செங்களம் 1 Precap

செங்களம் 1 Precap

செங்களம்

அத்தியாயம் ஒன்று

“தமிழ்நாடு என்பது நமக்கு சாதாரணமாக கிடைத்த பெயரல்ல. பலரது உயிர்தியாகத்தால் கிடைத்த பெயர். ஆங்கிலேயே ஆட்சியில் நாம் மெட்ராஸ் ஸ்டேட்டை சேர்ந்தவர்கள். சுதந்திரத்துக்கு பின் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின்னும் நாம் மெட்ராஸ் ஸ்டேட் தான். இந்த மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்ற பல போராட்டங்கள் நடைபெற்றது. அதில் திருநெல்வேலியை சேர்ந்த சங்கரலிங்கனாரின் போராட்டம் மிக முக்கியமானது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றக் கோரி 1956 இல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதற்கு பிறகும் பல போராட்டங்களுக்கு பிறகு, 1967 இல் திரு. அண்ணாதுரை அவர்கள் பொறுப்பேற்ற பின், நமது மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்ட முன்வடிவு கொண்டு வந்து, அதை சட்டசபையில் நிறைவேற்றினார்.

திரு. அண்ணாதுரை கூறியதைப் போல, தமிழ் நாடு என்ற பெயர் தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி. தமிழகம் என்ற பெயர் வரலாற்றில் இல்லையா என்று சிலர் கேட்கிறார்கள். கண்டிப்பாக இருக்கிறது. அதே போல, பாண்டிய நாட்டின் வடபகுதியை கொடுந்தமிழ் நாடு என்றும், தென்பகுதியை செந்தமிழ்நாடு என்றும் கூறிய குறிப்பும் இருக்கிறது. பாரதி கூட, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாயுது காதினிலே’ என்று தான் கூறினார்.

தமிழகமும் நாம் தான், தமிழ்நாடும் நாம் தான்.

ஆனால் தமிழகம் இஸ் அ வோர்ட், தமிழ்நாடு இஸ் அ இமோஷன். உணர்வு. தமிழ் உணர்வு என்பதை யாராலும் மழுங்கடிக்க முடியாது. தோல்வியுற்றவனின் மொழி தான் யாரும் சீந்துவாரில்லாமல் போகும். நாம் தோல்வியடைந்தவர்களா?”

அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்களை பார்த்துக் கேட்டாள் நிவேதா.

அவளது பேச்சினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள், ‘இல்லை’ என்று உரக்கச்சொல்ல, அவளது முகத்தில் பெருமிதமும், இறுமார்ப்பும்!

“ஒரு நிலத்தின் உணர்வை கொல்ல, முதலில் அதன் கூறுகளை கொல்வார்கள். முதல் கூறு நம்முடைய கலாசாரம், இரண்டாவது உடை, மூன்றாவது அடையாளம், இறுதியாக மொழி! நம் உணர்வு இறந்து போனால், நாமும் உயிரற்றவர்களாகிப் போவோம். தமிழர் என்ற உணர்வும், தமிழ்நாடு என்ற அடையாளமும், திராவிடம் என்ற சுவடும் நமக்கே நமக்கானவை. அதை யாராலும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. பிரிக்க நினைப்பவர்களை வேரறுப்போம் மக்களே…”

பேசி முடித்து இருக்கையில் அமர்ந்த நிவேதாவுக்கு வயது, இருபத்தியாறு. இந்த வயதில் எம்எல்ஏ மற்றும் மாநில அமைச்சர். காரணம், அவளது தந்தை வளையாபதி. தலைமுறைகளாக அரசியலிலிருக்கும் குடும்பம். வளையாபதியின் தந்தையும் அரசியலில் கரை கண்டவர் தான். ஆனால் அவரது மகன் சித்தார்த்துக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால் மகளான நிவேதாவுக்கு மிகவும் உண்டு.

அதனாலேயே அவளை தன்னோடு அரசியலில் இழுத்துக் கொண்டார். அரசியலில் ஜீவிப்பது என்பது சாதாரணமல்ல. உழைக்க தயாராக இருக்க வேண்டும். சதி வலைகளை அறுக்க தெரிந்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் பலி கொடுத்து, பலியும் கேட்க தெரிந்திருக்க வேண்டும். கூடவே நிறைய புத்திசாலித்தனமும், நேரத்திற்கு அந்த புத்திசாலித்தனத்தை உபயோகிக்கவும் தெரிய வேண்டும். இவை அனைத்தும் வளையாபதியிடம் உண்டு.

அவர் எம்பி மற்றும் ஒன்றிய அமைச்சரவையின் அங்கம்!

நல்லவருக்கு நல்லவர், சற்று மாறுபாடு காட்டினாலும், முழுதாக தீர்த்துக் கட்டிவிடுவார். வார்த்தைகள் மீறினால், முதலில் கை தான் பேசும், அதன் பின் தான் வாய்ப்பேச்சு.

