வானம் காணா வானவில்-21
வானம் காணா வானவில்-21
ஈற்றியல் அத்தியாயம்-21
கலகலப்பு மீண்டிருந்தது. சஞ்சய் குடும்பமும், தங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது தனது மாமியாரிடமும், அரவிந்திடமும் தனது எண்ணத்தை வெளிப்படுத்துவாள், விசாலினி.
இருவரும் பதில் பேசாது கடந்து விடுவர்.
நீரஜா வாரமொரு முறை, தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து சென்றாள். நீருவின் குறும்பு, பெரிய மனித பேச்சு மற்றும் குழந்தை தனத்தால் வீடு பழையபடி வண்ணமயம் மாறாது இருந்தது.
“வாடா குட்டி”, என்ற பாட்டியின் வரவேற்பைக் கேட்ட நீரு
“வீட்ட விட்டு விரட்டிட்டு, வாடா குட்டினு பாசமா கூப்பிட்டு என்னைய ஏமாத்த பாக்காதீங்க!”, நீரு முகத்தை தூக்கி வைத்தவாறு கூறினாள்.
“யாருடி உன்னைய விரட்டுனது!”, நீலா.
“வேற யாரு? எல்லாம் எங்க பாட்டிதான்!”, என்று சிரிக்காமல் நீலாவைப் பார்த்தவாறே கூறினாள்.
“அந்தப் பாட்டி யாருடி?”, நீலா எதுவும் தனக்கு தெரியாது என்பது போல கேட்டார்.
“யாரோ நீலாவோ கீலாவோவாம்!”, நீரு
“அடி….ங்க… எனக்கு பேரு நீதான் வச்சியாடி. பேரு வச்சவ மாதிரி எங்கிட்டேயே வந்து சொல்ற?”, நீலா
“நீங்க மட்டும் எனக்கு நீரு, மோருனு பேரு வச்சிட்டு, எம் பேரச் சொல்லிக் கூப்பிடலாம். நாங்க மட்டும் உங்க பேர சொல்லக் கூடாதோ!”, என்று வீம்பாக பாட்டியிடம் கேட்டாள், நீரு.
“உங்க அம்மா உன்னைய பேசாத… ரொம்ப பேசாதன உன் வாயில போடுறதுல தப்பே இல்ல…! இந்தா அவள வரச் சொல்றேன்”, என்று போனை எடுத்து பேசுவதான பாவனையுடன் நீலா கூற
“வீக்லி ஒன்ஸ் தான்… டாடி… இங்க கொண்டு வந்து விடறாங்க! இது தெரிஞ்சா அப்புறம் இந்தப்பக்கமே விடமாட்டாங்க. இப்பதான் நான் பாசப் பயிர எங்க பெரியம்மா கூட வளக்க வந்தேன். அது உங்களுக்கு கண்ணை உறுத்துதோ!”, என்றவள், நீலாவின் அருகே வந்து “இங்கேயே இருந்தப்போ இந்த அம்மா என்னைய பெரியம்மா கூட விளையாடவே விடல!, இங்கேயே நாங்க திரும்ப வந்திறவா பாட்டி!”, என்று ஏக்கக் குரலில் நீலாவிடம் நீரு கேட்டாள்.
வீட்டிற்குள் வந்து தன் தந்தை விட்டுச் சென்றதும், தனது அங்கலாய்ப்பை பாட்டியிடம் தெரிவித்ததோடு, தனது ஆசையையும் தெரிவித்து விட்டிருந்தாள் குட்டிப் பெண்.
“பெரிய மனுசி பேசி முடிச்சிட்டியா? கொஞ்ச நாளைக்கு அங்க இருங்க! அப்றம் இங்கேயே வந்திராலாம். உன் பெரியம்மா அப்போமே உன்னைய தேடினா! போ… போயி என்னனு கேளு!”, என்று விரட்டினார் நீலா.
பேச்சை வளர்க்க விரும்பாதவர் விசாலினியிடம் பேத்தியை அனுப்பி வைத்தார்.
நீருவைக் கண்டவுடன் விசாலினியும் தனி உலகத்திற்குள் பிரவேசித்து விடுவாள். சுற்றம் மறந்து ஒரே குதூகலம் தான். நீருவிற்கு பிடித்த மாதிரியான பொழுதுபோக்கு, விளையாட்டு, உணவு, கல்வி என அவளும் குழந்தைபோல நீரஜாவிற்கு ஏற்றாற்போல மாறிவிடுவாள்.
