இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 21

வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது ஸ்ரீக்கும், வைஷுவுக்கும். சின்ன சின்ன செய்கைக்கும் அவளது முகம் பார்த்து நிற்பான் ஸ்ரீ.

முன்னால் எப்படியோ ஆனால் எப்பொழுது வைஷுவுடன் ஆன அவனின் காதலை உணர்ந்தானோ அதன் பின் அவனுக்கு எல்லாமுமாக அவள் மாற, எல்லாத்துக்கும் அவளையே பார்த்து நிற்பான் ஸ்ரீ.

‘இவனுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா’ என்ற எண்ணம் அவள் மனதில் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும்.

சில சமயங்களில் அவனின் செயல்கள் உணர்த்துவது ஒன்றுதான் அவள் அவனின் வாழ்க்கை முழுமைக்கும் முதன்மையானவள், ஆனால் அதை வைஷு ஒரு நாளும் வாய் வார்த்தையாக கேட்டதில்லை.

வாய் வார்த்தையாக இருவரும் ஐ லவ் யூக்களை பரிமாறிக் கொள்ளவில்லை. ஆனால் உணர்வு பூர்வமாக பல ஐ லவ் யூக்களை சொல்லி, பகிர்ந்து வாழ்ந்தனர்.

சின்ன சின்ன சண்டைகளும், முறைப்புகளுமாக மிகவும் சந்தோசமாக சென்றது அவர்கள் வாழ்க்கை. சந்தோசம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தால் போரடித்து விடும் என்பதால் சின்ன சின்ன முறைப்புகளும் இவர்களிடம் தாராளமாகவே இருந்தது.

அவனுக்கு வயலிலும், இவளுக்கு விட்டு போன கணக்கை பார்ப்பதிலும் மூன்று மாதங்கள் வேகமாக உருண்டோடி விட்டன.

இவன் காலையில் வயலுக்கு சென்றால், இவள் எப்பொழுதும் போல் ஸ்ரீ கரண் வீட்டுக்கு கணக்கைப் பார்க்க சென்று விடுவாள். எப்பொழுதும் போல் சிவா வந்து வீட்டில் அரிசி ஆலை கணக்கை கொடுக்க எல்லாம் பார்ப்பது இவள் வேலையே.

ஷிவானி அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக வேலைப் பார்க்கிறாள். வைஷுவின் உடன் பிறப்புகள் இருவரும் காலேஜ் செல்ல, மாறன் எப்பொழுதும் போல் தோட்டத்தில் வேலை செய்கிறார். வாழ்க்கை எல்லாருக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றது.

வைஷூவை வெளியே அழைத்து சென்று கிட்டதட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டதால் இன்று வெளிய அழைத்து செல்லலாம் என எண்ணினான் ஸ்ரீ.

இந்த மூன்று மாதமாக இருவருக்குமே பயங்கர வேலைதான். அவர்களுக்கான நேரம் போக மற்ற நேரம் எப்பொழுதும் அவரவர் வேலையிலே நாட்கள் கழிந்தன.

“வைஷூ வெளிய எங்கையாவது போயிட்டு வருவோமா?” சமையலுக்கு காய் வெட்டிக் கொண்ணிருந்தவளிடம் கேட்டான் ஸ்ரீ.

அவளுக்கும் அவனோடு எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, “போகலாமே? ஆனா எங்க போகலாம்?”

“அப்படியே பைக்ல ஒரு ரவுண்ட் போயிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு, ஹோட்டல்ல சாப்ட்டு வரலாம்”

“இல்ல பைக் வேணாம்” என்றவள் அவன் முகத்தைப் பார்க்க,    அவள் முகத்தில் தோன்றிய எதிர்பார்ப்பு அவன் முகத்திலும் பிரதிபலித்தது.,

 அவன் எதிர் பார்த்த விஷயம் ‘குழந்தை.’ மனதின் ஒரத்தில் சந்தோஷம் ஏற்பட்டது அவனுக்கு. இந்த மூன்று மாதமாக அவளுடைய நாளை மனதில் வைத்து, ‘வைஷூ இன்னுக்கு டேட் என்ன?’என்று இவன் கேட்பதும்,  

அவனது ஆசை அறிந்து அவளும் சாதாரணமாக டேட் சொல்வதும். என்று மாதம் கடக்க, இன்று இப்படி கூறவும் சந்தோஷம் ஆகியது ஆனாலும் அவளிடம் அதை காட்டாமல்.

“சரி அப்போ கார்ல போகலாமா?”

“கார் தாத்தாகிட்ட போய் தானே வாங்கணும்?”

“ஆமா. நாம வாங்கும் வரை தாத்தா கார்ல போய்க்கலாம்” எனவும், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனுடன் கிளம்பினாள்.