நிவேதாவும் ஒன்றும் சாதாரணமல்ல. இவற்றில் பாதிக்கு சொந்தக்காரி. எம்ஏ பொலிடிகல் சைன்ஸ். அழகு, அறிவு, தைரியம் மற்றும் திறமை என்று அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்து பார்த்ததுண்டா? அவள் தான் இவள்! அனைத்தும் இருப்பதாலோ என்னவோ, திமிரும் கர்வமும் அகங்காரமும் கூட அதிகம் தான். ஆனால் என்ன, உண்மையும் நேர்மையும் கூட இருப்பதால், ஒரு வகையில் இவளொரு வித்தியாசமான காக்டெயில்.

நிமிர்வாக மேடையில் அமர்ந்திருந்த நிவேதாவை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றிவேல்! நிவேதாவை என்றால், நிவேதா மட்டுமல்ல, அவளது சுற்றுப்புறத்தையும். அவள் யாரைப் பார்க்கிறாள், யாரெல்லாம் அவளைப் பார்க்கிறார்கள், யாரெல்லாம் அவளிடம் பேசுகிறார்கள் என்பது முதற்கொண்டு அனைத்தையும் அவனது எக்ஸ்ரே பார்வை விட்டு வைக்காது!

வெற்றிவேல், வளையாபதியின் பிஏ. அவரது தூரத்து உறவு. படித்தது எம்பிஏ. நிவேதா இது போன்ற கூட்டங்களுக்கு போக வேண்டுமென்றால், வளையாபதி வெற்றிவேலை அனுப்பி விடுவார், அவளுக்கு துணையாக!

அப்படியொரு நம்பிக்கை வெற்றியின் மீது!

வெற்றி அருகில் இருந்தால், பத்து பேர் கூட இருப்பதற்கு சமம். யாரையும் அவளருகில் நெருங்க விட மாட்டான். கண்கொத்திப் பாம்பாக இருப்பான். தேவைக்கதிகமாக பேச மாட்டான். பேச முயல்பவர்களையும் விட மாட்டான். தவறான பார்வை பார்ப்பவர்களை விட்டு வைக்க மாட்டான். தவறுதலாக மேலே கை பட்டால் கூட, அவர்களின் கதை அங்கேயே முடிந்தது. அதனாலேயே அவன் அருகில் இருந்தால், நிவேதாவிடம் பேசக் கூட தயங்கி நிற்பவர்கள் பலருண்டு. ஆனால் இவை எதையும் அவள் பெரிதாக அறிய மாட்டாள், அலட்டிக் கொள்ளவும் மாட்டாள். அவன் பாதுகாக்கிறான் என்று கூட பார்க்க மாட்டாள். அலட்சியம் என்றில்லை. பெரிதாக ஆர்வமில்லை. அவ்வளவுதான்!

வளையாபதியின் ரகசியங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அறிந்தவன். அவரது அரசியல் காய்களை நகர்த்தும் அஷ்டாவதானி! வளையாபதி எள் என்பதற்கு முன் அவன் எண்ணெயாகி விடுபவன். அவர் நினைப்பதை நடத்திக் காட்டுபவன்.

ஆனால் எதற்கும் முன்னின்றதில்லை. அத்தனையும் பின்னாலிருந்து மட்டுமே!

அவனுக்கென்று தனியாக கருத்துக்கள் கூட கிடையாது. வளையாபதி ஆம் என்றால், இவனுக்கும் ஆம். அவர் இல்லையென்றால், இவனுக்கும் இல்லை. அவரது முகம் காட்டும் கண்ணாடி!

“சூப்பரா பேசினீங்க சின்ன மேடம்…” கூட்டம் முடிந்து, அனைவரிடமும் விடைபெற்று, லேண்ட்ரோவரின் பின்னிருக்கையில் அமர்ந்தவளிடம் சேகரன் கூறினார்.

சேகரன், அவளது பெர்சனல் டிரைவர். அவரைத் தவிர வேறு யாரும் அவளுக்கு காரோட்ட அவள் அனுமதித்ததில்லை. வளையாபதியின் தீவிர விசுவாசி, இப்போது நிவேதாவுக்கும்!

முன்னிருக்கையில் எப்போதும் போல, உணர்வுகளை காட்டாத முகத்துடன் வெற்றிவேல்! அவர்களுக்கு பின் இன்னொரு இன்னோவா. மாநில அமைச்சர் என்பதால் இசட் ப்ளஸ் பாதுகாப்பு. அரசாங்கம் எத்தனை பாதுகாப்புக் கொடுத்தாலும், வளையாபதிக்கு தான் முன்னின்று ஆட்களை பாதுகாப்புக்கு அனுப்பினால் தான் திருப்தி.

