emv2

எனை மீட்க வருவாயா! – 2

 

“அசையாமல் கெட்டது உடல்!

அசைந்து கெட்டது மனம்!

இசையாமல் கெட்டது உறவு!

இசைந்து கெட்டது நம்பிக்கை!

 

அசையா மனதை, அசைக்கும் வகை

தெரிந்தவன் எவனோ, உள்ளத்தை வென்றவன் அவனே!

இசையா மனதை, இசைந்திடச்

செய்தவன் எவனோ, இதயத்தை களவாடியவன் அவனே!”

 

ஜெகன், காலையில் டவுனுக்கு செல்கிறேன் என்றதுமே,  காளியம்மாள் மகனையும், கணவரையும் மாறி, மாறி விரட்டிக் கொண்டிருந்தார்.

“செகனு, நீ வரும்போது வாங்கியாந்தியே, பேரிச்சை, பாதாம்னு.. அதுலாம் இருக்கா?”

“ம்” என்றவன் அறைக்குள் சென்றிருந்தான்.

சூட்கேஸ்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்ற மகனை எட்டிப் பார்த்தார்.  அறையிலிருந்த செல்ஃபில் வைத்திருந்ததை எடுத்துக் கொண்டிருந்தான் ஜெகன்.

அறை வாயிலில் நின்றபடியே, “சேலை, சோப்பு, சென்டு, தலைவலித் தைலம், இதெல்லாத்திலயும் ஒவ்வொன்னு எடுத்துக்கோ”

“…” பதிலேதும் பேசாமல், எடுத்து வைக்கும் முயற்சியில் இருந்தான்.

“எல்லாத்தையும் குடுத்துப்புராதே!” இடையில் வந்து மகனிடம் கூறிவிட்டுச் சென்றார்.

“…”

“நமக்குனு எடுத்து வச்சிக்கிட்டு குடு!”

“…”

“ரெண்டு மூனு கவருல, தனிதனியா எடுத்து வையி!”

“…”

கட்டளைகள் பிறந்தவண்ணம் இருந்தது. வெளியிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. அதேநேரம் திண்ணையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த கணவரை எட்டிப் பார்த்தவர், “நீதானா அது!  மாடு கழனித் தண்ணிய குடிக்கற மாதிரி சத்தம் கேக்குதேன்னு எட்டிப் பாத்தேன்!”

“குசும்புதான வேணாங்கறது!”

“வெரசா(விரைவாய்) சாப்பிட்டுட்டு, ஆட்டைப் பத்திக்கிட்டு கிளம்புயா”

“மகாராணி என்ன பண்ணப் போறீக” நக்கலாகக் கேட்டார்.

“நா, செகங்கூட ராம்நாடுவரை போறேன்”

“அங்க யாரைப் பாக்கப் போற?”

“போகும்போதே எங்கேனு கேளு!  போன காரியம் விளங்கன மாதிரித்தேன்!” சடைத்துக் கொண்டார்.

“நீயாச் சொல்லிட்டா, நான் எதுக்குடீ கேக்கப் போறேன்!”

“ம்.. எல்லாம் காரியமாத்தேன்.  பொண்ணு வச்சிருக்கரவளுக வீட்டுல போயி, ஒரு எட்டுப் பாத்திட்டு, அப்டியே இவன் வாங்கியாந்ததுல கொஞ்சம் குடுத்துட்டு வரேன்”

“அது அவங்கைல குடுத்தா, குடுக்க மாட்டேனா சொன்னான்!” வேலைக்குச் செல்ல மனமில்லாததால், அவ்வாறு பேசினார் வீரம்.

“அவனுக்கு என்னா தெரியும். நான்னா, எல்லாப் புள்ளைக கூடவும் ரெண்டு வார்த்தை பேசுவேன்.  அதுக என்ன செய்துக, ஏது செய்யுதுகன்னு பாப்பேன்.  நமக்கு ஏத்த புள்ளையா வீட்டுக்கு கொண்டு வரணும்லய்யா!”

மனைவியின் அணுகுமுறையில், மகனுக்காக பெண் தேடும் முயற்சி தெரிய, “காரியக்காரீடீ நீ!” என்றதில், மெச்சுதல் தெரிந்தது.

“அவனுக்கு வேற சோலி கிடக்கு.  அவன் அதைப் பாத்தா, நான் நாலு வீட்டுலயும் போயி, நிலவரம் என்னானு பாத்திட்டு வந்திருவேன்ல!  ஆம்பளப்பய போனா, அடுப்படிவர போயி பாக்க முடியுமா?”