அன்று வைஷூ ‘நீ எனக்கு தகுதியில்லாதவன்’ எனக் கூறியதில் இருந்து அந்த கார் அவன் எடுப்பதில்லை.

அவன் இப்பொழுது பழைய ஸ்ரீ அல்ல. வைஷ்ணவியின் ஸ்ரீ.

அவனது வைஷூக்கு கார் இல்லை அதனால் பெரும்பாலும் இவன் கார் எடுப்பதில்லை. அவனது சம்பாத்தியத்தில் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என எண்ணி அப்படியே விட்டு விட்டான்.

‘குழந்தை என்று வந்துவிட்டால் கண்டிப்பாக வாங்க வேண்டும்’ மனதில் குறித்துக் கொண்டான்.

இப்பொழுது தாத்தாவின் காரை எடுத்து வந்து முதலில் அவளை அழைத்து வந்தது நகை கடைக்கு தான். ஸ்ரீகரண் கொடுத்திருந்த பணத்தில் அவளுக்கு நகை எடுக்க அழைத்து வந்திருந்தான்.

அவளுக்கு இப்பொழுது போடுவது போன்று கைக்கு ஒரு வளையல், கழுத்துக்கு ஒரு ஆரம் என்று எடுத்திருந்தான்.

அவனேதான் எல்லாம் பார்த்து பார்த்து எடுக்க, இவள் கண்களில் காதல் பொங்க அவனையேப் பார்த்திருந்தாள்!

அவனது பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் சைட் அடித்துக் கொண்டிருகிறாள்.  

‘இவனுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா’ எப்பொழுதும் போல் இப்பொழுதும் அதே வாசகம்தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அங்கிருந்து நேராக ஹோட்டல் செல்ல. இருவருக்கும் பிடித்த பிரியாணியை ஆர்டர் செய்து உண்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிரே நாலு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தவர் கண்களில் சந்தோஷத்துடனும், கண்ணீருடனும் இவர்களையேப் பார்த்திருந்தார்.

சுவைத்து, சிரித்து இருவரும் கிளம்பவும், அவரும், அவருடன் வந்தவனும் இவர்களையே தொடர்ந்து வருவதை இவர்கள் கவனிக்கவே இல்லை.

இருவரும்  ஸ்ரீ கரண் வீட்டில் நுழையும் வரை பார்த்திருந்தவர் கண்களை துடைத்துக் கொண்டு அருகில் நின்றிருந்தவன் கையை பிடித்துக் கொண்டு காரில் ஏற அருகில் இருந்தவன் யோசனையுடன்   அவரின் முகத்தைப் பார்த்து காரை எடுத்தான்.

***

அன்று காலையில் எழும் பொழுதே தலை மிகவும் பாரமாய் இருக்க, மிகவும் கஷ்டப்பட்டு தான் கண்விழித்தாள் வைஷு.

அருகில் கைகளால் துளாவ அவனை காணாமல், சிரித்தபடியே  சமையல் அறைக்குள் நுழைந்தாள் வைஷு. பல நாட்கள் இவள் எழ தாமதமானால் இவள் வரும் வரை அவனுக்கு வேலை சமையல் அறையிலே.

இவளுக்கு முன்னே அவளது கொலுசின் ஓசை அவன் காதை வந்தடைய இதயம் ஏற்க அப்படியே நின்றிருந்தான் ஸ்ரீ.

தினமும் அவன் எழும் முன்னே அவனை நோக்கி வரும் இவ்வோசை.  கண்களை இறுக மூடி ரசித்திருப்பான். இவளுக்கு முன்னே அவனுக்கு நெருக்கமானது இவ்வோசையே! எப்பொழுதும் எந்த நொடியும் ரசித்திருப்பான் இவ்வோசையை.

அருகில் வந்தவள் அவனை பின்னோடு அணைத்து முதுகில் முத்தம் வைக்க,

“என்னமா?” என்றான் அவளை நோக்கி திரும்பியபடி.

அவன் திரும்பவும், அவனை வயிற்றோடு அணைத்தவள் இப்பொழுது நெஞ்சில் முத்தம் வைக்க,

“காலையிலே என்னாச்சு?” என அவளை அணைக்க,

“ஏன்? நானா உனக்கு முத்தம் வைக்க கூடாதா?” அணைத்த வாக்கிலே கேட்க,

“என்கிட்ட உனக்கில்லாத உரிமையா வைஷு. நீ என்னை என்ன வேணா பண்ணுவியாம், நான் ஒண்ணுமே சொல்லமாட்டேனாம்” குறும்புடன் கூற,

 “ஐயோ! பேச்சை பாரு” என மீண்டும் அவன் நெஞ்சில் முகத்தை வைத்து அழுத்த,

“ஐயோ! வைஷு நீ வெட்கபடுறியா?” மீண்டும் கிண்டலடிக்க,

“போ… போ… உனக்கு ஒன்னும் கிடையாது” இவள் அவனிடம் இருந்து நகரப் பார்க்க,

அவளை நகர விடாமல் இறுக்கிப் பிடித்தவன், “இந்த வயசுல இதெல்லாம் பண்ணாம வேற எப்போ பண்ணுறதாம்? நாம பாட்டி தாத்தா ஆனா பிறகா?” மூக்குடன் மூக்குரசி வினவ,

“போ” செல்ல சிணுங்கலுடன் மீண்டும் அவன் நெஞ்சத்தை தஞ்சமடைந்தாள் வைஷு.

