இது என்ன மாயம் 43

இது என்ன மாயம் 43

பகுதி 43

பின், மதியம் சிறிது நேரம், ஓய்வெடுக்க அறைக்குள் வந்து இருவரும் படுக்க, சஞ்சீவ் தன் மனைவியை தன் மீது சாய்த்துக் கொண்டு, “ஏன் பிரஜி, இன்னிக்கு வந்தாங்களே உன் பிரிண்ட்ஸ், அதுல ப்ளூ கலர்ல சுடிதார் போட்டிருந்துச்சே… ஒரு பொண்ணு, அது யாரு?” எனக் கேட்டான்.

பிரஜீயோ யோசித்து பார்த்து “ஓ… திவியா? அவ பேரு திவ்யா” அவள் கொஞ்சம் லட்சணமாய் இருப்பாள், அதை நினைத்த உடனே “ஆமா, நீங்க ஏன் அவள மட்டும் கேட்குறீங்க?” என்ற கேள்வியிலேயே, ‘ஏன் அவளை மட்டும் பார்த்தாய்?’ என்ற கேள்வி உள்ளடங்கி இருப்பதைப் புரிந்துக் கொண்ட சஞ்சீவ், “ஏய்… நீ கேட்குறத பார்த்தா, நான் அவள மட்டும் பார்த்த மாதிரி கேட்குற. நான் அவளப் பார்க்கலப்பா, உங்கண்ணன் தான், அந்த பொண்ணு மேல சைட்ட விட்டுட்டு இருந்தான்” என்று உண்மையைச் சொல்லி விட…

பிரஜீயோ எழுந்தே விட்டாள், ஆயினும் தன் அன்னையின் அறிவுரைப் படி, மெல்ல தான் எழுந்தாள். உணர்ச்சிவசப்பட்டு எழுந்தமர்ந்த பிரஜி “அடப்பாவிகளா, இது எப்போ இருந்து நடக்குது?” என தன்னையறியாமல் கேட்க, “இத நீ உங்கண்ணன்ட்ட தான் கேட்கணும்” என்றான் சஞ்சீவ்.

ஆனால் அவளோ உடனே “நான் போய், எங்கண்ணன் கிட்டக் கேட்டு வரவா?” எனக் கட்டிலில் இருந்து இறங்கப் போக, அவள் கைப் பற்றி நிறுத்திய சஞ்சீவ், அவளை அமர்த்தி, “ஏய்… லூசு… இப்ப தான் உங்கம்மா நம்ம காதலையே ஏத்துக்கிட்டாங்க. நீ வேற இன்னொரு லவ் மேட்டர்ற ஆரம்பிச்ச… உங்கம்மா உன்ன தான் திட்டுவாங்க. உன்ன பார்த்து தான், உங்க அண்ணனும் இப்படி செய்யுறான்னு உன்ன தான் சொல்வாங்க” எனச் சரியாய் யூகித்து சொன்னான்.

அதைக் கேட்ட பிரஜி, “இம்… நீங்க சொல்றது சரி தான். ஆனா அவ எங்கம்மாக்கு தூரத்து சொந்தம்… அதாங்க ஒன்னு விட்ட அண்ணன்னு சொல்வாங்கள… அந்த முறைல, அவ எங்கம்மாக்கு அண்ணன் பொண்ணு. நானே முத இவக்கிட்ட பேசல, அப்புறம் சொந்தக்கார பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் பேசி பிரிண்ட்ஸானோம். ஆனா எப்போவும் நான் மலர் கூட தான் இருப்பேன்” என்று முடித்தாள்.

“ஆமா மலர் என்ன ஆனா? ரிசப்ஷனுக்கு நீ கூப்பிடலையா? இன்னிக்கும் வரலையே” என எதார்த்தமாய் சஞ்சீவ் கேட்க, “ஆமாங்க, கூப்பிடல, அவ எங்கையோ டெல்லியோ புனேலயோ வேலைக்கு மாற்றலாகி போயிட்டாளாம். நம்பரும் மாத்திட்டா போல… பழைய நம்பர்க்கு போட்டேன் எடுக்கல… அண்ணன் இந்த திவி மூலமா தான் பிரிண்ட்ஸ எல்லாம் கூப்பிட்டிருக்கு, அவ தான் எல்லாம் சொன்னா” என்றாள்.

“உங்கண்ணனுக்கு எப்படி திவி பழக்கம்?” என்று கேட்டான். “இம்… அதுவா ரெண்டும் ஒரே ஆபீஸ் தானாம். இப்ப தான் மாற்றலாகி இவன் பிராஞ்சுக்கு போயிருக்கா… அதுக்குள்ள எப்படி இவ்ளோ தூரம் பழகினான் தெரியலையே? அது கூட எனக்கு தெரியாம, உங்களுக்கு தெரிஞ்சுப் போச்சே…” என்று சஞ்சீவைக் கேள்வி கேட்டாள்.

