இளைப்பாற இதயம் தா!-16ஆ

இளைப்பாற இதயம் தா!-16ஆ

இளைப்பாற இதயம் தா!-16B

ஐடாவின் பழிசொல்லைக்கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அதனைக் காட்டாமல் உத்தமனைப்போலவே மனைவியிடம் பேசினான் ரீகன்.

அதற்குக் காரணமிருந்தது.  தானாக வலியச் சென்று தனது தப்புகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் என்பதைவிட, அதனால் உண்டாகக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி யூகமாக அறிந்திருந்தான்.  அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பிடிவாதமாக தான் துவக்கத்தில் சொன்ன பதிலையே மனைவியிடம் சொல்லி… அதுதான் உலக உண்மை என நம்ப வைக்க முயன்றான்.

“என்னதான்டீ உனக்குப் பிரச்சனை?  என்னால முடியலை!” கண்களை இறுக மூடிக்கொண்டு தலையை மறுத்து அசைத்தவன், “வாயத் தொறந்து சொல்லவும் மாட்டிங்கற…! எனக்கும்… நீ என்ன சொல்ல வர்றேன்னு சத்தியமாத் தெரியலைடீ!” ஐடாவைப் பார்த்துச் சொன்னவன், கைகளை அவள் புறமாக நீட்டி, “இப்படியே இழுத்தடிச்சா… மனுசன் நிம்மதியில்லாம சீக்கிரமாப் போய்ச் சேர வேண்டியதுதான்!” என்றவன், “முடியலைடீ!” கத்தினான் ரீகன்.

இயலாமை அவனை அப்படிக் கத்த வைத்தது.  ஆனால் ரீகனது உள்ளார்ந்த செயல், பேச்சு அனைத்தும் ஐடாவிற்கு நடிப்பாகத் தோன்றியது.

ஒருவரையொருர் சாந்தப்படுத்தவே முனையாமல் மேலும் மேலும் ஒருவரையொரு சீண்டி அமைதியைத் தொலைத்தார்கள்.

நேர்மையும் உண்மையும் ஐடாவின் பக்கமிருந்ததால் அவளும் விடாமல் பதில் பேசினாள்.  இதுவரை இப்படியெல்லாம் பேசிப் பழகியிராதவளுக்கு எங்கிருந்து இத்தனை வல்லமை பேச்சில் வந்தது என்பதே ஐடாவிற்கே புரியாத புதிராக இருந்தது.

படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்கு வந்த இத்தனை ஆண்டு காலத்தில் யாரிடமும் முகத்தை இத்தனை தூரம் சுழித்துப் பழகியிராதவள், ஒன்றுக்குள் ஒன்றாக ஏறத்தாழ பதினோரு மாதங்களுக்கு மேல் ரீகனோடு ஓருயிர் ஈருடலாக வாழ்ந்து அவனது அருகாமைக்கு அடிமையாகி, அவனது அன்பிற்கு ஏற்புடையவளாக வாழ்ந்திருந்தவள் அவன்மீதே இத்தனை வெறுப்பைக் காட்டுவது ஐடாவால் தாங்கவொண்ணாத துயரைத் தந்தது.

அப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து நொந்து போயிருந்தவள், ரீகனது அடாவடியான பழிப் பேச்சில் தனது இயல்பைத் தொலைத்துவிட்டு சண்டைக்கோழி வேடம் தரித்தாள்.

கணவனது கேள்வியில் மறைந்திருந்த செய்தியை அவனது வீட்டில் மனைவியாக தான் வாழ வந்த பிறகுதான் இத்தனையும் நடக்கிறது என்பதை அவன் பேச்சின் வழியே உணர்ந்தவள் அவனது தவறை மறைத்து தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, இதுவரை தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் சாதிக்கும் ரீகனது போக்கை அறவே வெறுத்தாள்.

