காதல் தீண்டவே-4

காதல் தீண்டவே-4

தொடர்ந்து அடித்துக் கொண்டு இருந்த காலிங்பெல் ஒலியைக் கேட்டு சமையலறையில் வேலை செய்துக் கொண்டு இருந்த சீமா, அவசரமாக கைக்கழுவிவிட்டு  கதவைத் திறந்தார்.

வெளியே மிதுராவை, இரு ஆடவர்கள் தோளில் தாங்கியபடி நின்றுக் கொண்டு இருந்தனர்.

பார்த்தவுடன் பரபரப்பு தொற்றிக் கொண்டது அவரிடம்.

“என்னாச்சு டா?” என்றார் பதற்றம் நிறைந்த குரலில்.

அவரது கண்கள் மிதுராவின் உடலை நோக்கி கவலையாக ஆராய்ந்தது.

அவளோ அவர்கள் இருவரின் கைப்பிடியில் இருந்து நழுவி தெம்பாக நின்று தன் அன்னையைப் பார்த்தாள்.

“அம்மா, பஸ்ல இருந்து இறங்கும் போது லேசா தடுமாறிட்டேன். கொஞ்சமா கால் பிசகிடுச்சு மா,  நான் தனியா நடந்து வந்துடுவேனு தான் சொன்னேன், ஆனால் இவங்க தான்…” என்று அவள் மேலும் தொடர்வதற்கு முன்பு கார்த்திக் தீரன் இடை மறித்தான்.

“இல்லை அம்மா மிதுராவை அப்படியே விட்டுட்டுப் போக மனசில்லை. வழியிலே எங்கேயாவது மறுபடியும் ஸ்லிப் ஆகிட்டா, ரிஸ்க் இல்லையா? அதான் ரெண்டு பேரும் துணைக்கு கூட வந்தோம்.” என்று தீரன் மேலும்  விளக்க அதைக் கேட்டு புன்முறுவல் அரும்பியது  சீமாவின் முகத்தினில்.

“ரொம்ப நன்றி பா ரெண்டு பேருக்கும்.  ஏன் வெளியே நிற்கிறிங்க.  உள்ளே வாங்க. ” என்று கொஞ்சம் தள்ளி இருவரும் உள்ளே வருவதற்கு வழிவிட்டார்.  ஆனால் இருவரும் தயங்கியபடி வாசலிலேயே நின்றனர்.

“இல்லை அம்மா டைம் ஆயிடுச்சு.  நாங்க அப்புறமா ஒரு நாள் வரோமே.” என்ற  தீரனின் குரலில் தயக்கத்தின் சாயல்.

“என் பொண்ணை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவங்களுக்கு ஒரு காப்பி கூட கொடுக்காம அனுப்புனா என் மனசு கிடந்து பரிதவிக்குமே. ” என்று சீமா சொல்ல இருவரும் மறுக்க முடியாமல் உள்ளே நுழைந்தனர்.

மிதுரா அவர்கள் இருவரும் அமர்வதற்காக அந்த சோபாவின் மீது கிடந்த நியூஸ்பேப்பரையும் டவலையும் எடுத்துவிட்டு  அவர்களைப் பார்த்தாள்.

“நீங்க முதலிலே உட்காருங்க மிதுரா, உங்களுக்கு தான் அடிப்பட்டு இருக்கு. ” என தீரன் சொல்ல

“கொஞ்சமா தான் வலி இருக்கு. பரவாயில்லை” என்று சொல்லி அமர மறுத்தாள்.

“கொஞ்சமா வலி இருந்தாலும் வலி தானே. உட்காருங்க மிதுரா. ” என்று அவன் சொல்ல அதற்கு மேலும் மிதுராவால் மறுக்க முடியவில்லை.

அவள் அந்த முழு நீள சோபாவின் நடுவில் அமர அவளுடைய இரண்டுப் பக்கத்திலும் தீரனும் ராஜூம் அமர்ந்தனர்.

