உதிரத்தின்… காதலதிகாரம்! 4

UKA-d8bfe525

உதிரத்தின்… காதலதிகாரம்! 4

உதிரத்தின்… காதலதிகாரம்!

காதலதிகாரம் 4

பிரகதியின் பேச்சில் கௌதமிற்கு சட்டென கோபம் மூண்டாலும், ‘என்ன பேசுறோம்னு தெரியாம… லூசு பேசுது!’ என தனக்குள் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு, “அடுத்தவ புருசனைப் பத்தி தெரிஞ்சிட்டு, நீ என்னப் பண்ணப் போற?” அலட்சியமாக பிரகதியிடம் வினவ,

அவனையே தனது எதிர்காலம் எனக் கருதி வாழ்ந்து வருபவளிடம் இப்படியொரு வார்த்தை கௌதம் கூறக் கேட்டதும் மனம் உடைந்து போனாள் பிரகதி.

அவளின் மனவருத்தத்தை அவனிடம் நேரடியாகக் காட்டி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாதவள், அதற்கு மாறாக அவனிடம் நடக்க முயன்றாள்.

தான் அணிந்து வந்திருந்த அனார்கலி வகை சுடிதாரின் டாப்பை ரவுடியைப்போல தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டே கௌதமை நோக்கி வந்து நெருங்கி நின்றவள், “காத்திருந்தவ புருசன, நேத்து வந்தவ ஆட்டையப் போடுவா…  நாங்க கையச் சூம்பிக்கிட்டு வேடிக்கை பாப்போமாக்கும்!” எனக் கேட்டதோடு,

“எவளாவது என்னைய மீறி வந்திருவா? இல்லை… அப்டி வரத்தான் லேசுல விட்டுருவேனா?” எனக் கௌதமிடம் கேட்டாள்.

அவளின் செயலை ரசித்தாலும் அதனைக் கவனமாக அவளுக்குக் காட்டாமல் நின்றிருந்தான் கௌதம்.  அவன் பதில் பேசாமல் நிற்பதைப் பார்த்து, “அவளை மட்டுமில்லை.  உன்னையும் சேத்துக் கொன்னுறுவேன்.  பாத்துக்கோ!” சத்தமாகவே அவனிடம் தனது எண்ணத்தை உரைத்தாள்.

அவளின் சத்தம் வெளியில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்கும் என்பதால், இனி பேசுவதை மெதுவாகப் பேசு எனும்படியாக செய்கையில் கௌதம் அவளிடம் கூற, அவனது பவ்வியமான செயல்மொழியைக் கண்டு மனதின் பாரம் நீங்கியவளாக உடுப்பில் இல்லாத காலரைத் தூக்கி விட்டவாறு, “அந்தப் பயம் இருக்கட்டும்!” எனச் சட்டென சிரித்துவிட்டாள்.

அத்தோடு அமைதியாக இராமல், தன்னை எதற்காக கௌதம் தவிர்க்கிறான் என்பதை தெரிந்துகொள்ளும் எண்ணத்தில், மீண்டும் பழையபடி, “என்னதான் உனக்குப் பிரச்சனை? பாக்க… பக்காவா நல்ல ஹேண்ட்சம்மாதான் இருக்க…” என அவனை தனது கண்களால் மேலும் கீழுமாய் அளந்து, சூப்பராக இருப்பதுபோல கைவிரலால் காட்டிப் பேசத் துவங்கியவள்,

“படாத எடத்துல பட்டு, முக்கியமான கனெக்சன்ல எதுவும் பிரச்சனை ஆயிருச்சா தம்மு? அதான் என்னை அவாய்ட் பண்றியா? இல்ல… வேற மாதிரியா…” மெல்லிய குரலில் அருகில் நின்றவனிடம் கேட்டு வாயை மூடும் முன்னே, அவளின் கன்னங்களை தனது வலக்கையால் கோபத்தில் இறுகப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான் கௌதம்.

