episode 3 (1)

டோர் டெலிவரிகளை எல்லாம் முடித்துவிட்டு, கணக்கை சரி பார்த்துவிட்டு, டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் கணக்கையும் சரி பார்த்துவிட்டு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போது மணி ஒன்றை கடந்திருந்தது. பெரியவர்கள் அனைவரும் படுத்துவிட்டனர். ராதிகாவும் திவ்யாவும் தான் ஏதோவொரு படத்தை நெட்பிளிக்ஸ்ஸில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் உறக்கம் என்பது பெரும்பாலும் பனிரெண்டை கடந்துவிடும். சிறு வயது முதலே, கடையை மூடிவிட்டு, கணக்கை முடித்து விட்டு வந்து படுப்பதுதான் செந்தூர் முருகனின் வாடிக்கை. அதற்கே பதினொன்றை கடந்து விடும். இப்போது ஹோட்டல் தொழிலும் சேர்ந்து கொண்டதால், இன்னும் மோசமாகி இருந்தது அவர்களது உறக்க கணக்கு.

ராதிகா திவ்யாவை எப்போதும் விரட்டிவிடுவார் என்றாலும் அன்றைக்கு அண்ணனிடம் அவளுக்கு பேச வேண்டி இருந்தது. ஹோட்டலை திறப்பதற்காக காலை நாலரை மணிக்கே எழுந்து கிளம்பி விடுவான் என்பதால் அப்போதும் அவனிடம் அவளால் பேச முடியாது. அதனால் ஒரே வழி, இப்போது அண்ணனை பிடிப்பதுதான் என்று முடிவு செய்து கொண்டாள் திவ்யா.

“என்ன பாப்பா இன்னும் தூங்காம என்ன பண்ற?” கசகசப்புத் தீர சுடு நீரில் குளித்துவிட்டு வந்தவன், சோபாவில் உர்ரென்று அமர்ந்து படத்தை பார்த்துக் கொண்டிருந்த தங்கையிடம் கேட்டான்.

“நல்லா சொல்லுடா தம்பி. என்னவோ அப்பத்துலருந்தே உர்ருன்னு இருக்கு…” ராதிகா கொட்டாவியை வெளியேற்றியபடி கூற,

“நீ ஏன்மா முழிச்சுட்டு இருக்க? போய் படுக்க வேண்டியதுதான?” என்று கேட்டான் அர்ஜுன்.

“இவ வராம நான் எப்படி போய் படுக்கறது? நான் தூங்கிட்டாலும், என்னை எழுப்பி விட்டு முடியை கோதி விட்டு தூங்க பண்ணுன்னு மடில படுத்துகிட்டு என்னை டார்ச்சர் பண்ணுமே உன்னோட உடன்பிறப்பு…” என்று ராதிகா சலித்துக் கொள்ள, அர்ஜுன் சிரித்தான்.

“நான் ஆசையா உன் மடில வந்து படுக்கறது உனக்கு டார்ச்சரா இருக்கா? இனிமே வந்து படுக்கல போ…” என்று உதட்டை பிதுக்கியவள், “இன்னும் எத்தனை நாள் படுக்க போறேன். அதான் கல்யாணம் பண்ணி துரத்தி விட்டே ஆகணும்ன்னு நிக்கறீங்கல்ல?” என்றும் கூறிக் கொண்டு இன்னும் உதட்டைப் பிதுக்கினாள்.

“உனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னா சொல்லுடா. அப்பா கிட்ட சொல்லிடலாம்…” என்று அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவளது தலையை வருடியபடி அர்ஜுன் கூற, ஆர்வமாக அவனை ஏறிட்டாள் அவனது தங்கை!

இருவரும் வளர்க்கும் பாசப்பயிரை வளர விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்ட ராதிகா, “ஏய் என்னடி? நீ ஓகே சொல்லித்தான வேலையெல்லாம் ஆரம்பிச்சுது. இப்ப திடீர்ன்னு இப்படி சொன்னா மாப்பிள்ளை வீட்டுக்கு யார் பதில் சொல்லுவா? இன்னும் ஒரே மாசத்துல நிச்சயத்தை வெச்சுகிட்டு பேசற பேச்சா இது?” ராதிகாவுக்கு கோபம் வந்தது.

