இளைப்பாற இதயம் தா!-10ஆ

இளைப்பாற இதயம் தா!-10ஆ

இளைப்பாற இதயம் தா!-10B

          “கிளம்பி?” சந்தேகமாகக் கேட்டாள் ஐடா. ஐடாவிற்கு தன்னை சென்னை அழைத்துப்போகத்தான் கணவன் வந்திருக்கிறானோ என்கிற பயம்.  அந்த பயத்தை வெளிக்காட்டாது கேட்டாள். அதுவரை கணவனைக் கண்ட இதம் சற்று தொலைந்தாற்போலிருந்தது ஐடாவிற்கு.

          வெளிறிய முகத்தோடு தன்னை நோக்கிக் கேட்ட மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தபடியே “ஃபிரண்டோட ஃபிளாட் ஒன்னு இருக்கு.  அங்க தங்கி நீ ஆஃபீஸ் போ!” என்றான். கணவனது பதிலில் தான் இத்தனை பயந்திருக்கத் தேவையில்லை என்பது புரிய உள்ளுக்குள் நிம்மதி பரவியது. 

          “இதுதான் நான் எப்பவும் இங்க வந்தா தங்கற ஹாஸ்டல்.  இங்க இருந்து கம்பெனி வெகிகிள்ளயே ஆபிஸ் போயிட்டு வர வசதியா இருக்கும்.  அங்க…” என இழுத்தாள் ஐடா.

          “எல்லாம் விசாரிச்சாச்சு.  அந்த ஃபிளாட் உன் ஆபிஸ்ல இருந்து வாக்கபில் டிஸ்டன்ஸ்லதான் இருக்கு” என கணவன் சொன்னதை நம்பி, சட்டென உடைமாற்றிக் கிளம்பி வந்தாள் ஐடா. 

அதன்பின் விடுதிப் பொறுப்பாளரிடம் சொல்லிக்கொண்டு ஒரு வாரத்திற்கான பணத்தைச் செலுத்திவிட்டு கணவனோடு கிளம்பினாள்.

          குறைந்தபட்சமாக ஒரு வாரத்திற்கான வாடகை அந்த விடுதியில் வசூலிப்பது ஐடாவிற்கும் தெரியும்.   அதனால் எந்த தர்க்கமும் செய்யாமல் கேட்டதைக் கொடுத்துவிட்டு கணவனிடம் புலம்பியபடியே கிளம்பினாள்.

          கிளம்பியதும் ரீகனது தோளில் சாய்ந்ததுதான் ஐடாவிற்குத் தெரியும்.  சட்டென ஆழ்ந்து உறங்கிவிட்டாள். நாற்பது நிமிடங்களுக்குப்பின் காலை ஆகாரத்திற்கு வேண்டி வண்டியை நிறுத்தி ஐடாவை எழுப்பினான்.

          “பசிக்கலை எனக்கு.  நீங்க வேணா போயி சாப்பிட்டு வாங்க.  நான் காருலயே தூங்கறேன்” என்றவளை வற்புறுத்தி தன்னோடு அழைத்துக்கொண்டு இறங்கினான் ரீகன்.

          ஐடா வழமைபோல உணவை உட்கொள்ளாமல் பாதியிலேயே எழுந்தது அனைத்தையும் கவனித்தவன், “உன்னை ஒரு நல்ல கைனக்கிட்டதான் கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்” சரியாக கணித்து ஆருடம் சொன்னான்.

அப்போது ரீகனுக்குள் தோன்றியது ஒன்று.  மருத்துவர் தான் நினைத்ததையே கான்ஃபார்ம் செய்தால் கண்டிப்பாக ஐடா தன்னிடம் இதைப்பற்றி கேட்பாள் என்று. சமாளிக்கவா ரீகனுக்குத் தெரியாது.

          ஐடாவிற்கு அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாமலேயே, “கைனக்கா…” என்று ஐடா கேட்டதும் ஆமென ஆமோதித்தவன், “இங்க உனக்கு கைனக் யாரையும் தெரியுமா?” என்று கேட்டான்.

          “இதுவரை டாக்டர்ஸ் யாரையும் இங்க தெரியாது” சோர்வாகக் கூறியவளை வற்புறுத்தி இரண்டு வாய் உண்ணச் செய்து ஃபிளாட்டிற்கு அழைத்து வந்தான்.

          வந்தவர்கள் லிவ்விங் ஏரியா, கிச்சன், இரண்டு படுக்கையறையில் அட்டாச்டு டாய்லட், பாத்ரூம், பால்கனி என நேர்த்தியாக ஃபிளாட் இருந்ததைப் பார்த்தனர்.