அவன் இதுபோல இதுவரை தன்னிடம் நடக்காமலிருந்த நிலையில் அவனது முகத்தினருகே அவளின் முகம் இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவனது விரல்கள் அவளின் கன்னத் தசைகளை அழுந்தப் பிடித்திருந்ததால் வலியெடுத்தது.

வலியைப் பொருட்படுத்தாது சட்டென உதடுகளைக் குவித்து, “லிப்லாக் பண்ணப் போறியா தம்மு!” பரவசமாக கண்ணடித்துக் கேட்டாள்.

“ச்சீய்… உனக்கு எப்பவுமே இதே நினைப்புதானா?” என்று சீறியவனின் குரலில் பரவசமான அவளின் உணர்வு சட்டென வடிந்து காற்றுபோன பலூனைப்போல முகம் வாட அமைதியாகி இருந்தாள் பிரகதி.

அவனது பிடியைக் காட்டிலும், தனது பேச்சை அவன் ரசிக்கவில்லை என்பது புரியும் வகையிலிருந்த சிடுசிடுப்பான அவனது முகத்தைக் கண்டு, ‘என்னத்தைக் கேட்டுட்டேன்னு இஞ்சித் தின்ன மங்கியாட்டம் முகத்தை வச்சிட்டுருக்கு!’ பிரகதியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் கௌதமோ, “எதுலலாம் விளையாடறதுன்னே அறிவில்லே…?  யோசிக்காம என்னத்தையாவது வந்து பேசுற!  ஆளு மட்டும் வளந்தாப் போதுமா? அறிவைக் கடங்குடுத்த மாதிரி நடந்துக்கற!

ஒரு ஜென்ட்ஸ்கிட்ட என்ன பேசலாம், என்ன பேசக்கூடாதுன்னே தெரியாம நீயெல்லாம் வளந்து…” என்றவாறு பல்லைக் கடித்தவன்,

“நாலு இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி எல்லாத்தையும் முடிச்சிட்டு, கழட்டி விட்டுட்டுப் போயிருக்கணும்டீ.  ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடக் கூடாதுன்னு கட்டுக்கோப்பா இருக்க நினைச்சு ஒதுங்குனா, இது மட்டுமா கேப்ப… இன்னமும் கேப்ப…!” என்றதோடு இல்லாமல்,

“உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு எவன் சீரழியப் போறானோ!” பிரகதியிடம் இகழ்ச்சியாகக் கூறினான்.

அவனது இரும்புப் பிடியில் வலி தாளாமல் கண்கள் கலங்கினாலும் அவனது பேச்சில் தடுமாறி மனம் வருந்தினாலும் சமாளித்து நின்றவளை நோக்கி, “இனி ஒரு தடவ இந்த மாதிரி எதாவது தத்து பித்துனு எங்கிட்ட வந்துப் பேசுன… நடக்கிறதே வேற!” கண்களிலேயே கண்டிப்பைக் காட்டியவாறு அழுந்தப் பிடித்திருந்த அவளின் கன்னத்தை அதி வேகத்தோடு பின்னோக்கித் தள்ளிவிட்டு, அவள் என்னானாள் எனப் பாராமலேயே அங்கிருந்து சட்டென அகன்று விற்பனைப் பகுதிக்குச் செல்லவும், அவனது அலைபேசிக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

எந்த ஆணிடமும் ஒரு பெண் கேட்கக் கூடாத கேள்வி, தான் கௌதமிடம் கேட்டது என்பது பிரகதிக்கு தெரிந்திருக்கவில்லை.

எப்படிப்பட்ட ஆண்மகனிடமும் இந்தக் கேள்வி மிகுந்த பிரளயத்தை உண்டு செய்யும் என்பது அறியாமல் கேட்டுவிட்டு, அவனது செயலை விமர்சித்தபடி இருந்தாள் பிரகதி.

விழிப்பு நிலையில் இருக்கும் கௌதமால் அந்தச் சூழலை மிகவும் கண்ணியமாகக் கடக்க முடிந்தது.  இதுவே முன்கோபியாகவும் விழிப்பற்ற நிலையிலும் இருக்கும் ஒருவனால் நிச்சயமாக பிரகதிக்கு பிரச்சனையே உண்டாகியிருக்கும்.

