அனல் பார்வை 15🔥

அனல் பார்வை 15🔥

அருவி அவனை அணைத்ததில் அவனுக்குள் சொல்ல முடியாத உணர்வுகள்! இதுவரை அவன் அனுபவித்திராத சுகமான உணர்வுகள்! அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது திணறித்தான் போனான் அக்னி. அதுவும் அவளுடைய நெருக்கம், ஸ்பரிசம் அவனுக்குள் ஏதேதோ உணர்ச்சிகளை பெருக்க, அவனுடைய கைகளும் தானாக எழும்பி தன்னவளை அணைக்க முயன்றன.

ஆனால், அதற்குள் “ஹ்ர்ம்… ஹ்ர்ம்…” என்ற செறுமல் சத்தத்தில் இருவருமே நடப்பிற்கு வந்து சட்டென விலகி நின்றனர். அங்கு வாசலில் ராகவ் அருவியை முறைத்துக்கொண்டு நிற்க, ராகேஷோ இருவரையும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்திருந்தார்.

அக்னியோ அவரை பார்த்து திருதிருவென முழிக்க, முதல் முறை அருவியின் முகம் வெட்கத்தில் சற்று சிவந்து இருந்தது.

“அது மாமா… இவங்க என்னோட அமீகா(தோழி)” என்று அக்னி தடுமாறியபடி சொல்ல, ராகேஷோ, “ஃப்ரென்ட்?” என்று கேள்வியாக கேட்டவாறு இரு புருவங்களையும் உயர்த்திப் பார்த்தார்.

அவனோ பாவமாக முகத்தை வைக்க, அதில் வாய்விட்டு சிரித்தவர் அருவியிடம், “ஹெலோ, என்னோட பேரு ராகேஷ். ராகவ்வோட மாமா. இதோ இந்த பையனுக்கும் தான். உன் பெயரென்ன மா?” என்று கேட்க, அருவி சொல்ல வருவதற்குள் அக்னியே குறிக்கிட்டு, “தீ.. தீ அருவி” என்று ஒருவித பரவசமாக சொன்னான்.

அதில் சிரித்தவர், அவர்களை அழைத்து சோஃபாவில் அமர வைத்து பேச ஆரம்பிக்க, ராகவ் தான் எதிரே அமர்ந்திருந்த அருவியை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினான். ராகேஷோ அக்னியிடம் பேசிக்கொண்டே போக, அருவியின் பார்வையோ என்றும் இல்லாமல் அக்னியின் மீதே பதிந்திருந்தது.

ஏனோ அவளுக்கு அவனிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை. ஓரக்கண்ணால் அவனின் சிரிப்பு, அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இத்தனைநாள் தன் வளர்ப்பு தாயின் மறுசாயலாக மட்டுமே அக்னியை பார்த்திருந்தவள், இன்று தான் முதல் முறை புதுவித உணர்வுடன் அவனை ரசிக்க ஆரம்பித்திருந்தாள். ஏனோ தன்னவனின் அருகாமை அவளுள் இனம்புரியாத உணர்வை தோற்றுவிக்க, அந்த சுகமான உணர்வுகள் அவளை மேலும் நெருங்க சொல்லியது அவனிடம்.

‘எனக்கு என்னாச்சு? வித்தியாசமான ஃபீலிங் ஆ இருக்கே… மூனு நாள் தானே பார்க்காம இருந்தேன். அதுக்கே என்னை இப்படி போட்டு படுத்துறானே… ஐயோ! எனக்கு என்னென்னமோ தோணுதே…’ என்று மானசீகமாக புலம்பியவாறு அருவி அவனை ஓரக்கண்ணால் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, ராகவ்விற்கு தான் அருவியின் பார்வையில் வயிறு பற்றி எரிந்தது.

‘என்ன இவ பட்டிக்காட்டான் லொலிபோப் கடைய பார்த்த மாதிரி அவனை இப்படி பார்த்துக்கிட்டு இருக்கா. இந்த முரட்டு முட்டாளும் அவ பார்க்குறது கூட தெரியாது மாமா கூட பேசிக்கிட்டு இருக்கான். ஆனாலும், இவ பார்வை சரியில்லையே… இது நல்லதுக்கில்ல.’ என்று தீவிரமாக யோசித்த ராகவ், அவளின் பார்வையை கலைக்கவென “ஹர்ம்… ஹ்ர்ம்…” என்று தொண்டையை செறும, அருவியை தவிர மற்ற இருவருமே அவனை திரும்பிப் பார்த்தனர்.