“வைஷு எனக்கு உன்னை மாதிரியே ஒரு பெண் குழந்தை வேணும்?” என்றான் திடீரென.

அவளில் மெல்லிய எதிர்பார்ப்பு, ‘நான் கூறாமல் இவன் கண்டு பிடித்துவிட்டானா?’ அப்படியே நின்ற வாக்கிலே அவனைப் பார்த்தாள் வைஷு.

“என்ன வைஷு, உன்னை போலவே பெத்துதருவியா?”என்றான் கண்களில் காதலை தேக்கி.

“ஒன்னு என்ன, உனக்கு பத்தே பெத்து தாறேன்” என்றாள் அவனை நோக்கி.

 அவன் அவளையேப் பார்த்திருக்க,

“என்னாச்சு… நீ இன்னைக்கு வயலுக்கு கிளம்பலியா?”

“சொல்லு எப்போ பெத்து தருவ?”

அவளில் மெல்ல தடுமாற்றம். ‘ஒருவேளை கண்டுப் பிடித்துவிட்டானா?’ ஒருநிமிடம் தடுமாறியவள் தன்னை சமாளித்துக் கொண்டாள்.

 ‘தன்னுடைய சந்தேகத்தை அவனிடம் இப்பொழுதே கூறி ஆசையை உண்டு பண்ணிவிட்டு செக் பண்ணின பிறகு இல்லை என்றால் அவனால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியுமா? இல்லை முடியவே முடியாது’ மனதை தேற்றியவள்.

“எப்போ இருக்கோ அப்போ உனக்கு நான் பத்து பெத்து தருவேன்” என்றாள் அவனது கண்ணை நேருக்கு நேராக நோக்கி.

அவளை இறுக்க கட்டி அணைத்து விடுவித்தவன், “சரி… பாத்து பத்திரமா இருந்துக்கோ” கன்னத்தை தட்டி வெளியே சென்றான் ஸ்ரீ.

முகத்தில் புன்னகை தோன்ற செல்லும் அவனையே பார்த்திருந்தாள் வைஷு.

 ***

காலை 11 மணி, மருத்துவமனை வளாகம்.

தனது குழந்தை சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே இங்கு வந்திருந்தாள் வைஷு. மிகவும் டென்சனாக இருந்தது.

ஒரே நிமிடத்தில் வீட்டில் பார்க்கலாம்தான் ஆனால் மருத்துவர் கையால் பார்த்து அறிந்துக் கொள்வது வேறு அல்லவா? அதுதான் உடனே வந்துவிட்டாள்.

இவள் முறை வரவும் மருத்துவரை காண டென்சனாக சென்ற முகம், அவரை  பார்த்து வரும்பொழுது மிகவும் சந்தோசமாக வந்தது.

ஆம். அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருந்தார் மருத்துவர்.

அதேநேரம்,

“ஸ்ரீ, வைஷுக்கு உடம்பு சரியில்லையா?” அவன் முன் அமர்ந்திருந்த சிவா அவனை நோக்கிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இல்லையே. ஏன்?”

“இல்ல. இப்போ கொஞ்ச நேரம் முன்ன அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனேன் அங்க வைஷுவைப் பார்த்தேன் ரொம்ப டென்சனா அங்க இருந்த போல இருந்தது”

“என்னடா சொல்லுற! நீ அவளைப் பார்த்து பேசினியா?”

“இல்ல ஸ்ரீ. நான் அம்மாவை செக் பண்ணி கூட்டிட்டு வரும் போதுதான் பார்த்தேன். அவகிட்ட பேசமுடியல” எனவும்,

அவளுக்கு அழைத்தான் ஸ்ரீ. அழைப்பை அவள் எடுக்காமலே இருக்க,

“எந்த ஹாஸ்பிட்டல்?” சிவாவிடம் கேட்க,

அவன் மருத்துவனை பேரைக் கூறியதும், பைக் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாய் சென்றான் ஸ்ரீ.

இவன் ஹாஸ்பிட்டலுக்கு சென்றிருக்க, இவள் வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

 சிக்னலில் நின்றிருக்க, தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதுப் போல் தெரிய, கண்களை எங்கும் சுழல விட்டான் ஸ்ரீ.

