jeevan 15
jeevan 15
உன்னோடு தான் … என் ஜீவன்…
பகுதி 15
“அண்ணா..!” அந்த ஏகாந்த இரவில், தன் கடந்த காலத்தில் மூழ்கியிருந்த கௌதமை, ‘யாரோ அழைப்பது’ போல இருக்க, அதுவரை இருந்த இதமான மனநிலை மாறி, சட்டென விழி திறந்தவன் கண்டது தன்னையே பார்த்துக்கொண்டு, அழைப்பை விடுத்த அமுதனையே..
“அண்ணா வீட்டுக்கு வந்தாச்சு…” என்றதும், “ஊம்…” என்ற சொல்லோடு, தளர்ந்த நடையில் செல்லும் கௌதமை பார்த்தவன் மனதில், ‘உங்கள இந்த மாதிரி பார்க்க ரொம்பவும் வேதனையா இருக்கு அண்ணா. எப்ப இதெல்லாம் மாறி நீங்களும் உங்களுக்கான வாழ்க்கைய வாழ போறீங்களோ.. !’ என நினைத்தவன், வண்டியை அதன் இருப்பிடத்தில் விட்டு விட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தஞ்சம் புகுந்தான்.
******
அதே நேரம், தனது கடந்து கால நிகழ்வில் மூழ்கி இருந்த ஆரனை, அங்கு வந்த நர்ஸ் அழைக்க , அதுவரை இருந்த கடந்த காலம் விட்டு, நிகழ்காலத்திற்குள் புகுந்தான் . “சார், அவங்களுக்கு ஆப்பரேஷன் முடுஞ்சு அப்ஷர்வேஷனுக்காக ICU ல வச்சிருக்கு.
நாளைக்கு காலைல நார்மல் ரூம் ஷிப்ட் பண்ணிடுவாங்க. அவங்களுக்கு ஒதுக்கின ரூம்ல நீங்க போய் இப்ப தூங்கறதுன்னா தூங்குங்க. எப்படியும் அவங்களுக்கு தேவையானத ஐசீயூல இருக்கறவங்க பார்த்துப்பாங்க. பயப்படுற மாதிரியான கேஸ் இல்ல இவங்களோடது. நீங்களும் ரொம்ப டயர்டா தெரியறீங்க” என..
அவர்கள் சொல்வதில் உள்ள விசயத்தை கிரகித்தவன், “ஓகே சிஸ்டர், ரூம் நெம்பர் சொல்லுங்க ” என்றவன் மற்ற விசயங்களை கேட்டு தெளிவு படுத்திவிட்டு, “எந்த நேரமா இருந்தாலும், எதாவது தேவைன்னா தயங்காம எழுப்பி விடுங்க… ” என சொல்லி, அவனுக்கான அறைக்கு சென்றான். அங்கே சென்றும் உறக்கம் தான் வராமல் தன்னிடம் போக்கு காட்ட… மீண்டும் தனது நினைவுகளில் நீந்திட சென்றான்.
கௌதம் தனது அறைக்கு சென்றதும், அன்று இருந்த அதே தனிமை இன்றும் தன்னை தொடரும் நிலையை வெறுத்தவனாய், அதிலிருந்து தனக்கு ஆறுதலாய், ஆதரவாய் நின்ற தனது செல்லம்மாவின் நினைவில், மீண்டும் தனது கடந்தகாலத்துக்குள் மூழ்கினான்.
*******
சுற்றிலும் பல்வேறு பொருட்கள் நிறைந்து , போவோர் வருவோரின் கவனத்தை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பொருளங்காடி. அதில் தான் மட்டும் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கி தவித்து நின்றிருந்தாள் பாவை ஒருத்தி.