அவனது தள்ளலில் நிலைதடுமாறி பின்னோக்கிச் சென்று கீழே விழுந்தவள் சற்றே சுவரோடு உராய்ந்திருந்தாள். 

அவனது கோபத்தைக் கண்டு, ‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு தள்ளிவிட்டுட்டுப் போகுது லூசு’  என நினைத்தபடியே, விழுந்தபோது உராய்ந்ததில் உண்டான சிராய்ப்பின் வலியைத் தாங்கியவாறே பாதத்தில் இருந்த வலியையும் பொறுத்தபடியே மெதுவாக எழ முயன்றாள்.

சில இடங்களில் உண்டான சிராய்ப்பில், லேசாக இரத்தம் வெளியே எட்டிப்பார்க்க காற்றுப் பட்டதும் எரிந்தது.

‘இன்னைக்கு ஃபுல்லா எனக்கு நாளே நல்லால்ல’ என புலம்பிக் கொண்டே, சிராய்ப்புகளைப் பரிசோதித்தாள் பிரகதி.

சமாளித்து பாத வலியோடு வெளியில் வருமுன், யாருடனோ அலைபேசியில் பேசிவிட்டு தனது டூவீலரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான் கௌதம்.

பிரகதி வெளியில் வந்து பார்த்தபோது கௌதம் அங்கில்லை. பணியாள் பெண்களிடம், “நான் ஒன்னு நினைச்சு வந்தா, நடக்கிறது எல்லாம் உல்டாவா இருக்கு” என்றபடியே அவர்களிடம் கூறியவள் வீட்டை நோக்கிக் கிளம்பிவிட்டாள் பிரகதி.

கௌதமைப் பற்றிக் கேட்டாலும், இருவருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாது என்றுதான் கூறுவார்கள் என்பது தெரிந்த பிரகதி அவனைப் பற்றிக் கேளாமலேயே வீட்டை நோக்கிக் கிளம்பினாள்.

அதீத வலியோடு, கௌதமின் நடவடிக்கையும் அவளை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தது. மருத்துவமனைக்கு செல்லாமல் நேராக வீட்டை நோக்கிச் சென்றிருந்தாள் பிரகதி.

***

அன்று ஹீமோஃபிலியா பாதிக்கப்பட்டோருக்கான விழிப்புணர்வு மாதாந்திரக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.  புதிய இடத்தில் நடப்பதால் அந்த இடத்திற்கு வர வழி கேட்க அழைக்கிறார் என எண்ணியே அழைப்பை ஏற்றிருந்தான் கௌதம்.

அழைப்பை ஏற்றுப் பேசியவன் அவர்களின் அழைப்பிற்கான காரணத்தைப் பொறுமையாகக் கேட்டறிந்து கொண்டான்.

எதிர்பாராமல் கீழே விழுந்த அவரின் குழந்தைக்கு பல் குத்தி உதடுகளில் இரத்தப்போக்கு! சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் அவர்களிருப்பது.

“நீங்க மதுரை கிளம்பி வரதுக்கு, சிவகங்கை ஜிஹச்கு உங்க குழந்தையக் கூட்டிட்டு எமர்ஜென்ஸி வார்டுக்கு போனீங்கன்னா நல்லா இருக்கும்னு தோணுது” என்றவன்,

“வூண்ட் இருக்கற இடத்தில ஐஸ் க்யூப்ஸ் லைட்டா வச்சு வச்சு எடுங்க.  ப்ளீட் கன்ட்ரோல் ஆகும்.  எவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிடல் போக முடியுமோ… போயிருங்க!” முதலுதவியாகச் செய்ய வேண்டியதைக் கூறியவன்,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திராவிடச்செல்வி எனும் பெண்ணின் எண்ணை அவருக்கு கொடுத்துவிட்டு, “எதாவது உங்களுக்கு டவுட்னா இந்த நம்பருக்குக் கூப்பிட்டுப் பேசுங்கம்மா.  அவங்க உங்களை கைட் பண்ணுவாங்க” என்று கூறிவிட்டு வைத்தான்.

