Kadhal 11

ஸ்டேஷனிற்கு வந்து சேர்ந்த சித்தார்த் தன் மேஜையின் மீதிருந்த பைல்களில் ஒன்றை கையில் எடுத்து வைத்து கொண்டே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தன் போனை எடுத்து பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தான்.

வேறு கேஸ் விடயங்கள் பற்றி அவனிடம் பேசுவதற்காக வந்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு சில கான்ஸ்டபிள்கள் அவனுடைய இந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து தங்களுக்குள் ஜாடையில் பேசி கொண்டிருக்க அவனோ அதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

‘மேக்னா ஏன் இன்னும் போன் பண்ணல? ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? சேச்சே! இருக்காது அப்புறம் ஏன் அவ போன் பண்ணல? இன்னும் போன் அவ கைக்கு கிடைக்கலயா?’ சித்தார்த் இங்கே பலவிதமாக சிந்தித்து கொண்டிருக்க மறுபுறம் மேக்னா போனில் அவசர அவசரமாக அவனின் எண்களை அழுத்தி விட்டு அவனது குரல் கேட்பதற்காக காத்து நின்றாள்.

மேக்னாவிடம் இருந்து அழைப்பு வருவதைப் பார்த்ததுமே
“யாஹூ!” என சத்தமிட்டு கத்தியவன் தன்னை மற்றவர்கள் விசித்திரமாக பார்த்து கொண்டு நிற்பதையும் பொருட்படுத்தாமல் உடனே தன் போனை எடுத்து காதில் வைத்தான்.

“ஹலோ மேக்னா!”

“ஹலோ இன்ஸ்பெக்டர் ஸார்!” சொல்லி வைத்தாற் போல இருவரும் ஒரே நேரத்தில் பேச இருவரது முகத்திலும் சிறு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“என்னாச்சு மேக்னா? திடீர்னு போனை கட் பண்ணிட்டீங்க நான் திரும்ப எடுத்தாலும் எடுக்கவும் இல்லை ஏதாவது பிரச்சனையா?”

“இல்லை ஸார் உங்க கூட பேசிட்டு இருக்கும் போது யாரோ வர்ற மாதிரி இருந்தது அது தான் விமலம்மா போனை எடுத்து போயிட்டாங்க அடுத்த வாரம் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடக்க இருக்கிறதால் எல்லோருக்கும் வேலை விமலம்மா இப்போ தான் போனை பார்த்துட்டு கொண்டு வந்து கொடுத்தாங்க”

“ஓஹ்! அப்படியா? வேற எதுவும் பிரச்சினை இல்லையே?”

“இல்லை ஸார் வேற எதுவும் பிரச்சினை இல்லை ஆமா என்ன விஷயமாக ஸார் போன் பண்ணீங்க?”

“அதுவா? நீங்க ஏதோ பேசணும் மீட் பண்ண முடியுமான்னு கேட்டீங்க தானே? அது விஷயமாக தான் பேசலாம்னு போன் பண்ணேன்”

“எங்கே? எப்போ ஸார் மீட் பண்ண முடியும்?” ஆவலுடன் மேக்னா கேட்க

அவளது ஆர்வம் மிகுந்த குரலைக் கேட்டு புன்னகைத்து கொண்டவன்
“அடுத்த வாரம் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கு இல்லையா அப்போ தான் மீட் பண்ண முடியும் அன்னைக்கு தான் எல்லோரும் வேலையாக இருப்பாங்க நம்ம பேசவும் முடியும்”

“……..”

“என்ன மேக்னா அமைதியாக இருக்கீங்க?”

“இல்லை ஸார் அந்த தனபாலன்…”

“மேக்னா நீங்க எதற்கும் பயப்படாதீங்க நானும், ஜெஸ்ஸியும் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் உங்களை எந்த பிரச்சினையிலும் சிக்க வைக்க மாட்டோம்”

“சரி ஸார் ரொம்ப தாங்க்ஸ் நீங்க பண்ண போற உதவியை நான் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்”

“அய்யோ! பரவாயில்லை மேக்னா இதில் என்ன இருக்கு? ஒரு நிரபராதி தண்டனை அனுபவிக்க கூடாது அது தானே முக்கியம்” என்று இயல்பாக கூற

‘நான் நிரபராதியா?’ மனதிற்குள் அவன் சொன்னவற்றை எண்ணி முகம் சுருங்கி நின்றவள் தயக்கத்துடன் தன் அருகில் நின்ற விமலம்மாவைத் திரும்பி பார்த்தாள்.

