இளைப்பாற இதயம் தா!-16அ

இளைப்பாற இதயம் தா!-16அ

இளைப்பாற இதயம் தா!-16A

கணவன் கேள்விக்கு பதிலளித்துவிட்டு அறைக்குள் வந்த நொடியில் அவள் பின்னே புயல் வேகத்தில் பின்னோடு வந்தவனை அறியவில்லை ஐடா.  ஆனால் அவனது வரவை உள்மனம் நப்பாசையோடு எதிர்பார்க்க, வெளிமனமோ ரீகனது பழைய வாழ்வியல் முறைகளை நினைவில்கொண்டு அவனிடமிருந்து தன்னையோ அல்லது தன்னிடமிருந்து அவனையோ வெளிநடப்பு செய்யும் உத்தேசத்தில் இருந்தது.

மொத்தத்தில் கூழுக்கும் மீசைக்கும் ஆசையாக இருந்த அவளின் மானங்கெட்ட மனதை எண்ணி அவள்மீதே வெறுப்பாக வந்தது ஐடாவிற்கு.

அவளின் பின்னே வந்தவன் அவள் இதற்குமுன் நடந்த பேச்சின்போது கூறியிருந்த வார்த்தைகளின் நினைவில் வாயிலிலேயே தேங்கியிருந்தான்.

தேங்கியதற்கு காரணம் அவள் மீதான அன்பு மட்டுமே காரணமாக இருந்தது.  வேறு எந்த காரணங்களுக்காகவும் தயங்குபவன் ரீகன் அல்லவே.  இரு கரங்களும் நிலையின் இரு புறத்தையும் பிடித்தபடி உடலை முன்னே நீட்டி, கால்களை அறைக்கு வெளியில் வைத்தபடி தன் முன்னே செல்லும் மனைவியையே இமைக்காமல் பார்த்திருந்தான்.

சொற்ப நாள்கள் அவளின் அருகாமை பொய்த்து போனதில் வலியோடு இருந்தவனுக்கு அவளை நிதானமாகக் காணக் கிடைத்த தருணமே பேரின்பமாகத் தோன்றியது.

உடல் வேட்கையைவிட உணர்வுகள் அவளுக்கு அடிமையாகிப் போயிருந்ததை ரீகனால் உணர முடிந்திருந்த தருணங்கள் அவை.  அவளைக் காணாத நாள்கள் வெறுமையையும், சோர்வையும், எரிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது.

கடந்துபோன பதினோரு மாதங்களுக்கு முன்வரை இவளில்லாமல் தான் எப்படி வாழ்ந்தோம் என்பதே அவனால் கடந்த சில நாள்களாக நம்ப முடியாததாக இருந்தது. 

இத்தனை குறுகிய காலத்தில் எப்படி ஐடாவுடன் மட்டும் இத்தனை நெருக்கம் சாத்தியம் ஆயிற்று என்பதை யோசித்தவனுக்கு அவளின் தன்மீதான வானளாவிய நேசமும், அன்பும் கருணையும் கூடிய அவளின் அப்பழுக்கற்ற கவனிப்பும் எதிலும் எதிர்புதிர் என்று இருக்காமல் அனைத்தையும் தன்னோடு அனுசரித்துச் சென்ற பாங்குமே காரணம் என்பது புரிந்தது.

அது நீடிக்க வேண்டும் என ஆசைப்பட்டது ரீகனது மனம். ஐடாவின் தனக்கான பிரத்தியேக அன்பு நேசம் கவனிப்பு அனைத்தும் அவனுக்கே அவனுக்கென்று வேண்டுமென உடலின் செல்களனைத்தும் தர்ணா செய்து, அவனைச் செயல்விடாமல் முடக்கியது. 

அதை வேண்டி… அவனது அறிவும் மனமும் சண்டையிட்டு ஓய்ந்தது. அத்தோடு உடலும் ஓய்ந்து முடங்கும் நிலைக்கு வந்திருந்தான் ரீகன்.

அப்படிப்பட்டவனுக்கு தோன்றியதெல்லாம் இதுதான்.  ஐடா தனதருகே வந்து தலையைக் கோதினால்கூட மீண்டு விடலாம். இல்லை… தன்னைப் பார்த்து எப்போதும் அவள் புரியும் இளநகை ஒன்று போதும் மீள என்று தோன்றியது. அத்தோடு… அதற்கான முகாந்திரம் ஏதும் தன்னவளிடம் தென்படுகிறதா என்கிற ஆராய்ச்சிக் கண்ணோடு நோக்கியபடி நின்றிருந்தான்.

