உயிரோவியம் நீயடி பெண்ணே – 1

உயிரோவியம் நீயடி பெண்ணே – 1
அது ஒரு இளமாலைப் பொழுது. பள்ளிகள், கல்லூரிகள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களின் சத்தம், அதுவரை அமைதியாக இருந்த அந்தச் சாலையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.. காலை ஒன்பது மணியில் இருந்து அமைதியாக இருந்த அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு, ஆட்டோவின் ஹார்ன் சத்தமும், மாணவர்களின் பேச்சுக் குரல்களிலும் மாலை நான்கு மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே உணர்த்தியது..
அந்தத் தெருவையே அடுத்து கதிகலங்க வைப்பது நமது கதையின் நாயகி சுஜிதா.. தனது மிதிவண்டியை வேகமாக மிதித்துக் கொண்டு, தான் வருவதை தனது அன்னைக்கு உணர்த்த, சைக்கிளின் பெல்லை அடித்துக் கொண்டே வருவது அவளது வழக்கம். அந்த சத்தத்தைக் கேட்ட அவளது அன்னை வாயிலுக்கு விரைந்தோடி, கேட்டை திறந்து வைத்துக் கொண்டு அவளுக்காக காத்திருந்தார்..
அதே வேகத்துடன் வீட்டின் உள்ளே தடதடவென்று அவள் நுழைய, “மெல்ல சைக்கிளை ஓட்டிக்கிட்டு வான்னு உனக்கு எவ்வளவு தடவை சொல்றது சுஜி.. அடிகிடி பட்டா எக்ஸாம் எழுதறதே கஷ்டமா போயிடும். கொஞ்சம் மெதுவா வரலாம்ல..” அவளது அன்னை அர்ச்சனா சொல்லவும்,
“நான் லேட்டா வந்தா மாத்ஸ் ட்யூஷன்க்கு யாரு போவா? நீயா? லேட்டா போனா அக்கா திட்டுவாங்க..” என்றவள்,
‘அதை விட அந்த சூர்யா என்னை ஏன் லேட்டுன்னு குடைவாங்க..’ என்று முணுமுணுத்துக் கொண்டு, தனது அறைக்குள் சென்றவள்,
“எனக்கு நாளைக்கு மாத்ஸ் மோக் டெஸ்ட் வேற இருக்கு.. அதுக்கு படிக்கணும்.. டைம் ஆச்சு.. டைம் ஆச்சு.. எனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துக் கொடு.. பசிக்குது..” வம்படித்துக் கொண்டே, குளியறைக்குள் புக, அவளது குரல் தேய்ந்து மறைந்தது.
அவளது குரலைக் கேட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் வசுந்தரா, ‘பொம்பளைப் பிள்ளையா லட்சணமா அடக்கமா இருக்காளா பாரு.. ஊரைக் கூட்டி சத்தம் போட்டுக்கிட்டு வரா.. ஒருநாள் வீட்டுல இருக்கறதுக்கே கடுப்பா இருக்கு..’ என்று முணுமுணுத்து தலையில் அடித்துக் கொண்டு, தனது மக்களின் வரவிற்காக காத்திருந்தார்..
சூடாக பாதாம் பாலுடன், இரண்டு முறுக்கை எடுத்து வைத்து அவளுக்காக அர்ச்சனா காத்திருக்க, உடையை மாற்றிக் கொண்டு தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னால் அவன் வந்து நின்றான்..
‘ஹையோ இவருக்கு இங்க என்ன வேலை?’ முணுமுணுப்புடன், தலையை உலுக்கிக் கொண்டு, தனது இரட்டைச் ஜடைப் பின்னலைத் தளர்த்திவிட்டு, தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு அர்ச்சனாவின் அருகே வந்து அமர, ம்யூசிக் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா அவளைத் திரும்பிப் பார்த்தார்..
