idhayam – 22

idhayam – 22

அத்தியாயம் – 22

நாட்கள் விரைந்து செல்ல அபூர்வா கொல்கத்தா வந்து சேர்ந்து அன்றுடன் ஒரு மாதம் முடிந்திருந்தது. அவளின் அலுவலக வேலைநேரம் தவிர மற்ற நேரத்தில் சாருவுடன் சேர்ந்து அந்த ஊரை சுற்றி பார்க்க தொடங்கினாள். அபூர்வாவின் குணம் சாருவிற்கு பிடித்துப்போன காரணத்தால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

அவள் வந்த நாளில் இருந்தே தன்னை வெளிபடுத்தாமல் அவனிடம் கண்ணாமூச்சி விளையாடி அவனின் பொறுமையை சோதிக்க தொடங்கியிருந்தாள். அவளின் வருகைக்கான காரணம் புரியாமல் குழம்பினான் ஆதி.

அவன் கொடுக்கும் வேலையை கவனமாக செய்தாலும் வேண்டும் என்ற தவறு செய்து அவனிடம் திட்டு வாங்குவதை தினசரி வேலையாக வைத்திருந்தாள். ஆதிக்கு நூறுகோடி ரூபாய் ப்ரொஜெக்ட் வொர்க்கை அவன் கவனமாக செய்து கொண்டிருந்தான்.

அபூர்வாவிடம் வேற டெண்டருக்கு அனுப்ப கட்டிட வடிவமைப்பை வரைந்து தருமாறு கூறியிருந்தான். அது வட இந்தியாவின் கட்டிட கலையுடன் பொருந்தும் அளவிற்கு வரைந்து வேலையை முடித்தாள்.

 அந்த வரைபடம் அவளுக்கு திருப்தியை கொடுக்க, ‘ஆதியிடம் கொஞ்சம் விளையாடி பார்க்கலாமே’ என்ற எண்ணத்துடன் வேறொரு வரைபடத்தை வரைந்து அவனிடம் எடுத்துச் சென்றாள்.

கேபினின் கதவுகளை தட்டி அனுமதி பெற்றுக்கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தவள், “இந்தாங்க சார் நீங்க கேட்ட மாதிரி வடிவமைப்பை வரைந்திருக்கேன்” அவனிடம் கொடுத்தாள்.

அவனும் பொறுமையுடன் அதை வாங்கிப் பார்த்தான். அவன் சொன்ன எந்த குறிப்போடும் ஒத்துபோகாமல் இருந்த படத்தைப்  பார்த்தும் அவனுக்கு கோபம் வந்தது.

“ஏய் நீயெல்லாம் என்ன படிச்ச? நான் சொன்னது அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் இருக்கிற மாதிரி வரைய சொன்னேன். நீ என்ன பண்ணி வெச்சிருக்க?”  எரிந்து விழுந்தவன் அவள் கொண்டுவந்த வரைபடத்தை கிழித்து அவளின் முகத்தில் விட்டெறிந்தான்.

அவனுக்கு இவ்வளவு கோபம் வருமென்று அவள் சத்தியமாக எதிர்பார்க்காத காரணத்தினால் திகைப்பும் அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“இங்கே பாரு எனக்கு வேலையில் தவறு செய்பவர்களை கண்டாலே பிடிக்காது. எனக்கு என் நேரம் ரொம்ப முக்கியம். நீ என்னிடம் விளையாடும் எண்ணத்துடன் வந்திருந்தா இப்போவே அதை மாற்றிக்கொண்டு வேலையைக் கவனிக்கும் வழியைப் பாரு. நீ ஐந்து வருடத்திற்கு முன்னாடி பார்த்த ஆதியே இப்போவும் இருப்பேன்னு கனவில் கூட நினைக்காதே” விரல்நீட்டி எச்சரித்தவனை கண்டு உள்ளுக்குள் உதறல் எடுத்தது அபூர்வாவிற்கு.

அவளின் பார்வை பயத்துடன் அவனின் மீது படிய, “உனக்கு வேலைசெய்ய விருப்பம் இல்லன்ன அதை நேரடியா சொல்லு. இப்போவே உன்னை கணக்கு முடிச்சு அனுப்பறேன். சும்மா வரைகிறேன் என்ற பெயரில் கண்டதையும் வரைந்து கொண்டுவந்து கொடுக்காதே” என்று கத்திவிட்டு எரிச்சலோடு வேறு வேலைகளை கவனித்தான்.

