அழகியே 20

அழகியே 20

அழகு 20
 
மயூரியோடு அலைபேசியில் பேசிவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டான் வருண். சூடாகத் தேநீரும் கேக்கும் இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
 
விஷாகாவையும் குழந்தைகளையும் காணவில்லை. ஆனால் சத்தம் மட்டும் ஓர் அறையிலிருந்து கேட்டது. அந்த அறையை இவன் நோக்க,
 
“அது அம்மாவோட ரூம், சின்னவங்க ரெண்டு பேரும் எப்பப் பார்த்தாலும் அங்கதான் இருப்பாங்க, தூங்க மட்டுந்தான் என்னோட ரூமுக்கு வருவாங்க.” என்றாள் விளக்கம் சொல்வது போல.
 
“ஓ… அப்போ எதுக்கு ‘டேகெயார்’ ல பசங்களை விடுறே? அம்மா பார்த்துக்க மாட்டாங்களா?”
 
“அப்பிடியில்லை அத்தான், அது ப்ரைவேட் நர்சரி, சும்மா போய் ரெண்டு மணித்தியாலம் விளையாடிட்டு வருவாங்க, அம்மாக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணுமில்லை?”
 
“ம்…”
 
“அது கூட அம்மாக்கு விருப்பமில்லை, அந்த டூ அவர்ஸ் போறதுக்குள்ள என்னமோ இதுங்களை ரெண்டு நாள் பிரிஞ்சிருந்த மாதிரி ஸீனை போடுவாங்க.”
 
“ம்…” வருண் இப்போது புன்னகைத்தான்.
 
“எனக்கு ரொம்பத் தெரிஞ்சவங்கதான் அந்த நர்சரியை நடத்துறாங்க, அதால எனக்கும் பயமில்லை.”
 
“ம்…” அவன் டீயை குடித்து முடிக்க அந்த வீட்டில் இருந்த இன்னொரு அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள் மயூரி.
 
“நீங்க இந்த ரூம்ல தங்கிக்கோங்க அத்தான், நானும் பசங்களும் அம்மா ரூம்ல இருந்துக்கிறோம்.”
 
“நான் இங்க வந்தது உன்னோடவும் உம்பசங்களோடவும் தங்கத்தான்.” சட்டென்று அவன் சொல்ல மயூரி திகைத்துப் போனாள்.
 
“இங்க நிறைய ஸ்டார் ஹோட்டல் இருக்குன்னு சரவணன் சொன்னாரு, ஆனாலும் நான் இங்க வந்தது உன்னையும் உம்பசங்களையும் பார்க்கத்தான்.” பிள்ளைகள்… அவள் பிள்ளைகள் என்பதை அழுத்திச் சொன்னான் வருண்.
 
‘எங்களை நீங்க எதுக்குப் பார்க்கணும்?’ நுனி நாக்கு வரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டாள் மயூரி. வாழ்க்கையும் வயதும் நிதானத்தைக் கொஞ்சம் இப்போது கற்றுக் கொடுத்திருந்தது.
 
“எதுக்கு இவ்வளவு யோசனை?” அவன் கேட்டான்.
 
“இல்லை… அம்மா…”
 
“ஏன், உங்கம்மா விடமாட்டாங்களா? வயசுப் பையனையும் பொண்ணையும் தனியா இருக்க விடமாட்டாங்களா என்ன? தப்புத் தண்டா நடந்திடும்னா?” அவன் கேலியில் அவள் முகம் சிவந்து போனது. 
 
அந்த நாணத்தைச் சில நொடிகள் ரசித்துப் பார்த்தவன் சின்னதாக ஒரு சிரிப்போடு பாத்ரூமிற்குள் போனான். 
 
வீடு பார்ப்பதற்குப் பழையதாக இருந்தது. ஆனாலும் அதை மயூரி நவீனப்படுத்தி இருப்பது புரிந்தது. பாத்ரூம் புதிதாகக் கட்டி இருப்பாள் போலும்.
 