அவளது முகம் சோர்ந்து இருக்கவும், “இன்னைக்காவது சீக்கிரம் படிச்சிட்டு படுத்து தூங்கு சுஜி.. முகம் சோர்ந்து கண்ணு எல்லாம் உள்ள போய் கிடக்கு.. எக்ஸாம்க்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே.. இப்போ இருந்தே இவ்வளவு படிச்சா, எக்ஸாம் ஆரம்பிக்கும் போது உனக்கு ரொம்ப டயர்ட் ஆகிடும்.. கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகறதுக்கும் டைம் வச்சிக்கோ..” அவளது தலையை வருடி, கன்னத்தில் முத்தமிட்டுச் சொல்ல,
“இப்போவே படிச்சிட்டா எக்ஸாம்க்கு ஈசி இல்லம்மா.. அது தான் படிக்கறேன்.. நான் நைட் சாப்பிடும் போது எல்லாம் கொஞ்ச நேரம் டிவி பார்க்கறேனே.. அதுவே போதும்.” அவளுக்குப் பிடித்த பாதாம் பாலை குடித்துக் கொண்டே, அவர் மீது சாய்ந்து அமர்ந்து, ஓடிக் கொண்டிருந்த டிவியைப் பார்க்க, அதில் வந்த பாடலைக் கேட்டவளுக்கு புரை ஏறியது..
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பூவின் மகளே நீ யாரோ
அவளுக்குப் புரையேறவும், அருகில் இருந்த அர்ச்சனா அவளது தலையைத் தட்டி, “மெதுவா தான் குடியேன்டி.. நான் என்ன பிடிங்கிக்கவா போறேன்?” என்று அதட்ட, அவரிடம் இருந்து தள்ளி அமர்ந்தவள், வேகமாக குடித்து முடித்து, ஸ்கூட்டியின் சத்தத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்..
ஸ்கூட்டிக்கு பதிலாக, பைக்கின் ஹார்ன் சத்தம் கேட்கவும், ‘ஹையோ இவங்க எதுக்கு இப்போவே வராங்க.. என்னைக்கு இந்த காலேஜ் படிக்கிற பசங்க எல்லாம் நேரத்துக்கு வந்திருக்காங்க. சுத்திட்டு தானே வீட்டுக்கு வருவாங்க.. அப்படி வர வேண்டியது தானே.. ஊருக்கு முன்னால யாரு வரச் சொன்னது? வந்து என் உயிரையே உரியற மாதிரி பார்க்க வேண்டியது..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவளின் வீட்டின் டெலிபோன் மணி ஒலிக்கவும், அதை எடுத்தவளின் உள்ளம் படபடக்கத் துவங்கியது..
“ஹலோ..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“சுஜி.. நான் வர லேட் ஆகும்.. சாரி சுஜி.. இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். உனக்கு மோக் டெஸ்ட்க்கு ரிவிஷன்க்கு கொஸ்டின் பேப்பர ரெடி பண்ணிட்டேன்.. அது வீட்ல இருக்கு.. நீ போய் எடுத்து எழுதிட்டு இரு.. நான் வந்து உனக்கு கரக்க்ஷன் செய்யறேன்..” என்றது, அவளது மாத்ஸ் ட்யூஷன் அக்காவான ஜைஷ்ணவி.
“அக்கா எனக்கு அதுல ஒரு சாப்ட்டர்ல ரெண்டு சம்ல கொஞ்சம் டவுட்டா இருக்குக்கா.. நான் உங்ககிட்ட ஒரு தடவ கத்துக்கிட்ட அப்பறம் டெஸ்ட் எழுதலாம்ன்னு இருந்தேன்.. நான் வேணா டெஸ்ட் பேப்பர எடுத்துட்டு வந்து எங்க வீட்லயே உட்கார்ந்து எழுதிட்டு இருக்கவா? நீங்க வந்த உடனே நான் அந்த சம் கேட்டுக்கிட்டு போடவா?” தயக்கமாக அவள் கேட்க, ஜைஷ்ணவி மறுத்தாள்..
“இல்ல.. இல்ல.. நீ அங்க வீட்ல உட்கார்ந்து எழுதிக்கிட்டே இரு.. நான் ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவேன்.. உங்க வீட்ல உட்கார்ந்து நீ எழுதிட்டு இருக்கற அப்போ நான் வந்து, நீ எங்க வீட்டுக்கு வரது உனக்கு டிஸ்டர்ப் ஆகும்.. அதை விட நீ டைம் வேஸ்ட் பண்ணாம சூர்யாக்கிட்ட அந்த சம்மை கேட்டுட்டு எழுத ஸ்டார்ட் பண்ணிடு.. அவன் சொல்லித் தருவான். நீ நேத்து அந்த சம் டவுட் இருக்குன்னு சொன்னது எனக்கும் நியாபகம் இருக்கு.. அவன்கிட்ட நான் சொல்லிட்டேன்.. நீ போ.. அவன் ரெடியா இருப்பான்.. அனேகமா வீட்டுக்கு வந்திருப்பான்..” ஜைஷ்ணவி வற்புறுத்த, வேறுவழியின்றி, மறுக்க முடியாமல் சுஜிதா ஒப்புக் கொண்டாள்.