ஒன்பது மாதக் குழந்தை பிடித்தவாறு நடக்கும்போது தவறி விழுந்ததில் பல் பட்டு உதட்டில் ரத்தம் வழியத் துவங்கியிருந்தது. 

தற்போதுதான் லித்திரனின் தாயிக்கு குழந்தையின் பாதிப்பு தெரிய வந்திருந்தது.  ஆகையினால் உதிரம் உறையா குறைபாடு பற்றிய தடுப்பு முறைகள் முதலுதவி பற்றித் தெரியாததால், அவரிடமிருந்த சில எண்ணுக்கு அழைத்து, அவர்கள் அழைப்பினை ஏற்காததால் இறுதியாக கௌதமிற்கு அழைத்து உதவி கேட்டிருந்தார்.

இதுபோல அழைப்புகளை எத்தனை வேலைகளுக்கு இடையிலிருந்தாலும் எடுத்துப் பேசுவதோடு, முறையான வழிமுறைகளைக் கூறி சிகிச்சைக்கு தன்னாலான உதவிகளைச் செய்வான் கௌதம்.

திராவிடச்செல்விக்கு அழைத்து, “அக்கா.  லித்திரன் அம்மா கால் பண்ணுவாங்க.  அந்த பையனுக்கு உதட்டுல காயம் பட்டு ப்ளீட்னு சொன்னாங்க” என்றதோடு, தான் கூறிய விசயங்களைப் பற்றிச் சொன்னதோடு,

“அவங்க எதாவது கால் பண்ணிப் பேசுனா கொஞ்சம் கைட் பண்ணுங்கக்கா” என்றுவிட்டு வைத்தவன், மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த உதிரப்போக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கான விழிப்புணர்வு மற்றும் உடற்பயிற்சி கூட்டத்திற்கு செல்ல கிளம்பிவிட்டான்.

மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அனைவருக்குமான கூட்டமது.

உதிரப்போக்கு நோயின் ஆங்கிலப் பெயர் “ஹீமோஃபிலியா” என்பதிலிருந்து துவங்கி, இரத்தக் காரணி எண், ஏழு, எட்டு, ஒன்பது, பதினொன்று போன்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களது நிலையினைப் பற்றி எடுத்துக் கூறியதோடு, தடுப்பு முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் தரப்பட்டது.

உலகம் முழுமைக்கும் லட்சத்தில் ஒருவர் என்றிருந்த இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் தரவு எண்ணிக்கை இன்றையத் தரவின்படி பத்தாயிரம் நபருக்கு ஒருவர் வீதம் என்கிற ரீதியில் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

இது மரபியல் சார்ந்த குறைபாடு.  பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது.  பெற்றோர் இருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெண் குழந்தைகளுக்கும் இக்குறைபாடு உண்டாக வாய்ப்புள்ளது.

நோய் தாங்கியாக இருக்கும் பெண் குழந்தைகளைக் காட்டிலும், இக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் நிலை அபாயகரமானது.

நோய் தாங்கியாக உள்ள பெண்களுக்கு அசௌகரியங்கள் ஏதுமில்லை. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கே பிரச்சனைகள் உண்டாகும்.

ஆனால் குறைபாடுடைய பெண்கள் மாதாந்திர பிரச்சனைகளின் போதுமன்றி, பிரசவ காலங்களில் மிகுந்த பாதிப்பிற்குள்ளாவார்கள். இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உயிரிழப்புகள் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.

இலண்டன் மகாராணியாக இருந்த விக்டோரியாவிற்கும் இந்தக் குறைபாடு இருந்துள்ளது. இரத்தத்திலுள்ள காரணி ஒன்பது வகைக் குறைபாடு அவருக்கு. ஆகவே இந்நோய் பணக்கார நோய் என்றழைக்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில் உள்ள அளவிற்கு இந்தியாவில் இதற்கான மருந்துகள் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படி சில மருத்துவமனைகளில் அரிதாகக் கிடைத்தாலும், மூன்று யூனிட் அளவேயான மருந்து வாங்க ஐம்பதாயிரம் வரை செலவாகிறது.

