உயிரின் ஒலி(ளி)யே 12

உயிரின் ஒலி(ளி)யே 12

குற்றவுணர்வு!

அது சுழன்றடிக்கும் நதி சுழல்.

அகப்பட்டது ஒரு ஒரேயொரு முறை என்றாலும், பல முறை அதில் சுழன்றே தீர வேண்டும்.

அப்படி தான் அதிதியும் அந்த குற்றவுணர்வு என்னும் சுழலில் ஒரு வாரமாக சுழன்று கொண்டு இருந்தாள்.

அன்று ராஜ்ஜின் வாகனத்தை மோதாமல் இருந்திருந்தால்!

அவனின் அவசரமும் பரிதவிப்பும் தனக்கு புரிந்திருந்தால்…

தான் மட்டும் அன்று பதிலுக்கு பதில் விதாண்டாவாதம் செய்யாமல் இருந்திருந்தால்…

ஏகப்பட்ட இருந்திருந்தால் சேர்ந்து அவளை இல்லாமல் ஆக்கி கொண்டிருந்தது.

சோக இருள் கவிந்த அதிதியின் முகத்தையே கவலையாக பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக் ராஜ்.

அவனுக்கு இதற்கு முன்பு அவள் மீது ஏக்கர் கணக்கில் கோபம் இருந்தது தான், இருக்கிறது தான்.

அன்றவள் தன்னை அடித்த கோபம் தான் சென்னையில் அதிதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் வம்பிழுக்க வைத்தது. இப்போதும் வம்பு இழுக்க வைக்கிறது.

தன்னுடைய வாகனம் ஓட்டும் முறையைப் பற்றி அவள் ஒவ்வொரு முறை பேசும் போதும் ஏக்கர் கணக்கில் கடுப்பு கூடுகிறது தான்.

ஆனால் அவள் வருத்தம் சிந்திய முகத்தை பார்க்க முடியாதபடி ஏதோ ஒன்று தடுக்கின்றதே…

எது அது?

அவன் பார்வை வெளி வரண்டாவில் இருந்த நாற்காலியின் மீது விழுந்தது.

சோகம் கப்பிய முகத்துடன் வானையே வெறித்து கொண்டிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவனுக்கு அப்போதும் விடை தெரியவில்லை.

ஆனாலும் அவள் துயர் பூசிய முகத்தைப் பார்க்க சகியாமல் வேகமாக அவளின் முன்பு வந்து நின்றான்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் கண்களை சுருக்க, “சாப்பிட வெளியே போலாமா?” என்றான் கேள்வியாக.

“ஏன் வெளியே போணும்? நான் லன்ஞ் சமைக்கிறேன்” என்றபடி அவள் எழுந்து கொள்ள அவன் இடைமறித்தான்.

“அன்னைக்கு நம்ம ப்ளான்படி நீ மூனு நான் மூனு நாள். மீதியிருக்கிற ஒரு நாளிலே வெளியே போய் சாப்பிடலாம்னு சொன்னேன்லே. சோ ரெடியாகு வெளியே போய் சாப்பிடுவோம்” என்றான் வேகமாக.

இதே வீட்டில் எப்போதும் அடைந்து கிடப்பதற்கு புதியதாக வெளியில் சென்று வந்தால் அவள் மனம் மாறும் என்று யோசித்தவன் ‘வெளியே செல்லலாமா’ என கேட்க அவள் முகத்திலும் யோசனை கோடுகள் படர்ந்தது.

காட்சிகள் மாறினால் ஒரு வேளை கசப்புகளும் மாறும் அல்லவா!

எண்ணம் எழுந்த அடுத்த கணமே அவன் கோரிக்கைக்கு தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

அவனிடம்  எங்கு செல்கிறோம் என்று கேட்டு தெரிந்து கொண்டு உள்ளே சென்றவள் பத்து நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தாள்.

கார் சாவியை சுழற்றியபடி  கிளம்பி நின்றவனை கண்டு புருவ நெறிசலோடு அப்படியே நின்றாள்.

