இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் 12

பயங்கர டென்சனில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் ஸ்ரீ. நேற்று அவளுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்திருக்க, அந்த ஃபோன் இப்பொழுது அவன் கையில்.

இன்று வேலைக்கு வந்ததும் முதல் வேலையாக அவன் கையில் கொடுத்துவிட்டாள். ஃபோன் திருப்பிக் கொடுத்ததில் இருந்து அவளைப் பார்க்கவே இல்லை. பயங்கரக் கோபமாய் வந்தது ஸ்ரீக்கு.

இவன் காதலியாக எண்ணிக் கொடுக்க, முதலாளியிடம் அதிகப் பேச்சு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவள் அவனைத் தவிர்த்தாள்.

“இந்த ஃபோன் எதுக்கு ஆள் மயக்கவா?” என்றாள் அவனை நோக்கி நேரடியாக.

அவள் வேண்டும் என்று இப்படிக் கூறவில்லை, அவன் கட்டிபிடித்தது, அதன் பிறகான அவளுடைய தடுமாற்றம் எல்லாம் அவளை இப்படிக் கூற வைத்திருந்தது.

அன்று அவன் பேசியது இன்னும் அவள் மனதில் இருக்கும் என்று அவன் எண்ணவேயில்லை. ஏதோ கோபத்தில் அன்று கூறிவிட்டான்.

இன்று இப்படிக் கூறவும் தடுமாறிவிட்டான் ஸ்ரீ.

‘ஏன்… ஏன் இப்படி’ மிகவும் வருத்தமாகியது. அவளிடம் அன்றே மன்னிப்பு கேட்டிருக்கலாமோ என்று இன்று தோன்றியது.

‘ஆண்டவா! ஏன் என்னைக் கேள்விக் கேட்கும் தைரியத்துடன் இவளை படைத்தாய்’ என்று அந்த ஆண்டவனைப் பார்த்துக் கேள்வி கேட்டான். மிகவும் வருத்தமாகியது அவனுக்கு.

எப்படி அவளைச் சமாளித்துக் காதலைக் கூறி, கல்யாணத்தை முடிப்பது. அவனுக்குப் புரியவேயில்லை.

இன்றும் பயங்கரமான யோசனை அவனுள்.

அது வைஷ்ணவியைப் பற்றியும்!

அவள் மேல் உள்ள காதலைப் பற்றியும்!

***

“ண்ணா என்ன பண்ணுற?” ஆபீஸ் அறையில் அமர்ந்து கம்ப்யூட்டரில் எதுவோ செய்து கொண்டிருந்த ஸ்ரீயை நோக்கி வந்தாள் ஷிவானி.

“அரிசி மில் கணக்கு போட்டிருக்கா, அதுதான் செக் பண்ணிட்டு இருக்கேன்”

“ஆமா, வைஷு எங்கே?”

“அவ தாத்தா ரூம்ல இருக்கிறா. என்ன விஷயம்?”

“நாம அவங்களைப் பாராட்டியே ஆகணும் அப்படிதானேண்ணா?” என்றாள் சம்மந்தமே இல்லாமல்.

“யாரைச் சொல்லுற?” ஒருவேளை வைஷு ஃபோன் திருப்பித் தந்ததைப் பற்றிக் கூறுகிறாளோ என யோசித்தப்படி அவளைப் பார்த்தான்.

“அதுதாண்ணா, கீர்த்தனா”

“அவளுக்கு என்ன இப்போ?”

“என்னண்ணா இப்படிச் சொல்லிட்ட, எவ்வளவு தைரியமா அவங்க காதலிச்ச பையனை கட்டிக்கிட்டாங்க. அந்தத் தைரியம் யாருக்காவது வருமா? நிறையப் பேருக்குக் காதலிக்கத் தைரியம் இருக்கு, ஆனா அதைச் சொல்ல தைரியம் வரல” என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டே.

“இப்போ நீ என்ன சொல்ல வார?” என்றான் நேரடியாக ஏற்கனவே ஃபோன் விஷயத்தில் பயங்கர எரிச்சலில் இருந்தான் ஸ்ரீ.

“நான் ஒண்ணும் சொல்லவரலியே, காதலிக்கவும், காதலை சொல்லவும் ஒரு தைரியம் வேணும்னு சொல்லுறேன் அவ்ளோதான்” என்றாள் தோளை குலுக்கியபடி.

