கிட்காட்-15

கிட்காட்-15
கிட்காட்-15
அழகான ஓவியமாய் புலர்ந்தது கொண்டிருந்தது அந்த காலைப் பொழுது.
கோவையில் மெலிதாய் அந்தக் காலை நேரத்தில் படர்ந்திருந்த பனி, மலர்களைத்
தீண்டிக்கொண்டு அந்த அதிகாலை வேளையில் விலக, புள்ளினங்கள் தனது
குரலால் இசை எழுப்ப, தன் மேல் அயர்ந்து உறங்கும் மனைவியை கட்டியணைத்த படி உறங்கிக் கொண்டிருந்தான் சித்தார்த்.
மணி ஆறரை ஆக கண்களை லேசாகத் திறந்த சித்தார்த்திற்கு தூக்கம் இன்னமும் தேவைப்பட்டது. தன் நெஞ்சில் புதைந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியைக் கண்டவனுக்கு புன்னகை அரும்பியது. நேற்று அழகாய் அரங்கேறிய ஊடலும் கூடலும் அவன் கண் முன் வர மனைவியை இன்னும்
தன்னுள் புதைத்தவன் மனையாளின் நெற்றியில் இதழைப் பதித்தான்.
அவனது இதழொற்றளை உணர்ந்தவள் தூக்கத்தில், “ப்ச்” என்று சிணுங்கிவிட்டு
தூக்கத்திலேயே சிரிக்க, அவள் ஏதோ கனவில் இருக்கிறாள் என்று அவனுக்குப்
புரிந்தது. எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் மலரை விட மிருதுவாய் இருந்த மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான் அவன். ஆனாலும், அவனின் மனம் சிணுங்கியது அமைதியாய் உறங்கும் அவளைக் கண்டு. அவளை வம்பிழுக்க நினைத்தவன் அவளது மூக்கை சுண்டிவிட அவளது தூக்கம் கலைந்தது. தூக்கம் கலைந்தவள் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்க்க அவளவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தான்.
மூக்கைத் தேய்த்துக் கொண்டவள் மீண்டும் கண்களை மூடித் தூக்கக் கலக்கத்தில் அவன் நெஞ்சிலேயே புதைய… சித்தார்த் மனதிலோ, ‘சரியான
கும்பகர்ணியா இருப்பா போலியே’ என்று எழுந்தது. அவளை நான்கு மணிக்கே
தூங்கவிட்டவன் அவளை எழுப்ப மனமில்லாமல் விட, இருவரும் கோழித்
தூக்கத்தைப் போட ஆரம்பித்தனர்.
“சித்தாரா…” என்று தேவி கதவை ஏழரை மணிபோலத் தட்ட உறக்கத்தில் இருந்தவளோ அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தபடியே கண்களைத் திறந்தாள்.
“அம்மாடி… சித்தாரா” என்று மீண்டும் அவர் கதவைத் தட்ட, “டேய் போய்
கதவைத் திற” என்றவள் அவனிடம் இருந்து நகர்ந்து தலையணையில் முகம்
புதைத்தாள்.
“நீ போடி” என்று சொன்னவனிடம், “எனக்கு தூக்கம் வருது. நீ போ” என்றாள்.
“ஏய்! எங்காவது இப்படி நடக்குமாடி. பொண்ணு தான்டி இதெல்லாம்…” என்று
சித்தார்த் சொல்லிக் கொண்டிருக்க,
“போய்க் கதவைத் திறடா” என்றவள் போர்வையை தலைவரை இழுத்துக்கொண்டு தூங்கினாள். அவளது செயலில் கோபம் கொண்டவன்,
“இம்சை! இம்சை!” என்று தலையணையை எடுத்து போர்வையின் மேலேயே அவளை சாத்தியவனிற்கு பலனே இல்லாமல்… அவள் தன் தூக்கத்தை தொடர்ந்துகொண்டிருக்க எழுந்தவன் கதவை லேசாகத் திறக்க, மருமகன் திறந்ததில் தேவிக்கே, ‘இதென்னா புதுசா’ என்று திக்கென்று ஆகிவிட்டது.
“கோயிலுக்கு போகணும். சீக்கிரம் கிளம்பி வாங்கனு கூப்பிட வந்தேன் மாப்பிள்ளை” என்றவர் மகளை மனதிற்குள் வறுத்துக்கொண்டே கீழே சென்றார்.