புதுஇடம் கொடுத்த தயக்கத்தோடு அந்த சோஃபாவில் இருவரும் நெளிந்துக் கொண்டு இருந்த சமயம் கையில் காப்பி ட்ரேயுடன் சீமா வெளிப்பட்டார்.

இரண்டு பேரும் காப்பியை எடுத்து தயக்கமாக உறிஞ்சிய அடுத்த நொடி, இருவரது முகமும் ஒருவரது முகத்தை இன்னொருவர் ஆச்சர்யமாகப் பார்த்தது.

“டேய் ராஜ். நான் நினைச்சதை தானே நீயும் நினைச்சே?” என்று தீரன் அவனைப் பார்த்துக் கேட்க ராஜ்ஜோ வேகமாக ஆமாம் என்று தலையசைத்தான்.

“அம்மா, பல வருஷம் கழிச்சு இப்போ தான் சூப்பரான காப்பி குடிக்கிறோம்.

ஓட்டல் காப்பிக்கும் எங்க பேச்சுலர் காப்பிக்கும் பழக்கப்பட்ட  நாக்குக்குள்ளே தேனாமிர்தம் மாதிரி இந்த காப்பி இறங்குது. சூப்பர்.  ” என்று சொல்லி பாராட்டியபடியே சப்புக் கொட்டி காப்பியை குடித்து முடித்தவனது முகத்திலோ அளவுக்கடந்த திருப்தியும் சந்தோஷமும்.

அதேப் போல தான் கார்த்திக் ராஜ்ஜின் முகத்திலும் பாவனை தெரிந்தது.

ஆனால் அதை அவன் குரலில் மொழிப் பெயர்த்து சொல்லவே இல்லை.

அலுவலகத்தில் தான் தொழில் காரணமாக பேசாமல் இருக்கின்றான் என்று பார்த்தால் வெளியிலும் பேசமாட்டேன்கிறானே என்று  லேசான எரிச்சல் மிதுராவின் முகத்தில் படர்ந்தது.

அந்த நேரம் பார்த்து  வாசலில் ஆளரவம் சப்தம் கேட்க எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

விஸ்வம் தான் உள்ளே நுழைந்துக் கொண்டு இருந்தார்.

அவர் கையில் ஒரு ஸ்வீட் டப்பா.

உள்ளே நுழைந்து இருந்தவரின் பார்வை அங்கே புதியதாக வீற்று இருந்த இரு ஆடவர்களின் மீது குழப்பமாகப் படிந்தது.

“அப்பா இவங்க இரண்டு பேரும் என்னோட  டி.எல்.  பஸ் விட்டு இறங்கும் போது காலிலே லேசா சுளுக்குப் பிடிச்சுடுச்சு. இவங்க தான் வீடு வரை கூட்டிட்டு வந்தாங்க. ” என்று அவள் சொல்ல அவருடைய பார்வை தன் மகளையே வருத்தமாகவும் பதற்றமாகவும் பார்த்தது.

“வலி எப்படி இருக்கு டா? சுளுக்கு பேன்ட் போட்டியா? ” என்று அவர் பரிதவித்துக் கேட்க

“அப்பா  வலி எல்லாம் கொஞ்சமா தான் இருக்கு.  நீங்க வாங்க வந்து உட்காருங்க.” என்று அவள் எதிர் இருக்கையைக் காட்டினாள்.

அவரோ அமராமல் ” பரவாயில்லை இருக்கட்டும் டா. ” என்று சொல்லியபடி கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸை திறந்து இரண்டு கார்த்திக்கின் முன்னே நீட்டினார்.

இருவரும் குழப்பமாக அவரைப் பார்த்தனர்.

“என் பொண்ணோட முதல் வேலை நாளைக் கொண்டாடுறதுக்காக வாங்கிட்டு வந்தேன் எடுத்துக்கோங்க. ” எனச் சொல்ல இருவரும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டனர்.