“இருவத்தாறு வருசம் அருமை பெருமையா பொண்ணை வளர்த்து, காசைக் கொட்டிப் படிக்க வச்சி, பண்பு, ஒழுக்க பழக்கம்னு சொல்லிக் கொடுத்து… ஒரு வேலைக்குப் போற அளவுக்கு திறமையை வளர்த்துவிட்டு… வேலைக்கும் போக வச்சி… சொசைட்டில இருக்கற நெளிவு சுழிவுகளை எப்படி எதிர்கொள்ளணும்னு சொல்லித் தந்து… அத்தனையிலும் அடிபட்டு ரணப்பட்டு எல்லாத்தையும் கத்துக்கிட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்து… உலகத்தை எதிர்கொள்ள ஓரளவு தெரிஞ்சிட்டுன்னு பெத்தவங்களுக்கு நம்பிக்கை வந்து… இனி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு அவங்க முடிவெடுத்து சல்லடை போட்டு மாப்பிள்ளையத் தேடி… அந்தப் பையனைப் பத்தி நாலு மக்கள் என்ன… நாப்பது பேருக்கிட்ட விசாரிச்சு… நல்லது கெட்டதுன்னு… எல்லாம் அனலைஸ் பண்ணி… இது ஒத்துவரும்னு ஒரு முடிவுக்கு வந்து… அந்தப் மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தா…” என கணவனைப் பார்த்தாள்.

“கொடுத்தா” ரீகன் வினாவெழுப்பியவாறு ஐடாவை நோக்க…

“நீங்க அந்தப் பொண்ணை பாழுங்கிணத்துல தள்ளிவிட்டிட்டீங்கங்கற மாதிரி விசயமெல்லாம் ஒவ்வொன்னாத் தெரிய வருது. அதுக்கப்புறம்… எல்லாம் தெரிஞ்ச பின்னாடியும்… அவ எதுவும் சொல்லாம… நீங்க செய்யற எல்லாம் சரின்னு வாயப் பொத்திட்டு இருக்கணும்னு நினைக்கறீங்க!” எல்லாம் என்பதில் அழுத்தம் கொடுத்து உரைத்தவள்,

தொடர்ந்தாள், “க.மு க.பி னு ரெண்டு விதமான வாழ்க்கைய அமோகமா என்ஜாய் பண்ணி வாழ்ந்த நீங்க… எல்லாத்தையும் மறைச்சு கல்யாணம் பண்ணி… என்னோட வாழ்க்கைய வீணடிச்சிட்டு… இப்ப நடக்கிற பிரச்சனைக்கு உரியவர் நீங்க கிடையாது. ஆனா… எதுவும் தெரியாம பதினோரு மாசம் தேமேன்னு இருந்தவளுக்கு எல்லாம் தெரிய வந்து… அதைப்பத்திக் கேட்டா… அவதான் உங்க குடும்பத்தோட நிம்மதி பரிபோனதுக்கு காரணம்னு வந்து பேசுறீங்க…” நக்கல் தொனியில் கணவனிடம் உரைத்தவள்,

“கட்டினவன் பொது இடத்தில வேற எவளுங்களோடயோ… அதுவும் உறவோ, உரிமையோ இல்லாதவகூட… கும்மாளம் போட்டுட்டு… எல்லாத்தையும் பொண்டாட்டிகிட்ட கமுக்கமா மறச்சு… அது தெரியாதபடிக்கு வந்தவளை உருகி உருகி ஏமாத்தி வயித்திலயும் கொடுத்தாச்சு. அதைப்பத்தி கேட்டா… ஒரே பொய்யி… அப்படி பொய்யாஆஆ பேசி பொண்டாட்டிய ஹனி… ஹனின்னு மூச்சு முட்ட அன்பைக் காட்டறேன்னு பேசிப்பேசி ஏமாத்தியே வாழ வைப்பாராம்.  அவருனால அந்தக் குடும்பம் நிம்மதியா இருக்குமாம்.” அனைத்தையும் மறைமுகமாக உரைத்தவள் நிறுத்தும் எண்ணமின்றித் தொடர்ந்தாள்.

“ஆனா… அது வந்தவளுக்கு வெட்ட வெளிச்சமாத் தெரிய வந்தா… அதனால குடும்ப அமைதி போகாம வேற என்ன செய்யும்? 

கல்யாணம் பண்ணி வந்த எந்தப் பொண்ணுக்கும் ஹப்பியப் பத்தி இப்படியெல்லாம்னு தெரிய வந்தா… இல்ல… நேருல பாத்தா… குளு குளுன்னா இருக்கும்!” என்று ரீகனைப் பார்த்துக் கேட்டாள்.

இது எல்லாம் ரீகன் வாழ்வில் நடந்ததுதான் என்றாலும், இது எப்படி இவள் சொல்கிறாள்?  இவளுக்கு விசயம் எப்படி இந்தளவிற்கு தெரிய வந்திருக்கும் என்பதே ரீகனுக்குப் புரியவில்லை.