“சரி ஸார் அடுத்த வாரம் உங்களுக்காக காத்திருப்பேன் நான் போனை வைக்கிறேன் ஸார்”

“சரி மேக்னா டேக் கேர்!” சித்தார்த் புன்னகை முகமாக போனை எடுத்து பார்த்து கொண்டே தன் நாற்காலியில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான்.

‘இப்போ என்ன நடந்ததுன்னு நீ இவ்வளவு சந்தோசப்படுற?’ அவன் மனசாட்சி அவனை பார்த்து கேள்வி எழுப்ப

புன்னகையோடு தன் நெஞ்சில் கை வைத்து கொண்டவன்
‘அடுத்த வாரம் மேக்னாவை பார்க்க போறேனே! இதை விட வேற என்ன வேண்டும்?’ என்று பதிலளிக்க

‘நீ அந்த பொண்ணை எதற்காக பார்க்க போறேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?’ அவன் மனசாட்சி அடுத்த வினாவைத் தொடுத்தது.

தன் மனசாட்சி தன்னை பார்த்து கேள்வி கேட்ட பின்னரே சித்தார்த்திற்கு மேக்னாவை பார்ப்பதற்கான நிதர்சனம் பிடிபட்டது.

‘நான் இந்த கேஸில் ஏதோ மர்மம் இருக்குன்னு தானே இந்த கேஸை பற்றி விசாரணை பண்ண ஆரம்பித்தேன் இப்போ என் மனதில் அந்த எண்ணமே இல்லை போல இருக்கே! மேக்னா போனை எடுத்து பேசலேன்னா அவ்வளவு தூரம் கஷ்டப்படுறேன் அதே நேரம் அவ போன் பண்ணா அவ்வளவு தூரம் துள்ளி குதித்து சந்தோசமாக இருக்கேன் இதற்கு என்ன அர்த்தம்? ஒரு வேளை ஜெஸ்ஸி சொன்ன மாதிரி! இல்லை! இல்லை! அதற்கு வாய்ப்பே இல்லை! அவ தப்பு பண்ணாலும், பண்ணலேனாலும் ஜெயிலில் இருந்து வந்த பொண்ணு அவ அவளை நீ விரும்பினாலும் உன் வீட்டில் அவளை விரும்பி ஏற்றுக் கொள்ள முடியுமா?’ கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதின் ஒரு சிறு ஓரத்தில் ஒட்டி இருந்த மேக்னா மீதான ஈர்ப்பு நிதர்சன நிலையை உணர்ந்த பின் மெல்ல மெல்ல விலகி செல்ல ஆரம்பித்தது.

‘சித்தார்த் நீ என்ன நோக்கத்திற்காக இந்த கேஸைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாயோ அதை பற்றி மட்டும் கவனம் செலுத்து! வேறு எந்த எண்ணமும் வேண்டாம்’ தன் மனது விதித்த கட்டளைக்கு செவி சாய்ப்பது போல ஆமோதிப்பாக தலை அசைத்தவன் வேறு வேலைகளில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

மறுபுறம் மேக்னா சித்தார்த் தன்னை பார்க்க வருவதாக சொல்லி இருக்க அவனைப் பார்க்க போகும் அந்த தருணத்திற்காக வெகு ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினாள்.

************************************************

சென்னை மத்திய சிறைச்சாலை – பெண்கள் பிரிவு

குடியரசு தின நிகழ்வுகளுக்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்க மேக்னாவும் தன்னால் முடிந்த உதவிகளை அங்கிருந்தோருக்கு செய்து கொண்டு நின்றாள்.

அவளது கைகள் அதன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருக்க கண்களோ வாயில் பகுதியையே பார்ப்பதும், திரும்பவதுமாக இருந்து கொண்டிருந்தது.

“என்ன மேக்னா அடிக்கடி அந்த பக்கமே பார்த்துட்டு இருக்க? யாராவது வர்றாங்களா என்ன?” விமலம்மா புன்னகையோடு அவளை பார்த்து கேட்க

பதிலுக்கு புன்னகைத்தவாறே அவரை திரும்பி பார்த்தவள்
“ஏன் விமலம்மா உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு பங்ஷன் நடக்க போகுது அதனால நிறைய பேர் வருவாங்க போவாங்க தான் ஆனா இந்த ஆவலுக்கும், சந்தோஷத்திற்கும் அதில் யாரு காரணம்னு தெரியலையே!” மேக்னாவின் முகத்தை சுட்டிக் காட்டியவாறே அவர் கூற

அவளோ
“விமலம்மா!” என்றவாறு அவரைப் பார்த்து கொண்டு நின்றாள்.