அவன் எண்ணியது சரிதான் என்பதுப் போல், அவனுக்கு அருகில் நின்ற காரில் இருந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

அவனது வக்கீல்!

‘யாரை எல்லாம் பார்க்க கூடாது’ என்று எண்ணினானோ அவர்களே கண்ணில் பட, அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று இருந்தது ஸ்ரீக்கு.

சிக்னல் விழவும், வேகமாக வண்டியை எடுத்தவன் சிட்டாக பறந்தான். ஆனாலும் கண்கள் நொடிக்கொரு முறை பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தது.

அந்த கார் கண்ணை விட்டு மறைந்ததும்தான் நிம்மதி பெருமூச்சு விட்டவன் நிதானமாக வண்டியை செலுத்தினான்.

‘தான் எதில் இருந்து தப்பிக்க நினைக்கிறோம்?’ அவனுக்கு புரியவே இல்லை.

ஆனால், மீண்டும் பழைய அடையாளத்துக்குள் செல்ல அவனுக்கு கொஞ்சமும் மனமில்லை.

அதே நேரம் வைஷு அழைத்திருக்க, அழைப்பை ஏற்று “என்ன வைஷு?”

“எங்க இருக்க?”

“வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன்”

“சரி சீக்கிரம் வா” என்றவள் உடனே அழைப்பை நிறுத்தியிருந்தாள்.

***

ஸ்ரீ கரண் வீடு.

வீட்டின் முன் வந்து நின்ற காரில் இருந்து இறங்கினார் வக்கீல் வீர ராகவன்!

அவருக்கு பின்னிருந்து இறங்கினான் அவரது மகன்  அஜய்.

கார் சத்தம் கேட்கவும் வீட்டில் இருந்து வெளியே வந்திருந்தார் ஸ்ரீ கரண். இருவரையும் யோசனையாகப் பார்த்திருக்க,

அவரைப் பர்ர்த்து, “வணக்கம். நான் ராகவன். சக்ரவர்த்தியோட பேமிலி லாயர்” அவரின் முன்னே நின்றார் ராகவன்.

பதிலுக்கு வணக்கம் வைத்த ஸ்ரீ கரண் அவரையே பார்த்திருந்தார். ‘இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கிறார்?’ என்ற யோசனை அவரிடம்.

வந்திருந்தவரின் வயதை பொறுத்து வீட்டின் உள்ளே அழைத்திருந்தார் ஸ்ரீ கரண். குடிக்க ஜூஸ் கொடுக்க, அதை வாங்கியவர் கண்கள் வீட்டையே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது.

“சக்ரவர்த்தி இல்லையா?” அவர் கேட்க,

“சக்ரவர்த்தியா? நீங்க யாரை கேட்குறீங்க?” புரியாமல் கேட்டார் ஸ்ரீ கரண்.

தங்களது வீட்டுக்கு வந்த ஸ்ரீ, வைஷுவை வீட்டில் தேடி, அவள் இல்லாமல் போகவும், ஸ்ரீ கரண் வீட்டை நோக்கி வந்திருந்தான். வெளியில் நின்றிருந்த காரை பார்த்தவன் ‘யாரோ வந்திருக்காங்க போலவே?’ என்ற யோசனையுடன், “வைஷு” என அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்.

வீட்டுக்குள் நுழைந்தவன் அங்கு சத்தியமாக இவரை எதிர் பார்க்கவில்லை. இவனை கண்டவர் “சக்ரவர்த்தி” என எழுந்து அணைக்க வர,

அவரை ஒரு கையால் தடுத்து நிறுத்தியவன், “உங்களை இங்க யார் வர சொன்னா. வெளிய போங்க” அவரை நோக்கி கோபத்துடன் கத்தினான் ஸ்ரீ.

இதுவரை அவனது கோப குரலை கேட்டிராத ஸ்ரீ கரண் விழிக்க, இவனது சத்தத்தில் உள்ளே அமர்ந்திருந்த வைஷுவும் வெளியே வந்திருந்தாள்.

“போக முடியாது சக்ரா. கிட்ட தட்ட மூனு வருஷமா உன்னை நாயா பேயா தேடி அலையுறேன். அவ்வளவு சீக்கிரம் உன்னை இங்க விட்டுட்டு போகமாட்டேன் சக்ரா”

“உங்களை யாரு தேட சொன்னா, போனவன் அப்படியே போகட்டும்னு விட வேண்டியதுதானே, எங்கையோ செத்து தொலைஞ்சுட்டேன்னு இருக்க வேண்டியதுதானே”

“ஸ்ரீ!” வைஷுவின் அதிர்ந்த குரலைக் கேட்ட பிறகுதான் அங்கு எல்லாரும் இருப்பதை உணர்ந்தான் ஸ்ரீ.

