NNA8

நீயும் நானும் அன்பே

அன்பு-8

தீபாவளியை கொண்டாட உள்ளூருக்குள் இருக்கும், பெண்களது குடும்பமும் அன்று மாலை வீட்டிற்கு வந்திருந்தது.

 

ஆச்சி வீட்டிற்கு தாயோடு வந்திருந்த காயத்திரி, நடந்துபோயிருந்த கிணற்றுச் சம்பவத்திற்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல வளைய வந்திருந்தாள்.

 

அருகில் எப்பொழுதும் வீட்டு ஆள்கள் இருக்கவே, சங்கராலும் காயத்திரியை நெருங்க இயலவில்லை.

 

காயத்திரியின் செயலில் உண்டாகியிருந்த கோபம் இன்னும் குறையாமல்தான் இருந்தான் சங்கர்.

 

நவீனாவிற்கும் பெரியவர்கள் முன் காயத்திரியிடம் எதுவும் பேச முடியாத நிலை.

 

வந்ததுமுதல் சங்கரைக் கவனித்து, அவளாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் காயத்திரி. மச்சானிடம் வந்திருந்த மாற்றம் என்னவோ, காயத்திரிக்கு சந்தோசத்தைத் தந்திருந்தது.

 

சங்கரின் பார்வையில் வந்திருந்த மாற்றத்தைக் கொண்டு தவறாகக் கணித்திருந்தாள் காயத்திரி.

 

‘கிணற்று நீரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது, எனும் தைரியத்தைவிட, நவீனாவின் துருவும் புதிய பார்வை கண்டு, தனது பார்வைக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தான் சங்கர்.

 

பழக்கம் காரணமாக தேடத் துவங்கிய விழியை, எதிர்பார்த்திராத துருவிய விழியோடு மோதவிட்டு,  ‘துருவலுக்கு துப்பு கொடுக்க வேண்டாம், என்ற முடிவோடு இருப்பவனை சம்பந்தப்பட்டவளே புரிந்து கொள்ளவில்லை.

 

மனதை ஒருநிலைப்படுத்தி, பக்கா ஜென்டில்மேனாக பார்வையை மாற்றி, தன்னையே ஏமாற்றித் திரிந்த சங்கரைக் கண்ட காயத்திரியோ, அவளாகவே வேறு மாதிரி கற்பனை செய்து மகிழ்ந்திருந்தாள்.

 

‘பழகப் பழக பாலும் புளிக்கும்ங்கற மாதிரி பக்கத்திலேயே வச்சுப் பாத்துப் பாத்து முகத்துல அடிச்சிப் போச்சுபோல!’, காயத்திரி.

 

காயத்திரியின் தாயோ தம்பியிடம் உரிமை வந்து நிலைநாட்ட முயன்றிருந்தார்.

 

“என்ன தாஸு! நம்ம சங்கருக்கு அடுத்த வருசம் படிப்ப முடிஞ்சவுடனே கல்யாணம் பண்ணிரலாம்ல!, என்று கேட்டு சங்கரின் இதயத்துடிப்பை எகிற வைத்திருந்தார்.

 

தாஸ் அதற்கு மகனை ஒரு பார்வை பார்த்தபடியே, “என்னக்கா, அதுக்குள்ளயா! இருபத்தோரு வயசுதான நடக்குது!  இன்னும் ரெண்டு மூனு வருசம் செண்டு பாக்கலாம்!, என்று ‘கழுவுற மீனில் நழுவுற மீனாகப் பதில் கூறியிருந்தார்.

 

“பொம்பிளைப் புள்ளைய வச்சிட்டே இருக்க முடியாதுல்ல! இந்த அக்கா மகதான் ஒன்வீட்டுக்கு மருமகளா வரணுனா, கல்யாணத்தைப் பேசி வச்சிருவோம். நிச்சயம் மாதிரி!  அப்புறம் படிப்பு முடிஞ்சபின்ன கல்யாணத்தை வச்சிக்கலாம்!, அதர பழசான ஐடியாவை உதிர்த்திருந்தார்.

 

அதற்கிடையில் வந்த அன்னம்மாளோ, “உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?  ஆறேழு மாச வித்தியாசத்துல பிறந்த புள்ளைகள கல்யாணம் பண்ணா, எப்படா அத்துகிட்டு போவோங்கிற அளவுக்கு சண்டை மாடு கணக்கா எப்பவும் சச்சரவோட இருக்கும்.

 

சண்டி மாட்டை அவனுக்கு கட்டி வச்சி காலத்துக்கும் அவன் கஷ்டபடறதை பாக்கற தெம்பு, அவன் ஆத்தாளுக்கும் இல்லை, பெத்தவளுக்கும் இல்லை!

 

உம்மகளுக்கு வேற மாப்பிள்ளைய பாரு! ஆமா… சொல்லிபுட்டேன்…, என்று கூறி முடித்திருந்தார்.

 

முறைத்த மகளோ, “ஏம்மா அப்ப நீ இந்த வீட்டுல பிறந்தவளுகளோட மக்கள யாரையும் சங்கருக்கு எடுக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணு!, என்று பிடிவாதமாகப் பேசினார்.