“நானும் உங்கூட வந்தா, உனக்கு ஒத்தாசையா இருக்காது?” வீரம் தனது யோசனையை மனைவியிடம் பகிர

“எல்லாம் கெட்டு வீணாப் போகவா”

“எதுக்கு வீணாப் போகுது?”

“அப்ப ஆட்டை என்ன செய்யச் சொல்ற?”

“இன்னிக்கு ஒரு நாளு அடைச்சுப் போடுவோம்”

“அதான பாத்தேன். கூறுகெட்ட மனுசா… அதுலாம் கதைக்காகாது. மசமசனு உக்காந்த இடத்திலயே இருந்துகிட்டு, பேச்சை வளக்காம, வெரசா கிளம்புய்யா” என்றவர், பாத்திரங்களை எடுத்து வைக்கிறேன் என எழுப்பிய சத்தத்திலேயே வீரபெருமாளுக்கு புரிந்துவிட்டது.  இதற்குமேல் தாமதித்தால் காளி அருள்வாக்கு சொல்லுவதை விட்டுவிட்டு, கையில் கிடைக்கும் ஆயுதத்தால் சம்ஹாரம் செய்துவிடுவாள் என்று.

நீண்ட நாளுக்குப்பின் வெளியே செல்ல ஏதுவாக, விரைவில் தயாரானார் வீரம்.

“தூக்குல கஞ்சி ஊத்தி,  வெங்காயத்தை உரிச்சு அதுக்குள்ளயே போட்டுருக்கேன். வேற வெஞ்சனம் வைக்கலன்னு புலம்பிட்டு வராத! வேணுமினா ரெண்டு கருவாட்டைச் சுட்டு, கையோட எடுத்துட்டுப் போயிரு!”  கட்டளை பறந்தது.

மனைவியின் பேச்சைக் கேட்டவர், காளியம்மாளின் கட்டளையே சாசனம், என வேண்டியதை எடுத்துக் கொண்டு, ஆடுகளைப் பத்தியவாறு கிளம்ப ஆயத்தமானார்.

“ஒரு பொட்டப் புள்ளையப் பெத்தேனா?” எனும் புலம்பலோடு, கிளம்பிக் கொண்டிருந்தார் காளியம்மாள்.

பெண் பிள்ளை இருந்திருந்தால், இன்னும் உதவியாக இருந்திருக்கும் என அவ்வப்போது இதுபோல புலம்புவார். ஆனாலும், மகன்களையும், கணவரையும் விரட்டி வேலை வாங்குவதில் காளியம்மாளுக்கு நிகர் யாரும் இல்லை.

மனைவி வழக்கமாய் இப்படிச் சொல்லும்போது, “நானென்ன மாட்டேனா தள்ளி வச்சேன்.  நீயாப் போயி தடைபண்ணிட்டு, இப்ப புலம்பற” என்பார் வீரம். ஆனால் இன்று, வாயைத் திறக்காமல் அகன்றிருந்தார்.

…………………………………

கல்லூரிப் பேருந்தில்தான் தினசரி சென்று வருகிறாள் திவ்யா.  அவள் வரும் நேரம் வகுப்பில் யாரும் வந்திருக்க மாட்டார்கள்.  அதே நினைப்பில் நுழைந்தவளுக்கு வகுப்பில் யாரோ இருப்பதைக் கண்டு தயக்கம்.

வகுப்பறைகள் ஒரு புறமும், ஆய்வக அறைகள் மறுபுறமும், நடுவில் படிக்கட்டுகள் என அந்தத் தளமிருந்தது.

வகுப்பறை மாறி வந்துவிட்டோமோ என ஒரு கனம் தயங்கி நின்றவளுக்கு, முந்தைய நாளின் நினைவில், புதிய மாணவன் கிருபாதான் உள்ளிருப்பது என்பது நினைவிற்கு வந்திட, தயக்கத்தை ஒதுக்கி, அவளின் இடத்தில் சென்றமர்ந்தாள்.

பார்வையை எங்கும் திருப்பவில்லை. கடிவாளமிட்ட குதிரையைப்போல இருந்தாள்.

