உள்ளத்தின் காதல் நீங்காதடி-10

உள்ளத்தின் காதல் நீங்காதடி-10

ஒரு மாதத்திற்கு பிறகு…

 

எத்திராஜ் கல்லூரி.

 

எக்மோரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தால் மீரா. முதலில் ஒரு கல்லூரியில் இடையில் வந்து சேர்வது என்பதே மிகவும் கடினம். இவளுக்கு தகுந்த காரணம் அத்தோடு அவளுடைய நன்நடத்தை சான்றிதழ் மூலமாகவே அந்த வேலை எளிதில் முடிந்தது.

 

மீனாவை பிரிந்து அவள் மிகவும் வாடினாள். எதையாவது சொல்லி அவளும் இங்கு வந்திருப்பாள் தான். ஆனால்,மீராவிற்கு இருந்த காரணம் அவளுக்கு இல்லையே. ஆகையால் சரி இன்னும் கொஞ்ச நாளில் படிப்பு முடிந்ததும் அங்கையே வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று  கூறி அமைதியாக இருக்கிறாள்.

 

ஆகிற்று சென்னை வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நடக்கவே நடக்காது என்ற நாம் நினைக்கும் பல விடயங்கள் நம்மை மீறி நடக்கும்போது தான் இறைவன் ஒருவன் நமக்கு மேல் இருக்கிறான் என்பது ஆணி அடித்ததுபோல் புரியும்.

 

அப்படித்தான் இருந்தது மீராவிற்கும். அவள் விருப்பபடவேயில்லையே. ஆனால் நடக்கிறதே,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவனை கண்டு விடுவோமா?என்று அவள் பயந்து பயந்து அல்லவா வாழ்கிறாள்.

 

“என்ன வாழ்விது அனுதினமும் பயந்து வாழும் வாழ்வு? எனக்கு மட்டும் கடவுள் ஓவர் டைம் பண்ணி விதி எழுதியிருப்பார் போல் என்று நினைத்தவள் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” என்று உலகில் இருக்கும் அனைத்து கடைகோடி மக்கள் வரை கேட்கும் அதே ஒரே கேள்வியை தானும் கேட்கும் நேரம், இன்னொருவரும் அதையே கேட்க.

 

வியந்தவள் அது யார் என்று திரும்பி பார்த்தாள். அது அவளது வகுப்பு தோழி சுபி,சுபிக்ஷா.  இங்கு அவளுக்கு பெரிதாக நட்பு வட்டம் இன்னும் அமையவே இல்லை. அனைவரிடமும் பேசிக்கொள்வாள். யாரையும் தவிர்த்தில்லை,அதில் ஒருத்தி இவள்.

 

ஏனோ அவளிடம் என்ன என்று கேட்க தூண்டியது. ‘கேட்டால் சொல்வாளா?’சரி முயற்சிப்போம்.

 

அவளிடம் சென்றவள் “சுபி,எனி பிராப்ளம் ?”என்றாள் மீரா.

 

அவளை ஒரு நிமிடம் கூர்ந்து இவள் கவனிக்க.

 

“ஹே,ரிலாக்ஸ் சொல்ல வேண்டாம்னா வேணாம்”என்றாள் புன்னகையுடன்.

 

“ம்ப்ச்,அதுயில்லை மீரா‌‌ காலையிலிருந்து அனைவரிடமும் சொல்லி அலுத்துவிட்டது பா” என்றாள் அலட்சியமாக.

 

“அப்படி என்ன சொன்னாய்?”என்று அவள் கேட்க.

 

“முதலில் சரி என்று வருபவர்கள், நான் கூறுவதை கேட்டுவிட்டு அலறி ஓடுகின்றனர்” என்றாள் சோர்ந்து போய்.

 

“அட என்னன்னு முதலில் சொல்லுமா,என்னால் முடிந்தால் நிச்சயம் உதவுவேன்” என்று அவள் நம்பிக்கை அளிக்க,

 

“சரி உன்னிடமும் சொல்லி விடுகிறேன்” என்று ஆரம்பித்து மொத்தத்தையும் ஒப்பித்தாள்.

 

அதை கேட்ட மீராவின் மனதில் பல கலவையான உணர்வுகள்.

 

சிறிது நேரம் யோசித்தவள் “சரி நான் நிச்சயமாக உனக்கு உதவுகிறேன்,எனை நம்பு”என்று அவள் வாக்கு கொடுக்க.

 

சற்றே மலர்ந்தவள்,ஆர் யூ ஸ்யூர்?” என்று சுபி கேட்ட கேள்விக்கு.

 

“வெரி ஸ்யூர்”என்றாள் புன்னகை முகமாக.