”என்னைச் சொல்லணும்னா அதை நேரடியாவே என்கிட்ட சொல்லலாம் ஷிவானி”

“ண்ணா! நீ காதலிக்கிறியா என்ன!” ஆச்சரிய குரல் அவளிடம்.

“அதை விடு ஷிவானி” சலிப்பு அவனிடம்.

“ஏன்… ஏன்… விடணும். வைஷு ரொம்ப நல்ல பொண்ணு உனக்கு மேட்சா இருப்பா”

“இதை நீ முன்னாடியே என்கிட்ட நேரடியா சொல்லிருக்கலாம். அதுக்கெதுக்குக் கீர்த்தனாவை எல்லாம் இழுத்த” ஷிவானிக்கு தெரியும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால் அவனும் நேரடியாக விசயத்துக்கு வந்திருந்தான்.

“சரி சொல்லு… என்னாச்சு”

“ஒன்னுமில்லை அவ நம்ம குடும்பத்துக்குச் சரி வரமாட்டா”

“ஏன் வரமாட்டா”

“அதைவிடு இதைப் போய்த் தாத்தாகிட்ட சொல்லிட்டு இருக்காத, உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு, வீணா அவரைப் போட்டு குழப்பாத”

“ஏண்ணா நீ இப்படி இருக்க, அவ நம்மகிட்ட வேலை பாக்குறதுனால ஏதாவது பீல் பண்ணுறியா?” சரியான காரணத்தை அறிந்துக் கேட்டாள் ஷிவானி. ஒருவேளை அப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில்தான் கேட்டாள்.

இதனை வருடம் அவனோடு இருக்கிறாள் அவனைப் பற்றித் தெரியாமல் இருக்குமா என்ன?

அமைதியாக அமர்ந்து கொண்டான் ஸ்ரீ.

“உன் அமைதிய பார்த்தா அதுதான் காரணம் போல இருக்கு, நீ ஏன் உனக்குக் கீழா அவளை நினைக்கிற, அவளைக் கட்டிக்கிட்டா அவளும் உன் லெவலுக்கு வருவாண்ணா. அவளைக் கல்யாணம் பண்ணி உன்னிதை அவளுக்குக் குடு. அவ கீழன்னு மட்டும் எப்பவும் நினைக்காதே… அதை அவகிட்ட எப்பவும் சொல்லிடவும் செய்யாதே” என்றாள்.

பல வருடங்களுக்கு முன் அவனையும் அப்படிதானே அவள் எண்ணியிருந்தாள். வளர வளர அறிவும் வளர தான் செய்த தவறை தன் அண்ணனும் செய்யவேண்டாம் என எண்ணிக் கூறினாள்.

ஒரு முறை தவறை செய்து பல வருடங்கள் அதை நினைத்து அவள் வருந்தியதைப் போல் தன் அண்ணன் வருந்த வேண்டாம் என்று எண்ணினாள்.

“சீக்கிரம் ஏதாவது பண்ணுண்ணா, இல்லன்னா தாத்தா உனக்குப் பொண்ணுப்பார்க்க என் ஜாதகத்தைத் தூக்கிட்டு அலைவாங்க. எனக்கு முடியும் முன்ன வீட்டுல நல்லகாரியம் ஒண்ணு நடக்கும்னு ஜோசியக்காரன் சொல்லவும் தாத்தா உனக்குப் பொண்ணே பார்த்து முடிச்சிட்டாங்க.

உன்கிட்ட சொன்னாங்களா? என்கிட்ட நேத்து நைட்தான் சொன்னாங்க”

அப்பொழுதுதான் அவனுக்கு நியாபகம் வந்தது, “ஆமா, ஷிவானி நேத்து தாத்தா ஒரு ஃபோட்டோ குடுத்தாங்க நான் கூட மறந்துட்டேன் பாரு” என,

“நல்லவேளை பாக்கல நீ, இப்போ அந்தப் பொண்ணே உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாம்” கோபமாக உரைத்தாள்.

“ஏன்?”

“என்ன ஏன், நீ நேத்து யாரையோ நடுரோட்டுல கட்டிபிடிச்சிட்டு நின்னியாம். அதை அந்தப் பொண்ணு தங்கச்சி பார்த்து வீட்டுல சொல்லிருக்கு, உடனே உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

அது நீ இல்லைன்னு சொன்னாலும் கேட்காம, இல்லை நீதான்னு அடிச்சுச் சொல்லுறாங்களாம். தாத்தா பயங்கரமான கஷ்டத்துல இருக்காங்க, என்னாலையும் நம்ப முடியல அது நீயா?”