நீருவைக் கண்டு விட்டால் கண்மண் தெரியாமல், சிறுபிள்ளை போல மாறிவிடும் மனைவியைக் காணும்போது, மனம் கனத்தாலும், நாட்கள் சென்றால் அனைத்தும் சரியாகிவிடும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு நகர்ந்துவிடுவான், அரவிந்த்.
பிள்ளை ஆசை தம்பதியருக்கு இருந்தாலும், விசாலினியின் உடல்நிலை மற்றும் மனவளம் கருதி ஓராண்டிற்கு பிறகு என்று முடிவு செய்திருந்தனர்.
வீட்டில் இருந்தால் கண்டதையும் யோசித்துக் குழம்பும் நிலை உண்டாகும் என விசாலினியே தொடர்ச்சியாக பள்ளிச் செல்லத் துவங்கியிருந்தாள்.
மேற்பார்வை என்ற நிலையில், பணிகள் இலகுவாக இருந்தாலும், ஏனோ தானோ என்றில்லாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் தனக்கான பணியை மேற்கொண்டாள், விசாலினி.
அரவிந்த், ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொள்ள எண்ணியிருந்தான். விசாலினியை தன்னுடன் தற்போது அழைத்துச் செல்ல இயலாத, அவளின் உடல்நிலையை எண்ணி, தான் மட்டும் கிளம்ப உத்தேசித்திருந்தான்.
மருத்துவரின் ஆலோசனைப்படி ஓராண்டு நிறைவிற்குப் பிறகு, விமான பயணத்தை மேற்கொள்ள எண்ணியிருந்தனர், தம்பதியர்.
அரவிந்த் ஆஸ்திரேலியா புறப்படும் நாள் வந்திருந்தது.
திருமணத்திற்குப் பிறகு தனித்துச் செல்லும் முதல் பயணம். நினைக்கவே கசந்தது, அரவிந்திற்கு.
ஆண்கள் பெரும்பாலும் தங்களது மனக்கலக்கத்தை வெளியில் காட்டுவதில்லை. அப்படிக் காட்டினால் ஆண்களின் பலவீனம் கேலிக்குள்ளாக்கப்படும் என்று நம் சமூகக் கட்டமைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சமுதாயத்தில் ஆணாதிக்க எண்ணத்தை குழந்தை முதலே திணித்து வளர்க்கப்படுகின்றனர். வளரியல்பு மாறினாலும், சமூக இயல்பு கண்டு வளர்ந்ததன் காரணமாக இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள பிரயத்தனப்பட்டான், அரவிந்த்.
விசாலினியும், தன் மனதை மறைத்தபடியே கணவனை வழி அனுப்பியிருந்தாள்.
ஆனால் இருவரின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அவர்களின் வதனம் இருந்ததை வசதியாக மறந்திருந்தனர். மற்றவர்கள் அதைப் பார்த்திருந்தாலும் காணாதது போல இருந்தனர்.
கணவனின் பயணத்திற்குப் பின், பள்ளியில் பெரும்பான்மை நேரத்தை செலவளித்தாள், விசாலினி. மேல்நிலைக் கல்வி மாணாக்கர்களின் தனது ஆசிரியப் பணியின் போது உணர்ந்த, மாணவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிகழ்வுகளை தங்களது பள்ளியில் சரி செய்ய முனைந்தாள்.
பள்ளி விட்டு வந்ததும், நீலாவுடன் அன்றைய நடப்புகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வாள். நீலாவும், அமைதியாக எல்லாவற்றையும் கேட்பார்.
ஒழுங்கு நடவடிக்கைகளில் புதிய மாற்றங்கள் என்று எதையும் எடுத்தவுடன் செய்யும் அளவிற்கு பள்ளி நிர்வாகம் பின்தங்கிய நிலையில் இல்லாததால் முன்பிருந்ததை பெரும்பாலும் அப்படியே பின்பற்றியிருந்தாள், விசாலினி.
அனைத்து தர மாணவர்களுக்கும், எளிய, இதமான அணுகுமுறையுடன் கூடிய கல்வியை, மன அழுத்தம் ஏற்படாதபடி கற்பிக்க ஏதுவாக வளர்ச்சிப் பணிகளை தங்களது பள்ளியில் மேற்கொண்டாள்.