‘பைக் இன்னைக்கு சீக்கிரம் வந்த ரகசியம் இது தானா?’ தனக்குள் பேசிக் கொண்டே, தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டிருக்க, அவளது இதழ்களில் அவளையும் அறியாமல் ஒரு மெல்லிய புன்னகை.. மீண்டும் டெலிபோன் ஒலிக்க, சுஜிதா எட்டிப் பார்க்க,
போனை எடுத்த அர்ச்சனா, “சுஜி உனக்கு தான் போன்..” என்று அழைக்கவும்,
“யாரும்மா?” என்று கேட்டுக் கொண்டே போனை வாங்கி, காதிற்கு கொடுத்து, ‘ஹலோ’ என்பதற்குள்,
“ஹலோ செல்லம்.. உன் சூரியா தான் பேசறேன்.. சீக்கிரம் வா.. நான் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நாம சேர்ந்தே படிக்கலாம்..” கேலியாக சூர்யா என்று அழைக்கப்படும் ஜெயசூர்யா சுஜிதாவை அழைக்க,
“உங்களைக் கொல்லப் போறேன்.. இப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு உங்களுக்கு எவ்வளவு தடவ சொல்றது?” என்று பல்லைக் கடிக்க,
“ஏற்கனவே என்னைக் கொன்னுட்டு தான் இருக்கடி என் செல்லக் குட்டி.. இப்போ நேர்ல வந்தும் கொல்லேன். நான் உன்னை ரசிச்சுக்கிட்டே செத்துப் போறேன்..” சூர்யாவின் பதிலில், போனை நங்கென்று வைத்தவளுக்கு, தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது..
‘எப்படி எல்லாம் பேசறாரு.. நேர்ல போய் ரெண்டு வைக்கிறேன்..’ மனதினில் கருவிக் கொண்டவள்,
“நான் ட்யூஷன்க்கு போயிட்டு வரேன்மா..” அர்ச்சனாவிடம் சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டிற்குச் சென்றாள்..
வசுந்தரா கோவிலுக்குச் சென்றிருக்க, சுஜிதா கேட்டைத் திறக்கும்போதே கதவைத் திறந்து வைத்துவிட்டு, அதன் பின்னால் சூர்யா ஒளிந்துக் கொண்டான்..
கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தவளது கையைப் பிடித்து இழுத்தவன், “நீ கொல்லுவ கொல்லுவன்னு எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? சீக்கிரம் வா.. உன் பதிலுக்காக வெயிட் பண்ணி தினமும் சாவறதுக்கு பதிலா உன் கையாள செத்துப் போறதே மேல்..” அவன் சொல்லவும், தனது கையில் இருந்த நோட்டை வைத்து, அவனது முதுகில் நான்கு அடி வைத்தவள், அழுதுக் கொண்டே உள்ளே சென்று சோபாவில் அமர, தனது தலையிலேயே அடித்துக் கொண்ட சூர்யா, அவளது பின்னோடு சென்றான்..
“என் செல்ல ஆப்பிள் இல்ல.. ப்ளீஸ் அழாதே.. சாரி.. நான் இனிமே இப்படி பேச மாட்டேன்.. கண்ணைத் துடைச்சிக்கோ சுஜி.. நானும் உன்னோட பதிலுக்காக எவ்வளவு நாளைக்கு வெயிட் பண்ணறது? எனக்கும் கஷ்டமா இருக்கு இல்ல.. அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?” ஜெயசூர்யா அவளைச் சமாதானம் செய்ய,
“அதுக்குன்னு செத்துப் போவேன்னு எல்லாம் சொல்லுவீங்களா? அது எப்படி சூர்யா ஒரு பொண்ணுக்காக உங்க மேல பாசம் வச்சிருக்கறவங்களை எல்லாம் ஏமாத்திட்டு செத்துப் போயிடுவீங்களா? முட்டாள் தனமா இல்ல?” என்று சத்தமிட்டவள், கதறி அழத் துவங்கினாள்.
