ஆட்டம்-1
ஆட்டம்-1
ஆட்டம்-1
1994
பொள்ளாச்சி
சதுரங்க ஆட்டம் சந்திரஞ்சா, அஷ்டபாதா என இரு பெயர்களில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டது. இந்தியாவில் உருவான சந்திரஞ்சா காலப்போக்கில் சதுரங்க விளையாட்டாக மருவியது.
பொள்ளாச்சியில் உள்ள அந்த அரண்மனையின் மிகப்பகட்டான ராஜ அறை அது. அரண்மனையின் மிகப்பெரிய அறையும்கூட. அதன் நடுவே இருந்தது அந்தச் சதுரங்கப்பலகை.
வெறும் சதுரங்கப்பலகை அல்ல அது.
வெள்ளையன் வெளியேறும்போது இந்த அரண்மனையை ஆண்ட அரசருக்கு, அவரின் அறிவின் ஆற்றலையும் துணிவையும் வீரத்தையும் கண்டு வியந்து பரிசாகத் தந்துவிட்டுச் சென்ற, உலகிலேயே மிகத் தரமான விலையுயர்ந்தக் கல்லால் செய்யப்பட்டப் பலகை அது.
ஆட்டம் சில மணி நிமிடங்களுக்கு முன்பே தொடங்கியதற்கு அறிகுறியாக இரு பக்கமும், வீரர்களும் படைகளும் கலைந்திருந்தது. இரு ராணிகளும் முன்னேற்றப்பட்டிருந்தனர்.
ஒரு பக்கம் பொன்னால் ஆன சதுரங்கக் காய்களும், மறுபக்கம் வன்பொன்னும் (Platinum) வெள்ளியும் பிணைந்து ஆன சதுரங்கக் காய்களும் தங்கள் செழுமையையும் இராஜரீகத்தையும் எடுத்துரைக்கத் தனது பொன் ராணியை நகர்த்தியதுஒரு கரம். கரத்தின் சொந்தக்காரனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. விழியில் ஒரு துடிப்பு.
தனது ராணியை அவன் மறுபக்கம் நகர்த்தியிருக்க, மறுபக்கம் இருந்தவனும் தனது ராணியைப் பணயம் வைக்கத் துணிந்தான். அவன் விழியில் வாகையைத் தேடும் பளபளப்பு. எப்போதும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கும் ஒரு வெறி.
தனது இடதுகை பெருவிரலால் தனது வலது புருவத்தை வருடினான். அது அவனின் பழக்க வழக்கங்களில் ஒன்று. அவனுக்குத் தேவையானதை அடையும்போதோ அல்லது முக்கியமான நொடிகளிலோ அவன் இதைச் செய்வது வழக்கம்.
ஒரு கர்வப் புன்னகையுடன், தனது ராணியைத் தான் இழந்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையுடனும், இதழோரத்தில் தோன்றியப் புன்னகையுடனும் தனது வன்பொன் ராணியை எதிர்ப்பக்கம் நகர்த்தி வைத்தான் சித்தார்த் அபிமன்யு.
சித்தார்த் அபிமன்யு. ஏழு வயதை அடைந்த இந்த அரண்மனையின் மூத்த வாரிசு. முடிசூடாஅடுத்த அரசன்.
அதற்கே உடைய திமிரையும் நிமிர்வையும் இவ்வயதிலேயே மிக அதிகம் கொண்டவன். தன்னைச் சுற்றி நிகழும் சிறிய நிகழ்வைக் கூட காணாமலேயே அறிபவன்.
இவ்வயதிலேயே அளந்து பேசும் குணமும், எதிரில் இருப்பவரை எளிதில் எடை போடும் எண்ணமும், அடுத்தவரை ஆட்டி வைக்கும் திறமும்கொண்டு, எதிர்காலத்தில் தன் கண்ணசைவில் எதிரில் இருப்போரை இருக்கும் இடம் தெரியாது வைக்கப்போகும் இளம் சக்கரவர்த்தி.
அனைத்தும் அவன் பாட்டனாருடையப் பயிற்சி.
தனது ராணியை சித்தார்த் அபிமன்யு நகர்த்தியவுடன், எதிரில் இருந்தவனின் விழிகளில்ஒரு கூர்மை.
அவன் விக்ரம் அபிநந்தன்.
