NUA–EPI 26

அத்தியாயம் 26

மழலை அன்னம் மாதிரி

மடியில் தூங்க ஆதரி

விடிய விடிய என் பேரை உச்சரி (தவமங்கை)

 

“இறக்கி விடுங்க! எவ்வளவு நேரம்தான் தூக்கி வச்சிருப்பீங்க!”

“காலமெல்லாம் தூக்கி வச்சிருப்பேன் டீச்சர்! இது ஒரு சுகமான சுமை”அனுபவித்து சொன்னான் காளை.

ரூமில் நுழைந்து கதவை சாத்தி அரை மணி நேரம் ஆகியிருந்தது. இன்னும் தன் மங்கையைத் தூக்கித் தான் வைத்திருந்தான் காளை. அவளும் கட்டிக் கொண்டாள், அழுதாள், முத்தமிட்டாள், மீண்டும் அழுதாள், மன்னிப்பு வேண்டினாள் ஆனால் கீழே இறங்க முனையவில்லை. மெல்ல அழுகை அடங்க, கூச்சம் வந்தது அவளுக்கு.

“இறக்குங்க காளை! நான் என்ன சின்னப்புள்ளையா? இடுப்பு வலிக்கப் போகுது உங்களுக்கு!”

புன்னகையுடன் கீழே அவள் இறங்க முயலவும், தன் கங்காரு குட்டியை மெல்ல தரையில் இறக்கி விட்டான் காளை.

“சாப்டீங்களா?”

“காலைல சாப்டதுதான் டீச்சர்! நீங்க எதாச்சும் சாப்டீங்களா? ஓஞ்சு போய் கெடக்கீங்க!”

“ரொம்ப பசிக்குது காளை! ஆனா எதையும் வாய்ல வைக்க முடியல! குமட்டுது”

“ஏன் ஏன் என்னாச்சு டீச்சர்? வயித்துல காத்து புகுந்துருச்சோ! இருங்க நான் புளிப்பா எலுமிச்சை ஜூஸ்சும் சாப்பாடும் வாங்கிட்டு வரேன்” என கிளம்பப் போனான் காளை.

“வயித்துல காத்து இருந்தாத்தான் வாந்தி வருமா மக்கு புருஷா!”முணுமுணுத்தாள் மங்கை.

“என்ன டீச்சர்? என்ன சொன்னீங்க?”

“ஒன்னும் இல்ல! நீங்க எங்கேயும் போக வேணா, இங்கயே இருங்க! நான் ரூம் சர்விஸ் ஆர்டர் பண்ணறேன்.” என சொல்லியவள் ரூமில் இருந்த போன் வழி இருவருக்கும் உணவு ஆர்டர் கொடுத்தாள்.

அவள் போன் பேசும் வேளையில் ரூமில் இறைந்து கிடந்த பொருட்களையும் அவளது துணிமணிகளையும் எடுத்து அடுக்க ஆரம்பித்தான் காளை. கண்கள் மட்டும் நொடிக்கொரு முறை தன் மனைவியைத் தொட்டுத் தழுவிக் கொண்டது. அவளும் அவனையேப் பார்த்துக் கொண்டு தான் போனில் பேசினாள்.

பேசி முடித்து வந்தவள் பின்னிருந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

“காளை சார், இத்தனை நாள் என்னை மிஸ் பண்ணீங்களா?”

“ரொம்ப, ரொம்ப, ரொம்ப மிஸ் பண்ணேன் டீச்சர்! இனிமே இப்படி என்னை விட்டுட்டுப் போனீங்க, திரும்பி வரப்போ காளை இருக்க மாட்டான்!”

“என்ன பேச்சு இது!”

அவன் முதுகிலேயே நான்கு போட்டாள் மங்கை.

“இப்படிலாம் பேசனா கொன்னுடுவேன் காளைய!”

“உங்க கையால கொன்னாக் கூட சுகமா செத்துப் போவான் முத்துக்காளை!” என சொன்னபடி முன்னால் திரும்பி அவளை இறுக அணைத்துக் கொண்டான் காளை.

“விடுங்க காளை! நான் இன்னும் குளிக்கல, ரெண்டு நாளா குளிக்கல!”

“பரவாயில்ல டீச்சர்! மாடு காளைலாம் தெனமும் குளிக்குதா, என்ன!”

“மாடு, காளை, எருமை கடா எல்லாம் தெனம் குளிக்குதான்னு எனக்குத் தெரியாது! ஆனா இந்த காளையோட வைப் குளிக்கும். சோகத்துல குளியலுக்கு லீவ் விட்டிருந்த புல்(bull) பொண்டாட்டி கவ்(cow), இப்ப லீவ கான்சல் பண்ணிட்டுக் குளிக்கப் போகுது. அதுக்கு அப்புறம் காளையும் மாடும் வாசமா கட்டிப்புடிச்சிக்கலாம்.” என சொல்லிவிட்டு அவன் இறுக்கமான பிடியில் இருந்து மெல்ல விலகி குளிக்கப் போனாள் மங்கை.

மெல்லிய குரலில் ஹம் பண்ணியவாறே குளியல் அறைக்குள் புகுந்தவளையேப் பார்த்திருந்தான் காளை. அவளைப் பார்க்க பார்க்க, நெஞ்சில் யானை ஏறி அமர்ந்தது போல மனது கனத்துப் போனது அவனுக்கு. மெல்லிய பெருமூச்சுடன் விட்ட வேலையைத் தொடர்ந்தான். கட்டிலை நெருங்கி தலையணைகளை ஒழுங்காக அடுக்கியவன் கண்களில், மெத்தை மேல் கிடந்த மங்கையின் போன் பட்டது. மேசையில் வைக்கலாம் என எடுக்க, அதில் அவன் படங்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

“ஐ நானு!”

காளை ஆண்ட்ரோய்ட் போன் வைத்திருந்தாலும், இன்னும் சோசியல் மீடியா பக்கம் அவன் கடைக்கண் பார்வை சென்றிருக்கவில்லை. அதன் மாயாஜாலங்கள் இன்னும் அந்த பட்டிக்காட்டு ஆண்மகனை உள்ளிழுத்திருக்கவில்லை. அதனால் தான் இன்னும் மனைவியை தொட்டுத் தடவிக் கொண்டிருக்கிறான். இல்லையேல் போனை அல்லவா தடவிக் கொண்டிருந்திருப்பான்!(ஃபீலிங்ஸ்யா ஃபீலிங்ஸ்!!!)