அருவி அப்போதும் அக்னியையே பார்த்திருக்க, ‘இவள…’ என்று பல்லைக்கடித்த ராகவ் தன்னை கேள்வியாக பார்த்திருந்தவர்களிடம், “ஹிஹிஹி… ஒன்னுஇல்ல.” என்று சொன்னவாறு அப்போது தான் ராகேஷ் அக்னியுடன் பேசிக்கொண்டிருந்த விடயத்தை கவனித்தான்.

“உனக்கு இங்க பழகிருச்சா ப்பா? நீ வேணா என் கூட வர்றீயா? நான் எப்போவும் ஒரே இடத்துல இருக்க மாட்டேன். என்னோட தேடல் ரொம்ப பெருசு. உனக்கு கூட ரொம்ப பிடிக்கும். நிறைய விஷயங்களை கத்துக்கலாம். உன்னை நாங்க அந்த இடத்துல…” என்று ராகேஷ் ஏதோ சொல்ல வர, ராகவ்வோ பதறிவிட்டான்.

‘எங்கு தன் மாமா அக்னியை அழைத்து வந்த இடத்தை பற்றி அருவியின் முன் கூறிவிடுவாரோ? அவளுடைய கேள்விகளுக்கு ஆளாகி விடுவோமோ?’ என்று பயந்தவன், அவர் மேலே பேச வருவதற்குள் அவர் கையை அழுத்தி பிடித்து அருவியை ஓரக்கண்ணால் காட்டினான். அவரும் ராகவ்வின் முகபாவனையை உணர்ந்து பேச்சை மாற்ற, அக்னிக்கோ ஒன்றுமே புரியவில்லை.

ஆனால், அவர் பேசியிருந்தால் கூட நம் நாயகியின் காதில் விழுவது சந்தேகம் தான். அவள் தான் இந்த உலகிலே இல்லையே… ராகேஷ் பேசிவிட்டு வேலை விடயமாக வெளியே சென்றுவிட, அப்போது தான் தன்னவளின் புறம் திரும்பிய அக்னி, “தீ…” என்று அவளை அழைக்க, அவளுக்கு அது கேட்டால் தானே!

அவளின் தோளை பற்றி “தீ…” என்று அவன் உலுக்கியதும் தான் நடப்புக்கு வந்தவள், மயக்கத்திலிருந்து விழித்தது போல் “ஆங்… சொல்.. சொல்லு மஹி.” என்று பதட்டமாக சொல்ல, அவளை மேலிருந்து கீழ் விசித்திரமாக பார்த்தான் அவன்.

“சாப்பிட்டியா தீ? ராகு டோச பண்ணியிருக்கான். ரொம்ப நல்லாருக்கும். சூப்பரா பண்ணுவான்.” என்று அக்னி சிலாகித்துச் சொல்ல, ‘க்கும்! தோசையே வாயில நுழையல்ல. இதுல எனக்கு ரெகமென்டேஷன் வேற… இவ சாப்பிடலன்னு இப்போ யாரு அழுதா?’ என்று மானசீகமாக நொடிந்துக் கொண்டான் ராகவ்.

“அது… அது வந்து… வேணாம்.” என்று அவன் முகத்தை பார்க்க முடியாது திக்கித்திணறி சொன்னவள் சட்டென, “சரக்கு அடிக்கலாமா?” என்று கேட்க, அக்னி அதிர்ந்தானோ, இல்லையோ? ராகவ் தான் பொங்கிவிட்டான்.

“ஏய்! நீதான் கெட்டு குட்டிச்சுவராட்டம் போயிட்டேன்னா, என் ஆகுவ ஏன் கெடுக்குற? உனக்கு வேணும்னா நீ போய் குடிச்சி மட்டையாகு!” என்று ராகவ் திட்ட, தன் நண்பனை அதட்டிய அக்னி தன்னவளின் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பி, “என்னாச்சு தீ? ஏன் ஒரு மாதிரி இருக்க? நீ இன்னும் அந்த போதைய விடல்லையா?” என்று மென்மையாகவே கேட்டான்.