“ம்மா அதான் பாப்பாவுக்கு பிடிக்கலைங்கற மாதிரி சொல்றால்ல…” சப்போர்ட்டுக்கு வந்தான் அர்ஜுன்.

“இன்னுமா இவளை நம்பற நீ? வந்ததுல இருந்து அர்ச்சனை சஹஸ்ர நாமம், அஷ்டோத்திரம் எல்லாம் பாடிட்டா. சூர்யாவை கரிச்சு கொட்டிட்டா. அவளை மாதிரி இவளும் பிசினஸ் பண்ணனுமாம். அப்புறமாத்தான் கல்யாணம் பண்ணுவாளாம். திடீர்ன்னு அம்மணிக்கு ஞானோதயம் பிறந்திருக்கு…” என்று சிரித்தார் ராதிகா.

“அப்படியா பாப்பா?” என்று ஆதரவாக கேட்டான் அர்ஜுன்.

“ஆமா. அவ மட்டும் என்னென்ன பண்றா? நானும் அதெல்லாம் பண்ணனும். நானும் சம்பாதிக்கணும். அப்புறம் தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன், ஆச்சுண்ணா.” அவள் அழைப்பது ஆச்சுண்ணா தான்.

“அதெல்லாம் சின்ன வயசுலருந்து அந்த பொண்ணு கத்துகிட்டது திவி. இப்ப திடீர்ன்னு எப்படி நீ கத்துக்குவ?” என்று அர்ஜுன் கேட்க,

“எப்படியோ கத்துக்கறேன். என்னை கிளாஸ்ல மட்டும் சேர்த்தி விடுண்ணா.” கெஞ்சுதலாக கேட்டாள் திவி.

“ஏய் நிறுத்துடி. நீ இடத்தை காலி பண்ணாத்தான் உங்கண்ணனுக்கு முடியுமாம். அது புரியாம அத பண்ண போறேன், இத பண்ண போறேன்னு ரொம்ப பேசிட்டு இருக்க?” என்று நறுக்கென்று கேட்டார் ராதிகா.

“நான் என்ன அண்ணனுக்கு நல்லது நடக்கக் கூடாதுன்னு நினைக்கறேனா? நல்லா பண்ணி வை. ஆனா நான் பிசினஸ் பண்ண போறது உறுதி.” திட்டவட்டமாக அறிவித்தாள் திவ்யா.

சிறுப்பிள்ளை தனமான அவளது முடிவைப் பார்த்து சிரித்தான்.

“சரி எங்க கிளாஸ் எடுக்கறாங்கன்னு நீயே விசாரி திவி.” என்றான் அர்ஜுன்.

“அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி புலம்ப போறேன்?” முனகினாள்.

“உனக்கு விசாரிக்கவே வலிக்குதாம். இதுல எப்படி திவி முழுசா கத்துக்குவ?” கேட்டது ராதிகா தான்.

“அப்படீன்னா என்னம்மா சொல்ற? ஒவ்வொன்னையும் நானே தேடி கண்டுபிடிக்கனும்ன்னு சொல்றியா?” முகத்தை இழுத்து வைத்துக் கொண்டு சண்டையிட்டாள் திவ்யா.

“ஏய் அம்மா அப்படியொண்ணும் சொல்லல. நீ கொஞ்சம் எபோர்ட் போட்டாத்தான எவ்வளவு சீரியசா இருக்கன்னு தெரியும்.” அர்ஜுன் தனியாக விளக்கினான்.

“இவ புலம்பறதை கண்டுக்காத அஜ்ஜும்மா. சின்ன வயசுலருந்து பாத்தாச்சு. எதாவது பண்ண போறேன்னு பயங்கரமா பில்ட் அப் குடுத்து, அதுக்கு எல்லாத்தையும் வாங்கி குவிப்பா. ஆனா இவ இன்ட்ரெஸ்ட் ரெண்டு நாளைக்கு தான். வாங்கி குவிச்சதெல்லாம் ஒரு ஓரமா கிடக்கும்.” சிரித்தார் ராதிகா.

