இளைப்பாற இதயம் தா!-முன்னோட்டம்.

இளைப்பாற இதயம் தா!-முன்னோட்டம்.
இளைப்பாற இதயம் தா!-முன்னோட்டம்
…………….
……………..
தேவகோட்டை ரஸ்தாவில் அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து அதற்கான நிறுத்துமிடத்தில் வந்து நின்றதும், அந்த பேருந்திற்காகக் காத்திருந்தவர்கள் நெருங்கினர்.
தானியங்கி கதவின் பட்டனை ஓட்டுநர் போட்டதும் கதவு தானாகத் திறந்தது.
மொத்தமே மூன்று நபர்கள்தான் ஏறினார்கள்.
மூவரும் ஏறி அவரவர் இருக்கையை சரிபார்த்து அமரக் காத்திருந்தார் ஓட்டுநர்.
அந்நேரத்தில் இறுதியாக பேருந்தில் ஏறிய கிரேஸ் ஐடா வெளியில் அவளை ஏற்றிவிட வந்த தந்தையிடம், “தூங்குமுன்ன அம்மாகிட்ட வீடியோ கால்ல பேசறேன்னு சொல்லுங்கப்பா” என்றபடியே கையை அசைத்து விடைகொடுத்தாள்.
ஐடாவிற்கு எப்போதுமே ஹோம் சிக் உண்டு. அதுவும் இதுபோல வீட்டிற்கு வந்துவிட்டு பணிக்குத் திரும்பும் நாள்களிலெல்லாம் மிகவும் சிரமப்பட்டுப் போவாள்.
அவளால் தாயையும் தந்தையையும் விட்டுப் பிரிவது அத்தனை துன்பமாக உணர்வாள்.
கையில் இருந்த மீடியம் அளவு ட்ராலி பேக்கை தூக்க முடியாமல் தூக்கியபடி அவளின் ஸ்லீப்பரை தயக்கமாக நெருங்கினாள்.
தயக்கத்திற்கான காரணம். அவள் அங்கு வருவதைக்கூட உணராது ஆகிருதியான தோற்றத்தில் அந்த சீட்டில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துத்தான்.
அவளின் சிங்கிள் ஸ்லீப்பரின் அருகே வரவும், அதற்குமுன் அவளது சீட்டில்அமர்ந்தபடியே எதிரே இருந்த டபுள் ஸ்லீப்பரில் இருந்த இரண்டு பெண்களுக்கு ஆளுக்கொரு கையைக் கொடுத்துவிட்டு இனிமையாக கடலை போட்டுக்கொண்டிருந்தவனை திசைதிருப்பும் வழி தெரியாமல் பெண்கள் இருவரையும் ஐடா நோக்க அதில் ஒருத்தி, “ஏய் வின்! அது அவங்க சீட்போல… நீ எழுந்து இடங்குடு” என்று கூற,
அப்போதும் திரும்பி ஐடாவைப் பாராமலேயே எழுந்து நின்று இடங்கொடுத்தவன் ஒருத்தியின் கையை மட்டும் விடுவித்திருந்தான்.
பேசியவள் ஐடாவைப் பார்த்தபடியே மற்ற இருவரும் பேசுவதைக் கேட்டிருந்தாள்.
மற்றொருத்தி பேச்சு மும்முரத்தோடு கண்களில் காதலுக்கும்மேல், காமத்திற்கும் கீழான ஏதோ ஒன்று வழிய கையை வின் என்று அழைக்கப்பட்டவனிடம் கொடுத்திருந்தவள் எழுந்தவனின் கையை இன்னும் விடாமல் அவனோடு அவளும் சேர்ந்து எழுந்து நின்று அவன் மேல் ஒட்டியபடி பேச்சைத் தொடர்ந்தனர்.
மணிரத்தினம் மற்றும் பாலு மகேந்திரா படங்களில்கூட இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்காது. அப்படியொரு காட்சி அது.
பெண்கள் இருவருமே மிகவும் அழகாகவே இருந்தனர். அதாவது புறத்தோற்றத்தில்!
ஐடாவைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் அழகிகள் அல்ல! சாத்தான்கள்!
மூவரின் செயலில் அவளறியாமலேயே ஐடாவின் முகம் சிடுசிடுக்க அந்தக் காட்சியைக் காண அறுவெருப்பாக உணர்ந்தவள் பேருந்தினுள் நீட்டிய தலைகளை நோட்டமிட்டாள்.
பேருந்தில் மிகவும் சொற்பமாகவே ஆட்கள் இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றும் இரண்டொரு தலைகள் மட்டுமே திரைச்சீலையை விலக்கி ஐடாவைப்போல அல்லாமல் சுவராஸ்யமாக அந்த மூவரைப் பார்த்திருந்தனர்.
ப்ரீ ஷோ!