இதனை ஒரு முறை போட்டவுடன் நோயாளி முற்றிலுமாக குணமாகிவிடுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரியுடன் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் தற்போது இலவசமாக மருந்துகள் அங்கு செல்லும் நோய் குறைபாடுடையோருக்கு அளிக்கப்படுகிறது.

மருந்து அரிதாகக் கிடைப்பதோடு இதற்கான துறையைச் சார்ந்த மருத்துவர்கள் குறைவாகவே இருப்பதால், பெரும்பாலும் பொது மருத்துவ துறை மருத்துவர்களே இக்குறைபாடுடையவர்களுக்கு சிசிச்சை அளிக்க முன்வருகின்றனர்.

உலக நாடுகளுக்கு முன்னோடியாக இக்குறைபாடு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களில் முதல் தரமான சிகிச்சையளிப்பதில் வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனை சிறப்பாகத் திகழ்வதாக செய்தி பகிரப்பட்டது.

மேலும் இதுசார்ந்த விழிப்புணர்வு இல்லாததால் நிறைய மரணங்கள் இந்தியாவில் நிகழ்வதாக ஆராய்ச்சி முடிவுகள் உள்ளதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பெண்கள் பெரும்பாலும் இக்குறைபாடு கடத்தியாகவே இருக்கின்றனர்.  மிகச் சில பெண்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலமுறை இதனைக் கேட்டறிந்து கொண்டிருந்தாலும், கௌதம் இதுபோன்ற கூட்டங்களைத் தவற விடமாட்டான்.

கூட்டத்தில் பேசிக் கொண்டிருப்பதை கவனத்தில் கொண்டிருந்தவனுக்கு, ‘ஒரு நாளைக்கு இந்தப் பைத்தியத்தை(பிரகதி) இங்க கூட்டிட்டு வந்தா, அப்புறம் நான் இருக்கற பக்கமே தலை வச்சிப் படுக்காது’ என நினைத்துக்கொண்டே அங்கே பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம்.

இதுவரை அவளைத் தன்னோடு எங்கும் அழைத்துச் சென்றிருக்காததால், பெண்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் தன் தாயோடு ஒரு முறை அவளையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

உதிரப்போக்கு நிற்க பிளாஸ்மாவை ஊசியாகச் செலுத்துவதாலோ அல்லது ஐஸ் கட்டி வைத்து முதலுதவியின் வாயிலாக நின்றிருந்தாலும், குறைபாடுடையோர் உடனே தனது வேலைகளை இலகுவாகச் செய்ய முடியாத நிலையில் இருப்பர்.

அப்படி அவரது பாதிக்கப்பட்ட பகுதி அசைவிற்குள்ளாகும்போது மீண்டும் உதிரப்போக்கு உண்டாக நேரலாம்.  ஆகையினால் இத்தகைய பாதிப்பிற்குள்ளானவர்கள் முற்றிலும் குணமாகும்வரை ஒரேயிடத்தில் ஓய்வாக இருக்க நேரிடும்.

அந்த நேரத்தில் அவர்களுக்கு இதமான சூழலோடு, நல்ல உணவும் காற்றோட்டமான படுக்கை வசதியும், கழிப்பறை வசதியும் செய்து தரவேண்டும்.

மேலும் தசைகளுக்குள் உதிரப்போக்கின் காரணமாக வெளியேறிய உதிரமானது உறைந்து பார்வைக்கு கருமையாகவோ, கரும்பச்சை நிறத்திலோ காட்சியளிக்கும்.