“இந்த காரிலே வேண்டாம். பஸ்லே போகலாம்” என்றவள் சொல்வும் அவன் கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.

“கார் வெச்சு சர்க்கஸ் காட்டுறவங்க கூடேலாம் என்னாலே வர முடியாது” அவள் கையை விரித்து சொல்ல ராஜ் தலையிலடித்து கொண்டபடி வீட்டைப் பூட்டினான்.

‘அவளிடம் என்ன தான் நல்ல முறையாக பழகுவதற்கு முன்னெடுப்பு எடுத்தாலும் இப்படி பேசி பேசியே மனிதனின் பிபியை ஏற்றுகிறாளே’ அவனுக்குள் எரிச்சல் மண்டியது.

அதுவரை இருந்த இலகுத்தன்மை அவன் முகத்தில் மாறி இருந்தது.

“அகெய்ன் ஐ டீபிட். என்னோட டிரைவிங் ஸ்டைல் பத்தி பேசாதே” என்றான் கோபமாக.

“சரி பேசலை. ஆனால் கார் ஸ்பீட் ஐம்பது தாண்டாதுனு சத்தியம் பண்ணு. அப்போ தான் உங்க காருக்குள்ளே ஏறுவேன்” என்று கை நீட்டி சத்தியம் கேட்டவளைக் கண்டு அவனுக்கு எங்காவது முட்டி கொள்ள வேண்டும் போல இருந்தது.

ஆனால் அந்த இடத்தில் சுவர் தான் இல்லை!

“அதிதி அந்த ஸ்பீடுக்கு ஓட்டுனா லன்ஞ் சாப்பிட முடியாது டின்னர் தான் சாப்பிடணும்” என்று வேகமாக உரைத்தவன் காரில் ஏறிக் கொண்டு அவளையும் ஏறும் படி சமிக்ஞை செய்தான்.

அவளோ இருகைகளையும் கட்டிக் கொண்டு அவனையே ஆழ்ந்து பார்த்து நின்றாள்.

ஆக சத்தியம் செய்யாமல் ஓரடி நகர மாட்டாள்!

அவனுக்கு துலக்கமாய் அவள் முடிவு தெரிந்துவிட அவனிடம் ஏகமாய் பெருமூச்சு வெளிப்பட்டது.

“சரி ஐம்பது தாண்டி ஸீபீட் போகாது போதுமா” அவன் ஒருவழியாய் சம்மதம் அளிக்கவும் அதிதி உள்ளே ஏறி அமர்ந்தாள்.

அவன் வண்டியை எடுக்க ஐம்பதை தாண்டி முள் கொஞ்சமாய் நகர்ந்தால் கூட அவனை முறைத்துக் கொண்டே வர அவனுக்கோ நேராக காரை இமயமலையிற்கே விட்டு துறவியாய் ஆகிவிடலாம் போல இருந்தது.

அத்தனை பாடுபடுத்தி இருந்தாள்!

 

அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய கார், மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் உணவருந்த வேண்டிய ஹோட்டலுக்கு வந்து நின்றது.

கைகடிகாரத்தைத் திருப்பி அவளை முறைத்தபடியே இறங்க அவள் உதடுகளுக்குள் மௌனமாய் முறுவலித்தபடியே வெளியே வந்தாள்.

அசுர வேகத்தில் பறக்கும் அவன் காரை இன்று ஆமை வேகத்தில் ஊர்ந்து வர வைத்த வெற்றி முறுவல் அது!

‘என்ன சிரிப்பு!’ சலிப்பாக வாயசைத்தபடியே திரும்பியவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

எதிரில் புன்முறுவலுடன் ஆதினி!

‘இவள் எப்படி இங்கே!’ என்ற கேள்வியுடன் திரும்பி பார்க்க அதிதியிடம் லேசான புன்முறுவல்.

