அனல் அவள் 15

அனல் அவள் 15

தென்றல் கடத்தப்பட்டு இத்துடன் இரண்டு மணிநேரம் சென்றுவிட்டது அவளைப் பற்றிய சிறு துரும்பும் இதுவரை கிடைத்தது போல் தெரியவில்லை.

 

விவேகன் சரிந்து விழுந்த முறையிலேயே விஷயம் கை மீறிப் போவதை உணர்ந்த தமிழ் தன் மாமா முருகனை தொடர்பு கொண்டு கோவிலில் நடந்தவற்றை விளக்கி கூறினான்.

 

விபரீதத்தை அறிந்த முருகன் ஒரு காவல்துறை ஆணையராகவும் மகளை பெற்ற தந்தையாகவும் தன் கடமையை செயல்படுத்தினார். தஞ்சையில் இருக்கும் அனைத்து தெருக்களிலும் வயல்காடுகளிலும் என அனைத்து இடத்திலும் சல்லடை இட்டு தேடிவிட்டனர் பயன் தான் கிடைக்கவில்லை…

 

சிறிது நேரத்திற்குப் பிறகு விவேகன், மித்ரன், தமிழ் மூவரும் காவல்துறை உதவி ஆணையர் அறையில், முருகனுக்காக காத்திருந்தனர்.

 

நேரம் கடத்தாமல் விரைந்து வந்த முருகன் விவேகனிடம் விசாரணையை துவங்கினார்.

 

“தம்பி அழுது புலம்புற நேரமில்லை இது உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் இந்த ஊரில் யார் எதிரி உங்களுக்கு யாரு மேல  சந்தேகம் இருந்தாலும் சொல்லுங்க. எதுவுமே தெரியாம எங்களால் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு எடுக்க முடியல” என முருகன் கூறவும்.

 

(வேறொரு இடத்தில்,)

 

மயக்கத்தில் இருந்த தென்றல் கண் விழித்து பார்க்கையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த குடோன் ஆள் அரவமின்றி இவள் மட்டும் தனித்து விடப்பட்டு இருந்தாள்.

 

கை,கால்கள் எதுவும் கட்டப்படவில்லை.கோவிலில் நடந்தவை தெளிவில்லாமல் மனக்கண்ணில் வந்து மறைந்தன.

 

விவேகன் அருகில் மித்ரன் சென்றதும் இவர்களை நோக்கி வந்த காவி உடைகள் அணிந்திருந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் மயக்க மருந்தின் உதவியுடன் கூட்டத்துடன் கூட்டமாக இவளைத் தூக்கி வந்தான். மயக்க நிலைக்கு செல்லும் முன் இது மட்டுமே தெரிந்தது அவளுக்கு வேறு எதுவும் புரியவில்லை.

 

அத்தனை நிசப்தமாக இருந்த அந்த இடத்தில் திடீரென இருவர் நடந்து வரும் அரவம் கேட்கவும் மீண்டும் மயக்க நிலையில் இருந்தவாறு படுத்துக்கொண்டாள் தென்றல்.

 

இவளை நோக்கி வந்த அந்த இருவர் இவள் இன்னும் மயக்க நிலையிலேயே இருப்பதைக் கண்டு விட்டு இன்னும் மயக்க மருந்தின் வீரியம் குறைய வில்லை போலும் என நினைத்துக் கொண்டவர்கள் பேசத் துவங்கினர்.

 

“சார் இப்படியை விடுறது சேஃப் இல்ல கட்டிப் போடலாம்” என வந்த இருவரில் ஒருவன் கூற,

 

மற்றொருவன், “தேவை இல்லாடா அவ ஒரு பயந்த கேஸ். கட்டி போடலனா கூட அவ பயம் அவள கட்டி போடும்” என கூறியவன் இடி என சிரித்தான்.