“நானா?” அதிர்ச்சியாகப் பார்த்தான்.

அவன்தான் என்று அவனுக்குச் சொல்லமனதில்லை. மனதில்லை என்பதல்ல, இது அவனுக்கான ரகசியம் அதை அவளிடம் சொல்ல விரும்பவில்லை.

“தெரியும்ண்ணா அது நீயா இருக்கமாட்டனு, சரி அதை விடு போனா போகுது…

இப்போ நீ வைஷு விசயத்துக்கு வா”

“என்ன வர” எரிச்சல் அவனிடம்.

“சரி நீ எங்கையும் வரவேண்டாம். நான் பேசவா வைஷு கிட்ட”

“இல்ல வேண்டாம் அது சரிவராது”

“வேற என்னதான் சரி வரும் உனக்கு. பொண்ணு பார்க்க சொன்னா சரின்னு தலையாட்டுற, சரின்னு பொண்ணு பார்த்து ஜவுளி எடுக்கப் போனா அங்க நீ இவளையே சைட் அடிச்சிட்டு இருக்க. சரி சைட் அடிக்கிறானே இவளை பிடிக்குமான்னு கேட்டா இல்லை சொல்லுற… சரி வராது சொல்லுற,

நீ சரின்னு சொல்லுறது எல்லாம் உனக்குச் சரிவராம போயிட்டே இருக்கு. நீ சரி வராதுன்னு சொல்லுறதுதான் உனக்குச் சரி வரும் போலத் தெரிது.

ஷிவாகிட்ட கொஞ்சம் சிரிச்சி பேசுனா கோபப்படுற, சிவா இங்க வரக்கூடாதுன்னு அவளுக்கு ஃபோன் வாங்கிக் குடுக்க அது மட்டும் இல்லாம, உன் ஃபோன்ல அவ ஃபோட்டோ வைச்சிட்டு சுத்துற, அவ அடிச்சதுக்கு வெட்கமே இல்லாம சிரிக்குற. இது எல்லாம் பண்ணிட்டு சரிவராது சொல்லுற, இதுக்கு என்ன அர்த்தம். இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே சொல்லிட்டு இருக்கப் போற,

இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இரு அவளை யாருக்காவது கட்டிக்குடுப்பாங்க அப்போ உக்காந்து அழு” கடுப்பாக வந்தது அவளுக்கு.

ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரவில்லையோ என்ற எண்ணம் கூட வந்திருந்தது அவளுக்கு. அவனின் வாழ்க்கை முறை தெரியாதலால் தனக்குத் தோன்றியதை பேசிக் கொண்டிருந்தாள் ஷிவானி.

“நான் தாத்தாவை அவங்க வீட்டுல பேச சொல்லவா” என்றாள் மெதுவாக,

“பேசுவாங்களா? இது நடக்குமா?” என்றான் கேள்வியாக.

‘ஏற்கனவே அவளுக்குக் காதல் பிடிக்காது என்பது போன்ற பேச்சு விக்ரம் விஷயத்தில் அறிந்து கொண்டான். அது மட்டும் இல்லாமல் அவளைப் பேச வேற செஞ்சிருக்கேன், கண்டிப்பா சரி சொல்லமாட்டாள்’ என்றே தோன்றியது அவனுக்கு.

“பேசுவாங்க, கண்டிப்பா நடக்கும்ணா… நான் தாத்தாவை விட்டு பேச சொல்லுறேன்”

“தாத்தாக்கு இதெல்லாம் பிடிக்காது ஷிவானி”

“பிடிக்காதுதான் வேற என்ன பண்ண சொல்லுற, அப்படியே விடச் சொல்லுறியா? அவர் விடச் சொன்னா நீயும் அவளை விடுவியா. சிலதை நாம அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்ணா. அவர் பழகிப்பார்… நீயும் பழகிக்கோ” என்றாள்.

“என்னமோ பண்ணுங்க” என,

“என்ன நீ எப்பவும் இப்படியே சொல்லுற?”

“ஷிவானி” அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் வைஷ்ணவி.