தன்னால் அந்த சூழலில், ‘’இதற்கு மேல் எதையும் சமாளிக்க இயலாது!!’ எனும் நிலையில், அவளின் சுவாசத்தில் வேண்டாத ஒரு வித வாசனையும், புரியாத சில மாற்றத்தை தன் உடலில் நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்…
வலிமையான ஒரு கரம், தன் இடையில் தவழ, மறுகரமோ அவளின் பின்னந்தலையில் சேர்ந்த நேரம், அவனின் இதழ்கள் அந்த பாவையின் இதழை முழுதாய் முற்றுகை இட்டது. அந்த கணம் அதிர்ந்து விழித்தவளின் விழியில் விழுந்த, அந்த ஆடவனின் கண்களின் பாவத்தில் பதறி அடித்து, “பெருமாளே..!!!” என்ற கூவலுடன் கண்விழித்தாள் காயத்ரி…
அவள் போட்ட சத்தத்தில், அவளுக்கு அடுத்து உறங்கி கொண்டிருந்த அவளின் ரூம்மேட் மூவரும் அடித்து பிடித்து எழுந்ததில், ஒருத்தி தாறுமாறாக மற்றவள் மீது விழ, அவள் போட்ட சத்தத்தில், அடுத்த அறையில் இருந்தவர்களும் தங்கள் தூக்கத்தை விடுத்து இவர்கள் அறை கதவை தட்டிட தயாராகினர், தங்களின் தூக்கம் கெட காரணமான அந்த சத்தத்தை பற்றி அறிந்து கொள்ள…
“ஏன்டீ பிசாசே ! இப்படி கத்தி தொலஞ்ச…?!” என தான் மேலே விழுந்ததால் கத்தியவளின் வாயை பொத்திய படி , விழுந்தவள் சொல்ல,
“ஏன்டீ எரும சொல்ல மாட்ட..?! இப்படி தடிமாடு மாதிரி இருந்துட்டு , வந்து மேல விழுந்தா! கத்தாம சுகமா பாட்டா பாடமுடியும்…!?” என பேசும் போதே.. படபடவென கதவு தட்டும் ஓசையில், “போச்சு, அந்த ராங்கி ராக்கம்மா கேங் ஆளுங்கள எழுப்பி விட்டுட்டையா? இனி அவளுங்கள வேற சமாளிக்கனுமா?!” என்றவளை நோக்கி,
“இதாரூ… நா ஒன்னும் வேணுமுன்னே வந்து உன் மேல விழல.. அதோ கத்தி பெருமாள, கூப்பிட்டுட்டு.. இத்தன கலவரத்திலையும், இன்னும் ஒன்னுமே தெரியாத குழந்த மாதிரி முழிச்சிட்டு இருக்காளே அவள சொல்லு..!” என்றவர்களின் பேச்சிக்கு இடையே,
மற்றவள் எழுந்து அறை கதவை திறக்கவும், இருவர் எழுந்து காயத்ரியை நெருங்கி, அவள் கத்தியதற்கான காரணத்தை கேட்க நினைத்து, தொடவும் சரியாக இருக்க,
ஏற்கனவே கனவில் தன்னை அனைத்து இதழ் முத்தம் கொடுத்தவனின் நினைவில் இருந்து மீழாமல் இருந்தவள், இவர்கள் கரம் பட்டதும் கனவின் தாக்கத்தால் மீண்டும் “பெருமாளே….. !!!!” என கத்தி அவர்கள் கரத்தை தட்டி விட..
திறந்த கதவின் வழியாக உள்ள நுழைந்த கும்பலும் சேர்ந்து, மீண்டும் காயத்ரி போட்ட சத்தத்தில் பயந்து போய், “வீர்..!” என கத்திட…. அந்த மொத்த ஹாஸ்டலும் பகலாகி போனது சில நொடியில்….