அவளுக்கோ அவனின் நெருக்கத்தில் மூச்சு தான் முட்டியது. அவன் முகத்தை பார்க்காது அவளின் கண்கள் அலைபாய, “என் கண்ண பாரு ஜானு.”  என்ற அக்னியின் குரலில் அவனின் கண்களோடு கண்களை கலக்கவிட்டவளின் இதயமோ எகிறி குதித்தது.

‘டேய் ஏன்டா என்னை கொல்லுற? முடியலடா என்னால. ஐயோ! என்னால இந்த ஃபீலிங்க்ஸ் அ கன்ட்ரோல் பண்ண முடியல்லையே… தீ முகத்துல எதையும் காட்டிராத! கன்ட்ரோல் யூவர் செல்ஃப்! கன்ட்ரோல் யூவர் செல்ஃப்!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளுக்கு அவனின் பார்வையை தான் எதிர்க்கொள்ள முடியவில்லை.

பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டவள், “அது… எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு மஹி. நான் இப்போ கிளம்பிறேன்.” என்று திக்கித்திணறி சொல்ல, அவளை நெருங்கி அமர்ந்தவன் அவளின் கன்னத்தை தாங்கி தன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

அருவியோ அந்த முத்தத்தில் லயித்து கண்களை அழுந்த மூட, அவளிடமிருந்து விலகிய அக்னி, “ஜானு, இப்போ எப்படி இருக்கு?” என்று கண்கள் மின்ன கேட்க, அவளுக்கு தான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

‘டேய் இடியட்! என் ஃபீலிங்க்ஸ்ஸோட இப்படி விளையாடுறியே… அய்யோ! என் ஹார்மோன் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு தாறுமாறா எகிறி குதிக்குதே… தீ எஸ்கேப்பு…’ என்று மானசீகமாக புலம்பியவள், சட்டென்று எழுந்து நின்று விறுவிறுவென வாசலை நோக்கி சென்றாள்.

“தீ… தீ…” என்ற அக்னியின் குரலுக்கு கூட நிற்காது விறுவிறுவென அவள் வெளியேற, ராகவ்வோ ‘சரக்கடிக்காமலே போதையேறின மாதிரி நடந்துக்குறா’ என்று நினைத்தவாறு பார்த்தான் என்றால், அக்னியோ போகும் அவளையே ‘ஙே’ என்று பார்த்து வைத்தான்.

அடுத்தநாள்,

மோகனாவும், தாரக்கும் ஹோல் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அதை மாடியிலிருந்து உதட்டை சுழித்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி. ‘என்ன அதிசயமா இந்த பொம்பள ஹிட்லர் வெளில கிளம்பாம  வீட்ல இருக்கு. ச்சே…’ என்று சலித்தவாறு அறைக்குள் நுழைந்தவளுக்கோ அக்னியின் நினைவு தான்.

அக்னியின் நினைவில் வெளியில் செல்ல பிடிக்காமல் ஹோல் சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கலாம் என்று மாடியிலிருந்து இறங்க போனவள், அப்போது தான் ஹோலில் மோகனா இருப்பதை பார்த்து அறைக்குள் வந்துவிட்டாள்.

‘இன்னைக்கு என்ன ஆனாலும் சரி, அவனை பார்க்க மட்டும் போக கூடாது. எப்பா சாமி! என்ன ஒரு ஃபீலிங்க்ஸ்? சுத்தமா நம்மள கன்ட்ரோல் பண்ணவே முடியல.’ என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு  ஒரு எண்ணிலிருந்து ஒரு கண்காட்சி தொடர்பாக தகவல் வர, அதைப்பார்த்தவளுக்கு அக்னி தான் சட்டென நியாபகத்திற்கு வந்தான்.

ஆனாலும், அடுத்த நிமிடமே யோசனைக்கு தாவியவள், ‘நோ… நோ… தீ அவனை பார்க்க போகவே கூடாது. அவன் பக்கத்துல போனாலே ஏதோ ஆகுது. முடிவு எடுத்தது எடுத்தது தான். போ..க கூடா..து.’ என்று கடைசி வார்த்தைகளை மட்டும் அழுத்தி நீட்டி சொன்னவள் அடுத்த அரைமணி நேரத்தில் தன்னவனை காண தயாராகி கண்ணாடி முன் நின்றிருந்தாள்.