கதவைத் தாழிட்டுக்கொண்டு திரும்பிய சித்தார்த் போர்வைக்குள் இருந்த மனைவியை அப்படியே சென்று கட்டிப்பிடிக்க, “டேய் தூங்கணும்டா” என்று
சிணுங்கினாள்.
“எந்திரிடி சீக்கிரம் கிளம்பி கீழ போலாம். கோயிலுக்கு போகணுமாம். உங்க அம்மா கூப்பிட்டாங்க” என்று அவன் அவளை கட்டிப்பிடித்தபடியே எழுப்ப,
“எங்கம்மாக்கு வேலையே இல்ல. நல்லா தூங்கிட்டு வந்துட்டு என்னை டிஸ்டர்ப்
பண்ணுது” என்றவள், “முதல்ல நீ நகரு. நீ குளிச்சிட்டு வந்து பர்ஸட் கீழ போ.
அப்புறம் நான் டென் மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்று அவனின் சில்மிஷங்களை நேற்றே அறிந்திருந்தவள் போர்வைக்குள் இருந்தபடியே கூறினாள்.
“இப்ப நீ எந்திரிக்கல?” என்றவன் அவளை தலையணையால் அடிக்கத் துவங்க, “ஆ… அம்மா…” என்று அலறினாள் சித்தாரா.
“ஷ்… ஷ்… கத்தித் தொலையாதேடி” என்றவன் குளியலறைக்குள் புகுந்தான்.
சித்தார்த் வெளியே வர சித்தாராவைக் காணவில்லை. அவன் அவளது அரவம்
உணர்ந்து திரும்புவதற்குள் மறைந்திருந்தவள் குளியலறைக்குள் புகுந்து தாழிட்டுக்கொள்ள சிரித்தவன் தயாராகி கீழே செல்ல… அவனின் வருகைக்காகவே காத்திருந்த அனைவரும் தங்களது கேலியைத் தொடங்க ஆரம்பித்தனர்.
குளித்து முடித்துக்கொண்டு வெளியே வந்த சித்தாரா ஆளுயரக் கண்ணாடியில்
முகம் பார்க்க அவளது முகமோ புத்தம் புது மலராய் இருந்தது. அதில் பனித்துளியாய் அவள் குளித்துக்கொண்டு வந்ததிற்கு அடையாளமாய்த் தண்ணீர் முத்துக்கள்.
கதவைத் தாழிட்டுக்கொண்டு தனது வைன்(wine) நிற லாங் சல்வார் கமீஸிற்கு
மாறியவள் தனது ஈரம் சொட்டிக்கொண்டிருந்த நீண்ட கருங்கூந்தலை சிறிய க்ளிப் குத்தி மயில்தோகையாய் இடைவரை படரவிட்டு ஒயிலாக கீழிறங்கி வந்தாள்.
ஓவியப்பாவையாய் கீழிறங்கி வந்தவளை அனைவரும் பார்க்க சித்தார்த்தோ பிரமிப்பாய் பருகிக் கொண்டிருந்தான் அவளை தன் விழிகளால். கணவனின் பார்வையில் உள்ளுக்குள் கூசிச் சிலிர்த்தவள் மாமியாரிடம் சென்று நின்றுகொண்டாள். தாத்தாவிற்கோ பேரனின் முகத்தில் இருந்த சந்தோஷத்தில் நிம்மதி என்றால் சித்தாராவின் முகத்தில் இருந்த பூரிப்பில் பெருத்தநிம்மதி.
அன்று கோயிலிற்கு சென்றுவந்து அந்த வார இறுதியில் வைத்த விருந்தையும்
முடித்துக்கொண்டு திங்கட்கிழமை காலை தாத்தா பாட்டியுடன் ஊருக்குக் கிளம்பினர் சித்தார்த்தும் சித்தாராவும். கூடவே ரமணாவும் வர்ஷினியும். ஊட்டி வந்த பிறகு தாத்தா புதிதாக திருமணமானவர்களுக்கு தனி வீடு வாங்க முயற்சிக்க சித்தார்த், சித்தாரா இருவருமே அதை மறுத்துவிட்டனர்.