ஹாஸ்டல் வார்டனுக்கு விசயம் சொல்லப்பட.. தனது பெருத்த சரீரத்தை தூக்கி கொண்டு, “ஏன்டீ பிசாசுங்க மாதிரி கத்தி உசுர வாங்கறீங்க. பொண்ணுங்களாடீ நீங்க. நடுஜாமத்தில என்னடீ கத்தி எல்லாரையுமே பயமுறுத்தி விளையாட்டு…! அறிவே இல்லையா? வந்து வாய்ச்சிருக்கு பாரு. என் உசுற எடுக்கன்னு” என தனது தூக்கம் கெட்டு போன கடுப்பில் கேட்க…
காயத்ரியின் தேகம் மெல்ல நடுங்க துவங்கியது. இதுவரை தன் பேர் எந்த நிலையிலும் தவறாக வெளியே பேசிடாத வகையில் நடப்பவள், இன்று நடந்த அனைத்து கூத்துக்கும் அடிப்படையே அவள் என்பதை தாங்கிட இயலாமல் கண்கள் கண்ணீரை பொழிய,
அவளை பார்த்திருந்த ரூம்மேட்டில் ஒருத்தி,” சாரி மேம் ! காயூ தான்.. ஏதோ கெட்ட கனவு போல, பயந்து போய் கத்திட்டா. அவள பத்தி உங்களுக்கு தெரியாதா? இதுவரை அவ இருக்கற இடம் தெரியாம இருந்தவ. இன்னைக்கு தான் ஏதோ… ?!” எனவும்,
அவளை திரும்பி பார்த்த வார்டன், அவளின் சிவந்திருந்த முகத்தையும், கண்ணீரையும் பார்த்துவிட்டு.. “எதுவானாலும் கத்தாம ஒழுங்கா தூங்குங்க. இனி சத்தம் வந்திச்சு ப்ரின்சிபல் கிட்ட கம்பிளைண்ட் பண்ணி வெளிய அனுப்பிவிடுவேன், ஜாக்கிரதை” என எச்சரித்து விட்டு, “நீங்கெல்லாம் பக்கத்து ரூம் தானே?! இங்க என்ன வேலை. உங்க ரூமுக்கு போங்க” என சொல்லி கீழே சென்றிட..
அவர் கீழே செல்லும் வரை அமைதியாக இருந்த அந்த கும்பல் காயத்ரியை நெருங்க, பயத்தில் அவளின் சிவந்திருந்த முகம் வெளிற நின்றாள்.
அவர்கள் காயத்ரி அந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அவளின் வெகுளி தனத்தையும் , மாடன் பெண்களின் நாகரீக பூச்சும் இல்லாத செய்கையும் கண்டு, அவள் போகும் போதும் வரும் போதும் “மாமி !, தயிர் சாதம் !” என்பதும்,
“பொங்கல் , புளியோதரை சாப்பிட்டே இப்படி கும்முன்னு இருக்கா. இவளுக்கு மட்டும் கறியும் சோறும் போட்டு வளர்த்தா .. எப்படி இருப்பா?!!” என எப்போதும் கிண்டல், கேலி செய்வது அவர்களின் பழக்கம்.
அவள் குளிக்க செல்லும் போது, அறையின் கதவை வெளியே பூட்டிவிட்டு, மாத்தி உடுத்த வைத்திருக்கும் துணியை அள்ளிக்கொண்டு நீண்ட நேரம் ஈரத்தில் நிறுத்துவது அவர்களுக்கு வேடிக்கை பொழுதுபோக்கு. மற்றவர்களை அவ்வாறு செய்தால் அவர்கள் வார்டனிடமோ அல்லது கல்லூரியிலோ கம்பிளைண்ட் செய்து விடுவார்கள் என்பதால் கிடைத்த அப்பாவிகளிடம் மட்டுமே இந்த நடவடிக்கை.
அதனாலேயே அவர்கள் என்ன சொன்னாலும், அதை அமைதியாய் கடந்து போய் பழகியவள், இன்று ‘தானே வலிய அவர்களிடம் மாட்டி கொண்டோமே!’ என்ற எண்ணம் தான் அதிக பயத்தை கொடுத்தது. அவர்கள் காரணம் கேட்டாள், இதுவரை எதற்கும் பொய் சொல்லி இராதவள், அப்படியே நடந்ததை சொல்லும் தைரியமும் இல்லாமல் இருப்பதுவும் ஒரு காரணம்.
அவள் பயந்தது போலவே அவளை நெருங்கிய ஒருத்தி , “ஓய் மாமீ… எதுக்குடீ அப்படி கத்துன..?” என அதிகாரமாய் கேட்க, காயத்ரியோ பதில் சொல்லாமல் தலைகவிழ , அடுத்தவள் வந்து, அவளின் தோளில் கை வைத்து திருப்பிட நினைக்க, கனவின் தாக்கத்தால் அவளின் கையையும் தட்டிவிட்டு தள்ளி நின்றவளின் செய்கையில் காயத்ரியை பற்றி நன்கு அறிந்த அவர்கள் யோசனைக்கு உள்ளாகினர்.
“பார்ரா! தயிர்சாதத்துக்கு வந்திருக்கற திடீர் தைரியத்த. நம்ம கையையே தட்டிவிடுறா. யார் தந்த தைரியம் இது?” என மேலும் அவளை நெருங்கி கேட்க..