கண்ணாடியில் தன்னை தானே பார்த்து ‘தூ’ என்று சலிப்பாக துப்பிக் கொண்ட அருவி, அப்போதும் ‘அவன் முன் தான் அழகாக இருப்பேனா?’ என்ற சந்தேகத்தில் பத்து தடவைக்கு மேல் கதவை வரை சென்று, திரும்பி கண்ணாடி முன் வந்து நின்று தன்னை பார்த்துக் கொண்டாள்.

மாடியிலிருந்து இறங்கியவள் மோகனாவை கண்டும் காணாதது போல் செல்ல எத்தனிக்க, “கண்ட கண்ட நேரத்துல வந்து போறதுக்கு இது ஒன்னும் ஹோட்டல் கிடையாது. இருக்குறதுன்னா ஒழுங்கா இருக்க சொல்லு.” என்ற மோகனாவின் குத்தல் பேச்சில் சற்று நின்றவள் திரும்பி தாரக்கை முறைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்.

“ஏன் பெரியம்மா? அவ அப்படி இருக்குறதுக்கான காரணம் உங்களுக்கு தெரியாதா என்ன? நீங்களும் ஏன் இப்படி பண்றீங்க?” என்ற தாரக், மோகனாவின் அருவி மீதான பார்வையில் தெரிந்த வலியை காணாது தான் போனான்.

ராகவ்வின் வீட்டுக்கு வந்தவள், அவள் பாட்டிற்கு கதவை திறந்துக்கொண்டு நுழைந்து அங்கு சோஃபாவில் அமர்ந்திருந்த ராகவ்விடம், “ஏய் சாகு, எங்க உன் ஆகு?” என்று கேலியாக கேட்டவாறு தன்னவனை தேடி பார்வையை சுழலவிட, அவனோ அவளை முறைத்துவிட்டு குளியலறையை காட்டினான்.

“ஓஹோ…” என்ற அருவி அடுத்தகணமே தான் வந்த வேலையை பார்க்க துவங்கினாள். சுவற்றில் மாட்டியிருந்த அக்னியின் ஓவியங்களுக்கு அருகில் சென்றவள், ஒவ்வொன்றையும் ஆர்வமாக பார்க்க, அதில் ஒன்று அவளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

“திஸ் வன் இஸ் பெட்டர்!” என்று வாய்விட்டே சொன்னவாறு அந்த ஓவியத்தை எடுத்த அருவி, அதை தூக்கிக் கொண்டு அவள் பாட்டிற்கு வெளியேற எத்தனிக்க, “ஏய்… ஏய்… ஏய்…” என்று ஓடிவந்து அவள் கையிலிருந்ததை பிடுங்க  முயற்சித்தான் ராகவ்.

“ஏய் ராங்கி! அவனுக்கு அவனோட ட்ரோவிங்க்ஸ் அ மத்தவங்க தொட்டாலே பிடிக்காது. நீ என்ன பண்ற? உன்னை கொல்ல போறான் அவன்.” என்றவாறு ராகவ் அதை அவளிடமிருந்து பறிக்க முற்பட,  அவனை தள்ளிவிட்டவள், “சாகு, இப்போ நான் பண்ண போற வேலையால உன் ஃப்ரென்ட் செம்மயா ஹேப்பியாக போறான். வெயிட் என்ட் வோட்ச்.” என்றுவிட்டு அங்கிருந்து நகர, அவன் தான் சற்று பதறிவிட்டான்.

கூடவே ராகவ்விற்கு சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் தான் நியாபகத்திற்கு வந்தது. அக்னி பாதி வரைந்து வைத்திருந்த ஓவியத்தில் தெரியாமல் அவன் தன் கையில் வைத்திருந்த குளிர்பானத்தை கொட்டிவிட, அடுத்தகணம் தன் நண்பன் முறைத்த முறைப்பில் ஏசி குளிரிலும் ராகவ்விற்கு வியர்த்துவிட்டது. அதுமட்டுமா? கோபம் வந்தால் வீட்டிலிருக்கும் மொத்த பொருட்களையும் அல்லவா தூக்கிப் போட்டு உடைத்து விடுவான் அவன்!