 

தன் அருகில் இருப்பவர்கள் யார் என அறிந்துகொள்ள லேசாக பாதி கண்ணை மட்டும் திறந்து பார்த்த தென்றலுக்கு அதிர்ச்சி மூச்சு விடவும் சிரமமாக போனது காரணம் அவளுக்கு எதிரில் நின்று கொண்டிருந்தது “பாலா”.

 

ஆணையர் அறையில்,

 

சில நொடி அமைதிக்குப் பிறகு விவேகன் பேசத் துவங்கினான்.

 

“சந்தேகம் எல்லாம் இல்ல சார் உறுதியாக தெரியும் யார் பண்ணாங்கனு”.

விவேகன் இவ்வாறு கூறவும் மற்ற மூவரும், 

 

“யாரு” என ஒரே மாதிரி கேட்க…

 

“பாலா” என்றான் விவேகன்.

 

பாலாவை பற்றி தெரிந்த தமிழ் மற்றும் மித்ரன் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர்.

 

ஆனால் காவல்துறை கடமையை செய்தது.

 

“அவனுக்கும் உங்களுக்கும் என்ன பகைனு தெளிவா சொல்லுங்க தம்பி” என முருகன் கேட்கவும்,

 

விவேகனின் உடல் இறுகிப் போவதை உணர்ந்த மித்ரன் கடந்த காலத்தில் நடந்தவற்றை ஒரு முன்னோட்டமாக கூறத் துவங்கினான்.

 

“தென்றல் படித்த மகளிர் கல்லூரியில் அவளின் தோழியான ஒருத்தியின் சகோதரன் அவன்.

 

தென்றலை கண்டதும் காதல் கொண்டு அவளையும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறான். சில நாட்களில் தென்றலின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த விவேகனும் மித்ரனும் அவளுக்கு தெரியாமல்  அவளை பின்தொடர்ந்து சென்றதில் பாலாவை பற்றி தெரிந்து கொண்டு அவனை விவேகன் எச்சரித்தான் தென்றலை தொந்தரவு செய்யக்கூடாது என.

 

இதனால் எரிச்சலடைந்த பாலா அதிகமாக அவளை கட்டாயப்படுத்தி இருக்கிறான்.

 

அவன் எவ்வளவு கட்டாயப் படுத்தியும் தென்றல் உடன்படாதத்தனால்.

 

அவளை கல்லூரி செல்லும் பேருந்தில் இருந்து இடையிலேயே வலுகட்டாயமாக இறக்கி பொது இடமென்றும் பாராமல் தகாத வார்த்தைகளை பேசி பாலியல் ரீதியான தீண்டல்களை செய்து இருக்கிறான்.

 

பொதுமக்களும் அவள் உடன் இருந்த தோழிகளும் வேடிக்கை பார்க்கும் பணியை செவ்வனே செய்ய பயத்தில் நடுங்கி மயங்கி சரிந்த அவளை மருத்துவமனையில் சேர்த்த பிறகு எங்களுக்கு தகவல் வந்தது. அவள் தோழிகள் மூலம் நடந்தவற்றை அறிந்து அவளை அங்கிருந்து வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு நாங்கள் அவனை பார்க்க சென்றோம்.

 

அது ஒரு கடற்கரை அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி பாலா மீது வெறியுடன் சென்ற விவேகன் அவனை அடித்த அடியில் குருதியுடன் சேர்ந்து உயிரும்  வடியும் நிலையில் சென்றுவிட்டது. நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த மித்ரன் விவேகனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விட்டான். இதுவரைக்குமே இவர்களுக்கு தெரிந்தவை.

 

பிறகு அவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியல இங்கு எப்படி வந்தான். எங்கள எவ்வளவு நாளாக பின்தொடர்ந்தான் அதுவும் தெரியல” என மித்ரன் பேசி முடிக்க அந்த அறை முழுவதும் பெரும் மூச்சுகள் நிறைந்தது.