திவ்யாவிற்கு அண்ணன் ஒருத்தன். தந்தையைப்போல சாயலில் பிறந்தவளைக் கொண்டாட, வீட்டில் மட்டுமன்றி, உறவிலும் யாருமில்லை.  அதனால் தனித்தே இருக்கப் பழகியிருந்தாள்.

பார்க்க இலட்சணமான பெண்தான்.  நல்ல நிறமும்கூட. தனித்திருந்தாலும், திவ்யாவின் தினசரி பணிகளைத் திட்டமிடுவது அவளது தாய்தான்.  தாயை மீறி அவளால் எதுவும் செய்திட முடியாது. ஆடைகள் தேர்வு உட்பட.

தாய்வழிப் பாட்டி, மாமா, சித்தி, மற்றும் இவர்கள் என அடுத்தடுத்து வீடுகளில் வசித்தனர்.  அவர்கள் வீட்டிலுள்ள சிறார்கள் மட்டும் திவ்யாவோடு அவ்வப்போது வந்து பேசிக் கொள்வர்.

ஈஸ்வரி.  மொத்தமாக பூ விற்பனை செய்கிறார். உதிரிப் பூக்கள், மாலைகள், கதம்பம், கட்டிய பூ என சில்லரையாகவும் விற்பார். அதனால் தலையில் பூ இல்லாமல் மகளை வெளியில் எங்கும் அனுப்பமாட்டார்.

இரண்டாவது தளம் முழுவதும் அவர்களது துறைக்கு உட்பட்டது.  அவர்களது வகுப்பிற்கு அடுத்த அறையில் மூன்றாமாண்டு வகுப்பறை. முந்தைய அறை முதலாமாண்டு மாணவர்களுக்குரியது. இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகே மற்ற மாணாக்கர்கள் வருவர்.  எப்போதும் அப்படித்தான்.

யாரும் வந்திராத வகுப்பறையில், ஆண்கள் அமரும் பகுதியில் அமர்ந்திருந்த கிருபா, திவ்யாவையேதான் பார்த்திருந்தான்.

திவ்யா வந்ததும், அவளின் பேகில் இருந்த ஆய்வக நோட்டை எடுத்து, அன்றைய மாலைநேர ஆய்வக வகுப்பில் செய்து பார்க்க வேண்டிய புரோகிராமை எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிருபாவிற்கு, முந்தைய நாளிலிருந்து தற்போதுவரை திவ்யாவின் செயல்களே மனக்கண்ணில் வந்திட, ஆராய்ச்சியில் இருந்தான்.

கொடுத்த லிஸ்ட்டில் திவ்யாவின் பெயருக்கு நேரில் எதுவும் எழுதப்படாமல் இருக்கவே, உடன் வந்த வினோத்திடம், “இவங்களுக்கு என்ன வேணுனு எழுத மறந்திட்டாங்க” லிஸ்டை அவனிடம் நீட்ட

வாங்கிப் பார்த்தவன், “அது வேஸ்ட்.  எது வாங்கிக் குடுத்தாலும் வாங்கிக்காது.  விடுங்க புரோ.  மத்தவங்களுக்கு வேணுங்கறதை வாங்கிட்டு வாங்க!” இன்னும் இருவருக்கிடையே இடைவெளி இருக்க, மரியாதைப் பன்மை தானாக வந்தது வினோத்தின் பேச்சில்.

“ஏன்…?”

“ஏன்னு தெரியாது.  ஆனா யாருட்டயும் எதுவும் வாங்காது.  மிச்சம்னு விடுங்க”

“…”

வகுப்பில் உள்ள அனைவருக்கும், அவரவர் விரும்பியதை வாங்கியவன், திவ்யாவிற்கு மட்டும் தான் விரும்பியதை வாங்கியிருந்தான்.

வாங்கியதை அனைவருக்கும் கொடுத்தபடி வந்தவன், திவ்யாவின் முறையின்போது தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்ததை எடுத்துக் கொடுக்க, திகைத்தது என்னவோ திவ்யாதான்.

திவ்யா நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை என்பதை கிருபாவும் கண்டு கொண்டான்.  அவளின் செயல்களை நினைவுக்குள் சேகரித்தபடியே நின்றிருந்தான்.

அருகில் இருந்த கயலோ, “அவ எதுவும் சாப்பிடமாட்டா கிருபா”

அதன்பிறகும் அசையாமல் நின்றவனை நோக்கி, “நோ தாங்க்ஸ்” என்றதும், அவளைப் கேள்வியாகப் பார்த்தபடியே, மற்றவர்களுக்கு கொடுக்க நகர்ந்தான்.