அவன் பார்த்துக் கொண்டிருப்பது மங்கையின் இண்ஸ்டாகிராம் அக்கவுண்ட் என்பது கூட தெரியாமல் கட்டம் கட்டமாக வரிசையாக இருந்த அவன் படங்களைப் பார்த்து மெய் மறந்துப் போயிருந்தான் காளை. வேட்டி நுனியைப் பிடித்தப் படி நிற்கும் காளை, முற்றத்தில் கால் கழுவிக் கொண்டிருக்கும் காளை, பூஜை அறையில் கண் மூடி நின்றிருக்கும் காளை, ஆத்தாவைக் கட்டிக் கொண்டிருக்கும் காளை, மச்சக்காளையையோடு பேசிக் கொண்டிருக்கும் காளை, அதிதியோடு சிரிக்கும் காளை, அருணோடு விளையாடும் காளை, ராஜியோடு நகைக்கும் காளை, சுடுதண்ணீர் அண்டாவை தூக்கி இருக்கும் காளை, எண்ணெய் தேய்த்துக் குளித்து கொண்டிருக்கும் காளை, கன்னுக்குட்டியைக் கொஞ்சும் காளை, தீ மிதிக்கும் காளை, காபி கலக்கும் காளை, அயர்ந்துத் தூங்கும் காளை, இட்லி சாப்பிடும் காளை, பைக்கில் ஏற ஒற்றைக் காலைத் தூக்கி நிற்கும் காளை, மேடையில் பாடும் காளை என சர்வம் காளை மயம். இடை இடையே கட்டம் போட்ட சேலை, காபி டம்ளர், கடலை மிட்டாய், தண்ணீர் தொட்டி, மாங்காய் ஜூஸ் என பல படங்கள். அவன் தூங்கும் போது அவன் கன்னத்தை மங்கை முத்தமிடுவது போல எடுக்கப்பட்ட செல்பி, அவன் தூரமாக கிணத்தில் நீர் இறைக்க இவள் விரல் கொண்டு அவன் முதுகை தொடுவது போல ஒரு போட்டோ என பலவிதமாக எடுத்து இன்ஸ்டாவை நிரப்பி இருந்தாள் மங்கை.

ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போதும் இவனுக்கு கண்கள் வேர்த்தன. பொய் சொல்லாதீங்க டீச்சர் என அவன் சொன்ன வார்த்தைகள் அவனைப் பார்த்து கெக்கலி கொட்டி சிரித்தன. போட்டோக்கள் எந்த தேதியில் ஏற்றப்பட்டன, அதை எப்படி பெரிதாக்குவது என கூட தெரியவில்லை அவனுக்கு. எதையாவது அமுக்கப் போய் எல்லாம் காணாமல் போய் விடுமோ எனும் பயம் வேறு. மெல்ல ஸ்க்ரோல் செய்ய செய்ய, அவன் படங்களுக்குக் கீழ் வரிசையாக காமாட்சி படங்கள் இருந்தன. அவரின் படங்களுக்குக் கீழ் இன்னொரு வயதான பெண்மணியின்(பார்வதி) படங்கள் இருந்தன. நடு நடுவே அஜயின் படங்கள், அதோடு இரண்டு குட்டிப்பையன்களின் படங்கள்(கதிர் சம்முவின் குட்டிஸ்), ஒரு சிரித்த ஜோடி(கதிர், சம்மு) என அவளின் வாழ்க்கையில் அவள் பாசம் வைத்த அனைவரும் இருந்தார்கள். நடுவே ஒரு படத்தில் காளையின் கண்கள் ஆணி அடித்தது போல நின்றன. அதில் அரசி சிரித்தப்படி நின்றிருந்தார். போட்டோவில் ஐ லவ் யூ அம்மா எனும் வாசகமும் அழும் இமோஜியும் இருந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டு திரும்பியவன் அவன் பின்னே நின்றிருந்த மங்கையைப் பார்த்து அதிர்ந்தான்.

அவன் கலங்கிய முகத்தையும், கையில் இருந்த போனையும் பார்த்தவள், போனை வாங்கி அவன் பார்த்துக் கொண்டிருந்த படத்தை ஏறிட்டாள். நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“மாமனார் வீட்டுக்குப் போனியா?” என கேட்டாள்.

ஆம் இல்லையென தலை எல்லா புறமும் ஆடியது அவனுக்கு.

போனை தூக்கி மெத்தை மேல் வீசியவள்,

“குளிக்கறப்போத்தான் நெனைச்சேன்! இன்னிக்கு காலையில தானே ஆத்தாவுக்குப் போன் போட்டு வர சொல்ல சொன்னோம், ஆனா அதுக்குள்ள வந்து நிக்கறியே எப்படின்னு! உன்னை யார் அங்க போக சொன்னது? மாமியார் நல்லா சீராட்டி அனுப்பனாங்களா?” என கோபமாக கேட்டப்படி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.

“திடீர்னு நீங்க காணா போய்ட்டா, நீங்க போன் பண்ணற வரைக்கும் காத்திருப்பாங்களா டீச்சர்? எங்க போனீங்க என்ன ஆனீங்கன்னு எனக்கு பதட்டமா இருக்காதா? அதான் டீச்சரப்பா வீட்டுக்குப் போயிருப்பீங்களோன்னு தேடி வந்தேன்! நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியர வரைக்கும் என்னால நல்லா மூச்சுக் கூட விடமுடியல! தெரியுமா டீச்சர்!” என சமாதானமாக சொன்னான் காளை.

அவள் பதில் பேச வாயைத் திறக்கும் முன்னே கதவு தட்டப்பட்டது.

“சாப்பாடா தான் இருக்கும்! போய் வாங்குங்க!” என கோபத்தை அடக்கிய குரலில் சொல்லியவள் மீண்டும் பாத்ரூமுக்குள் புகுந்துக் கொண்டாள்.

உணவை வாங்கி மேசை மேல் மூடி வைத்தவன், பாத்ரூம் கதவைத் தட்டினான்.

“டீச்சர்! வெளிய வாங்க! சுட சுட சாப்பிடுங்க வாங்க” என அழைத்தான்.

“எனக்கு சாப்பாடும் வேணா ஒரு மண்ணும் வேணா!” என உள்ளிருந்தே கத்தினாள் அவள்.