அபிமன்யுவின் சகோதரன்.
அபிமன்யுவின் தந்தையும் விக்ரமின் தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள்.
அபிமன்யுவை விட விக்ரம் நான்கு மாதம் சிறியவன்.
அவன் வேகம் என்றால் விக்ரம் விவேகம். சத்ரியவல்லமை அதிகம் வாய்ந்த தளபதி அவன். நுண்ணறிவு, சிந்தனை, கவனம், முடிவெடுத்தல், மதிப்பீடு, நினைவகம் அனைத்தும் ஒருங்கே அமைந்த சாணக்கியனின் புத்தி அவனுக்கு.
எதிர்காலத்தில் அனைவரையும் தன் முடிவால் கதிகலங்க வைக்கப் போகும் சத்ரியன்.
அடுத்த நகர்வுக்காக அவன் தனது கரத்தை, காயை நகர்த்த முடிவெடுக்க எடுத்தபோது, அரண்மனையின் கீழ் ஒரே பரபரப்பும், ஓங்கியச் சத்தமும்.
அடுத்த நொடியே தேக்கும் சந்தனமுமான நாற்காலியில் இருந்து எழுந்த இருவரும், வேகமாக அறையைவிட்டு வெளியேற, செல்லும் அவசரத்தில் தங்கள் ராணிகள் எதிர்ப்பக்கம் இருப்பதை மறந்தனர்.
இனித் தங்கள் ராணிகள் தங்களிடம் வர, பல வருடங்கள் ஆகும் என்பதை இந்த விளையாட்டு உணர்த்தியதை இருவருமே அறியவில்லை.
சிவப்புக் கம்பளம் விரித்திருந்த படிகளில் இருவரும் வேஷ்டி சட்டையில் ஓடி வர, மொத்த குடும்பமும் அங்கு கூடியிருந்தது.
இரண்டு மணி நேரத்திற்கு முன்...
அரண்மனை கல்யாண அலங்காரத்தில் ராஜகளையோடு ஜொலித்துக் கொண்டிருக்க, மேளங்களும் குதிரைப்படைகளும் வெளிநாட்டுகார்களும் கம்பீரமாக அரண்மனைக்கு வெளியே இருந்து தங்கள் செல்வாக்கை காட்டிக் கொண்டிருக்க, டிசம்பர் மாத காலைப்பொழுது ஐந்து மணி என்பதால், சிவகாசியில் இருந்து சிம்மவர்ம பூபதி வரவழைக்கப்பட்ட வானவேடிக்கை சிவப்பும் தங்கமும் பச்சையுமாக வானில் பூவாய்ச் சிதறி மின்ன, அன்று சுற்றியிருந்த ஊரில் இருந்த அனைவரும் எழுந்தது என்னவோ இதன் சத்தங்களில்தான்.
சிம்மவர்ம பூபதி தற்போது அந்த அரண்மனையின் முடிசூடா மன்னன். ஆளுக்கேற்றபெயர்.
சிம்மத்தின் கர்ஜனை, அதிகாரம், தோரணை, ஆணவம், கர்வம் அனைத்தும் ஒருங்கே தனக்கேச் சொந்தம் என்ற உரிமை கொண்டவர், தன்னிடம் ஒருவர் பேசுவதற்கே தகுதித் தராதரம் வேண்டும் என்று நினைப்பவர். எதிலும் விட்டுக் கொடுப்பவரும் கிடையாது அவர்.
வெள்ளையன் ஒருவன் தன் ஊர்ப் பெண்ணின் மீது கை வைக்க முனைந்ததிற்கே, அவனின் தலையை இரண்டு தலைமுறைக்கு முன் வெட்டி வீசிய பரம்பரை இது. வழிவழியாக வந்த வீரமும் சரி, கர்வமும் சரி வானைத் தொடும் அளவுக்கு ஏறியதே அன்றி சிறுதுளி கூடக் குறைந்தது கிடையாது.
சிம்மவர்ம பூபதி அந்தக் காலத்திலேயே வெளிநாடு சென்று படித்து வந்தவர் என்பதால், அவருக்கு அந்தச் செருக்கும் சற்று அதிகம்தான். அதுவே அவருக்கு அழகும்கூட. இன்றும் குறையாத வேகத்தையும் விவேகத்தையும் உயிராக வைத்திருப்பவர், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.
