

“எப்படி திரு மறக்க முடியும்… இப்ப கூட அந்த லேடி இங்க இருக்கற மாதிரியும் என்னை பார்த்துட்டு இருக்கற மாதிரியும் இருக்கு. வர வர ப்ளூ கலர் –னாலே அலர்ஜியா இருக்கு” என்றாள் ஆஷ்ரிதா.

“ஹே கம் ஆன் யா… ஃப்ரீயா விடு. தேவை இல்லாதத எல்லாம் எதுக்கு யோசிக்கிற?” என்று கேட்டவன் இருவருக்கும் வழக்கம் போல காப்புசினோ காஃபியை ஆர்டர் செய்தான்.

“சரி… நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு. அனேகனை எப்படி நீ பார்த்த?” என்று வந்த வேலையில் மும்மரமானாள் ஆஷ்ரிதா.

“நீ பேசிட்டு போனதுக்கு அப்பறம்.. இல்ல இல்ல அடிச்சிட்டு போன அப்பறம்…” என்று சிறு இடைவெளி விட்டு ஆஷ்ரிதாவின் முகபாவணையை கவனித்தான் திரவியம். முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விஷயத்தை கேட்கும் முனைப்பில் தான் தீவிரமாய் இருந்தாள் ஆஷ்ரிதா.

‘அடிச்சதுக்கு சாரி சொன்னதுலாம் சும்மா தான் போல… ஒரு ரியாக்‌ஷனும் காணோமே!’ என யோசித்துக் கொண்டிருந்தான் திரவியம்.

“நான் அடிச்சதுக்கு அப்பறம்… என்னனு சொல்லு திரு” என்று அவசரித்தாள் ஆஷ்ரிதா.

‘அட இரு மா… நானே வாய கொடுத்து மாட்டிக்கிட்டேன் போலயே.. ஒரு தடவ அடிச்சிட்டு ஓராயிரம் தடவ சொல்லுறாளே’ என்று சலித்துக்கொண்டவன் பேச்சை தொடர்ந்தான்.

“நீ போன பிறகு நான் டாக்டர் பிரபாகரனை போய் பார்த்தேன். அவரு எங்க பேமிலி டாக்டர் தான். நல்ல பழக்கம். அதனால நம்ம ப்ரெண்ட்ஷிப் பத்தியும், அன்னைக்கு ரிஷப்ஷன் –ல நடந்த விஷத்தை பத்தியும் சொல்லி அனேகன் பத்தி விசாரித்தேன். அவரு இருக்குற இடம் தேடி போனேன்” என்றான் திரவியம்.

“என் விஷயத்தை பத்தி என்னோட நாலேட்ஜ் இல்லாம நீ எப்படி திரு அவருகிட்ட விசாரிக்கலாம். உன்கிட்ட இத்தனை நாள் நான் எதுவும் சொல்லாம இருந்ததுதான் கரெக்ட்-னு நினைக்க வச்சிட்ட. அனேகன் என்ன பத்தி என்ன நினைப்பாரு?” என்று கொந்தளித்தாள் ஆஷ்ரிதா.

“ஹே… கூல்… ஏன் அச்சு இப்படி பேசுற? நான் உன் ப்ரெண்ட் இல்லையா. உனக்கு நல்லது தானே நான் நினைக்சிறேன். இத விசாரிக்க எனக்கு உரிமை இல்லையா?” என கேட்டான் திரவியம்.

“உனக்கு யார் அந்த உரிமைய கொடுத்தா திரு? உரிமை –ங்கறது நாங்க உனக்கு கொடுக்க வேண்டியது… நீயா எடுத்துக்க வேண்டியது இல்ல” என்று காரம் சாரமாக கூறினாள் ஆஷ்ரிதா.

“அச்சு… நீ இப்ப கோபத்துல பேசுற. இத நான் மனசுல வச்சிக்க மாட்டேன். உனக்கு பிடிக்கலைனா இனி நான் தலையிடல… ஆனால் நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்” என்றான் திரவியம்.

‘இன்னும் சொல்லி முடிக்கலையா நீ’ என்பது போல பார்த்தாள் ஆஷ்ரிதா.

“நான் அந்த அனேகன பார்க்க போன போது அவன் ஒருத்தர போட்டு அப்படி அடிச்சிட்டு இருந்தான். அது அவனோட அப்பா –னு நினைக்கறேன். கடைசியா…” என்று இழுத்தான் திரவியம்.

“என்ன கடைசியா? சொல்லு” என்று பரபரப்பாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“சொன்னா நம்ப மாட்ட… அங்க இருந்த கேஸ் சிலிண்டர வெடிக்க வச்சி அந்த மனுஷன கொலை பண்ணிட்டான்” என்று சொல்லிவிட்டு மெளனமானான் திரவியம்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த ஆஷ்ரிதா “என்ன கொலை பண்ணாரா? திரவியம்… டோண்ட் பீ ஓவர் ஸ்மார்ட்… இப்படியெல்லாம் சொன்னா நான் அவன பார்க்க போக மாட்டேன் –னு தானே உன் ப்ளான்” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“வாட்! என்ன பேசுற ஆஷ்ரிதா! நான் எதுக்காக உன்கிட்ட பொய் சொல்லனும்? அதுவும் இவ்வளவு பெரிய விஷயத்துல?” என கேட்டான் திரவியம்.

“அதை தான் நானும் கேட்குறேன் திரு. எதுக்கு இப்படி ஒரு பொய் நீ சொல்லனும் என்கிட்ட?” என்று சினந்துக் கொண்டாள் ஆஷ்ரிதா. அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்த காஃபி அந்த டேபிளில் வைக்கப்பட்டது.

“நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளு அச்சு… கோபப்படாதே” என்று அவளது கையை பிடித்தான் திரவியம்.

“கையை விடு திரு” என்று அவள் வேகமாக எழுந்துக்கொள்ள மேஜையில் இருந்த காஃபி திரவியத்தின் மேலே மொத்தமாய் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாத ஆஷ்ரிதா “ப்ரெண்டா பழகிட்டோம் அப்படீங்கறதுக்காக டோண்ட் டேக் அட்வாண்டேஜ். என் விஷயத்துல நீ தலையிடாத. இனி நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன்னு நினைக்காத” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று குழம்பிப்போய் அமர்ந்திருந்தான் திரவியம்.

(களவாடுவான்)