பாத்ரூம் கதவின் குமிழைத் திருக அது திறந்துக் கொண்டது. உள்ளே போனவன் கண்டது, டாய்லட் சீட்டை மூடி அதன் மேல் தலையைக் கையில் பிடித்தப்படி அமர்ந்திருந்த மங்கையைதான். மெல்ல அவளை நெருங்கி அவள் தலையை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் காளை. முதலில் வேண்டாம் என தள்ளியவள் பின் இரு கரம் கொண்டு அவன் இடுப்பை வளைத்துக் கொண்டாள் . அழுகையில் அவள் உடல் குலுங்க காளையின் சட்டை நனைந்துப் போனது. மங்கையின் தலையை வருடியபடி அப்படியே நின்றான் அவன். எதை எதையோ நினைத்து நினைத்து அழுதாள் தவமங்கை. அழுகை தேம்பலில் வந்து நின்று பின் கேவலில் முடிந்தது.

“எனக்கு தலை சுத்துது! தூக்கிட்டுப் போ” என மெல்ல நிமிர்ந்து கையை இரண்டும் தூக்கி அவனை ஏறிட்டாள் மங்கை.

முகம் சிவந்து, மூக்கு லேசாக வீங்கி, கண் இமை நீரில் நனைந்து, உதடு துடிக்கப் பாவமாக அமர்ந்திருந்த தன் மங்கையை இரு கரம் கொண்டு அள்ளிக் கொண்டான் காளை. அவன் தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டாள் அவள். மெல்ல கட்டிலில் இறக்கி விட்டவன்,

“சாப்பிடலாம்மா! சாப்பிடுட்டு கொஞ்சம் நேரம் தூங்குவீங்களாம்” என மெல்லிய குரலில் சொன்னான்.

“இல்ல, நான் பேசனும்! காளைக்கிட்ட எல்லாத்தையும் பேசனும்” என பிடிவாதம் பிடித்தாள் மங்கை.

“பேசலாம், நெறைய பேசலாம்! சாப்பிட்டு தூங்கி எழுந்ததும் பேசலாம்”

“இப்பவே பேசனும்!”

“அம்மும்மா முதல்ல சாப்பிடுவீங்களாம்!” என அவன் கெஞ்ச, ஆவென வாயைத் திறந்து ஊட்ட சொல்லி சைகை காட்டினாள் பெண்ணரசி.

மெல்லிய புன்னகையுடன் விலகியவன், கையைக் கழுவி விட்டு உணவு தட்டை எடுத்து வந்தான். அவள் ஆர்டர் செய்திருந்த சாம்பார் சாதத்தை மெல்ல பிசைந்து ஊட்டி விட்டான். ஒரு வாய் உள்ளே போனதுமே குமட்ட ஆரம்பித்தாள் மங்கை. மறு கரத்தால் முதுகை வருடி, கொஞ்சம் லெமன் ஜீஸ் கொடுத்து மீண்டும் ஊட்டினான் அவன். இப்படியே போராடி ஆறு வாய் ஊட்டியிருப்பான். அதற்கு மேல் வேண்டவே வேண்டாம் என பிடிவாதமாக மறுத்து விட்டாள் மங்கை.

“நீங்க சாப்பிடுங்க காளை!” என அவனை சாப்பிட வைத்தாள். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் முகத்தையேப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.

“மாத்து துணி ஒன்னும் எடுத்துட்டு வரலியா?”

“அவசரத்துல அதெல்லாம் எங்க ஞாபகம் இருந்துச்சு டீச்சர்!”

“போய் குளிச்சிட்டு துண்ட கட்டிக்குங்க போங்க! இந்த துணிய கழட்டிக் குடுங்க, நான் லாண்டரிக்குப் போன் செய்யறேன்”

“இல்ல டீச்சர் பரவாயில்ல!”

“போங்கன்னு சொல்றேன்ல” டீச்சர் மெல்ல எட்டிப்பார்த்தாள்.

அவள் மிரட்டியதைக் கூட இனிப்பு கொடுத்த மாதிரி சந்தோஷப்பட்டுக் கொண்டே குளிக்கப் போனான் காளை. அவன் துணியைத் துவைக்கக் கொடுத்து விட்டு, துண்டோடு நின்றவனைக் கட்டிலில் அமர்த்திக் கொண்டாள் மங்கை. அவளை மெல்ல சாய்த்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான் காளை.

“அழுது களைச்சுப் போயிட்டீங்க டீச்சர்! இப்ப தூங்குங்க”

“பேசனும்” என சொல்லியபடியே அவன் ஒரு கரத்தைப் பிடித்து தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள்.

“அப்புறம் பேசலாம்”

“இப்போ” என சொல்லியபடியே வயிற்றில் படிந்திருந்த அவன் கரம் மேல் தன் கரம் வைத்து வருடினாள்.

“அப்புறம்” என சொல்லியபடியே மெல்ல இன்னொரு கரம் கொண்டு  அவள் நெற்றியை வருடிக் கொடுத்தான் காளை.

“இப்போ!”

“அப்புறம்” என கன்னத்தைத் வருடிக் கொடுத்தான்.

“இப்போ”

“அப்புறம்” என தலையைக் தடவிக் கொடுத்தான்.

“இப்போ” என மெல்லிய குரலில் சொன்னவள் அப்படியே சுகமாக நித்திரையில் ஆழ்ந்தாள்.

மென்னகையுடன் கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டவன் குழந்தைப் போல தூங்கும் தன் மனைவியையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான். அவள் வயிற்றில் இருந்த கையை மெல்ல எடுக்கப் பார்த்தவனுக்கு பளீரென வெளிச்சமாக பல்பு எரிந்தது.

‘ஆத்தாடி ஆத்தா! குமட்டல், தலை சுத்தல், சண்டைக்கு முன்ன உடம்பு வச்சிருக்கனான்னு கேட்டது, கன்னம் டாலடிச்சது, என்னைப் புடிக்குமா, புள்ளையா புடிக்கும்மான்னு கேட்டது எல்லாம் கூட்டிப் பார்த்தா ஒன்னும் ஒன்னும் மூனுன்னு கணக்கு வருதே! இது கூட புரியாம இருந்திருக்கேனே நானு! அதான் மக்குன்னு முணுமுணுத்தாங்களா டீச்சர்! மாந்தோப்பு ஓனர் பொண்டாட்டிக்கு மாங்கா சாப்பிட நேரம் வந்துருச்சுடோய்! எலிசு, எலிசு! மாமா மாங்காய் என்ன மாந்தோப்பே குடுக்கறேன்மா ஒனக்கு’ என மனதினுள்ளே குதூகலித்தான் காளை.