“ம்மா… நீயெல்லாம் ஒரு அம்மாவா?” கண்ணை சுருக்கிக் கொண்டு வில்லியாக திவ்யா கேட்க, அர்ஜுன் சிரித்தான்.

உண்மையிலேயே அதுதான் நடக்கும். பரத நாட்டியம் கற்றுக் கொண்டேயாக வேண்டும் என்று பிடிவாதமாக போய் சேர்ந்தாள். பரத நாட்டிய மாஸ்டர், நல்ல பெயர் வாங்கியவர். புதிதாக சேரும் மாணவிகளுக்கு ஆறு மாத பீஸை முதலிலேயே வாங்கி விடுவதாக கூறினார். ஏன் என்று கேட்ட போது, ‘அப்போதுதான் பணம் கட்டியதற்காகவாவது பிள்ளைகள் ஒழுங்காக வகுப்புக்கு வருவார்கள்’ என்று கூறி நல்ல அமௌன்ட்டாக வாங்கியும் விட்டார். ஆனால் திவ்யாவின் பிடிவாதம் என்பது அந்த வகுப்புக்கு போய் சேரும் வரை தான்.

சேர்ந்த பின், பத்து நாட்கள் போனாள். அதன் பின், ‘அம்மா கை வலிக்குது, அர மண்டி போட்டு கால் வலிக்குது…’ என்று கூறியே ஜகா வாங்கியிருந்தாள். அந்த மாஸ்டரின் மாஸ்டர் ப்ளான் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை!

கட்டிய தொகை கட்டியதுதான்.

ஸ்வாஹா!

அடுத்து பாட்டு வகுப்பு! அதே பிடிவாதம்… அதே சாக்குபோக்கு தான்! இது பதினைந்து நாள் வரை தாக்குபிடித்தது!

அங்கு கட்டிய தொகையும் கட்டியதுதான்.

ஸ்வாஹா!

அடுத்து ஒவ்வொரு முறை வெய்ட் செக் செய்யும் போதும் அடுத்த இரண்டு நாளுக்கு புலம்பிக் கொண்டிருப்பாள். ‘நான் வெய்ட்டை குறைச்சே ஆகணும்’ என்று அனைவரின் காதையும் தீய்த்து விட்டு ஜிம்முக்கு போய் வருடாந்திர மெம்பர்ஷிப் எடுப்பாள். எடுத்த குறைக்கு ஒரு வாரம் போவாள். அடுத்து அந்த வருடாந்திர மெம்பர்ஷிப் முடியும் வரை ஜிம் பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை.

ஸ்வாஹா!

அடுத்து ஸ்விம்மிங்… என்று ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட வரலாற்றை கொண்டவள் தான் திவ்யா என்பதால் தான் இருவரும் இப்படி கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சரி திவி. உன்னோட பீலிங்க்ஸ் புரியுது. நீ ஏன் இதை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு பண்ணக் கூடாது. நீ என்ன பண்ணாலும் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்ல…” அர்ஜுன் கூறியதும் அவளுக்கு சரியாகத்தான் பட்டது.

ஆனால் யோசனையாக அமர்ந்திருந்தாள்.

“சரிம்மா, ரொம்ப யோசிக்கறா. காலைல நான் கார்த்திக் கிட்ட பேசிடறேன்…” என்று அவன் எழுந்து கொள்ள, அதிர்ந்து அவனைப் பார்த்தாள் திவ்யா.

“ஏன் என்ன பேச போற?” அவனை முறைத்தாள்.

“திவி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டா. நீங்க வேற இடத்துல பொண்ணு பார்த்துக்கங்க சொல்லிடறேன்.” என்று சிரிக்காமல் கூறினான்.

“என்ன????” என்று ஜெர்க்கானாள்.