“சரி சரி நான் எதுவும் கேட்கல”

“அது! போய் வேலையை பாருங்க யாரும் பார்க்க போறாங்க” சுற்றிலும் நோட்டம் விட்டு கொண்டே கூறியவள் மீண்டும் தன் வேலைகளை கவனிக்க தொடங்க அவள் மனமோ வெகு நாட்களுக்குப் பின்னர் இலேசானது போல உணர்ந்தது.

தன் வாழ்நாளில் இப்படி மனம் விட்டு சந்தோஷமாக எல்லோருடனும் சிரித்துப் பேசி மகிழ்ந்து இருந்து எவ்வளவு நாளாயிற்று? என்று எண்ணி பார்த்து விட்டு மலைத்துப் போய் நின்றாள்.

ஏனெனில் அவள் இப்படி சந்தோஷமாக இருந்து பல வருடங்கள் கடந்து போய் இருந்தது.

இறுதியாக தன் வளர்ப்பு அன்னை, தந்தையான வள்ளி மற்றும் நடராஜனுடன் இருந்தது தான் அவள் சந்தோஷமாக இருந்த தருணங்கள்.

நடராஜனின் சத்திர சிகிச்சைக்காக பணம் சேர்த்து கொண்டு வந்த போது அவளது மனதிற்குள் இருந்த ஒரு குற்ற உணர்வு அவர்களுடன் ஒரு மகளாக இருந்த போது முற்றிலும் இல்லாமல் போய் இருந்தது.

அன்று சுதர்சனை பாழடைந்த வீட்டிற்குள் கட்டி போட்டு வைத்து இருந்தவள் அவர் மெல்ல மெல்ல மயக்கத்தில் இருந்து எழுந்து கொள்வதைப் பார்த்து தயக்கத்துடனும், பயத்துடனும் மெல்ல அடியெடுத்து அவர் முன்னால் சென்று நின்றாள்.

தலையில் அடிபட்டதால் தலை முழுவதும் விண்ணெண்று ஒரு வலி பரவ மெல்ல சிரமப்பட்டு தன் கண்களை திறந்து கொண்டவர் சுற்றிலும் திரும்பி பார்க்க அந்த இடமோ இருளில் சூழ்ந்து பாழடைந்து போய் இருந்தது.

‘இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்? தலை வேற ரொம்ப வலிக்குதே!’ யோசனையோடு வலி மிகுந்த தன் தலையில் கை வைத்து பார்ப்பதற்காக அவர் தன் கையை விலக்க பார்க்க அவருக்கோ ஒரு சிறு துளி கூட நகர முடியாமல் இருந்தது.

குழப்பத்துடன் தன்னை குனிந்து பார்த்தவர் தான் ஒரு நாற்காலியில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருப்பதை பார்த்து
“யாரு என்ன கட்டி போட்டது? யாரு?” சத்தமிட்டு கத்தியவாறே கோபமாக நிமிர்ந்து பார்க்க அங்கே மேக்னா நடுங்கியபடி வெளிறிப் போன முகத்துடன் அவர் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

“ஏய்! அனாதை நாயே! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னையே கட்டி போட்டு வைத்து இருப்ப நான் மட்டும் இப்போ என் கைக்கட்டை அவிழ்த்தேன்னு வை உன்னை கண்ட துண்டமாக வெட்டி தூக்கி போட்டுடுவேன்” சுதர்சன் காட்டுக் கத்தல் கத்த அச்சத்துடன் சுற்றிலும் ஒரு தடவை நோட்டம் விட்டவள் அவசரமாக தன் துப்பட்டாவை கிழித்து அவரது வாயை இறுக கட்டி விட்டாள்.

“ஏய் மேக்னா! மேக்…” அவரை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்தவள் வேகமாக அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து பார்க்க அதில் வேறு வேறு எண்களில் இருந்து நான்கு, ஐந்து அழைப்புகள் வந்து இருந்தது.