“இம்… இதுக்கு தான் சுற்றி முற்றி பார்க்கணும்கிறது” என்று அவன் வாரினான். ஆனாலும் அவள் அவன் தோள் மீது சாய்ந்து “ஏங்க…” என அவன் அணிந்திருந்த கையில்லாதப் பனியனின் கழுத்துக் கயிறைக் கைகளால் அளந்தாள்.

“சொல்லு பிரஜி…” என அவன் சொல்ல, “இல்ல… நாம மலர் வீட்டுக்கு போய் பார்த்துக் கேட்டுட்டு வருவோமா?” என மீண்டும் பனியனின் கழுத்து கயிறை அளந்துக் கொண்டே கேட்டாள்.

அவனோ “இம்… போலாம், அதுக்கு ஏன் இப்படி, பனியன் கயிற பிக்கிற” என அவன் கேலி செய்ய, அதைக் கூடப் பொருட்படுத்தாமல் “நிஜமா??? இன்னிக்கே போலாமா?” என ஆவலாய் கேட்டாள்.

அவனும் அவளின் ஆவலை உணர்ந்தவனாய், “சரி….. போலாம் டா”

“அதுக்கு முன்னாடி கடைக்கு போய் ஸ்வீட்ஸ் வாங்கிட்டு போவோம்ங்க” எனத் திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

அவனோ “இம்… சரி” என எல்லாவற்றுக்கும் சம்மதித்தான். ஆனால் ஞாபகமாய் “எல்லாம் சரி… ஆனா இன்னிக்கு நைட் நீ சொன்னத மறக்கக்கூடாது” என்று அவள் காலையில் ரகசியமாய் சொன்னதை அவளுக்கு அவன் ஞாபகப்படுத்த, “ஐயோ… நீங்க அத இன்னும் மறக்கலையா?…” என சிணுங்க, “அடிப்பாவி… இதுக்கு தான்… உன்ன…..” என அவன் அவளைச் சிறைப்படுத்தினான்.

மாலை நான்கு மணிக்கே வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினார்கள். நேரே ஒரு பரிசு பொருள் கடைக்கு சென்று, தன் பக்கத்து வீட்டு சுட்டிகளுக்கு, சிறுப் பரிசு பொருளாக வாங்கிக் கொண்டாள்.

பின் பில் போட்டு விட்டு வரும் போது தான், எல்லோருக்கும் வாங்கினோமா என அவள் சரிப் பார்க்க, ஒரு குழந்தைக்கு மட்டும் பரிசுப் பொருள் குறைய, அதையும் வாங்க மீண்டும் அவள் கடைக்குள் செல்ல, “என்ன பிரஜி… இங்கயே இவ்ளோ லேட் பண்ணா மலர் வீட்டுக்கு போயிட்டு திரும்ப லேட் ஆகும். பிறகு அத்த உன்ன தான் திட்டுவாங்க. இதுக்கே நெறைய அட்வைஸ் பண்ணி அனுப்பியிருக்காங்க.” என அவன் சலித்துக் கொள்ள…

“என்னங்க… ப்ளீஸ்… ஒன்னு பண்ணலாம்… நீங்க இந்தா… தெரியுது பாருங்க, அந்த ஸ்வீட் கடைல ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வெயிட் பண்ணுங்க, நான் அதுக்குள்ள வாங்கிட்டு வந்திர்றேன்” என்று அங்கிருந்த ஒரு கடையைச் சுட்டிக் காட்டி, திரும்பி கடையின் உள்ளே சென்றாள்.

அவனும் அதே போல செய்ய, பரிசுப் பொருள் வாங்கி விட்டு, வெளியே வந்த பிரஜி, ஸ்வீட் கடையில் கண்களாலேயே சஞ்சீவை தேடிக் கொண்டே செல்ல, ஆனால் அவனைக் காணாது, அந்தக் கடைக்கு அருகே ஒரு கூட்டம் இருக்க… அங்கிருந்த எல்லோர் கண்ணும் அந்தக் கூட்டத்திலேயே இருக்க, இவளும் அதைப் பார்த்துக் கொண்டே கடைக்கு சென்றாள்.