 

“இது என்னடி ஆத்தா உன் அநியாய நியாயம்?  எப்ப வந்தாலும் எதாவது புரியாம பேசிக்கிட்டு!, என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவர்

 

அங்கங்கே நின்றிருந்தாலும், வந்திருந்த பெரும்பான்மையினரது காது அங்கு தான் கழட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்வையாலேயே கணித்திருந்தார் அன்னம்மாள்.

 

“பிறந்த மக்க எல்லாருகிட்டயும் பொட்டப் புள்ளைங்க இருக்கு!  அவனுக்கு புடிச்சிருந்த பொண்ணைக் கையக்காட்டினா, அவங்காட்டுற பொண்ணைத்தான் அவனுக்குக் கட்டி வப்போம்.  அது எங்க கடமையில்லையா?

 

இதுக்கெல்லாம் தேவையில்லாத குழப்பத்த வந்து குடும்பத்துக்கு இடையில கொண்டு வர நினைச்சா, பிறந்த வீட்டோட இருக்குற சுமுக உறவு இல்லாமப் போயிரும்? பாத்துக்க!

 

முதல்ல எந்திரிச்சு உன் வீட்டப் பாத்துப் போ!  நல்ல நாளு அதுமா வந்து எதாவது வாயக் கிளறிகிட்டு!”, என்று மனங்கொண்ட மட்டும் இதமாகவே ஆனால் முடிவாய் பேசியிருந்தார்.

 

“வயசுல மூத்த பிள்ளைகளையே சொந்தம் விட்டுப் போகக் கூடாதுனு கல்யாணம் பண்ணும்போது, நீயேம்மா அழிச்சாட்டியம் பண்ணுற? எம்மகளை எடுக்க மாட்டேன்னு!

 

“யாருடீ அழிச்சாட்டியம் பண்றது? நீயா? இல்லை நானா? மூத்த புள்ளைய ஏதோ மூளையில்லாத மறை கழண்டவன் கல்யாணம் பண்ணி வச்சா… அதைப்பத்தி இங்கெதுக்கு வந்து பேசுற… அந்த மாதிரி வீட்டுல போயி சம்பந்தம் பண்ணிக்க, யாரு  உன்னை வேணானு சொன்னா?  அதுக்காக இந்த வீட்டுல வந்து அதை நடத்தனும்னு நினைச்சா… ஒருக்காலும் அது நடக்காது!

 

அப்டியே நீ சொல்ற மாதிரி, தலைகொழுத்ததனமா அதுகளா வயசு வித்தியாசம் பாக்காம, கல்யாணம் பண்ணிக்கிட்டு திரியறதையெல்லாம் இங்கெதுக்கு வந்து தேவையில்லாம பேசிக்கிட்டு…! வாயிக்கு புடிச்ச தெண்டமா…?

 

என்னத்துல குறையாயிருக்கான்னு எம்பேரனுக்கு அப்டியொரு பொண்ணை எடுக்கனும்? அப்டிதான் பண்ணணும்னு என்ன இருக்கு சொல்லு?

 

தெரியாமதான் கேக்குறேன்… உம்புருசன் வழியிலதான் அம்புட்டு மாப்பிள்ளை இருக்கே!  அப்புறம் எதுக்கு இங்க வந்து நோட்டம் பாத்து, பிரச்சனைய கூட்டற?

 

இங்க என் பேரனோட இஷ்டந்தான் எங்களுக்கு முக்கியம்!

 

வயசு வித்தியாசம் ரெண்டு பேருக்கும் கூடுதலா இருந்தாதான்… அவஞ்சொல்றதைக் கேட்டு அனுசரணையா நடப்பா வந்தவ! 

 

இல்லைனா இவந்தலையில மொளகா அரைச்சிருவா!

 

அதுனால அஞ்சாறு வயசு வித்தியாசத்துல சொன்னா… சரி போகுதுன்னு கட்டி வைக்கலாம்.  அஞ்சாறு மாசக் கணக்கை கொண்டு வந்து நுழைச்சு, உன்னோட பேராசைக்காக, எம்பேரனோட நிம்மதியக் கெடுக்க முடியாது.

 

இந்த விசயத்துல தேவையில்லாம வந்து தலையிட்டு, அவங்கிட்ட மூக்கொடபட்டு அசிங்கப்படாத!, என்று அன்னம்மாளே பேச்சை வளக்கவேண்டாம் என முடிவெடுத்து, அங்கிருந்து அகன்றிருந்தார்.

 

அன்னம்மாளும் சரி, சசிகலாவும் சரி, இருவருமே சங்கரிடம் இதுபற்றி பட்டும்படாமல் முன்பே சொல்லியிருந்தனர்.  அதனால் அவர்களது வழிமுறையை மீறி தவறு செய்ய மாட்டான் சங்கர் என்கிற நம்பிக்கை இருவருக்குமே இருந்ததால், துணிந்து பேசினார் அன்னம்மாள்.

 

இதை அனைத்தையும் அறிந்திருந்தாலும், சங்கர் அமைதியாக எதுவும் தனக்குத் தெரியாததுபோலவே இருந்தான்.

 

தான் கோல் போட எண்ணி எப்போது முயன்றாலும், தன்னை ஒன்றுமில்லாமல் செய்து வழியனுப்பி வைக்கும் தாயை, மனதிற்குள் வெறுத்தபடியே கிளம்பியிருந்தார் மகள்.