‘என்ன பேசிட்ட நீ’ வைஷு அப்படியே அவனை அதிர்ந்துப் பார்த்திருக்க, அவளிடம் சென்றவன், ‘இல்ல வைஷு அது” என இழுக்க,

“நீ யாரும்மா?” என்றார் ராகவன்.

“நான் இவரோட மனைவி” என ஸ்ரீயை கை காட்ட,

“என் கிட்ட கூட இதெல்லாம் சொல்லணும்னு தோணலியா சக்ரா?” அவரது குரலில் வருத்தம் நிறையவே இருந்தது.

இந்த கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. அவனுக்கு தெரிந்த எல்லாரையும் அழைத்த ஸ்ரீயால் இவரை அழைக்க முடியவில்லை. 

இருவரையும் மாறி மாறிப் பார்த்திருந்தாள் வைஷு. ‘இங்கு என்ன நடந்துக் கொண்டிருக்கிறது’ பல சிந்தனை அவளிடம்.

“நீங்க யார்?” வைஷு அவரை பார்த்து வினவ,

“நான் யாருன்னு கேட்காதம்மா உன் புருஷன் யாருன்னு கேளு?” அவர் உரைக்கவே, இவள் அவனைப் பார்த்தாள்.

அவன் அமைதியாக நிற்கவே, அவரை பார்த்து திரும்பினாள்.

“அவன் சொல்லமாட்டான். சொல்லவே மாட்டான் நான் சொல்லுறேன். ‘சக்ரா சைக்கிள்ஸ்’ அதோட ஒன்லி ஒன் ஓனர் இவன்தான். தி கிரேட் சக்ரவர்த்தி” என்றார் பெருமையாக.

ஸ்ரீ கரண் அதிர்ந்துவிட்டார். பெரிய வீட்டு பிள்ளை என்று தெரியும் ஆனால் இவ்ளோ உயரத்தை அவரே எதிர் பார்க்கவில்லை.

‘சக்ரா சைக்கிள்’ இந்தியா மட்டுமல்ல பல நாடுகளில் தன் முத்திரையை பதித்திருக்கிறது. ரேஸ் சைக்கிள் முதற்கொண்டு சாதா சைக்கிள் வரை இவர்கள் உற்பத்தியே.

சொந்த பயணத்திற்கு கூட விமானத்தை விலைக்கு வாங்க கூடிய திறன் படைத்தவன் மனைவியுடன் வெளியே செல்ல கார் கடன் வாங்கி செல்கிறான்.

எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டியவன் சாதாரண சின்ன ஊரில் தோட்டத்தையும், ஆலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சில சமயங்களில் அரிசி மூட்டைகளை சுமந்திருக்கிறான். ஒரு சின்ன முக சுழிப்பு கூட இல்லாமல் அவனது தகுதிக்கு மீறி செய்திருக்கிறான். அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார்.

இந்தியாவிலே பெரும் பணக்காரனாக இருப்பது தன் கணவன்தான் என்று பெருமைப்படுவதா? இல்லை அவனுக்கு நான் தகுதியானவள் என்று நினைப்பதா?

எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டிய இவனா? என் காலை பிடித்து மருந்திட்டான். நீ எனக்கு கொஞ்சமும் தகுதி இல்லை என்று கூறினோம்?  அவளால் தாங்க முடியவில்லை.

அவன் எவ்வளவு பெரிய மனிதன் என்று சந்தோசம் வராமல் துக்கம் வருவது ஏன்? அவன் என்னை விட்டு பிரிந்து சென்று விடுவான் என்ற பயத்திலா? நான் அவனை அந்தளவு காதலிக்கிறேனா? அவனை எனக்கு அவ்வளவு பிடிக்குமா?

என்ன சொல்வது? ஏது செய்வது? அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள் வைஷு.

இப்படி ஒரு நிலையில் தன் பின்புலம் வெளிவரும் என்று ஸ்ரீ நினைக்கவே இல்லை. வாழ்கையில் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு நிலையில் தன்னை பற்றிய உண்மைகள் வெளிவரும் என்று அவன் அறிந்துதான் வைத்திருந்தான்.

ஆனால், அது இத்தனை சீக்கிரத்தில் வரும் என்று எண்ணவில்லை. அதிலும் இன்று வரும் என்று எண்ணவே இல்லை. தன் மொத்த அடையாளங்களையும் அழித்து விட்டு புதுவாழ்க்கை ஆரம்பிக்கும் இந்த தருணத்திலா உண்மைகள் தெரியவரவேண்டும்.