யாரிடமும் இதுவரை இப்படி பித்தாக இருந்திராதவனுக்கு அவனை எண்ணி ஆச்சர்யமே!

அவள் மீது வீசிய தென்றல் அவனை ஸ்பரிசித்தாலே மோட்சமடைந்துவிடம் நிலையிலிருப்பவன், தன்னவளைக் காணக் கிடைத்த நிமிடங்களை வீணாக்கிட விளைவானா?

இழந்து போன உயிரின் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடும் எண்ணமில்லை ரீகனுக்கு.  அவளின் இளைத்த தோற்றம் கண்டதும் உள்ளுக்குள் வலித்தது.  அது எங்கென்று அவனால் பிரித்தரிய முடியாத நிலையில் இத்தனை நேரமும் அவனுக்குள் மூண்டு… முகாமிட்டுருந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் தணிந்திருக்க… மேகக்கூட்டமெல்லாம் இல்லாத பளீர் வானத்தைப்போல மனம் அமைதிபெற நின்றிருந்தான்.

ரீகனது வருகையை அறியாதவளின் நாசி உணர்ந்திட்ட தன்னவனின் வாசத்தில்… அவளுக்குள் பீறிட்டு எழுந்த கழிவிரக்கம் அழுகையை உண்டு செய்திட… அதற்குமேல் நடக்க முடியாமல் அங்கிருந்த ஷோபாவில் உட்காரும் எண்ணத்தில் அதனருகே சென்றபடி, ‘ச்சேய் எப்பப் பாரு… ரீகனோட நினைப்பு!  தூங்குனாலும்… எந்த வேலை பாத்தாலும்… மனசு முழுக்க ரீகன்… ரீகன்னு ஒரே கூப்பாடு!’ நினைத்தவள் தற்போது நாசி கூறிய விசயத்தை உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க மறந்துபோய்,

‘இப்ப என்னடான்னா… அவனோட வாசம்!  இப்படியே போனா பைத்தியமே புடிச்சிரும்போல!’ ரீகனின் நினைவுகளோடு உருகியபடியே அந்த நினைப்பைத் தாங்க முடியாமல் கண்களிலிருந்து வெந்நீர் சொரிய ரீகனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவளின் கன்னங்களில் வழிந்த நீரைத் துடைக்க மறந்து, தலையை இரண்டு கைகளிலும் தாங்கிக்கொண்டு அங்கிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்திருந்தாள் ஐடா.

பேரன் சென்ற வேகத்தைக் கண்டு பதறி நடக்க முடியாமல் பின்னோடு வந்த ரூபி பாட்டி இருவரது பேச்சையும் கேட்டதோடு ரீகன் கோபமாக வந்ததைக் கண்டதும் வந்து பார்த்தார்.

பேரன் வாயிலில் தேங்கி நிற்பதைப் பார்த்ததும், “இரண்டு பேரும் அமைதியா உக்காந்து பேசுங்க.  கோபத்துல பேசறது ஒருத்தரையொருத்தர் சங்கடப்படுத்தும்படி ஆகிரும். அது பிரிவைக் கூட்டிரும்.  அதனால… ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் போனபின்ன… பொறுமையா பேசி நல்ல முடிவெடுங்க!” என்று பொதுவில் கூறிவிட்டு,

‘கர்த்தாவே! இந்தப் புள்ளைங்களோட மனசுல அமைதியையும் சந்தோசத்தையும் மீண்டும் பழையபடி உண்டு செய்திடும்!  இவங்களோட எதிர்காலத்தை உம்மிடம் முழுமையாக ஒப்புவிக்கிறேன் கர்த்தாவே! அறியாமையினால் செய்திட்ட பாவங்களை விலக்கி… அவர்களின் எல்லா கணங்களையும் சரிசெய்து… அனைத்தையும் விரைவில் சீராக்கித் தந்திடணும் கர்த்தாவே!

உண்மையுள்ள ஆண்டவரே! ஒருபோதும் அவர்களுக்கு இதுபோன்றறொரு துன்பம் மீண்டும் வராதிருக்கும்படிக்கு அவர்களை ரட்சிக்கும் ஆண்டவரே!

ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு உன்னை நான் விடுவிப்பேன் என்று சொன்ன ஆண்டவரே…!

என்னுடைய பிள்ளைகள் அதுபோன்றதொரு மோசமான காலத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.  அவர்களை உம்முடைய கருணை மிகுந்த கனத்தால் விரைவாக விடுவித்திடும் கர்த்தாவே!’ எனும் பிரார்த்தனையோடு மெதுவாக அவரின் அறை நோக்கித் திரும்பியிருந்தார் ரூபி பாட்டி.

ஐடாவிற்கு தனது அறையின் அருகே கேட்ட பாட்டியின் பேச்சு காதில் விழுந்தாலும், தலை நிமிராமல் அசையாமல் அதே நிலையிலேயே அமர்ந்திருந்தாள்.  அவளின் அமைதியைக் கலைக்க விரும்பாதவன் அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான். அவளின் கண்களிலிருந்து தரையில் விழுந்த நீர் அவனது கண்களுக்கு தென்பட்டதும், ‘அழறாளா? இல்லை எனக்குத்தான் அப்டித் தெரியுதா?’ மேலும் பார்வையை கழுகுபோலாக்கிக் கவனித்தான்.

உண்மைதான் என்பது விளங்கிட, அவனால் அதைப் பொறுக்க முடியவில்லை.  இந்த நிலை எதனால்?  யாரால் என்றே இதுவரை தெளிவின்றி இருந்தவன் உந்தித் தள்ளி அவளின் கண்ணீரைத் துடைத்திடும் ஆவலைக் கட்டுப்படுத்தி நின்றான். 

ஆனால் சற்றுமுன் பாட்டியிடம் ஏதோ பிரச்சனை என்பது நினைவிற்கு வந்திட அதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாதவன்,“வெளிய வீராப்பா பேசிட்டு… இங்க ரூமுக்குள்ள உக்காந்து ஏன் அழற?” என்று கேட்டதும்,

எதிர்பாராது மிக அண்மையில் கேட்ட ரீகனது குரல் வந்த திசையில் நம்பிக்கையில்லாமல்… ஆனால் அவனாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறிய மனதின் ஆழத்தில் தோன்றிய நப்பாசையில் கண்கள் அவளின் ஆர்வத்தை வெளிக்காட்ட நிமிர்ந்தவள், அங்கு ரீகனைக் கண்டதும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக பழைய விசயங்களைக் கொண்டு ரீகனை வெறுப்பாக நோக்கியபடி, ‘கதவைத் தாழ்ப்பாள் போட மறந்து தொலைச்சிட்டேனா!’ என்று நினைத்தாள்.

அத்தோடு, “உங்கட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் தான?” ரீகனை நோக்கி அதிகாரக் குரலில் கேட்டாள்.

ஷோபாவில் இருந்து எழுந்தவாறே ரீகனை நோக்கி வந்தாள்.  ரீகன் அவளையே பார்த்தபடி, “ஆரம்பம் என்ன? முடிவு என்ன? பிரச்சனை என்ன? எதுவுமே தெரியாம… நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டினது இனி நடக்காது!” அதே நிலையில் நிற்காமல் கரங்களை எடுத்து அறைக்குள் காலடி எடுத்து வைத்தவனைப் பார்த்தவள், “இங்க வரதா இருந்தா… பிங்க் பண்ணிட்டு வரச் சொன்னேன்ல?” குரலை உயர்த்திக் கேட்டாள்.

அதுவரை மட்டுப்பட்டிருந்த கோபம் ஐடாவின் பேச்சில் மீண்டும் ரீகனுக்குள் சுள்ளென எழ, “உம்மனசில என்ன நினச்சிட்டுருக்க?  நானும் போனா போகுதுன்னு ஒன்னும் சொல்லாம… உன் போக்குக்கு விட்டா… ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க… இப்படித் தள்ளி நிக்கறதுக்கா உன்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருக்கு!” என்று கத்தினான்.

“நான் சக மனுஷிங்கறது மனசில வச்சிட்டுப் பேசுங்க ரீகன்.  அடக்குமுறை, அடாவடித்தனம்னு நீங்க எங்கிட்ட பிகேவ் பண்ணா… நான் என் கன்வீனியன்ட் அண்ட் சேஃட்டிக்காக எந்த லெவலுக்கும் போவேன்!”