“நீ என்னோட உயிருன்னு எப்போ சுஜி புரிஞ்சிக்கப் போற? நீ இல்லாம நான் வாழறதுக்கு அதுவே மேல்ன்னு எனக்கு சில சமயம் தோணுது.. அப்போ இப்படி பேசிடறேன்.. சாரிடி சுஜி.. ப்ளீஸ்.. அழாதே..” என்றபடி அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன், அவளது கண்களைத் துடைத்து விட்டான்..
அப்பொழுதும் அவள் நிமிராமல் அமர்ந்திருக்கவும், “சுஜூ.. ப்ளீஸ்.. அழாத.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இனிமே இப்படி பேச மாட்டேன்.. நீ எனக்கு பதில் சொல்ற வரை இனிமே இதைப் பத்தி பேசவே மாட்டேன்.. இட் இஸ் எ ப்ராமிஸ்..” அவளது கையில் அடித்து சத்தியம் செய்தவன், தனது கைக் குட்டையை ஈரப்படுத்தி எடுத்து வந்து, அவளது முகத்தைத் துடைத்தான். அவள் இன்னும் தேம்பிக் கொண்டிருக்கவும், ஜைஷ்ணவி வைத்திருந்த கேள்வித்தாளை எடுத்து அவள் முன்பு வைத்தான்..
கண்ணீருடன் அவள் நிமிர்ந்துப் பார்க்க, “இந்த தண்ணியை குடிச்சிட்டு அந்த சாப்டர்ல என்ன டவுட்ன்னு கேளு.. நான் சொல்லித் தரேன்..” என்றபடி, தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முன்பு வைத்தவன், கையைக் கட்டிக் கொண்டு அமர, தண்ணீரை குடித்து முடித்து,
“சூர்யா ப்ளீஸ்.. இனிமே இப்படி பேசாதீங்க..” பாவமாக அவள் சொல்ல, அவளைக் கைக் காட்டித் தடுத்தவன்,
“சாரி.. எக்ஸாம் டைம்ல உன்னை டிஸ்டர்ப் பண்றதுக்கு.. ஆனா எனக்கு ஒரு வருஷம் ஆகியும் நீ பதில் சொல்லலைங்கும் போது மனசு ரொம்ப வலிக்குது. உனக்கு என்னைப் பிடிக்காம இல்லை. உனக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.. நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரியும்.. அப்படி இருந்தும் நீ சொல்ல மாட்டேங்கிறயேன்னு தோணும் போது, அந்த கடுப்புல அப்படி பேசிடறேன்..” எனவும்,
“எனக்கு அப்ப்..” அவள் எதுவோ சொல்ல வர, வாய் மீது விரலை வைத்து அவளது பேச்சைத் தடுத்தவன்,
“திரும்பவும் சொல்றேன்.. உனக்கும் என் மேல லவ் இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. அதை உன் வாயால கேட்கணும்ன்னு தான் ஆசைப் படறேன்.. அவ்வளவு தான்.. சரி.. இப்போ படிக்கலாம்.. உனக்கு என்னவோ டவுட் இருக்குன்னு அக்கா சொன்னா.. அதைக் கேளு.. சொல்லித் தரேன்.. அப்பறம் டெஸ்ட் எழுது..” என்றவன், அவள் காட்டிய சம்மை சொல்லித் தர, அதை கவனமாகக் கற்றுக் கொண்டவள், ஜைஷ்ணவி வைத்திருந்த வினாத்தாளை செய்யத் துவங்கினாள்..
தனது லாப்டாப்பில் அவன் ஏதுவோ பார்த்துக் கொண்டிருக்க, சுஜிதாவும் தனது கவனம் மொத்தத்தையும் அந்தக் கேள்வித் தாளில் பதித்து விடை எழுதிக் கொண்டிருந்தாள்.. அவ்வப்பொழுது அவள் எழுதும் விடைகளையும் அவன் பார்வையிட்டுக் கொண்டிருக்க, ஜைஷ்ணவி வந்து சேர்ந்தாள்..