அவர்கள் யாரும் வேண்டாம், அவர்கள் நினைவு எதுவும் வேண்டாம் என்று வந்த பின் தன்னை தொடர்ந்து இப்படி வருவார்கள் என்று கொஞ்சமும் அவன் எண்ணவில்லை. அதிலும் இத்தனை வருடங்கள் கழித்து வருவார்கள் என்று சிறிதும் எண்ணவில்லை.

‘இதற்கு மேலும் பேச்சை வளரவிடகூடாது. வைஷுவை நான் சமாளித்துக் கொள்வேன்’ எண்ணியவன், “அங்கிள் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட நீங்க பேசக்கூடாது. என்னை இங்க நீங்க பார்த்ததை மறந்திடுங்க. முதல்ல இங்க இருந்து கிளம்புங்க” அவரிடம் கோபமாக கத்தினான்.

‘இவனுக்கு இப்படி கூட பேச தெரியுமா?’ அதிர்ந்து நின்றிருந்தாள் வைஷு. மிகவும் கோபக்காரன் என்று கேள்விபட்டிருகிறாள். ஆனால் அவளிடம் அவன் கோபத்தை காட்டினதில்லை. இத்தனை நாட்கள் காதலை காட்டிய கண்கள் முதல் முறையாக கோபத்தை காட்ட அதிர்ந்து நின்றிருந்தாள்.

அப்பொழுதுதான் குழந்தையின் நியாபகம் வர, அவள் கைகள் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டது. தன் அதிர்ச்சியில் குழந்தைக்கு எதுவும் ஆகிட கூடாதே என்று பயமாகவும் இருந்தது.

‘தன் அப்பாவை யாரோ ஒருவன் கோபமாகப் பேசுவதா’ அவர் அருகில் நின்ற அஜய், ஸ்ரீயைப் பார்த்து எதுவோ கூற வர,

அவனை தடுத்து நிறுத்திய ராகவன், ‘விடு’ என்பதாய் கூற அமைதியாக நின்றுக் கொண்டான் அஜய்.

“இங்க பாரு வைஷு. உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரியும் தானே, இவர் சொல்லுறது எதையும் மைண்ட்ல ஏத்திக்காதே, வா நம்ம வீட்டுக்குப் போகலாம்” அவளின் தோள் அணைத்து அழைக்க,

“எப்படி இப்படி மாறின சக்ரா. உன்னை நம்பி எத்தனை ஜனம் இருக்கிறாங்க தெரியுமா? அவங்களை எல்லாம் விட்டுட்டு நீ இப்படி தனியா இருக்க போறியா? நீ இவ்ளோ சுயநலவாதியா? நீ இப்படி இருப்பன்னு தெரிஞ்சிருந்தா நான் அன்னைக்கு உன்னை காப்பாத்திருக்கவே மாட்டேனே” வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார் ராகவன்.

எப்படியாவது ஸ்ரீயை அவருடன் அழைத்து செல்லவேண்டும். அவனது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவில்தான் வந்திருந்தார். அதனால் வார்த்தைகளும் கொஞ்சம் வீரியமாகவே வந்து விழுந்தன.

 “ஆமா. நான் சுயநலவாதிதான். இப்போதான் சுயநலமா என்னோட வாழ்கையை நான் வாழ ஆரம்பிச்சிருக்கேன். அதையும் அழிச்சிராதீங்க பிளீஸ். தயவு செய்து இங்க இருந்து நீங்க கிளம்புங்க” அவரை விரட்டுவதில் குறியாக இருந்தான் ஸ்ரீ.

“இல்ல நீ வந்துதான் ஆகணும் சக்ரா. உனக்கு அங்க நடக்குற எதுவுமே தெரியாது. உன்னோட சாம்ராஜ்யம் உனக்கு வந்து சேரணும் இதுதான் எல்லாரோட விருப்பமும். இப்பவே கிளம்பு நீ” அவர் முடிவில் உறுதியாக நின்றார்.

“எனக்கு எதுவும், யாரை பற்றியும் தெரியவேண்டாம். நான், என் மனைவியோட ரொம்ப சந்தோசமா இருக்கேன். எனக்கு இது மட்டும் போதும் வேற எதுவுமே எனக்கு வேண்டாம். எந்த அடையாளமும் எனக்கு வேண்டாம்” என்னை விட்டு போனால் போதும் என்பது போல கெஞ்சினான் ஸ்ரீ.

   விடாது ஸ்ரீ முகத்தையேப் பார்த்திருந்தாள் வைஷு. ‘இவனுக்கு பின்னே இன்னும் எதுவோ இருப்பதுப் போல் தோன்றியது’ திரும்பி நின்று அவன் முகத்தையே பார்த்திருக்க,

“நீயாவது கொஞ்சம் சொல்லும்மா. அவனை என்கூட வர சொல்லுமா. நீ சொன்னா அவன் கேட்பான். அவனை நம்பி பல குடும்பம் இருக்கு. அவங்க நல்லா இருக்கணும்னா உன் புருஷன் இப்போ என்கூட வரணும்.” அவனிடம் பேசி பயன் இல்லை என்று அறிந்த ராகவன் நேராக இவளிடம் வந்துவிட்டார்.