குரலே வெளிவரவில்லை. மாணவர்களின் சத்தத்தில் திவ்யாவின் பதில் சரியாகக் கேட்கவில்லைபோலும்.

கல்லூரி கேண்டினில், அனைத்து வகையான சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், பிரெட், பிளம் கேக்குகள், வொண்டர் கேக், முறுக்கு, பஜ்ஜி, போண்டா, வடை வகைகள், சமோசா, மதிய உணவு, பால் வகைகள், டீ, காபி, ஜூஸ் வகைகள், சில சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவை மட்டுமே கிடைக்கும். 

பெண்கள் பெரும்பாலும் சாக்லேட் எழுதியிருந்தனர்.  மிகச் சிலர் காபி, டீ எனக் கேட்டிருக்க, ஒருசிலர் அதனுடன் வடை, போண்டா என எழுதியிருந்தனர். கேட்டிருந்ததில் எதையும் மறுக்காமல் வாங்கித் தந்திருந்தான் கிருபா.

கிருபா வீட்டில் ஒற்றைப் பிள்ளை.  மற்றவர்கள் அனைவரும் சகோதரிகள். அதனால் அதிக செல்லம்.  தந்தை அரசு ஊழியர்.

முந்தைய நாள் வகுப்பிற்கு வந்த சற்று நேரத்திலேயே, வித்தியாசமாக காணப்பட்டவளை கருத்தில் கொணர்ந்திருந்தான்.  கொடுத்ததை வாங்காமல் மறுத்தவளைப் பற்றிய கருத்துருக்களே கண்முன் வந்து நிற்க, யோசனை முழுவதும் அவளே என்றாகியிருந்தது.

வீட்டிற்குச் சென்றவனுக்குமே அவளைப் பற்றிய எண்ணந்தான்.  அந்த வதனத்தில் திமிரில்லை. பயமுமில்லை. நிச்சலனமாக இருந்தாள்.

தொலைத்திருந்த சிரிப்பை மீட்டெடுக்கும் ஆவல் வந்தது.

இதுவரை யாரிடமும் தோன்றிடாத உணர்வு. சிலிர்ப்போடு, இதத்தையும் உணர்ந்து அனுபவித்தான். தான் வாங்கிக் கொடுத்ததை வாங்கியிருந்தால்கூட, இந்தளவு நினைத்திருக்கமாட்டானோ என்னவோ!

அவளின் தற்போதைய அமைதி நிலை கிருபாவிற்கு பிடிக்கவில்லை.  சிரித்தால், அவள் இன்னும் அழகாய் இருப்பாளோ!  பேசினால், இன்னும் நன்றாக இருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. அவள் ஒதுக்கினாலும், ஒதுங்க மறுத்த அவளின் நினைவுகளோடே உறங்கிப் போயிருந்தான்.

விடிந்ததும் எழுந்து, அவளின் நினைப்போடே கிளம்பியவனுக்கு, முந்தைய நாள், அவள் மறுத்ததை, மறக்காமல் கையோடு எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

திவ்யாவை தனியே சந்திக்க எண்ணியெல்லாம் விரைவில் வரவில்லை.  அவன் வெளியூர்.  காலையில் உள்ள புகைவண்டியில்தான் தினசரி கல்லூரிக்கு வந்து செல்ல வேண்டும்.  இனி தினசரி இதுதான் வழக்கம்.

அறையில வந்து அமர்ந்தது முதலே திவ்யாவைப் பற்றிய சிந்தனைதான்.

‘ஏன் வாங்க மாட்டேனுட்டா?” “ஒரு வேளை இது புடிக்கலையோ” “அவளே ஏன் எழுதித் தரலை” “எதுக்கு ஒதுங்கிப் போறா?” என்பதாக நீண்டிருந்தது. 

அதுவரை நினைவோடு இருந்தவள், நிஜத்தில் வாயிலில் வந்து நின்றதும், வசந்தம் வீசியதுபோல உணர்ந்தான்.  கிருபாவிற்கு இவையனைத்தும் ஏனென்று தெரியவில்லை.  ஆனால் திவ்யாவைப் பார்த்ததும் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

வந்தவள், தன்னை பொருட்டாக எண்ணாது, நோட்டோடு அவளின் இருக்கையில் கண்ணும் கருத்துமாக அமர்ந்திருக்க, அருகே எழுந்து வந்தவன், அவளின் முன்னே வந்து பெஞ்சில் கைவைத்து நின்றான்.