கடையின் படிகளில் கால்கள் ஏறினாலும், அவளது காதுகளில் “பொம்பளைன்னா… உங்களுக்கு எல்லாம் அவ்ளோ இளக்காரமாகிடுச்சு…” என்ற பெண்ணின் சொற்கள் விழ, ‘ஏதோ ஒரு விடலை இடித்திருப்பான் போல, அதான் கூட்டம் கூட்டி, அந்தப் பெண் திட்டுகிறாள் போல’ என எண்ணியவளின் மூளையில் அவளின் குரல்…

அதே சமயம், “வந்து ஸ்வீட் வாங்கிட்டு போனாருப்பா… பார்க்க அழகா, டீசன்ட்டா இருக்கான். அந்தப் பொண்ணுக்கும்… இவனுக்கும் என்ன பிரச்சனையோ… அதான் நடு ரோடுன்னு கூடப் பார்க்காம சண்டப் போடுது” என்று கடையில் இருந்த ஒருவரின் குரலும் விழ…

படிகளில் ஏறிய பிரஜீயின் கால்கள் தேங்கின… ஏதோ ஒரு உந்துதலில் அந்தக் கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றாள். பிரஜி அந்தக் கடைக்கு வருவதற்கு முன்…..

பிரஜி சொன்னது போல், இனிப்பை வாங்கி விட்டு, திரும்பியவன் கண்களில் மலர் பட, அவனும் எதார்த்தமாய் அவளை அழைத்துப் பேசப் போக… அங்கு வந்தது பிரச்சனை…

ஏனெனில் சஞ்சீவ் மற்றும் பிரஜீயின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், எதுவும் தெரியாத மலர், பிரஜீயை காதலித்து ஏமாற்றிய கயவன் சஞ்சீவ் என்ற எண்ணத்தில் இருந்தவளை, அந்தக் கயவனே தன் பெயர் சொல்லி அழைக்கவும், தன் வண்டியை எடுத்தவள், நிறுத்தி விட்டு, அவனிடம் விரைந்தாள்.

“ஏன் சார்… நீங்களாம் இன்னும் மனசாட்சியோடத் தான் நடமாடுறீங்களா? ஒரு அப்பாவிய காதல்ங்கிற பெயர்ல ஏமாற்றி, அவள அழ வச்சு, நடைப்பிணமா ஆக்கிட்டு… நீங்களா உயிரோட தான்  நடமாடுறீங்களா? அதான் இந்த சமூகமே, நீங்க எது பண்ணாலும், அந்தஸ்த்தக் கொடுத்திருக்கே நீங்க ஆம்பிள்ளன்னு… ஏன் சார் ஒரு பொண்ண இப்படி துடிக்க வைக்கிறதுக்கு பெயர் தான் ஆம்பிள்ளையா?

இம்… நீங்க மட்டும் ஒரு பொண்ண விரும்பி, அவ ஒத்துக்கலைன்னா, ஆசிட் ஊத்துவீங்க… இல்லன்னா ரேப் பண்ணுவீங்க… இல்லன்னா தற்கொலைப் பண்ணிக்குவேன்னு அந்தப் பொண்ணு மிரட்டுவீங்க…” எனப் படபடவென அவனுக்கு சந்தர்ப்பமே அளிக்காமல் பேச, கூட்டமும் கூடி விட, சஞ்சீவ் தலைக் குனிந்து குறுகி நின்றான். தான் செய்தத் தவறின் அளவை உணர்ந்தான்.

மேலும் “பொம்பளைன்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமாகிடுச்சு… ஊம்… இப்ப நீங்க ஏமாற்றுனதுக்கு, நாங்க உங்க மேல ஆசிட் ஊத்தட்டுமா?” என்று ஆத்திரத்தின் விளிம்பில் நின்றவளை, சஞ்சீவ் அதிர்ந்துப் போய் பார்க்க, அதே சமயம் கூட்டத்தை விலக்கி உள்ளே வந்த பிரஜீயும், இதனைக் கேட்டு அவர்களைப் பார்த்து ஸ்தம்பிக்க…

ஆனால் மலரோ சஞ்சீவையே பார்த்த வண்ணம், “என்ன சார் அதிர்ச்சியா இருக்கா? ஆம்பிளைங்களுக்கு மட்டும் தான் ஆசிட் ஊத்தத் தெரியுமா? பொம்பளைங்களுக்கும் தெரியும்… அந்தக் கோழை… அதான் உங்களைக் காதலிச்சாலே ஒரு ஏமாளி, அவ தைரியமா இதெல்லாம் பண்ணியிருக்கணும். அப்பத் தான் இந்த அழகான மூச்சிய வச்சுக்கிட்டு இன்னொரு பொண்ண ஏமாத்தவும் மாட்டீங்க… எந்தப் பொண்ணோட வாழ்க்கையையும் கல்யாணம்கிற பெயர்ல அழிக்கவும் மாட்டீங்க” என ஏமாற்றும் ஆண்வர்க்கத்தின் மீதிருக்கும், தன் ஒட்டு மொத்தக் கோபத்தையும் சேர்த்து, அவர்களின் பிரதிநிதியாய் சஞ்சீவை நினைத்து, அவன் மீது கொட்டினாள்.