‘இப்போதைக்கு நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன். நீங்க அப்பாவா ஆகப் போறீங்கன்னு பொண்டாட்டி வாயால கேக்கறதுதானே சுகம்!’ என எண்ணி மகிழ்ந்தவனுக்கு உடம்பு அவ்வளவு களைப்பாக இருந்தாலும் தூக்கம் மட்டும் வரவேயில்லை.

மூன்று மணி நேரம் அடித்துப் போட்ட மாதிரி தூங்கியவள் மெல்ல அசைந்தாள். இன்னும் வயிற்றிலேயே இருந்த அவன் கரம் பார்த்து, மெல்ல நிமிர்ந்துப் பார்த்தாள் மங்கை. சிரித்த முகமாக அவளையேப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் காளை. மெல்ல எழுந்துக் கொண்டவள்,

“இப்படியே உட்கார்ந்து இருக்கீங்களா காளை சார்? என்னை நகர்த்திப் படுக்க வைக்க வேண்டியதுதானே” என கேட்டாள்.

“நகர்த்துனா நீங்க முழிச்சிப்பீங்க டீச்சர்!”

கீழே இறங்கி வந்து அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவள் சிரித்த முகமாகவே பாத்ரூம் போனாள்.

வெளியே வந்து கேட்டிலில் சுடுநீர் வைத்தவள்,

“டீ குடிக்கலாமா?” என கேட்டப்படியே அங்கிருந்த டீ, சீனி, படுடர் பால் வைத்து டீ தயாரித்தாள்.

அவனுக்கு ஒரு மக் கொடுத்தவள், தனக்கும் ஒன்று எடுத்துக் கொண்டாள். அவ்வளவு நேரமும் அவள் வாய் திற்ந்து சொல்வாளா என அவன் கண்கள் அவளையே சுற்றி வந்தன ஏக்கமாக.

“என்ன?”

ஒன்றும் இல்லையென தலையாட்டினான் அவன்.

அவள் டீவி முன் இருந்த சோபாவில் போய் அமர, இவனும் அவள் அருகே போய் அமர்ந்துக் கொண்டான். டீவியை ஆன் செய்து விட்டு மெல்ல தன் டீயை உறிஞ்சினாள் மங்கை.

“டீச்சர்”

“ஹ்ம்ம்”

“இப்போ குமட்டுதா?”

“இல்லையே”

“தலை சுத்துதா?”

“நோ”

“இல்ல ஒரு மாதிரியா இருக்கீங்களே ஒடம்பு முடியலையான்னு..”

“ஐம் பெர்பக்ட்லி ஆல்ரைட்!”

“ஓ” என சொன்னவன் கண்கள் அவளையும் அவள் வயிற்றையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் கதவு தட்டப்பட, எழுந்த காளையை அமர சொல்லிவிட்டு இவள் எழுந்தாள். பாத்ரூம் போயிருந்த கேப்பில் ரூம் சர்வீசில் எதையோ ஆர்டர் கொடுத்திருந்தாள் அவள்.

“கண்ண மூடுங்க”

“ஏன் ஏன் டீச்சர்”

“நான் திரும்பி வந்து கண்ணத் தொறக்க சொல்ற வரைக்கும் கண்ணத் தெறக்கக் கூடாது. ஹ்ம்ம் மூடுங்க”

படக்கென கண்ணை மூடிக் கொண்டான் காளை. எழுந்து போய் கதவைத் திறந்தவள், சில நிமிடங்களில் திரும்பி வந்தாள்.

“கண்ணைத் தெறக்காம ஆ காட்டுங்க காளை”

அவள் சொன்ன மாதிரியே செய்தான் அவன். வாயில் ஜில்லென எதையோ வைத்தாள் மங்கை.

“சாப்பிடுங்க!”

கண்ணை மூடியபடியே சாப்பிட்டான் அவன்.

“கேக்கா டீச்சர்? மாங்கா வச்ச கேக்கா?”

“ஆமா! மேங்கோ ச்சீஸ் கேக். நல்லாருக்கா?”

“செம்மையா இருக்கு டீச்சர்!”

“அப்போ இன்னும் ஆ காட்டுங்க”

இன்னொரு வாய் ஊட்டியவள்,

“யாரு மாங்காய் விரும்பி சாப்பிடுவாங்க காளை?” என கொஞ்சலாக கேட்டாள்.

“எல்லாரும் சாப்பிடுவாங்களே டீச்சர்” என சொல்லி மெலிதாய் நகைத்தான் அவன்.

“மக்கு மக்கு! பெண்களிலே யாரு மாங்காய் அதிகம் விரும்பி சாப்பிடுவா?” என கேட்டவளின் குரலில் லேசாக கடுப்பு இருந்தது.

“குழந்தை உண்டாகி இருக்கறங்க டீச்சர்”

“கரெக்டு! அவங்க மட்டும் இல்ல அவங்க புருஷனும் சாப்பிடலாம் தப்பில்ல!”

“அப்படியா டீச்சர்! சாப்பிடட்டும் சாப்பிடட்டும்! எவ்ளோ சாப்பிடறாங்களோ அவ்ளோ நமக்கு லாபம்தானே டீச்சர்”  

“ஓ காட், காளை!”

“என்ன டீச்சர்?”

“இப்போ கேக்குல இருந்த மாங்காவ சாப்பிட்டது யாரு?”

“நான் தான் டீச்சர்”

“அப்போ குழந்தை உண்டாகி இருக்கிறது யாரு?”

“நீங்கதான் டீச்சர்!” என சொன்னவன் கண்ணைத் திறக்காமலே அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“என் டீச்சர் இப்போ டீச்சரம்மாவா ஆகிட்டாங்க! அதை ஏன் டீச்சர் இப்படி சுத்தி சுத்தி வளைக்கறீங்க? டேய் காளை நீ அப்பா காளை ஆகிட்டடான்னு சொன்னா பத்தாதா டீச்சர். கப்புன்னு புடிச்சிக்குவானே இந்த மக்கு புருஷன்” என சொல்லி சந்தோஷமாய் சிரித்தவன் அவள் இதழில் குத்துமதிப்பாக ஒரு முத்தத்தைப் பதித்தான்.

சிரிப்புடன் அவன் அணைப்பில் இருந்து விலகியவள்,

“இப்படியே கண்ண தெறக்காம இருங்க வரேன்!” என சொல்லி நகர்ந்துப் போனாள்.

தன் பேக்கில் இருந்து ஒரு பார்சலை எடுத்து வந்தவள் அவன் கைகளில் திணித்தாள்.