வெளியேறி நிற்கும் அந்த உறைந்துபோயிருக்கும் உதிரமானது சிறுநீர் மற்றும் மலம் வழியே கழிவாக வெளியேறி  பழைய நிலைக்கு தசைப்பகுதி வர, ஏறத்தாழ பதினைந்து நாள்கள் முதல் அதிகபட்சம் இரண்டு மாதங்கள்வரை உதிரப்போக்கின் அளவினைப் பொறுத்து மாறுபடும்.

ஆகையினால் உதிரப்போக்கு நடந்த சில காலத்திற்கு சாதாரணமாக உட்கொள்ளும் நீரின் அளவைக் காட்டிலும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.

அடிபட்டால் மட்டுமே உதிரப்போக்கு என்றில்லாமல், சிலருக்கு திடீரென்று உதிரப்போக்கு உடலின் தசைகளுக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் உண்டாகும்.

உணவுமுறை, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் அடிக்கடி உதிரப்போக்கு நிகழக்கூடும்.

சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவோடு,  மூட்டுகளுக்கு  வலிமையைத் தரக்கூடிய உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது அதிகளவில் அடிக்கடி நிகழக் கூடிய உதிரப் போக்கினை தடுக்க இயலும்.

கை, கால் இணைப்பு மூட்டுகளில்தான் பெரும்பாலும் இவ்வகைக் குறைபாடுடையோருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும்.

இரத்தத்தில் உள்ள நிணநீர் என்று கூறக்கூடிய பிளாஸ்மாவின் அளவினை கூட்டக்கூடிய வகையில் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருவதோடு, பிளாஸ்மா அளவினை குறையாமல் தக்க வைத்துக் கொள்ள உதவும் இளநீரை அடிக்கடி அருந்துவது இக்குறைபாடு உடையோருக்கு சாலச் சிறந்தது.

வெளியில் பார்க்கும்போது சாதாரணமாகவே இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவார்கள் இப்படி பேச்சு நீண்டு கொண்டிருந்தது.

அவ்வப்போது புதியதாக இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ள வருவதால், இதுவரை கூறப்பட்ட செய்திகள் பெரும்பாலும் திரும்பத் திரும்ப விவாதிக்கப்படுகிறது.

அடுத்த அமர்வாக, உடற்பயிற்சி செய்யும் முறைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

ஹீமோஃபீலியா பெடரேசன் ஆஃப் இண்டியா எனும் அமைப்பின் கீழ் ஸோன்(Zone) மீட்டிங் மாதமொரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ முக்கிய நகரங்களில் நடைபெறும்.

அந்த அமைப்பின் நோக்கமே, இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு  உரிய சிகிச்சை மூலம் உயிரிழப்பைத் தடுப்பது, மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேண்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய மருந்துகளைப் HFI வாயிலாகப் பெற்று வழங்குவது, வாழும் காலத்தில் நம்பிக்கையை விதைத்து நல்லதொரு எதிர்காலத்திற்கு வித்திடுவது, மேலும் இந்நோய் வராமலிருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கை போன்றவற்றை பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுத்தித் தருவதே.

ஹீமோஃபிலியாவால் உண்டான உறுப்புகளின் குறைபாட்டைச் சரி செய்வதற்கான பிரத்தியேக பிஸியோதெரபிஸ்ட் உடற்பயிற்சியின் நலன்களைப் பற்றிக் கூறியதோடு, எப்படியான  நிலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது பற்றியும், மூட்டுகளில் அடிக்கடி இரத்தப்போக்கு நிகழ்ந்தவர்களுக்கு காணப்படும் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தார்.

கூட்டம் நிறைவடையும்வரை இருந்தவன் மருந்தகத்திற்கு வந்தபோது பிரகதியைக் காணவில்லை.  ஆனால் அவளைப்பற்றி யாரிடமும் எதுவும் கேட்காமல் அவனது பணிகளைக் கவனிக்கத் துவங்கினான் கௌதம்.