ஏன் உயிரினும் மேலாய் இருக்கும் செல்ல மகளுக்காகக் கூட, அவர் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.
பிடிவாதமும், வீம்பும் அவர் இரத்தத்தில் ஊறியிருக்க, கெளரவமும், வீராப்பும், தான் எங்கின்ற வெறியும் உடலெங்கும் பரவியிருக்க, இன்று மகளின் திருணத்தில் ராஜாவாக வளைய வந்து கொண்டிருந்தார் சிம்மவர்ம பூபதி.
அரண்மனையின் இரண்டாவது தளத்தில், வரவேற்பறையின் பொதுவான நூறு பேர் நிற்க கூடிய பால்கனி போன்ற அமைப்பில் நின்றுகொண்டு, வான வேடிக்கையைப் பார்த்தவரின் மீசைக்குக் கீழிருந்தத் தடித்த இதழ்கள் சிரிப்பில் விரிய, கணவரின் பல் வரிசை தெரியும் சிரிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த இமையரசி, இந்த வயதிலும் கணவரின் கம்பீரத்தையும், முகத்தில் மின்னிய தேஜஸையும் கண்டு ரசிகையாகினார்.
காதலுக்கும் ரசனைக்கும் வயது ஏது?
இமையரசி. மெய்யாலுமே அந்த அரண்மனையின் அரசிதான். பெண் பார்க்கச் சென்றபோது அந்த இமையழகில் வீழ்ந்தவர்தான் சிம்மவர்ம பூபதி. இன்றும் எழவில்லை.
தங்க நிறப் பட்டுப் புடவையில் நின்ற மனைவியைத் திரும்பிப் பார்த்தவர், “ஓஹ் இன்னிக்கு சிங்கிள் ப்ளீட்ஸா?” என்று கேட்டவர், “அழகா இருக்க அரசி” என்றிட, மேலே வான வேடிக்கையைப் பார்த்திருந்தவர் கணவனின் குரலிலும் சொற்களிலும் புன்னகைத்தபடியே அவரிடம் தலையைத் திருப்பினார்.
மனைவியைத் திரும்பிப் பார்த்தவர், “இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அரசி. நம்ம பொண்ணுக்கு கல்யாணம். அதுவும் அவளுக்கு புடிச்ச உன் தம்பி விஜயவர்தன் கூட. என் மாப்பிள்ளையோட. இந்த உலகத்துல என்னைவிட யாரும் சந்தோஷமா இருக்கவே முடியாது” சத்தமாக வானைப் பார்த்துக் கூறியவர், மனைவியைப் பார்க்க அவருக்கும் அதேதான் மனதில்.
இமையரசிக்கு இன்று மனம்விட்டு பேசும் கணவனைக் கண்டு மிகப் பிரமிப்பாய் இருந்தது. திருமணமான இத்தனை வருடங்களில் அவர் இப்படி பேசிக் கண்டில்லாதவர், இன்றுதான் கணவனை இப்படி காண்கிறார்.
புடவை முந்தியை முன்னேக் கொண்டு வந்தவர், “கல்யாணம் முடிஞ்சவுடனே நீராஜாவுக்கு சுத்திப் போடணும்ங்க. எல்லாரும் ரொம்ப அழகா இருக்காஅழகா இருக்கானு சொல்லியே என் காதை அடச்சுட்டாங்க. அதுவும் உங்க அத்தை ஒருபடி மேல போய், ராணி மாதிரி ஜொலிக்கறா உன் பொண்ணுனு சொல்லி… அப்பப்பா” என்றிட, மனைவியின் தோளின் மீது கைப்போட்டு அருகில் இழுத்தவர், “எம் பொண்ணு ராணிதான்டி” என்றார் கண்களில் வானளவு கர்வம் மின்ன, வார்த்தைகளில் கடலளவு பெருமை பொங்க.
கணவனின் விழிகளில் வழிந்த கர்வத்தைக் கண்டு இமையரசி புன்னகைக்க, “இனி என்னோட ட்ரெயினிங் எல்லாம் அபிமன்யுவும் விக்ரமும்தான்”அவர் முடிவாகக் கூற,
கணவனைவிட்டு விலகிய இமையரசி, கையெடுத்தே கும்பிட்டுவிட்டார்.
