ஆட்டம்-3

ஆட்டம்-3

ஆட்டம் 3

இன்னைக்கு நீரஜா எத்தனை மணிக்கு வர்றாங்கஇமையரசி கணவரிடம் வினவ,

தங்க ப்ரேமிட்ட கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவர், நாலு மணிக்கு எல்லாம் வந்திடுவா. நைட் பிடிச்சதா சமைச்சு வை அரசிஎன்றார் கையில் தி ஹிந்துவை எடுத்தபடியே.

ம்ம்என்றவர் எதையோ யோசித்தபடியே அமர, அருகே அமர்ந்திருந்த மனைவியைப் பார்க்கவில்லை என்றாலும், உணர முடிந்தது சிம்மவர்ம பூபதியால்.

மணவாட்டியின் மனம் அறியாதவரா அவர். இந்தக் கணம் என்ன மனதில் நினைத்துக் கொண்டிருப்பார் என்று அவருக்குத் தெரியுமே. ஒன்று செல்ல மகளின் எதிர்காலத்தைப் பற்றியக் கவலை என்றால், மற்றொன்று தம்பியை நினைத்து அடங்காத கோபமும், தீரா ஏக்கமும்.

மகளை நம்ப வைத்துவிட்டு போய்விட்டானே என்ற கோபம் இருந்தாலும், விஜயவர்தனும் அவருக்கு ஒரு மகன் போலவே. அடிக்கும் அளவுக்கு கோபம் இருந்தாலும், அவரைச் சபிக்கவோ, வசைபாடவோ இல்லை அவர்.

ஏன் இப்படி பண்ணான்? என்றக் கேள்வி மட்டுமே அவருக்குள்.

அதுவும் கணவனை நினைத்து அந்த தினங்களில் அவர் பயந்தது அதிகம். எங்கே தம்பியைக் கணவரும் மகன்களும் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு. கணவரின் முகம் அன்று தம்பி ஓடியப்பின் போனப் போக்கையும், கழுத்து நரம்புகள் புடைத்ததையும் பார்த்து அரண்டு போயிருந்தார்.

கூடவே மகன்களுக்குள் சண்டை சச்சரவு, புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த மாளிகை வீடுகள் இரண்டாகவும், மகள் தினமும் தனிமையில் யாரும் அறியாது கண்ணீர் வடிப்பதையும் பார்த்தவருக்கு, ஹார்ட் அட்டாக் வந்தது.

மருத்துவமனை படுக்கையில் இருந்தவர் தன்னைப் பார்க்க உள்ளே அனுமதித்தக் கணவரின் கரத்தைப் பிடித்து, எனக்கு ஏதாவது ஆனாஎன் தம்பியை எதுவும் பண்ணிடாதீங்கஅவனை விட்றவும் செஞ்சறாதீங்க…” என்றவரின் விழிகளில் இருந்த கண்ணீர் இரு பக்கமும் தலையணையை நனைக்க, அவரின் கண்களும் கலங்கி அதரங்கள் துடித்து, மனைவியின் கரத்தை அழுந்தப் பிடித்துக்கொண்டது.

அவன் ஏன் இப்படி பண்ணானோஅவன் நமக்கு மூத்த மகன் மாதிரிங்கநீங்களும் அப்படிதான நினைச்சீங்க?” கணவரிடம் எதிர்பார்ப்புடன் வினவ, அவரின் தலை அசைய, அவரின் விழியில் இருந்து ஒரு சொட்டு நீர் அவர் மனைவியின் கரத்தில் விழுந்தது.

அதன்பிறகு மனைவியை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தவர், தனது கோபம், ஆங்காரம், கர்வம், ஆணவம் அனைத்தையும் சிறிது குறைத்துக் கொண்டார். மனைவிக்காக மட்டுமே.

என் மனைவி அவள், என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு பிள்ளை பெற்று, என் சொல் பேச்சை மட்டும்தான் கேட்க வேண்டும் என்று காட்டான் போல அடிமைத்தனம் காட்டும் ரகம் அவர் கிடையாது.

தான் என்ற ஆணவமும் வீம்பும் பிடிவாதமும் அவரிடம் இருந்தாலும், என்றும் மனைவியைக் கீழே எல்லாம் அவர் நடத்தியது இல்லை. குழந்தைகளிடமும் அதேபோல.

சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் மூத்த மகன் வீட்டில்தான் தற்போது இருந்தனர் சிம்மவர்மபூபதியும் இமையரசியும். நீரஜாவின் திருமணம் நின்றப் பின் யாரும் அங்கு அரண்மனையில் இருக்கவில்லை.

அதுவும் அண்ணன், தம்பி சண்டையை வளர்த்திருக்க, கூடிய விரைவில் சென்னை வந்தனர். அதுவும் இரு மாளிகைகளையும் சிம்மவர்மபூபதி ஒன்றாகக் கட்ட நினைத்திருக்க, மகன்களின் பகையில் இரு மாளிகைகளுக்கு இடையே மதில் எழுப்பப்பட்டிருந்தது.

இளைய மகன் வீடு அடுத்த வீடே என்றாலும், அங்கு பெரியவர்கள் தங்குவதில்லை. இளைய மகன், மருமகள், பேரனை அங்குச் சென்று பார்ப்பதும் சில சமயம் அங்கு அவர்களோடு அமர்ந்து ஒன்றாக உணவு அருந்துவதோடு சரி. அதற்கு முக்கியக் காரணம், மூத்த மகன் ஏதாவது தவறாக நினைத்துவிடுவான்.

அது தெரிந்த அதியரனும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இஷ்டம்போல விட்டார்.

அரிமா பூபதி கெட்டவர் கிடையாது. அவரது கோபம் அப்படி. அதியரனுக்கும் மாமனின் மேல் கோபம் இருந்தது. மூவரும் கிட்டத்தட்ட ஒரே வயதும் என்பதால் நெருக்கமாக இருந்தவர்களுக்கு விஜயவர்தன் கொடுத்த ஏமாற்றம் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதியரன் சற்று நிதானித்து யோசிப்பவர். அந்தச் சூடான நேரத்திலும், தங்கள் வீட்டு ராணியான தங்கை அழுவதை பார்த்தும், அவர் என்ன நடந்திருக்கும் சிந்தித்தார். ஆனால், தாய், தங்கையின் அழுகையைப் பார்த்த அரிமா பூபதியால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு முன் யாரும் அவருக்குத் தேவையில்லை தான். அண்ணன் தம்பி சண்டையால் சகோதரிகளான அழகியும், கோதையும் கூட சரியாகப் பேச முடியாது போனது.

மொத்தத்தில் ஒற்றுமையாய் அழகான கூடாய் இருந்த குடும்பம் சிதறிப் போனது. பெருமூச்சுடன் வேலையைத் தொடங்கிய இமையரசியுடன் அரிமா பூபதியின் மனைவி அழகியும் இணைந்துகொண்டார்.

அத்தை, நீரஜா வர்றதை கோதை கிட்ட சொல்லிட்டீங்களா?” அழகி வினவ,

நீயே சொல்லேன்மா” என்று அப்போதும் சிறிது நக்கல் செய்தார் இமையரசி. அவரின் குணமும் அதுதான். அழுது வடிந்தால் ஒட்டுமொத்தமாக வழிவதும், நக்கல் செய்தால் நேரம் காலம் தெரியாது செய்பவர் அவர்.

அத்தை உங்களுக்கு இந்த கிண்டலுக்கு குறைச்சல் இல்ல” அழகி திட்ட, தனக்குள் சிரித்துக் கொண்டார் இமையரசி.

அன்று இரவு வந்து இறங்கிய நீரஜாவை அனைவரும் அணைத்துக் கொள்ள, சிறிது நேரம் அனைவரிடமும் பேசியவர், நான் சின்ன அண்ணாவை பாத்துட்டு வர்றேன் என்று அங்கேயும் சென்று வந்தார்.

என் மேல கோபமாடா உனக்கு? நான் வர்தனுகாக பேசுனதுஅதியரன் தன்னைக் காண வந்த தங்கையிடம் கேட்க, இல்லை என்பதுபோல சிறு புன்னகையுடன் தலையாட்டினார் நீரஜா.

என்னாலதான் உங்களுக்குள்ள சண்டை வந்திருச்சுனு எனக்கு கில்டா இருக்குண்ணா…”தங்கை சொல்லும்போதே தங்கையைச் சமாதானம் செய்யும் விதமாக, இல்லை என்பதுபோல அதியரன் தலையாட்ட, “என்னை கன்சோல் பண்ண சொல்லாதீங்கண்ணாநான் என்ன சின்ன பொண்ணாஎனக்கே எல்லாம் தெரியும்” கூறிய நீரஜாவின் தலையை வருடிய அதியரன்,

ரொம்ப பெரிய பொண்ணு ஆகிட்டடா” என்றார். காலம் ஒரு மனிதனை எப்படி மாற்றும்’ என்பதைத் தங்கையை வைத்து உணர்ந்தார்.

