இளைப்பாற இதயம் தா!-10அ

இளைப்பாற இதயம் தா!-10அ

இளைப்பாற இதயம் தா!-10A

          அலைபேசி சத்தம் எழுப்பியதும் ஆர்வத்தோடு வந்து கணவனது அழைப்பாக இருக்கும் என எண்ணி எடுத்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஏற்று, “ஹாய் சிந்து…” சுரத்தில்லாமல் வந்தது ஐடாவின் குரல்.

          “ஹலோ ஐடா. வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு!”

உடல்நிலையைப் பொருட்படுத்தாது அலுவலகம் சென்றாலும் தன்னால் அங்கு சமாளிக்க முடியாது என்பது புரிந்தும், வந்த மறுநாளே எப்படி விடுப்பிற்கு சொல்வது எனும் தயக்கத்தோடு இருந்தவள் சிந்து அழைத்ததும் தயக்கமின்றி பேசத் துவங்கியிருந்தாள் ஐடா.

“நானே கால் பண்ண நினைச்சிட்டிருந்தேன். சாரி” ஐடா கூற வந்ததை முடிக்கும்முன்,

“கம்பெனி வெகிகிள் மிஸ் பண்ணிட்டியா?” சிந்து.

          “இல்லை சிந்து”

“என்னாச்சு ஐடா?” எதிர்பக்கம் இருந்தவளுக்கு, இன்று ஐடாவைக் கொண்டு சில வேலைகளை யோசித்து கிளம்பியிருந்ததால் அவளைப் பற்றி அறிந்துகொண்டே ஆக வேண்டிய நிர்பந்தம்.  அதனால் அதை அறிந்துகொள்ள எண்ணி வினாவெழுப்பினாள்.

ஐடா, “என்னானு தெரியலை. திடீர்னு உடம்புக்கு முடியலை!”

          “நேத்து ஈவினிங் வரை நல்லாதானே இருந்த?”

          “ஆமா.  பட்… நைட் நல்ல தூக்கம் இல்லை!  ஒரு வேளை அதனாலதான் டயர்டா ஃபீல் ஆகுதோ… என்னானு தெரியலை!” சோர்வாக பதிலளித்தாள் சிந்துவிடம்.

          சிந்து, பங்களூரில் இயங்கும் அவர்களது அலுவலக கிளையின் பொறுப்பு அதிகாரி.  ஐடா ஏறும் பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்து வரக்கூடிய நிறுத்தத்தில்தான் சிந்து ஏறுவாள்.  அப்படி பேருந்தில் ஏறிவிட்டு ஐடாவைக் காணாது, பேருந்து தவற விட்டிருப்பாளோ என்று ஐடாவிற்கு அழைத்திருந்தாள்.

          ஐடா தனது உடல் நிலையை சற்று குறைத்தே கூறிவிட்டு, தான் இல்லாவிட்டாலும் தனது மேற்பார்வையில் நடக்க வேண்டி இருந்த பணி சார்ந்த விசயங்களை சிந்துவின் மேற்பார்வையில் கவனித்துக்கொள்ளும்படி கூறினாள்.

          விடுப்பிற்கும் பேசிவிட்டு, சிந்துவின் கரிசனையான பேச்சுகளை செவிமடுத்தபடி இருந்தவளை விடுதியின் பொறுப்பாளர் வந்து அழைத்தார்.

          சிந்துவிடம் விடுதி நிலவரத்தைக் கூறி வைத்துவிட்டு அவரிடம் வந்த ஐடா என்னவென்று விடுதிப் பொறுப்பாளரிடம் விசாரிக்க, “உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்கம்மா” கன்னடம் கலந்த ஆங்கிலத்தில் கூறிவிட்டு அதற்குமேல் ஐடாவின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நடக்கத் துவங்கிவிட்டார்.

செல்லும் அவர் பின்னே சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்த ஐடாவின் காதுகளில் அட்சரம் பிசகாமல் அந்தப் பெண்மணி பேசுவது கேட்டது.