ஒரு குளியலைப் போட்டுவிட்டு வெளியே வந்த பிற்பாடும் குழந்தைகளையும், அதன் ஆச்சியையும் அவன் பார்க்கவில்லை.
ஆனால் அந்த ரூம் மட்டும் அமர்க்களப்பட்டது.
 
வருண் எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டுக்கு வெளியே இருந்த இடத்தில் வந்து நின்று கொண்டு ஃபோன் பேசினான்.
 
அக்கம்பக்கத்தில் ஒன்றிரண்டு தலைகள் இவனை நோக்குவதை அவனால் உணர முடிந்தது. ஆனாலும் அதை அவன் கண்டுகொள்ளவில்லை. 
 
அம்மாவை அழைத்து சிறிது நேரம் பேசினான். நண்பன் ஒருவனை அவசரமாகப் பார்க்க வந்திருப்பதாக அவரைச் சமாளித்தான்.
 
சரவணனை அழைத்து அவன் நலனையும் விசாரித்தான். வீட்டின் முன்னும் பின்னுமாக நிறைய இடம் இருக்க அதில் பொடி நடையாக சிறிது நேரம் உலவினான்.
 
“அத்தான் சாப்பிடலாமா?” மயூரி வந்து நின்ற போதுதான் நேரத்தைப் பார்த்தான், ஏழு மணி.
 
“இன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருக்கு இங்க, நாம அன்னைக்கு வந்தப்பவும் இப்பிடித்தான் இருந்துச்சு இல்லை?”
 
“ம்…” ஒரு சிரிப்போடு அவன் பேச்சை ஆதரித்த மயூரி உள்ளே திரும்பி நடந்தாள். வருணும் பின் தொடர்ந்தான். 
 
டைனிங் டேபிள் மேல் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது. அவனை உட்கார வைத்து அவள் பரிமாறினாள். இடியாப்பமும் இறைச்சிக் கறியும் இருந்தது.
 
“நைட்ல நீங்க ஹெவியா சாப்பிட மாட்டீங்கன்னு நான்தான் இதைப் பண்ணச் சொன்னேன் அத்தான்.”
 
“நோ ப்ராப்ளம், ரொம்ப நல்லா இருக்கு.” அவன் ருசித்துச் சாப்பிட்டான். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ராகினி வீட்டில் அடிக்கடி பாரம்பரிய உணவுகளைச் சமைப்பதால் அவனுக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
 
“நீயும் சாப்பிடு.”
 
“ம்…” ஒரு ப்ளேட்டோடு அவளும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
 
“உங்கம்மாவும் பசங்களும் சாப்பிட்டாச்சா?”
 
“ஆச்சு அத்தான்.” அதன்பிறகு இருவரும் தங்களுக்குத் தேவையானதைப் போட்டுக்கொண்டு அமைதியாகச் சாப்பிட்டு
முடித்தார்கள்.
 
வருண் சாப்பிட்டு முடித்த பின் சிறிது நேரம் நடப்பது வழக்கம் என்பதால் வீதியில் இறங்கி சிறிது தூரம் நடந்தான்.
 
ஆளில்லாத சாலையில், இருளில், லேசான குளிர்காற்று முகத்தில் மோத நடப்பது சுகமாக இருந்தது.
 
நடையை முடித்துக்கொண்டு வீட்டை நெருங்கும் போது உடலும் உள்ளமும் அமைதியாக இருப்பது போல இருந்தது.
 
ரோட்டில் சைக்கிளில் போன இரண்டு வாலிபர்கள் இவனைத் திரும்பிப் பார்த்தபடி போனார்கள். ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் இந்த மனிதன் யார் என்று எண்ணியிருப்பார்கள் போலும்.
 
வீட்டிற்குள் வந்தவன் ரூமை நெருங்கும் போது உள்ளே ஆர்ப்பாட்டம் பலமாக இருந்தது. மயூரியின் சத்தம் சற்றே உயர்ந்து கேட்க உள்ளே வந்தான். பாத்ரூம் ரெண்டு பட்டுக் கொண்டிருந்தது.
 