“இந்த அரண்மனைக்கு ஒரு சிம்மவர்ம பூபதி போதும். உங்கள பாத்து எல்லாரும் பயப்படறதே போதும். இப்பவே இரண்டு பேரும் உங்கள மாதிரியே பாக்கறாங்க, நடந்துக்கறாங்க. என் பசங்களே பரவாயில்லை. அதுவும் அபிமன்யு எல்லாரையும் இப்பவே அதட்டறான். விக்ரம் ஒரு பக்கம் எங்க என்ன பேசுனா என்ன நடக்கும்னு பண்றான். போதும் போதும் உங்களோட பயிற்சி” அவர் கொட்ட, மனைவி படபடப்புடன் பேசுவதைக் கண்டவர், மனைவியை ரசிக்கத் துவங்க, இந்த வயதிலும் கணவரின் பார்வையைக் கண்டவருக்கு பேசிக் கொண்டிருந்தது திக்கிவிட்டது.
“என்ன பார்வை இந்த வயசுல” சின்னக் குரலில் கேட்டவர் அவரின் பார்வையைத் தவிர்த்துவிட்டு வெளியே பார்க்கத் துவங்க, “என்னோட ஜீன் எல்லாமே என் பேரப் பசங்களுக்கு இருக்கும்டி. நான் சொல்லித் தரணும்னு அவசியமே இல்ல. என்னோட ரொமான்ஸ் மொதக்கொண்டு” அவர் மனைவியைப் பின் நின்று அவர் இருபக்க தோள்களிலும் கை வைத்தபடி கூற,
கணவனைத் திரும்பிப் பார்த்தவர், “பாவம் என் பேத்திக” என்று பேரன்களின் மனைவிகளை இப்போதே எண்ணிப் பாவமாக அவர் கூற, மனைவியின் மூக்கைப் பிடித்து ஆட்டியவர், “வர வர கிழவிக்கு வாய் அதிகமாகிடுச்சு” என்றார்.
பின்னே கல்யாணமானப் புதிதில் இவரின் மீசைக்குப் பயந்தே கணவனை நிமிர்ந்து பார்க்கவில்லை இமையரசி. சிம்மவர்ம பூபதிக்கு அவரை நிமிர வைக்கவே ஒரு திங்கள் கடந்துவிட்டது.
அதை இப்போது நினைத்து அவர் சிரிக்க, கணவரின் முகம் போனப் போக்கை வைத்தே கண்டுபிடித்து, நாணிச் சிவந்தவர் கணவரின் தோளில் தலைசாய, அத்தனை நிம்மதி இருவருக்கும்.
“இப்ப எல்லாம் அபியும் விக்கியும் சண்டைபோடற மாதிரியே முறைச்சிட்டு நிக்கறாங்க… பயமா இருக்குங்க இரண்டு பேரையும் நினைச்சா” இமையரசி இமை மூடியபடி கணவனிடம் முறையிட,
“அதெல்லாம் இந்த வயசுல இருக்கிறதுதான். நம்ம அரிமாவும் அதியரனும் கூடதான் அப்படி இருந்தாங்க. இப்ப அப்படி இல்லியே?” அவர் தேற்ற, “அரசி” என்று அழைத்தபடி சிம்மவர்ம பூபதியின் அத்தை வர,
“பெரியம்மா வர்றாங்க” என்றவர் கணவனிடம் இருந்து விலகினார்.
வந்தவர் இமையரசியை அழைத்துச் செல்ல, கீழே வந்தவர் மகளின் அறையை நோக்கிச் சென்றார்.
சிம்மவர்ம பூபதிக்கு இரட்டைச் சிங்கங்களாக இரண்டு மகன்கள். மூத்தவர் அரிமா பூபதி, இளையவர் அதியரன் பூபதி.
இராஜகளையும் வீரமும் இரு மகன்களுக்கும் குறையாது சிம்மவர்ம பூபதி தந்திருக்க, இரு மகன்களையும் வெளிநாட்டில் படிக்க அனுப்பியவர், இருவரும் நாடு திரும்பியப் பின், இருவரையும் சென்னையில் தொழில் தொடங்க வைத்தார்.
அதீத அறிவும் கற்பூர புத்திக்கூர்மையும் ராஜதொழில் யுக்தியும் இருவருக்கும் இயற்கையிலேயே இருக்க, மூன்றே வருடங்களில் தென்னிந்தியாவின் சிறந்த தொழில் அதிபர்கள் ஆனார்கள் இருவரும்.