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு, பிராணாயாமப் பயிற்சியை கட்டாயமாக்கினாள்.
தொடர்ச்சியாக கற்கும் முறை என்றில்லாமல், இடையிடையே மனதை திசை திருப்பும், பல குறுகிய கால பயிற்சி முறைகளை கொண்டு வந்திருந்தாள்.
மாணாக்கர்களின் விருப்பம்போல அவரவர் விரும்பும் குறுகிய காலப் பயிற்சிகளில் ஈடுபடும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
விவசாயம், நெசவு, நீதிநெறிக் கல்வி, இயற்கை பற்றிய விளக்கம், மெய்ப்பொருள் விளக்கம், இயற்கை பேரிடர் விழிப்புணர்வு பற்றிய விளக்கம், உடலியல் மேலாண்மை, உடற்பயிற்சியும் அதன் அவசியமும், நேர மேலாண்மை, மனஅழுத்த மேலாண்மை, பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு, சிறுதொழில் பற்றிய விழிப்புணர்வு, இலகுவாக மனனம் செய்வதற்கான முறையான வழிமுறைகள், இணையம் பற்றிய விழிப்புணர்வு, கல்லூரிக் கல்வியின் அவசியம், கல்வியைத் தேர்ந்தெடுத்தலும், அதன் நோக்கமும், பயனும் போன்றவை அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது.
அதன்பின், ஆசிரியர்களைக் கொண்டே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
பள்ளி நேரத்தில் மட்டுமே மாணாக்கர்கள் கற்றல் என்ற முறையை கொண்டு வந்திருந்தாள். தனிப்பயிற்சி மறுக்கப்பட்டிருந்தது.
பகலில் பள்ளிக்குச் சென்று வந்தவள், கணவனின் ஆஸ்திரேலியா பயணத்திற்குபின் தனது அத்தம்மாவுடன் பெரும்பான்மை நேரத்தை செலவிட்டிருந்தாள்.
இரவு நெருங்கும் வேளைகளில், நெருப்பில் நிற்கும் வேதனை வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படுக்கைக்குச் சென்று விடுவாள். அவனில்லாத இரவுகள்…! நீண்டது.
நித்திரையும் சில நாட்களில் பறி போயிருந்தது.
பறி போன நித்திரை நேரத்தை பயனுள்ளதாக்குவாள் விசாலினி. பள்ளிக்கு தன்னாலானாவற்றை யோசித்து புதுப் புது முயற்சிகளை தனது மாமியின் துணையுடன் செயல்படுத்தி, வெற்றியும் காணத் துவங்கியிருந்தாள்.
இரண்டு மாதங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாக, மாணவர்களின் மாதாந்திர தேர்வு அறிக்கைகளைக் கொண்டு கண்டறிந்தனர்.
அதிக ஈடுபாடுடன் மாணவர்கள் இருப்பதை கண்கூடாகக் கண்டனர். மனஅழுத்தம் குறைந்த மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.
காலை பள்ளிக்கு வந்தது முதல், மாலை வீடு திரும்பும் வரை, புத்துணர்ச்சியோடு மாணாக்கர்களை வளாகத்தினுள் காணும் நிலை வந்திருந்தது.
ஆசிரியர்களுக்கும் போதிய ஓய்வு கிடைத்தால் மட்டுமே அவரவர் பணிகளை மன அழுத்தம் இன்றி திறம்பட மேற்கொள்வர் என்ற தர்க்க முடிவிற்கிணங்க, பணிப்பளு குறைக்கப்பட்டது. பணிப்பளு குறைத்தால் உண்டாகும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய புதிய ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கேட்டிருந்தாள், விசாலினி.
அனைவருடனும் கலந்தாலோசிக்கப்பட்டு புதிய ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டாள், விசாலினி.
ஓய்வின்றி உழைப்பதன் காரணமாக, ஓய்ந்து வருபவளுக்கு களைப்பால் உறக்கம் மீண்டிருந்தது. தூங்க துயில் கெஞ்சியது. நாட்கள் அதன்போக்கில் வேகமாகச் சென்றது.
அரவிந்தனுக்கும், இந்த அனுபவம் புதுமையாக இருந்தது. பெற்றவர்களை விட்டு விட்டு உலக நாடெங்கும் சுற்றித் திரிந்தவனுக்கு, இந்தப் பயண அனுபவம் வித்தியாசமாக உணரச் செய்திருந்தது.