“அனு… நீ அடி வாங்கப்போறே அம்மாக்கிட்ட!” மயூரி யாரையோ மிரட்டிக் கொண்டிருந்தாள். வருண் பாத்ரூம் கதவருகில் வந்து நின்று உள்ளே பார்த்தான். 
 
அங்கே அவன் பார்த்த காட்சி அத்தனை அற்புதமாக இருந்தது. குழந்தைகள் இருவரும் படுக்கைக்குப் போவதற்கு முன்பாக உடம்பு கழுவிக்கொண்டு இருந்தார்கள்.
 
“அதான் அண்ணா சமத்தாக் குளிக்கிறான் இல்லை? நீ மட்டும் ஏன் இப்பிடி லூட்டி அடிக்கிற அனு?” போட்டிருந்த நைட்டி நனையாத வண்ணம் அதை லேசாக ஒதுக்கிக் கொண்டு குழந்தைகளோடு போராடிக் கொண்டிருந்தாள் மயூரி.
 
குழந்தைகளின் பார்வைத் தனக்குப் பின்னால் போகவும் மயூரி இப்போது திரும்பிப் பார்த்தாள். இயல்பாக அவள் முகத்தில் புன்னகைப் பூத்தது.
 
“பசங்கதான் எல்லா வீட்டுலயும் படுத்துவாங்க, ஆனா இங்க தலைகீழ் அத்தான்! தண்ணியைப் பார்த்துட்டா இவ போடுற ஆட்டம் இருக்கே!” புகார் வாசித்த மயூரி,
 
“போதும் போதும், நிறுத்து அனு.” என்று உத்தரவிட்டு விட்டு மகனை ஒரு டவலால் சுற்றி கட்டிலில் கொண்டு வந்து விட்டாள்.
 
“ஏய் இரு வர்றேன்!” வெளியே இருந்து குரல் கொடுத்த படியே அவசரமாக மீண்டும் பாத்ரூமிற்குள் போனாள். அவள் வெளியே வந்த போது மகளை டவலால் சுற்றி இருந்தாள்.
 
“அசையாம அப்பிடியே ரெண்டு பேரும் இருக்கணும்.” குழந்தைகளை மிரட்டியவள் கப்போர்ட்டைத் திறந்து அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆடைகளை எடுத்தாள். 
 
வருண் அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்த படி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் இரண்டையும் பார்க்கும் போது உள்ளுக்குள் எதுவோ அசைவது போலிருந்தது. 
 
மயூரி ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிவிக்கும் போது தங்கள் அறைக்குள் இருக்கும் அந்த புதிய மனிதனைப் பார்த்து ஆர்யன் தயங்கினான்.
 
ஆனால் அனிஷ்கா தாயின் பின்னால் நின்று கொண்டு வருணை எட்டிப் பார்த்தது. வருணுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு புன்னகையோடு குழந்தையை நோக்கி கையை நீட்டினான்.
 
இப்போது தன் தாயின் பின்னால் ஒளிந்து கொண்ட குழந்தை மீண்டும் அவனை எட்டிப் பார்த்தது. இந்த நாடகத்தை மயூரி கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை.
 
இரண்டு பெரிய கட்டில்களை ஒன்றாக இணைத்துப் போட்டிருந்ததாள் மயூரி.
 
குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி அப்படிச் செய்திருந்தாள். 
 
அனுவிற்கு வருணின் அருகில் செல்லத் தயக்கம் இருப்பதைப் புரிந்து கொண்ட மயூரி அவளைக் கட்டிலில் இருந்து இறக்கிக் கீழே விட்டாள்.
 
ஆர்யன் வருணை பார்த்து பயந்ததால் அவனை வற்புறுத்தாமல் எப்போதும் அவன் படுக்கும் இடத்தில் கொண்டு விட்டாள். கையில் அவனது டாயை கொடுக்க அதைக் கட்டிக்கொண்டு குழந்தை அந்தப் புதிய மனிதனைப் பார்வையிட்டது.
 