“இப்போ கண்ண தெறந்து இதைப் பிரிச்சுப் பாருங்க”

அழகாய் குட்டி பிங்க் ஹார்ட் போட்டிருந்த பார்சலை கவனமாகப் பிரித்தான் காளை. அதன் உள்ளே அவன் சைசுக்கு காளை படம் போட்டிருந்த டீ ஷர்ட்டும், அதே போல குழந்தைகள் போடுவது போல குட்டி ஓவரோலும் இருந்தன. அதோடு “டாட்” என எழுதி இருந்த அழகிய மக், தங்கத்தில் டாடி என எழுதி இருந்த சங்கிலியும் இருந்தது. கண் கலங்க ஒவ்வொன்றையும் தொட்டு தடவிப் பார்த்தான் அவன். கடைசியாக ஒரு அட்டைப் போல இருந்தது. அதை கையில் எடுத்த மங்கை,

“ரெண்டு கோடு காட்டுதுல்ல, அப்படின்னா நான் ப்ரேக்னண்டா இருக்கேன்னு அர்த்தம். நம்ம டவுனுக்குப் போனோம்ல அங்க மருந்துக் கடையில வாங்கி வீட்டுல டெஸ்ட் பண்ணேன். உங்க கிட்ட இந்த சந்தோச சமாச்சாரத்த சொல்றதுக்குள்ளதான் நமக்கு சண்டை வந்துருச்சு. நான் கோவிச்சுக்கிட்டு கிளம்பி வந்தது நெஜம்தான். ஆனா இங்க வர வழியிலேயே, ஒன்னும் தெரியாத உங்க கிட்ட கோச்சிக்கிட்டு வந்தது ரொம்ப சில்லின்னு எனக்கே தோணிருச்சு. உங்கள வரவச்சு இதெல்லாம் கிப்டா குடுத்து நாம பேரென்ட்ஸ்சா ஆகப் போறோம்னு சொல்ல நெனைச்சுதான் தேடி தேடி வாங்கனேன். அதுக்குள்ள நீங்க அப்பா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டீங்க. அதுல எனக்குக் கோபம் வந்துடுச்சு காளை. ஐம் சாரி!”

“சாரிலாம் சொல்லாதீங்க டீச்சர்”

“சொல்லுவேன்! இது நமக்கான நேரம். நாம அம்மா அப்பாவா ஆகப் போறத கொண்டாட வேண்டிய நேரம். அந்த டைம்ல இந்த கண்ணீர், கத்தல், கதறல் எல்லாம் சரியில்லையே காளை!” என சொன்னவள் அவன் இதழ்களில் மெல்லிய முத்தம் ஒன்றைப் பதித்தாள்.

“எனக்குன்னு ஒரு சொந்தம், நான் பாசம் காட்ட ஒரு பந்தத்த  கொடுத்ததுக்கு ரொம்ப, ரொம்ப தேங்கஸ் காளை. தேங்ஸ் ஃபோர் மேக்கிங் மீ எ மம்!”

“என் வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடக்குமான்னே கேள்விக்குறியா இருந்துச்சு! ஆனா நீங்க எனக்கு வம்படியா வாழ்க்கையும் குடுத்து என்னை அப்பாவாகவும் ஆக்கிருக்கீங்க டீச்சர்! அதுக்கு நான் தான் டீச்சர் தேங்க்ஸ் சொல்லனும்!”

“நீங்க எங்க அப்பா மாதிரியே ஒரு நல்ல அப்பாவா வருவீங்க காளை! நான் எங்கம்மா மாதிரி இல்லாம ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல அம்மாவா இருக்க என்னால ஆன எல்லாம் பண்ணுவேன்! நம்ம பேபிய கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பேன்! பார்த்துப்பேன்தானே காளை?” என கலக்கமாக கேட்டாள் மங்கை.

“கண்டிப்பா பார்த்துப்படா அம்மும்மா! நம்ம புள்ள உன்னை அம்மாவ அடைய குடுத்து வச்சிருக்கனும்!” என தன் மனையாளை நெஞ்சில் பொத்திக் கொண்டவன் மெல்லிய குரலில் அன்பாக சொன்னான்.

அவன் நெஞ்சத்தைக் கண்ணீரில் நனைத்தவள், தன் மனதில் இருந்தவைகளை அவனோடு பகிர ஆரம்பித்தாள்.

“எனக்கு..எனக்கு அஞ்சே வயசுதான் அப்போ! அப்பா கூட எங்கயோ வெளிய போறோம்னு அவ்ளோ சந்தோஷம். எனக்கு சாக்லேட் வாங்கி குடுத்தாரு! பாதி சாப்பிட்டு மீதிய அவருக்குக் குடுத்தேன். கண்ணுலாம் கலங்கிப் போய் அத வாயில வாங்கிக்கிட்டாரு! அந்த காட்சி என் நெஞ்சுல அப்படியே பதிஞ்சு கெடக்கு காளை. ஏன்பா அழறீங்கன்னு கேட்டது கூட ஞாபகம் இருக்கு. ஒன்னும் இல்ல அம்மும்மா அப்படின்னு சொல்லி நெத்தியில முத்தம் குடுத்தாரு. அவர் சிஸ்டர் கையில என்னைப் புடிச்சுக் குடுத்துட்டு போற வரைக்கும் கூட எனக்கு ஒன்னும் புரியல. அப்பா, அப்பான்னு அழுதேன்! ஆனா திரும்பி பார்க்காம போய்ட்டாரு! திரும்பி வந்துடுவாருன்னு ஒவ்வொரு நாளும் வேய்ட் பண்ணுவேன்! தெனம் அழுவேன் அப்பா வந்துடுங்கப்பா வந்துடுங்க! நான் குட் கேர்ளா இருக்கேன் வந்துடுங்கன்னு நித்தம் அழுகைதான். ரொம்ப பயமா இருந்துச்சு அங்க இருக்கவே! நெறைய பிள்ளைங்க கூட இருந்தாங்க. நெறைய சிஸ்டர்ஸ் இருந்தாங்க. ஆனாலும் அவங்க எல்லாம் எனக்குப் புதுசுதானே! அங்க ரொம்ப ஸ்ட்ரீக்ட் காளை. டைமுக்கு எழுந்துக்கனும், பச்சைத் தண்ணியில குளிக்கனும், கரேக்டா சாப்பிடனும், எக்ஸ்சர்சைஸ் போகனும், கிளாஸ் அட்டேண்ட் பண்ணனும், ஹோம்வொர்க் முடிக்கனும் இப்படின்னு எல்லாம் பெர்பெக்டா இருக்கனும். இல்லைனா அடி விழும். அதோட ஹாஸ்டல்ல சின்னப் புள்ளைங்கள பெரிய புள்ளைங்க ரேகிங் செய்வாங்க. நான் அழுதுட்டே இருப்பேன்ல, போற வரதுங்க எல்லாம் மண்டைல கொட்டிட்டுப் போகுங்க! அதுங்களுக்கு பயந்தே அழறத நிப்பாட்டுனேன். அவளுங்க துணிய தோய்ச்சுக் குடுக்கனும், ரூம கிளீன் பண்ணிக் குடுக்கனும்னு வேலை வாங்குங்க! எல்லாம் செஞ்சுப் பழகனேன். போக போக, இதான் என் இடம். இதுக்கு நாம பழகியே ஆகனும்னு ஒரு வைராக்கியம் வந்துடுச்சு. அவங்கள எல்லாம் எதிர்த்து நின்னப்போ எனக்கு வயசு எட்டு.” என சொல்லியவளுக்கு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“எட்டு வயசுல என்ன பண்ணீங்க டீச்சர்?”