வேலை, வேலை என்று திரிந்தவன், ஷாலு, ஷாலு என்று மனம் முழக்கமிட்ட தனது மனதால் வந்த வித்தியாசம் என்னவென்று புரிந்தாலும், பணிகளை விரைந்து முடித்து திரும்ப வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து, பணிகளை ஆரம்பித்திருந்தான்.
பணி நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களை ஷாலுவின் நினைவுகளே ஆக்ரமித்து, அரவிந்தனை ஆட்டம் காணச் செய்தது.
ஆனாலும், தினசரி பேசியிலும், குறுஞ்செய்தி வழியாகவும் குடும்பச் செய்தி பரிமாறி, கலகலவென்று இல்லாத போதும், கலக்கம் இல்லாத நாட்களாகச் சென்றது.
இடையிடையே, தந்தை, தாய், பாட்டி, தாத்தாவை அவர்களின் வீட்டிற்கு தனது மாமியார் நீலாவோடு சென்று பார்த்து வருவாள், விசாலினி. அது போன்ற வாய்ப்புகள் அரவிந்தனுக்கு இல்லாததால் பேசியில் புலம்பி தீர்த்தான்.
சில நாட்கள் நீலாவை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று வருவாள், விசாலினி.
அன்று விடுமுறை நாள் என்பதால் பெரும்பான்மை நேரம் வெட்டியாக கழிந்திருந்தது.
புத்தகம் எடுத்தவளின் கவனம் அதில் லயிக்கவில்லை. கணவனிடம் இருந்து அழைப்பு வராமல் போக, என்ன செய்ய என்று யோசித்து குழம்பினாள்.
அழைப்பானா? என்ற ஏக்கம் மனதில் தோன்றி மறைந்தது. அதிகப்படியான பணிப் பளுவின் காரணமாக முன்பு போல அரவிந்தனால் அதிகம் பேச இயலவில்லை.
அவனின் நிலை விசாலினிக்குப் புரிந்திருந்தாலும், மனம் ஏங்கியது.
தன்னை தாங்கிக் கொண்டவனின் நினைவுகளை அசைபோட்டபடியே அன்றைய தினத்தைக் கடந்தாள், விசாலினி.
ஆனாலும் தனது மனதைக் காட்டாமல் பேசினாள், விசாலினி.
“இப்போ எல்லாம் என்னைய தேடவே மாட்டிங்கற விசா! இப்பவே தேடலைனா பிள்ளைங்க வந்துட்டா கண்டுக்கவே மாட்ட போலயே!”, என ஏக்கமான கணவனின் குரலைக் கேட்டவள்
“தேடறதா? நீங்க எங்கையும் காணாமலா போயிட்டிங்க! வேலையா தான அங்க போயிருக்கீங்க…! அது முடிஞ்ச பின்ன தானே இங்க வரமுடியும்!”, விசா
“ரொம்ப பேசுறடி!”
“நீ ரொம்ப பேசாதடா…! எங்கிட்டுப் பேசினாலும் கோல் போடுவ…! உன்னைய பத்திய எனக்கு தெரியாதா?”, என சிரித்தாள்
“தெரிஞ்சவ இப்டி இருக்க மாட்டா! தொல்லை விட்டதுனு இருக்கற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. இதுல, புருசன டா போட்டு வேற பேசற…! வந்தவுடனே உன் வாயில போட சொல்லி எங்கம்மாகிட்ட சொல்லிக் குடுக்குறேன்!”
“இன்னும் எல்.கே.ஜி. பையனாட்டம் அம்மாட்ட சொல்லுவேன்! பாட்டிக்கிட்ட சொல்லுவேன்னு சொல்ற…! ஆளு தான் வளந்திருக்க மச்சி!
ஆமா… நீ கொண்டு வர சாக்லேட்டதான அத்தம்மாகிட்ட தந்து என் வாயில போட சொல்லப் போற…! அதக்கூட நீ எனக்கு குடுக்க மாட்டியா மச்சி!
உன்னைய பெரியவன்னு நினைச்சு நான் வேற கல்யாணம் பண்ணிகிட்டேனே! கடவுளே இந்த அப்பிராணிப் புள்ளைய காப்பாத்து!”, என்று தனது நெஞ்சில் கை வைத்து கூறியபடியே விசாலினி சிரிக்க
“ஏய்! ரொம்ப பேசாதடி. நேருல வந்து நான் யாருன்னு காமிக்கிறேன். அப்பத்தான் இந்த அரவிந்தன் யாருனு உனக்கு தெரியும்!”