இரண்டு கார்த்திக்கின் பார்வையும் அந்த வீட்டை ஒரு முறை அளந்துப் பார்த்தது.

அளவான வீடு. அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

மிதுராவின் சிறு வயது முதல் இப்போது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சுவற்றில் இடம்பிடித்து இருந்தது.

ஆனால் அவளது தாய் தந்தையின் கல்யாணப் புகைப்படம் மட்டும் அந்த சுவற்றில் இடம்பிடிக்கவில்லை.

இருவருடைய புகைப்படமும் தனித்தனியாக இருந்ததே தவிர இருவரும் இணைந்து  எடுத்தாற் போல் ஒரு புகைப்படமும் இல்லை.

தீரனுக்கு அது வியப்பாகவும் இருந்தது, அதே சமயம் குழப்பமாகவும் இருந்தது.

ஆனால் அவன் வெளியில் எதுவும் கேட்காமல் அந்த வீட்டையே தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டு இருந்தான்.

அவனின் கவனத்தைக் கலைக்கும் விதமாய் ராஜ், தீரனின் தோளை இடித்தான். திரும்பி என்னவென்று இவன் கண்களால் கேட்க, அவன் தன் வாட்சை சுட்டிக்  காட்டினான்.

மணி ஒன்பதரையை நெருங்கி இருந்தது. உடனே தீரனின் முகத்தினில் ஒரு அவசரம் குடிக் கொண்டுவிட்டது.

“அம்மா டைம் ஆகிடுச்சு. நாங்க கிளம்புறோம்.” என்று தீரன் சொல்லியபடி கிளம்புவதற்கு ஆயத்தமாக எழுந்து நின்றான்.

“இவ்வளவு தூரம் வரை சிரமம் பார்க்காம கொண்டு வந்து விட்டதுக்கு தேங்க்ஸ் பா, ரெண்டு பேருக்கும்.  நீங்க அடுத்த தடவை வீட்டுக்கு வரும் போது நிறைய நேரம் இருக்கிறா மாதிரி வரணும். ” என்ற சீமாவின் வார்த்தையில் அடுத்த முறை வீட்டுக்கு வர வேண்டும் என்ற அன்பின் கோரிக்கை ஒளிந்துக் கொண்டு இருந்தது.

அதை உணர்ந்த இரண்டு கார்த்திக்கும் மெல்லிய சிரிப்புடன் தலையாட்டியபடி விடைப் பெற்று சென்றனர்.

அவர்கள் சென்றதும்  விஸ்வம் அவசர அவசரமாக தன் அறைக்குள் நுழைந்து ஒரு சுளுக்கு பேன்ட் உடன் வெளிப்பட்டார்.

அமர்ந்து இருக்கும் தன் மகளின் காலை எடுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டு கவனமாக அந்த பேன்ட்டை ஒட்டியவரை ஒரு சிறுமுறுவலுடன் கடந்து சமையலறைக்குள் சென்றார், சீமா.

“அப்பா எனக்கு பெரிய அடி எல்லாம் இல்லை. எதுக்கு இவ்வளவு பெரிய பேன்ட்”

“பெரிய அடி இல்லைனாலும், இது அடி தானே.” என்றவர் சொல்லிவிட்டு மீண்டும் அவள் கால்களின் மீது கவனத்தைச் செலுத்த மிதுராவின் முகத்திலோ ஒரு ஆனந்த அதிர்ச்சி.

இதே சொற்களைத் தானே தீரனும் சொன்னான்.

“பெரிய வலி இல்லைனாலும், வலி தானே. ”  என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே விஸ்வத்தின் குரல் சிந்தையைக் கலைத்தது.

“மிது மா… அவ்வளவு தான் டா முடிஞ்சுடுச்சு. இனி நீ இந்த சோபாவை விட்டு நகரக் கூடாது. ” என்று உத்தரவிட்டுவிட்டு அவளருகே அமர்ந்துக் கொண்டவர் வாஞ்சையாக அவள் முடியைக் கோதினார்.