வளையாபதியின் மனைவி ஈஸ்வரி பெரிய மேடம் என்றால், நிவேதா அவருக்கு சின்ன மேடம். வயது வித்தியாசம் எல்லாம் கணக்கில்லை. நிவேதா பிறந்தது முதல் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறாள், ஆனாலும் அவர் எந்த காலத்திலும் அந்த மரியாதை பன்மையை கைவிட்டதில்லை.

சின்னதாக புன்னகை சிந்தினாள்.

“மக்கள் என்ன பேசிக்கிட்டாங்க சேகரண்ணா?” அவளுக்கு அது தான் முக்கியம்.

மக்களது கருத்துக்கள். அது நேரடியாக பேசினால் அறிந்து கொள்ள முடியாது. இதுவே மக்களோடு மக்களாக கலந்திருக்கும் போது தான், ‘என்னடா இவன் ரம்பம் போடறான்?’ என்றும், ‘சரியான அறுவை..’ போன்ற கருத்துக்கள் வெளிப்படும். அது போன்ற கருத்துக்களை கேட்பதுதான் சேகரனின் வேலை. உள்ளது உள்ளபடி கூறிவிடுவார். அதில் தயவு தாட்சண்யம் கிடையாது.

“வளையாபதி பொண்ணுன்னா சும்மாவான்னு பேசிக்கிட்டாங்கம்மா. அப்படியே உங்க அப்பாவை பார்க்கற மாதிரி இருக்காம்…” என்று சேகரன் கூற, அவரை கூர்மையாக பார்த்தாள்.

அவளது பார்வை அவரை குத்தியிருக்கும் போல, காரை ஓட்டிக் கொண்டிருந்தவர் அவளைத் திரும்பிப் பார்த்து,

“நிஜமா தான் ம்மா…”

“வேற…” ஒரே வார்த்தை தான். சேகரனுக்கு அருகில் அமர்ந்திருந்த வெற்றி உள்ளுக்குள் ‘அட’ என்றான். ஆனால் வெளியே கூறியதில்லை. சொல்லப்போனால் எந்தவிதமான உணர்வுகளையும் யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் அவன் கற்ற பால பாடம்.

“மேடைல கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருந்ததுக்குத் தான் ரெண்டு மூணு பேர் ஒரு மாதிரியா பேசினாங்கம்மா…” சற்று தயங்கியபடியே கூறினார்.

“ஒரு மாதிரின்னா?”

“ரொம்ப திமிர் ஜாஸ்த்திங்கற மாதிரி…” என்று இழுத்தார்.

“ம்ம்ம்… எனக்கு திமிர் இல்லைன்னு நான் சொன்னேனா?” என்று அவரிடமே கேட்டவளை ரியர்வியூ கண்ணாடி வழியாக பார்த்தான் வெற்றி. இதற்கென்ன பதில் கூறுவார் சேகரன்?

மெலிதான புன்னகை மலரப் பார்த்தது.

மெளனமாக காரை செலுத்தினார்.

“வேற?”

“வேற… எப்பவும் போல தான்மா…” தப்பித்துக் கொள்ள பார்த்தார். ஆனால் அவள் விட்டால் தானே!

“எப்பவும் போலன்னா?” என்று கேட்க,

“ரெகுலர் கமெண்ட்ஸ் தான் பாப்பா…” பொதுவாக கெஞ்சுவதற்கு சேகரன் நிவேதாவை பாப்பாவாக்கி விடுவார்.

“அதான் அந்த ரெகுலர் கமெண்ட்ஸ் என்ன?”

“அய்யா இருந்ததால நீங்க ஈசியா வந்துட்டீங்க. வாரிசு அரசியல்… இதெல்லாம்…”

“ம்ம்ம் வேற…” விடுவாளா அவள்!

“ஆதில வந்தது பாதில நிக்குது. நேத்திக்கு வந்தது நெய்சோறு கேக்குதுன்னு சொன்னாங்க ம்மா …” இறுதியாக கூறிவிட்டார். இதற்காகத்தானே இவ்வளவு நேரம் நிவேதா அவரை அரட்டிக் கொண்டிருப்பது.

“யாரு?”

“மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தான் ம்மா…”

“கூட யார் இருந்தா?”

“அவரோட அல்லக் கைங்க தான். கட்சிக்காரங்கன்னு குறிப்பிட்டு யாரும் இல்லம்மா…”

“ஒஹ் அப்படியா?” என்றவள், இடதுபுறம் திரும்பி, “வெற்றி…” என்று அழைத்தாள்.

“நான் பார்த்துக்கறேன்…” அதுவரை மௌனமாகவே வந்த வெற்றிவேல், திருவாய் மலர்ந்தருளினான்.

 

 

error: Content is protected !!