உடனடியாக அந்த தொலைபேசியை சைலண்ட் மோடில் போட்டவள் அங்கே கிடந்த இன்னொரு நாற்காலி மீது அந்த போனை வைத்து விட்டு சற்று தள்ளி சென்று கொண்டாள்.

சுதர்சன் அவளிடம் இருந்து தன் தொலைபேசியை வாங்குவதற்காகவும், அந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்வதற்காகவும் முயற்சி செய்ய அதை எதையும் கண்டு கொள்ளாதவள் தன் கைகளை கட்டிக் கொண்டு அந்த கட்டடத்தின் விட்டத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றாள்.

‘இவரை இப்படி இந்த இடத்தில் கட்டி வைத்து இருப்பதால் எனக்கும் என்ன இலாபம்?’ சுதர்சனை ஒரு முறை திரும்பி பார்த்தவள்

‘இதோ பாரு மேக்னா நான் ஒரு பிசினஸ் மேன் எதிலும் ஒரு லாபம் எதிர்பார்க்குற ஆளு அதனால…’ சிறிது நேரத்திற்கு முன்பு அவர் கூறிய வார்த்தைகளை நினைத்து பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை விட்டவாறே அவர் முன்னால் வந்து நின்றாள்.

“ஸார் நான் உங்களை அடித்து இருக்க கூடாது அது தப்பு தான் அதற்கு மனப்பூர்வமாக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ஆனா நீங்க பேசுன விடயங்கள் எல்லாம் ரொம்ப தப்பு அதற்கு பிராயச்சித்தமாக நான் கேட்ட பணத்தை கொடுங்க உங்களை விட்டுடுறேன்” மேக்னா கூறியவற்றை கேட்டு சுதர்சன் ஏதோ கோபமாக சத்தமிட அவரது வாய் கட்டப்பட்டிருந்ததால் அவர் கூறியது அவளுக்கு புரியவில்லை.

“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே! ஒரு நிமிஷம்” அவரது வாய் மீதிருந்த கட்டை விலக்கியவள்

“இப்போ சொல்லுங்க” என்று கூறவும்

“மேக்னா! மரியாதையாக சொல்றேன் என் கட்டை அவிழ்த்து விடு இல்லைன்னே நடக்குறதே வேற என்ன கடத்தி வைத்து மிரட்டுனால் உனக்கு பணத்தை அள்ளி தந்திடுவேன்னு நினைக்குறியா? நான் செத்தாலும் அது நடக்காது” பதிலுக்கு சுதர்சன் சத்தமிட்டார்.

“ஓஹ்! அப்படியா? அப்போ பரவாயில்லை சாகுங்க!”

“வாட்?”

“என்ன காது கேட்கலயா? அப்போ சாகுங்கன்னு சொன்னேன் எனக்கு எந்த வகையிலும் உதவாத நீங்க உயிரோடு இருந்தால் என்ன? செத்தால் எனக்கு என்ன?” அவள் கூறியதை கேட்ட அடுத்த நொடி அவர் முகம் இருண்டு போனது.

“என்ன அப்படி பார்க்குறீங்க? ஓஹ்! இவ சொன்னால் நான் செத்துடுவேனான்னு தானே பார்க்குறீங்க கண்டிப்பாக செத்துடுவீங்க ஏன்னா உங்க தலையில் ரொம்ப பலமாக அடி பட்டு இருக்கு அதனால நிறைய பிளட் லாஸ் இப்போவும் இரத்தம் சொட்டு சொட்டா கொட்டிட்டே தான் இருக்கு நம்பலேன்னா இங்கே பாருங்க” அவரது தலையில் கையை வைத்து நன்றாக அழுத்தி எடுத்து அவரின் புறம் காட்ட அவள் அழுத்திய வேகத்தில் அவருக்கோ உயிர் போய் வந்தது போல இருந்தது.

“அய்யோ! அம்மா! மேக்னா உனக்கு என்ன பைத்தியமா? எதற்கு இப்படி பைத்தியக்காரி மாதிரி நடந்துக்குற? அனாதை கழுதை!”