சஞ்சீவ் அதிர்ச்சியிலும், மலரின் பேச்சில் உள்ள நிதர்சனத்தையும் உணர்ந்து அமைதியாய் இருக்க, ஆனால் மலர் குறிப்பிட்டிருந்தக் கோழையோ, மலர் தன் கோபத்தை வீசி முடித்திருந்தத் தருணத்தில், அவளை “பளார்” என அறைந்து விட்டாள்.

மலரோ அடி வாங்கிய அதிர்ச்சியை விட, அவளை அங்கு காண நேர்ந்த அதிர்ச்சியில்… “அஜி…” என தன் மொத்த அன்பைத் தேக்கி அவள் விளிக்க…

ஆனால் அவளோ “பேசாத… இனி ஒரு வார்த்த பேசுன… நான் மனுசியா இருக்க மாட்டேன். யாரப் பார்த்து என்னப் பேச்சு பேசுற? என் புருஷன பற்றி விமர்சனம் பண்ண உனக்கு என்ன உரிமை இருக்கு?” என அவள் உக்கிரமாய் வினவவும்…

அந்தக் கேள்வியில் மலருக்கு பாதி புரிந்தும் புரியாமலும், “அஜி…” எனக் குழப்பமடைய, அவளோ “உன்ன பார்க்கனும்னு எவ்ளோ ஆசையோட வந்தேன்… எங்களுக்கு இது வேணும் டி…” எனச் சொல்லி விட்டு, அவர்களையே முகம் இறுகப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவின் கை பற்றி, “வாங்க… நாம வீட்டுக்கு போகலாம்” எனக் கண்ணைக் கண்ணீர் மறைக்க, அவனை அழைத்துச் சென்றாள்.

வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் கண்களில் கண்ணீர் வழிய, அழுகையினூடேச் செல்ல, அவளைக் கண்ட ராமும் கோதையும் பதற, ஆனால் நிதானித்திருந்த சஞ்சீவ், “ஒன்னும் இல்ல மாமா, வர்ற வழில ஒரு விபத்தப் பார்த்துட்டா, அதான்… வேற ஒன்னும் இல்ல. நான் பார்த்துக்கிறேன்” என அவளை, தங்கள் அறைக்கு அழைத்து சென்றான்.

விஷயம் கேள்விப்பட்ட ரிஷி, கதவைத் தட்டி விட்டு வந்து எட்டிப்பார்க்க, பிரஜி, கட்டிலில் அமர்ந்திருந்தச் சஞ்சீவ் அருகே, அவனை ஒட்டி படுத்திருக்க, அவர்களைப் பார்த்து “இப்ப எப்படி இருக்கா?” எனக் கேட்டான்.

சஞ்சீவ் தான் அவனைப் பார்த்து புன்னகைத்து, “ஒன்னும் இல்ல ரிஷி… நான் பார்த்துக்கிறேன். தூங்கி எந்திரிச்சா சரியாகிடுவா. கவலைப்பட வேணாம்னு நீங்க அத்த மாமாக்கிட்ட சொல்லுங்க.” எனச் சொல்ல, அவனும் “சரி மாப்பிள்ள… நீங்க சாப்பிட வாங்க” என அழைத்தான்.

சஞ்சீவ், அவன் மட்டும் வெளியே வந்து, பெயருக்கு சாப்பிட்டு விட்டு, பிரஜிக்கு சிறிது சாப்பாடும், பாலும் மூடியிட்டு அறைக்கு எடுத்து வந்தான். கடந்த அரை மணிநேரமாய் அழுதுக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்து, அவளை எழுந்து உட்காரச் சொல்லிக் கொண்டே, அவளுக்கு அவனும் உதவி புரிய, அமர்ந்தவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்து, கண்ணீரைப் பெருக்கினாள்.

அவனோ “ஏய்… பிரஜி… ஏன் இப்படி அழுகுற? அவ நம்மளப் பற்றி தெரியாம தான பேசுனா…” எனச் சொல்ல, அவளோ மௌனமாய் கரைவதிலேயே இருக்க…

“ஹேய்… அவ பேசுனதுக்கு, நீ தான் அவள அடிசுட்டேல, பிறகென்ன இன்னும் அழுகுற?” என மீண்டும் வினவ, அதற்கும் அவள் மௌனிக்க, “பிரஜி… இங்க பாரு…” என அவள் நாடியைப் பிடித்து, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களைப் பார்த்து, “அவ… என்ன தான திட்டுனா… அவக் கேட்டதும் நியாயம் தான… நான் பண்ண தப்ப தான சொன்னா… நீ ஏன் அவள அடிச்ச? என் மேல காதல் வந்திருச்சா?” எனச் சின்னச் சிரிப்போடு கேட்க…

இப்போது கோபமான பிரஜி, விலுக்கென அவனை விட்டு விலகி நிமிர்ந்தவள், கண்களைச் சுருக்கி அவனை முறைத்து, “காதல்… வந்திருச்சா… போனா தான வர்றதுக்கு… நீங்க எப்போ என்ன காதலிக்கிறேன் சொன்னீங்களோ, அப்போ இருந்தே உங்கள என் உயிராக்கிட்டேன். உங்கள வேண்டாம்னு தான் சொன்னேனே ஒழிய, உங்க காதல் வேண்டாம்னு நான் சொன்னதும் இல்ல, நினைச்சதும் இல்ல.” எனத் தலையை இடவலமாய், கண்களில் கண்ணீரோடு ஆட்டியவள், அவனைக் கழுத்தோடு இறுக அணைத்துக் கொண்டாள்.