 

வேறொரு இடத்தில்,

 

பாலாவை தன் கண்ணெதிரே கண்டதும் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். இவனால் தனக்கு ஏதேனும் நடப்பதற்கு முன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும் இல்லையெனில், தன் உயிரை விட்டுவிட வேண்டும் என மனதில் திடமாக தீர்மானம் எடுத்து கொண்டவள். அங்கிருந்து தப்பித்து போக வழிகளை யோசிக்க தொடங்கினாள்.

 

அப்போது தென்றலை நோக்கி வந்த பாலா, அவள் அருகில் முழங்காலிட்டு அமர்ந்தவனின் பார்வை தென்றலின் உடலை ஸ்கேன் செய்வது போல மேய பெண் அவளின் உடல் கூசி போனது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. நரக வேதனை என்பதனை அந்த நொடியில் அனுபவித்தாள்.

 

அவள் முகத்தையும் உடலையும் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தவன் ஒரு ஏளனப் புன்னகையுடன் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ தொடர்பு கொண்டான்.

 

ஆய்வாளர் அறையில்,

 

“சரிங்க தம்பி ஆள் யாருன்னு தெரிஞ்சிடுச்சே அவன் ஃபோட்டோ எதுவும் இருந்தா குடுங்க அவனை கண்டுபிடிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்” என முருகன் சொல்ல.

 

தீவிர யோசனையுடன் விவேகன்,

 

“இல்ல சார் என்னோட கணிப்பு சரினா ஃபோட்டோ வெச்சி உங்களால எதுவும் பண்ண முடியாது. அவனா அவன் இருக்க இடத்தை சொல்லுவான் ஏன்னா அவனோட தேவை தென்றல் மட்டும் இல்ல நானும் தான்” என

கூறவும்.

 

மித்ரனின் மொபைல் தன் இருப்பைக் காட்ட விவேகனின் முகத்தில் வெற்றிப் புன்னகை ஆனால் மனது தன் தேவதைக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது என இது நாள் வரையில் அவன் அகராதியில் இல்லாத கடவுளிடம் இன்று வேண்டுதல் விடுத்து அழைப்பை ஏற்றான்.

 

மற்ற மூவரின் கண்களும் எதிர்பார்ப்புடன் விவேகனைப் பார்த்துக்கொண்டிருக்க விவேகன் பேசத் துவங்கினான்.

 

“சொல்லு பாலா எங்க வரணும்,”

 

அழைப்பு விடுத்த பாலாவுக்குமே அதிர்ச்சி, விவேகன் தன்னை இத்தனை சரியாக கணித்து வைத்திருப்பான் என எதிர்பார்த்திருக்கவில்லை அவன். இருந்தாலும் அவனிடம் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பதில் பேசினான்.

 

“எப்படி இருக்கீங்க விவேக் சார்? எப்படியும் ரொம்ப கவலையாக தான் இருப்பீங்க. இத்தனை வருஷமா ஒரு பயந்தாங்கொளி பொண்ணுக்காக உங்கள் வாழ்க்கையை வாழாமல் இருக்கீங்க.”

 

“அவளுக்கு செக்யூரிட்டி வேலை பாக்குறீங்க அதுவும் சம்பளமே வாங்காமல் இனி அது தேவை இருக்காது விவேக் சார்.”

 

“இனி நீங்க அவளை முன்னால் விட்டு அவளுக்கு பின்னாடி அரணாக இருந்து அவளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.”

 

“அந்த பொறுப்பை நான் எடுத்துக்கிறேன் விவேக் சார் இனிமே ஆச்சும் நீங்க உங்களுக்கான ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க” என பாலா பேசிக்கொண்டே போக எதிர்முனையில் பேரமைதி.

 

ஆனால் பாலா பேசுவது அனைத்தையும் கேட்ட தென்றலின் மனதில் பெரும் புயல் வீசத் தொடங்கியிருந்தது.