“எத்தனை முறை சொன்னாலும் காதுலயே வாங்காதுங்க.  ஹாஸ்டல்ல இடம் கிடைக்கறவரை பாவம்போல முகத்தை வச்சிட்டு நல்லவ வேஷம் போட்டு நிப்பாளுங்க.  வந்த அடுத்த நாளே எவனாவது வாசல்ல வந்து நின்னுருவான்.  கேட்டா அண்ணன், தம்பினு கதை சொல்லுவாளுங்க! எல்லா நம்ம கழுத்தறுக்கன்னே வருதுங்க!” விடுதிப் பொறுப்பாளரின் முதுகை வெறித்தபடியே அவளின் பின்னே யோசனையோடு வந்தாள் ஐடா.

          பொறுப்பாளரின் பேச்சை வைத்து தன்னைக் காண வந்திருப்பது ஆணாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், யார் தன்னைத் தேடி இங்கு வந்திருக்கக்கூடும் என்ற குழப்பம் ஐடாவின் முகத்தில்.

          என்ன நினைத்தாரோ அந்த பெண்மணி.  சட்டென திரும்பி ஐடாவைப் பார்த்து, “நீ இங்க வந்ததுல இருந்து இப்டி நடந்ததில்லை.  ஆனாலும் இனியும் இப்டி நடக்காமப் பாத்துக்கோ” என்று கூறிவிட்டு, விசிட்டிங்க ஹாலை நோக்கிக் கை காட்டி, “அதோ அங்க வயிட்டிங் ரூம்ல உக்காரச் சொல்லிருக்கேன்” என்ற பெண்மணி தனது வேலை முடிந்ததுபோல அங்கிருந்து அகன்றுவிட்டார்.

          ஐடா மெதுவாகவே விசிட்டர் அறை நோக்கி நகர்ந்தபடியே, ‘இங்க என்னைத் தேடி யாரு வந்திருப்பா?’ எனும் குழப்பம் தாங்கிய முகத்தோடு முன்னேறினாள்.  அங்கு சற்று தூரத்தில் தெரிந்தவனின் உயரத்தினைக் கொண்டே அது யாராக இருக்கக்கூடும் என்பதைக் கணித்துவிட்டாள் ஐடா.

          கண்டதுமே ஐடாவின் உடல் உள்ளம் இரண்டிலும் ஒரு புத்துணர்வு சட்டென வந்து ஒட்டிக்கொண்டது.

குழப்பம் விலகியோடி, அதுவரை இருந்த பிணியின் அசதியும், மனச் சுணக்கமும் அவளைவிட்டுப் போனாற் போன்றிருந்தது ஐடாவிற்கு.  முகத்தில் சட்டென இளமுறுவலோடு நாணமும் வந்து ஒட்டிக் கொண்டது.  தன்னைத்தேடி இத்தனை தூரம் எதுவும் சொல்லாமல் வந்து நிற்கும் கணவனை எண்ணி நெஞ்சுக்குள் இனிமை இதமாய் நிறைத்தது. 

          ரீகன் வாயிலருகே நின்று சாலையில் செல்வோரை வேடிக்கை பார்த்தபடி முதுகு காட்டி நின்றிருந்தான்.  அவன் திரும்பும்முன் வேக எட்டு போட்டு அருகே சென்றவள் அவனது வலக்கையைப் பற்றி, “ரீகன்…!” என்றழைத்ததில் சட்டென தனது கரத்தைப் பற்றி நிற்பவளை தொடர் கடும் மழைக்குப்பின் உதிக்கும் சூரியனைக் காணும் பயிர்களைப்போல ஐடாவைத் திரும்பிப் பார்த்தான் ரீகன்.

          ஒருவரையொருவர் திருமணத்திற்குப்பின் ஒரு நாள் பிரிவிற்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு! (ஒரு நாளைக்கே இந்த அக்கப்போரான்னு யாரும் கேக்கப்படாது)

          ரீகனுக்குமே சென்னையில் இருப்பு கொள்ளவில்லை.  வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.  தனது தேவை தற்போது என்ன என்பதையும் சற்று நிதானமாகவே யோசித்தான்.