மேலும் மேலும் அவனை இறுக தழுவி, “ஐ லவ் யூ சஞ்சு… இத்தன நாளும் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். சோ… சாரி…” எனச் சொல்லி கண்ணீர் கறையோடு, அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவனும் அவளை அணைத்த நிலையிலேயே “இம்… இப்ப சொல்லு சாரிய” என அவன் போலியாய் நொடிக்க, அவளோ ஒரு செல்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டே “தேங்க்ஸ்… சஞ்சீவ், என் கொடுமையெல்லாம் தாங்கிக்கிட்டதுக்கு.” எனக் கண்களை, நாசியை, தோள்களைச் சுருக்கி சொல்ல, அவள் மூக்கை பிடித்து ஆட்டி “சரியான கொடுமைக்காரி டி… நீ”

பின் “ஆமா… ஏன் இவ்ளோ அழுக? முத அதச் சொல்லு…” என அவன் அவளிடம் விளக்கம் கேட்டான்.

“இப்ப தான் புரியுது எனக்கு…” என அவள் தலைக் குனிந்து சொல்ல, சஞ்சீவோ உதட்டோரச் சிரிப்போடு, நெற்றி சுருங்க அவளை மர்மமாய் பார்த்தான். அவளே “உங்க மேல தப்பு இல்லைன்னு… உங்கப் பக்கமும் நியாயம் இருக்கும்னு…” என மேலும் தொடர்ந்தாள்.

“ஆமாங்க… மலர எனக்கு காலேஜ்ல, என் கூடப் படிச்சதுல இருந்து தான் ப்ஃரின்ட், ஆனா அவளுக்கே நம்ம ப்ஃரின்ட ஏமாத்துனவன்னு, உங்க மேல எவ்ளோ கோபம் வருது… நாலு வருஷம் ப்ஃரின்டா இருந்த அவளுக்கே அப்படி இருந்தா… நீங்க… அந்தக் குமாரோட சின்ன வயசுல இருந்து… ப்ஃரின்டா பழகி, ஒன்னா வளர்ந்து, படிச்சு இருக்கும் போது, உங்க ப்ஃரின்ட… அதுவும்… தற்கொலை செய்யுற அளவுக்கு ஏமாத்துன பொண்ணு மேல கோபம் வரத் தான் செய்யும்” என அவன் பக்க உணர்வுகளை புரிந்துக் கொண்டாள்.

அவனோ “இருந்தாலும் நானும் லவ் பண்ணி உன்ன ஏமாத்தியிருக்கக் கூடாது… சரி கல்யாணம் ஆகிடுச்சுன்னாவது, மனசு மாறி, உனக்காக யோசிச்சுப் பார்த்திருக்கணும். ஆனா… நானோ உன்ன இன்னும் கொடுமைப்படுத்த வசதியா போச்சுன்னு… அந்த உறவின் உரிமையை எடுத்து, பயன்படுத்திக்கிட்டது தப்பு தான் மா… என்ன மன்னிச்சுடு” என அவளிடம் மன்னிப்பை வேண்ட…

“ஐயோ… இல்ல சஞ்சு… நான் தான் மன்னிப்பு கேட்கணும். நீங்க ஒன்னும் அவ்ளோ கொடுமைப் படுத்தல… ஆனாலும் உங்க ப்ஃரின்ட் என்னால….. இல்ல நான் ஏமாத்தலன்னு… உங்களுக்கு உண்மைத் தெரியறதுக்கு முன்னாடியே, நீங்க என்ன உண்மையா காதலிக்கத் தொடங்கிட்டீங்க… ஆனா நான் தான் அத உணராம… என் காதல அசிங்கப்படுத்தித்தீங்க, அது இதுன்னு சொல்லி உங்கள நோகடிச்சுட்டேன். சாரிங்க…” என அவள் முடிப்பதற்குள், சஞ்சீவ் அவள் வாயை, தன் கையால் மூடினான்.

“போதும், நமக்குள்ள என்ன மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கு? வேணாம் மா…” என மென்மையாய் கூறி, “சரி வா, நீ முத சாப்பிடு” என அவள் அம்மா செய்துக் கொடுத்த சப்பாத்தி குருமாவை நீட்டினான். அவளும் சரியென வாங்கி சாப்பிட முற்பட, ஆனால் அவனே தட்டைக் கட்டிலில் வைத்து ஊட்டி விட்டான்.