 

“விவேக் சார் இருக்கீங்களா” என இவன் கேட்க மேலும் அமைதி சிக்னல் கிடைக்காமல் போனதை அப்போதுதான் உணர்ந்தான் பாலா. தன்னுடன் வந்தவனிடம் தென்றலை கண்காணிக்கும் படி ஜாடை செய்து விட்டு சிக்னலுக்காக வெளியே சென்று பேசத் துவங்கினான்.

 

“விவேக் சார் இருக்கீங்களா?”

 

அப்போதும் விவேகனின் ஒரே கேள்வி எங்க வரணும்,

 

உங்க விதியை யாரால் மாற்ற முடியும் என ஒரு வெற்று சிரிப்புடன் அவன் வர வேண்டிய இடத்தை சொன்னவன் அவன் வருவதற்குள் தென்றலை சீரழிக்க என்னியவன் மதுவை நாடி சென்று விட்டான்.

 

தென்றலின் மனதில்,

 

‘தன்னாலா தன்னுடைய இந்த ஒன்றுமில்லாத பயந்த குணத்தினாலா தன்னுடைய விவு அவனின் வாழ்க்கையை வாழ முடியவில்லை. நினைக்கும்போதே அவளின் மனதில் நிலநடுக்கம், கண்களில் வெள்ளப்பெருக்கு. எத்தனையோ முறை இவளும் தான் கவனித்து இருக்கிறாளே இவர்களை எத்தனை அழகான பெண்கள் கடந்து செல்லும் போதெல்லாம் தன்னுடன் இருக்கும் மித்ரன் பார்க்கும் ஜொள்ளு பார்வை இல்லாவிடினும் ஒரு சாதாரண பார்வை கூட அவனிடம் இருக்காது.தன்னைப் பார்த்துக் கொண்டே எத்தனையோ முறை தடுக்கி விழுவதும், வாகனங்களில் மோதிக் கொள்வதும் என இவை அனைத்தையும் தான் எவ்வாறு  யோசிக்க மறந்தேன்’ என்று இப்போது யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது இவளை கண்காணித்துக் கொண்டிருந்த அவன் லைட்டரை கொண்டு சிகரெட்டை பற்ற வைத்து அதனை மீண்டும் பாக்கெட்டில் போடும் போது கீழே தவற விட்டு விட்டான்.

 

ஒரு முறை இவளைப் பார்த்தவன் இப்போதைக்கு எழுவது போல் இல்லை என வெளியே சென்று விட்டான்.

 

அவன் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு அவள் கண் திறந்து பார்க்கும் போது தன் அருகில் இருந்த லைட்டரயும் அவளை சுற்றி இருந்த சாக்கு மூட்டைகளையும் பார்த்தவளின் மூலையில் லைட் எரிய துரிதமாக செயல்படத் துவங்கினால்.

 

இங்கு ஆணையர் அலுவலகத்தில்,

 

மித்ரனை முருகனுடன் இருக்குமாறு கூறிய விவேகன். தாங்கள் சென்று வருவதற்குள்,

 

“தென்றல் அங்கிருந்து தப்பித்து விட்டால், உனக்கு தான் அழைப்பாள் அதனால் நீ அவருடன் இரு அவள் அழைத்தால் உடனே அவருடன் சென்று அவளை மீட்டு வந்து தமிழின் எண்ணிற்கு அழைத்து எங்களுக்கு விவரம் சொல்லி விடு” என கூறியவன். தமிழுடன் ஒரு இருசக்கர வாகனத்தில் பாலா சொன்ன இடத்தை நோக்கி புறப்பட்டான் விவேகன்.

 

தமிழ் வாகனத்தை இயக்க பாலாவை என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த விவேகன் மனதில் ஒரு எண்ணம் தோன்ற  தமிழிடம் சில விவரங்களைக் கேட்டு அறிந்தவன் வண்டியை வேறு பாதையில் செலுத்த கூறினான்…

 

…………………………………………

 

தென்றலைத் தேடி செல்லும் விவேகனின் பயணம்.