“ஏற்கனவே நீ காட்டுன படத்தையெல்லாம் ஷாலுங்கற தியேட்டருல ஓட்டிட்டோம். புதுசா என்ன இருக்கு?”, எனக் கூறி சிரித்தவள், “நேருல வா மச்சி! அடுத்த படம் எப்டினு பாப்போம். மீ வயிட்டிங்கு”, என சிரித்தாள்.
“நிஜமாவே உன்னை ரொம்ப மிஸ் பண்றேண்டி! எப்படா வேலை முடியும்னு இருக்கு. உனக்கு அப்டி இல்லையா?”, என கிறங்கிய ஆனால் ஏக்கம் நிறைந்த குரலில் கணவன் கூறியதைக் கேட்டு, அவனின் கேள்வியில் சற்று நேரம் நிதானித்தவள்
“எனக்கு ஏக அட்வைஸ் பண்ணிட்டு கிளம்பி போனீங்க. இப்ப, அங்கபோயி இருந்துட்டு இப்டி புலம்பினா… நான் என்ன மச்சி செய்யறது? வேலை முடிச்சி சீக்கிரமா வாங்க…!”
“கேட்டதுக்கு பதில் சொல்றியாடீ, ராட்சசி”
“என்ன சொல்லணும்?”
“உண்மைய சொல்லு”
“என்ன உண்மை?”
“ரொம்ப நடிக்காத… என்னைய அலைய விடறதே உனக்கு வேலை. உன்னை கெஞ்சணும். நாங்கெல்லாம் அப்டி இல்லைமா….! மனசுல இருக்கிறத மறைக்காம பேசுவோம். உங்கள மாதிரி இல்ல!”
“அது தான் தெரியுதில்ல என்னையப் பத்தி! அப்புறம் எதுக்கு எங்கிட்ட கேக்குறீங்க?”
“தெரியாம கேட்டுட்டேன். இனி கேக்க மாட்டேன்”
“வாங்க பாஸ் நேருல!
கேட்டுட்டேன், கேக்க மாட்டேன்னு ரொம்ப கன்பியூஸ் ஆகி இருக்கீங்க!
ஆஸ்திரேலியால எரிஞ்ச தீயோட கனப்பு முழுக்க உங்களுக்கு வந்ததுருச்சு போலயே! ஆயில்பாத்துல உச்சந்தலையில எலுமிச்சை வச்சி தேய்க்கணும் போல!
எதுனாலும் நேருல வந்த பின்ன முடிவு பண்ணிக்கலாம்! நீங்க ஒன்னும் பயப்படாதீங்க!”, என்று விசா சிரித்தபடியே கூற
“இங்கே ஒரு புள்ளை என்னைய வச்ச கண்ணு எடுக்காம பாத்திட்டு இருக்கு! நேத்தே வந்து டேட்டிங் போகலாமானு கேட்டுச்சு. பேசாம அதோட மிங்கிள் ஆக யோசனை பண்ணப்போறேன். நீதான் என்னைய கண்டுக்கவே மாட்டிங்கறியே!”, என்று அரவிந்த கூறினான்.
“முடிஞ்சா அதை செய்யுங்க!”, என்று வாய்மொழி கூறியிருந்தாலும், மனம் தன்னைச் சாடியது.
‘அவந்தான் விளையாட்டுக்கு சொல்றான்னா நீயும் அவங்கிட்ட இப்டி பேசுற. இதையே அவன் விளையாட்டா எடுத்துக்காம வினையமா எதாவது பண்ணி வச்சா உனக்கு சரியா’, என்று மனம் கேட்டது. ஆனாலும், அதன்பின் ஓரிரு வார்த்தைகள் பேசி அலைபேசியை அணைத்திருந்தாள், விசாலினி.
முன்பை விட நிறம் குறைந்து, விசாலினி மெலிந்ததை அனைவரும் உணர்ந்திருந்தாலும், நீலா மட்டும் மகனுடன் பேசும்போது மறையாது விசாலினியின் உடல்நிலையினை அரவிந்தனிடம் ஏதேச்சையாகக் கூறியிருந்தார்.