ஆனால், ‘டீட்டீ போட்டுச்சா, இல்லை நேரா வீட்டுக்கு போயி திண்ணுட்டு தூங்குச்சானு தெரியலையே’ மனதில் பிரகதியைப் பற்றிய சிந்தனையோடு, ஆனாலும் அவளுக்கு அழைக்க எண்ணிய மனதைக் கட்டுப்படுத்தினான்.

ஆனாலும் அவனால் அப்படியே விட முடியாத மனம் நடந்த நிகழ்வுகளைச் சுற்றியும், ‘நாமளே ஒரு டீட்டீ போட்டு அனுப்பியிருக்கணும்.  அப்டினா இப்ப என்னாச்சோ ஏதாச்சோனு யோசிக்கத் தேவையில்லை’ தன்னையே நொந்து கொண்டவன்,

‘ஃபார்மஸிஸ்ட்டுக்கு இதுகூடத் தெரியலைன்னா…  இது வாழறதே வேஸ்ட்டு’ நினைத்தவன்,

‘அப்டி லெதாஜிக்கா இருக்க மாட்டா’ அவனாகவே பிரகதியைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தவன் வேலையில் கவனமானான்.

வீட்டிற்குச் சென்றதும் எப்போதும் அழைப்பவள் அன்று அவனுக்கு அழைக்காதது வேறு மனதைக் குடைந்தது.

‘எப்பவும் வீட்டுக்குப் போயிட்டு போன் பண்ணுவா.  இன்னைக்கு என்னாச்சு’ எதிர்பார்த்த மனதை அடக்க வழிதெரியாமல், பிரகதிக்கு என்னானது என்றும் புரியாமல் மனதிற்குள் புலம்பியபடியே பொழுதை நெட்டித் தள்ளினான் கௌதம்.

அப்படியே அன்றைய பொழுது செல்ல, இரவு வீட்டிற்குச் சென்றவனை வரவேற்ற தந்தையைக் கண்டு, “வாங்கப்பா.  என்னப்பா இன்னைக்கு சொல்லாம கிளம்பி வந்திருக்கீங்க.  நல்லாயிருக்கீங்களா?” தன் பங்கிற்கு வரவேற்றவனுக்குள், ‘தனியா கார்னர் பண்ணா, எஸ்கேப்பாகிறேன்னு தொணைக்கு இந்த அப்பாவை வரச் சொல்லியிருக்காங்களோ’ மனதில் தோன்றிய எண்ணத்தை வெளியில் காட்டாது உண்ணச் சென்றான்.

அதேநேரம் தொடர்ச்சியான குறுஞ்செய்திகள் வரும் சத்தம் அவனது அலைபேசியில் ஒலிக்க, ‘என்ன மெசேஜ்? யாரு இந்த நேரத்துல?’ என யோசித்தபடியே அலைபேசியை எடுத்து நோக்க, என்ன மெசேஜ் என்பதைவிட யாரிடமிருந்து என்பதைப் பார்த்ததுமே கௌதமின் வதனத்தில் இளநகையின் சாயல்.

பிரகதியிடமிருந்ததுதான்!

‘என்னைத் தேடவே இல்லை’ எனும் டெக்ஸ்ட் மெசேஜ் அருகே அழும் எமோஜிகள்.

‘நாந்தான் எப்பவுமே உம்மேல பைத்தியமா இருக்கேன்’

‘எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’

‘என்னை ஏன் உனக்கு பிடிக்கவே மாட்டிங்குது’ இப்படி தொடர்ந்து குறுஞ்செய்தி வந்து கொண்டேயிருந்தது

தன்னவளின் குறுஞ்செய்தியில் கௌதமின் மனம் லேசானது.

அடுத்தும் குறுஞ்செய்திகள் தொடர்ச்சியாக வர அவனது தாய், “சாப்பாட்டைக் காக்க வைக்கக் கூடாது கௌதம்.  சாப்பிட்டுப் பாரு” என்றதும் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு பதில் பேசாமலேயே உண்ணத் துவங்கினான் கௌதம். 

உண்டுவிட்டு எழுந்தவனிடம் தந்தை பேசத் துவங்கிட, கௌதம் என்ன பதில் பேசினான்?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!