 

தமிழுடன் பாலா கூறிய இடத்திற்கு செல்லும் முன் விவேகன் மனதில் ஏகப்பட்ட சிந்தனை ரேகைகள் இந்த முறை அவன் கையில் சிக்கி இருக்கும் அந்த பாலாவை உயிருடன் விடப்போவதில்லை என  தீர்மானம் எடுத்துக் கொண்டவனின் மனதில் சில சந்தேகங்களும் சில யோசனைகளும் எழ தமிழிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கியவன் 10 நிமிடங்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு தீவிரமான யோசனையில் இறங்கியிருந்தான்.

 

விவேகனின் செயல்கள் தமிழுக்கு குழப்பமாகவே இருந்தது. இவர்கள் இங்கு தாமதப்படுத்த படுத்த அங்கு தென்றலை அல்லவா ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கும். இவன் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என ஒன்றும் விளங்காமல் அதை அவனிடமே கேட்க இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கும் எண்ணத்தில் விவேகன் இல்லை.

 

ஆனால் விவேகனின் மனம் அடித்துக் கூறிக்கொண்டிருந்தது இவன் செல்லாமல் தென்றலை பாலா நெருங்கப் போவது இல்லை என. ஆகவேதான் இவன் பொறுமையாக ஒவ்வொரு திட்டங்களையும் வகுத்து கொண்டிருந்தான்.

 

இவன் இங்கே இப்படி யோசித்துக் கொண்டிருக்க அங்கு தென்றலோ கையில் வைத்திருந்த லைட்டரையும் அவள் இருந்த அறையையும் நீண்ட நேரம் சோதனை செய்தவள் ஒரு முடிவெடுத்தவளாக எழுந்தாள்.

 

அது நீளம் அதிகமாகவும் அகலம் சிறியதாகவும் உள்ள நெல் மூட்டைகளை சேகரித்து வைக்கும் குடோன் இரு பக்கங்களிலும்  வெளியே செல்ல நான்கு கதவுகள் என எட்டு வழிகள் இருந்தது.

 

ஆனால் ஒன்று மட்டுமே திறந்திருந்தது மற்றவை அனைத்திலும் பித்தளை பூட்டுகள் பளபளவென மின்னி கொண்டிருந்தது. இதனை பார்த்தவள் நெல் மூட்டைகளின் அருகில் சென்று அவற்றில் சிலவற்றை மட்டும் தனியே எடுத்து கீழே போட்டாள்.

 

தனியே இழுத்து போட்ட நெல் மூட்டைகளை மட்டும் லைட்டரின் மூலம் பற்ற வைத்தாள் அது சற்று நன்றாக எரிய துவங்கியதும் திறந்திருந்த கதவின் பின் சென்று தன்னை மறைத்துக் கொண்டாள் வெளியே புகை பிடிக்க சென்ற காவலாளி ஏதோ எறியும் வாசம் வரவும் குடோன் உள்ளே ஓடி வந்தான் அவன் உள்ளே வந்ததும் அவனை உள்ளே வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டியவள் அங்கிருந்து தப்பி விட்டாள்.

 

கதவு பூட்டப்படும் சத்தம் கேட்கவும் தான் அந்த காவலாளி சுதாரித்தான். பிறகு அங்கு தென்றல் இருந்த இடத்தை பார்க்க  அவளை அங்கு காணவில்லை. நடந்தவற்றை ஒருவாறு யூகித்து அவன் தன்னிடம் இருந்த சாவி மூலம் பூட்டியிருந்த மற்றொரு கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று பார்க்க வெளியே கண்ணுக்கு எட்டும் தூரம்வரை தென்றலை காணவில்லை. 

 

அதன் பின் அவனே ஒரு திசையை தேர்வு செய்து அதை நோக்கி தென்றலைத் தேடி சென்றான்.

 

அந்த காவலாளி வெளியே வந்து வேறு ஒரு திசையில் போவதைப் அது வரையில் அங்கு ஒரு மறைவில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த தென்றல் அவன் சென்ற திசைக்கு எதிர் திசையில் ஓட ஆரம்பித்தால்.