“ஸார் வார்த்தையை பார்த்து பேசுங்க ஸார் நீங்க பணம் தர முடியாதுன்னு சொல்லவும் நான் திரும்பி போயிட்டேன் எனக்கு தெரிந்த ஒரு ஆளு நீங்க தான்னு தான் நான் உங்க கிட்ட உதவி கேட்டு வந்தேன் ஆனால் மறுபடியும் நீங்க என்னை தப்பாக பேசுனது தான் உங்களுக்கு இந்த நிலைமையை ஏற்படுத்த காரணமாக இருந்து இருக்கு அதனால வார்த்தையை அளந்து பேசுங்க”

“நீ பண்ணுற வேலைக்கு உனக்கு மரியாதை ஒண்ணு தான் குறைச்சல்”

“ஆமா நான் பண்ணுறது தப்பு தான் ஆனா இந்த தப்பால் தான் ஒரு நல்லது நடக்க இருக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கணும்னா அதற்கு எத்தனை தப்பு பண்ணாலும் பரவாயில்லை இது தான் இப்போதைய என்னோட கருத்து உண்மையை சொல்லி, உண்மையைப் பேசி, நியாயமா நடந்தால் எந்த காரியமும் நடக்காது அநியாயம் பண்ணி தான் ஒரு நல்லது நடக்க வைக்கணும்னு இருந்தால் அதை பண்ண எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”

“இந்த விஷயத்தை நான் வெளியே போய் போலீஸ் கிட்ட சொன்னால் உன் நிலைமை என்ன ஆகும்னு யோசித்து பார்த்தியா?”

“பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? உங்க கிட்ட வாங்கப் போற பணத்தில் மற்றவங்க வாயை அடைக்க தெரியாதா என்ன?” மேக்னாவின் வார்த்தைகளை கேட்டு இப்போது சுதர்சன் வாயடைத்துப் போய் இருந்தார்.

“முடியாது நீ என்ன சொன்னாலும் என்னால பணம் தர முடியாது”

“ஓகே! அப்போ இந்த இடத்திலேயே இருந்து சமாதி ஆகி சாகுங்க நாளைக்கு உங்க பொண்டாட்டியும், இரண்டு பிள்ளைகளும் நீங்க எனக்கு என்ன எல்லாம் சொல்லி திட்டுனீங்களோ அதே வார்த்தைகளை வேறு ஆட்களோட வாயால் கேட்டு வாங்குவாங்க என்ன அந்த வார்த்தைன்னு மறந்து போச்சா? ‘அனாதை!’”

“………….”

“உங்க தலையில் இருந்து வர்ற இரத்தத்தை வைத்து பார்க்கும் போது எப்படியும் ஒரு ஒரு வாரம் தாக்குப் பிடிப்பீங்க ஆனா இங்கே சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லையே! அப்படி பார்த்தால் ஒரு ஐந்து நாள் அவ்வளவு தான் உங்க ஆயுள்! இனி இங்கே எனக்கு வேலை இல்லை நான் கிளம்புறேன் பணத்திற்கு ஏற்பாடு பண்ணணும் இல்லையா?” என்று விட்டு மேக்னா திரும்பி நடக்க பார்த்து விட்டு மறுபடியும் சுதர்சனின் புறம் திரும்பி

“சாகப் போற ஆளுக்கு இவ்வளவு காஸ்ட்லி போன் எதற்கு?” என்றவாறே அவரது போனையும் எடுத்து கொண்டு அங்கிருந்து செல்லப் போக

அவரோ
“மேக்னா!” அவசரமாக அவளை அழைத்தார்.

மேக்னா அவரது அழைப்பில் கேள்வியாக அவரை நோக்க
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு” உள் வாங்கிய குரலில் வந்தது அவரது பதில்.

“எதற்கு?”

“பணம் ஏற்பாடு பண்ண”

“உங்களை எப்படி நம்புவது? இப்போ உங்களை நான் வெளியே விட்டதும் எனக்கு எதிராக நீங்க ஏதாவது பண்ணிட்டீங்கன்னா?”

“அப்போ வேற என்ன தான் பண்ண?” சலிப்போடு கேட்ட சுதர்சனை கைகளை கட்டிக் கொண்டு மேக்னா மேலிருந்து கீழாக பார்க்க

“சரி நான் என்ன பண்ணணும்?” தன் பார்வையை தாழ்த்தி கொண்டு மெல்லிய குரலில் கேட்டார்.

