உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 11

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 11

கலைச்செல்வி போட்ட சத்தத்தில் செந்தமிழ் இல்லமே அதிர்ந்து போக அசோகனோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றார்.

 

“கலை என்ன ஆச்சு?” சமையலறைக்குள் இருந்து பதட்டத்துடன் வெளியே வந்த வளர்மதியின் கையை பிடித்துக் கொண்ட கலைச்செல்வி

 

“அம்மா! அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு? எப்போ பார்த்தாலும் ஆஸ்தி, அந்தஸ்து, பணம்ன்னு அதைப் பற்றியே பேசிட்டு இருக்காங்க ஏன்மா ஏன்? அவருகிட்ட கேளுங்கம்மா அவருக்கு என்ன ஆச்சுன்னு கேளுங்கம்மா” அந்த கரங்களிலேயே தன் முகத்தை புதைத்துக் கொண்டு கண்ணீர் விட வளர்மதியோ தன் கணவரை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தார்.

 

“இங்கே என்ன நடந்தது? யாராவது வாயைத் திறந்து சொல்லுங்க? ஒரு மாதமாக எல்லோரும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருந்து இன்னைக்கு தான் கொஞ்சம் பழைய படி மாறி இருந்தோம் அதற்கிடையில் என்ன நடந்தது சொல்லுங்க? யாராவது வாயைத் திறந்து சொல்லுங்க” வளர்மதி அதட்டலாக கேட்கவும் அசோகன் அருகில் நின்று கொண்டிருந்த கதிரரசன் தன் தந்தையை தயக்கத்தோடு பார்த்தபடியே அங்கே நடந்தவற்றை கூறினார்.

 

கதிரரசன் கூறியவற்றை எல்லாம் கேட்டு தன் கையில் முகம் புதைத்து நின்ற கலைச்செல்வியின் முகத்தை நிமிர்த்தியவர் அவரது கண்களைத் துடைத்துவிட்டு விட்டு அசோகனின் முன்னால் சென்று நின்று கொண்டார்.

 

“என்னங்க இதெல்லாம்? உங்களுக்கு திடீர்னு என்ன ஆச்சு? பசங்க சந்தோஷமும், அவங்க ஆசையும் தான் முக்கியம்னு வாழ்ந்து வந்த நீங்க இப்போ எதனால் இந்த வசதி, வாய்ப்புகளை பிடித்துக்கொண்டு இருக்குறீங்க சொல்லுங்க?”

 

“நான் என்ன தப்பாக பேசிட்டேன்னு நீயும் புரிந்து கொள்ளாமல் பேசுற மதி? நம்ம பிள்ளைங்க சந்தோஷமாக போற இடத்தில் எந்த குறையும் இல்லாமல் வாழணும்னு தானே நான் இதெல்லாம் பண்றேன் அதை ஏன் நீங்க புரிந்து கொள்ளாமல் இருக்குறீங்க?” 

 

“அய்யோ! அப்பா! நீங்க ஆசைப்பட்ட எல்லாம் நடந்தாலும் அது இந்த பிள்ளைகளுக்கு உண்மையாகவே சந்தோஷம் தரக்கூடியது தானா என்று ஏன் நீங்க யோசிக்க மாட்டேங்குறீங்க?” கலைச்செல்வி தன் கண்ணீரை துடைத்து விட்டபடியே அசோகன் முன்னால் வந்து நின்று கேட்டார்.