“துணி துவைக்க சொன்னவள, அடி துவைச்சு எடுத்துட்டேன். அதுக்கு அப்புறம் நான் ஒரு குட்டி டானா ஃபார்ம் ஆகிட்டேன் எங்க ஹாஸ்டல்ல. எனக்கு பின்னால சில அடி பொடிங்க! அப்படியே அந்த லைப் பழகிப் போச்சு”

“அப்பா வந்து உங்கள பார்க்கவே இல்லையா டீச்சர்?” குரலில் கவலைத் தொணிக்கக் கேட்டான் காளை.

“வந்தாரே! முதல்ல விட்டுட்டுப் போய் ஒரு வருஷம் கழிச்சு வந்தாரு. சிஸ்டர் தான் இங்க லைப் பழகற வரைக்கும் வராதீங்க, ஹோம் சீக் ஆகும்னு சொல்லி வச்சிருந்தாங்களாம். அவரோட வைப்ப வேலை செய்யறவங்க கிட்ட விட்டுட்டு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வருவாரு அப்பா. சிஸ்டர் கிட்ட பெர்மிஷன் வாங்கி, ரெண்டு நாள் அவர் கூட ஹோட்டல்ல தங்க வச்சிப்பாரு. கேட்டதெல்லாம் வாங்கிக் குடுப்பாரு! ஆயிரம் தடவை அம்மும்மான்னு கூப்புடுவாரு! நைட்ல கூட தூங்காம என்னையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பாரு. ரெண்டு நாள் கழிச்சு கிளம்பறேன்மான்னு சொன்னா நான் முகத்த தூக்கி வச்சிப்பேன்! ஐ ஹேட் யூப்பான்னு கத்துவேன்! அவரப் போட்டு அடிப்பேன்! சிரிச்ச முகமாவே எல்லாத்தையும் வாங்கிப்பாரு! அப்புறம் முத்தம் குடுத்துட்டு கெளம்பிப் போயிடுவாரு. மறுபடி ஆறு மாசம் கழிச்சு திரும்ப வருவாரு. நானும் எப்படா ஆறு மாசம் ஆகும்னு எதிர்ப்பார்த்துட்டே இருப்பேன்”

“பெரிய லீவ் விட்டா எங்கிருப்பீங்க டீச்சர்?”

“ஹாஸ்ட்டல்ல தான். என் கூட இன்னும் பல பேர் இருப்பாங்க காளை. அவங்க பேரண்ட்ஸ்லாம் வெளிநாட்டுல, வெளியூர்ல வேலை செய்றவங்க, சிங்கிள் பேரெண்ட்ஸ்சோட கிட்ஸ்னு ஹாஸ்டல்ல லீவனா கூட ஆள் இருந்துட்டே இருக்கும். அப்பா இந்த மாதிரி லீவ்ல என்னை பல கோர்ஸ்ல சேர்த்து விடுவாரு காளை. சதுரங்க கிளாஸ், யோகா கிளாஸ், மெடிடேஷன், கராத்தே கிளாஸ், ட்ராமா கிளாஸ், சங்கீத கிளாஸ், பேலே இப்படின்னு எதாச்சும் புதுசு புதுசா சேர்த்து விடுவாரு. எங்க ஸ்கூல்லே கூட சம்மர் கேம்ப் இப்படிலாம் வரும். இத்தனைக்கும் அப்பா பெரிய பணக்காரர் இல்ல மத்த ஸ்டூடென்ட்ஸ் பேரேண்ட்ஸ் மாதிரி! ஆனா கட்டுசெட்டா இருந்து எனக்காகவே செலவு செஞ்சாரு. ஆரம்பத்துல எனக்குப் புரியல ஏன் இப்படி என்னை டார்ச்சர் செய்யறாருன்னு.” என சொல்லியவள் சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் தலையை ஆறுதலாக வருடினான் காளை. அவனுள் புதைந்து போவதைப் போல இன்னும் ஒண்டிக் கொண்டாள் தவமங்கை.

“விவரம் தெரிய ஆரம்பிக்கற வயசுல, அப்பா எல்லாம் சொன்னாரு! அவரப் பத்தி, அவரோட வைப்ப பத்தி, அவங்களோட மனநிலையைப் பத்தி எல்லாம் வெளிப்படையா பேசனாரு. அதுக்கு முன்ன அவங்களுக்கு என்னைப் பிடிக்கலன்னு மட்டும்தான் தெரியும், ஆனா ஏன்னு தெரியாது! நாம அழகா இல்லையா, அறிவா இல்லையா எதனால அவங்களுக்கு என்னைப் பிடிக்கல, ஏன் அப்பாட்ட சொல்லி நம்மள வெரட்டிட்டாங்கன்னு ரொம்ப யோசிப்பேன், அழுவேன்! அப்பா பேசனதுக்கு அப்புறம் அவங்கள பத்தியே நெனைக்கறது இல்ல காளை.”

“அப்பா ஏன் கிளாஸ்ல சேர்த்து டார்ச்சர் பண்ணாருன்னு சொல்லவே இல்லையே டீச்சர்?”