ரமணாவின் வீட்டில் காதலை உடைக்க முதலில் அவர்கள் அதிர்ந்தாலும்
மகனிற்காக ஏற்றுக்கொண்டனர். வர்ஷினியை முதலில் அங்கு தங்க வைக்க எண்ண, திருமணம் முடியாமல் எப்படி மருமகளை வீட்டில் கூட்டி வந்து வைப்பது என்று ரமணாவின் தாயார் நினைத்தார். அதனால், ஊட்டி வந்த முதல் வேளையாக வர்ஷினி-ரமணாவின் திருமணம் ஒருமாதத்தில் முடிவு செய்யபட்டது. வர்ஷினியின் தந்தை ஜாதி, கௌரவம், அந்தஸ்து பார்த்துதான்
திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ரமணாவும் ஒன்றும் குறைவானவன்
இல்லை. எம்எல்ஏ ஆன வர்ஷினியின் தந்தை மக்கள் வயிற்றில் அடித்து சேர்த்த
சொத்தில் அவர்களது சொத்து 20 சதவீதம் குறைவே. அவ்வளவுதான்.
மகளிற்கு திருமணம் முடிவானது கேள்விப்பட்டு அவர் கொதித்தார். ஆனால், இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் அவர் திருடனிற்குத் தேள் கொட்டியது போல எதுவும் செய்யமுடியாமல் போனது. மகளா பதிவியா என்று அவர் பார்க்க அந்த வரட்டு கௌரவம் பிடித்த மனிதருக்கு பதவியே பெரிதாய்த்
தெரிந்தது. மகளை ஏற்றுக்கொண்டாலும் தங்களது சனத்தில் எந்த ஓட்டும் விழாது
என்று அவருக்குத் தெரியும். அதனால் மகளின் மேலே ஒட்டுமொத்த கோபமும்
திரும்பியது. மகளிற்கு அழைத்து, “நீ என் மகளே இல்லை… ப்ளா ப்ளா” என்று
கத்திவிட்டு வைத்துவிட்டார்.
ஸ்பீக்கர் ஃபோனில் இருந்ததை அனைவரும் கேட்டனர், “ஃபீல் பண்ணாத அண்ணி” என்று சித்தாரா வர்ஷினியின் கையை ஆதரவாகப் பிடித்தாள். ஆம்,
அவர்களின் விஷயம் தெரிந்த பிறகு வர்ஷினியை அண்ணி என்றே அழைக்க
ஆரம்பித்திருந்தாள் சித்தாரா.
“அதெல்லாம் இல்ல சித்தாரா. சிரிப்புதான் வருது. இப்பதான் நான் இவரு கண்ணுக்கு மகளா தெரியறேன் போல. பிறந்ததுல இருந்து என்னைக் தூக்கிக் கொஞ்சுன மாதிரி கூட ஞாபகமில்ல. இவர் அரசியல்னால தான் அம்மா என்னை எட்டு வயசுலையே விட்டுட்டு சாமிக்கிட்ட போயிட்டாங்க. என் கண்ணு முன்னாடி அம்மாவை வெட்டுனாங்க. அம்மா என்னைத் தூக்கி வீசிட்டாங்க ஒரு புதர்ல. இல்லினா நானும் இன்னிக்கு இல்ல. அதுக்கு அப்புறமும் அவருக்கு என்னை கவனிக்க நேரமில்லை. பணம் மாசமாசம் என் அக்கவுண்ட்ல போடுவாரு. பட் அது
மட்டுமிருந்து என்ன யூஸ்” என்றவளது கண்கள் கலங்கியது. அங்கிருந்த சித்தார்த், சித்தாரா, ரமணா, சின்மயி, கிஷோர், தாத்தா எல்லோரக்கும் கஷ்டமாக இருந்தது அவளது கண்ணீரைக் கண்டு. சொர்ணாம்பாள் பாட்டி வர்ஷினியை தன் தோளில்
சாய்த்தார்.
“நாங்க எல்லோரும் இருக்கோம். சரியாக் கண்ணு. நீ கவலையே படாதே. உன்
அம்மா ஆசிர்வாதம் உனக்கு எப்போதுமே இருக்கும்” என்று அவளை அரவணைக்க, எல்லோரும் அவர்களது பங்கிற்கு தங்களது ஆறுதலைச் சொல்லி
வைத்தனர். ஆனால், சித்தார்த்தோ மனதில் சிலதை யோசிக்க ஆரம்பித்தான்.