“முதல் நாள் வேலை எப்படி போச்சு டா. உனக்கு அந்த இடம் பிடிச்சு இருக்கா? எல்லாரும் நல்லபடி பழகுனாங்களா?” என்று அவர் வரிசையாய் வேலையைப் பற்றி கேள்விக் கேட்கத் துவங்க இவளும் பதிலளித்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் அவளது கவனம் எல்லாம் தன் தாயின் மீதே படிந்து இருந்தது.

எப்போதும் தகப்பனிடம் தனியாகவும் தாயிடம் தனியாகவும் பேசி அவளுக்கு சலித்துப் போய் இருந்தது. இன்று அவர்கள் இருவருடனும் ஒன்றாய் சேர்ந்து அமர்ந்து பேச வேண்டும் போல இருந்தது.

வேகமாக சமையல்கட்டை நோக்கி குரல் கொடுத்தாள்.

“அம்மா போதும் வேலை செய்தது. இங்கே வா. உன் கிட்டே கொஞ்சம் பேசணும். ” எனக் கத்தினாள்.

“எப்பவும் போல தூங்க போறதுக்கு முன்னாடி நம்ம பேசிக்கலாமே… இப்போ நீ உன் அப்பா கிட்டே பேசு.” என்று அவர் சொல்லியபடி மீண்டும் பாத்திரங்களை சுத்தம் செய்ய துவங்க, இங்கோ மிதுராவுக்கு எரிச்சலாக வந்தது.

“அம்மா நான் என் அப்பா கிட்டே பேசுறது இருக்கட்டும். முதலிலே நீ உன் புருஷன் கிட்டே பேசு. நீங்க ரெண்டு பேரும் நிஜமாவே புருஷன் பொண்டாட்டி தானானு எனக்கு விசித்திரமான சந்தேகம் வருது.” என்ற மிதுராவின் வார்த்தையைக் கேட்டதும் ஒரே நேரத்தில் விஸ்வத்தின் கையில் இருந்த காப்பி கப்பும் சீமாவின் கையில் இருந்த பாத்திரமும் இடறி விழுந்து சிதறியது.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஜன்னலின் வழி உலகைப் பார்ப்பது என்பது எல்லாருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால் மிதுராவுக்கோ வெறுப்பாக இருந்தது.

நடுத்தர தம்பதிகள் தொடங்கி வயதான தம்பதிகள் வரை எல்லாரிடமும் காணப்பட்ட இணக்கம், அவள் உள்ளத்தினில் ஏக்கத்தை கிளப்பிவிட்டு இருந்தது. 

சமீப காலமாக அவள் மனதை உறுத்தும் ஒரே கேள்வி, ஏன் என் பெற்றோர்கள் விலகி இருக்கிறார்கள் என்பது தான்.

ஒரு வேளை இது நிரந்தரப் பிரிவோ?  என அவள் மனம் அதிர்ந்த நொடி பேருந்தும் அதிர்ந்து நின்றது.

அவள் திகைத்துத் திரும்பிப் பார்க்க தீரனும் ராஜ்ம் பேருந்தில் ஏறிக் கொண்டு இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் வேகமாக தன் கைப்பையைத் துழாவி தன் அன்னைக் கொடுத்துவிட்ட காப்பி ப்ளாஸ்க்கை கையில் எடுத்தபடி  ஜன்னலோரத்தில் இருந்து தள்ளி அமர்ந்தாள்.

தீரன் சிறுப் புன்னகையுடன் அந்த சீட்டைத் தன்னகப்படுத்திக் கொண்டு ” குட் மார்னிங் ” என்றான் உற்சாகமாக.

இவளும் பதிலுக்கு குட்மார்னிங் சொன்னாள், ஆனால் குரலில் கொஞ்சமும் சுரத்தே இல்லை.

“என்ன ஆச்சு மிதுரா? ஏன் டல்லா இருக்கீங்க? ஆர் யூ ஓகே? காலிலே பெயின் இன்னும் இருக்கா?” என்று அக்கறையாக விசாரித்தான்.