 

“மூணு மாதங்களுக்கு முன்னாடி நல்லா விசாரித்து பார்த்தாச்சு எல்லோருக்கும் பிடித்து இருக்கு கௌசிக் தான் இழையினிக்கு ஏற்ற பையன்னு சொல்லி இதோ இவ மனதில் ஆசையை வளர்க்க வைத்து கல்யாண மேடை வரைக்கும் கொண்டு போய் நிற்க வைத்து விட்டு ஒரே நிமிடத்தில் அவ ஆசையை சுக்கல் சுக்கலாக நொறுங்க வைத்தீங்க! இப்போ இன்னைக்கு இன்னொரு சம்பந்தம் அதே மாதிரி! இதுவும் நாளைக்கு நம்மை விட வசதி குறைவானது என்று தெரிய வந்தால் நாளைக்கே அந்த பையன் கௌசிக்கிற்கு நடந்த அதே விடயம் தான் இதற்கும் நடக்கும் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை இந்த கல்யாணம் நின்று போனால் அதை விட சிறப்பாக இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க ஆனா என் பொண்ணு? அவ நிலைமை! அவளும் சாதாரணமான மனுஷிதான்பா! கல்லு இல்லை! நீங்க இன்னொரு சம்பந்தம் பார்த்துட்டு வந்து இருக்கேன் நல்ல குணம், பண்பாடு உள்ள பையன்னு சொல்லி இருந்தால் நானே இழையினியை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்து இருப்பேன் ஆனா நீங்க சொன்னது நம்ம வசதிக்கு ஏற்ற பையன்! அங்கேயும் பணம், வசதி, வாய்ப்புக்கு தான் முதலிடம் மனதுக்கு இல்லை அப்படித்தானே?”

 

“அம்மா ப்ளீஸ்! வீணாக நமக்குள்ள பிரச்சினை வேண்டாம் விட்டுடுங்கம்மா!” இழையினி கண்ணீர் சிந்தியபடி நின்று கொண்டிருந்த தன் அன்னையின் தோளைப் பற்றி கொண்டு கெஞ்சலாக அவரைப் பார்க்க 

 

அவளை இழுத்து அசோகனின் முன்னால் நிறுத்தியவர்

“இதோ இருக்கா உங்க பேத்தி அவ கிட்ட கேளுங்க அவ மனதில் என்ன இருக்குன்னு கேளுங்க! கௌசிக்கைப் பற்றி பேச்சு எடுத்த நாளில் இருந்து அவனையே மனதுக்குள் நினைத்து நினைத்து ஆசையை வளர்த்து கல்யாணம் நின்று போனதற்கு பிறகும் அவனையே நினைத்து எப்படியாவது அவனோடு கல்யாணம் நடக்கும்னு காத்துட்டு இருந்து இப்போ அவன் வேறு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போனதற்கு அப்புறமும் முழுமையாக அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு நாளும் அதை நினைத்து அவளுக்குள்ளேயே அழுது கரைஞ்சுட்டு இருக்காளே உங்க பேத்தி! அவ கிட்ட கேளுங்க அவளுக்கு தேவை இந்த பணமும், வசதியுமான்னு கேளுங்க!” கோபத்தில் கண்கள் இரண்டும் சிவந்து போக அவரைப் பார்த்து கேட்க அவரோ கால்கள் தள்ளாட வளர்மதியின் தோளை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றார்.

 

“இழைம்மா! கலை சொல்லுறதெல்லாம் உண்மையா? தாத்தா தப்பு பண்ணிட்டேனா?”

 

“இப்போ எதற்கு தாத்தா அதெல்லாம்? இப்போதைக்கு என் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் தாத்தா அம்மா சொன்ன மாதிரி கொஞ்ச நாள் போகட்டுமே!”

 

“அப்போ நான் உண்மையிலேயே தப்பு தான் பண்ணிட்டேனா?” அசோகன் கலக்கத்துடன் வளர்மதியைப் பார்க்க

 