தங்கையின் கம்பீரமும், தோரணையும் அதற்குப்பிறகு கூடியிருந்ததே தவிர குறையவில்லை என்பதைக் கண்டவர் பெருமையாய் தங்கையைக் கண்டார்.

அங்கு விடைபெற்று வந்த நீரஜாவைச் சாப்பிட வைத்து அனைவரும் அமர, சிம்மவர்ம பூபதி நேராக விஷயத்திற்கு வந்தார்.

நீரஜா, நல்ல இடமா வருது…” அவர் தொடங்கும் முன்பே,

முடியாதுப்பா. கல்யாணமே வேணாம் எனக்கு” என்றார் நீரஜா.

சரி என்ன பண்ண போறதா இருக்க?”சிம்மவர்ம பூபதி கோபத்துடன் கேட்க,

இன்னொரு டிகிரி பண்றேன் ப்பாஎனக்காக நீங்க ஹாஸ்பிடல் கட்டணும்னு அல்ரெடி முடிவு பண்ணதுதானே…” அவர் கூற, அனைவருக்கும் கோபமாக இருந்தது. அதுவும் அரிமா பூபதியைக் கேட்கவே தேவையில்லை.

இன்னுமா அவனை நினைச்சுட்டு இருக்கஅவன் எல்லாம் சந்தோஷமா தான் இருக்கான் குழந்தையை பெத்துட்டுநீ அவனை நினைச்சுட்டு உன் வாழ்க்கையை அழிக்க போறியா?” அவர் எரிமலையாய் வெடித்து அக்னித் துண்டாய்த் தகதகக்க, அதே கோபத்துடன் எழுந்தார் நீரஜா.

நான் யாரையும் நினைக்கலகல்யாணமும் பண்ண போறதில்லகல்யாணம் காதனால இப்ப என்னஎன்ன ஆகிட போகுது…” என்று அழுத்தமாக அதே சமயம் கோபத்துடன் முடித்தவர், “நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க போறேன்” என்று அனைவரின் தலையிலும் குண்டைத் தூக்கிப்போட்டார்.

என்ன?” அனைவரும் வானிலிருந்து விழும் பேரிடித் தாக்கிய உணர்வில் அதிர்ந்து போய்ச் சட்டென எழ, அபிமன்யு மட்டும் சென்று அத்தையின் கரத்தைப் பிடித்தான்.

அந்த வயதிலேயே அவரின் வலியை உணர்ந்து முடிவை ஆமோதித்தானோ?

ஆமாநான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஹவுஸ் சர்ஜன்ல இருந்தப்ப டாக்டர் இல்லாம என் கையால பிறந்த குழந்தைதான் அதுஅப்ப அம்மா மட்டும் இருந்தாங்கஆனா, இப்ப அதுவும் இல்லசென்னைல தான் ஆசிரமத்துல இருக்கு குழந்தைநான் தத்தெடுத்துக்கறேன்நீரஜா கூற, யாராலும் அவர் சொல்வதைக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

இங்க பாரு நீரஜா. ஏன் இப்படியெல்லாம் பேசறஉனக்கென்னடி வயசு இருக்குகல்யாணம் பண்ணி எத்தனை வேணாலும் பெத்துக்கலாம்இப்படி போய் யாரோ குழந்தையை வளக்கறேன்னு சொல்றியேஏன்டி இப்படியெல்லாம் பேசி எங்களை நோகடிக்கற?”அவர் மகளைப் போட்டு உலுக்க, நீரஜாவோஅசையாது அழுத்தமாக நின்றிருந்தார்.

அரிமா பூபதி தங்கையைக் கை வைக்க கூடாது என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, அழகியோ செய்வதறியாது நின்றிருந்தார்.

ஆக நீ முடிவு பண்ணிட்ட?” சிம்மவர்ம பூபதி உறும,

ஆமாஎன்றவரின் குரல் கர்ஜனையோடு வெளி வந்தது.