“நான் தான் வர சொல்லி மெசேஜ் பண்ணி இருந்தேன்” என்று அதிதி சொல்லவும் ராஜ்ஜிற்கு அகமகிழ்ந்து போனது.

நன்றியோடு அவளைப் பார்த்தவன் இருவரையும் அழைத்து கொண்டு உள்ளே வந்தான்.

இடத்தை தேட கண்களை சுழல விட்ட போது அங்கே ஒற்றை ஆளாய் ஒரு டேபிளில் அமர்ந்து உணவை வெட்டிக் கொண்டிருந்த விமலைக் கண்டதும் ராஜ்ஜின் முகம் சட்டென மாறியது.

‘இவனும் இங்கே தானா இன்று கொட்டி கொள்ள வர வேண்டும்!’ மனதுக்குள் அவன் சலித்துக் கொண்ட நேரம் அதிதியின் முகத்தில் விரிவு.

“ஓய் விமல், என்ன நீ மட்டும் தனியா சாப்பிட்டுட்டு இருக்க” எனக் கேட்டபடி அவன் அமர்ந்திருந்த டேபிளில் சென்று அமர ராஜ் நகராமல் விரைப்பாக நின்று கொண்டிருந்தான்.

“ராஜ் நீங்க நின்னுட்டு இருக்கிற இடத்துலேலாம் யாரும் சேர் போட மாட்டாங்க. ஒழுங்கா இங்கே வாங்க” அதிதி சொல்ல ராஜ்ஜிற்கோ தலையிலடித்து கொள்ள வேண்டும் போல இருந்தது. வேறு வழியில்லாமல் விமலின் எதிரே அமர்ந்தான்.

மீண்டும் விமலும் ராஜ்ஜூம் அக்னி நட்சத்திரங்களின் நட்சத்திரங்களாய் பார்வையிலேயே அனலை கக்கினர்.

ஆதினி மினுங்கி கொண்டிருந்த அந்த உயர்தர உணவகத்தை கலக்கமாய் பார்த்தபடி, சங்கடப்பட்டு நிற்க, அதைக் கண்ட அதிதி ஆதரவாய் அவளுக்கு கை நீட்டினாள்.

“இங்கே வந்து உட்காரு ஆதிமா” என்று அவளுக்கு இடம் கொடுத்தவாறே  தள்ளி அமர்ந்து “என்ன சாப்பிடுறே?” என்று கேட்கவும் ஆதினி திருதிருத்தாள்.

அவள் எப்போதோ வெளி உலக வாழ்க்கையின் சங்கிலியிலிருந்து அறுபட்டு இருந்தாள்.

அவள் வாழ்க்கையின் நதி… அலுவலகம், வீடு என்ற இரு திசைகளிலும் மட்டுமே இதுவரை ஓடியிருக்க புதியதாய் கிளை பிரிந்த இந்த திருப்பத்தில் எப்படி பயணிக்க வேண்டும் என தெரியவில்லை.

அலுவலக கேன்டீனில் பத்து உணவுகளுக்கு மேல் பார்த்திராதவள் அந்த மெனு கார்டில் இருந்த நூற்றிற்கும் மேற்பட்ட உணவை கண்டு மலங்க மலங்க விழித்தாள்.

அவள் தென்னிந்திய உணவிற்கு மட்டுமே பழக்கப்பட்டவள், புதியதாக ஒரு உணவை சாப்பிட போய் அது பிடிக்காமல் வீணாக்கிவிட்டால்!

யோசனையையும் தயக்கத்தையும் சுமந்து இருந்தது ஆதினியின் முகம்.

அவள் உள்ள ஓட்டத்தை உணர்ந்த அதிதி, “எனக்கு சைனீஸே புடிக்காது ஆதிமா, நம்ம சவுத் இண்டியன் ட்ரை பண்ணலாமா?” என கேட்டபடி அதற்கான  பக்கத்தை விரித்து வைத்தாள்.