 

அத்தோடு, மற்ற உடன்பிறப்புகளிடமும் குளறுபடி செய்து குட்டையைக் குழப்பிவிடும் முடிவோடு கிளம்பியிருந்தார்.

 

மோனிகாவுடன் வலியச் சென்று பேசிய காயத்திரியை, பேசா மௌனியாக இருந்தே விரட்டியிருந்தாள் மோனி.

 

வந்திருந்தவர்கள் கொண்டு வந்திருந்ததைக் கொடுத்துவிட்டு, இங்கிருந்து கொடுத்ததை பெற்றுக் கொண்டு, பண்டமாற்று முறை பணமில்லாது கை மாறிய கையோடு அனைவரும் விடைபெற்றிருந்தனர்.

 

அவர்களுக்குள் பேசிய பேச்சு, நவீனா காதிற்கு மருவி வேறு மாதிரி வந்திருந்தது.

 

சங்கருக்கு கல்யாணம் என்று!

///

 

யார் வந்து என்ன பேசினாலும், தன்னைமீறி எதுவும் நடக்காது என்கிற துணிச்சல் சங்கருக்கு.

 

அவர்களது விருப்பத்தைக் கேட்கிறார்கள்.  தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்திவிட்டால் போதும். அவ்வளவே அவன் யோசனை.

 

மழையின் காரணமாக, மாடிக்கு செல்வதைத் தவிர்த்து, கீழேயே இருந்த சங்கருக்கு, நவீனாவின் மாற்றங்களால், மனம் குழப்பத்திலேயே நீண்டிருந்தது.

 

‘சின்னப் புள்ளைனு நினைச்சு தனியா ஒதுங்கிப் போகவும் முடியல, தனக்கு வரப்போற பொண்டாட்டிதானனு நினைச்சு உரிமையோட சேந்து ஒதுங்கவும் முடியல! என்கிற ரெண்டுங்கெட்டான் மனோநிலை சங்கருக்கு

 

இதை எதையும் பொருட்படுத்தாதவளோ, மற்றவர்களிடம் இதமாகவும், சங்கரின் இதயத்தில் அவளின் நினைவுகளால் தாளம் தப்பிய ரிதமாகவும் இருந்தாள்.

 

‘இது எப்ப வளந்து, என்னைப் புரிஞ்சு. புத்தி தெளிஞ்சு… …. என டி.ஆர் பாணியில் மனதிற்குள் புலம்பியவாறே வலம் வந்தான் சங்கர்.

 

வாய்ப்புகள் தானாக அமைவதில்லை.  வாய்ப்புகளை உருவாக்கி வாகாக காய் நகர்த்துபவனே இங்கு வெற்றி பெறுகிறான்.

 

யோசித்தவன் களைத்தான்.

 

‘மினி ஸ்ரீரங்க ஜனத்திரளையே வீட்டுக்குள்ள வச்சிட்டு என்னாத்தச் செய்ய!

 

ஐப்பசி மாத அடைமழை!

 

பெய்யும் மழை, ஓயும் வரை ஓய்ந்திருந்தவன், மழை ஓய்ந்ததும், மாடிக்கு ஓடியிருந்தான்.

 

அதீத மழையால், மாடித்தரையில் பாசத்தோடு பாசி பிடித்து வழுக்கியது.

 

குளு, குளுவென இருந்த காலநிலையிலும், மனதில் வெம்மை.

 

‘என்னடா இது சுவராசியம் இல்லாத வாழ்க்கை!

 

பசி, உறக்கம் மறந்து, தன்னை மறந்திருந்தான்.  நினைவுகள் முழுமையும் அவளே!

 

‘இனி இந்தப் பக்கமே வரக்கூடாது!

 

கொஞ்சம் கொஞ்சமா, ஈவு இரக்கம் இல்லாம, கொல்லாம கொல்லுது மோகினி பிசாசு!

 

அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல மனம் அவனை உந்தியது.

 

நவீனாவின் வயது தற்போது பதினைந்து என்றாலும், உத்தேசமாக ‘இன்னும் இரண்டு வருடங்களில் நம்ம ஆளு வளந்துராது!என கணக்கிட்டவன் (மணத்திற்கு அல்ல, தங்களின் மனக்கலப்பிற்கு) அதையே மாதங்களாக மாற்றிப் பார்த்து ‘இருபத்தி நாலு மாசம் இன்னும் பொறுக்கனுமா! என மாய்ந்து போனான். மொத்தத்தில் மனம் சோர்ந்து போனான்.

 

‘நேத்து வந்த மோனிகாவோடெல்லாம் நல்லாத்தான் பேசுது!  நம்மைக் கண்டாதான், ஏதோ டிடெக்டிவ் கணக்கா பார்வைய வீசுது!

 

எட்டுக்கு எட்டு மாடி அறைக்குள் கிடந்த ஒற்றை நாடா கட்டிலை, மொட்டை மாடியில் எடுத்து வெளியில் போட்டு, மல்லாக்க படுத்திருந்த சங்கர் மனம் சடைக்க, வெறித்திருந்த வானை, வெறித்துப் பார்த்தபடியே, யோசித்திருந்தான்.

 

காற்று, நிலத்தின் ஈரத்தை தன்னோடு சேர்த்தபடியே, கைகோர்த்து வந்து, சங்கரின் தோலின் மேல் மோதியதில், மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றது.