 அவரது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்ட இழையினி 

“தாத்தா! இப்போதும் சரி எப்போதும் சரி! நீங்க பார்த்து சொல்லுற என் மனதுக்குப் பிடித்த யாராக இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிப்பேன் ஆனா நீங்க எப்போ உங்களோட இந்த வசதி, வாய்ப்பு, பணம், பதவி, அந்தஸ்து இதெல்லாம் கொஞ்சம் தூக்கி ஓரமாக வைத்து விட்டு மனுஷனை மதிக்கும் பையனை மனதார விரும்பி தேடுறீங்களோ அன்னைக்கு தான் உண்மையான சந்தோஷத்தோடு இந்த வீட்டில் கல்யாணம் நடக்கும் இதற்கு மேல என்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம் தாத்தா ப்ளீஸ்!” கண்ணீர் சிந்தி சிவந்து போன தன் கண்களை வேறு புறம் திருப்பிக் கொண்டு வேகமாக எட்டுக்களை வைத்து படியேறி தன்னறைக்குள் சென்று விட கலைச்செல்வியும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

 

சிறிது நேரத்தில் ஹாலில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு புறமாக சென்று விட புயலடித்து ஓய்ந்தது போன்று இருந்த அந்த விசாலமான ஹாலில் அசோகன் மாத்திரம் நின்று கொண்டிருந்தார்.

 

அத்தனை நேரமாக நடந்த விடயங்களையே மீட்டிப் பார்த்தபடி அவர் நின்று கொண்டிருக்க தண்ணீர் அருந்துவதற்காக தன்னறையிலிருந்து வெளியே வந்த இழையினி அவரது அந்த தோற்றத்தை பார்த்து விட்டு மனமும், கண்களும் கலங்க மீண்டும் தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

 

கலைச்செல்வி தனக்காக பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே நினைத்துப் பார்த்துக் கொண்டவள்

“அம்மா! உங்களுக்காக கண்டிப்பாக நான் பழையபடி மாறணும்மா! இந்த வீட்டில் நடந்த பிரச்சினை எல்லாம் இன்றோடு முடிந்து போகட்டும் இனி இந்த வீட்டில் யார் கண்ணிலும் கண்ணீர் வராது” மனதிற்குள் தன்னை திடப்படுத்தி கொண்டு எழுந்து சென்று தன் வேலைகளை கவனிக்க தொடங்க விதியோ அவள் நினைத்ததற்கு எதிர்மாறான விடயத்தை அவளுக்கு வழங்கி வைக்க காத்திருந்தது.

 

அன்று எல்லோரும் மனதளவில் சற்று கலக்கமாக உணர்ந்ததால் என்னவோ இரவுணவைக் கூட சாப்பிடாமல் உறங்கச் சென்று விட இழையினும் நாளைய விடியலை சந்தோஷமாக எந்த கவலையுமின்றி எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணயர்ந்தாள்.

 

காலை விடியல் பறவைகளின் கீச்சொலியோடு ஆரம்பிக்க முன்னிரவில் முடிவெடுத்ததைப் போல புன்னகையுடன் தன் வேலைகளை எல்லாம் செய்து முடித்தவள் அதே மனநிலையுடன் படியிறங்கி வந்து ஹாலில் எல்லோருடனும் சகஜமாக பேச தொடங்கினாள்.

 

இழையினி புன்னகையுடன் வலம் வருவதைப் பார்த்து மற்றவர்களின் முகங்களிலும் சந்தோஷம் குடியேற நேற்று நடந்த சம்பவங்களின் தாக்கம் எல்லோர் மனதிலுமிருந்து சிறிது அப்பால் விலகி சென்று இருந்தது.

 

காலை உணவு உண்பதற்காக எல்லோரும் டைனிங் ஹாலில் ஒன்று கூடியிருக்க இழையினியோ தன் அன்னையை அங்கு காணாமல் இளமாறனிடம்

“அப்பா! அம்மா எங்கே?” என்று கேட்டாள்.