அப்படியே “ஏன் பிரஜி… நீ எப்போ என்ன பார்த்த?” எனத் திடீரெனக் கேட்டான். அவளோ வாயில் சப்பாத்தியோடு “எப்ப…ன்னா? அதான் அன்னிக்கு கோவில்ல… நீங்கப் பக்கத்துல நின்னீங்களே… அன்னிக்கு தான் முதமுத உங்களப் பார்த்தேன்” என்று கூறினாள்.

“ஆனா நான் அதுக்கு முன்னாடியே, நீ டுவல்த்து படிக்கும் போதே உன்னப் பார்த்திருக்கேன். உன்னப் பார்த்த… அந்த நிமிஷம்… இந்த லைன் தான் ஞாபகம் வந்துச்சு… தேவதைக் கதைக் கேட்டப் போதெல்லாம்… நிஜமென்று நினைக்கவில்லை… உன்னைக் கண்ட பின்… நான் நம்பிவிட்டேன்… மறுக்கவில்லை… அந்த நிகழ்வு இன்னும் அப்படியே நெஞ்சுல பசுமையா பதிவாகிடுச்சு.” எனத் தான் கேட்ட பாடல் வரியை கவிதையாய் அவன் சொல்ல, அவளோ ஆர்வமாய் “ஹே… சஞ்சு… நிஜமா… எங்க? எப்படிப் பார்த்தீங்க?” என மேலும் வினவினாள்.

அதற்குள் அவள் சாப்பிட்டு முடித்திருக்க, “இரு…” என கைக்கழுவி விட்டு, வந்து அமர்ந்தவன், உதட்டை மடக்கி, கண்களை மூடி, “நீ அன்னிக்கு… இம்… ஒரு ஸ்கை ப்ளூ கலர்ல, வைட் கலர் எம்ப்ராய்டரி பூப்போட்ட டிசைன்ல சுடிதார் போட்டிருந்த…” எனக் கூறி குமார் இருந்த தெருவின் பெயரைச் சொல்லி, “அந்த தெருவுல, நீயும் உன் கூட உன் ப்ஃரின்டும் நடந்து போனீங்க. அன்னிக்கு தான், முத முத உன்ன ஒரு குட்டி தேவதையா பார்த்தேன்… இன்னும் அந்த நொடிய என்னால உணர முடியும். அப்படியே அந்தக் காட்சி, அப்பப்ப கனவுல வரும். ஆனா அன்னிக்கே நீ என் மனசுக்குள்ள வந்துட்டப் போல, எனக்கு தான் அது புரியல…” என மேலும் குமார் தான் அவர்களைக் காட்டி அதில் தான் காதலிக்கும் பெண் என அவளைக் காட்டினான் என்று கூறி முடிக்க, அதைக் கேட்ட பிரஜி முகம் வாட…

“ஏய் ஆனா உனக்கு ஒரு உண்மைய சொல்லவா? அன்னிக்கு உன்னப் பார்த்த அந்த நொடி, என் மனசுக்குள்ள “கடவுளே!” உன்ன அவன் சொல்லக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டே இருந்தேன். ஆனா அவன் உன்ன சொன்னதும், சுருக்குன்னு நெஞ்சுக்குள்ள ஏதோ குத்துச்சு… அதுக்கப்புறம் அவங்க வீட்டுக்கு அடிக்கடிப் போறத விட்டுட்டேன். அப்புறம் அவன் காதல பற்றி, நான் ஒரு வார்த்தக் கூட கேட்கவும் இல்ல. கேட்டிருந்தா… எனக்கு உண்மைத் தெரிஞ்சிருக்குமோ… என்னவோ? ஹும்…” எனப் பெருமூச்சு விட்டு, “என்ன நடக்கணுமோ அது தான நடக்கும்… என்ன பிரஜி?” என அவளைக் கேட்டான்.

அவளோ அவனும் தன்னைப் பார்த்த நொடி காதலித்து என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ ஒரு சலனத்தை… காதல் போன்ற சஞ்சலத்தை… உணர்ந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியிலும், அவனின் வருத்தத்தையும் உணர்ந்து “விடுங்க சஞ்சீவ்… யாருக்கு யாரோட முடிச்சு போடணும்னு கடவுளுக்கு தெரியும் சஞ்சு… அதான் உங்கள, நீங்க நினச்ச மாதிரியே… என் கூட சேர்த்து வச்சிருக்கார்.” என்று ஆறுதலாகக் கூறியவள், ஏதோ ஞாபகமாய் “சஞ்சு……” எனக் கூவினாள்.