ஒருவேளை வாயிக்கு வந்ததைக் கூறி தனது வாயால் விசயத்தை போட்டு வாங்க முற்படுகிறாளோ என்றுதான் தோன்றியது ரீகனுக்கு.

தற்போதும் ரீகனுக்கு ஐடா என்ன சொல்ல வருகிறாள் என்பதைவிட என்று… யாரோடு… தான் சென்றதைப்பற்றி தற்போது தன்னிடம் ஐடா பேசுகிறாள் என்பது அவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை. 

தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து பேசுகிறாள் ஐடா என்கிற புரிதலுக்கே வராதவன், “அதென்ன க.மு. க.பி?” என்று கேட்டான்.

அத்தனை தூரம் மூச்சைத் தம் கட்டிப் பேசிய தன் பேச்சுக்கள் கணவனைப் பாதிக்காததை, அவனிடம் தனது பேச்சு தாக்கத்தையே உண்டு செய்யவில்லை என்பதை அறிந்தவளுக்கு அவனது செயல் வருத்தத்தைத் தந்தது.

 அவன் கேள்வியைக் கண்டு, ‘என்ன மனுசன்டா இவன்!’ என்று தோன்றிட, “டிக்ஸ்னரி போடறேன்” ஐடாவின் பதில் தெனாவட்டாக வர மனைவியின் பேச்சில் வெகுண்டு போனவன், “சீரியசா கேட்டுட்டு இருக்கும்போது… என்ன பேசுற? எங்கிட்ட இப்ப பேசற மாதிரி இனி பாட்டிக்கிட்டப் பேசின… இனி நடக்கிறதே வேற!” என்று கத்தினான்.

இந்தக் கத்தலுக்கான பின்னனி சற்றுமுன் தனது முந்தைய செயல்பாடுகளை நேரலையில் பார்த்ததைப்போல ஐடா கூறியதுதான் காரணம்.

“என்ன நடக்கும்?” ரீகனை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டவள், “பண்ணதெல்லாம் நீங்க!  அதை மறச்சு எல்லாம் பண்ணிட்டு நல்லவங்க வேசம் போட்டா… அவங்க பண்ணதெல்லாம் தப்பு இல்லைனு ஆயிருமா?” என்று கேட்டவள் அத்தோடு நிறுத்தாமல், “எல்லாம் கூட்டுக்களவாணிங்கதான…! அதான் ஒரே ஜால்ராவா கேக்குது!” ஐடா பொத்தாம் பொதுவாக வாயில் வந்ததை யோசிக்காமல் பேசிவிட்டாள்.

கூட்டுக் களவாணி மற்றும் ஜால்ரா எனும் வார்த்தைகள் ரீகனை மட்டும் சொல்லியிருந்தால் போகட்டும் என்று விட்டிருப்பான்.  தனது பாட்டியையும் அதில் கூட்டு சேர்த்து ஐடா கூறியதை அவனால் தாங்க முடியாமல், “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா… நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்று அறைக்குள் நுழைந்து ஐடாவின் கழுத்தை நெறித்திருந்தான் ரீகன்.

பேச்சை நிறுத்திவிட்டு கணவனையே பார்த்தவள், “கொன்னுருங்க.  அப்பத்தான பழையபடி ஜாலியா இருக்கலாம்!” என்றவள் அவனது கைகளை தன் கழுத்திலிருந்து எடுத்துவிட்டு பின்பக்கமாக தள்ளி நின்றுகொண்டாள்.

ஐடாவின் பேச்சையே தாங்க முடியாதவன் அவளின் செயலில் துளியளவு இருந்த நம்பிக்கையையும் இழந்தவனாகிப் போனான்.  ஆனால் அதனைக் காட்டாமல், “ஏய்… நீ படிச்சவ தான?” என்று அவளின் இருபக்கத் தோள்களையும் பிடித்து உலுக்கிக் கேட்டான்.

“ஏன்…?” எகத்தாளமாகக் கேட்டாளே அன்றி, சற்றும் தணிந்தாற்போலில்லை அவளின் தோரணை.  அதுவே ரீகனுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை சீண்டிவிட்டது.

“இப்ப நீ என்ன பண்ற… நடந்த விசயம் என்ன?  எதுக்கு இந்த ட்ராமா போடற… அப்டிங்கறதை எனக்கு விலாவாரியா சொல்லு!” என்றான்.