அவனது அக்கறைக் கண்டு அவள் முகத்தில் மெல்லியதாக முறுவல் பூத்தது.

“எனக்கு எந்த வலியும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன் தீரன்.” என்று சொன்னவள் கையில் இருந்த ப்ளாஸ்க்கை அவனை நோக்கி நீட்டினாள்.

அவன் கேள்வியாக அவளைப் பார்த்தான்.

“அம்மா கொடுத்து அனுப்புனாங்க, உங்க ரெண்டு பேருக்காகவும்.” என்றபடி அவனைப் பார்க்க அப்போதும் தீரன் அசையவில்லை.

“அப்புறம் இனி டெய்லியும் அவங்க காப்பியைத் தான் குடிக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. ” என்று மிதுரா சொல்லியபடி அவனைப் பார்க்க தீரன் தயக்கமாக அவளைப் பார்த்தான்.

“ஒரு டீம் லீடரா மறுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் அம்மாவோட காப்பி மணம் இன்னும் என்னையே சுத்திட்டு இருக்கிறதாலே என்னாலே மறுக்க முடியல அதனாலே வாங்கிக்கிறேன். ” என்றபடி வாங்கிக் கொண்டான்.

“பயப்படாதீங்க டீம் லீடர். காப்பி கொடுத்ததுக்காக சம்பளத்தை அதிகமாக்கி கொடுங்கனு லாம் ப்ளேக் மெயில் பண்ண மாட்டேன்.”

“ஹா ஹா இப்படி வேற ஒரு ஐடியா இருக்கா. ” என்றுச் சொல்லி சிரித்தபடி சீட்டில் இலகுவாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டவனின் வார்த்தைகளும் இலகுவாகவே வெளி வந்தது.

“மிதுரா உங்க அம்மா செம ஸ்வீட் தெரியுமா. உங்க அப்பாவும் கூட.

இரண்டு பேருக்குள்ளேயும் ஒரு அழகான புரிதல் இருக்கு. ” என்று தீரன் சொல்ல மிதுராவின் கண்கள் ஆர்வத்தில் மின்னியது.

“வாட் என்னது உண்மையாவா சொல்றீங்க? நிஜமாவா? எங்க அம்மா அப்பாவுக்கு இடையிலே பாசம் இருக்கா?” என்றவளது இந்த கேள்விகளைக் கண்டு  குழப்பமாகப் பார்த்தான்.

அவனுடைய பார்வையைக் கண்ட பிறகே

தன்னுடைய ஆர்வக் கோளாறை உணர்ந்தவள்   ” இல்லை நான் சின்ன வயசுல இருந்தே போர்டிங் ஸ்கூலிலே தான் படிச்சேன். காலேஜ்ம் ஹாஸ்டலிலே தான் தங்கி படிச்சேன். இப்போ தான் நான் என் ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்றேன். அதனாலே தான் நீங்க என் அம்மா அப்பாவைப் பத்தி சொல்லும் போது எக்ஸைட் ஆகிட்டேன்.” என்று ஒரூ நீண்ட  விளக்கம் தர அவனோ குழப்பம் விலகி குறுஞ்சிரிப்போடு தலையாட்டினான்.

“ஆமாம்  எதை வெச்சு அவங்க ரெண்டு பேருக்கு இடையிலேயும் புரிதல் இருக்குனு சொல்றீங்க?” என்று  மீண்டும் அதேக் கேள்விக்கு வந்து நின்றாள்.