முதலில் பதறியவனை, ‘நீ இல்லாத ஏக்கத்துல அப்டி இருக்கா. நீ வந்துட்டா எல்லாம் சரியாகிரும்’, என நீலா கூறியபின் அமைதியாகி இருந்தான், அரவிந்த்.
தான் அந்தளவிற்கா ஷாலுவைப் பாதிக்கிறோம் என்று ஒரு புறம் குதூகலித்தாலும், அவள் மெலிவை எண்ணி வருந்தினான். பிரிவாற்றாமை தனக்குப் போல அவளுக்கும் இருக்கிறது. ஆனால் தன்னிடம் கூறாமல், பகிராமல் மறைக்கிறாள் என்கிற செய்தி தனக்குள் ‘ஏனிப்படி’ என்ற கேள்வியைத் தந்தது.
வாய் திறந்து தன்னைப் போல பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதை எண்ணி சற்று வருத்தம் மேலிட்டிருந்தது. தன்னிடம் என்ன ஈகோ வேண்டிக் கிடக்கிறது என்கிற எண்ணம் வந்தது.
மருத்துவனையில் நோயாளியாக இருந்தபோது தன்னிடம் அதிகமாக இணக்கம் காட்டியதை எண்ணிப் பார்த்தான்.
தற்போது, திருமணத்திற்கு முந்தைய விசாலினியாக மாறி வருவதையும் மனம் உணர்ந்தது.
உடலளவில் விபத்திற்குப் பின் அவள் மீண்டதை, மீள்வதை எண்ணி மகிழ்ந்தாலும், மனம் அவளின் இணக்கத்திற்கு ஏங்கியது.
ஒரு மாதத்தில் திரும்பி விடுவதாகக் கூறிச் சென்றவன், ஆஸ்திரேலியாவின் எதிர்பாரா தீ விபத்தால் உண்டான இழப்பை நேரில் கண்டு, தான் சொந்த ஊருக்குத் திரும்புவதை தள்ளி வைத்திருந்தான்.
அத்தியாவசிய தேவைகளை, அங்கு வாழும் மக்களுக்கு தங்களால் இயன்றதை செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்.
மனிதநேயம் பொருட்டு, மூலப் பொருட்களை இலாபம் கருதாது, ஆஸ்திரேலியாவில் உண்டான எதிர்பாரா தீ விபத்தில் சிக்கி தங்குமிடமின்றித் தவிக்கும் அம்மக்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ள தனது நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
நாற்பது நாட்கள் கழித்து திரும்புவதாக கூறியிருந்தவன், எழுபது நாட்களை ஆஸ்திரேலியாவில் செலவிட்டிருந்தான்.
ஓரளவு தனது பங்கை நிலைநாட்டி, இனி தனது நிறுவன பணியாளர்களே திறம்பட நிர்வகித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் அங்கிருந்து கிளம்புவதாகத் தன் தாயிடம் மட்டும் தெரிவித்திருந்தான்.
கணவனின் வருகையை அறியாதவள் வழக்கம்போல தனது பணிகளுடன் பயணித்திருந்தாள், விசாலினி.
நீலா, அரவிந்த் விசாலினியிடம் தனது வருகையைத் தெரிவித்து இருப்பான் என் எண்ணியிருந்ததால் அதைப் பற்றி தெரிவிக்கவில்லை.
சர்ப்பிரைஸ் தருவதாக எண்ணி வந்தவனுக்கு, பள்ளிக் கல்வித்துறை நடத்திய வருடாந்திர சந்திப்பு நிகழ்வில் பங்கு கொள்ளச் சென்றிருந்தாள், விசாலினி.
வந்தவன் பெற்றோரிடம் அரை மணித் தியாலம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
தாயிடம் வினவ, “அவக்கிட்ட நீ இன்னிக்கு வரத சொல்லலயா? ஏன் அரவிந்த் இப்டி இருக்க?”, என்று நீலா கோபமாகவே கேட்டார்.
“நானே அவள பிக்கப் பண்ணிட்டு வரேன். ஸ்கூல்லதான இருப்பா?”
“இல்ல, இன்னிக்கு டிபிஐ ல மீட்டிங். அங்க போயிட்டு வரதா சொன்னா”
“சரி, நான் கிளம்பறேன்”, என்றவன் கிளம்பி கல்லூரி சாலை சென்றான்.
டிரைவரிடம் தான் எடுத்துச் சென்ற வண்டியை எடுத்துச் செல்லப் பணித்தவன், டிரைவர் இருக்கையில் அமர்ந்து பொறுமையோடு காத்திருக்கத் துவங்கினான்.