அவனோ “என்ன பிரஜி?” என்று நெற்றி சுருக்க… “ஒரு நிமிஷம்…” எனத் தன் கப்போர்டை திறந்தவள். அதில் எதையோ தேடித் பிடித்து, “இங்கப் பாருங்க… இந்த சுடில தான… என்ன நீங்க பார்த்தீங்க?” என அதைத் தன் மீது வைத்து காண்பித்தாள்.

அவனோ கண்களில் ஆச்சரியத்தை தேக்கி, சந்தோஷமாய் “ஹேய்ய்ய்… ஆமா…” என அவன் தலையசைக்க, அவளோ “ஏனோ இந்த சுடிய மட்டும் கழிச்சு விட, எனக்கு மனசே வரல, முத இந்த கலர் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனாலன்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப புரியுது…..” எனக் கூறியவள்.

மேலும் “இத நம்ம காதல் சின்னமா வச்சுக்கலாம். சரியா?” என பதின்ம பெண்ணாய் வினவியவளைப் பார்த்து, “ஹேய்…இது உனக்கே ஓவரா தெரியல” என அவன் கேட்க, “போங்க… நான் அப்படி தான்…” என மீண்டும் சிறுபிள்ளையாய் தன் தலையைச் சாய்த்து வெட்டினாள்.

“சரி, வா… படுக்கலாம்” என அழைத்தான். அவளும் அதை மடித்து கப்போர்டில் வைத்து விட்டு, அவன் அருகில் சென்று, அவன் தோளில் முகம் புதைத்தாள். தன் தோளில் முகம் புதைத்தவளைப் பார்க்கும் வண்ணம், அவள் பக்கம் திரும்பி, ஒருக்களித்து படுத்தான்.

அவளை அணைத்தவன், காதில் ரகசியம் பேசிக் கொஞ்ச, “அதான இதெல்லாம் உங்களுக்கு மறக்காதே… இவ்ளோ ரணக்களத்துளையும்…” என அவளை முடிக்க விடாமல், அவன் மேற்கொண்டு பேச விடாமல், அவளை மௌனமாக்கினான்.

மறுநாள், விடியலில் பிரஜி நேரமே எழுந்து, குளித்து அவனை எழுப்பினாள். கண் திறந்துப் பார்த்தவன், ஏதோ கனவுப் போல என மீண்டும் தன் துயிலைத் தொடர்ந்தான். பிரஜி குனிந்து அவன் கையில், சட்டென அடிக்க, அதில் கலைந்தவன், சிறு எரிச்சலோடு “ம்ச்சு…என்ன… பிரஜி…….?” என இழுத்தான்.

அவளோ தன் இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு, “இங்க ஒருத்தி… உங்களுக்காக குளிச்சு… முடிச்சு… டிரஸ் பண்ணி காத்திட்டு இருந்தா… உங்களுக்கு ஏன் கடுப்பா வராது…” என்று கோபப்பட, அதில் கண்களைச் சுருக்கி விழித்தவன், “ஏன் டி, நீ சீக்கிரம் குளிச்சிட்டு… என்ன படுத்த்…” என அவளை நன்றாகப் பார்த்தவனின் சொற்கள், பாதியிலேயே அந்தரத்தில் தொங்க, கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. ஆம், பிரஜி நேற்று காண்பித்த நீல நிற சுடியை அணிந்திருந்தாள்.

பின் காலை உணவை முடித்துக் கொண்ட இருவரும், வரவேற்பறையில் இருந்த மெத்திருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்தனர். அப்போது சஞ்சீவ் “ஏன் பிரஜி, மலர பார்க்க வேணாமா?” என ஆரம்பித்தான். அவளோ சங்கடப்பட்டு “எப்படிங்க போய் பார்க்குறது?” என்று தயங்கினாள்.

“ஏய் பிரஜி நேற்றே சொல்லணும்னு நினைச்சேன். ஒன்னு புரிஞ்சுக்கோ, நட்புங்கிறது எத்தன மாசம், எத்தன வருஷம் பழக்கங்கிறது பொறுத்து இல்ல, மனசு தான் முக்கியம். நினச்சு பாரு, மலருக்கு உன் மேல எவ்ளோ பாசம் இருந்தா, எதபற்றியும் யோசிக்காம, நம்ம தோழியோட வாழ்க்கைய கஷ்டப்படுத்தினவன்னு, என் மேல கோபப்படுவா? அதான் அவ தெரியாம பேசுனாலும், நீ அடிச்சுட்டேல, அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு. சோ அவள இப்ப பழைய மலரா, உன் கூட படிச்ச மலரா நினச்சு பாரு, உன் தயக்கமெல்லாம் போயிடும்.” என மெல்லிய குரலில், மலரை நியாயப்படுத்தினான்.