“ஏன்னா எனக்கும் எங்கம்மா மாதிரியே மனநிலை பாதிச்சிரக் கூடாதுன்னு தான். என் மனச திடப்படுத்த மெடிடேஷன், யோகான்னும் உடம்ப திடப்படுத்த கராத்தே, பாலேன்னும் அறிவ வளப்படுத்த சதுரங்க விளையாட்டு, மெண்டல் அரிட்மேட்டிக்னு என்னை ஓய்வில்லாம வச்சிருந்தாரு எங்கப்பா! அவருக்கு ரொம்பவே பயம், நானும் அவங்க வைப் மாதிரி ஆகிடுவேனோன்னு. ஏன் காளை நான் உங்க கிட்ட லூஸ் மாதிரி, மனநிலை சரியில்லாத மாதிரி நடந்துருக்கேனா இது வரைக்கும்? சும்மா சொல்லுங்க!”

“சேச்சே இல்லை டீச்சர்! அப்படிலாம் ஒன்னுமே இல்ல”

“ஹ்க்கும்! இருந்தா மட்டும் ஒத்துக்கவா போறீங்க! என் டீச்சர் தான் வல்லவ, நல்லவ நாலும் தெரிஞ்சவன்னு பீலா விட்டுட்டுத் திரிவீங்க” என செல்லமாக கோபித்துக் கொண்டாள் மங்கை.

“இல்லையா பின்ன! என் டீச்சர் மாதிரி வருமா! அவங்க ஆயிரத்தில் ஒருத்தி”

“ஆமா ஆமா! உன் டீச்சர் ஆயிரத்தில் ஒருத்திதான். ஸ்கூல், காலேஜ் எல்லாமே அங்கயேதான் முடிச்சேன். அதுக்கு அப்புறம் வேலை கிடைக்கவும் தான் அப்பா கிட்ட போனேன். நாம வளந்துட்டமே, அவங்க மனநிலைக்கு ஏத்தப்படி நடந்துக்கிட்டா நம்மள ஏத்துக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை காளை. என்னதான் வெறுக்கறேன், கோபமா இருக்கேன்னு சொல்லிக்கிடாலும் அம்மான்னு ஆழ் மனசுல பாசம் இருக்காதா எனக்கு! ரொம்பவே இருந்துச்சு காளை. பார்த்து பார்த்து எல்லாம் செஞ்ச அப்பாவ விட, என்னைக் கண்டுக்கவே கண்டுக்காத அவங்க மேல அவ்ளோ பாசம் இருந்துச்சு எனக்கு. ஐ லவ் அஜய்ஸ் வைப். யெஸ், ஐ லவ் மை அம்மா! மங்கைன்னு ஒரு வார்த்தை பாசமா அவங்க கூப்பிட்டுற மாட்டாங்களான்னு அவ்ளோ ஏக்கம் எனக்குள்ள! நான் ஒரு பைத்தியக்காரி காளை. என் மேல அவங்க அன்பு வைக்கலன்னாலும் அவங்க மேல நான் கடலளவு பாசம் வச்சிருக்கேன். பத்து மாசம் வயித்துல வச்சிருந்து, ரத்தத்தப் பாலாக்கி எனக்கு குடுத்தவங்களாச்சே! மனசுக்குள்ள அவ்வளவு சஞ்சலம் இருந்தும் எனக்கு உயிர் குடுத்தவங்களாச்சே! உங்க கூட பேசிட்டு இருக்கற இந்த மங்கை, அவங்க மனசு வச்சிருக்கலன்னா இந்த பூமியில உதிச்சிருப்பாளா? இப்போ நம்ம பாப்பா வயித்துல வந்ததும், எங்கம்மா மேல இன்னும் பாசம் பொங்குது காளை. ஆனா அந்தப் பாசத்த நான் காட்டமாட்டேன். நான் பாசம் காட்டுனா அவங்க பயப்படறாங்க காளை! அதனால சத்தியமா அத நான் காட்டமாட்டேன்.”

அத்தனை வருடங்கள் கழித்து அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தப் போது, அரசி மயங்கி விழுந்ததை காளையிடம் பகிர்ந்துக் கொண்டாள் மங்கை. அவரின் மனதை கவர பிடித்ததெல்லாம் சமைத்துக் கொடுத்து, வீட்டைப் பராமரித்து, அஜயிடம் பேசாமல் இருந்து என எவ்வளவு முயன்றும் அரசியின் பயந்த பார்வையைப் பார்த்து உள்ளுக்குள் செத்துப் போனதை அழுகையுடன் விவரித்தாள் அவள். பின் வேண்டாம் அரசிக்கு இந்த ஸ்ட்ரேஸ் என மகளிர் விடுதியில் சேர்ந்து வேலைக்குப் போக ஆரம்பித்ததையும் பகிர்ந்துக் கொண்டாள்.

“நான் தூரமா இருந்தா எங்கம்மா நிம்மதியா இருப்பாங்க காளை. எனக்கு உயிர் பிச்சைப் போட்டவங்களுக்கு நான் செய்யற கைமாறா அந்த நிம்மதிய அவங்களுக்குக் குடுத்துட்டு நான் ஒரேடியா ஒதுங்கிட்டேன்! அதுக்குப் பிறகு நிச்சயம் ஆக போறதனால ஊர் வாய மூட ஹாஸ்டல வெகேட் பண்ணிட்டு அவங்க கூட இருக்க வேண்டிய நெலைமை. கல்யாணம் வரைக்கும் தானேன்னு அம்மாவும் பொறுத்துக்கிட்டு இருந்தாங்க. சந்தோஷமா என் கல்யாண வேலைகளில கூட கலந்துக்கிட்டாங்க. ஆனா நானே கல்யாணத்த நிறுத்தவும், இன்னும் பெரிய மெண்ட்ல் ப்ரேக் டவுன் ஆகிருச்சு அவங்களுக்கு. அப்பா கூடவே இருக்கனும்னு தான் நான் கல்யாணத்த நிறுத்திட்டதா நெனைச்சு அழுகையில கரைஞ்சாங்க. எனக்கு அவங்க மேல கோபம் வரல காளை, பரிதாபம் தான் வந்துச்சு. அதோட அம்மா சைட் சொந்தம்லாம், அம்மா மாதிரியே எனக்கும் பைத்தியம், அதான் மாப்பிள்ளை வீட்டுல கல்யாணத்த நிறுத்திட்டாங்கன்னு புரளி பேச ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் என் மனச ரொம்ப அழுத்திடுச்சு காளை. ஒரு தடவை தற்கொலை செஞ்சிக்கலாம்னு கூட தோணிருச்சு. பட் நான் அரசி இல்ல! எனக்கு சிந்திக்க கத்துக் குடுத்துருக்காரு எங்கப்பா. மனச ஒரு நிலைப்படுத்த கத்துக் குடுத்துருக்காரு! மனசு கண்டதையும் நினைக்கறப்போ, அறிவ வச்சு அதை அடக்கனும்னு கத்துக் குடுத்துருக்காரு. சுயபச்சாதாபம் கூடாதுன்னு சொல்லிக் குடுத்துருக்காரு. கத்துக் குடுத்தாருன்னா அவரே கத்துக் குடுக்கல. சின்னப்பிள்ளையில இருந்து என்னை அனுப்பன அத்தனை கிளாஸ்லயும் கத்துக் குடுத்தத சொன்னேன். தென் ஐ டிசைடேட், தூரமா போயிடலாம்னு. வேலைக்கு அப்ளை பண்ணி நம்ம கிராமத்துக்கு வந்தேன்! உங்களப் பார்த்தேன், காதலுல விழுந்தேன்! இன்னும் எழுந்துக்கவே இல்லை!”    