 

“அம்மாவா?” சுற்றிலும் ஒரு முறை திரும்பிப் பார்த்து கொண்டவர்

 

“கலை இன்னும் வரலயா? நான் வந்து இருப்பான்னு இல்லையா நினைத்தேன்? நைட் பூராவும் தூங்காமல் காலையில் தான் கொஞ்சம் கண்ணயர்ந்து தூங்குனா அது தான் நானும் அவளை எழுப்பி இருங்க போய் பார்த்து எழுப்பி விட்டு வர்றேன்” என்றவாறே அவர்களது அறையை நோக்கி செல்லப் போக 

 

இழையினியோ

“பரவாயில்லை நீங்க இருங்கப்பா! நான் போய் பார்க்கிறேன்” என்று விட்டு செல்ல

 

“இழை நானும் வர்றேன்” தேன்மொழியும் அவளோடு இணைந்து நடந்து சென்றாள்.

 

“அம்மா! அம்மா!” கலைச்செல்வியின் அறைக் கதவைத் தட்டிவிட்டு சிறிது நேரம் காத்து நின்றவர்கள் அவரிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.

 

அங்கே கட்டிலில் கலைச்செல்வி நன்றாக அசந்து தூங்குவது போல கண்மூடியிருந்தார்.

 

“அம்மா! என்னம்மா இது? காலையில் நேரத்திற்கு எழும்பணும்னு எங்களை சொல்லுவீங்க இப்போ நீங்க ஒன்பது மணி வரைக்கும் தூங்குறீங்க எழுந்துறீங்கம்மா” தன் அன்னையின் கையின் மேல் தன் கையை வைத்த இழையினி சில்லென்று இருந்த அவரது கைகளைப் பார்த்து விட்டு மீண்டும் மீண்டும் அவரை தட்டி எழுப்பினாள்.

 

“இழை! என்ன ஆச்சு? ஏன் அத்தை எழுந்துரிக்க மாட்டேங்குறாங்க?” தேன்மொழி பதட்டத்துடன் இழையினியின் தோளில் கை வைக்க

 

“தே..தேனு! நீ… போய் அப்பாவைக் கொஞ்…சம் வரச் சொல்லு போ” தடுமாற்றத்துடன் அவளைப் பார்த்து கூறினாள்.

 

“அம்மா! அப்பா! மாமா! சீக்கிரமா வாங்க” தேன்மொழி சத்தமிட்டு கொண்டே ஹாலை நோக்கி ஓடிச் செல்ல டைனிங் ஹாலில் நின்று பேசிக் கொண்டு நின்றவர்கள் எல்லோரும் கையிலிருந்த பொருட்களை எல்லாம் போட்டது போட்டபடி போட்டு விட்டு பதட்டத்துடன் அவளை நோக்கி ஓடினர்.

 

“தேனு என்ன ஆச்சு?”

 

“எதற்கு இப்படி சத்தம் போட்ட?” பெரியவர்களின் கேள்விக்கு நடுங்கிய படியே கலைச்செல்வியின் அறையின் புறம் அவள் தன் கையை காட்ட அவர்கள் எல்லோரும் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

 

அங்கே இழையினி தன் முகத்தில் தன் அன்னையின் கையை வைத்து பிடித்தபடி அமர்ந்திருக்க இளமாறன் பதட்டத்துடன் அவளருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்டார்.

 

“இழை! என்னம்மா ஆச்சு? கலை! கலை!” தன் மனைவியையும், மகளையும் மாற்றி மாற்றி அவர் உலுக்க அவர்கள் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

 

“கலை உனக்கு என்னம்மா ஆச்சு?” கலைச்செல்வியின் நெற்றியில் கை வைத்து பார்த்தவர் குளிர்ந்து போய் இருந்த அவரது உடலை பார்த்து விட்டு அதிர்ச்சியாக பின்னால் நகர்ந்து செல்ல வளர்மதியும், மதியழகனும் ஆளுக்கொரு புறமாக அவரைத் தாங்கிக் கொண்டனர்.