அவள் மெளனமாக நின்றிருக்க, “இன்னும் ஏன் நிற்கிற போய் வேலையைக் கவனி” என்றான் கோபத்துடன்.

“ஐந்து வருஷம் காலேஜில் படிச்ச மாதிரியா வரைஞ்சி வெச்சிருக்கிற” என்று முணுமுணுக்கத்தான்.

அது அவளின் காதுகளில் தெளிவாக விழுந்துவிட, “ஸாரி சார்” என்றவள் அவனின் முன்னாடி தான் வரைந்த வரைபடத்தை வைத்துவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றுவிட, ஆதி சிந்தனையோடு அவள் கொடுத்து சென்ற வரைபடத்தை எடுத்துப் பார்த்தான்.

அவன் மனதில் திட்டமிட்ட வரைபடத்தை அவள் துளி அளவு மாற்றாமல் அப்படியே வரைந்திருந்தாள். அவளின் இந்த திறமையைக் கண்டு பூரித்துப்போனான்.

அடுத்த சில நிமிடத்தில் அவனின் முன்னாடி வந்து நின்றவள், “ஸார் எனக்கு லீவ் வேணும்” என்றதும் அவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“சாருமதிக்கு பிறந்தநாள் சார். இருவரும் வெளியே போக பிளான் பண்ணியிருகோம். அதன் ஸார்” கணீர் குரலில் கூற, “சரி எடுத்துகோங்க” என்றான் அவன்.

அவள் எதுவும் பேசாமல் சென்றுவிட, ‘உன்னை பார்க்கத்தான் கொல்கத்தா வந்தேன்னு ஒரு வார்த்தை சொல்லாமல் எதுக்குடி இப்படி என்னோட கண்ணாமூச்சி விளையாடுற’ என்று வருத்தத்துடன் நினைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.

அவள் அருகே இருந்த ஒரு காபி ஷாப் உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த ஒரு டேபிளில் சென்று அமர, “ஹாய் அபூர்வா” என்ற குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்து பார்க்க சிவாதான் புன்னகையுடன் அவளின் எதிரே நின்றிருந்தான்.

“வாங்க அண்ணா. உங்களைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு? ஆமா நீங்க கொல்கத்தாவில் என்ன பண்றீங்க” என்று சிவாவை விசாரித்தாள்.

“ஒரு ஐஞ்சு வருசம் இருக்கும் அபூர்வா உன்னை பார்த்து” என்றபடி அவளின் எதிரே அமர்ந்தவன் இருவருக்கும் காபியை ஆர்டர் கொடுத்துவிட்டு, “நீ என்ன பண்ற” என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

அதுவரை மனதிலிருந்த வலியை மறந்து, “இங்கே ஆதி கன்ஸ்ட்ரக்ஷனில் ஆர்கிடெக்ட்டாக வேலை பார்க்கிறேன் அண்ணா” என்றாள் சிரித்தபடியே.

“பாருடா நம்ம அபூர்வா நம்பர் ஒன் நிறுவனத்தில் வேலை பார்க்கிற” என்று வியந்த சிவா அவளின் தூரத்து சொந்தம். ஒரு வழியில் அவளுக்கு அண்ணன் முறை.

“நீங்க அண்ணா” என்றவள் சந்தேகத்துடன் இழுக்க, “என் தங்கை ரேவதி இங்கேதான் படிக்கிற. அவளுக்கு நாளையோடு கல்லூரி முடியுது அபூர்வா அதன் அவளை கூட்டிட்டு போக வந்தேன்” என்றான் சாதாரணமாக.

இருவரும் பரஸ்பர விசாரிப்புக்கு பிறகு, “அபூர்வா நீ பிளஸ் டூ படிக்கும்போது யாரோ ஒருத்தரை காப்பாற்ற வேண்டும்னு என்னவோ சொல்லிட்டு போன இல்ல” அவளின் கடைசி சந்திப்பை நினைவுபடுத்தி அவன் கேட்டான்.

சட்டென்று அவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை படித்தவன், “என்னாச்சு” என்றதும் நடந்த அனைத்தையும் இரத்தின சுருக்கமாக அவனிடம் கூறினாள்.

“நம்பிக்கை துரோகம் எப்படி வலிக்கும்னு அன்னைக்கு தெரிஞ்சிக்கிட்டேன் அண்ணா. நான் நல்லது நினைச்சு செய்த செயல் கடைசியில் என்னையே துரோகியாக காட்டியதை இன்னைக்கு நினைச்சாலும் மனசு வலிக்குது” என்று கலங்கினாள் பெண்ணவள்.