“சாரி.. சாரி சுஜி.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. இவன் உனக்கு அந்த சம் டவுட்டை கிளியர் பண்ணிட்டான் தானே.. ஒரு ரெண்டு நிமிஷம் நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்..” அவள் சொல்லிக் கொண்டே, எழுதுவதை பார்வையிட்டு, சூர்யாவைப் பார்த்துவிட்டு, தனது அறைக்குச் சென்றவள், விரைவாகவே அவர்கள் அருகில் வரவும், தனது லாப்டாப்பில் புதைந்திருந்திருப்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் தொடையை ஜைஷ்ணவிக் கிள்ளினாள்.
“ஏண்டி?” என்றபடி அவளைப் பார்த்து பல்லைக் கடிக்க,
“நீ உள்ள போகலாமே.. இங்க என்ன வேலை உனக்கு?” ரகசியமாகக் கேட்க, அவளைப் பார்த்து இளித்தவன், சுஜிதாவைப் பார்த்துவிட்டு, தனது லேப்டாப்பைப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்டவள்,
“உன்னை எல்லாம் திருத்த முடியாது.. காயா பழமா?” மீண்டும் அவனிடம் ரகசியக் குரல்..
அவளைப் பாவமாகப் பார்த்து உதட்டைப் பிதுக்க, வாயைப் பொத்திச் சிரித்தவள், அவனது முறைப்பை கிடப்பில் போட்டு, சுஜிதா எழுத எழுத சரிபார்த்துக் கொண்டே வர,
“அக்கா.. முடிச்சிட்டேன் அக்கா.. எங்க இருந்து இந்த சம்மை எல்லாம் பிடிக்கறீங்க? கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது..” என்றபடி தனது விரலில் சொடக்கு எடுக்க, ஜைஷ்ணவி சூர்யாவைப் பார்த்தாள்..
“சூர்யா தான் பழைய மாடல் பேப்பர்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தான்.. உனக்காக எல்லா சப்ஜெக்டும் எடுத்திருக்கான். மெயில் ஐடி இருந்தா தா.. அவன் உனக்கு அனுப்புவான்..” ஜைஷ்ணவி சொல்ல, சுஜிதா அவனை எட்டிப் பார்க்க,
“மெயில் ஐடி சொல்லு.. நான் அனுப்பறேன். உனக்கு அது இன்னும் ஈசியா இருக்கும்..” சூர்யா கேட்க, ஜைஷ்ணவியும் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, வேறுவழியின்றி, தனது மெயில் ஐடியை அவனிடம் தந்தவள், தனது நோட்டை ஜைஷ்ணவியிடம் தரவும்,
“நீ போட போடவே பார்த்துட்டேன் சுஜி. எல்லாமே சரியா இருக்கு.. நீ காலையில தியரம் எல்லாம் ஒரு தடவ பார்த்துட்டு போ போதும்.. இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு..” எனவும், தலையசைத்த சுஜிதா,
“சரிங்கக்கா.. நான் கிளம்பறேன்.. ரொம்ப தலை வலிக்குது.. அம்மா சீக்கிரம் தூங்கச் சொன்னாங்க..” என்றபடி, தனது புத்தகங்களை எடுத்துக் கொள்ள, சூர்யாவின் பார்வை அவள் மீதே இருந்தது..
ஜைஷ்ணவியிடம் விடைப்பெற்றவள், சூர்யாவை நிமிர்ந்துப் பார்க்க, அவன் புன்னகையுடன் அவளுக்கு தலையசைத்து விடைக் கொடுக்க, வேகமாக அங்கிருந்து வெளியில் வந்து, அவள் தனது வீட்டை நோக்கி நடக்க, தனக்குள் சிரித்துக் கொண்டவன், லாப்டாப்பை எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்..
மறுநாள் காலை வழக்கம் போல சுஜிதாவின் வீட்டின் டெலிபோன் ஒரே ரிங் அடித்து கட் ஆகவும், அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தவளின் நினைவு சூர்யாவிடம் தாவியது.. ‘இவங்களுக்கு தினமும் காலையில இது ஒரு வேலை.. எனக்கு குட்மார்னிங் சொல்றாராம்.. அந்த செல்போனை வச்சிக்கிட்டு இவரு பண்றது இருக்கே.. இதுல ஹலோ செல்லம்ன்னு மெயில் வேற..’ மகிழ்ச்சி சலிப்புடன் தனக்குள் புலம்பிக் கொண்டவள், வேகமாக பள்ளிக்கு கிளம்பத் தயாரானாள்.