நாற்பது நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள், நிதானமாக நடந்து வந்தாள். வரும்போதே மனைவியைப் பார்த்தவனுக்கு மனம் வலித்தது.
முன்பே மெலிவு தான். தற்போது இன்னும் மெலிந்து காணப்பட்டாள். காட்டன் சில்க் சாரியில் இருந்ததால் பெரியளவில் மெலிவு தெரியவில்லை.
கையில் ஃபைலுடன் வந்தவள், பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.
தன்னை சரி செய்து அமர்ந்து கொண்டவள், “கிளம்புங்க கோபி”, என தனது கார் டிரைவருக்கு பணித்துவிட்டு, கையில் வைத்திருந்த ஃபைலைத் திறந்து பார்த்தபடியே வந்தாள்.
காரை இயக்குவதில் உண்டான மாறுபாட்டை உணர்ந்து, நிமிர்ந்தவள், பீச்சை நோக்கிச் செல்லும் காரை, யோசனையோடு பார்த்தவள் தற்போது, டிரைவர் இருக்கையில் இருப்பவனைக் கவனித்தாள்.
இருவரின் பார்வையும் கார் கண்ணாடியில் சந்திக்க, “நீங்க எப்ப வந்தீங்க?”, அவன்தானா என்ற சந்தேகம். எப்படி என்னிடம் வருவதைக் கூறாமல் வந்திருப்பான் என்ற எண்ணம் மேலிட, ஒரு வேளை தனக்குத்தான் கணவனின் நினைவிலேயே இருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்ற எண்ணம் அவளை அந்த மாதிரி கேட்கச் சொன்னது.
“எங்க வந்தத கேக்குற?”, அரவிந்த்
‘அப்பா… அவனே தான். தாங்க் காட்…’ என மனதில் நினைத்தவள்
“ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல?” சொல்லியிருந்தா நான் மீட்டிங்கு வேற யாரையாவது அரேன்ஞ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்திருப்பேன்ல”, அவளின் வார்த்தைகளில் வழிந்த ஏக்கம் டன் கணக்காய் உணர்ந்தான்.
“இப்ப அதனாலென்ன. வந்தாச்சு… இனி என்ன செய்யலாம் அத மட்டும் சொல்லு”,அரவிந்த்
“நான் சொல்லுறத கேக்குறவரா நீங்க? உங்களுக்கு என்ன தோணுதோ அதத்தான இப்ப வர செய்யிறீங்க. அதுப்போலவே செய்யுங்க”, என்று தனது கோபத்தை விசாலினி கணவனிடம் காட்ட
“ஷாலுமா… உனக்கு சர்ப்பிரைஸ் தர நினைச்சேன். அவ்ளோதான். இப்ப என்ன செய்யலாம். கொஞ்ச நேரம் பீச்சுல போயி நின்னுட்டு, வீட்டுக்குப் போவோமா?”, அரவிந்த்.
“நீங்க போங்க… நான் வரல”, என்று பிடிவாதமாக மறுத்திருந்தாள், விசாலினி.
“ஏண்டா, எம்மேல கோவமா?”
“உங்கமேல நான் கோவப்பட்டு எனக்கு என்னாகப் போகுது. அங்க வெள்ளைக்காரிகூட மிங்கிள் ஆகப்போறேன்னு இங்க வந்திட்டீங்க பாஸ்?”, என்று நக்கலுடன் சிரித்தபடியே கேட்டாள், விசா.
அத்தோடு வண்டியை நிறுத்தியவன், “அந்தக் கதைய சொல்லுறேன். நீ முன்னாடி வா. கழுத்து வலிக்குது. திரும்பி, திரும்பி பேச கஷ்டமாயிருக்கு”, அரவிந்த்.
“நீங்க பீச் போறேன்னீங்க. போயிட்டு வந்தபின்ன நான் முன்ன வந்து உக்காரேன்”
“எனக்கும் பீச்செல்லாம் போற ஐடியா இல்ல. சும்மா கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு கிளம்புவோம்”, என்றவனை அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பின்னால் வந்திருந்தான்.
கதவைத் திறந்து அருகே வந்து அமர்ந்தவனைக் கண்டதும், புதுமணப் பெண் போல வெட்கம் வந்து விசாலினியை இம்சித்தது. மனம் தடதடவென அதிர, அரவிந்தனின் அருகாமை அவளை இயல்பு தொலைக்கச் செய்தது.