உடல் பசியல்ல இது என்பதும் அவனுக்குத் தெளிவானது.  ஒரே வீட்டில் பாலியல் தேவை சார்ந்த எண்ணமே எழாமல் மனைவியைக் கட்டிக்கொண்டும், ஒட்டிக்கொண்டும் உறங்கிய இரவுகள் மனக்கண்ணில் வந்து போனது.

ஐடாவின் மீது அவனறியாமலேயே கொண்டிருந்த நேச மிகுதியினால் உண்டான தேடல் இது என்பதும் புரிய வந்தது. அருகாமையில் ஐடா இருக்கிறாள் என்கிற எண்ணமே அவனை பல புற விசயங்களில் எந்த இடையூறும் இன்றி சமீப காலமாக ஈடுபடச் செய்ததும் புரிந்தது.

ஐடா வந்த ஆறு மாதங்களில் தொழில்முறையில் எல்லாம் முந்தையகாலங்களைவிட நல்ல வளர்ச்சி என்பதே அதற்கான சான்று. முன்பெல்லாம் பதினைந்து நாள்களுக்குப்பின் போராட்டமாக மாறும்.  எப்போது போகலாம், எவளைத் தேடிப் போகலாம், யாரை அணுகினால் தனது தேவை நிறைவேறும்.

இப்படிப்பட்ட சிந்தனை சிதறல்கள் ஐடாவை பெண் பார்த்து வந்தது முதலே தனக்குள் இல்லாமல் போன மாயம் ரீகனை ஆச்சர்யம் கொள்ள வைத்ததென்னவோ உண்மைதான்.

‘பேரழகியா இருக்கணுங்கற தேவையில்லபோல.  ஏதோ மாயம்! அவக்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு!  இல்லைன்னா… எத்தனையோ பெண்களைப் பார்த்த என்னையே இப்படி வசியம் பண்ணி வச்சிருப்பாளா!’ இப்படி ரீகனுக்குத் தோன்றவே செய்தது.

ஆனால் தற்போது தாபத்தினால் எழுந்த போராட்டமல்ல தனக்குள்.  அவள் அருகிலில்லாத நிமிடங்களைக் கடக்க முடியாத தவிப்பினால் உண்டான போராட்டம்.  அவள் அருகே இருந்தாலே அந்தப் போராட்டத்திற்கு தன்னால் முற்றுப்புள்ளி வைக்க இயலும் என்பது ரீகனுக்குப் புரிந்தது.

வீட்டிற்குத் திரும்பினால் ஐடா இருக்க மாட்டாள் என்கிற நினைப்புதான் தற்போது அவனால் எந்த இலகுவான சூழலையும் எளிதாகக் கடக்க முடியாத கடினமான நிகழ்வாக இருந்ததையும் உணர்ந்தான்.

இது என்ன விதமான நிகழ்வு, இது எதனால் என்பதையெல்லாம் ஆராயப் பிடிக்கவில்லை என்பதைவிட அதற்கு செலவளிக்கும் நேரத்தில் அவளருகே செல்ல தான் என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசித்தான்.

          இதற்கு முன்புவரை இப்படி இருந்தவனல்லவே ரீகன்.  எத்தனையோ பெண்களைக் கடந்து வந்தவனுக்குள் ஐடாவின் பிரிவை ஒரு நாள்கூட பொறுக்க முடியாத நிலை. 

ஐடாவிற்கு எப்படியோ?  ஆனால் அவனால் அவளைப் பார்க்காமல் உறங்க, உண்ண, உழைக்க, எதிலும் கவனம் செலுத்த முடியுமென்று தோன்றவில்லை.

          ஒரு எட்டு சென்று பார்ப்பது, இயன்றால் அவளைக் கையோடு கூட்டி வந்துவிடுவது எனும் எண்ணத்தோடுதான் கிளம்ப எண்ணினான். கிளம்ப வேண்டும் என்று முடிவானதுமே ஐடாவைப் பற்றிய உண்மை அவனைக் கேலி செய்தது. 