ஊரில் இருந்து வந்த தனது தந்தையிடம் விடைப்பெற்று, “அம்மா.. நான் இன்னைக்கு மதியம் எக்ஸாம் முடிஞ்சதும் வந்துடுவேன்..” வாசல் வராண்டாவில் இருந்தபடியே தனது ஷூவை அணிந்துக் கொண்டு அவள் சொல்ல,
“சரிடி.. அது தான் எனக்குத் தெரியுமே.. லஞ்ச் டப்பாவை தான் நான் எடுத்து வைக்கலையே.. அதை ஏன் இப்போ திரும்பச் சொல்ற? மதியம் வந்து கொஞ்ச நேரம் தூங்கு.. இப்போ இந்த ஆப்பிள் ஜூசைக் குடிச்சிட்டு போ.. இல்ல இப்படி பேய் மாதிரி தூக்கமில்லாம விடிய காலையில எழுந்து படிக்கிறதுக்கு மயங்கி விழப் போற..” என்றபடி அவளுக்கு ஆப்பிள் சாரை நீட்ட, அந்த நேரம் சரியாக சூர்யா தனது வண்டியைக் கிளம்பும் சத்தம் கேட்டது..
“இப்போ எனக்கு இந்த ஆப்பிள் ஜூஸ் ரொம்ப முக்கியம் பாரு..” என்று தலையில் அடித்துக் கொண்டவள், அவன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்லவும், வேகமாக அந்த ஜூஸை குடித்து முடித்து, தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்..
வழக்கம் போல அந்தத் தெருமுனையில் அவளுக்காக சூர்யா காத்திருக்கவும், அவனைப் பார்த்தவள், ஒரு சிறிய புன்னகையுடன் தனது சைக்கிளை மிதிக்க, சூர்யா அவளது பள்ளி வரும்வரை அவளைப் பின்தொடர்ந்து சென்றான். அவள் பள்ளியினுள் நுழைந்து, அவனைத் திரும்பிப் பார்க்கவும், பைக்கை முறுக்கி தனது கல்லூரியை நோக்கிச் சென்றான்..
“ஹே.. என்ன உன் ஆளு இன்னைக்கு ஹெல்மட் எல்லாம் போட்டுட்டு பைக் ஓட்டறாரு.” அவளது தோழி கேலி செய்ய,
“யாருக்குத் தெரியும்?” என்று அசட்டையாக பதில் சொன்னாலும், அவளது மனதிலும் அந்தக் கேள்வி குடையவே செய்தது.. மதியம் தேர்வு முடித்து வீட்டிற்குச் சென்றவள், உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து, தனது கம்ப்யூட்டரின் முன் அமர்ந்துக் கொள்ள,
“ஏண்டி உன்னைத் தூங்க தானே சொன்னேன்.. இப்போ எதுக்கு கம்ப்யூட்டர கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்க?” அர்ச்சனாவின் கேள்விக்கு,
“ம்மா.. இப்போ தானே சாப்பிட்டு இருக்கேன்.. உடனே படுக்கலாமா? அது தான் ஏதாவது மாடல் பேப்பர் கிடைக்குதான்னு நெட்ல பார்த்துட்டு இருக்கேன்.. சும்மா இதுவும் ஒரு ரிலாக்ஸ் தானே.. அப்படியே கொஞ்சம் கேம் விளையாடறேன்..” என்றவளின் தலையை வருடியவர், தனது மதிய உறக்கத்திற்குச் செல்ல, சுஜிதா சாட்டைத் திறந்தாள்..
‘சூர்யா.. என்ன இன்னைக்கு ஹெல்மெட் எல்லாம் போட்டுட்டு போறீங்க? கவர்மென்ட் ரூல் போட்டுட்டாங்களா என்ன?’ அவனுக்கு மெசேஜ் செய்துவிட்டு, தனது மெயிலைத் திறந்தவள், அவன் அனுப்பி இருந்த மெயில்களை டவுன்லோட் செய்யத் துவங்கினாள்.. அதை விட, ‘ஒரு ஆப்பிளே ஆப்பிள் ஜூஸ் குடிக்கிறதே ஆச்சரியக்குறி’ என்று அவன் அனுப்பி இருந்த மெயிலைப் பார்த்தவள், தலையில் அடித்துக் கொண்டு, கன்னங்கள் சூடேற தனது கைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்..