 

இது எதையும் அறியாமல் பாலா அந்த குடோனில் மேல்தளத்தில் மது போதையில் மயங்கிக் கொண்டு இருந்தான்…

 

விவேகன் தமிழிடம் தான் சொல்லும் இடத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியவன் தமிழின் எண்ணிலிருந்து முருகனை அழைத்து பாலாவை  பற்றிய சில தகவல்களை சேகரிக்க கூறினான்.

 

 

அதற்குள்  விவேகன் கூறிய இடம் வந்து விட தமிழை ஒரு மெச்சுதல் பார்வைப் பார்த்தான் விவேகன்.

 

இருவரும் வண்டியில் இருந்து இறங்கி அந்த இடத்தில் இருந்த கட்டிடத்தின் பெயர் பலகையை பார்த்தனர் அது ஒரு விவசாய நுண்ணுயிரிகள் ஆராய்ச்சி நிலையம்.

 

“இங்கே எதுக்கு விவேக்” என்று கேட்ட தமிழிடம் தன் திட்டத்தை விவேகன் கூற தமிழின் உடல் நடுக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.

 

முகமெல்லாம் வியர்த்துப் போய் அரண்டு விட்டான். ஒரு 21 வயது உடைய கல்லூரி பயிலும் ஒருவனால் இந்த அளவுக்கு யோசிக்க முடியுமா என்று வியப்பாகத்தான் இருந்தது அவனுக்கு.

 

பிறகு ஒரு பேப்பரில் சிலவற்றை எழுதிய விவேகன்  தமிழிடம் நீட்டி வாங்கி வர கூறினான்.

 

தமிழ் அந்த கட்டிடத்தின் உள்ளே செல்லவும் விவேகன் கையிலிருந்த தமிழின் கைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது அழைத்தது முருகன்.

 

பாலாவை பற்றி முருகன் அதற்குள்ளாகவே சேகரித்து இருந்தார்.

 

அவர் விவேகன் இடம் கூறிய தகவல்கள் யாதெனில்,

 

விவேகன் பாலாவை அடித்த பிறகு அவன் அங்கு இருந்த பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவன் உடமையில் இருந்த விலாசத்தை வைத்து அவன் பெற்றோரை தொடர்புகொள்ள,

 

அதற்குள்ளாகவே அவன் தென்றலை செய்த கொடுமைகள் அவன் தங்கையின் மூலமாக அவனின் தந்தைக்கு தெரிய வர ஒரு மகளைப் பெற்ற தந்தையாகவும் மனைவியை இழந்த கணவனாகவும் தன் வளர்ப்பு தவறியதை எண்ணி வருத்தம் அடைந்த அவர் தங்களுக்கு அப்படி ஒரு மகன் இல்லை என வெறுத்துவிட,

 

அவனின் தம்பி மட்டும் வீட்டுக்கு தெரியாமல் வந்து இவனை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு உறவினரின் கண்காணிப்பில் விட்டு சென்றதாகவும் அவன் கடந்த ஆறு மாதங்களாக கோமாவில் இருந்ததாகவும் கூறினார்.

 

அதுவுமில்லாமல் அவனுக்கு சுயநினைவு வந்து இரண்டு வாரங்கள் ஆனதாகவும் பாம்பை பார்த்து பயந்து மயங்கிய தென்றலை அனுமதித்து இருந்த அதே மருத்துவமனையில் தான் அவன் இருந்திருக்கிறான் எனவும் கூறினார்.

 

இப்போது விவேகனுக்கு அனைத்தும் புரிந்தது அவன் எங்கிருந்து தங்களை பின்தொடர்ந்து இருப்பான் என பிறகு ஒரு நன்றி கூறி அழைப்பைத் துண்டிக்க செல்கையில்,

 

முருகன் கூறிய வார்த்தை, “சட்டத்தை உங்க கையில் எடுத்துக்காதீங்க தம்பி உங்களுக்கு என்று எதிர் காலம் இருக்கு” எனவும் வேதனை சிரிப்புடன் அழைப்பை துண்டித்தான்.