“வாயத் துறந்தா பொய்தான்!” என்று ரீகனைப் பார்த்துக் கூறியவள், “இதுல நான் ட்ராமா போடறேனா?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டாள்.

“சரி நான் பொய் சொல்லிட்டேன்.  நீதான் உண்மைக்கு சொந்தக்காரியாச்சே… நீ சொல்லு.  இங்க உனக்கு என்ன பிரச்சனை.  யார் உன்னை என்ன செஞ்சோம்னு! எதேதோ கொஞ்ச நேரம் முன்ன சொன்னியே அதையெல்லாம் டீட்டைலாச் சொல்லு முதல்ல…” என்று கேட்டவனை, ‘நாமதான் தப்பா நினைச்சு ரொம்ப படுத்தறோமோ’ என்று ஐடா எண்ணும்படிக்கு பேசினான் ரீகன்.

ஆனால் தன் கண்ணை அவளால் நம்ப முடியாமல் போகுமா?  அதனால் பின்வாங்காமல், “கல்யாணத்துக்கு முன்னயே ஃபிரண்டு அது இதுன்னு வெளிவேசம் போட்டுட்டு… அவங்களோட நல்லா ஆட்டம் போட்டுட்டு… அப்டியெல்லாம் இல்லைனு எங்கிட்ட கதைவிட்டது நீங்கதான்.  எதுக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணீங்க…

அதுவும் என்னை மாதிரி ஒரு பொண்ணை ஏமாத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது?  நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்?” ஐடா உக்கிரமாகக் கேட்டாள் கணவனைப் பார்த்து.

ஐடாவின் பேச்சில் அவனது கோப முகம் அதிர்ச்சியைத் தத்ததெடுத்ததோடு சமாளிக்க முயன்றதையும் கவனித்தாள். “ச்சீய்… இப்டியெல்லாமா நீயா கற்பனை பண்ணிட்டு உன்னையும் சங்கடப்படுத்திட்டு, என்னையும் டார்ச்சர் பண்ணிட்டுருக்க?” என்று கத்திவிட்டான் ரீகன்.

ஐடா ஏதோ யூகத்தில் அப்படிப் பேசுகிறாள் என்றெண்ணியவன், அதனைச் சமாளித்திடும் வகையில் அவ்வாறு பேசினான்.  ஆனால் அனைத்தையும் நேரிலேயே பார்த்தவளுக்கு ரீகனது பேச்சில் மேலும் வெம்மை உண்டாக, “இப்போ… நான் சொன்னதை ப்ரூஃப் பண்ணிட்டா… என்ன செய்வீங்க?” என்று கேட்டாள்.

“நடந்தா தான ப்ரூஃப் பண்ண?  நடக்காத விசயத்துக்கு நான் ஏன் பயப்படணும்?” என்று உள்ளுக்குள் உதறலை உறையவிட்டு, வெளியில் உதாராகப் பேசிவிட்டான் ரீகன்.

“மொதல்ல… நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க… நான் ப்ரூஃப் பண்ணிட்டா நீங்க என்ன பண்ணறதா இருக்கீங்க?” என மீண்டும் கேட்டாள் ஐடா.  ஐடாவின் கேள்வியில் உள்ளுக்குள் திக்திக்கென இருந்தாலும், வெளியில் அதனைக் காட்டாமல், “நீ சொல்லு… நான் என்ன செய்யணும்னு!” மனைவியின் முடிவுக்கே விட்டான் ரீகன்.

அதற்குக் காரணம் தன்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததையெல்லாம் பற்றி எந்தப் பெண்ணேணும் தன் மனைவியிடம் வந்து ஒப்புக்கொள்வார்களா என்கிற தைரியந்தான் ரீகனுக்கு. அதை அவளே பார்க்கும்படியாக தான் வாழ்ந்திருக்கிறோம் என்று அவனுக்கு இதுவரை தோன்றாதது விதியின் விளையாட்டு!

“டிவோர்ஸூக்கு… மியூச்சுவல்ல அப்ளை பண்ணிரலாம்!” என்று குண்டைத் தூக்கி வீசியெறிந்திருந்தாள் ஐடா.

“ஏய்… பைத்தியம் எதுவும் புடிச்சிருச்சா உனக்கு?” என்றான் ரீகன்.

“அது புடிக்கும் முன்ன… தப்பிக்கற வழியத்தான் இப்ப சொன்னேன்!” என்றாள் ஐடா.

மனைவியின் பேச்சை ஏற்கும்படி ஆனதா?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!