“நீ சொல்வதுக்கு பெயர் நம்பிக்கை துரோகம் இல்ல. ஒரு சூழ்நிலையை நீ சுயநலம் இல்லாமல் ஹேண்டில் பண்ணி இருக்கிற. அன்றைய சூழலில் அது அவங்களுக்கு தவறாக தோன்றினாலும், இன்னைக்கு அவங்க இருக்கும் நிலையை வைத்து உன்னை புரிஞ்சுக்குவாங்க” என்று அவளுக்கு தைரியம் சொன்னான் சிவா.

“என்னவோ அண்ணா உங்களிடம் பேசிய பிறகு மனசுக்கு கொஞ்சம் நிறைவாக இருக்கு” என்றவள் அவனிடம் விடைபெற்று கிளம்ப, ‘ரேவதி ஒரு விதம் என்றால், இவள் ஒரு விதம். இரண்டுமே இருவேறு துருவங்கள்’ என்று மனதிற்குள் நினைத்த சிவாவின் மனதில் சந்தேகம் எழுந்தது.

அவள் பேசியவரை அனைத்தும் சரியாக இருந்தது. ஆனால் அவர் பெயர் சொல்லாமல் விஷயத்தை மட்டும் சொன்னது அவனை குழப்பத்தில் ஆழ்த்திட, ‘யாராக இருக்கும்?’ என்ற சிந்தனையோடு அங்கிருந்து கிளம்பினான்.

தன் கல்லூரி படிப்பு முடிந்ததும் ஹாஸ்டலை காலிபண்ணிட்டு ஆதியை சந்திக்க நேரில் வந்தாள் ரேவதி. அவளைப் பார்த்தும் மற்றவர்கள் மரியாதையுடன் எழுந்து அவளுக்கு விஷ் பண்ணுவதை தனது கேபினில் இருந்து பார்த்த அபூர்வாவிற்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

அவள் நேராக ஆதியின் அறைக்குள் புயல் வேகத்தில் நுழைவதைக் கண்டு அபூர்வாவின் மனம் இங்கே நிலைகொள்ளாமல் தவித்திருக்க வேண்டும். ஆனால் அவளோ யாருக்கோ வந்த வாழ்வு என்பது போல அமைதியாக வேலை செய்து கொண்டிருப்பதை தன்னறையில் இருந்த கம்ப்யூட்டர் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

“ஹாய் ஆதி” என்ற ரேவதி அவனின் எதிரே இருந்த இருக்கையில் அமர, “என்ன திடீர்ன்னு வந்திருக்கிற” கையிலிருந்த பைலின் மீது பார்வை பதித்தபடி கேட்டான்.

“நான் இன்னைக்கு சென்னை கிளம்பறேன் ஆதி” என்றாள் புன்னகையுடன்.

அப்போது அறையின் கதவுகள் தட்டும் சத்தம்கேட்டு அவன் அனுமதியளிக்க கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவளைக் கண்டவுடன், ‘பொறாமையை பாரு’ மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“சார் நீங்க கொடுத்த வேலையை முடிச்சிட்டேன். நீங்க சரிபார்த்தா போதும்” சாதாரணமாக கூறியபடி அங்கிருந்த டேபிளில் தான் வரைந்த படத்தை வைத்தாள்.

ரேவதி தன்னருகே நின்ற பெண்ணை இமைக்காமல் பார்த்துவிட்டு, “ஆதி நியூ அப்பாயின்மென்ட் போல”என்றாள்.

“ம்ம் ஆமா ரேவதி. இவங்க அபூர்வா ஆர்கிடெக்ட். ஒரு மாசத்திற்கு முன்னாடிதான் கம்பெனியில் ஜாயின் பண்ணினாங்க” என்றவன் அவள் கொடுத்த படத்தில் பார்வையை பதித்தான்.

ரேவதியை பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த அபூர்வாவிடம், “உங்க நேம் ரொம்ப அழகாக இருக்குங்க. நீங்க கூட ரொம்ப அழகாக இருக்கீங்க” என்று பாராட்டியவள், “நான் ரேவதி. ஆதியைக் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” தன்னை அவளிடம் அறிமுகபடுத்திக் கொண்டாள்.