 

எதையும் உணரும் நிலையில் சங்கர் இல்லை.

 

நவீனாவைத் தவிர வேறு அவன் நினைவில் இல்லை!

 

எண்ணங்கள் முழுவதிலும் நிரம்பியிருந்தவளை கருநீலவானின் வீதிகளுக்கு இடையே எண்ண அதிர்வுகளாக தானறியாமலேயே வீசியிருந்தான்.

 

எண்ணத்தின் வலிமை கணக்கிலடங்காதது!

 

அனுப்பியவரின் மனத்திணிவிற்கு ஏற்ப, பெறுபவரை(உரியவரை) மாற்றக் கூடிய வல்லமை பொருந்தியது அது!

 

ஆறு மாதங்களாக, தன் மனவானில் தோன்றியதை, பிரபஞ்ச வீதியில் விதைத்திருந்தான். யாருக்கும் இடங்கொடாமல் தனியொருத்தனே விதைத்ததன் பயனை அறுவடை செய்யக் காத்திருப்பதை அறியாமலேயே புலம்பியபடி படுத்திருந்தான் சங்கர்.

 

////

 

வந்தது முதலே, சங்கடப்பட்டு சங்கரைத் தவிர்க்க எண்ணியவளைத் தவிர்த்து, தவிக்க வைத்திருந்தான் சங்கர்.

 

தவிப்பிருந்தும், பெண்ணின் துடிப்பான பார்வையில், தவிர்த்து, பெண்ணைத் தவிக்க விட்டவனைக் கண்டவள் அறிந்துகொள்ளவில்லை,

 

தன்னைக் கண்டு கொண்டதால், பையன் பம்முகிறான் என்று!

 

தான் நினைத்தது நடக்காத, ஆனால் ஏமாற்றம் சூழ்ந்த மனது எதையோ எதிர்பார்த்தது. மன வெம்மையில் மனம் தடுமாறியிருந்தாள் நவீனா.

 

நடந்தது மாறியதில் மனம் வாடியது! காண விழிகள் தேடி, பார்வைக்கு வசப்படாதவனை எண்ணி ஏங்கத் துவங்கியது மனம்.

 

விதி!

 

தன்னை காணாதபோது காணத் தவிப்பதும்! காணும்போது கண்டுகொள்ளாமல் செல்வதும்! காதல் விதி!

 

பெண்ணிற்கும், நிறையச் சந்தேகங்கள்!

 

‘நான் கிணத்துல விழுந்ததுல, காப்பாத்த வந்து ஏதோ அவங்களுக்கு அடிபட்டு, பழசெல்லாம் மறந்துட்டுதா?

 

அவள் பார்த்த திரைப்படங்களின் கதையமைப்பு, அவளின் மனதைக் குழப்பி, இன்பம் கண்டது.

 

‘எப்பப் பாத்தாலும், நம்ம பின்னாடியே வந்து கண்கொத்திப் பாம்பு கணக்கா திரியற அவங்க பார்வையில திடும்னு என்ன கோளாறு வந்தது?

 

சங்கரின் கடைக்கண் பார்வைகூட தன்னைப் பாராமல் மாறியிருந்ததில், ஏனோ மனதில் புதிய பாரம் பெண்ணுக்குள் புகுந்திருந்தது.

 

ஏமாற்றம் ஏகத்திற்கு மனதில் குடிவந்திருந்தது.

 

‘கவனம், கவனம்னு நம்மைச் சொன்ன வாயி! இப்ப கவனத்தோட வாயத் திறக்காம நம்மைத் தவிர்த்தபடி இருக்க என்ன காரணம்?

 

சேரன் பாண்டியன் படத்தில் வரும் சரத்குமாரை நினைவுபடுத்தும் சாயலில், காண்பவரை ரசிக்கத் தூண்டும் மீசையுடன், கார்மேகத்தின் வண்ணத்தில், அலையலையான கேசத்தோடு, படத்தில் வரும் சரத்குமாரை விட இன்னும் இளமையாக, வீட்டில் வெள்ளை வேட்டி சட்டையில், இளநகையோடு உலா வருபவனை பிடிக்காத பெண்ணும் இருப்பாளோ!

 

பெண்ணறியாத ரகசியம் அவளிடம் புதையலாக, அவள் அறியாமலேயே வளரத் துவங்கியது!

 

கள்ளம் மனதில் புகுந்து, பெண்ணை இம்சித்தது.

 

தேடாதபோது தேடித் திரிவதும்! தேடும்போது விலகி ஓடுவதும் அதேவிதிதான்!

 

கண்டாலும்(தான்), (தன்னைக்)காணாத கண்களை எண்ணிக் கண்ணில் குளம் கட்டியது பெண்ணுக்கு!

 

வண்டாகக் குடைந்த மனதின் கேள்வியை, அன்றே கேட்டுவிடும் தீர்மானத்தோடு, மனதை சாந்தம் கொள்ளச் செய்திருந்தாள் நவீனா!

 

குமரி உள்ளம் பெற்றவளோ, உருவத்தைப் போலவே தனது செயலையும் குழந்தைபோல மாற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டாள்.

 

ஏமாற்றுவதும், ஏமாறுவதுமே காதல் விதியன்றோ!

 

நாடாமல், நாடி வரச் செய்வதும்

அதே விதிதான்!