ஆனியன் ஊத்தாப்பம், பரோட்டா, நெய் தோசை என இவர்கள் இங்கே உணவை ஆர்டர் செய்ய

விமலோ ‘சாட்டே சாம்ப்ளர்’, லேம்ப் கட்லெட்ஸ்’ என அங்கு வாயில் நுழையாத பல பெயருள்ள உணவுகளை வாயில் நுழைத்து கொண்டிருந்தான்.

ஆதினியின் நாசியை அந்த லேம்ப் கட்லெட் இழுத்து கொண்டிருந்தது.

அதன் வாசனையும், தோற்றமும் அவளுக்குள் ஆசையை கிளப்ப ஏக்கமாய் தன்னை மீறி பார்த்து கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த விமல் மெல்லிய முறுவலுடன்  அவள் பக்கமாய் ஒரு துண்டை நகர்த்த முயன்ற போது அவனை தடுத்தது ஒரு கரம்.

வேகமாய் நிமிர்ந்துப் பார்க்க, கார்த்திக் ராஜ்!

“எதுக்கு என்னை தடுக்கிறீங்க?” என்றான் விமல் கோபமாக.

“ஆதினிக்கு என்ன தேவைன்றதை கவனிக்க நாங்க இருக்கிறோம். நடுவுலே நீ வராம இருந்தா மட்டும் போதும்” ராஜ் தட்டச்சு செய்திருந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் விமலுக்கு கோபம் கண்ணை மறைத்தது.

அவனது ஈகோ கீறப்பட்டுவிட வேகமாய் ஆதினியின் தட்டில் அதை வைத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இறங்கினான்.

ஒற்றை கையால் அவனை தடுத்த ராஜ் மறுகையில் தட்டச்சு செய்து ஆதினியின் முன்பு நீட்டினான்.

“உனக்கு அந்த டிஷ் வேணுமா? நான் ஆர்டர் பண்ணட்டுமா?” என இவன் கேட்க,

“ஆதினி என் கூட வேலை செய்யுற பொண்ணு தானே. நான் ஆர்டர் பண்ண டிஷை கொடுத்தா என்ன தப்பு?” என்று மறுமுனையில் விமல் கத்தி கொண்டிருந்தான்.

அந்த இரு ஆடவர்கள் செய்த அலப்பறையில் தலையில் கை வைத்துவிட்டாள் ஆதினி.

இரண்டு பேர் விடாமல் மாறி மாறி அடித்து கொள்ள ஒரு கட்டத்தில் பொறுத்துப் பார்த்த ஆதினி பொறுமையிழந்து கத்திவிட்டாள்.

“ஐயோ போதும்! நிறுத்துங்களேன்…  சாப்பிடணுமா வேண்டாமானு நான் தான் முடிவு பண்ணனும். என் முடிவை கேட்காமல் நீங்களா  இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்?” ஆதினி கேட்கவும் ராஜ்ஜின் பார்வை ஆச்சர்யமாய் அவள் மீது விழுந்தது.

இத்தனை நாட்களாய் தலை நிமிர்ந்து பேசாதவள் முதல் முறையாய் தனக்காய், தன் சுயத்திற்காய் பேசுகிறாள்.

அவள் தன்னை எதிர்த்து பேசியதற்கு கோபம் வராமல் பதிலுக்கு புன்னகையே வந்தது.

“ஆதினிமா, உங்களுக்கு என்ன வேணும் நீங்களே சொல்லுங்க?” அவன் பொறுமையாய்  கேட்க அவள் சங்கடமாய் நிமிர்ந்தாள்.

அந்த உணவு தான்  வேண்டும் என்று சொன்னால் ஆர்டர் செய்கிறேன் என்று ராஜ் இறங்கிவிடுவான். விமலை அந்த செயல் அவமதித்தது போல அது ஆகிவிடுமே.

ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.

“எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் நீங்க ஆர்டர் பண்ணுங்க. ஒரு கோ- ஒர்க்கர்க்கு தர ட்ரீட்டா விமல் எனக்கு ஒரு ஜுஸ் ஆர்டர் பண்ணட்டும்” என்று ஆதினி சொல்ல அதுவரை மௌனம் காத்திருந்த அதிதியின் இதழ்களில் கற்றை புன்னகை.

அவளே தனக்காக பேச வேண்டும், அவளே  சூழலை சமாளிக்க கற்று கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்ளும் போது அதிதி இடையிடாமல் இருந்திருந்தாள்.

அப்படி அவள் செய்தது ஆதினியின் தயக்க அணையில் முதல் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.

இனி இந்த விரிசல் பெருசாகி மொத்த தயக்கமும் நீர்மமமாய் உருண்டோடி அவள் வாழ்க்கை பளிங்காய் மின்ன வேண்டும் என்ற வேண்டுதலை இவள் கடவுளின் காலடியில் சமர்பித்த பொழுது ஆதினியும் விமலும் ஒரு சேர சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.

அவர்கள் இருவரும் ஒன்றாய் செல்வதை கண்ட ராஜ் ஆதினிக்கு துணையாக செல்வதற்காக பாதி சாப்பாட்டிலேயே எழுந்து கொள்ள முனைய அதிதி வேகமாய் அவன் கையைப் பிடித்தாள்.

“முழுசா சாப்பிட்டு எழுந்துடுங்க” அவள் அவனை வலுக்கட்டாயமாக இழுத்து அமர வைக்க அவன் கெஞ்சலாய் அவளைப் பார்த்தான்.

“சாப்பிட்டு போங்கனு சொன்னேன். விமல் ஒன்னும் இரத்த காட்டேறி இல்லை, அவளை பயமுறுத்த. அன்ட் மோர் ஓவர் ஆதினி தன்னை தானே பார்த்துப்பா” அவள் பேசியபடியே அவனை தடுத்து நிறுத்த பரிதவிப்போடு அந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.

தன் மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவள் வரவுக்காய் காத்து இருக்கும் தாயின் மாலை நேர தவிப்பை சுமந்திருந்தது அவன் முகம்.

அதைக் கண்டு அதிதியின் மனம் தன்னையறியாமல் அவனை உள்ளூர ரசித்தது.

ஆனாலும் அதை வெளியே காட்டாமல் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு “ஃபுட் வேஸ்ட் பண்ணாம, முழுசா சாப்பிட்டு எழுந்துக்கணும்” என்று கட்டளையிட்டு கொண்டிருக்கும் போது இருவரின் மீதும் ஒரு நிழல் விழுந்தது.

ஏதேட்சையாக திரும்பி பார்த்த ராஜ்ஜின் விழிகளில் ரசாயன மாற்றம்.

முகமெங்கும் வேட்டையில் ரத்த நிழல்.

அவன் நம்பிக்கை மலரின் அடியாழம் வரை சென்று கருக்கிய அதே இடி திரும்பவும் அவன் வானில் வந்து இருந்தது.

துரோகத்தின் குருதி கலந்த அதே நதி மீண்டும் இவன் திசையை நோக்கி வந்து இருக்க சடாரென எழுந்து நின்றான்.

நொடிப் பொழுதில் நிகழ்ந்த அவன் முரண்பாடான மாற்றம் கண்டு அதிதி அதிர்ச்சியை நெற்றியில் காட்டிய போது எதிரிலிருந்த பெண்ணில் குரல் இவள் காதை அடைத்தது.

“எப்படி இருக்க என் அருமை காதலா. மை டியர் ராஜ்!” ஆணவமும் கர்வமும் ஒரு சேர சேர்ந்து ஒலித்த அந்த குரலில் கார்த்திக்ராஜ்ஜின் முகத்தில் உணர்வுகள் கருகிப் போய் இருந்தது.

“கயல்!” என்று விரக்தியாய் வாயசைத்தவன் இதழ் கடையில் தான் எத்தனை பெரிய கசந்த வளைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!