இங்கு இருக்கும்போது தான் எவ்வளவு சொல்லியும் கேளாது கிளம்பி பங்களூர் சென்றவள், அழைத்ததும் தன்னோடு எப்படி உடனே வருவாள்? என்பதுதான் அது.

          மாற்றி யோசிக்கச் சொன்னது ஐடாவைத் தெரிந்த மனம்.  அத்தோடு மாற்று வழி என்னவாக இருக்கும் என்று சிந்திக்கையில்… ஐடாவிற்கு கடந்த ஆறு மாதங்களில் பழகிக் கொண்டவன், அவளின்றி இருக்கவும் பழகிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லை.

மாறாக அவளோடு பங்களூரில் இருந்தபடியே எப்படி தனது பணியைச் செய்யலாம் என்று மட்டுந்தான் சிந்தித்தான்.

          கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதாக இருந்தது ரீகனின் முடிவு.  ஆம், அவனது தொழில் எந்தத் தொய்வுமின்றி நடந்தேற வேண்டும்.  அதேநேரம் மனைவியோடும் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி மனைவியோடு அங்கேயே வீடு அல்லது ஃபிளாட் பார்த்து தங்கியிருப்பது எனும் முடிவிற்கு வந்திருந்தான் ரீகன்.

          அங்கு ஒன்றரை ஆண்டுகள் பணி புரிந்தபோது கிடைத்த நண்பர்களின் எண்ணை தேடி எடுத்து… அழைத்து, ‘ஃபிளாட் ஆர் ரென்டல் ஹவுஸ் எதாவது கிடைக்குமா?” என்று வினவ, சிலர் “எதாவது புரோக்கர்கிட்ட சொல்லி வச்சா பாத்துத் தருவாங்க.  இந்தா நம்பர்” என்று தந்தார்கள்.

சிலர், “ஃபிளாட்டெல்லாம் அத்தனை சீக்கிரமா இங்க வாங்க முடியாது.  ரென்ட்டுக்கே எதாவது பாரு” என்றனர்.

ஒருத்தன் மட்டும், “நம்மளோட இங்க இருந்த ராபீன் இப்போ ஆன்சைட் புராஜெக்ட்காக யுஎஸ் போயிருக்கான் மாப்ள.  அதனால அவனோட ஃபிளாட் சும்மாதான் இருக்கும்.  அவங்கிட்ட கேட்டுப்பாரு.  அவன் வரவரை நீ யூஸ் பண்ணிக்கலாம்.  ” என்றதுமே, ராபினுக்கு அழைத்துப் பேச… அவனும், “இப்பதான் என் நினைப்பு வந்துச்சா” எனத் துவங்கி சற்று நேரம் ரீகனைத் தாளித்த பிறகு, “உனக்கில்லாமயா மச்சான்.  நான் வர இன்னும் நாலு மாசம் ஆகும்.  அதுவரை நீ தங்கிக்கோ.  பிரச்சனை ஏதும் ஆகற மாதிரி மட்டும் பண்ணிறாத” என்று பழைய நினைப்பில் ரீகனை வாரிவிட்டுச் சிரிக்க,

“வயிஃப் இப்போ இங்க ஹாஸ்டல்ல இருக்கா மாப்ள.  அவளுக்கு அங்க கன்வினியண்ட்டா இல்லாததால எதாவது ஃபிளாட் வாங்கலாம்னு ஐடியா.  அப்பதான் நம்ம க்ருத்திக் சொன்னான்.  உனக்கு இங்க பிளாட் இருக்குதுனு” என்று விசயத்தைக் கூறியதும்,

“கல்யாணம் ஆயிருச்சா உனக்கு!  எனக்கெல்லாம் இன்வைட் பண்ணலை” என்று சற்று நேரம் திட்டித் தீர்த்துவிட்டு பிறகு தனது ஃபிளாட்டிற்கான சாவியை எங்கு சென்று யாரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கேட்டறிந்து கொண்டு சென்னையிலிருந்து கிளம்பி வந்திருந்தான் ரீகன்.