காதல் விதி!

 

ஆனால் தெளிவாக… இது எதனால்? இதற்குப் பெயர் என்ன? என்று அவளுக்குள் எழுந்த உணர்வுகளை பிரித்தரிந்து, சரியாக உணர முடியாமல், தனக்குள் தவித்திருந்தாள் பெண்.

 

ஆனாலும் சங்கரின் நினைவுகளில் ஏதோ தனி சுகத்தை உணர்ந்தாள்.

 

குறிப்பறிந்து கொள்ளாதவாறு, குறிபார்த்து, மாற்றத்தை அறிய விழைந்தாள்.

 

ஐநாவின் திட்டமல்ல இது!

 

காதல் புகுந்து கொண்ட மனதின் கள்ளமான திட்டமது!

 

விதைத்தவன், விளைச்சலுக்குத் தயாராகவில்லை!  ஆனால் அவனது எண்ணத்தின் வலிமை கைகூட தொடங்கியிருந்தது.

 

விளைச்சல் வீட்டு வாசல் தேடி வரும் யோகம் இருந்தது அவனுக்கு!

———

 

மதுவோடு மயங்கிய நிலையில் பெரும்பாலும் இருக்கும் தாஸ், மகன் ஊருக்கு வந்துவிட்டால் தற்போது, சற்றுக் கட்டுப்பாட்டோடு இருக்க முனைந்தார்.

 

முதலில் சங்கரை ஒரு பொருட்டாக எண்ணாமல், அவரது மனம்போல வீட்டிற்குள்ளேயே, குட்டி பார் போல வகைவகையான பாட்டில்களோடு, நடு வீட்டில் அமர்ந்து குடித்தவரைக் கண்டவனுக்கு, சுள்ளெனக் கோபம் வந்திருந்தது.

 

“ஆத்தா!, என்ற சத்தத்தில் அங்கு வந்த அன்னம்மாள் என்னவென பேரனைப் பார்க்க

 

“இது நல்லாவா இருக்கு! நீங்க எதுவும் கண்டிச்சு சொல்ல மாட்டீங்களா?, என்று அன்னம்மாளை நோக்கி கண்களில் கனலோடு கேட்டான் சங்கர்.

 

அன்னம்மாள் ஸ்திரமாகச் சொல்லியிராதபோதும், அவரால் இயன்ற வகையில் மேம்போக்காக மகனைக் கண்டித்திருந்தார்.

 

தாயின் சொல்லை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்தவரை, அதற்குமேல் ஒன்றும் பேச இயலவில்லை.

 

கிராமம், நகரம் எதுவானாலும் பெண்களின் நிலை பெரும்பாலும் இதுதான்.

 

சொல்லிப் பார்த்து, மரியாதை இல்லாத இடத்தில், மரியாதையாக ஒதுங்கும் கூட்டம் ஒன்று! 

 

காலத்திற்கு காலாவதியான அறிவுரையை வாரி வழங்கி, தீர்ந்துபோன சரக்கை ஈடுகட்ட, சண்டை எனும் ஆயுதத்தில் தனக்குத் தானே சமாதானமாகும் கூட்டம் மற்றொன்று!

 

அன்னம்மாள் முதல் ரகம்!

 

குடி என்று மகன் துவங்கி, அவர் துவண்டு தூங்கும்வரை, அந்தப் பக்கம் வந்து செல்வதையேத் தவிர்த்திருந்தார் அன்னம்மாள்.

 

வயதான நிலையில் அவரால் செய்ய முடிந்தது அவ்வளவே!

 

சங்கர் வந்திருந்த நிலையில், அவனைக் கண்டுகொள்ளாமல், ‘நாந்தாண்டா இங்க எல்லாமே, என ராஜசேகர் பட டைட்டில்போல நடந்து கொள்ள ஆரம்பித்தவரை, ஆராய்ச்சியோடு அணுகி, ஆட்டம் பாமை வார்த்தைகளில் வைத்திருந்தான் சங்கர்.

 

நீண்ட நேரம் தாஸின் நடவடிக்கைகளை கவனித்தவாறே நின்றவன், அவர் எதிர்பாரா தருணத்தில் எதிரில் வந்து நின்றான்.

 

தனது வயதிற்கு பெரியவரைப் பேசுவதற்குமுன் சற்று ஆழ்ந்து யோசித்தவன், ஆத்தா அன்னம்மாளை அழைத்தான்.

 

வந்தவரிடம், “என்னவாம் இப்டி, என்று கேள்வியை அங்கு வைக்க

 

பதில் பேசாது பம்மியவரைக் கண்டு,

 

‘மகன்னு வந்துட்டா நியாயம், அநியாயம் பிரிச்சு சொல்ல மறந்துபோயிருதா ஆத்தா

 

வாயத் தொறக்க மாட்டீங்க!  அப்டித்தான?,  போங்க… நானே என்னனு பேசுட்டு வந்து உங்ககிட்ட சொல்றேன், என்று அவரை அங்கிருந்து அனுப்பி விட்டான்.

 

அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்த நிலையில், போதையில் அரைக் கண்ணில் பார்த்தபடியான தனது தோற்றத்தை மற்றவர்களுக்குக் காட்டி ஏமாற்ற நினைத்து அமர்ந்திருந்தவரை நோக்கி,

 

“நேரங்காலம், இடம் பொருள் பாக்கற பழக்கம் எதுவும் உங்களுக்குத் தெரியுமா? இல்லை அதெல்லாம் எதுவுமே தெரியாதா?