அவன் சொல்வது புரிந்தாலும், பெண்களுக்கே உரிய அதீத சஞ்சல உணர்வு, “இருந்தாலும்… நீங்க சொன்ன மாதிரி…” எனத் தயங்கி, “அவ என்ன புரிஞ்சுப்பாளா… இல்ல என் மேல கோபப்படுவாளோன்னு பயமா இருக்கு” எனச் சொல்லும் போதே அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று பார்க்கக் கதவைத் திறந்தான் சஞ்சீவ்.

அது மலரென்று தெரியவும், கதவை நன்றாக விரியத் திறக்க, மலரைப் பார்த்த பிரஜி “மலர்…” என அன்பாக அழைக்க, ஆனால் மலர், அவளையும், சஞ்சீவையும் தயக்கத்தோடுப் பார்க்க, மீண்டும் பிரஜி தான் அவள் கைப் பிடித்து வரவேற்று, உள்ளே அழைத்து சென்றாள்.

சஞ்சீவ் அதற்குள் தன் அத்தையிடம் சென்று மலரின் வருகையைத் தெரிவிக்க, அவளுக்கு குடிக்க டீயும், சாப்பிட இனிப்பு பதார்த்தம் என்று வழங்கி, நன்றாக உபசரிப்பு நடக்கும் போதே, சஞ்சீவ் வேலை இருப்பதாக, தோழிகளுக்கு தனிமை ஏற்படுத்தி கொடுத்து விட்டு, வெளியே சென்று விட்டான்.

பின் இருவரும் சேர்ந்து பிரஜீயின் குடும்ப கதையையும், மலரின் பணித் தன்மையையும் பேசித் தீர்த்தனர். நிறைவாக, மலர் வீட்டிற்கு செல்லும் போது, அவளின் நட்பு கிடைக்க தான் எத்தனைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பிரஜி நெகிழ்ந்து அவளிடம் இதைக் கூறினாள்.

அதற்குள் சஞ்சீவ் வந்து விட, மலர் அவனிடம் தன் மன்னிப்பையும், அவனுக்கு திருமண வாழ்த்து, மற்றும் தந்தையாகப் போகும் பதவி உயர்வுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தாள்.

மறு வீடு விருந்து முடிந்து, இருவரும் ரங்கன் வீட்டிற்கு திரும்பினர். செல்லும் போது பிரஜீக்கு ஆயிரம் அறிவுரை வழங்கி, அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சி, ஆசீர்வதித்து வழியனுப்பினார் கோதை.

பின்னர் சஞ்சீவும் தன் விடுமுறை முடிந்து, அவன் மட்டும் வேலைக்கு, பெங்களூர் கிளம்பினான். ஆம், சரஸ் தான், ஐந்து மாதம் தொடங்கப் போகிறது, அலைச்சல் வேண்டாம், மேலும் இந்த நிலையில் அவளை அங்கு தனியே விட்டு, தான் இங்கு கவலைப்படத் தயாராயில்லை என்று கண்டிப்போடுக் கூறிவிட்டார்.

அதனால் பிரஜீயும், தன் மாமியார் வீட்டிலேயே தங்கி விட்டாள். மேலும் ஒரு நாள், பெங்களூர் வீட்டைக் காலி செய்து, பொருட்களோடு வந்திறங்கினான் சஞ்சீவ். மேலே மாடியறை தயாராகி விட, அங்கு அவர்களின் பொருட்களை அடுக்கி, அவர்களின் அறையாக்கி விட்டனர்.

சங்கீ மறு நாள், அலைப்பேசியில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலி செய்ததற்கு, பிரஜீயை பிடி பிடியென பிடித்துக் கொண்டாள். பின்னர் ஒரு வழியாய் எல்லாம் தன் சரஸம்மாவின் வேலை என விளக்குவதற்குள், ஸ்ரீராம் அந்தப் பக்கம் கத்தி, சங்கீயை ஒரு வழியாக்கி விட்டான்.

“ஸ்ரீக்கு சேட்டை ரொம்ப அதிகமாகிடுச்சு பிரஜி, இவனோட மல்லுக்கட்டவே, எனக்கு இருபத்து நாலு மணிநேரம் பத்தல” எனச் செல்லக் குறையோடு அலைப்பேசியை வைத்தாள்.

பிரஜீக்கு தற்போது, ஆறு மாதம் நடந்துக் கொண்டிருந்தது. தாய்மையின் பூரிப்போடும், வெளியே தெரியும் வயிற்று சுமையோடும், மாலை மயங்கும் நேரம், மாடியில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாள். அவளின் துணைக்கு, புஷ்பா அவளின் பட்டமேற்படிப்பு பாடங்களை, மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். பிரஜீயின் தாய்மை அழகை ரசித்துக் கொண்டே, அவளை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான், ஊரிலிருந்து வந்த சஞ்சீவ்.

 

மாயம் தொடரும்…….

error: Content is protected !!