“ஆமா அஜ்ஜும்மா. அதுதான் கரெக்ட். நிச்சயத்துக்கு இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. இப்பவே சொல்லிட்டா தான் நல்லது. அந்த பையன் மனசுல ஆசைய வளர்த்து விட்டு, அப்புறமா நம்ம திவிக்குட்டி வேலைய காட்டி… எதுக்கு? நீ சொல்லிடு கண்ணா..” அர்ஜுனின் வழியிலேயே ராதிகாவும் வர, அவரையும் முறைத்தாள் திவ்யா.

கார்த்திக்!

‘அவனை எப்படி மறந்தேன்?’ என்று தீவிரமாக யோசித்தாள். அவனை மறந்துவிட்டு தன்னால் இருந்துவிட முடியுமா என்று யோசித்தாள். ‘நோஓஓ… முடியாது…’ என்று தலையைக் குலுக்கிக் கொண்டாள்.

“இங்க பாரு கிழவி. எனக்கும் கார்த்திக்கும் இடையில வர்ற வேலை வெச்சுக்காத. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி லொள்ளு பேசுவ?” விட்டால் ராதிகாவின் முடியை பிடித்து விடுவாள் போல. அவள் பேசிய தோரணையில் சிரித்து விட்டான் அர்ஜுன்.

“திவி… நீ தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன.” சிரித்தபடியே அவன் கூற,

“அது… கல்யாணம் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்…” அவளது குரல் உள்ளே போய்விட்டது.

“கார்த்திக்கை நீ சொல்லல?” வாய்விட்டு சிரித்தான் அர்ஜுன்.

“அண்ணா…” சிணுங்கினாள்.

காரணம் கார்த்திக்!

ஒரு விசேஷத்தில் பார்த்து பிடித்துப் போய், அவர்களாக நேரடியாக செந்தூர் முருகனிடம் பேசியிருந்தனர். தமையனுக்கு செய்யாமல் தங்கைக்கு எப்படி திருமணம் செய்வது என்று வெகுவாக யோசித்தார் அவர். அப்போதுதான் அர்ஜுனுக்கு பார்த்த இரண்டு வரன்கள் தட்டிப் போயிருந்தான.

ஒவ்வொரு வரன் தட்டிப் போகும் போதும் அர்ஜுனுக்கு உள்ளுக்குள் வலிக்கும். ஆனால் காட்டிக் கொண்டதில்லை. இருபத்தியிரண்டு வயதுக்கெல்லாம் தந்தையோடு உழைக்க வந்துவிட்டவன் அவன்.

படித்தது இஞ்சினியரிங் என்றாலும் தந்தையோடு தொழிலைப் பார்க்கத்தான் பிடித்தது அவனுக்கு. அதனால் கேம்பஸில் கிடைத்த வேலைகளை எல்லாம் அவன் கொஞ்சமும் கவனத்தில் கூட கொள்ளவில்லை. அப்போதிருந்து அவன் அறிந்ததெல்லாம் அவர்களது டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோரும் அடுத்து அவன் தொடங்கிய ஹோட்டலும் தான்.

ஹோட்டலை தொடங்கிய பின் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரே இன்னொரு கிளையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தான். இன்னும் இதில் பெரிதாக வர வேண்டும் என்ற வெறியே இருக்கிறது அவனுக்கு. ஹோட்டலும் செய்யின் ஆப் ஹோட்டல்ஸ் பாணியில் கொண்டு வர வேண்டும் என்ற லட்சியமும் இருக்கிறது.

இப்போதிருக்கும் வீட்டை விட இன்னும் பிரம்மாண்டமாக வீடு வேண்டும் என்று இன்னொரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறான். அது அவனது கனவு மாளிகை. முழுக்க முழுக்க அவனது சம்பாத்தியம் அது!

செந்தூர்முருகனுக்கும் சரி, ராதிகாவுக்கும் சரி அவனது வளர்ச்சி அனைத்தும் மகிழ்ச்சி தான். ஆனால் பிரச்சனை அவனுக்கு வரன் பார்க்கும் போது தான் ஆரம்பித்தது.