“என்ன வைஷு” என்றாள் சாதாரணமாக,

“நோட் எடுக்க வந்தேன்” சொல்லி நோட் எடுத்து மீண்டும் வெளியே சென்றவள் வாசலில் ஒரு நிமிடம் நின்று ஸ்ரீயை திரும்பிப் பார்க்க,

“என்ன வைஷு” ஷிவானி கேட்க,

“கணக்கு பார்த்து முடிச்சுட்டாங்களா பாஸ்?” என,

“இப்போ முடிச்சிருவேன்” அவன் கூற தலையாட்டி வெளியே சென்றாள்.

அவள் செல்லவும் அவளையே பார்த்திருந்தனர் இருவரும்.

***

விக்ரம் லண்டன் வந்து கிட்டதட்ட மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தது. இதுவரை வைஷ்ணவி வீட்டில் பேசினாங்களா இல்லையா என்பதைப் பற்றி யாரும் அவனிடம் கூறவில்லை.

வீட்டில் பேசும் பொழுதெல்லாம், ‘நல்ல பதிலா சொல்லுவாங்கடா?’ என்பதான பதிலைத்தான் தந்து கொண்டிருந்தார் அவனது அப்பா.

அவளுக்கு எப்பொழுதும், எல்லாமுமாக இருக்க எண்ணினான் விக்ரம்.

அவளுக்குத் தெரியாததைத் தான் சொல்லிக்கொடுத்து, அவளுக்குத் தேவையானானதை தான் வாங்கிக்கொடுத்து, அவளுக்கு எல்லாவற்றிலும் உற்ற துணை இருக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கிறான்.

நேற்று தந்தைக்கு அழைத்து ஸ்ரிக்ட்டாகக் கூறிவிட்டான். ‘சீக்கிரம் அவர்களிடம் பேசி சின்ன அளவில் நிச்சயம் செய்யுங்கள்’ என்று.

‘சரிடா நான் நாளைக்கு அவங்களைப் போய்ப் பாக்கிறேன்’ என்பதாய்க் கூறியிருந்தார் சிவராம்.

‘அப்பா பேசியிருப்பார்களா?’ என்பதான யோசனை அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தார் மாறன். அவரை நோக்கி வந்து கொண்டிருந்தார் விக்ரமின் அப்பா சிவராமன்.

அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்த, சிலரிடம் கேட்டு அவரை நோக்கி வந்திருந்தார் சிவராமன்.

தூரத்தில் வரும்பொழுதே அவரைக் கண்டு கொண்டார் மாறன். ‘இவர் ஏன் இங்கே வந்து கொண்டிருக்கிறார்’ என்பதான யோசனை அவரிடம்.

கொஞ்சம் அருகில் வரவும், “வணக்கம் சார்” என மாறன் கூற அவரைப் பார்த்து சிரித்த சிவராமன், பதிலுக்கு வணக்கம் வைத்துக் கொண்டார்.

‘எதுக்கு வந்திருக்கார்?’ என்ற யோசனை மாறன் மனதில் மலையாளவு இருந்தது.

வைஷுவுக்கு, விக்ரமை திருமணம் செய்து வைக்க, மாறனுக்கு மலையாளவு விருப்பம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் கோதைநாயகியும் வைஷாலியும் கூறியதை வைத்து யோசித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டிருந்தார். அதன் பிறகு இவரைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. இப்பொழுது ரொம்ப நாள் கழித்து அவராக இங்கு வரவும் யோசனையாகப் பார்த்திருந்தார்.

அங்கிருந்த தேங்காய் நெட்டின் மேல் அமர்ந்த சிவராம், “வாங்க மாறன் இப்படி உக்காருங்க” என்று தன் அருகே உட்கார கூறவும் அமர்ந்த மாறன் அவரைப் பார்க்க.

“நான் நேரடியாகவே விசயத்துக்கு வாரேன், வைஷ்ணவியைக் கேட்டு அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தோம். அது என் பையனோட விருப்பத்துக்கு மட்டும்தான். ஆனா, உண்மையைச் சொல்லனும்னா எனக்கோ, என் மனைவிக்கோ அதுல துளி கூட உடன்பாடு இல்லை.

அதனால்தான் இத்தனை நாள் உங்களைப் பார்க்க வராமல் இருந்தேன். இப்போ மறுபடியும் என் பையன் உங்களைப் பார்த்து பேச சொல்ல ரொம்பக் கட்டாயப்படுத்துறான். அதனாலதான் மறுபடியும் வந்தேன்.