காசு கொடுத்த தைரியத்துல தானே நீ இப்படி பேசற? நான் சொல்ற பேச்சு கேக்கல சொத்துல ஒத்த பைசா உனக்கு இல்லநீ அந்த குழந்தையையும் வளத்த முடியாது சொல்லிட்டேன்” அவர் சொல்லிவிட்டு அறைக்குச் செல்ல ஆத்திரத்துடன் படியேற, தந்தை படியேறுவதையே பார்த்திருந்த நீரஜாவின் குரல் சத்தமாக அதே சமயம் உறுதியும் பிடிவாதமுமாக எரிமலையாய் வெளிவர, படியேறிக் கொண்டிருந்தவரின் கால்கள் நின்றது.

அப்பாஆ! சொத்து இல்லைனாலும் என்னால சம்பாதிக்க முடியாதுனு நினைக்கறீங்களா?”வீம்பாக அவர் கேட்க, இமையரசி, “யார் கிட்ட என்ன பேசிட்டு இருக்க நீரஜா?” ன்று அதட்டினார்.

நீரஜாவோ யாரையும் பார்க்கவில்லை. தந்தையை மட்டுமே இமை அசையாது பார்த்திருந்தார். தாய் பேசியது காதில்கூட விழவில்லை. தான் நினைத்ததை நடத்தியாக வேண்டிய பிடிவாதமும், அழுத்தமும் அந்த விழிகளில். மென்மையைச் சுமக்கும் விழிகள் கடந்த காலத்தால் இப்போது வன்மையாக மாறியிருந்தது. தான் நினைத்தது நடந்தே தீர வேண்டும் என்ற வெறிப் பெண்ணுக்கு.

அப்பா நீங்க தந்த படிப்புல என்னால அந்த குழந்தையை வளக்க முடியும். அதையும் மீறி அந்த குழந்தையை நீங்க என்கிட்ட வர்றாம பண்ணா நான் இங்க இருக்க மாட்டேன். எங்காவது போயிடுவேன். சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க. உங்க இரத்தம்தான் எனக்குள்ளையும் ஓடுது…” முடித்தவர்,

என்னோட நிம்மதி முக்கியம்னா என்னை புரிஞ்சுக்கங்கப்பாஎன்றவரின் குரல் தந்தையிடம் கையேந்தி யாசித்தது. அதில் இருந்த தாய்மை உணர்வு சிம்மவர்ம பூபதிக்குப் புரியாமல் இல்லை. அவரும் அனைத்தும் அறிந்தவர்தானே. மகள் வாழ்வை அவர் நல்வழியாக்க முயற்சித்தால், அவள் மீண்டும் அங்கேயே வந்து நிற்கிறாளே என்ற வலி அவருக்கு.

அப்பா எனக்கு அந்த குழந்தை வேணும்பா” மீண்டும் கூறிய மகளின் குரலில் என்ன கண்டாரோ, பாதி படிக்கட்டில் நின்றபடி திரும்பி அனைவரையும் பார்த்தவர், தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து,

உன்னோட இஷ்டம் நீரஜா. நானும் என்னோட முடிவுல மாற மாட்டேன். உன் அம்மாக்கு அவ அம்மா வழியில வர சொத்தை உனக்கே தரலாம் முடிவு பண்ணியிருந்தோம். என் பேச்சை நீ எப்ப கேக்கலையோ நானும் சில விஷயத்துல என் முடிவுகளை மாத்திக்க மாட்டேன்கொடுத்த வாக்கை மட்டும் காப்பாத்தறேன்ஹாஸ்பிடல் என் பொறுப்பு” பிசிறில்லாதக் குரலில் கூறியவர் மனைவியைப் பார்த்து,

அரசி, அந்த சொத்தை எல்லாம் உன் தம்பிக்கே தந்திடு. நீ சொல்ல வர்றது புரியுது. உன் தம்பி வாங்கமாட்டான். அவன் குழந்தை பேர்ல மாத்தி வை” என்றவர் விடுவிடுவென்று படிக்கட்டில் ஏறிச் சென்றுவிட்டார்.

சிம்மவர்ம பூபதி சென்றப்பின் அனைவரும் அந்த சங்கடமான சூழலில் இருந்து கலைய, பெண்சிங்கத்தின் கரத்தைப் பற்றியிருந்த வேங்கையின் விழிகளில் பளபளப்பு!

அது யார் மேலுள்ள கோபம் என்று தெரியவில்லை.

அத்தைக்கு உரிமையைத் தராதப் பாட்டனின் மீதா?’