 

****************

 

உதய்யின் நிலைமையோ,மிகவும் மோசமானதாக இருந்தது. “ஒருவனின் வாழ்வில் ஒரு முறைதானே பொக்கிஷம் கிடைக்கும். ஆனால் எனக்கு இருமுறை கிடைத்ததே,ஒரு முறை நானும் சேர்ந்தே அதை தவறவிட்டேன்,இம்முறை நான் மட்டுமே தவறவிட்டேனே.

 

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும்?” மீரா கேட்ட அதே கேள்விதான். இந்த கேள்வி அனைவருக்கும் சொந்தம் தானே.‌ மொழிகள் மாறலாம்,ஆனால் கேள்வி ஒன்று தான்.

 

“முடிந்தது எல்லாம் முடிந்தது. அவள் சென்றுவிட்டாள் தன்னை விட்டு சென்றுவிட்டாள்” இதை சொல்லும்போதே அவன் மனம் துடித்தது.

 

அவளது வீட்டு முகவரி வரை கிடைத்தும், அவளை மறுபடியும் பிடிக்க முடியவில்லையே. “இதை என்னவென்று சொல்வது? விதி வலியது என்றா? நான் ராசி இல்லாதவன் என்றா? இல்லை அவள் உனக்கு கிடைக்கவே போறதில்லை என்றா?”

 

வேதனையாக இருந்தது உதய்யிற்கு. அவனுக்கு அவளுக்கும் இடையில் எத்தனை தடங்கல்கள்? தண்டனையை விட கொடூரமானது இந்த தடங்கல்கள். தண்டனையை கூட செய்துவிட்டால், அது முடிந்துவிடும். ஆனால்,இந்த தடங்கல்கள் என்பது மீண்டும் மீண்டும் வருவது.

 

மீராவை சந்தித்த அன்றே ஏன் நாம் பேசவில்லை என்று அன்றைய நான் முதல் இன்றைய நாள் வரை கோடி முறை கேட்டுவிட்டான்,அதற்கான விடை அவனிடமேதான் இருக்கின்றது.

 

இப்படித்தான் ஒருமுறை மீரா கிடைத்ததாக நினைத்து தான் செய்த மடதனத்தை எண்ணி அவன் நொந்திருக்கிறான்.மறுமுறை அதே தவறை செய்ய அவன் விலையவில்லை.

 

அதற்காக தான் ஒன்றிருக்கு நூறு முறை யோசித்து அவன் மீராவை கண்டான். ஆனால் அவளை கண்டதில் அவன் காட்டிய சுறுசுறுப்பை அவளிடம் தன் நிலையை எடுத்து கூறுவதில் அவன் காட்டாமல் போனதே இவனது இன்றைய வேதனைக்கான காரணம்.

 

கையில் அவளது முகவரியே கிடைத்தும் அவள் கிடைக்காமல் போனதின் விந்தைதான் என்னவோ?

 

அவனது மொத்த குடும்பமும் தான் குற்ற உணர்வில் தவிக்கிறது. அதிலிருந்து வெளியே வர ஒரே வழி மீரா. இத்தனை வருடங்களின் தேடல் மீரா அவனுக்கு.

 

“ஒரு பொருள் தொலைந்து அது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்வது வேறு. ஆனால் இங்கோ,தொலைத்த பொக்கிஷம் மறுபடியும் கிடைத்து மறுபடியும் தொலைந்துவிட்டது.

 

ஒருமுறை தொலைத்து மறுமுறை கிடைத்த பொருளை நாம் எத்தனை பத்திரமாய் பாதுகாப்போம். ஆனால் நான் அதை தொலைத்துவிட்டு அல்லவா நிற்கிறேன்.

 

வாழ் நாள் முழுமைக்கும் இதே தொடர்கதை ஆகிவிடுமா?என் வாழ்வின் சோகம் மறையுமா?

 

என் மேல் தான் அவளுக்கு கோபம் போல். அதனால்தான் என்னை பார்த்ததும் சென்றுவிட்டாள். எனில் சிறு வயது முதல் இப்பொழுது வரை கோபம் கொண்டிருக்கிறாளா?

 

என்னை அடித்து கேட்டிருக்கலாமே. ஏன்டா அப்படி செய்தாய் என்று?என்னிடம் உரிமையாய் அவள் கேட்டிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு ஏன் சென்றாள்? மழையை தரும் மேகம் என்று நான் எண்ணியிருக்கையில் காற்றின் கைகள்பட்டு அவள் ஏன் விலகிச்சென்றாள்?”

 

பல விடை தெரியா கேள்விகள் அவனை கொடைந்தது.

_தொடரும்_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!