வீட்டிலிருக்கும்போதுகூட அப்படிப்பட்ட ஆடைகளை ஐடா அணிய விரும்பமாட்டாள். அவளின் தாய் அதற்கு அனுமதிக்கவும் மாட்டார்.
மிகவும் குறைவான ஆடைகள். அது மேலும் அவர்களின் அங்கங்களை எடுத்துக்காட்டி மோசம் செய்தது. இருவரின் எழிலான தோற்றங்களில் மயங்கிப் போயிருந்தவன் இருவரைத் தவிர வேறு எதையும் பார்க்கும் நிலையில் இல்லை.
அத்தனை மயக்கத்தில் இருந்தான்.
…………………
………………….
இரு பெண்களும் அவனோடு நின்றபடி பேச்சைத் தொடர்ந்தனர். நெடுநெடுவென வளர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு சட்டென அந்த உருவம் மனதில் பதிந்தது.
வாட்ட சாட்டமாக மன்மதனுக்குப் போட்டியான தேகத்தோடும் இளநகையை இதழில் ஒட்ட வைத்தபடியும் நின்றிருந்தான்.
ஃப்ரென்ச் பியட்ர்டில் அசரடித்தான்.
ஐடாவிற்கு சுற்றம் மறந்து தன்னை மறந்து நிற்கும் அவனது நிலை கோபத்தைக் கொடுத்தது.
‘இவனெல்லாம் என்ன மனுசன்? கொஞ்சம்கூட இருக்கற இடம் உணராம எப்டி இருக்கான்? அவன் ஆம்பிளை. ஆனா இந்தப் பொண்ணுங்க… ச்செய்…’ என்று தோன்றியது.
பிறகு அந்த இரு பெண்களைக் கவனித்தாள். ‘நம்ம அம்மா மாதிரி அவங்கம்மாவெல்லாம் நல்லா அவங்களை வளக்கலியோ!’ இப்படித்தான் எண்ணத் தோன்றியது ஐடாவிற்கு.
‘ஆளு கொஞ்சம் ஸ்மார்ட்டா இருந்ததும் ஒருத்தவனையே பாத்துப் பாத்து இரண்டு லூசுங்களும் இப்டி மாத்தி மாத்தி உருகுதுங்க!
சரியான பைத்தியங்களா இருக்கும்போல’ இப்படித் தோன்றிய நேரத்தை விரையமாக்குவதைவிட, அவர்களின் அந்த நிலையைக் காணப்பிடிக்காமல் சட்டென அவளின் ஸ்லீப்பருக்குள் சென்று அமர்ந்துகொண்டாள்.
அதேநேரம் பேருந்து கிளம்ப, ஐடாவின் ஸ்லீப்பரின் திரைச்சீலையை இழுத்துவிடத் திரும்பியவள் சட்டென பேருந்து கிளம்பியதும் அந்தப் பெண்கள் முன்பைக் காட்டிலும் மேலும் அவன்மீது விழுந்து சன்னச் சிரிப்பொன்றை உதிர்ப்பதும் ஐடாவிற்குத் தெரிந்தது.
அவன் ஐடாவிற்கு முதுகு காட்டி நின்றிருந்தான்.
‘கண்றாவி… என்ன ஜென்மங்களோ! பொது இடத்தில இப்டி நடந்துக்கலாமாங்கற அறிவுகூட இல்லாம… பாக்கறவங்களை கொஞ்சம்கூட சட்டை செய்யாம அதுங்க போக்கில இப்டி இருக்குதுங்க!’ ஐடா மனதிற்குள் திட்டியபடியே தனது ஹெட்செட்டில் கர்த்தரின் அதிசயங்கள் எனும் உரையை கேட்கத் துவங்கியிருந்தாள்.
………………..
……………….
அத்தனை களேபரத்திலும் வின் என அவர்களால் அழைப்பட்டவன் அந்த இரண்டு பெண்களோடு மட்டுமே தனது கவனத்தைப் பதிந்திருந்தான்.
ஒருத்தி தன்னைத் திட்டித் தீர்ப்பதையும், அந்த இருவரைக் காட்டிலும் அவள் பேரழகி என்பதையும் காணாமல் விட்டிருந்தான்.
…………………..
…………………..
பேருந்து சென்னையை நோக்கிப் பயணமானது!
***
ஹாய் ஃபிரண்ட்ஸ்,
இதுவரை நான் எழுதிய நாவல்களுக்கு நீங்கள் தந்த ஆதரவை இந்த நாவலுக்கும் தந்து எமை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டீசர் எப்டி இருந்ததுன்னு ரெண்டு வார்த்தை சொல்லிப்போட்டுப் போங்க மக்கா…
அதுதான் என்னை அடுத்தடுத்து ஆர்வத்தோடு அத்தியாயங்களைத் தரத் தூண்டும்.
விரைவில் முதல் பதிவோடு வருகிறேன்.
அதுவரை தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள் சரோஜினி.