கண்களில் பயத்துடன் வைஷு, ஸ்ரீயையே பார்த்திருக்க,

அவள் கன்னங்களை தாங்கி, “வைஷு… வைஷு” என்று அவள் கண்களுக்குள் பார்க்க அந்த கண்களில் தெரிந்த அதிர்ச்சியும், பயமும் அவனை எதுவோ செய்தது.

 அவளின் கன்னங்களை தட்டி, “இங்க பாருமா வைஷு நான் உன்னோட ஸ்ரீதான். உனக்கு மட்டும்தான். உன்னை விட்டு நான் எங்கையுமே போகமாட்டேன். நீ எதை பத்தியும் பயப்படாதே. வா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” அவன் அவளை வலுகட்டாயமாக இழுக்க,

“எல்லாத்தையும் சொல்லிட்டேன் இதையும் மனதார கேட்டுட்டு நீ எங்க வேணா போ சக்ரா” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“உன்னோட சொந்தம் இன்னும் ஒன்னே ஒன்னு உசுர கையில புடிச்சுட்டு இருக்குது. பண்ணின தப்புகெல்லாம் பாவமன்னிப்பு கேட்க அந்த உசுரு துடிக்குது. அந்த ஒரு உசுருக்கு சாந்தி குடு. அது உன் கையில்தான் இருக்கு.

உன் அப்பாக்கு பிறகு எல்லாமே உன் சித்தப்பாதான் பார்த்தாங்க. ஆனா சட்டப்படி எல்லாமே உன் அப்பா உன் பெயருக்கே மாத்தி வச்சுட்டாங்க. அந்த உயில் எல்லாம் இன்னும் ஏன் கையில் தான் இருக்கு.

உன் அப்பாவும் இங்க இல்ல. அவர் இடத்துல அவன் இருந்தான் அதே போல சொத்துக்கு உடமை பட்ட நீயும் அங்க இல்ல. இதெல்லாம் உன் சித்தப்பாக்கு ரொம்ப ஆட்டமா போச்சு. அவனை கண்டித்து பேச யாருக்கும் தைரியமும் இல்லை.

திடீர்னு ஒருநாள் உன் சித்தப்பா ஒரு பையனை கூட்டிட்டு வந்தான். அது அவர் பையனாம். எப்போ கல்யாணம் பண்ணுனான் இப்படி எதுவும் தெரியாது அவனுக்குன்னு ஒரு குடும்பம் ஒன்னு வச்சிருந்திருக்கான். இந்த பையன் பிறந்ததும் உன் சித்தி இறந்து போய்ட்டாங்க போல, அந்த பையன் அப்படியே அச்சு அசல் உன்னைப் போலவே இருப்பான். நீ உன் அப்பா மாதிரி, அதே மாதிரி தான் உன் சித்தப்பா பையனும்.   

அவனுக்கும் உன்னோட பேர்தான் வச்சான் சக்ரவர்த்தின்னு. நீ இங்க வரவேமாட்டனு அவனுக்கு நல்லாவே தெரியும் அதுதான் அதே பேரை வச்சான்.

இங்க எல்லாம் அவன் கைக்குள்ள கொண்டு வந்த பிறகு இங்க இருந்து அப்படியே மும்பை கிளம்பிட்டான். உன்னை பத்தின விசயங்கள் பெருசா அங்க யாருக்குமே தெரியாமலே.

இதுவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்திச்சு. இப்போ இரண்டு வருஷம் முன் நடந்த ஒரு விபத்துல அவன் இறந்துப் போக உன் சித்தப்பா படுத்த படுக்கை ஆகிட்டார். புத்திர சோகம் அவனை பெருசா தாக்கி படுக்க வச்சுட்டு.

அவன் போன பிறகுதான் உன் சித்தப்பா பண்ணின பாவம் துரத்த பாவ மன்னிப்பு கேட்க உசுர கையில பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்கான். உன்னை தேடி அலையுற பொறுப்பை என்கிட்ட தந்துட்டான். எப்பவும் நான் உன்னை காப்பாத்த தான் செய்வேன். இப்பவும் நீ அவனை எங்கையாவது காப்பாத்தி வச்சிருப்பன்னு ஒரு வார்த்தையில் முடிச்சுட்டு அங்க போய் படுத்துக்கிட்டான்.

அவன் நினைச்சிருந்தா எப்போவோ உன்னை அழிச்சிருப்பான். ஆனா அவன் மகன் வடிவில் நீ இருந்ததினாலோ என்னவோ என்னை வச்சு உன்னை காப்பாத்திருக்கான்.