அடுத்த வருடத்திலேயே அரிமா பூபதிக்கு அழகி என்ற பெண்ணைத் திருமணம் முடித்து வைத்தார் பெரியவர். பெயருக்கேற்றவள் அழகி. அந்தத் திருமணத்திலேயே அதியரனின் விழிகளும், அழகியின் தங்கையான கோதையின் விழிகளும் உரசிக்கொள்ள, அடுத்த வருடத்தில் அவர்களின் திருமணமும் முடிந்தது.
அடுத்த ஆறு மாதத்தில் சித்தார்த் அபிமன்யு பிறந்தான். அன்னையைப் படாதபாடு படுத்தியவன், எதற்கும் அஞ்சாத பாட்டனையே உள்ளுக்குள் அரண்டு போய் நடுநடுங்க வைத்துதான் பிறந்திருந்தான். இரண்டு உயிரில் ஒன்றை தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூற, அனைவரையும் அலற வைத்து பிறந்தவன், தன் தாயையும் காப்பாற்றினான்.
அடுத்த தலைமுறையின் மூத்த வாரிசு. அதுவும் சிம்மவர்ம பூபதியின் பிறந்தநாள் அன்றே பிறந்திருந்தான். சொல்லவா வேண்டும்?
அவனைக் கொஞ்சி கொஞ்சியே அந்தக் குட்டி அபிமன்யுவை அப்போதே கோபப்பட வைத்து, அவன் குட்டிக் கால்களில் உதை வாங்கிவிட்டனர்.
அடுத்த வருடத்திலேயே விக்ரம் அபிநந்தனும் பிறக்க, சிம்மவர்ம பூபதி, பேரன்களுடனே இருந்தார். இமையரசியைச் சொல்லத்தேவையில்லை.
சிம்மவர்ம பூபதிக்கும், இமையரசிக்கும் மகன்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த தங்கச்சிலை அவர்களது செல்ல மகள். நீரஜாசிம்மவர்ம பூபதி. ‘உலக அழகிப் போட்டிக்கு சென்றிருந்தால் வென்றிருப்பாளோ?’ என்று அனைவரும் யோசிக்கும் அளவுக்கு பிரம்மன் அவளுக்கு அழகை அள்ளித் தெளித்திருந்தார்.
சாமுத்ரிகா சாஸ்திர வகையில் பத்மினி வகையைச் சேர்ந்த நீரஜா, தன் பெயருக்கேற்ற தாமரை மலர் போலவும், லட்சுமி தேவியின் முக லட்சணமும் கொண்டு, எப்போதும் பொன் போன்று ஜாஜ்வல்லியமாக மின்னுபவர்.
கருவிழியை ஹனி ப்ரவுன் (Honey Brown) நிறம் கொண்டு பிறந்த நீரஜாவின் விழிகள் சிரித்தாலும் சரி, முறைத்தாலும் சரி, அவருக்கு முன் அவரின் வதனத்தில் பிரம்மன் செதுக்கியிருந்த அழகிய விழிகள் உணர்வுகளை பிரதிபலித்துவிடும். அன்னையைப் போன்ற இமையும், தந்தையைப் போன்றப் பார்வையும், அதிலிருந்த தேன் நிற விழியும், செந்தாமரை மலர்க்கண்ணில் இருந்து வரும் கதிரவனுக்குச் சமமான ஒளி வீச்சும், ஒருவரை அடக்கியே விடும்.
வதனத்திற்கு ஏற்ப விழிகள், விழிகளுக்கு ஏற்பபொட்டு வைக்க மட்டுமே இடம்விட்டு நெருக்கமாக நீண்டு, பெண்ணின் இடைபோல வளைந்துக் கூராக இறங்கிய புருவங்கள், தாமரை மொட்டுப் போன்ற எடுப்பான நாசி, பாலில் நனைத்து எடுத்தது போன்ற பஞ்சு கன்னங்கள், மலைத்தேன் குடியிருக்கும் பன்னீர் ரோஜா நிற இதழ்கள், அவர் ஐந்தரை அடி உயரத்திற்கு ஏற்ப நீண்டக் கழுத்து, அதற்குக் கீழே செதுக்கிய சிற்பக் கொடியாக உடல் வனப்பு, சிறு வயதில் இருந்து வாள் வீச்சு, சண்டைப்பயிற்சி கற்றுத் தேர்ந்ததிற்கு அடையாளமாக அந்த வனப்பினுள் தெரிந்த கம்பீரமும் தைரியமும் திடமும் எவைக்கு எவை அழகு என்றே தெரியாத அளவுக்கு முழு ஓவியம் அவர்.