நோட்டில் பார்வை பதித்திருந்தவள், எதிரில் நின்றவனை சலனமின்றி நிமிர்ந்து நோக்க, மென்னகையோடு, “இந்தா” முந்தைய தினம் அவளுக்காகவென தான் வாங்கி, அவள் மறுத்திருந்த வொண்டர் கேக்குடன், டெய்ரி மில்க்கையும் சேர்த்து நீட்டினான்.

மறுத்தால், மற்றொன்று இலவசம்! பருவத்தின் புரியாத உணர்வில்,  இதுபோல அபத்தங்கள் சாதாரணம்.

வாங்காமல், “வேணாம்” தலையை மறுத்தசைத்தாள்.

“ஏன்?”

“…”

“கையில வாங்கிக்கலைனாலும் பரவாயில்லை.  இதை நீதான் எடுத்துக்கணும்” விலகலினால் விளைந்த திணிப்பாய் அவளின் முன்னே பெஞ்சில் வைத்திருந்தான்.

“அதுலாம் நான் சாப்பிட மாட்டேன்” மெல்லிய குரலின் இனிமையில் தேனிசை கேட்டதுபோல உணர்ந்தான்.

அவளின் பதிலில் பரவசம் கொண்டு, பக்தனாகிப் போயிருந்தவன், “அப்ப என்ன சாப்பிடுவனு சொல்லு”

“…”

“இல்லனா… கேண்டீன்ல இருக்கற எல்லாத்தையும் வாங்கிட்டு வரவா” என நகர

“இல்ல…” தடுத்தாள்.

திரும்பி வந்தவன், “என்ன இல்ல?”

“ப்ளீஸ்… எதுவும் எனக்கு வேணாம்”

“அதான் ஏன்?”

“வேணுங்கறதை வீட்ல இருந்தே எடுத்துட்டு வந்திருவேன்”

“இன்னைக்கு மட்டும், எனக்காக இத வாங்கிக்கோ” பெஞ்சில் வைத்ததை கையில் எடுத்து நீட்டினான்.

“…”

“இது புடிக்காதா?”

“புடிக்கும்…”

“அப்புறமென்ன?”

“என்னை ஃபோர்ஸ் பண்ணாத!” என்றபடியே கிருபாவின் கையில் இருந்த டெய்ரி மில்கை மட்டும் எடுத்துக்கொள்ள, “இத கீழ போட்றவா?” கையில் இருந்த வொண்டர் கேக்கைக் காட்டி அவளிடம் கேட்டான்.

விடாமல் தொடர்ந்தவனை, எரிச்சலோடு சங்கடமாகப் பார்த்தாள்.

“இப்டிப் பாக்காத… உனக்கு நல்லால்ல!” கிருபாவின் பேச்சில் மிதமிஞ்சிய எரிச்சலோடு, “லிமிட் யுவர் வர்ட்ஸ்”

“ரொம்பப் பேசுவேன். இன்னும் பேச வைக்காம வாங்கிக்கோ” கிருபா சிரித்தபடியே கூறினாலும், அவளுக்கு மிரட்டலாகத் தோன்றியது.

தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், “போதும்னா விடு” சங்கடத்தோடு கூறினாள்.

“உனக்காகதான வாங்குனேன்.  உனக்கு வேணான்னா கீழயே போட்ரலாம்” வீம்பாக அவளது புறமிருந்த சாளரத்தின் அருகே சென்றான்.

“நான் எழுதவே இல்லையே! உன்னை யாரு வாங்கச் சொன்னா?”

“அதான் ஏன்?”

“…”

“வேணானா கீழயே போட்டுறேன்” என்றபடி அதற்கு முயன்றவனிடம்

“ப்ச்சு… அதுக்குன்னு கீழ போடூவியா?”

“ஒன்னு நீ வாங்கிக்கோ, இல்லைனா நான் என்னமோ செய்யறேன்னு விடு” தனது நிலையிலேயே நின்றான்.