கையை தட்டிவிட்ட போது தெரியாத பயம் இப்போது முழுதாய் தாக்க , “சாரி.. தெரியாம செஞ்சிட்டேன் என்ன மன்னிச்சிடுங்கோ.. இனி இப்படி செய்ய மாட்டேன்” என பயந்தோடு, கண்ணீர் வழிய நின்றவளை பார்த்தால் இறக்கம் தான் தோன்றும். ஆனால் அவர்களுக்கு அப்படியெல்லாம் தோன்றினால் தான் அதிசயம்..
“என் கைய தட்டி விட்டதுக்கு தண்டனை கொடுக்கணுமே மாமிக்கு… என்ன தண்டனை கொடுக்கலாம்.. !” என்று மற்றவரை பார்த்து கேட்க, காயத்ரியோ இயலாமையோடு தனது அறை தோழிகளை பார்க்க…
“ஏய் ப்ளீஸ்ப்பா.. ஏதோ தெரியாம செஞ்சிட்டா விடுங்க. எதுவானாலும் நாளைக்கு பார்த்துக்கலாம். இப்பவே லேட் நைட் ஆகிடுச்சு. வார்டனுக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சனை தான்” என்றதும் , அந்த ரவுடி கும்பல் தனியாக தங்களுக்குள் கிசுகிசுத்து விட்டு..
“ஓகே , இப்ப நாங்க போறோம். பட் நாங்க சொல்றத இந்த மாமி செய்யணும். அதுக்கு நீ தான் கேரண்டி.. என்ன டீலா.. இல்ல.. எதுவானாலும் இப்பவே ஒரு கை பார்த்திடலாம் ” என கேட்க..
இவர்களை ‘இப்போதைக்கு வெளியே அனுப்பி வைத்தால் போதும், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தவள், ” ஓகே டீல்… பட் ரொம்ப ஹர்ஸ்ஸா எதுவும் சொல்லிடவோ செஞ்சிடவோ கூடாது. பாவம் அவ…” என…
“அதெல்லாம் பாப்பாக்கு பாத்து பதமா தான் செய்வோம். ஓகே.. ” என சொல்லி கொண்டே தனது சகாக்களை பார்த்து கண் சிமிட்ட.. மற்றவர்களும் நமுட்டு சிரிப்போடு அங்கிருந்து தங்கள் அறைக்கு சென்றனர்.
அவர்கள் சென்ற நொடி புயல் தாக்கிய மரம் போல சட்டென அமர்ந்த காயத்ரியை பார்க்கும் போது பாவமாக தோன்றினாலும் , அவர்களை பற்றி நன்கு தெரிந்ததால் வேறு வழியில்லையே… என்ற எண்ணத்தோடு..
“காயூ அவங்கள நினச்சு பயப்படாத. நீ தைரியமா ஒரு தடவ எதிர்த்து பேசினாலே அவங்க ஒதுங்கி போயிடுவாங்க. இதுங்க எல்லாம் அந்த ஸ்வோதாவோட அல்லகைங்க. அவளோட சேர்ந்து தான் இப்படி திமிரா நடக்குதுங்க. என்னா ஆச்சு , வார்டன்கிட்ட நா சொன்னது மாதிரி கெட்ட கனவு கண்டையா ?! இதுவரைக்கும் இப்படி நீ அரண்டு போய் விழிச்சு நா பார்த்ததே இல்ல!” என்றதும் , ‘ஆம் !’ என்பதாய் தலையசைத்து பதிலை சொன்னவளின் நிலை புரிய, “சரி விடு காயூ நாளைக்கு பேசி பார்க்கலாம் சரியா?! “என கேட்க அவளோ பயத்தில், “வேண்டாம் ..” என தலையசைக்க
“அப்ப அவளுங்க சொல்றத செய்யறத தவிர வேற வழியே இல்ல. வா வந்து படு. நாளைக்கு அவங்ககிட்ட நானே உனக்காக பேசி பார்க்கறேன். அவங்க கேட்கலைன்னா, அங்க நடக்கறதுல இருந்து காப்பாத்த, கொஞ்சம் உனக்கும் நேரம் நல்லா இருந்தா, யாரையாச்சும் நீ கும்பிடற பெருமாளே அனுப்பி வைக்கட்டும்” என சொல்லி, அவளை அழைத்து வந்து அவளின் படுக்கையில் விட்டவள், தனது தூக்கத்தை தொடர்ந்தாள். மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல பார்வையை செலுத்தி விட்டு படுக்க, காயத்ரிக்கு தான் அன்றைய தூக்கம் எட்டாகனியாகி போனது.