அவன் வர இன்னும் ஒன்னரை வருஷம் மேல இருக்கு. அதுக்குள்ள உங்க பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணத்தை முடிச்சிடுங்க. அப்படியும் முடிக்கலன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை.

அவன் லண்டன்ல இருந்து வந்து உங்ககிட்ட கேட்டா நீங்க வைஷுக்கு வேற இடத்துல பார்த்துட்டதா மட்டும் சொல்லுங்க.

நீங்க என்னைப் பார்க்க, பேச வராம இருந்ததைப் பார்த்தே உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் உங்ககிட்ட சொல்ல வேண்டியது என் கடமை அதுதான் உங்களைப் பார்த்து பேசணும்னு தோணிச்சுப் பேசிட்டேன், அப்போ நான் கிளம்புறேன்” எனக் கூறி அப்படியே சென்றுவிட்டார்.

செல்லும் அவரை அப்படியே பார்த்திருந்தார் மாறன். கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது. தன் மகள் வாழப்போகும் இடத்தில் எல்லாருக்கும் அவளைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணினார்.

***

‘சரி இப்போ வைஷு விசயத்துக்கு வா’ என்பதில் இருந்து இருவரும் பேசியதைக் கேட்ட வைஷுக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

‘ஸ்ரீயின் இத்தனை நாள் பார்வைக்கு ஒரே நொடியில் பதில் கிடைத்தது. இத்தனைநாள் அவனது பார்வையைச் சரியான கோணத்தில் யோசிக்கவில்லை அவள். இப்பொழுது யோசித்தபொழுது தெரிந்தது அவன் பல வருடங்களாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று.

‘ஆனால், ஏன்… சரிவராது என்கிறான், அவன் வீட்டில் வேலைப் பார்ப்பதலா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்குமா?’ மனம் பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தலை வலிப்பது போல் இருக்க, வீட்டுக்கு கிளம்ப எண்ணினாள். அதே நேரம் அவளை நோக்கி வந்திருந்தான் ஸ்ரீ.

“வைஷு”

“நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றாள் சாதாரணமாக.

“ஏன்… என்னாச்சு?”

“எனக்கு உடம்பு சரியில்லை” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“ஏன் என்னாச்சு இத்தனை நேரம் நல்லாதானே இருந்த இப்போ என்னாச்சு” என்றான் அவளைப் பார்வையால் அளந்து கொண்டே.

எப்பொழுதும் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பவன், ஷிவானி தாத்தாவிடம் பேசுகிறேன் என்று கூறியதில் இருந்து, தலை முதல் கால் வரை பார்க்க, அவனது பார்வை எப்பொழுதும் போல் அவளுக்குப் படபடப்பை உண்டாக்கியது.

“நான் கிளம்புறேன்” என அவனைத்தாண்டி வர,

அவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன், “நல்லாதானே இருக்கே” என்றான் அவளைப் பார்த்து.

கையை உருவி கொண்டே, “தலைவலி” என,

பிடித்த கையை விடாமலே, இன்னொரு கையால் அவளின் நெற்றியில் கைவைத்துப் பார்க்க வர,

அவனை விட்டு பல அடி நகர்ந்தவள், “நான் வீட்டுக்கு போகணும்” என்றாள் சிறு குழந்தையாய்.

“சரி… சரி… போகலாம்” என்றவன், “எப்போதுல இருந்து உனக்கு உடம்பு சரியில்லை” என்றான் சீரியசாக.

அவனிடம் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்ப, “சரி வா, நானே உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்”

“வேண்டாம்… வேண்டாம் நான் போய்ப்பேன்”

அவளை ஒரு நொடி கூர்ந்துப் பார்த்தவன் டக்கென்று அவளின் கையை விட, அவனைப் பார்க்காமல் வெளியே செல்ல, அவளையே தொடர்ந்து சென்றான் ஸ்ரீ.

ஸ்ரீயின் வீட்டு வாசலை தாண்டி இறங்கி நடந்தவள், அவளின் வீட்டுக்குச் செல்லாமல், நேராகக் கோவிலை நோக்கி நடந்தாள்.

யோசனையாக அவளைப் பார்த்திருந்தான். வெளிப்படையாக அவள், அவனைத் தவிர்ப்பது அவனுக்குத் தெரிந்தது.

அவளின் கொலுசும் அவனை தவிர்ப்பதுப் போல் உணர்ந்தான் ஸ்ரீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!