இது எப்போதும் நடப்பதுதான். ஆர்யன் சட்டென்று யாரிடமும் பழகிவிட மாட்டான். ஆனால் அந்தக் குட்டிப்பெண் அப்படியல்ல. 
 
தனக்குப் புதிதாக முளைத்திருக்கும் நான்கைந்து பற்களைக் காட்டிச் சிரிக்கும். எல்லோரையும் மயக்கும்.
மயூரியும் ஆண்பிள்ளைகள் போல அனுவிற்கு எப்போதும் உடைகள் அணிவிக்க மாட்டாள். அழகழகான சட்டைகள் அணிவிப்பாள். பார்க்கக் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கும்.
 
அந்தக் குட்டிப் பெண் பத்து நிமிடங்களே தன்னை விட வயது அதிகமாகக் கொண்ட அண்ணனை விட வெகு சாமர்த்தியமாக இருந்தது.
 
தன் அண்ணனால் புரிந்துகொள்ள முடியாத தங்கள் அப்பாவை அது புரிந்து கொண்டது போலும். மெதுவாக வருணிடம் வந்தது.
 
வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் வருணும் அந்தக் கணத்தை வெகுவாக எதிர்பார்த்திருப்பான் போலும்!
 
குழந்தை தன் அருகில் வரவும் அதைக் கலவரப்படுத்தாத வகையில் தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டான்.
 
புதிதாகத் தங்கள் குடும்பத்தோடு இணைந்திருந்த அந்த மனிதனைக் குழந்தை அண்ணார்ந்து பார்த்தது.
 
வருண் முதன்முதலாக அதன் பட்டுக் கன்னங்களில் முத்தம் வைத்தான்.
 
அந்தத் தொடுகை அதன் தாயை அவனுக்கு உணர்த்தி இருக்க வேண்டும்! சட்டென்று மயூரியை நிமிர்ந்து பார்த்தான். 
 
ஆர்யனின் அருகில் கால் நீட்டி அமர்ந்தபடி குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவள் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
“இவங்களை விட்டுட்டு எப்பிடி உன்னால வேலைக்குப் போக முடியுது?” சட்டென்று வருண் கேட்க மயூரி சிரித்தாள்.
 
“பொழைப்பைப் பார்க்கணுமில்லை அத்தான்.” மகனை கட்டிலின் நடுவில் போட்டு மயூரி ஒருபுறம் படுத்திருக்க, அதேபோல மகளை நடுவில் போட்டு இப்போது வருண் அந்தப் புறமாக வந்து படுத்துக் கொண்டான்.
 
“இந்தப் பொடுசு எல்லார்கிட்டயும் இப்பிடித்தான் ஒட்டிக்குமா?” தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மகனைப் பார்த்தபடி கேட்டான் வருண்.
 
“அவ விரலை எடுத்து விடுங்கத்தான்.” என்றாள் மயூரி. அப்போதுதான் அனுவை கவனித்தான் வருண். தனது வலது கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டு தூக்கத்திற்கு ஆயத்தமானது குழந்தை.
 
பார்த்த மாத்திரத்திலேயே வருணுக்கு சிரிப்பு வர சத்தமாகச் சிரித்துவிட்டான். அந்தச் சத்தத்தில் ஆர்யன் திடுக்கிட மயூரி குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
 
“ஓ… சாரி சாரி!” வருண் சட்டென்று தன் சத்தத்தைக் குறைத்துக் கொண்டான். 
 
ஆனால் அரைத் தூக்கத்தில் இருந்த அனு தன் அப்பாவின் சிரிப்பைக் கேட்டுத் தானும் சிரித்தது. 
 
“இதைப் புதுசாப் பழகி இருக்கா அத்தான்.” அனுவின் விரலைக் காட்டிச் சொன்னாள் மயூரி.
 
“சரி விடு, சின்னக் குழந்தைதானே!”
 