அதேநேரம், காரிடரில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்க, தானமர்ந்திருந்த புறத்தே வந்து நின்றவனைப் பார்த்து, “யாரோ வராங்க” பதறிய குரலில் அவள் இயம்ப

“இதை வாங்கிட்டா, நாம்பாட்டுக்கு போயிருவேன்” விடாது உரைத்தவனிடம், அதற்குமேல் பேச்சை வளர்க்க விரும்பாதவள், விருப்பமின்றியே வாங்கிக் கொண்டிருந்தாள் என்பதைவிட பிடுங்கி வைத்திருந்தாள்.

“தாங்க்ஸ்.. இத நீ முன்னாடியே செய்திருக்கலாம்!” சிரித்தபடியே, தனது மிஷன் வெற்றி பெற்ற சந்தோசத்தோடு, அங்கிருந்து நகர்ந்து, கூலாக அவனது இருக்கையில் சென்றமர்ந்தான்.

எல்லாம் புதிது.  கல்லூரி மட்டுமல்லாது, வந்தது முதல் கண்ட அனுபவங்கள், திவ்யா, அவள் சார்ந்த நினைவுகள், இனி வரப்போவதெல்லாமே கிருபாவிற்கு புதிது.

மகிழ்ச்சியோடு புதியதை எதிர்கொண்டான்.

சற்றுநேரம் இதம் தொலைத்து, கோபமும், எரிச்சலுமாய் புத்தகத்தோடும், நோட்டோடும் இயலாமையைக் காட்டியவள், ‘எதுக்கு இப்ப டென்சன்’ என நிதானித்து, கொணர்ந்த நீரை எடுத்துப் பருகினாள்.

வாங்கியது அப்படியே வெளியிலிருக்க, யானை வருமுன்னே வரும் மணியோசையைப்போல, சீனியர்களோடு சீரியசாகக் கதைத்தபடி வந்த கயலின் வருகையை உணர்ந்து, தேவையற்ற பேச்சுகளுக்கு இடம் கொடுக்க விரும்பாமல், பெஞ்சின் மீதிருந்த கிருபா கொடுத்தை, அவளது பேகில் எடுத்து வைத்துவிட்டு, பெருமூச்சோடு அமர்ந்தாள்.

உளவு பார்த்தல் உடனுக்குடன் நடந்தது.  அது சம்பந்தப்பட்டவளுக்கு தெரிந்ததா இல்லையா என்பதைவிட, மற்றவர்களின் பார்வைக்கு பளிச்செனத் தெரிந்தது.

உள்ளே நுழைந்ததுமே, “ஹாய் குட்மார்னிங் திவு!”

“…”

பதிலுக்கு எதுவும் பேசாதிருந்தவளிடம் “ஏன் பேபி, ஒரே டென்சனா இருக்க?” கயல்

“…”

“என்னாச்சுடா…” கேட்டவளை முறைத்துப் பார்த்தாள் திவ்யா.  ஆனால் எதுவும் பேசவில்லை.

“இன்னிக்கு டெஸ்டுக்கு ஒழுங்கா படிக்கலையா”

“…”

“கறை நல்லதா?” குறைந்த குரலில் கேட்டாள்.

“உந்தலை! பேசாம போயி உக்காரு!” திவ்யாவின் பதிலில் ஏதோ சரியில்லை என்றுணர்ந்து, அமைதியாய் சென்றமர்ந்தவள், மறுபுறம் இருந்தவர்களிடம் பேச்சைத் துவங்கியிருந்தாள்.

பத்து செகண்டுக்குமேல பேசலைனா, செத்துருவேன்! கேங்கு நம்ம கயல்.

மனம் நீண்ட நேரம் பதைபதைப்பாக இருந்தது.  நோட்டை எடுத்து அதில் கவனத்தைச் செலுத்த முயன்றும், புத்தி அதில் செல்லவில்லை திவ்யாவிற்கு.

சற்று நேரத்தில் மற்ற மாணவர்கள் வரத் துவங்கிட, வகுப்பு வழக்கம்போல துவங்கியிருந்தது. மனம் தேற, கவனம் படிப்பில் மாறியிருந்தது.

காலை நேர இடைவேளையின் போது தாகமெடுத்திட, தண்ணீர் பாட்டிலைத் திறந்து குடிக்கத் துவங்கினாள் திவ்யா. அதேவேளை, கயல் கூறிய செய்தியைக் கேட்டதும், புரையேறிட, அனைவரது கவனமும் திவ்யாவிடம் வந்திருந்தது.

கயல், திவ்யாவிற்கு புரையேறுமளவிற்கு என்ன கூறினாள்…. அடுத்த அத்தியாயத்தில்…

………………………………………………