“நீரஜா!” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்த இமையரசிக்கு, நீரஜா முதுகுக் காட்டி மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்திருந்தார். சுற்றியும்உறவுக்காரப் பெண்கள் அவளை மொய்த்துக் கொண்டிருந்தனர்.
“நீரஜா இத போட்டுக்க இல்ல இதப்போடு…” இரண்டு அண்ணிகளும் இரு பக்கமும் இரு வைரநெக்லஸை வைத்துக் கொண்டுச் சொல்ல,
“போதும் அண்ணி போதும். இந்த நகையே இனாஃப் (enough)” என்றார் நீரஜா. தற்போதுதான் மருத்துவம் படித்து முடித்த நீரஜாவுக்கு, தாய்மாமனோடு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
விஜயவர்தன், இமையரசியின் தம்பி. தம்பி என்றால் அதியரன் பூபதிக்கும் அவருக்கும் ஒரே வயதுதான். மகளுக்குத் திருமணமான பின்பு இமையரசியின் தாயிற்கு கரு உருவாக நான்கு மாதங்கள் வரை அவருக்கே தான் கருவுற்றிருப்பது தெரியவில்லை. அவர் தன் வயதின் காரணத்தால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.
நான்கு மாதங்களுக்குப் பிறகு தெரிந்த பின், என்ன செய்ய முடியும் என்று அவரும் அந்த வயதில் மகனைப் பெற்றெடுத்தார்.
சிறிய வயதில் தன்னிடம் குழந்தையாக வந்த மச்சான் என்பதால் சிம்மவர்ம பூபதிக்கு மச்சானின் மேல் அலாதி பிரியம். அவரும் மருத்துவம் படிக்க அவரைப் பார்த்துதான் நீரஜாவும், “நான் மாமா மாதிரியே எம்பிபிஎஸ் படிக்கறேன்” என்று படித்தது.
இருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் படிக்க, சிறிது நாளிலேயே மகளுக்கு மாமன் மேல் பிரியம் இருப்பதை மறைமுகமாக அறிந்துகொண்டார் சிம்மவர்ம பூபதி. முதுகலை முடித்து ஊருக்கு வந்த விஜயவர்தன், அவ்வப்போது சென்னை சென்று வந்தார்.
விஜயவர்தனின் போக்கை கவனித்த சிம்மவர்மபூபதி, மகளைப் பார்க்கத்தான் வர்தன் சென்னை செல்கிறான் என்று தெரிந்து கொண்டார். அதுவும் இருவரும் கடற்கரையில் வைத்து சந்தித்தது எல்லாம் அவர் காதுக்கு வந்தடைந்தது. மகள் படிப்பை முடித்தவுடன் திருமணம் என்று முடிவெடுத்தவர், இன்று இருவரின் ஆசைப்படியே திருமணத்தை ஏற்பாடும் செய்துவிட்டார்.
ஆசை மகள் எது கேட்டும், எதில் ஆசைப்பட்டும் அவர் மறுத்ததில்லையே!
“நீரஜா!” இமையரசியின் குரலில் பெண்கள் விலக அன்னையைத் திரும்பிப் பார்த்தார் நீரஜா.
அந்தக் காலத்திலேயே நீரஜாவிற்கு ட்ரை கலர் பட்டுப் புடவையை நெய்து கொடுத்திருந்தார் காஞ்சியில் இருந்த புகழ்பெற்ற நெசவாளர். வாடாமல்லி நிறத்தில் தங்க ஜரிகைகளோடு புடவை பெண்ணவளின் மாராப்பு பக்கம் தழுவி இருக்க, இடைக்குக் கீழே கதிரவன் காலையில் தன் கதிர்களைப் பரவச் செய்தது போன்ற ஆரஞ்சு வண்ணமும் சேலையை நனைத்திருக்க, மெரூன் நிறத்தில் மெய்பொன்னில் நெய்யப்பட்டிருந்தது பெரியப் பட்டையான கரை.