ரமணாவும் வர்ஷினியை தனிமையில் எதற்கும் கலங்கவேண்டாம் என்று
சமாதானம் செய்திருந்தான்.
அடுத்து வந்த இருவாரத்தில் சித்தார்த்தின் டி தூள் மார்க்கெட்டில் ஹிட் அடித்துவிட்டது. “மச்சா…” என்று ஓடிவந்த ரமணா பேக்டரியில் விதரிங் ப்ராஸிங்
ஏரியாவில் நின்றிருந்த நண்பனின் முன் நின்றான்.
“என்ன ஆச்சுடா” என்று சித்தார்த் கேட்க,
“நம்ம ப்ராடக்ட் செம் ஹிட் டா… இன்னும் நிறைய ஆர்டர் ப்ளேஸ் ஆகிடுக்கு.
கோவவுல இருந்து கூட வந்திருக்கு” என்று ரமணா குஷியுடன் சொல்ல, “செம
மச்சான்” என்று இரண்டு இளவட்டங்களும் குதித்தனர்.
மாலை இருவரும் வீடு திரும்ப சித்தாரா தனது லேப்டாப்பில் அடுத்த டிசைன்ஸை வடிவமைத்துக் கொண்டிருந்தாள். வர்ஷினியும் டிசைனிங் துறையே என்பதால்
சித்தாராவுடன் சில ஐடியாக்களை பகிர்ந்து கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த சித்தார்த் மனைவியை வேண்டுமென்றே தொந்திரவு செய்தபடி இடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.
“ப்ச்” என்றவள், “வேலையா இருக்கேன்லடா” என்று கோபம் கொண்டு அவனை
முறைக்க, அவனும் அவளைப் போலவே முறைக்க முயற்சிக்க அவளுக்கு சிரிப்பு
வந்துவிட்டது. “என்னடா இரண்டு பேர் மூஞ்சிலையும் பல்ப் எரியுது” என்று
வர்ஷினி வினவ,
“ஹாப்பி நியூஸ் வர்ஷி” என்றான் ரமணா.
சித்தாரா சித்தார்த்தைப் பார்க்க அவனோ, ‘ஆமாம்’ என்பது போல தலையை
ஆட்டினான். வெளியில் தெரிந்தவர்கள் யாரையோ பார்க்கச் சென்றிருந்த
தாத்தாவும் பாட்டியும் வர இருவரும் விஷயத்தை உடைத்தனர்.
இருவரின் வாயில் சர்க்கரையைப் போட்ட பாட்டி நெட்டி முறிக்க அத்தனை
நெட்டைகள். அதுபோதாது என்று அவர் சித்தார்த்தையும் ரமணாவையும் நிற்க
வைத்து சுற்ற, “பாட்டி நானும் அண்ணியும் வந்த ராசிதான் எல்லாம்” என்று சித்தாரா மிடுக்காய் சொல்ல, “ஆமாம் பாட்டி. இதுக இரண்டும் வந்தனால தான் திருஷ்டி பாதி இல்லை. இதுகளே திருஷ்டி பொம்மைக தானே” என்று சித்தார்த் பேச இருபெண்களிடமும் உட்கார்ந்தபின் தலையில் நன்றாக வாங்கிக்கொண்டான்.
“தாத்தா நைட் சின்ன சில்லிங் கேக்கறான் ரமணா” என்று சித்தார்த் தாத்தாவிடம்
பேச ஆரம்பிக்க, வர்ஷினி ரமணாவை முறைத்தாள். அவனது சில்லிங்கை பற்றி
அவளிற்குத் தெரியாதா என்ன.
“சில்லிங்கா? அப்படின்னா?” என்று தாத்தா கேட்க, “தாத்தா பார்ட்டி மாதிரி”
என்று சித்தார்த் தயங்கியபடியே சொன்னான். என்னதான் தாத்தாவுடன்
நெருக்கம் என்றாலும் அவனிற்கு அவரது வயதைக் கருதி இதைக் கேட்கத்
தயக்கமாக இருந்தது.