அரும்பிய புன்னகையோடு அவளைப் பார்த்தவன்

“நேத்து அம்மா, ஃப்ரிட்ஜ்ல இருந்து கீழே குனிஞ்சு திங்க்ஸ் எடுக்கும் போது மேலே ஃப்ரீஸர் டோர் ஓப்பன் ஆகி இருந்தது. ஆனால் அதை கவனிக்காம அம்மா எழுந்துக்கப் போகவும் அப்பா வேகமா வந்து மேலே இருக்கிற கதவை மூடிட்டார். இல்லைனா அவங்க தலையிலே காயம் பட்டு இருக்கும். ” என்று அவன் சொல்ல அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“அது மட்டும் இல்லை. உங்க அம்மா எதையோ தேடி ஹால்க்கும் கிச்சனுக்கும் நடந்துட்டு இருந்தாங்க. உங்க அப்பா  அவங்க கவனிக்காத சமயம் அந்த பொருளை அவங்க பக்கத்துலே வெச்சுட்டு அமைதியா போனாரு. ” என்று அவன் சொல்ல அவளது உள்ளம் நெகிழ்ந்தது.

காதல் என்பது நிமிடத்திற்கு நிமிடம் “ஐ லவ் யூ” சொல்லிக் கொண்டு இருப்பதல்ல. கைகளைப் பிடித்தபடி தன் இணக்கத்தை பறை சாற்றிக் கொண்டு இருப்பதல்ல.

காதல் என்பது சின்ன சின்ன விஷயங்களில் வெளிப்படும் அக்கறை என்ற உண்மையை  அப்போது தான் உணர்ந்தாள் அவள்.

கண்களின் ஓரமாய் லேசாக துளிர்த்த கண்ணீரோடு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

தீரனுக்கு அவளது மனதும் அது தற்போது அடைந்து இருக்கும் நெகிழ்ச்சியும் புரிந்தது. அவள் மனதை மாற்றும் விதமாக பேச்சை துவங்கினான்.

“ஆமாம் மிதுரா நீங்க இன்னைக்கு ஆதனோட ஷோ கேட்கலையா?”

“உங்களுக்காக தான் காத்துட்டு இருந்தேன். ” என்று அவள் சொல்ல அவன் ஓ என்றான் உதடுகளைக்  குவித்தபடி.

இருவரும் ஹெட்செட்டை காதில் பொருத்த முயன்ற நேரம்,  வேகமாக ராஜ் இடையில் வந்து தீரனின் கையில் இருந்த ப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு இல்லை இல்லை பிடுங்கிக் கொண்டு போனான்.

சட்டென்று தன் கையில் இருந்து நழுவிப் போன அந்த காப்பி ப்ளாஸ்க்கையே பரிதாபமாக தீரன் பார்த்தான்.

“ராஜ், எனக்குக் கொஞ்சமாவது  மிச்சம் வை டா. ” என்று தீரன் கெஞ்சும் குரலில் கேட்க அவனோ ஒரு சிறு தலையசைப்பை மட்டும் பதிலுக்குக் கொடுத்துவிட்டு காப்பி குடிப்பதில் கவனமானான்.

சிறுகுழந்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு இருந்த தீரனைப் பார்த்து சிரித்தவள், தன் கைப்பையில் இருந்து இன்னொரு ப்ளாஸ்க்கை எடுத்து அவனை நோக்கி நீட்டினாள்.

“இல்லை வேண்டாம் மிதுரா. நீங்க குடிக்கிறதுக்கு வெச்சுக்கோங்க..” என்று அவன் மறுக்க முனைந்த நேரம், 

“எனக்கு தனியா இன்னொரு ப்ளாஸ்க்ல இருக்கு தீரன். இது உங்களுக்கு அம்மா கொடுத்துவிட்டது.” என்று அவள் சொல்ல அவனது இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

“ஸ்வீட் மம்மி. ” என்றவனிடம், ஹெட்செட்டின் ஒரு பக்கத்து முனையை கொடுத்துவிட்டு  மறுபக்கத்து முனையை தன் காதுகளில் மாட்டிக் கொண்டாள்.

குளம்பி வாசத்திற்கு இடையில் மெது மெதுவாக ஆதனின்  குரல் வாசம் காற்றில் கரைந்து வந்து அவர்களைக் கரைக்கத் தொடங்கி இருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!