“அம்மா” என்று எழுந்து நின்ற நீரஜாவை, அன்னையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார். இளைய ராணிக்கே உண்டான கம்பீரமும், வதனத்தில் ஏறியிருந்த மிடுக்கும், எழுந்து நின்ற ராஜ தோரணையும் பரம்பரை பரம்பரையாக அவர்களின் வீரத்தைச் சொல்லாமல் சொல்ல, பிரமித்துப் போய் நின்றார் இமையரசி.
மகளின் அருகே அடியெடுத்து சென்றவர், “ரொம்ப அழகா இருக்க நீரஜா” என்றார் இமையரசி மகளின் தோள்களைப் பிடித்துக் கொண்டு.
இன்னும் இமையசைக்கவில்லை இமையரசி. பிரமிப்பும் அகலவில்லை.
அன்னை தன் பெயர் சொன்னதைக் கேட்ட நீரஜா அவரை பொய்யாய் முறைத்துவிட்டு, “நீரஜா சிம்மவர்ம பூபதி” என்றார் தலையைச் சற்று நிமிர்த்திக் கம்பீரமாக.
“இன்னும் கொஞ்ச நேரத்துல நீரஜா விஜயவர்தன்” என் இரு அண்ணிகளும் கேலி செய்ய,
“நெவர். எப்பவுமே நான் நீரஜா சிம்மவர்ம பூபதிதான். அப்பாவோட பேரை விட்டுத் தர மாட்டேன்” ஆள்காட்டி விரலை அசைத்து அவர் சொன்ன விதத்தில், அனைவரும் அசந்துதான் போயினர்.
“ம்கூம்” என்ற சிம்மவர்மரின் செருமலில், அனைவரும் திரும்ப, தந்தையைக் கண்ட அனைவரும் வாய் மூடி அமைதியாக நிற்பதைக் கண்ட நீரஜா, சாதாரணமாகச் சிரித்துக் கொண்டு தந்தையின் அருகே சென்றவர் தந்தையின் கால்களில் விழுந்து வணங்கி எழ, மகளை ஆசிர்வதித்தவர், மகளின் கைகளைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு அருகே நிற்க வைத்து, “என் பொண்ணு என்னை மாதிரி” என்றார் மீசையை அட்டகாசமாக முறுக்கியபடி.
“அரசி உன் தம்பி ரெடியான்னு பாரு. ஐயர் நேரம் ஆகிடுச்சுன்னு சொல்றாரு” அவர் கூற, தம்பியின் அறைக்குச் சென்றார் இமையரசி. சிறிய வயதில் இருந்து விஜயவர்தன் இங்கேயே வளர்ந்ததால், அவருக்கும் இவ்வீட்டு வாரிசுகளுக்கு உண்டான அனைத்து உரிமையும் உண்டு.
ஐந்து நிமிடத்தில் அறைக்குள் வந்த அதியரன் பூபதி தந்தையின் காதில் எதையோ கூற, அவரின் முகம் மாறியது. மகளிடம் சமாளித்துப் புன்னகைத்தவர் மருமகள்களிடம் மகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியேற அரைமணி நேரம் கடந்தது.
“ஐயோஓ!” என்ற இமையரசியின் அலறலில் அறைக்குள் இருந்த பெண்கள் அனைவரும் நெஞ்சம் அதிர வெளியேற, வெளியே வர எத்தனித்த நீரஜாவை, “நீ இங்கையே இரு நீரஜா” என்றனர் கோதையும் அழகியும். ஆனால், அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தும் நீரஜாவுக்கு கேட்காமல் இல்லை.
“இப்படி என் பொண்ணை ஏமாத்திட்டு போயிட்டானே” என்று கையிலிருந்த லெட்டரை வைத்துக்கொண்டு இமையரசி அழத் துவங்க, கூடியிருந்த உறவினர்கள் கூட்டம் அனைவருக்கும் ஓரளவு புரியத் துவங்கியது.
கணவனிடம் திரும்பிய இமையரசி, “என்னை மன்னிச்சிடுங்க” என்று கைக்கூப்பி, தம்பிக்காகக் கணவனிடம் மன்னிப்பை யாசித்தார். எங்கே உடன் பிறந்தவனுக்கு ஏதாவது கணவனால் ஆகிவிடுமோ என்று பயம்.