மனம் விரும்பிய அருகாமை. ஆனால் அருகாமை தந்த உணர்வு அவளை இம்சித்தது. இனிமையான இம்சை அங்கு அரங்கேறியது.
வந்தவன், தன் இருகைகளால் அவனின் வரவால் மலர்ந்திருந்த வதனத்தை தன்னருகே இழுத்து இதழ் பதித்தான்.
எழுபது நாட்களின் ஏக்கம் மட்டுப்பட்டது போல தோன்றியது.
ஆனாலும், பேச்சிற்கு அங்கு வேலை இல்லாமல் போக, இருவரும் சுற்றம் மறந்திருந்தனர்.
வெளியில் வேறு வண்டியின் ஹாரன் சத்தத்தில் மீண்டவர்கள், முகம் பார்த்து சிரிக்க,
“என்ன இப்பவே கிளம்பணுமா?”, என்ற கணவனின் கேள்வியில் “சமத்தா உக்காந்து பேசினா இருக்கலாம். மாரனாட்டம் மாறுவீங்கன்னா வீட்டுக்கே போயிரலாம்”, என்று தனது முடிவைத் தெரிவித்தாள், விசாலினி.
“கொஞ்ச நேரம் இங்க இருந்து பேசிட்டிருப்போம்”, என்றவன் அதற்கு மேல் அவள் எதிர்பாரா நிலையில் அவளின் மடியில் தலை வைத்து படுத்தபடியே “ம்… சொல்லு…. ஸ்கூல் இப்ப எப்டி போகுது”, அரவிந்த்.
“வழக்கம் போல…”, என்று இவள் வாய் வார்த்தை பேச மடியில் தலை வைத்திருந்தவன், தனது கைகளால் மனைவியின் இடையில் தனது கை கொண்டு கவிதை பேச
“…இது சரி வராது. எந்திரிங்க… கிளம்பி வீட்டுக்கு போவோம். வாங்க”, என்று தனது கணவனின் செயலில் வீட்டிற்கு அழைக்க
“ஒன்னும் பண்ணல. அப்டியே கட்டிப் புடிச்சிட்டு கதை கேக்குறேன்”, என்று அரவிந்த கண் சிமிட்டிக் கூற
“கதை கேக்குறதெல்லாம் வீட்ல போயி வச்சிக்கலாம், வீட்டுக்கு கிளம்புவோம்”, என்று விசாலினி பிடிவாதமாகக் கூறினாள்.
“கல்யாணத்துக்கு முன்ன உன்னைய இப்டி எங்காது வெளிய கூட்டிட்டு வந்திருக்கேனா? இல்லல. இன்னிக்கு தான் ஊருக்குள்ள இருக்கிற பீச்சு பக்கமா வந்திருக்கோம். கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போவோம் ஷாலுமா”, என்று அரவிந்த் கேட்டான்.
விசாலினி விடாமல் வற்புறுத்த, இறுதியில் ஒரு காஃபீக்கு பிறகு கிளம்ப முடிவு செய்தான், அரவிந்த். ஒரு காஃபீ இரண்டாக நீள… இதற்கு மேல் இயலாது என எண்ணியவள், “நீங்க வண்டி எடுக்கறீங்களா? இல்ல நான் எடுக்கவா?”, என்று அவனை விரட்டி ஒரு வழியாக வீட்டை நோக்கிக் கிளம்பினர்.
இரவு எட்டு மணிக்கு வளாகத்தினுள் நுழைந்த காரைக் கண்டு வாயிலுக்கு வந்தார், நீலா.
இருவரின் தெளிந்த முகம் கண்டு மகிழ்ந்திருந்தார்.
இதே மகிழ்ச்சி தனக்கு நீடிக்க, மகன் மருமகள் இருவரும் குறைவற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இரவு உணவிற்கு அழைத்தார், நீலா.
அதே நேரம் சஞ்சய்யை எண்ணி வருத்தமும் வந்தது. மூத்தது மோழை, இளையது காளை என்று கூறிவது மரபு வழக்கம். ஆனால் இங்கு மாறிப் போனது ஏனோ என்ற மனம் நிறைந்த கேள்வியுடன் இரவு உணவிற்காக டைனிங்கில் அமர்ந்தார், நீலா.
—————————-