          “பிடிச்சிருக்கா?” என்று கேட்ட கணவனிடம், “அந்த ஹாஸ்டலுக்கு இது இருநூறு என்ன ஐந்நூறு மடங்கு அதிகம்” என்றாள் ஐடா. நேர்த்தியாக இருந்தது அந்த ஃபிளாட்.  அனைத்து வசதிகளும் இருந்தது.

நண்பனுக்கு அழைத்துப் பேசினான்.  வந்த செய்தியைக் கூறியதோடு, மகப்பேறு மருத்துவர் பற்றி கேட்டான்.

          அவன் கூறிய மருத்துவரின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை வாட்சப்பில் அனுப்பிவிடும்படி கூறியவன், “ஹனி… உனக்கு எப்ப இருந்து இந்த சிம்டம்ஸ்ஸெல்லாம் இருக்கு?”

          “இது நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னுமில்ல ரீகன்.  நீங்க நேத்தைக்கு போன் எடுக்கலைன்னதும் பயமாயிருச்சு.  என்னவோ ஏதோன்னு குழப்பத்தில தூங்காம இருந்ததால வந்தது.” விளக்கமளித்தவளை கரங்களுக்குள் இதமாகத் தாங்கிக் கொண்டவன்,

          “சரி…  நீ போயி இப்ப ரெஸ்ட் எடு.  ஆனா ரெஸ்ட் எடுத்த பின்னயும் இதே மாதிரி இருந்தா கண்டிப்பா டாக்டரைப் போயிப் பாக்கணும்”

          “கண்டிப்பாவா…” என்றபடியே, “வேற எந்த ஹெல்த் இஸ்யூவும் இருக்காது” நம்பிக்கையோடு சொன்னாள் ஐடா.

          மனைவியை அணைத்து விடுவித்தவன், அவளுக்கு இன்னும் தான் தாய்மை அடைந்திருக்கலாம் என்று தோன்றாதபோது, தான் அவளைக் குழப்ப வேண்டாம் என்றெண்ணியவன் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, “ரெஸ்ட் எடு ஹனி!”

          படுக்கையைக் காட்டிக் கூறிவிட்டு அவளோடு வராமல் அங்கேயே நின்றவனைப் பார்த்தவள், “நீங்க எங்க போறீங்க?” சிறுபிள்ளைபோல கேட்டவளிடம், “நான் எங்கயும் போகலை.  பாட்டிகிட்ட சொல்லாம இங்க கிளம்பி வந்திட்டேன்.  நான் பேசிட்டு வரேன்” விலகினான்.

          “அங்க வந்து பாட்டிக்கிட்ட பேசலாம்! வாங்க!” என கணவனைத் தன்னோடு படுக்கையை நோக்கி இழுத்தபடி நகர, மனைவியிடமிருந்து விடுபடும் வழி தெரியாமல் அவளின் மனதை நோகடிக்கவும் விரும்பாமல் அவளின் இழுப்பிற்குச் சென்றான் ரீகன்.

          ஐடாவின் நிலையை வைத்தும், அவளின் பேச்சை வைத்தும் ரீகனாகவேதான் மனைவி கர்ப்பமாக இருக்கலாம் என யூகித்திருந்தான்.  மருத்துவரிடம் சென்று உறுதி செய்யும்முன் அவளோடு தான் தனித்திருப்பது என்பது அவளின் உடல்நிலைக்கு என்பதைவிட தனது குழந்தைக்கு உகந்ததாக அமையாது என எண்ணியே அவளோடு படுக்கையறை வாயிலில் நின்றபடியே மனைவியை மட்டும் படுக்கைக்குச் செல்லும்படி கூறினான்.

ஐடாவிற்கு அவளின் நிலை இன்னும் அவளுக்குப் பிடிபடாத நிலையில் கணவனை விட்டுப் பிரிந்து இருபத்து நான்கு மணிநேரத்தை கடக்க பிரயாசப்பட்ட மனது அவனது அருகாமையைத் தேடியது.

          சூல் கொண்ட மங்கையின் இதயம் சூலுக்கு காரணமானவனைத் தஞ்சமடைய எண்ணுவது ஒன்றும் புதிதல்லவே! சூலுக்கு காரணமானவனின் கரங்களுக்குள் இருக்க நினைப்பதுவும், அவனது அன்பில் திளைக்க விரும்புவதும், அவனது நினைவுகளை சுவாசமாக்க விளைவதும், அவனது அருகாமையே பெண்ணது பிரசவ வேதனையைத் தாங்கும் சக்தியைத் தருவதும், அவனது அன்பே அவளை மீட்சியுறச் செய்வதும் உலக இயல்பன்றோ!   

சூல்கொண்டிருந்தவளின் எண்ணங்களில் அகங்காரமோ, ஆணவமோ, அசூசையோ, தன்னிறக்கமோ, உயர்வு மனப்பான்மையோ துளியும் இல்லாமல் மறைந்து போயிருந்தது.