“நானும் உங்கள பார்த்ததும் படக்குன்னு விழுந்துட்டேன் டீச்சர்”

“நீங்களா விழல நான் காலைத் தட்டிவிட்டு கீழ விழ வச்சேன்!” என சொல்லி நகைத்தாள் மங்கை.

மொரட்டுக்காளையை தள்ளி விட்டு அவன் மேல் ஏறி அமர்ந்ததை நினைத்து இருவருக்குமே சிரிப்பு வந்தது.

“ஆக்சுவலி காளை, நான் கதிர உயிருக்கு உயிரா லவ் பண்ணதா நெனைச்சிட்டு இருந்தேன். ஆனா நல்லா யோசிச்சுப் பார்க்கறப்போத்தான் தெரியுது நான் கதிர லவ் பண்ணல ஆனா அவங்க அம்மா பாருவ லவ் பண்ணிருக்கேன்னு” என சொல்லி சிரித்தாள் மங்கை.

“வாட்? கம் அகேய்ன்!!!”

“எங்க வரனும் காளை?” என கேட்டு நகைத்தாள் காளையின் டீச்சர்.

“கதிர பிடிச்சிருக்கு, கல்யாணத்துக்குப் பேசுங்கன்னு நீங்க சொன்னதாதான் டீச்சரப்பா சொன்னாரு”

“ஆமா நான் தான் சொன்னேன். அப்பா கிராமத்துல ஒரு பங்ஷனுக்காக என்னை வற்புறுத்திக் கூப்பிட்டாரு. அப்போத்தான் கதிர் அம்மாவ, அதாவது எங்க பாரு அத்தையைப் பார்த்தேன். மருமகளே, கண்ணே, மணியேன்னு அவ்ளோ பாசமா பார்த்தாங்க. அவங்க கூடவே வச்சிக்கிட்டங்க என்னை. பார்த்து பார்த்து கவனிச்சாங்க. அவங்களோட பாசம் என்னை அப்படியே கட்டிப் போட்டுருச்சு. வாழ்நாள் பூராவும் அது வேணும்னு எனக்கு தோண ஆரம்பிச்சுச்சு காளை. அவங்கதான் கதிர காட்டி, என்னோட மகன்னு அறிமுகப் படுத்துனாங்க. அவரப் பார்த்ததும் ரொம்ப பிடிச்சது. அவர கல்யாணம் செஞ்சிக்கிட்டா அத்தைக் கூடவே இருக்கலாம்னு தோணுச்சு. அதான் அப்பா கிட்ட சொன்னேன். கதிர் கிட்ட கூட நான் தான் ப்ரோபோஸ் பண்ணேன். ஆரம்பத்துல முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. பொறந்த இடத்துல தான் பாசம் கிடைக்கல புகுந்த இடத்துலயாச்சும் கெடைக்கனும்னு தான் கதிர அதுவும் இதுவும் பேசி கன்வீன்ஸ் பண்ணேன். பாரு அத்தையும் மிரட்டவும் கடைசில ஒத்துக்கிட்டாரு. அவரோட சண்மு வர வரைக்கும் எல்லாம் சரியா போச்சு! அப்புறம் புரிஞ்சது காதல் ஃபோர்ஸ் பண்ணி வரது இல்லை. அது தானாவே வரனும்னு. அவங்க ரெண்டு பேரும் சேரணும்னு கல்யாணத்த நானே நிப்பாட்டுனேன். அதுக்குப் பிறகு ரெண்டு நாள் அழுதேன். அப்புறம் நார்மல் ஆகிட்டேன். ஆனா காளை, உங்க கிட்ட கோவிச்சுக்கிட்டு இங்க வந்தப்போ என் உயிரையே யாரோ பிச்சு வெளிய எடுத்துட்ட மாதிரி அப்படி வலிச்சது தெரியுமா! இந்த ரெண்டு நாளா நான் நானாகவே இல்ல. கதிர பிரிஞ்சப்ப இப்படிலாம் நான் ஃபீல் பண்ணல. அதுக்குப் பிறகுதான் புரிஞ்சது நான் கதிர லவ் பண்ணல, அவரோட அம்மா பாரு அத்தைய லவ் பண்ணிருக்கேன்னு”  

தாய்ப்பாசத்தைப் பாருவிடம் கண்டு அது தனக்கே வேண்டும் என கதிரை மணக்க நினைத்திருக்கிறாள் தன் மனைவி என இப்பொழுது நன்றாக புரிந்தது காளைக்கு.

“பாரு அத்தைக்குப் பின்னே, உங்களுக்கு முன்னே இன் பிட்வீன் நான் இன்னொரு ஆளை லவ் பண்ணேன் காளை!” என அசால்ட்டாக இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டாள் மங்கை.

“அது யாரு டீச்சர் எனக்கு முன்ன வந்த இன்னொரு ஆளு?”

 

(அடி பணிவான்….)

(பதில் தெரிஞ்சவங்க வந்து சொல்லிட்டுப் போங்க. இந்த தடவை நான் கலாய்க்க மாட்டேன்…. நெஜமாப்பா! இன்னிக்கு எபி எழுத எழுத அதுப்பாட்டுக்கு வந்துட்டே இருக்கு, பெரிய எபியா ஆகிருச்சு. கதை முடிய இன்னும் ரெண்டு எபி வரும் போலிருக்கே ஆண்டவா!!!!!மணி மூனாச்சு. நான் போய் படுக்கறேன் டியர்ஸ்)