அடிக்கடி அவன் பாடும், ‘இந்த ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..’ நினைவு வரவும், தனது கேலரியில் திருட்டுத் தனமாக எடுத்து வைத்திருந்த அவனது புகைப்படத்தை திறந்துப் பார்த்தவள்,
‘சூர்யா.. ஜெயசூர்யா.. திருட்டுக் கண்ணா..’ என்று கொஞ்சி, அவனது புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, சாட்டில் மெசேஜ் வந்ததற்கான ஒலி எழுப்பியது.
வேகமாக அவனது படத்தை மூடிவிட்டு, சாட்டை திறந்தவளுக்கு, சூர்யாவின் பதில் புன்னகையை வரவழைத்தது.. ‘என்னோட ஆப்பிளுக்கு என்னோட உயிர் வெல்லமாம். அதனால தான்..’ என்ற பதிலில் சிரித்தவள்,
‘ரொம்பத் தான்..’ என்று பதிலனுப்ப,
‘மிஸ்ஸிங் மீ?’
‘இல்லையே.. நான் ஏன் உங்களை மிஸ் பண்ணப் போறேன்?’
‘பொய் சொல்லாதே.. எனக்கு இங்க உன் முகம் தெரியுது.. உங்க அம்மா தான் மதியம் தூங்க சொன்னாங்க இல்ல.. பேசாம தூங்கு.. நிஜமாவே ரொம்ப முகம் டயர்டா இருக்கு சுஜி. அப்பறம் எழுந்து படிக்கலாம்..’
‘இப்போ தான் சாப்பிட்டேன்.. உங்களுக்கு கிளாஸ் இல்லையா?’
‘இருக்கு.. இப்போ ப்ரீ பீரியட்..’
‘ஓகே.. என்ஜாய் தி டைம்.. குட் நைட்.. நான் தூங்கப் போறேன்..’
‘குட் நைட்.. ஐ வில் கம் இன் யுவர் ஸ்வீட் ட்ரீம்ஸ்..’ என்றபடி அவன் சாட்டை முடிக்க, சுஜிதாவின் இதழ்களில் புன்னகை.. அப்படியே தனது படுக்கையில் படுத்தவள், உறங்கிப் போனாள்..
“மேடம்.. மேடம்..” என்ற குரல் கேட்க, அவசரமாக கண் விழித்துப் பார்த்தவள், வழமை போல நிகழ்காலத்தில் இருந்தாள்..
“சொல்லுங்க சிஸ்டர் என்ன ஆச்சு?” அறையில் இருந்த வாஷ்பேசினில் முகத்தைக் கழுவிக் கொண்டே கேட்க,
“மேடம் ஒரு பேஷன்ட் இப்போ ஆறு மாசமாம்.. இங்க ஏதோ பங்க்ஷனுக்கு வந்த இடத்துல ப்ளீட் ஆகுது போல.. எமர்ஜென்சி..” அந்த நர்ஸ் சொல்லவும்,
“இதோ வந்துட்டேன்.. ஒரே நிமிஷம்..” என்றவள், அவசரமாக அந்த பேஷன்ட்டைக் காண ஓடினாள். அந்த நடுஜாம நேரத்தில், அவசரமாக செயல்பட்டு, அந்த பெண்ணின் கணவரிடம் அவளைப் பற்றிய மெடிக்கல் விவரங்களை கேட்டுக் கொண்டே ஸ்கேன் செய்து விட்டு, ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன்,
“தேங்க் காட்.. பேபி நல்லா இருக்கு.. வேற எந்த ப்ராப்ளமும் இல்ல.. இப்போ நான் ஒரு இன்ஜெக்ஷன் போடறேன்.. ப்ளீடிங் அரஸ்ட் ஆகும். காலையில எதுக்கும் ஒரு தடவ ஸ்கான் செய்து பார்த்துடலாம்.. கண்டிப்பா பயப்பட எந்த வித காரணமும் இல்ல.. இது சில சமயம் இருக்கறது தான்..” என்றவள், ஊசியை போட்டுவிட்டு,
“நான் இங்க தான் இருக்கேன்.. பயப்படாதீங்க..” என்றபடி அந்தப் பெண் இருந்த எமர்ஜென்சி அறையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள்.