“பல்லு முன்னாடி வந்திரும்னு எல்லாரும் சொல்றாங்க.” அவள் கவலையாகச் சொல்ல வருண் சிரித்தான்.
 
“பல்லு முன்னாடி வந்தாலும் உம்பொண்ணு அழகாத்தான் இருப்பா, கவலைப்படாதே!” அவன் சமாதானம் சொல்கிறானா, இல்லை குத்திக்காட்டுகிறானா என்று மயூரிக்கு புரியவில்லை. பேச்சை லாவகமாகத் திருப்பினாள்.
 
“அந்த நர்சரிக்கு இப்ப ஒரு மாசமாத்தான் போறாங்க, அவங்க என்னோட ஃப்ரெண்டுதான்னாலும் இவங்களைச் சேர்த்துக்க முதல்ல ரொம்பத் தயங்கினாங்க.”
 
“ஏன்?”
 
“ரொம்பச் சின்னக் குழந்தைங்களா இருக்காங்க இல்லை.”
 
“ஓ…”
 
“ஆனா இந்தக் குட்டிப்பிசாசு அங்க போயும் இப்பிடித்தான் ரெண்டு வாட்டி பல்லைக் காட்டிச்சுது, அவங்க உடனே சேர்த்துக்கிட்டாங்க அத்தான்.” அலுத்துக் கொண்டாலும் அந்தத் தாயின் குரலில் பெருமை வழிந்தது.
வருண் குனிந்து அனிஷ்காவின் கன்னத்தில் முத்தம் வைத்தான். குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது.
 
“ஷாப்பிங் போனாலும் அப்பிடித்தான், போறவங்க வர்றவங்க எல்லாரும் நின்னு பார்த்துட்டுத்தான் போவாங்க, பொல்லாத ரௌடி, இத்தனைக்கும் ஆர்யன் இவளுக்கு எதிர்மாத்தம்.” 
 
“எங்கிட்ட வர மாட்டானா?” அவன் குரலில் ஏக்கம் இருந்தது.
 
“கொஞ்சம் டைம் எடுத்துக்குவான், ஆனா அதுக்கப்புறம் நல்லா ஒட்டிக்குவான்.” மயூரி சொல்ல, உன்னைப் போல ஒன்று என்னைப் போல ஒன்று என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் வருண்.
 
எழுந்து ஏசி யை குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் வைத்தவள் லைட்டை ஆஃப் பண்ணி விட்டுப் படுத்துக் கொண்டாள்.
 
“நைட்ல எந்திரிப்பாங்களா என்ன?”
 
“இல்லையில்லை, இப்போ தூங்கினா காலையில ஆறு மணிக்கு மேலதான் எந்திரிப்பாங்க.”
 
“ம்…” அதன் பிறகு வருணிடம் அசைவில்லை. கொஞ்ச நேரத்தில் அவன் சீராக மூச்சுவிடும் சத்தம் கேட்டது. மயூரி வெகு நேரம் கடந்துவந்த வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
 
***
 
அடுத்த நாள் காலை வருண் கண் விழித்த போது ஏழு மணி ஆகியிருந்தது. இருக்கும் இடம் புரிந்த போது முதலில் கண்கள் குழந்தைகளைத் தேடின.
 
ஆர்யன் பாட்டிலில் பால் அருந்திக் கொண்டிருந்தான். அந்தப் புதிய மனிதனோடு கைகோர்க்கும் எண்ணம் அவனுக்கு இன்னும் வரவில்லையோ என்னவோ! ஆனாலும் பார்வை வருணை துளைத்தது.
 
இவனுக்கு அடுத்தாற்போல அந்தப் பொடுசு கையில் பிஸ்கட்டை வைத்துக் கொண்டு கால்நீட்டி அமர்ந்திருந்தது. 
 
இவன் எழுந்து விட்டான் என்று புரியவும் இவனைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரித்தது. அந்தச் சிரிப்பில் மயங்கிய வருண் அப்படியே புரண்டு குழந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்தான்.
 