“முடியாதுப்பா” என்றார் முடிவாக. இரண்டு நொடிக்குப் பின்னர், “என்னையும் சேத்திக்கங்க. அப்பதான் அனுமதிப்பேன்” என்று அவர் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல,
“அடங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி” என்றான் ரமணா. அன்று சனிக்கிழமை என்பது அவர்களுக்கு இன்னமும் வசதியாகிப் போனது. கிஷோரையும், சின்மயையும் சித்தார்த் அன்று வீட்டிற்கு வரவழைத்தவன்,
அவர்கள் வந்தபின் பார்ட்டி என்று சொல்ல சின்மயி கிஷோரை முறைத்தாள்.
“ப்ளீஸ்” என்று பார்வையாலேயே கெஞ்சியவனை, “சரி” என்று விட்டுவிட்டாள்.
“இந்தக் கிழவனுக்கு இளசுகளோட சேந்துட்டு அழிச்சாட்டியம் பண்றதே வேலையா போச்சு” என்று அவர்கள் வீட்டின் பின்னிருந்த இடத்தில் உட்கார்ந்து
அடித்த லூட்டியில் பொரிந்து கொண்டிருந்தார் சொர்ணாம்பாள்.
“பாட்டி. ப்ரீயா விடுங்க. எப்பவாவது தானே” என்று சினம்யி சமாதானம் செய்ய, சித்தாராவும் வர்ஷினியும் சித்தார்த் கேட்ட ஆம்லெட்டை செய்து கொண்டிருந்தனர்.
அவன் கேட்ட நான்கு ஆம்லெட்டையும் செய்து முடித்து அதை ஒரு ட்ரேயில்
எடுத்துக்கொண்டு சென்றவள் கொஞ்சம் முன்னேயே நின்று சித்தார்த்தை
அழைக்க அவனோ அவளிடம் வந்து ஆம்லெட்டை வாங்க, “எல்லாம் முடிச்சிட்டு
பாட்டிலை இந்தக் கவருக்குள்ள போட்டு, எங்காச்சு டிஸ்போஸ் பண்ணிடுங்க” என்றவள் ஒரு கவரைத் தந்துவிட்டுத் திரும்ப, “ஏன் ஒருமாதிரி இருக்க” என்று
சித்தார்த் வினவ, “ஒண்ணுமில்ல” என்று உள்ளே நடந்தாள்.
‘என்ன ஆச்சு இவளுக்கு’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வந்தவன் ஆண்களின் பேச்சிற்குள் இழுக்கப்பட்டு அவர்களுடன் இணைந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் அவனிற்கு ஒரு கால் வர யோசனையாய் அதை ஏற்று காதில்
வைத்து, “ஹலோ” என்றான். எங்கோ ஒரு நாய் ஊளையிடுவது கேட்க அவனிற்கு மனதிற்குள் ஏதோ அதிர்ந்த உணர்வு.
“இஸ் திஸ் இஸ் மிஸ்டர் சித்தார்த்?” என்று எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்
கேட்க,
“யெஸ். ஹூஸ் திஸ்?” என்று அவன் வினவ,
“நான் பவித்ரா பேசறேன். மஹிமாவோட மேனேஜர்” என்று அந்தப் பெண் பேச,
“எந்த மஹிமா” என்றான் அவனோ யோசித்தபடி.
“உங்க டீ அட்வர்டைஸ்மென்டுக்கு நீங்க புக் பண்ணிங்களே ஸார்” என்று அப்பெண் சொல்ல, சித்தார்த்தோ எழுந்து நகர்ந்து வந்தான் பேசுவதற்கும் ஏதுவாக.
“ஓ. எஸ் எஸ். சொல்லுங்க” என்றான். இந்த நேரத்திலா கூப்பிடுவார்கள் என்று
சற்று எரிச்சல் வந்தது சித்தார்த்திற்கு.
“ஸார். நாங்க வந்தா மேடம் த்ரீ ஸ்டார் ஹோட்டல்ல தான் ஸ்டே பண்ணுவாங்க”
என்று அவள் ஆரம்பிக்க,
“ஸீ மிஸ் பவித்ரா. திஸ் இஸ் ஆட் ஷூட். உங்களுக்கு அந்த செலவெல்லாம் பண்ண முடியாது. புக் பண்ணும் போது நீங்க இதை எங்ககிட்ட சொல்லலை. பட்
உங்களுக்கு எங்க காட்டேஜ்ல ஸ்டே பண்றக்கு ஏற்பாடு பண்றோம்” என்று
சித்தார்த் சொல்ல எதிர்முனையில் அமைதியே நிலவியது. ஃபோனைப் பார்க்க அது கட் ஆகியிருந்தது.