விழித்திருந்த காயத்ரிக்கு அந்த கும்பலின் மிரட்டலையும் மீறி தான் இன்று உணர்ந்த அந்த தொடுகை தான் மிரள வைத்து விழி மூட விடாமல் செய்தது. கண்ணை மூடினாலே அந்த தொடுகை நிஜமாக இருப்பது போல் உணர்பவளுக்கு எங்கிருந்து உறங்கும் தைரியம் வரும். தன்னை மீறி தனக்குள் ஏற்படும் மாற்றத்தால் முகம் சிவக்க, அவளின் இந்த நிலை ‘எங்கே போய் முடியுமோ?!!’ என்ற பயத்தையே விதைத்து அவளிடம்…
தான் உணர்ந்த தொடுகை, அந்த கண் இரண்டும் மீண்டும் மீண்டும் நிஜம் போல இப்போதும் உணர, படுக்கையிலிருந்து எழுந்தவள், கந்தசஷ்டி கவசத்தை சொல்ல துவங்க, அதை கவனித்த மற்றவர்களுக்கு அது அந்த கும்பலின் மீதான பயத்தால் போலும் என்று நினைத்து அவர்கள் தூங்கும் பணியை தொடர்ந்தனர்.
********
அதிகாலையிலேயே எப்போதும் போல எழுந்து குளித்தவள், நேற்றைய நிகழ்வுகளால்,’ இன்று என்ன என்ன வர போகிறதோ?!’ என்ற சிந்தனையோடு தனது அறைக்கு வர, அவளின் கைபேசி ஒலியெழுப்பி தனதிருப்பை காட்ட,
அதில் தன் தந்தையின் எண்ணை பார்த்தவள் , உடனே அதை உயிர்ப்பித்து, “அப்பா..!” என…
“காயத்ரி, குழந்த எப்படிம்மா இருக்க? ஷோமமா இருக்கையோன்னோ. ஏனோ உன்னோட பேசணுமின்னு தோணின்டே இருச்சி. அதான் காலம்பரவே கூப்பிட்டேன். சௌக்கயமா இருக்கையாடா.?” என கேட்டவரின் குரலிலேயே அவரின் பாசம் புரிய,
நெகிழ்ச்சியான குரலில், “நன்னா இருக்கேன்ப்பா. நீங்க, அம்மா, அண்ணா எல்லாம் சௌக்கியமா? மன்னி வீட்டுல எல்லாரும் நன்னா இருக்காளா? மண்ணிய கேட்டதா சொல்லிடுங்கோ” என தனது குழப்பதையும், வேதனையையும் மறைத்து, தனது குரலில் சந்தோஷம் இழையோட பேச,
“எல்லாரும் நல்லா இருக்கா. கல்யாண நாள் வேற நெருங்கின்டு இருக்கே.. அதான் சரியா பேச கூட முடியலை. அண்ணா உனக்கு பேசினதா சொன்னான்?!”
“ஆமாம் அப்பா, நேத்து காலேஜ் முடியறச்ச கூப்பிட்டு பேசினார்”
” சரிம்மா உடம்ப பத்திரமா பார்த்துக்கோ. படிப்புக்குன்னு போராட்டம் பண்ணி அவ்வளவு தூரம் போயிருக்க, உன்ன நீ தான் பாத்துக்கணும் சரியா, அனாவசியமா யாரோட வம்பு தும்புக்கும் போகாம அங்க இருக்கற வரை அமைதியா இருந்துட்டு வந்திடு” என்றவர் கைபேசியை அனைத்தார்.
அதிகமான பெற்றோர் சொல்லும் அதே சொல் தான், தங்கள் மகனோ அல்லது மகளோ தேவையற்ற சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் ஒதுங்கி போக வேண்டும் என்பது. ஆனால் அநியாயத்திற்கு அடங்கி போக கூடாது என்பதை சொல்லி கொடுக்காமல் விட்டது சங்கர் செய்த பெரும் பிழையாகி போனதால் இன்று கோளையாய் நிற்கிறாள் காயத்ரி.