“குட் மார்னிங்.” குழந்தைக்கு அவன் காலை வணக்கம் சொல்ல அதுவும் இவனுக்கு மறுமொழி சொன்னது. ஆனால் என்ன சொன்னது என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.
 
“அவளோட குட்மார்னிங் அதுதான் அத்தான்.” விளக்கம் சொன்னபடி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் மயூரி. அனு இப்போது சிரித்தபடி வருணின் தலைமுடி ஒன்றிரண்டைப் பிடித்து இழுத்தது.
 
“அனு!” மயூரி சத்தமாக அதட்டினாள்.
 
“எதுக்கு நீ இப்போ குழந்தையை அதட்டுற?” வருணுக்கு கோபம் வர மயூரியை அதட்டினான்.
 
“உங்களுக்குத் தெரியாது அத்தான், எல்லாக் கெட்ட பழக்கத்தையும் ஒவ்வொன்னாக் கத்துக்கிறா, அன்னைக்கு நர்சரியிலயும் டீச்சரோட முடியை இப்பிடித்தான் இழுத்திருக்கா.” 
 
“குழந்தைங்கன்னா அப்பிடித்தான், நீ எல்லாத்துக்கும் அதட்டினா தன்னம்பிக்கை இல்லாமப் போயிடும்.” பத்துக் குழந்தைகள் வளர்த்தவன் போல் பேசினான் வருண்.
 
“எல்லாரும் செல்லம் குடுத்தா ஒருத்தராவது கண்டிக்க வேணாமா?”
 
“அதெல்லாம் வேணாம், நீ சும்மா கெட!” மயூரியை கணக்கில் கொள்ளாமல் இப்போது படுத்த வாக்கிலேயே கிடந்து அனுவின் வயிற்றில் வாயை வைத்து ஊதினான் வருண்.
 
கூச்சமாக உணர்ந்த குழந்தை பொங்கிச் சிரித்தது. பால் அருந்திக் கொண்டிருந்த ஆர்யனுக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்க வாயிலிருந்த பாட்டிலை எடுத்துவிட்டு சிரித்தான்.
 
பையனைத் தன் வழிக்குக் கொண்டு வர ஒரு யுக்தி கிடைத்து விட வருண் மெதுவாக நகர்ந்து சின்னவனுக்கும் அதே போல செய்தான். 
 
ஆர்யன் முகத்திலும் இப்போது சிரிப்பு பொங்க மயூரியும் சிரித்தபடி நகர்ந்து விட்டாள். அவள் மீண்டும் கையில் டீயோடு திரும்பி வந்த போது அந்த ரூம் வேறு ஒரு கோலத்தில் இருந்தது. 
 
கட்டிலில் குறுக்காக தன் முழு நீளத்துக்கும் வருண் குப்புறப் படுத்திருந்தான். அவன் முதுகில் அனு உட்கார்ந்திருந்தாள். தன்னிடம் இன்னும் முழுதாக நெருங்கத் தயங்கிய ஆர்யனிடம் ஏதோ படுத்தவாறு கதைப் பேசிக் கொண்டிருந்தான் வருண்.
 
“அத்தான் டீ.” மயூரி ஒருத்தி வந்ததே அங்கிருந்த மூவர் கண்ணுக்கும் தெரியவில்லை. அவர்கள் பாட்டில் இருந்தார்கள்.
 
“நர்சரிக்கு லேட்டாகுது அத்தான்.”
 
“நர்சரிக்கு இன்னைக்கு நீ லீவு சொல்லிடு.” இயல்பாகச் சொன்னவன் தன் மகனோடு இப்போது மீண்டும் பேச ஆரம்பித்து விட்டான்.
 
‘அடேயப்பா! அத்தானுக்கு இவ்வளவு பேச வருமா?!’ மனதுக்குள் வியந்தபடி டீயை அங்கிருந்த டேபிளில் வைத்தாள் மயூரி. 
 