அடுத்த நொடியே மறுபடியும் அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவனின் காதில்,
“ஹலோ” என்று ஸ்டைலாக ஒலித்தது பெண்ணின் குரல்.
குரலில் வேறுபாட்டை உணர்ந்தவன் “யாரு?” என்று வினவ,
“மஹிமா” என்றாள்.
“சொல்லுங்க” சித்தார்த்.
“உங்க ஷூட்டிற்கு வந்தா எனக்கு சேஃப் இருக்கணும். ஸோ வை ஐம் ஆஸ்கிங் த்ரீ
ஸ்டார் ஹோட்டல்” என்று அவள் பேச,
“எங்க காட்டேஜ் உங்களுக்கு அதைவிட பாதுகாப்பு தான். பட் உங்களுக்கு ஸ்டார்
ஹோட்டல் தான் வேணும் அப்படின்னா… உங்க செலவுல பண்ணிக்கங்க” என்றான் தெளிவாக.
“நீங்க நாங்க வந்தா இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்” என்று மஹிமா
அழுத்தமாகச் சொல்ல,
“முடியாது. இதை நீங்க அக்ரிமெண்ட்ல சொல்லவே இல்லை மிஸ்.மஹிமா. அப்படி உங்கனால முடியாதுன்னா நீங்க கேன்சல் பண்ணிக்கங்க. ஐ டோன்ட் பாதர் ஃபார் தட்” என்றவன் அவள் கேட்டதிற்கு துளியும் இறங்கி வரவில்லை. ஃபோன் கட் ஆனது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைப்பு வர சித்தார்த் எடுத்தான். “ஸார் எங்களுக்கு ஓகே” என்று பவித்ரா சொல்ல, அவனோ, “ஓகே” என்று வைத்துவிட்டான்.
அவன் திரும்பி வர தாத்தா கதை சொல்ல ஆரம்பித்திருந்தார். “இந்தக் கிழவி
இருக்காலே. அந்தக் காலத்துல எவ்வளவு அழகு தெரியுமாடா” என்று தாத்தா
உள்ளே சென்ற இரண்டு க்ளாஸிற்கே ஆரம்பிக்க அனைவரும் அவரைக்
கண்டனர்.
“ரொம்ப அழகா தாத்தா” ரமணா கேட்க,
“அப்படி ஒரு அழகுடா. அவ வீட்டை எதிர்த்து என்னை நம்பி வந்தா. முதல்ல
காசில்லாம கஷ்டப்பட்ட சமயத்துல மூஞ்சிய சுளிச்சதே இல்ல தெரியுமா” என்றவர் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து, “சொன்னா நம்ம மாட்டிங்க.
கல்யாணம் ஆன புதுசுல இரண்டே புடவையை மூணு மாசம் மாத்தி மாத்தி
கட்டுனா. அந்த மூணு மாசத்துல என்கிட்ட அதுக்காக சண்டையோ இல்ல
வருத்தமோ எதுமே அவ காமிச்சது இல்ல. என்னோட வெற்றிக்கு பின்னாடி
யாருன்னு பாத்தா என் சொர்ணம்தான் இருக்கா. உள்ளுக்குள்ள இருக்கிறத
அவ்வளவு சீக்கிரம் வெளிய காட்டவே மாட்டா. இப்பக்கூட உள்ள திட்டிக்கிட்டு
இருப்பா கிழவன்னு. ஆனா, என்னை ஒருநாள் பிரிஞ்சு இருக்கச் சொல்லு
பாப்போம். அழுது ஒப்பாரி வச்சிடுவா” இறுமாப்போடு அவர் பேசிக்கொண்டே
போக அங்கிருந்த இளவட்டங்களுக்கு பொறாமையாக இருந்தது அவர்களது
காதலைக் கண்டு. அனைவருக்கும் தங்களது துணையின் ஞாபகம் வந்தது
தற்போது.