இப்போ அவன் உன் வடிவில் இருக்கும் அவர் மகனை தேடுறார். ஒரே ஒரு முறை அவனை வந்து பாரு.

அவனுக்கு பிறகு உங்க தொழில் எல்லாம் என் பையன்தான் பாக்குறான். ஆனால் எல்லாம் நீ வந்து அனுபவிக்க வேண்டியது. அதனால் தான் உன்னை காப்பாத்தி வேற இடத்தில பாதுகாப்பா இருக்க வச்சேன்.

நீ வளந்த பிறகு எல்லாமே சட்டப்படி நான் உன் கையில ஒப்படைக்க இருந்தேன். ஆனா என்னையே ஏமாத்திட்டு நீ எங்கையோ போய்ட்ட. உன்னோட ரிலீஸ் அன்னைக்கு நான் இங்க ஊர்ல இல்ல. வேற விசயமா வெளியூர் போயிருந்தேன்.

ரெண்டுநாள் கழிச்சு இங்க வந்துப் பார்த்தா உன்னை காணல, அங்க சுத்தி எல்லார் கிட்டயும் கேட்டேன். உன்னை யாராவது கூட்டிட்டு போனாங்களான்னு ஆனா யாருக்குமே நீ எப்படி எங்க போனான்னு தெரியல.

உன்னை நான் எங்க போய் தேட, அவ்ளோ பெரிய சென்னை சிட்டில உன்னை எங்க போய் தேட, பேப்பர்ல விளம்பரம் குடுத்தா ஒரே நாளுல உன்னை கண்டு பிடிக்கலாம். ஆனா அதே விளம்பரத்தினால உனக்கு ஏதாவது பிரச்சனை வந்திடுமோன்னு பயந்துதான் நான் அப்படி பண்ணல. 

உன்னை காப்பாத்தின அதே உரிமையில் தான் உன்னை கூப்பிடுறேன். உன்னோட கூட்டை வந்து பார். உனக்காக ஒரு ஜீவன் உருகி மருகி காத்திருக்கு. தப்பை உணர்ந்து வர மனுஷனை மன்னிக்குறதுதான் மனுஷ குணம் அது உனக்கு நிறையவே இருக்குன்னு எனக்கு தெரியும் சக்ரா.

அவன் உனக்கு பண்ணினது மிக பெரிய துரோகம் தான். உனக்கு கோபம் வரது நியாயம் தான். ஆனா நீ உன்னோட உரிமையை விட்டு குடுக்க முடியாதுதானே. அதுக்காகவே நீ அங்க வரணும்”

அவருக்கு வேறு வழி தெரியவில்லை. செய்த தவறை உணர்ந்த மனிதனை மேலும் தண்டிப்பது எந்த வகையிலும் சரி கிடையாது.

சொத்தை ஆள வேண்டியவன் இங்கிருக்கையில் எல்லாம் அவனிடம் சேர்ப்பது தானே முறையாகும் அதுதான் எல்லாவற்றையும் கூறிவிட்டார்.

இத்தனை நேரம் வைஷுவின் கையை பிடித்திருந்தவனின் கை பிடி தளர்ந்தது. தளர்ந்து ஓய்ந்து இருக்கையில் அமர்ந்தான் ஸ்ரீ.

 அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் சித்தப்பா செய்தது பெரும் தவறுதான். அவர்கள் மேல் அவனுக்கு இப்பொழுது கூட தீராத வெறுப்புதான். ஆனால் சாக போகும் மனிதரிடம் வெறுப்பைக் காட்டி என்ன பயன். இரண்டு வருடமாக உயிருக்கு போராடும் மனிதருக்கு அதை மட்டும் செய்தால் என்ன என்று தோன்றத்தான் செய்தது.

ஆனால்? அதன் பிறகு? அவனால் யோசிக்கவே முடியவில்லை.

சற்று நேரம் எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவன், “இப்போ நீங்க தொழிலை எப்படி பாத்துக்கிறீங்களோ அப்படியே இனியும் பார்த்துக்கோங்க. ஹாஸ்பிட்டல்ல இருக்காரே ஒரு மனுஷன் அவர் போன பிறகு அவருக்கு என்ன செய்யணுமே எல்லாம் நீங்களே செய்யுங்க. இப்போ எப்படி இருக்குதோ அப்படியே இனியும் இருக்கட்டும்.

எனக்கும் அவங்களுக்கு எந்த சமந்தமும் இல்லை. சக்ரா சைக்கிள் இப்படியே நடக்கட்டும்” பேச்சு முடிந்தது என்பதுப் போல் எழுந்தவன் வைஷு கையைப் பிடித்து வெளியே நகரப் பார்க்க,

அவள் அசையவே இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!