அதுவரை அமைதியாக இருந்த ஆதி, ‘ரேவதி இவ யாருன்னு தெரியாமல் என்னை மாட்ட வைக்கிறீயே. இனி பத்திரகாளியாக அவதாரம் எடுப்பாளே’ நெற்றியை வருடியபடி அவன் மெளனமாக இருந்தான்.

அவனின் மனதை படித்தவளோ, “வாவ் மேம் கங்கிராட்ஸ்” முகம் மலர வாழ்த்திய அபூர்வா, “நீங்க சாருக்கு ஏற்ற ஜோடிதான்” என்றாள் குறும்புடன் கண்சிமிட்ட அவனுக்கோ அப்படியே பற்றுகொண்டு வந்தது.

“தேங்க்ஸ்” என்ற ரேவதி ஆதியின் பக்கம் திரும்பி, “கொஞ்சம் பர்சனலாக பேசணும் ஆதி இவங்க இருந்தா தப்பு இல்லல்ல” என்று கேட்க அவனோ வேறு வழியே இல்லாமல், “இல்ல ரேவதி சொல்லு” என்றவன் அபூர்வாவை முறைக்க அவளோ அவனின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டாள்.

“நம்ம லவ் மேட்டர் பற்றி அப்பாவிடம் போனதும் பேசலாம்னு இருக்கேன். அப்பா போன் பண்ணி உன்னை விசாரிச்சா நீ உண்மைத்தான் சொல்லணும் சரியா” என்று கூறியவளை எதுவும் பண்ண முடியாததால் காரணத்தால் சிரித்தபடியே தலையசைத்தான்.

“அவங்க சம்மதிக்கலன்னா அப்புறம் நம்ம ஓடிபோய் தான் மேரேஜ் பண்ணிக்க வேண்டி வரும். பரவல்ல பார்த்துக்கலாம்” என்ற ரேவதி சட்டென்று அபூர்வாவின் பக்கம் திரும்பினாள்.

“எங்க அபூர்வா சாட்சி கையெழுத்து போட நீங்க வருவீங்க இல்ல” என்று அவள் சாதாரணமாக கேட்டு வைக்க, ‘என்னை இன்னை சாவடிக்காமல் இங்கிருந்து போக மாட்டா போல தெரியுதே’என்று மனதிற்குள் புலம்பினான் ஆதி.

“ஒரு கையெழுத்துதானே மேடம் போட்டுட்டா போச்சு” அபூர்வா சாதாரணமாக சொல்ல, ‘காதலனை அடுத்த பொண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க எவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்றா பாரு’ என்று பல்லைக் கடித்தான் ஆதி.

“சோ நைஸ். தேங்க்ஸ் அபூர்வா..” என்றாள் ரேவதி.

அவளின் இடைவரை இருந்த கூந்தலைக் கண்டு ஆச்சரியமடைந்தவள், “வாவ் அபூர்வா உங்களுக்கு இவ்வளவு நீளமான முடியா? பார்க்கும் போது ரொம்ப ஆசையாக இருக்குங்க..” என்றவள் அடுத்து சொன்னதைக்கேட்டு அடிவயிற்றில் இருந்து சிரிப்பு கிளம்பியது அபூர்வாவிற்கு.

“எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க போகுது. அதுக்குள் நானும் உங்க அளவுக்கு முடியை வளர்க்கணும். ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க” என்று கெஞ்சிய ரேவதியை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான் ஆதி.

ஆதியின் பார்வையை கவனித்தபடி, “ஒரு மாசத்தில் வளராது மேடம். நீங்க ஜவுரி வெச்சு பின்னிகோங்க” என்றாள் அபூர்வா.

அவளின் பார்வை தன் மீது படிவத்தை உணர்ந்த ஆதி அவள் கொடுத்த வரைபடத்தின் மீது பார்வையை பதித்தபடி அமைதியாக இருக்க, “இவ்வளவு அழகாக இருக்கீங்க. உங்க பின்னாடி சுத்த தனியாக ஒரு கும்பலே இருந்திருக்கும் இல்ல. நார்மலான பொண்ணுங்க பின்னாடியே பசங்க அவ்வளவு பேர் சுத்தறாங்க. நீங்க தேவதை மாதிரி இருக்கீங்க..” என்ற ரேவதி அபூர்வாவிற்கு புகழாரம் சூட்டிட அவளோ ஜலதோஷம் பிடித்தவள் போல தும்பினாள்.