வந்தவன் தனது நிலையைப்போல ஐடாவின் நிலையும் இருக்கும் என்று யோசிக்கவே இல்லை.  இதுவரை அவன்தான் ஐடாவைத் தேடுவான்.  அவள் எப்போதும் புதிராகவே இருப்பாள் ரீகனுக்கு.

அப்படி நினைத்து வந்தவனுக்கு, கிடங்கு விழுந்த கண்களோடு முகம் வாடி இதழில் ஒட்டியிருந்த இளநகையில் ஜீவனற்று நின்றிருந்த மனைவியைக் கண்டதும் ரீகன் மனம் சோர்ந்தாலும் அவளிடம் அதைக் காட்டாது ஆராய்ச்சியைத் துவங்கியிருந்தது.

          முந்தைய தினம் தன்னிடம் விடைபெற்று துள்ளலோடு கிளம்பி வந்த ஐடா இல்லை இவள் என்பது பார்த்ததும் ரீகனுக்குப் புரிந்திருக்க, “ஹனீஈஈ..” என அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை.  அதில் அவள் கிளம்பி வந்த தினத்தைவிட எண்ணூறு கிராம் தற்போது அவளின் உடல் பாகத்தில் எங்கு குறைந்திருக்கிறது என்பதைக்கூட சட்டென கண்டுகொண்டிருந்தான்.

          காலையில் வந்து ராபினின் நண்பனைக் சந்தித்து அவனிடம் பிளாட் சாவியைப் பெற்றுக்கொண்டு ஐடாவைக் காண வர தாமதம் ஆகியிருக்க, அதற்குள் மனைவி அலுவலகத்திற்கு கிளம்பிப் போயிருப்பாளோ என்றெண்ணி வந்தவனுக்கு, அவள் அலுவலகத்திற்கு கிளம்பிய சுவடே இன்றி நின்றது மனதை இடறியது.

 “ஆபிஸ் கிளம்பலையா?  நீ இன்னேரம் ஆபிஸ் போயிட்டிருப்பியோன்னு டவுட்லதான் வந்தேன்.” ரீகன்.

          தலையை மறுத்து இல்லையென்றவள், “என்னாச்சுனு தெரியலை.  தலை சுத்தலா இருக்கு.  ரொம்ப டயர்டா எழுந்துக்கவே சிரமமா இருந்தது.  அதான் லீவு சொல்லிட்டேன்!”

          அவள் கூறியதைக் கேட்டவனுக்கு அவளின் நிலையை எண்ணி பதற்றம் வந்திருக்க, “என்னாச்சுடா…” பதறி அவள் புறம் திரும்பி கன்னங்களை தனது கரங்களில் ஏந்தி அவளின் கண்களை ஆராய்ந்தான்.  அதில் அவளின் உறக்கமில்லா இரவின் பரிசாய் கண்கள் சோர்ந்து இருளடைந்த பங்களாவைப்போல அவளைக் காட்சிபடுத்தியதை அவனால் அறிந்துகொள்ள முடிந்தது.

          இடம் பொருளறிந்து அவனது கரங்களை விலக்கியவள், “நீங்க எப்ப கிளம்புனீங்க?  நான் கால் பண்ணா ஏன் எடுக்கலை?” ஒரு சாதாரண மனைவியின் தோரணையில் துவங்கியிருந்தாள்.

          இதுவரை இப்படியெல்லாம் உரிமையோடு எந்தக் கேள்வியும் எழுப்பியிராத மனைவியின் கேள்வியில் அவளோடு மேலும் நெருங்கிப் போன உணர்வின் இதத்தை ஐடாவிடம் மறைத்தபடி, “அந்தக் கதையெல்லாம் இப்ப இங்க சொல்ல முடியாது” என்றவன்,

“ஹாஸ்டல் வகேட் பண்ணிட்டு கிளம்பு!” என்றான்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!