 

“அழகா! உன் அம்மா! உன் அம்மா! நம்மளை எல்லாம் விட்டு போயிட்டாடா!” தன் மகனின் தோளில் முகம் புதைத்து இளமாறன் கதறியழ சுற்றி நின்ற அனைவரும் அவரது வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

 

எல்லோரும் நடந்த விடயங்களை மறந்து சிறிது நேரம் கூட சந்தோஷமாக இருந்திருக்க மாட்டார்கள் அதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கலைச்செல்வியின் மரணம் அவர்களை எல்லாம் சுழற்றிப் போட்டது.

 

அசோகன் ஏற்கனவே நேற்று நடந்த சம்பவங்களை நினைத்து தனக்குள் மருகி கொண்டிருக்க அவரது மகளின் மரணம் அவரை மொத்தமாக நிலை குலையச் செய்தது.

 

தன்னால் தானே இத்தனை பிரச்சினைகளும் என்ற எண்ணம் அவர் மனதை வண்டாக குடைய முற்றிலும் நொறுங்கி போன மனதோடு தள்ளாடியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றவர் தன்னறைக்குள் சென்று அடைந்து கொண்டார்.

 

ஆசையாக வளர்த்த மகள்‌‌ மற்றும் பேத்தி இருவரது வாழ்க்கையும் தன்னால் கெட்டுப் போய் விட்டதே என்று அவர் கதறியழ அந்த அழுகை சத்தம் எல்லோர் கண்களிலும் கண்ணீரை சிந்தச் செய்தது இழையினியைத் தவிர.

 

கலைச்செல்வியின் சில்லிட்டுப் போன கையையே பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீரும் சிந்தவில்லை.

 

குடும்பத்திற்கே ஆணி வேராக இருந்த தன் தாத்தாவைப் பார்ப்பதா? இல்லை மொத்த சொந்தமுமாக இருந்த தன் மனைவியை இழந்த தன் தந்தையை கவனிப்பதா? அல்லது தொடர் அதிர்ச்சிகளைப் பார்த்து உணர்வே இல்லாமல் சிலையென உறைந்து போய் இருக்கும் தன் தங்கையைப் பார்ப்பதா என்று புரியாமல் மதியழகன் தவித்துப் போனான்.

 

சொந்தங்களும், உறவுகளும் கண்ணீரோடும், சோகத்தோடும் கலைச்செல்வியை இறுதி பயணத்திற்காக அனுப்பி வைக்க அப்போதும் இழையினி கண்களில் இருந்து கண்ணீர் வரவே இல்லை.

 

“இழைம்மா! ஏன்டா இப்படி இருக்க? இப்படி இருக்காதேடா! எங்களுக்கு பயமாக இருக்கு இப்படி மனதிற்குள்ளேயே எல்லாவற்றையும் போட்டு அழுத்தி கொள்ளாமல் மனது விட்டு அழுதுடும்மா! ப்ளீஸ் அழுதுடு” கலைச்செல்வி இறந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தும் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் கல்லென இறுகிப் போய் அமர்ந்திருந்த இழையினியின் தோள் பற்றி மதியழகன் உலுக்க அவனை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள் தன் தோளில் அவனது கைகளை எடுத்து விட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றாள்.

 

அவளது பார்வையில் தெரிந்தது வலியா? விரக்தியா? இல்லை வேறு எதுவுமா? மதியழகனால் எதையுமே யூகிக்க முடியவில்லை.

 

இழையினி கலைச்செல்வி இறந்து போன நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தனக்குள்ளேயே இறுகிப் போகத் தொடங்கினாள்.

 

யாரிடமும் எதுவும் பேசாமல் எந்த ஒரு உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் மொத்தத்தில் தன்னையே மறந்த ஒரு நிலையில் வாழத் தொடங்கியிருந்தாள் அவள்.

 

தன் திருமணம் நின்று போன நாளிலிருந்து தன் அன்னை பட்ட வேதனையை பார்த்து பார்த்து வந்ததால் என்னவோ அந்த வேதனை தான் அவரது மரணத்திற்கும் காரணம் என்று அவளது மனம் எண்ணத் தொடங்கியது. 