 

 

அதற்குள் தமிழ் விவேகன் கூறியவற்றை இரண்டு பைகளில் பிடித்தவாறு வந்திருந்தான் அவை அனைத்தும் முருகனின் பெயரைச் சொல்லி வாங்கப்பட்டிருந்தது.

 

இப்பொழுது இவர்களின் பயணம் பாலா சொன்ன இடத்தை நோக்கி தொடங்கியிருந்தது.

 

இங்கே ஆணையர் அலுவலகத்தில்,

 

வெட்டியாக இருந்த மித்ரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தென்றலுக்கு என்னவாகியிருக்கும் இவ்வளவு நேரமாகியும் எந்த செய்தியும் வராமலிருக்க ரொம்பவே பயந்து போயிருந்தான். இதில் நிமிடத்திற்கு ஒருமுறை முருகனின் உயிரையும் எடுத்து விட்டான்.

 

“சார் விவேகனுக்கு முன்னாடி நீங்க அங்க போகலாம்ல, போலீஸ் அப்படி என்றாளே கடைசியாதான் போவீங்களா?”

 

“அவன் அந்த பாலாவை கொன்னுடுவான் சார். அப்புறம் அவன் ஜெயிலுக்கு போய்ட்டா இந்த தென்றலையும் அக்ஷா குட்டிசாத்தானையும்   என்னால தனியா சமாளிக்க முடியாது சார்.

 

“ஏதோ விவேகன் கூட இருக்கவும் தான் எங்க வீட்ல இருந்து ஒரு ஃபோன் கூட பண்ணாம இருக்காங்க அவனும் ஜெயிலுக்கு போய்ட்டா அவங்கள நான் எப்படி சமாளிக்க” என புலம்பி தள்ளி கொண்டு இருந்தான்.

 

அதற்கு மேல் அங்கிருந்த சூழ்நிலையை அவன் அறிந்து கொள்ள  விரும்பவில்லை.எல்லாம் விவேகன் பார்த்துக் கொள்வான், என்ற கண்மூடி தனமான நம்பிக்கை.

 

இவன் எங்கே அறிவான் வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த சந்தேகமும் வராதவாறு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இங்கு அனைவரும் நலமாக இருப்பதாக நம்பும் படியாக விவேகன் சமாளித்துக் கொண்டு இருப்பதை.

 

முருகன் தான் பாவம் இவன் வாய் ஓயாமல் புலம்பி கொண்டிருப்பதைக் கேட்டு கேட்டு தலைவலியில் ஓய்ந்து போய் விட்டார்.

 

அவரும் ஜிபிஎஸ் மூலம் அவர்களை பின்தொடர்ந்து கொண்டே இருப்பதாக பலமுறை கூறி விட்டார் ஆனால் இவன் கேட்ட மாதிரி இல்லை.

 

பாலாவிடம் இருந்து தப்பி ஓடி வந்த தென்றல், சிறிது நேர ஓட்டத்திற்கு பிறகு ஆட்கள் நடமாட்டம் இருக்கும் ஒரு தெருவிற்கு வந்து இருந்தாள்.

 

பின்பு அங்கே இருந்த வீடுகளில் ஒரு சிறிய வீடு மட்டும் தனியே இருக்க அவர்களிடம் உதவி கேட்கலாம் என உள்ளே சென்றாள்.

 

“யாராவது இருக்கீங்களா” என இவள் கேட்டுக்கொண்டே உள்ளே போக,

 

“யாரு வேண்டும்” என கேட்டுக் கொண்டே வீட்டில் இருந்து வெளியே வந்தவரை பார்த்து தென்றல் அதிர்ச்சியாக வீட்டில் இருந்தவர்‌ இவளைப் பார்த்து உறைந்தே போய்விட்டார்…

 

 

(தொடரும்)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!