“என்ன பயமுறுத்திப் பாக்கறியா? இல்லை தெரியாமத்தான் கேக்கறேன்.” என்றதோடு, “இங்க உங்க சேஃப்ட்டிக்கு என்ன குறைஞ்சு போச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணுவீங்க மேடம்!” என்று நக்கலாகக் கேட்டான்.

ரீகனை முறைத்தபடியே நின்றிருந்தவளிடம், “இதுவே வேற வீடா இருந்திருந்தா… இன்னேரம் நடந்திருக்கறதே வேற!” என்றுரைத்தான்.

அவனது பேச்சைக்கேட்டு அமைதியாகாமல், “விளங்காதவங்களுக்கு விளக்கிச் சொல்றேன்.  இதுக்குமேல பட்டுத்தான் ஆகணும்னா… அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்!” அதுவரை இருந்த தோரணை மாறி, நிமிர்ந்து தன்னிடம் வீராப்பாகப் பேசியவளைக் கண்டு ரீகனுக்கு ஐடாவைக் கன்னத்தைச் சேர்த்து ஒரு அறை விடும் வேகம்.

தனியாக இருந்தால் நிச்சயம் அப்படி நடந்திருக்கக்கூடும்.  வயிற்றில் பிள்ளையோடு இருப்பவளை அனுசரிக்க எண்ணி, தனது கால் சராயினுள் இரண்டு கரங்களையும் உள்ளே விட்டு தன்னைக் கட்டுப்படுத்தியவன், “ம்… நாங்கல்லாம் விளங்காதவங்கன்னு… நீங்க வயசு வித்தியாசம் பாக்காம எல்லாருக்கும் சொல்லிக் குடுக்க வந்திருக்கீங்களாக்கும்?” கிண்டல் தொனியில் வினவியவன்,

“நான் பிறந்து வளர்ந்து இத்தனை வருசத்துல… சண்டையோ, சச்சரவோ… இல்லை… வேறு எந்த பிரச்சனையையோ விபரம் தெரிஞ்சு இந்த வீட்டுக்குள்ள நான் பாத்ததில்லை!” என்றவன்,

“ஆனா… இப்போதான் முதன் முறையா கடந்த சில நாளா இப்படியெல்லாம் நான் பாக்கறேன்னா… அதுக்கு யாரு காரணம்னு முதல்ல யோசி!” ஐடாவிடம் பொறுமையாகக் கூறினான் ரீகன்.

இளக்கம் மனதில் தோன்றி ஒருவர் தன்னகங்காரத்தை விட்டொழித்துப் பேச முன்வரும் வேளையில், எதிர் நபர் பொறுமையாகச் சென்றால் சச்சரவுகளுக்கு தீர்வு கிட்டும். சமாதானம் ஆவதற்கு வாய்ப்புகளும் இருக்கும்.

சமாதானத்திற்கு ரீகன் முனைந்தாலும், அதற்கு இடங்கொடுக்க ஐடாவிற்கு விருப்பமில்லை.  ஐடாவைப் பொறுத்தவரை எத்தனை பெரிய அவமானம் தரக்கூடிய செயலை ரீகன் செய்துவிட்டு… அதை மறைத்து தன்னிடம் நல்லவன்போல பேசுவதோடு… தற்போது தன்னால்தான் இந்த வீட்டில் பிரச்சனை என்றும் கூறுகிறானே என்று வெகுண்டு பதில் பேசினாள் ஐடா.

 “யாரு நானா?” என்றாள்.

“வேற யாரு!”

“இத்தனைக்கும் நீங்கதான் காரணம்?” அதுவரை கன்னங்களில் வழிந்த கண்ணீர் தடயங்களோடு நின்று பேசியவள் அதையே ரீகன் கவனிப்பதை உணர்ந்து… அவளின் கரங்களைக்கொண்டு வழிந்திருந்ததை அழுத்தித் துடைத்துவிட்டு தைரியமாக ரீகனுக்கு சரிக்கு சமமாக வாதாடுவதில் குறியானாள்.

“நானா?” கரத்தை நெஞ்சில் வைத்துக்காட்டி முகத்தைச் சுழித்தபடியே கேட்டான்.

“நீங்க மட்டுந்தான் எல்லாத்துக்கும் காரணம்!” ஆணித்தரமாகப் பேசினாள்.

ஐடாவின் பழிசொல்லைக்கேட்டு என்ன செய்தான் ரீகன்?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!