 

“…, மகனின் கேள்வி புரியாததுபோல பாவனையோடு, அதே நிலையில் அமர்ந்திருந்தார்.

 

“அப்பான்னா ஒவ்வொரு பிள்ளைக்கும், அவரோட ஆண்மை ததும்பின கம்பீர நடை, அன்பான அணைப்பு, பெருமிதம், உழைப்பு, இப்டிதான் நினைவுக்கு வரணும். 

 

ஆனா எனக்கு ‘அப்பாங்கற வார்த்தைய கேட்டா இதுவரை எதுவும் நினைவுக்கு வரலைங்கறதைவிட, நீங்களே என் நினைவுக்கு வரலை!, என்ற மகனின் வார்த்தை அவருக்கு சாட்டையடியாக தோன்றினாலும்,

 

“…, அதே நிலையில் அமர்ந்திருந்தார்.

 

 

“இப்டி பண்ணா அன்பெல்லாம் வராது! அருவெறுப்பு தான் வரும்! இனி இந்த வீட்டுக்குள்ள… இருக்கிறவங்களுக்கு, உங்கமேல அருவெறுப்பு வர அளவுக்கு நடந்துக்காதீங்க!

 

வயசுப் பையன் தப்பு பண்ணா, கூப்டு வச்சு கண்டிக்கற நிலையில நீங்க இருந்துகிட்டு, இவ்வளவு கேவலமான செயலை நடுக்கூடத்துல உக்காந்து செய்யறீங்க?  யாரும் கேக்க மாட்டாங்கங்கற தைரியத்தில செய்யறீங்களா?, என்ற வினாவை விட்டெறிந்திருந்தான் சங்கர்.

 

“…, அதற்குமேலும் நடிக்க இயலாமல், போதை இறங்கிய உணர்வில் திருதிருவென விழித்தவரைப் பார்த்தவன்,

 

“முட்ட முட்டக் குடிச்சிட்டு, தள்ளாட்டம் இல்லாம, வாய்க்கா வரப்புன்னு பத்து ஆளு வேலைய, ஒத்த ஆளா அசராமப் பாக்கற ஆம்பிளைங்க இருக்கிற ஊருல பிறந்தவன் நான்! 

 

உங்க நாடகத்தை நம்ப, வேற ஆளப்போயி பாருங்க!”, என்ற மகனின் வார்த்தையில், தலையை தரையைத் தொடுமளவிற்குத் தொங்கப் போட்டிருந்தார்.

 

“கோவில் மாதிரி வச்சிருக்கிற இடத்தை, குலநாசம் பண்ணனும்னு நினைச்சா, இனி நான் உங்களுக்கு எப்பவும் இல்லைங்கறதையும் மறந்துறாதீங்க!

 

சர்வீஸ்ல இருக்கும்போது உங்களுக்கு இதைத்தான் சொல்லிக் குடுத்தாங்களா?  உங்க மரியாதைய நீங்களே குறைக்கிறமாதிரி இந்த வீட்டுக்குள்ள எதுவும் இனி செய்யாதீங்க!

 

அப்டி மீறி செஞ்சா, இனி உங்களுக்கு எதுவும் இல்லை.  மரியாதையும் சேத்துதான் சொல்றேன்!, என்று பொறி பறக்கும்படி பேசியிருந்தான் சங்கர்.

 

மகனின் சத்தத்தைக் கேட்டு, அங்கு ஓடி வந்த சசிகலா, தாஸின் நிலையைக் கண்டு, மகனைத் தடுத்தார்.

 

“சங்கரு… அப்புறம் பேசு… இப்ப வேணாம்.  குடிச்சிட்டு இருக்கிறவருக்கு நீ பேசறது புரியவா போகுது, என்று இறங்கிய குரலில் கூறியபடியே மகனை இழுத்தார்.

 

“விடுங்கம்மா!, என்று தாயை உதறியவன்,

 

“எப்டியெல்லாம் ஒரு இமேஜை ஒன்னுமறியாத வீட்டுப் பொண்ணுங்ககிட்ட கிரியேட் பண்ணி, இப்டி ஜம்முனு வந்து உக்காந்து நடுக்கூடத்துல குடிக்கறீங்க! வெக்கமா இல்லையா?”, என்று தாஸைப் பார்த்துக் கேட்டிருந்தான் சங்கர்.

 

ஆம்பிளைத்தனங்கிற இது இல்லைனு என்னைக்குதான் புரிஞ்சுபாங்களோ இந்த மாதிரி மனுசங்க… தெரியலை! ச்சேய்ய்….”, என்று தந்தையைப் பார்த்துக் கூறியவன்

 

“எதுவும் தெரியாமல்லாம் போற அளவுக்கு, உங்க ஆளு மொடா குடியில்லை.  லோக்கல் பிராண்டா வாங்கி அடிக்கிறாரு!  எல்லா அளவோடதான் செய்யற மாதிரி தெரியுது.  நீங்கதான் அது தெரியாம ஏமாந்துட்டு இருக்கீங்க!, என்று தாயிடம் விளக்கியவன்,

 

அதற்குமேல் நிற்கவிடாமல் இழுத்த தாயிடமிருந்து திமிறி, “ஏக்கர் கணக்குல கிடக்கிற நிலத்துல, ஏகப்பட்ட வேலை இருக்கு!  இப்டி இங்க நடுக்கூடத்துல உக்காந்து, பொழுதன்னைக்கும் உருப்படாத வேலை எதாவது செய்யறதுக்கு, காட்டு மேட்டுல என்ன நடக்குதுனு போயி மேப்பார்வை பாருங்க!”, என்றுவிட்டு அங்கிருந்து அகன்றிருந்தான்.