 

நாளடைவில் அந்த எண்ணம் கோபமாக, வெறுப்பாக மாற அவை எல்லாம் தன் தாத்தாவினால் தானே என்று முடிவு செய்து கொண்டாள்.

 

தன் கவலையுடன் கூடிய தோற்றமே இதற்கு எல்லாம் தீர்வு என்று எண்ணியவள் அப்படியே நடந்து கொள்ளவும் தொடங்கினாள்.

 

இழையினியின் அந்த நிலையை பார்க்கும் போதெல்லாம் அசோகன் முற்றிலும் நொறுங்கி போவார் அதைப் பார்த்து அவளுக்கு மனதிற்குள் ஏதோ ஒரு திருப்தி.

 

கலைச்செல்வி இறந்து ஒரு வாரம் கடந்து இருந்த நிலையில் தோட்டத்தில் தனியாக அமர்ந்திருந்த மதியழகனைத் தேடி வந்து அமர்ந்து கொண்டாள் இழையினி.

 

இத்தனை நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த தன் தங்கை இன்று அந்த கூட்டில் இருந்து வெளியேறி அதுவும் அவளாகவே தன்னை தேடி வந்திருப்பதைப் பார்த்து ஒரு அண்ணனாக அவன் மனம் சந்தோஷத்தில் திளைத்து போனது.

 

கண்கள் கலங்க அவன் இழையினியைப் பார்த்து கொண்டிருக்க சட்டென்று அவன் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டவள்

“மதிண்ணா! என்னை வெளியே எங்காவது கூட்டிட்டு போறியா?” அவன் கண்களைப் பார்த்து கேட்க அவனோ புன்னகையுடன் அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தான்.

 

இத்தனை நாட்களுக்குப் பின் தன் தங்கை வாய் திறந்து பேசிய அந்த ஒரு சில வார்த்தைகளே அவனுக்கு கூடை கூடையாக தெம்பை வாரியிறைத்தது  போல இருந்தது.

 

எங்கே போகிறோம் என்று கூட கேட்காமல் காரில் ஏறி கண் மூடி சாய்ந்து அமர்ந்துகொண்ட இழையினியை மதியழகன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

 

கை போன போக்கில் காரை ஓட்டி கொண்டு சென்றவன் இறுதியாக கடற்கரையோரத்தில் காரை நிறுத்தி ஜன்னல்களை இறக்கி விட தன் முகத்தில் மோதிய குளிர் காற்றில் இழையினி மெல்ல கண் திறந்து பார்த்தாள்.

 

செயற்கை விளக்கொளியில் அந்த கடற்கரை சாலை பிரகாசித்தாலும் வானில் உலா வந்த அந்த வெண்ணிலவின் ஒளியின் முன்னிலையில் மற்றைய எல்லா வெளிச்சங்களும் பின் தங்கி போனது.

 

நட்சத்திரங்களோடு சேர்ந்து முகில் கூட்டங்களுக்குள் பயணித்து கொண்டிருந்த நிலவைப் பார்த்து கொண்டிருந்த இழையினியின் தலையை மதியழகன் வருடிக் கொடுக்க அந்த ஸ்பரிசத்தில் திரும்பிப் பார்த்தவள் அவனது தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 

“மதிண்ணா!” 

 

“சொல்லுடாம்மா!”

 

“நம்ம அம்மாவும் இப்போ அந்த வானத்தில் நட்சத்திரமாக மாறி நம்மைப் பார்த்துட்டு இருப்பாங்க இல்லையா?”

 

“……..”

 

“என்னண்ணா அமைதியாக இருக்க? சொல்லுண்ணா!” 

 

“ஆமாடா! பார்த்துட்டு தான் இருப்பாங்க”

 

“ஏன்ணா அம்மா  நம்மை எல்லாம் தனியாக விட்டுவிட்டு போனாங்க?”