          அவளாக தன்னை முதன் முறையாக பிரிய மனமின்றித் தேடியது மகிழ்வாக ரீகனுக்குத் தோன்றினாலும், அவளோடு தனித்திருக்கும் வாய்ப்பை இயன்றவரைத் தவிர்க்க எண்ணி, “நீ தூங்கு ஹனி! நான் இப்படி இருக்கேன்” என படுக்கையில் அமர்ந்தபடியே மொபைலை கையில் எடுத்தான் ரீகன்.

          ரீகன் இதுவரை இப்படி தன்னிடமிருந்து விலகி இருக்க மாட்டானே என்பதும் ஐடாவின் மனதில் தோன்ற, அவன் பாட்டியிடம் பேச அமர்ந்திருக்கிறான் என்றெண்ணி சற்று நேரம் படுக்கையில் படுத்தாள்.

பாட்டியிடம் பேசிவிட்டு எழுந்தவன் படுக்கை அருகே இருந்த சோபாவில் சென்றமர்வதைக் கண்டாள் ஐடா.

ஐடாவிற்கு ரீகன் தன்னைவிட்டு விலகி நெடுந்தூரம் சென்றாற்போன்ற உணர்வைத் தர, அதைத் தாள முடியாதவள் படுக்கையில் இருந்து எழுந்து சோபாவில் சென்றமர்ந்தவனின் மடியில் ரீகன் எதிர்பாரா வேளையில் சென்று அமர்ந்துவிட்டாள்.

          அமர்ந்ததோடு அவளின் கரங்களால் ரீகனது கழுத்தை சுற்றி மாலைபோல போட்டவாறு அவனது மார்பில் தலை சாய்த்தபடியே, “இப்ப சொல்லுங்க.  நேத்து ஏன் என் போன் கால் அட்டெண்ட் பண்ணலை?”

          ஐடாவைத் தனது இரு கரங்கொண்டு அணைத்துக் கொண்டவன், “உனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க நினைச்சு கிளம்பினேன்.  அட்டெண்ட் பண்ணா டிராவல் சவுண்ட் வச்சு நீ கெஸ் பண்ணிருவல்ல.  அதான்…” நகைத்தான்.

          “அதுக்காக இனி இப்படிப் பண்ணாதீங்க.  நான் ரொம்பப் பயந்திட்டேன்.”

          ரீகன், “ஹே… கூல் ஹனி!”

          ஐடாவின் ரீகனுக்கான தேடல் ரீகனைப் பித்தம் கொள்ளச் செய்தது.  ஆனால் ரீகனது தவிர்ப்பு ஐடாவிற்கு தவிப்பை உண்டு செய்தது.  ஐடாவிற்கு மனதிற்குள் வைத்துக்கொள்ளத் தோன்றாமல், “நான் நீங்க சொன்னதைக் கேக்காம வந்திட்டேனு என்னை அவாய்ட் பண்றீங்களா?” என்று கேட்குமளவிற்கு ரீகனது நடவடிக்கை சென்றிருந்தது.

          விசயம் இதுதான் என்று உடைத்துச் சொல்லாமல், மனைவியைச் சமாளிக்குமுன் ரீகனுக்குப் போதும் போதுமென்றாகியிருந்தது.  மருத்துவரிடம் செல்லுமுன் இப்படியான சிம்டம்ஸ் இருந்தால் அது கருவுற்றிருப்பதுதான் என்று கணவன் சொன்னால், எந்த மனைவிக்கும் கணவன் மீது சந்தேகம் எழுமல்லவா?

          ‘அது எப்டி உங்களுக்குத் தெரியும்?’ என்று மனைவி கேள்வியை முன்வைத்தாலும், தனது சகோதரிகளின் நிலையைப் பார்த்த நினைவு என்று சொல்லி சமாளிக்கலாம் என்றாலும், தேவையில்லாத பொய் வேண்டாமே என்றெண்ணினான் ரீகன்.

          உண்மை பேசினால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை.  உண்மையை உள்ளபடியே பேசிவிட்டுச் சென்றுவிடலாம்.  ஆனால் பொய் என்று வரும்போது ஒவ்வொரு முறையும் விழிப்போடு இருந்தாக வேண்டும்.

          என்னதான் விழிப்போடு இருந்தாலும், சில சமயங்களில் கோட்டை விட்டு மாட்டிக்கொண்டு திணறக்கூடாது என்பதற்காக அமைதி காக்க எண்ணினான்.

தானாகச் சென்று தவளைபோல தன் வாயால் கெட்டுவிடக்கூடாதே என்று முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்டான்.

தான் எப்படியான சூழ்நிலையில் சென்னையிலிருந்து கிளம்ப நேர்ந்தது என்பதை மேலோட்டமாகக் கூறினான்.  அவன் கிளம்பி வந்தது முதல் காலையில் வந்து சாவியைப் பெற்றுக்கொண்டது வரை கூறியபிறகே உறங்கச் சென்றிருந்தாள் ஐடா.