பதினொரு மணிபோல் கூட்டத்தைக் கலைத்தவர்கள் உள்ளே வர, தினமும் இரவு பாட்டியோடு உறங்கும் வர்ஷினி வாட்டர் பாட்டிலோடு வர, “வர்ஷி” என்று
நல்லபையனாக ரமணா சிரிக்க,
“தள்ளு” என்று அவன் குடித்ததன் காரணமாக அவள் கோபமாகப் பேசிவிட்டுச் செல்ல, “அய்ய்யோ… வர்ஷு…” என்று அவள் பின்னால் செல்லப் பார்த்தவனின் காலரைப் பிடித்த தாத்தா,
“நீ மொதல்ல நில்லு. இந்த நேரத்துல பொம்பளை பிள்ளை பின்னாடி என்ன
வேலை” என்றவர் அவனை… அவரும் அவனும் தங்கிக்கொண்டிருந்த அறைக்குள் அனுப்பினார்.
கிஷோர் அங்கிருந்த இன்னொரு அறைக்குள் செல்ல, சித்தார்த்தும் அவனது அறைக்குச் சென்றான். சித்தாராவுடன பேசிக்கொண்டிருந்த சின்மயி அவன் வந்தவுடன், “கிஷோர் வந்தாச்சா” என்று கேட்டுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.
சகோதரி சென்றபின் சித்தார்த்தை முறைத்த சித்தாரா சிலுப்பிக்கொண்டு
திரும்பிப் படுத்துவிட்டாள்.
“என்னடி ஓவரா திருப்பிக்கறா” என்று அவளை பின்பக்கமாக வந்து அவன் அணைக்க, “குடிச்சிட்டு வந்து என்னைத் தொடாதடா” என்று திமிறினாள்.
“என்ன?” சித்தார்த் விழிக்க,
“பின்னே நீ என்ன தீர்த்தமா குடிச்சிட்டு வந்திருக்க” என்றவள், “இதுல சைட் டிஷ்
வேற என்னையே செய்ய சொல்ற” என்று பட்டாசாகப் பொரிந்தாள்.
“லூசு. நான் குடிக்கலடி. எனக்கு அந்தப் பழக்கமே இல்ல” என்றவன், “ஒஹோ
இதுக்குத் தான் மேடம் ஒருமாதிரி ஆனிங்களோ” என்றான்.
அவளைத் திருப்பி தன் முகத்திற்கு அருகில் இழுத்தவன், “மெயின் டிஷ் நீ
இருக்கும்போது எனக்கு எதுக்குடி மத்தது எல்லாம்” என்று அவன் தனது மாயப்
புன்னகையை உதிர்த்தபடிக் கேட்க அதில் மயங்கியவளோ,
“அப்ப நீ குடிக்கலையாடா” என்று வினவினாள் அவனின் மூக்கோடு தன் மூக்கை உரசியபடி.
அவளின் இதழில் தன் இதழைப் பதித்து அவளைத் திண்டாடச் செய்துவிட்டு
விலகியவன், “ஸ்மெல் வருதா?” என்று வினவினான்.
‘இல்லை’ என்பது போல தலையை ஆட்டியவள், “அதை இப்படித் தான் கேப்பியாடா” என்று வினவ, அவனோ ஒண்ணும் தெரியாதவன் போலத் தலையை ஆட்டினான். “சரியான திருட்டுப்பயடா நீ” என்று அவள் அவனை தள்ளிவிட, விடுவானா அவன். எப்போதும் போல மனதில் உவகை பொங்க மனைவியிடம் நெருங்க அவளும் காதலோடு அவனை ஏற்றாள். என்றுமில்லாத காதலோடு சித்தார்த் அவளை இன்று கையாள சித்தாரா கணவனின் காதலில் தொலைந்து
கொண்டிருந்தாள்.
ஆனால், இவர்களது மகிழ்ச்சியைத் தூக்கி சாப்பிடுவதற்காகவே ஒருத்தி இந்த ஊட்டிக்கு கால் எடுத்து வைக்கப் போவதை இருவருமே அறியவில்லை. தனது ஆசை மனைவியை ஒருத்தி நோகடிக்கப் போகிறாள் என்பதையும் சித்தார்த் அப்போது அறியவில்லை.
தானும் அவளைக் காயப்படுத்தப் போகிறோம் என்பதை அவன் முன்னே
அறிந்திருந்தால்?