“ஒரு நாள் கட் அடிச்சா அதுக்கே பழகிடுவாங்க அத்தான், கொஞ்ச நேரந்தானே போயிட்டு வரட்டுமே.” சொல்லிவிட்டு அவன் முதுகில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த அனுவை தூக்கிக் கொண்டாள்.
 
அதன்பிறகு அந்த இரண்டு வாண்டுகளையும் ரெடி பண்ணி காருக்குள் கொண்டு வைப்பதற்குள் மயூரி ஒரு நாட்டியமே ஆடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
விஷாகா வருண் பார்வையில் படவேயில்லை. பின்னணியில் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் காலை ஆகாரம் டைனிங் டேபிளில் இருந்தது.
 
இவர்கள் இருவரும் உண்டுவிட்டு ஒன்றாகவே கிளம்பிப் போனார்கள். ஆர்யன் இவனிடம் முழுதாக இன்னும் ஒட்டாததால் சின்னவளைத் தூக்கிக் கொண்டான் வருண்.
 
“அவளைக் கீழ விடுங்கத்தான், நடந்து வரட்டும்.”
 
“பாவம்… அவளுக்குக் கால் வலிக்கும் ப்ரதாயினி.” அவன் உருகி வழிய தலையில் அடித்துக் கொண்டாள் மயூரி. 
 
வெள்ளையில் சிவப்புப் பூக்கள் போட்ட கையில்லாத ஃப்ராக் அணிந்திருந்தாள் அனு. தலையில் சிவப்பு நிற பேன்ட். காலில் அதே சிவப்பு நிறத்தில் ஷூ. 
 
குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் வருண். இப்படி சின்னக் குழந்தைகளை அவன் பார்த்ததில்லை. கப்பலில் இரண்டொரு முறை கண்டிருக்கிறான். ஆனால் அருகில் போய் பேசிய அனுபவமெல்லாம் கிடையாது.
 
மயூரி நர்சரிக்குள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போக வருணும் பின்னோடு போனான். மயூரிக்கு அவன் காரிலேயே இருந்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது.
 
ஆனால் அவன் அவளோடு உள்ளே வந்து எல்லோருக்கும் ‘ஹாய்’ சொன்னான். குழந்தைகள் விளையாடுவதை இரண்டு நிமிடங்கள் நின்று பார்த்தான். பின் அவர்களுக்கு ‘பாய்’ சொன்னான்.
 
மயூரியால் எதையும் தடுக்க முடியவில்லை. அவனுக்கும் சிங்கள மொழி புரியும் என்பதால் எதையும் மாற்றியும் சொல்ல இயலவில்லை.
 
“மயூரி! மஹத்தயாத?” (கணவரா?) என்ற பெண்ணுக்குத் தலையை மட்டும் ஆட்டி ஆமென்றாள். வருண் எதையும் கண்டுகொள்ளவில்லை.
 
அவன் கவனம் முழுவதும் குழந்தைகளிடமே இருந்தது.
குழந்தைகளை விட்டுவிட்டு நேராகக் குன்றிற்குச் சென்றாள் மயூரி. அவன்தான் பேச வேண்டும் என்று நேற்றே சொன்னானே.
 
வருணும் அதைப் புரிந்து கொண்டது போல அமைதியாக இறங்கினான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் பக்கவாட்டுப் பாறை ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டார்கள்.
 
“சொல்லுங்க அத்தான், என்ன திடீர் விஜயம் சீகிரியக்கு?”
 
“………….” வருணிடம் அவள் முதல் கேள்விக்கே பதில் இல்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
 
“உங்கம்மா மூலமா நாங்க இங்கதான் இருக்கோம்னு உங்களுக்கு எப்பவோ தெரிஞ்சிருக்கும், அப்போ எல்லாம் வராத அத்தான் இப்போ எதுக்கு வந்திருக்காங்க?” வருண் இப்போதும் அமைதியாகவே இருந்தான். இரண்டு கூர் வாட்கள் மோதிக்கொள்வன போல இருந்தன அவர்கள் பார்வைப் பரிமாற்றம்.
 

Leave a Reply

error: Content is protected !!