          உறங்கி எழுந்தாலும் ஐடாவின் உடல்நிலையில் எந்த மாறுதலும் உண்டாகாமல் போனதால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தான் ரீகன்.

          அனைத்து டெஸ்ட்களும் எடுத்து கர்ப்பத்தை உறுதி செய்ததோடு சில முன்னெச்சரிக்கை விசயங்களையும் தம்பதியரிடம் மருத்துவர் சொல்ல கேட்டுக்கொண்டதோடு, சில சந்தேகங்களை ரீகன் மனைவியை வைத்துக்கொண்டே அவரிடம் கேட்டான்.

அனைத்து சந்தேகங்களையும் கேட்டறிந்துகொண்டு அங்கு எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வெளிவந்தனர்.

மருத்துவரிடம் அழைத்து வருமுன்பே இதுவாகத்தான் இருக்கும் என்று கணித்து மகப்பேறு மருத்துவரிடம் சரியாக தன்னை அழைத்து வந்ததை மருத்துவமனையில் இருந்து வெளிவரும்போது ஐடா கேட்டாள்.

“உங்களுக்கு இது பேபியா இருக்கும்னு டவுட் வந்திருக்கு.  ஆனா எனக்கு இப்டி இருக்கும்னு தோணவே இல்லை பாருங்களேன்” என்றாள்.

ஏற்கனவே அவன் இந்தக் கேள்வியை மனைவியிடம் எதிர்பார்த்துதான் இருந்தான் ரீகன். அவனும் சகோதரிகளைப் பற்றிக் கூறி சட்டென பேச்சை மாற்றியிருந்தான்.

சில பெண்களோடு மாதக்கணக்கில் சேர்ந்து உல்லாசமாகத் திரிந்தபோது, அவர்கள் பயந்துபோய் புலம்பியதைக் கேட்டுத்தான் சொல்கிறேன் என்று ரீகனால் எப்படி மனைவியிடம் சொல்ல இயலும்?

அதற்குமேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மோனநிலையில்… வரப்போகும் குட்டி ரீகன் அல்லது குட்டி ஐடாவை எதிர்நோக்கி மனதிற்குள் கொண்டாடியபடியே திரும்பினர்.

அப்போது அந்த நிலையைக் கலைத்தவன், “கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டுப் போகலாம்” என நிறுத்தியவன், மனைவிக்கு பிடித்த இனிப்புகளை வாங்கிக்கொண்டு, வெளி உணவைத் தவிர்த்துவிட எண்ணி சமையலுக்கு வேண்டிய முக்கிய பொருள்களை வாங்க டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கிறதா என்று பார்த்தபடியே வந்தார்கள். வரும் வழியிலேயே அவளது அலுவலகம் இருந்ததைப் பார்த்தவள், “இவ்ளோ கிட்டயா இருக்கு!” சந்தோசத்தில் ஆர்ப்பரித்தாள் ஐடா.

“நூறு மீட்டர் தூரத்தில் இப்ப நாம வந்திருக்கற ஃபிளாட்” என்றபடியே வந்தவன் சற்று நேரத்தில் வண்டியை ஓரங்கட்டினான்.

டிபார்மெண்டல் ஸ்டோருக்குள் கணவன் தன்னை அழைப்பதைக் கண்ட ஐடா, “இங்க இருக்கப்போறது ஒரு மாசம்.  அதுவரை வெளியவே பாத்துப்பேன்” என்றவளிடம்,

“இவ்ளோ நாள் நீ தனி.  இனி அப்படி இல்லை ஹனி.  சோ முடிஞ்சவரை வெளியே அவாய்ட் பண்ணிட்டு குக் பண்ண ட்ரை பண்ணலாம்” என மனைவியை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.

“பண்ணலாம்னா?” முகம் சுருக்கி கணவனை கூர்ந்து நோக்கியபடியே கேட்டாள்.

“பண்ணலாம்!” என்று மீண்டும் சிரித்தான் ரீகன்.

அவனது சிரிப்பும் அவனது பேச்சும் அவளுக்கு அவன் சொல்லாத பலதைச் சொன்னது.

ஆளுக்கொரு புறம் வேண்டிய பொருள்களை எடுத்தனர். நீண்ட நேரம் கணவனைக் காணாததால் அவனைத் தேடி வர, ரேக்கில் இருந்த பொருளை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஏற்கனவே பரிச்சயம்போல இலகுவாகப் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, ‘திங்ஸ் வாங்க வந்த இடத்தில அப்படியென்ன தன்னை மறந்து பேச்சு!’ இப்படி யோசித்தபடியே கணவனை நெருங்கி வந்தாள் ஐடா.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!