இன்று இவளோ அக்னியின் அனுமதியின்றி அவனின் ஓவியத்தை வெளியே எடுத்துச் செல்ல, ‘என்ன நடக்கப் போகுதோ கடவுளே…’ என்று மானசீகமாக புலம்பிய ராகவ், “ராங்கி…” என்று பாவமாக அழைத்தான். அவளோ அதையெல்லாம் கண்டுக்காது, “ஏய் சாகு! அவன்கிட்ட எதுவும் சொல்லி தொலைச்சிராத! நான் தான் அவன்கிட்ட சப்ரைஸ் ஆ சொல்லுவேன்.” என்றுவிட்டு சென்றுவிட,

ஒருபக்கம் பயந்தாலும் மறுபக்கம், ‘போடி போ… கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடின. நாளைக்கு அவன் உன்னை பொழக்க போறான்.’ என்று சற்று குதூகலமாகவே நினைத்துக் கொண்டான் அவன்.

அன்று அருவிக்கு அக்னி அழைத்தாலும் அவளோ அவனை பேசவே விடாது ‘முக்கியமான வேலை இருப்பதாகவும், நாளை வருவதாகவும்’ கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட, அவனுக்கு தான் அவளை பார்க்காது முகமே வாடிவிட்டது.

ஏனோ அன்று முழுவதும் அவள் நினைவிலே அறையில் இருந்தவன், ஹோலிலிருந்து அவள் தன்னுடைய ஓவியத்தை எடுத்துச் சென்றதை அறியவேயில்லை. இரவு தூக்கம் வராது தன்னை திசைத்திருப்ப, அறையில் ஓவியம் வரைந்தவன், காலையில் அதை சுவற்றில் தொங்கவிட வந்த போதே சுவற்றில் இரு ஓவியங்களுக்கிடையே இருந்த அந்த பெரிய இடைவெளியை கவனித்தான்.

அதை பார்த்த அடுத்தநொடி வீடே அதிரும்படி, “ராகு…” என்று அவன் கத்திய கத்தலில் பாதி குளியலிலே டவலை கட்டிக்கொண்டு அவன் முன் பதட்டத்துடன் நின்றான் ராகவ்.

“இங்க இருந்த என்னோட ஓவியம் எங்க ராகு?” என்று அக்னி முறைத்தவாறு கேட்க, ராகவ்விற்கோ அவன் கேட்ட தொனியே சற்று பயம் துளிர்விடத் தான் செய்தது.

“அது அரு… அரு…” என்று சொல்ல வந்த ராகவ், கதவை திறந்துக்கொண்டு வந்த அருவியை பார்த்ததும், ‘பட்சி சிக்கிருச்சி…’ என்று நினைத்தவாறு பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டான். அக்னியிடம் ஓடி வந்த அருவி அவனின் கையை இறுகப்பற்றி, “மஹி, ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும். என் கூட வா!” என்று பதட்டமாக சொன்னவாறு இழுத்துச்செல்ல, அவளின் பதட்டமான முகத்தில் தன் ஓவியத்தை பற்றி மறந்தேவிட்டான் அக்னி.

“என்னாச்சு ஜானு?” என்றவாறு அக்னி அவள் இழுத்த இழுப்பிற்கு செல்ல, ராகவ் தான் ‘என்ன இவன் பொண்ண பார்த்ததும் பொசுக்குன்னு மாறிட்டான். மென் வில் பீ மென் தான் போல… அய்யய்யோ! நாமளும் அதானே…’ என்று கேவலமாக நினைத்து தனக்குத்தானே அசடுவழிந்து சிரித்துக்கொண்டான்.

அக்னி கேட்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாது தன் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றவள், அந்த கண்காட்சி நடக்கும் பெரிய மண்டபத்தின் முன் வண்டியை நிறுத்தினாள். அவனோ புரியாது அந்த இடத்தை நோக்க, அவனின் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள், அவனின் முகபாவனைகளை கூர்ந்து கவனிக்க, அந்த மண்டபம் முழுவதும் நிறைந்ததிருந்த ஓவியங்களை பார்த்து கண்களை அகல விரித்தான் அக்னி.

ஆனால், அடுத்தநொடி அங்கு பல ஓவியங்களுக்கு நடுவிலிருந்த அந்த ஒரு ஓவியத்தை பார்த்தவனின் நெற்றி நரம்புகள் கோபத்தில் புடைத்துக் கிளம்ப, பற்களை நரநரவென அவன் கடிக்கும் சத்தம் அவளுக்கு கேட்காமல் போய்விட்டது தான் தப்பாகிப்போனது.

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!