 

“எ… எனக்கு தெரியல..யே டா!” மதியழகனின் கண்கள் கலங்க அந்த தடுமாற்றத்தில் அவனது குரலும் கலக்கத்துடனேயே ஒலித்தது.

 

தன் அண்ணனின் கண்களில் இருந்து வந்து தன் கன்னத்தில் விழுந்த இரு துளி கண்ணீரில் தன் விழி நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்

“மதி…ண்ணா! என…. எனக்கு அம்… அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு… ண்ணா!” கேவலோடு அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.

 

அத்தனை நாட்களாக மனதிற்குள் வைத்து மருகிக் கொண்டிருந்த துக்கம் எல்லாம் மறைந்து போகும் அளவுக்கு கதறியழுதவளை பார்த்து அவள் தமையன் மனதும் ஊமையாக அழவே செய்தது.

 

இழையினியின் மனக்குறை தீரும் வரை அவள் அழுது முடிக்கட்டும் என்று அவனும் எதுவும் பேசவில்லை.

 

மெல்ல மெல்ல அவளது அழுகை குறைந்ததும் காரில் இருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டி

“முகத்தை கழுவிட்டு வாடா!” என்று கூறியவன் அவள் முகத்தை கழுவி விட்டு வந்த பின்னர் காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.

 

வீட்டுக்கு செல்லும் வழி முழுவதும் இருவருக்கும் இடையில் கனத்த அமைதியே நிலவியது.

 

மதியழகன் காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வரும் வரை அவனுக்காக காத்து கொண்டு நின்றவள் அவன் வருவதைப் பார்த்ததும் தயக்கத்துடன் அவனருகில் சென்று நின்றாள்.

 

“இழை! நீ இன்னும் வீட்டுக்குள்ள போகலயா?”

 

“இல்லைண்ணா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

 

“சொல்லுடாம்மா என்ன விஷயம்?”

 

“எனக்கு வேறு எங்காவது போகணும் போல இருக்குண்ணா வீட்டுக்குள்ள போகப் பிடிக்கல”

 

“சரி இரு காரை எடுத்துட்டு வர்றேன் எங்காவது போகலாம்”

 

“இல்லைண்ணா நான் அப்படி சொல்லல”

 

“பின்ன வேறு எப்படி?” மதியழகன் குழப்பத்துடன் இழையினியைப் பார்க்க

 

 தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“கொஞ்ச நாளைக்கு வேறு ஏதாவது ஊருக்கு, இல்லை நாட்டுக்கு!” என்று கூற

 

“வாட்? நாட்டுக்கா?” அதிர்ச்சியாக அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.

 

“கொஞ்ச நாளைக்கு தான் மதிண்ணா! ப்ளீஸ்! இங்கே இருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது திரும்ப திரும்ப நடந்த விடயங்களையே யோசித்து யோசித்து தலை வெடித்து விடும் போல இருக்குண்ணா ப்ளீஸ்!” 

 

“எனக்கு புரியுது இழை! ஆனா வேறு நாட்டுக்கு எல்லாம் உன்னைத் தனியாக அனுப்ப முடியாது வேறு ஊர் என்றாலும் பரவாயில்லை”

 

“நம்ம கம்பெனி இருக்கும் இடம் என்றாலும் பரவாயில்லைண்ணா! எனக்கு இப்போதைக்கு இங்கே இருந்து போகணும் அவ்வளவு தான்!”

 

“ஆனா இழை!” மதியழகன் யோசனையுடன் இழையினியைப் பார்த்து கொண்டிருக்கையில்

 

“இழையினி! மதியழகா! சுகமா இருக்கீங்களா?” செல்வம் புன்னகையுடன் இளமாறனுடன் அங்கே நடந்து வந்தார்.

 

“ஹலோ! செல்வம் அங்கிள்! எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி வரலயா?” 