“இப்போவே உங்க வீட்டுக்கு போன் பண்ணி பணத்தை எடுத்து வரச் சொல்லுங்க”

“இப்போவேவா? இன்னைக்கு சனிக்கிழமை அதுவும் இப்போ மணி நாலைத் தாண்டி இருக்கும் பேங்க் வேறு மூடி இருப்பாங்க நீ கேட்குறதோ இலட்சக் கணக்கில் பணம் அதனால எப்படியும் பணம் கிடைக்க ஒரு வாரமாவது ஆகும்”

“ஓஹ்! உங்க இரண்டாவது பையனுக்கு ஒரு ஆறு, ஏழு வயது இருக்கும் இல்லையா?” தான் பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் மேக்னா கேள்வி கேட்க சுதர்சன் குழப்பமாக அவளைப் பார்த்தார்.

“பயப்படாமல் சும்மா சொல்லுங்க ஸார் ஆறு, ஏழு வயது இருக்குமா?”

“ஆ…ஆறு வயது”

“ஆஹ்! அப்போ சரி இன்னைக்கு சனிக்கிழமை தானே சனிக்கிழமை ஐந்து மணிக்கு தானே உங்க பையனுக்கு பாட்டு கிளாஸ் முடியும் இல்லையா?”

“………” சுதர்சன் அதிர்ச்சியாக அவளை பார்க்க

புன்னகையுடன் அவர் முன்னால் வந்தவள்
“அன்னைக்கு ஒரு நாள் நான் சனிக்கிழமை நாலு மணிக்கு ஆபிஸ் முடிந்து போகும் போது எனக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம் இருக்குன்னு என் கிட்ட வந்து வெட்கமே இல்லாமல் பேசுனீங்களே ஞாபகம் இருக்கா?” என்று கேட்கவும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

“இப்போ நேரம் நாலு முப்பது இங்கே இருந்து பாட்டு கிளாஸ் நடக்குற இடத்திற்கு போக இருபதில் இருந்து இருபத்தைந்து நிமிஷம் ஆகும் இல்லையா?”

“……..”

“சொல்லுங்க ஸார் ஆமாவா? இல்லையா?”

“ஆ…ஆமா”

“ஹான்! அப்போ நான் போய் உங்க பையனையும் உங்களுக்கு துணைக்கு கூட்டிட்டு வர்றேன்”

“மேக்னா வேண்டாம்! என் பையனை தேவையில்லாமல் எதுவும் பண்ணாதே!”

“உங்க சொந்தத்தில் ஒருவருக்கு ஆபத்துன்னா அப்படியே துடிதுடித்து போறீங்க அதுவே தெரியாத ஒரு ஏழை ஆளுக்கு கஷ்டம்னா கண்டுக்க மாட்டீங்க பார்ட்டி, டிஸ்கோன்னு தேவையில்லாத கருமத்திற்கு எல்லாம் பணம் செலவழித்து வீணாக்குவீங்க ஒரு உயிரைக் காப்பாற்ற கடனாக பணம் கேட்டால் கொடுக்க மாட்டீங்க அப்படி தானே?”

“நான் பணம் கொடுப்பேன் மேக்னா என்னை நம்பு! ஆனா தயவுசெய்து என் பசங்களுக்கு எதுவும் பண்ணிடாதே!”

“நான் அந்தளவிற்கு தப்பானவ இல்லை தப்பு பண்ணவனை விட்டு எதுவும் தெரியாத அப்பாவியை தண்டிக்குற அளவுக்கு நான் கொடூரமானவளும் இல்லை எனக்கு வேண்டிய பணம் கிடைத்ததும் நான் உங்களை விட்டுடுவேன் அது வரை நீங்க இங்கே தான் இருக்கணும் இந்தாங்க உங்க போன் உங்க வீட்டுக்கு கால் பண்ணி வேலை விஷயமாக வெளியூர் போறேன்னு சொல்லுங்க” மேக்னா போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து சுதர்சனின் புறம் நீட்ட தயக்கத்துடன் அவளை ஏறிட்டவர் அவள் கூறியதை போலவே போனில் கூறி முடித்தார்.

“சரி உங்க பர்ஸை கொடுங்க உங்க காயத்திற்கு மருந்து வாங்கிட்டு அப்படியே சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்றவாறு மேக்னா தன் கையை அவர் புறமாக நீட்ட

“பர்ஸ் காரில் இருக்கு” என்றவர் தன் கண்களை மூடிக் கொள்ள தன் தோளைக் குலுக்கிய படி அவளும் காரை நோக்கி நடந்து சென்றாள்.