 

மனிதருக்கு கொஞ்ச நஞ்சம் ஏறியிருந்த போதையும், மகனின் பேச்சில் முற்றிலும் குறைந்திருந்தது.

 

மோனிகாவும் அவளது பங்கிற்கு பேசியிருக்க, மனிதர் மனதிற்குள் அரண்டிருந்தார்.

 

அதுமுதலே மகன் அங்கு வந்தால், பாட்டில், வீட்டில் யார் கண்ணிலும்படாது.  மகன் சென்றுவிட்டால் இலேசா, கொஞ்சமா என்று எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக்கியிருந்தார் மனிதர்.

 

தீபாவளிக்கு வந்திருந்த மகனைக் கண்டதும், மீண்டும் நல்லவர் வேசம் போட்டிருந்தார்.

/////

 

நான்கு முறை சங்கரை அழைத்துப் பார்த்துவிட்டு, சாந்தனுவை மேலே அனுப்பியிருந்தார் சசி.

 

“இல்லைடா எனக்கு பசியில்லைனு அம்மாட்ட சொல்லு.  வேணுனா வந்து நானே போட்டு சாப்பிட்டுப்பேன், என்று கூறி தம்பியை அங்கிருந்து அனுப்பியிருந்தான்.

 

“குளிரலையாண்ணே… நிக்கவே முடியலை.  பெரியம்மா உன்னை ரூமுக்குள்ள போயி படுக்கச் சொன்னாங்க, என்றபடியே வந்த வேலை முடிந்தவுடன் இறங்கியிருந்தான் சாந்தனு.

 

சசிக்கு மகனைப் பற்றி தெரியும் ஆதலால், முன்கூட்டியே சாந்தனுவிடம் கூறி அனுப்பியிருந்தார்.

 

அதிகாலையில் எழுந்த களைப்பு அனைவர் முகத்திலும் இருக்க, மழைகால நேரமாதலால் விரைவில் அனைவரும் படுக்கைக்குச் சென்றிருந்தனர்.

 

நவீனாவும் சென்று படுத்திருந்தாள்.  காயத்திரியைப் பற்றி சிந்தனையோடு இருந்தவள், ‘இதுக்கு ஒரு நல்ல நாளுல நாம யாருனு லெசன் டீச் பண்ணனும்என்று நினைத்தவள்,

 

‘இன்னிக்கு ஆளு வந்துட்டு கம்முனு போயிருச்சு, இல்லைன்னா இந்த நவீனா யாருன்னு காட்டியிருப்பேன், என்று தனக்குத்தானே நினைத்திருந்தாள்.

 

அதிலிருந்து அடுத்து சங்கரைப் பற்றிய சிந்தனைக்குத் தாவியிருந்தாள் பெண்.

 

நீண்ட நேரம் உறக்கம் வராமல் படுக்கையில் இருந்தவள், ஏற்கனவே தான் எடுத்திருந்த சங்கல்பத்தை சங்கடப்பட்டு, மறுபரிசீலனை செய்தாள்.

 

நேரம் போனாலும், முடிவெடுக்க மனம் பயந்தது.  ஆனாலும் எதுவோ உந்த, சங்கல்பத்தை உண்மையாக்கும் முடிவோடு தனியாக மாடியை நோக்கி ஏறியிருந்தாள்.

 

பெண்ணின் மாடி ஏற்றத்தை, மனதில் ரிதமாக பதிவேற்றி வைத்திருந்தவனோ, பிரமையோ என நினைத்தபடியே படுத்திருந்தான்.

 

ரிதமாக எண்ணி ஒரு கனம் அசட்டையாக இருந்தவன், ‘ம்மா… பாசி என்ன இப்டி வழுக்குது, என்கிற பெண்ணின் குறைந்த குரலில் வந்த வார்த்தை கேட்டு,

 

‘இன்னேரத்தில இவ எதுக்கு இங்க வர்றா?, என்ற கேள்வியோடு, உடல் முழுவதும் கண்ணோடு, கண்ணை மட்டும் மூடிப் படுத்திருந்தான் சங்கர்.

 

மேலேறி வந்தவள், அணுக்கம் இல்லாமல் படுக்கையில் இருந்தவனை நெருங்கி, உறங்குவதாக எண்ணி அமைதியாக நின்று பார்த்திருந்தாள்.

 

‘லைட்டை ஆஃப் பண்ணாம விட்டுட்டோமே’, என்று வருந்தியவன், ‘உறங்குவதான பாவனையில் அசையாமல் கண்மணிகளை அசைக்காமல் இமை மூடிப்படுத்திருந்தான்.