 

“நான் நல்ல சுகம் மகன்! ஆன்ட்டி உள்ளுக்கு கதைச்சிட்டு இருக்கா நாங்க இரண்டு பேரும் சும்மா வெளியில் வந்தோம் எங்க போய்ட்டு வாறீங்க? அண்ணனும், தங்கச்சியும்”

 

“இழை தான் வெளியே போகணும் போல இருக்குன்னு சொன்னா அது தான் சும்மா ஒரு ரைட் போயிட்டு வந்தோம் அப்புறம் அங்கிள் வர்க் எல்லாம் எப்படி போகுது?”

 

“அதெல்லாம் நல்லா போகுது மகன் விளைச்சல் எல்லாம் இலாபம் தான்! ஆனா என்ன கணக்கு வழக்குக்கு தான் நேரம் போகுது”

 

“அப்படியா? வேறு யாராவது வேலைக்கு எடுக்கலாமே?” மதியழகனின் கேள்வியில் அத்தனை நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த இழையினி சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவளது பார்வையில் அவன் என்னவென்று அவளை கேள்வியாக நோக்க ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தவள் செல்வத்தின் புறம் திரும்பி

“வேணும்னா நான் அங்கே உங்களுக்கு துணைக்கு வரவா அங்கிள்?” என்று கேட்டாள்.

 

இழையினியின் கேள்வியில் பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்க்க மதியழகன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு 

“அதுவும் நல்ல யோசனை தான்! இழைக்கும் சின்ன மாற்றமாக இருக்கும் எங்களுக்கும் தெரியாத இடத்திற்கு அனுப்பி இருக்கோமேன்னு பயம் தேவையில்லை” தன் தந்தையை பார்த்து புன்னகையுடன் கூறவும் அவனது கூற்று அவருக்கும் சரியாகவே பட்டது.

 

தன் மகளே முன் வந்து ஆசையாக கேட்ட விடயத்தை மறுத்து பேசி அவளை மீண்டும் முடங்கி போகச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தோடு அவர் தன் சம்மதத்தை தெரிவித்திருக்க அடுத்த நாளே இழையினி‌ செல்வம் மற்றும் அவரது மனைவியோடு சேர்ந்து இலங்கையை நோக்கி புறப்பட்டாள்.

 

நான்கு, ஐந்து மாதங்களுக்குள் அவளது வாழ்வில் ஏதேதோ நடந்து முடிந்திருக்க இந்த பயணம் அவளை பழைய நிலைக்கு மெல்ல மெல்ல மாற்றியிருந்தது.

 

இலங்கைக்கு வந்த புதிதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவள் விஜியுடனான நட்பு கிடைத்த பின்னர் சிறிது சிறிதாக தன் கூட்டிலிருந்து வெளியே வரத் தொடங்கியிருந்தாள்.

 

இன்னும் ஒரு சில தினங்களில் அவள் தன் சொந்த ஊரை, சொந்த நாட்டை விட்டு வந்து இரண்டு வருடங்கள் முடிவடையப் போகிறது என்று இருந்தாலும் அவள் மனதிற்குள் இருந்த அந்த பழைய வடு இன்னும் முழுமையாக மறையவில்லை.

 

பழைய நினைவுகளின் தாக்கத்தில் தன்னை மறந்து அமர்ந்திருந்த இழையினி கடிகாரத்தை திரும்பிப் பார்க்க அதுவோ நள்ளிரவு மூன்று மணியை நெருங்கி கொண்டிருந்தது.

 

‘இவ்வளவு நேரமாகவா தூங்காமல் இருந்து இருக்கேன்? அய்யோ! காலையில் சீக்கிரமாக எழுந்து ஃபேக்டரிக்கு போகணுமே!’ தனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டவள் மனதில் இருந்த பாரம் சிறிது குறைந்தது போன்ற உணர்வோடு வெகு நாட்கள் கழித்து நிம்மதியாக உறக்கத்தை தழுவிக்கொண்டாள்……..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!