அவளின் செயலை கண்ட ஆதி, ‘பக்கி அவ உன்னை கிண்டல் பண்றா நீயோ அது புரியாமல் இருக்கிற’ என்று ரேவதியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

ரேவதி அவளை கேள்வியாக நோக்கிட“என் பின்னாடி நிறைய பேர் சுத்தினாங்க மேம். ஆனால் நான் தான் யாரோட வலையிலும் சிக்கவே இல்ல” என்று சிரித்தபடி கூறினாள்.

ஒவ்வொரு நொடி நகரும்போது ஆதிக்குதான் வயிற்றிற்குள் புளியைக் கரைத்தது. அபூர்வாவின் கோபம் அவன் அறிந்தே இருந்தான். அவளிடம் ரேவதி இல்லாத விஷயத்தை பட்டியலிட அவளின் பார்வை கூர்மை பெறுவதை உணர்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் ரேவதியை மனதிற்குள் வறுத்தேடுத்தான்.

“சூப்பர் அபூர்வா..” என்றவள், “நான் இதோ இவன் பின்னாடி தான் ஐந்து வருடமாக சுத்துறேன். முதல் வருடம் இவன் எங்க நிறுவனத்தில் தான் வேலை செய்தான். அப்புறம் தான் இங்கே கொல்கத்தா வந்தான். நான்தான் காதல் என்று இவன் பின்னாடி சுத்தறேங்க. இவன் சரியான கல்லுளிமங்கனாகவே இருக்கான். இன்னைக்கு வரைக்கும் உன்னை நான் காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொன்னதில்ல. அனால் எனக்காக எல்லாமே செய்வான்” என்று சொல்லும்போது அவளின் முகத்தில் தோன்றி மறைந்த கர்வத்தை கண்டு புன்னகைத்தாள் அபூர்வா.

ஆதி ரேவதியை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அபூர்வா தன்னை தேடி வந்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும்மென்று அவனின் மனம் பரிதவிக்க, “சரி ஆதி நான் அப்பாவிடம் பேசிட்டு ஒரு வாரத்தில் மீண்டும் கொல்கத்தா வரேன். நான் வந்ததும் நீ உன்னோட சம்மதத்தை சொல்லணும்” என்று மிரட்ட அவனோ புன்னகையுடன் சரியென்று தலையசைத்தான்.

“அதெல்லாம் சார் ஓகே சொல்லிருவாரு மேம். நீங்க கவலையே படாமல் ஊருக்கு போயிட்டு வாங்க” என்று துள்ளலோடு கூறிய அபூர்வாவை ஆதி முறைக்க, “இப்படிபட்ட கணவன் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்க வேண்டும் மேம்” என்று கூசாமல் ரேவதிக்கு ஐஸ் வைத்தாள்.

பிறகு  “சார் நான் டிசைன் பண்ணது ஓகேதானே..” என்று கேட்க அவனும் சரியென்று தலையசைத்தான்.

“ஓகே மேம். உங்க மேரேஜ்க்கு கண்டிப்பா சொல்லி அனுப்புங்க முதல் ஆளாக வருவேன்” என்று சொல்லி ஆதியின் எண்ணத்தில் அரைலிட்டர் பெட்ரோலை ஊத்திவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள் அபூர்வா.

 அவள் வெளியே சென்ற மறுநொடி, “சரி ரேவதி நீ கிளம்பு.    அப்பாவையும், அம்மாவையும் கேட்டேன்னு சொல்லு” என்று அவன் அவளை அங்கிருந்து அனுப்ப நினைத்தான்.

நான் கிளம்பறேன் என்று சொன்னதும் ஆதி பிரியமுடியாமல் தவிப்பான் அதனை மையமாக வைத்து அவனிடம் காரியத்தை சாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தவளின் திட்டத்தில் தீயை வைத்தான். அவன் முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாதைதை கண்டு அவளுக்கு தான் எரிச்சல் மண்டியது.

ரேவதி வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்த கிளம்பிவிட ஆதி நிம்மதியாக தான் வேலையைத் தொடர்ந்தான். அபூர்வாவிடம் உண்மையை வாங்க முடியாமல், ‘சரியான ராட்சசி. கொல்கத்தா வரை எதுக்கு வந்தால் என்று ஒரு வார்த்தை சொல்கிறாளா பாரு. என்னை இந்த அரைலூசு கிட்ட மாட்டிவிட எவ்வளவு வேகமாக ஓகே சொல்ல சொல்றா. மகளே என்னிடம் மாட்டும் போது உனக்கு இருக்குடி’ என்று நினைத்தபடி எரிச்சலோடு வேலையை கவனித்தான்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!