 

‘என்னா குளிரு குளிருது.  இப்டி சொரணையில்லாம தூங்கறதை பாரேன்’, என எண்ணியபடியே,

 

“பண்ணையில இருக்கிற எருமை மாடுகளோட சேந்து, இவுகளும் இப்டி சொரணையில்லாம இங்க தூங்கறதைப்பாரு!, என்று தனக்குள் பேசியவாறே, உறங்குவதாக எண்ணியவனை மீண்டும் திரும்பிப் பார்த்தபடியே, பெருமூச்சொன்றை விட்டவாறு,

 

“ராக்கோழி கனக்கா தூங்காம இருப்பாங்கனு நினைச்சு வந்தா… அதுக்குள்ள தூங்கிட்டாங்கபோல!, என்று தனக்குள் பேசியபடியே கீழிறங்க படியை நோக்கித் திரும்பினாள்.

 

பெருமூச்சைக் கேட்டு, இமையை சற்று விரித்து, அரைக்கண் உறக்கத்தில் இருப்பதுபோல பார்த்தவன், நவீனாவின் பேச்சோடு, அங்கிருந்து அவள் அகல்வதைக் கண்டு,

 

‘என்னைப் பாக்கவா வந்தா? என்ற கேள்வியோடு, விசுக்கென எழுந்து, பாசியோட வந்த பகையினால் ஜாக்கிரதையாக பாதம் பதித்துச் சென்றவளின் முன் ஓடிப்போய் நின்றிருந்தான்.

 

அன்னேரத்தில் எழுந்து தன்முன் வருவான் என்பதை யோசியாமல் வந்தவள்முன், வந்து நின்றவனைக் கண்டு பயந்து விலகியவள்,

 

“த்தூ… த்தூ, என்று மறுபுறம் திரும்பித் துப்பினாள்.

 

“ச்சேய்… பயந்துட்டேன்…!, என்று ஒரு கனம் இதயத்தைப் பிடித்து தன்னை நிதானப்படுத்தியவாறு,  

 

“எதுக்கு இப்டி திடுதிப்புன்னு ஓடிவந்து முன்னாடி நின்னு பயமுறுத்தினீங்க!, என்று முறைத்தபடியே சங்கரைக் கேட்டிருந்தாள்.

 

“முகத்தைப் பாத்தா… அப்டியெல்லாம் ஒன்னும் பயந்த மாதிரி தெரியலையே!, என்று பெண்ணின் முகத்தை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.

 

அத்தோடு யோசனையை தொடர்ந்தவாறே, “எதுக்கு இப்ப இங்க வந்த?”, துளைத்தவனின் பார்வைக்கு, பார்வையை தணித்திருந்தாள்.

 

“முனி கணக்கா வந்து முன்னாடி நின்னுட்டு… பயந்த மாதிரி தெரியலைனா சொல்லுறீங்க… உங்களுக்கு நான் சொல்றதெல்லாம் விளையாட்டா, நம்ப முடியாமத்தான் இருக்கும்!

 

பயந்த எனக்குத்தானே தெரியும், திடுதிப்புன்னு வந்து நின்னதுமில்லாம, சொன்னதை நம்பாம நக்கல் பண்ணிக்கிட்டு, என்று குற்றம் சுமத்தும் குரலில் கூறியவள்,

 

“இவருக்கு மட்டும் இங்க பட்டா போட்டுக் குடுத்த மாதிரி, இங்க எதுக்கு வந்த? ஏன்? எப்டி கேள்விமேல கேள்வியா கேட்டே என்னைக் கொன்னுருவீங்கபோல!, என்று அதேகுரலில் பேசினாள்.

 

“சரி… சரி வந்த விசயத்தைச் சொல்லு, மன ஆய்வு நடந்தது.

 

“ம்ம்… க்ளைமேட் எப்டி இருக்குனு பாத்துட்டுப் போயி,  டிடில மார்னிங் நீயூஸ்கு அப்டேட் குடுக்கலாம்னு வந்தேன், என்று கிண்டலாகச் சொல்லும்போதே,

 

‘அப்டேட் எல்லாம் இன்னும் புரியாமதான் இருக்கேன்.  இது வளருமுன்ன அப்டேட் பத்தியெல்லாம் பேசுது!

 

வீசிய காற்றில் பெண்ணின் வாயிலிருந்து, கீபோடில் அடிப்பது போல சத்தம் வந்தது.

 

(தந்தியடித்ததுனு இன்னும் எவ்வளவு நாளைக்கு சொல்லிட்டே இருக்கிறது?  அதான் ஒரு சேன்ஞ்சுக்கு கீபோர்ட் கொண்டு வந்தாச்சு)

 

“நம்பிட்டேன்…!, என்றவன், “சுண்டல் ரேஞ்சுல இருந்துகிட்டு, என்னையே கிண்டல் பண்ற?  எல்லாம் என் நேரம்.  சரி… வந்த விசயத்தை சொல்லு!, என்று பெண்ணை வினவினான்.

 

“நான் எதையும் சொல்லவெல்லாம் வரலை!, அசட்டையாக வார்த்தைகளை உதிர்த்தாள்.

 

“அப்போ!”, முகம் சுருக்கிக் கேட்டான்.

 

“கேக்க வந்தேன்!

——-

நவீனா, சங்கரிடம் கேட்க வந்தது என்ன?

 

அடுத்த அத்தியாயத்தில்…

//////////////