கிட்டத்தட்ட ஆறு நாட்கள் அந்த பாழடைந்த வீட்டிற்குள் ஒரு நரக வேதனையை அனுபவித்த சுதர்சன் தன் மனதிற்குள் இனி ஒருபோதும் மேக்னாவை தன் வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்று எண்ணி இருக்க அவளோ தன் மனதிற்குள் தினம் தினம் தான் செய்த காரியத்தை எண்ணி மருகிக் கொண்டு இருந்தாள்.

முன் பின் தெரியாத ஒரு நபரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு அவள் இந்த செயலை செய்திருந்தாலும் அந்த செயல் நல்ல ஒரு செயல் இல்லை என்பது அவள் மனதை அரித்து கொண்டே இருந்தது.

சுதர்சன் அந்த இடத்திற்கு வந்து ஆறாம் நாள் மேக்னாவிற்கு பணம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்க இரு கரம் கூப்பி அவர் முன்னால் வந்து நின்றவள்
“என்னை மன்னித்து கொள்ளுங்க ஸார் எனக்கு பணம் தேவைப்படவும் வேற வழி இல்லாமல் தான் நான் இப்படி பண்ண வேண்டியதாகப் போச்சு ஆனா இந்த பணத்தை நான் கடனாக தான் வாங்குறேன் கூடிய சீக்கிரம் திருப்பிக் கொடுத்துடுவேன்” என்று கூற

“ஒரு மண்ணும் வேண்டாம் அந்த பணம் எனக்கு ஒரு வாரத்தில் வர்ற லாபம் அதை சம்பாதிக்க எனக்கு தெரியும் இந்த ஒரு வாரம் இந்த இருட்டு குகையில் நான் பட்ட நரக அனுபவமே எனக்கு போதும் இனி என் முன்னாடி வந்துடாதே! மரியாதையாக என்னை இங்கே இருந்து வெளியே கூட்டிட்டு போ ப்ளீஸ் தயவுசெய்து கூட்டிட்டு போ” கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தவரை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டவள்

“இதற்கும் சேர்த்து மன்னிச்சுக்கோங்க” என்று விட்டு அவரது தலையில் கட்டி இருந்த துணியை எடுத்து கண்ணையும், வாயை கட்ட வைத்திருந்த துணியை எடுத்து கைகளையும் கட்டி விட்டு அங்கிருந்து அழைத்து கொண்டு சென்றாள்.

சுதர்சனை எந்த இடத்தில் இருந்து அழைத்து வந்தாலோ அந்த தெருவில் காரை கொண்டு சென்று நிறுத்தியவள் சுற்றிலும் ஒரு தடவை பார்த்து விட்டு அவரது கண்ணிலும், கையிலும் இருந்த துணியை எடுத்து விட்டு வேகமாக அங்கிருந்து அகன்று செல்ல அவரும் தன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பணம் கையில் கிடைத்ததுமே அவசரமாக ஹாஸ்பிடல் சென்று பணத்தை கட்டியவள் மனதிற்குள் இருந்த குற்றவுணர்ச்சி மாத்திரம் நீங்கிய பாடில்லை.

வள்ளி மற்றும் நடராஜன் மேக்னாவை தங்கள் சொந்த மகளாக எண்ணி தங்களோடு உடன் அழைத்துச் செல்ல வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு உறவு கிடைத்த சந்தோஷத்துடன் அவளும் அவர்களுடன் இணைந்து புறப்பட்டாள்.

இத்தனைக்கும் அவர்கள் அவளிடம் அவள் கொண்டு வந்த பணம் பற்றி கேட்டு இருந்தும் அதன் உண்மையான நிலை பற்றி கூறாமல் தவிர்த்து இருந்தவள் அதை அப்படியே கடைப்பிடித்தும் வந்தாள்.

அன்றோடு தான் செய்த தவறு விட்டு போய் விட்டது என்று அவள் நினைத்து இருக்க அந்த ஒரு தவறான விடயம் தான் அவள் வாழ்வை மாற்றப் போகும் பிள்ளையார் சுழி என்று அவளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

மேக்னா தன் நினைவுகளில் மெய் மறந்து நிற்கையில் சட்டென்று ஒரு கரம் அவள் பின்னால் நின்று அவளது வாயை மூட இன்னொரு கரம் அவள் கரம் பற்றி அந்த இடத்தில் இருந்து இழுத்துக் கொண்டு சென்றது…..

error: Content is protected !!