அதுவும் விஜயவர்தன் சென்றிருந்தது நீரஜாவின்நெருங்கிய தோழி ரஞ்சனியுடன்.
அனைவருக்கும் விஷயம் பரவ, அறைக்குள் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார் நீரஜா. சற்று நேரத்திற்கு முன் கூறிய, ‘எப்பவுமே நான் நீரஜாசிம்மவர்ம பூபதிதான்’ என்ற வாக்கியம் அவரைப்பார்த்து சிரித்தது.
எவ்வளவு ஆசையுடன் இந்த நாளை அவர் எதிர்பார்த்தார். ஆனால், இந்நாள் அவருக்கு இப்படியொரு கெடுதலைச் செய்திருக்க, அவரின் ஹனி ப்ரவுன் கருவிழிகள் வரை கண்ணீர் நிரம்பி தேங்கி நிற்க, அதற்கு மேல் முடியாமல் உடைந்துவிட்டார்.
ஏமாற்றத்தைச் சந்தித்திடாத நெஞ்சம் இன்று முதன்முதலாகக் காதலுக்காகக் கதறியது.
“கல்யாணம் நிக்க வேணாம். நம்ம சொந்தத்துல ஒரு பையனா இப்பவே பாத்து கல்யாணத்தை முடிங்க” யாரோ பேசுவது கேட்க, ஏற்கனவே உள்ளுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளின் விளைவாக அழுது கொண்டிருந்தவருக்கு இது செவியில் விழ, பிடிவாதமும் வீம்புமாக இருக்கையில் இருந்து புயலின் வேகத்தோடு எழுந்தார்.
கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு, கதவை அனைவரும் அதிரும் வண்ணம் படீரென்று திறந்துகொண்டு வெளியே வந்தவர் அனைவரையும் நேராகப் பார்த்து, “இதே முகூர்த்தத்துல வேற பையனை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறஅளவுக்கு எங்கப்பா பணம் இல்லாம இல்ல. அதே மாதிரி என் மனசு தெரியாதவரும் இல்ல” முகத்தில் அடித்தாற் போன்று அனைவருக்கும் சரியாகக் கூற,
“ஏம்மா நல்லது கெட்டது…” என்று சிலர் துவங்க,
“என்னோட வாழ்க்கைக்கு எது நல்லது கெட்டதுனு எங்க அப்பாக்கு தெரியும்” என்றவர் எதிர்பார்ப்போடு தந்தையைப் பார்த்தார்.
எப்போதும் கௌரவம் பார்ப்பவருக்கு மகளின் தேன் நிற விழிகள் அவளின் வேதனையையும், அந்த விழிகள் வழியாக அவள் வலியையும் உணர்ந்தவர், “என் பொண்ணு சொல்றதுதான். கல்யாணம் நின்னதுக்கு யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு என் பொண்ணு குறைஞ்சிடல”என்று கூற, பெண் சிங்கமாய் நிமிர்ந்து நின்றார் நீரஜா.
பெண்சிங்கமாய் அவர் கர்ஜனையோடும் தன்னம்பிக்கையோடும் நிற்க, அவரின் இரு பக்கமும் வந்து, அவரின் கைகளை ஒன்று உறுமலோடும் ஒன்று தோரணையோடும் இறுகப்பற்றி, வெறிகொண்ட இரட்டை வேங்கைகளாகச் சீறிக் கொண்டு ஆக்ரோஷத்துடன் நிற்க, எவருக்கும் அதை மீறிப் பேசத் துணிவில்லை.
சஞ்சலத்துடன் நின்றிருந்த சிம்மவர்ம பூபதி, மகளைக் கைவிடாது நின்றப் பேரன்களின் தோரணையையும், தன் அத்தைக்கு எதிராக எதிரில் நின்றிருப்பவர்களைப் பார்க்கும் கூர்பார்வையையும், யார் வந்தாலும் வருங்காலத்தில் அவர்களைத் தாண்டியே தன் மகளின் மீது கை வைக்க முடியும் என்பது, அவர்களின் செவ்வதனம் இறுகியிருந்த அழுத்தத்தையும் திமிரையும் கண்டவர், ‘தன் வளர்ப்பு பொய்யாகவில்லை’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தைரியமாய் நின்றார்.