அத்தையை ஏமாற்றி விட்டுச் சென்ற விஜயவர்தனின் மீதா?’

அத்தைக்குத் துரோகத்தைப் பரிசாகத் தந்துவிட்டுச் சென்ற ரஞ்சனி மீதா?’

இல்லை அத்தையின் உரிமையை யாரோ ஒரு குழந்தைக்குத் தந்தார்களேஅவளின் மீதா?’

இந்த வயதில் வரக்கூடாத கோபமும், வஞ்சகமும் அவனுக்கு வந்தது. அதுவும் முகம் தெரியாதக் குழந்தையின் மீது. அவள் மீது வெறுப்பை உமிழ்ந்தது அவன் மனம். அப்படி ஒருவன் இருக்கிறான் என்று அறியாத வயதிலேயே, அவன் மனதில் வன்மமாய்க் குடியேறினாள் உத்ரா என்பதே மிகச்சரி.

அத்தையின் மடியிலேயே சிறு வயதில் கிடந்து, அவரின் பின்னேயே அவரின் உடையைப் பிடித்து நடந்து, அவரின் சிரிப்பையும் கலகலப்பையும் மட்டுமே பார்த்து வந்தவனுக்கு, இன்று இறுகிப்போய் இருப்பவரைப் பார்த்து அவருக்கு நியாயம் செய்யத் தோன்றியது.

அவன் நீரஜாவை அண்ணாந்து பார்க்க, வலியுடன் கூடிய புன்னகையோடு மருமகனைப் பார்த்தவர், அத்தையோட பாப்பா வந்தா உனக்குப் பிடிக்குமா?” ன்று கேட்டார்.

நான் பாத்துக்கறேன் அத்தை” பெரிய மனிதன் போலப் பேசியவன் மெய்யாகவே அவருக்குப் பெரிய மனிதனாய்த் தெரிந்தான்.

அவனின் தலையைப் புன்னகையுடன் கலைத்துவிட்டு அவர் செல்ல, அபிமன்யுவின் முகம் அப்படியே மாறிப் போனது. பாட்டனாரின் அறிவுரையிலேயே வளர்ந்தவன், இரையை வேட்டையாட காத்திருக்கும் வேங்கையாய்ப் பதுங்கத் தயாரானான்.

மொட்டை மாடிக்கு யோசனையில் சென்றவன், எதிர் மாளிகையின் மாடியில் அவனுக்கு முன்னேயே நின்றிருந்த விக்ரம் அபிநந்தனைக் கண்டான்.

எதிர்காலத்திலும் இவனுக்கு முன்னேயே அனைத்தையும் எதிர்க்கக் காத்திருப்பானோ?

இரு வேங்கைகளும் எதிரெதிரே நிற்க, இரு எதிரெதிர் துருவங்களும் நேருக்கு நேர் நிற்பதைக் கண்ட விண்மீன்கள் நடுநடுங்கி அஞ்சி ஓடிச்சென்று ஒளிந்துகொள்ள, வான் முழுதும் கருமேகம் படர்ந்து சூழ்ந்து, சுற்றத்தை அனைவரும் அரண்டு போகும் வண்ணம் மாற்ற, அந்த காரிருள் சூழ்ந்த நேரத்திலும், இருவரின் உஷ்ண மூச்சுக்கள் பகைமையோடு உரசிக்கொள்ள, அந்த இடமே எதிர்காலத்தில் நடக்க இருக்கும் போர்க்களத்தின் பிரமையை உண்டாக்க, தந்திரம் என்னும் சொல்லுக்கே காரணகர்த்தாவானச் சாணக்கியனைத் தாண்டி, அவனின் கோட்டையைத் தாண்டி, இளங்குருதி கொதிக்கும் சக்கரவர்த்தி, தனது இரையை அதாவது சாணக்கியனின் பாதுகாப்பில் இருக்கும் பொக்கிஷத்தைத் தூக்கிச்சென்றால்?

சாணக்கியனின் வீழாதத் தந்திரமும், சக்கரவர்த்தியின் வேட்கையின் வெறியும் ஒன்றோடொன்று வருங்காலத்தில் நேருக்கு நேர் சந்திக்கும் பொழுது அனைவரின் தண்டுவடமும் சிலிர்த்துவிடும், அந்த நொடியை யாரும் அவர்கள் வரலாற்றில் மறக்க மாட்டார்கள் என்று அறிந்திருந்தால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!