தித்திக்கும் தீச்சுடரே – 2

தித்திக்கும் தீச்சுடரே – 2

தித்திக்கும் தீச்சுடரே – 2

இடம்: தேவசேனா பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்.

     மீரா தனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சூழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ஒரு காலை ஆட்டியபடி, தன் முன் இருந்த பேனாவை சுழற்றினாள். அவள் முன் இருந்த அவளுடன் பணிபுரியம் தோழர்களும் தோழிகளும் சற்று பதட்டமாக அமர்ந்திருந்தனர்.

“மீரா நீ பண்ணது தேவை இல்லாத வேலை” என்றான் அவர்களுள் ஒருவன்.

“வேலை தேவை இல்லாததா இருக்கட்டும். வேலை சரியா? தப்பா?” என்றாள் தன் புருவங்களை உயர்த்தியபடி. “தெரியாது” அவனிடமிருந்து பதில் அழுத்தம் திருத்தமாக வந்தது.

“அது தான். ஆனால், எனக்கு தெரியும். நான் பண்ணது சரி. நூறு சதவிகிதம் சரி.” மீரா கூற, அவள் தோழிக்கு கோபம் தலைக்கு ஏறியது.

அவள் பற்களை நறநறத்தபடி, “எது சரி?” என்று காட்டமாக வினவினாள்.

“படம் கேவலம். மகா கேவலம்” என்றாள் மீரா உறுதியாக.

“உன் கிட்ட யார் கேட்டாங்க? படம் எப்படி இருக்குனு யாராவது கேட்டாங்களா? நம்ம மீடியாக்கும் முகிலனுக்கும் ஏற்கனவே ஆகாது. அவரை பத்தி நல்லதோ கெட்டதோ நாம தவிர்த்திடுறோம். நீ ஏன் அவரை பத்தி விடீயோ போட்ட?” மீராவின் மற்றொரு தோழன் கேட்க,

“நான் என்ன பத்திரிகையிலா போட்டேன்? என் யூடியூப் சேனலில் போட்டேன். போடும் பொழுது, இது என் தனிப்பட்ட கருத்துன்னு தெளிவா கொட்டை எழுத்துல தலைப்பு வேற போட்டிருக்கேன். புரியாம எவனாவது கேள்வி கேட்டா சாக சொல்லுங்க” பலரின் கேள்வியில் கடுப்பான மீரா கோபமாக பதில் கூறினாள்.

அப்பொழுது அவள் குழுவின் தலைவர் அங்கு வந்தார்.

“மீரா, நீங்க போட்ட வீடியோவால் நம்ம சேனல் பெயரும் அடிபடுது. நீங்க அந்த வீடியோவை எடுத்திருங்க” குழுவின் தலைவர் கூற, “முடியாது சார்” என்றாள் மீரா அவர் பேச்சை முடிப்பது போல்.

அவர் மீண்டும் பேச தொடங்க, “சார் உங்களுக்கு எங்க இருந்து பிரஷர் வருமுன்னு எனக்கு தெரியும். நான் பார்த்துக்கிறேன். இதனால், இந்த வேலையே போனாலும் சரி.” மடமடவென்று நிர்வாக தலைவர் அறைக்கு சென்றாள் மீரா.

‘நானெல்லாம் எதுக்கு இந்த குழுவின் தலைவர்?’ என்ற ரீதியில் தோள்களை குலுக்கிவிட்டு அவர் தன் இடத்திற்கு சென்றார்.

“என்ன நடக்கும்?” என்று மீராவின் குழுவில் ஒருத்தி கேட்க, “ஒன்னும் நடக்காது, மீரா அவ செய்தது தான் சரின்னு முடிச்சிட்டு வந்திருவா. அவங்களும் வேற வழி இல்லாம ஒத்துப்பாங்க” என்று குழுவில் ஒருவன் கூற, மீராவின் தோழி, “ஓகே” என்று சற்று நிம்மதி பெருமூச்சு விட,

“ஏன் மீராவை மட்டும் எதுவும் செய்ய மாட்டேங்கிறாங்க?” என்று அவள் மீது பொறாமை கொண்ட குழுவில் ஒருத்தி கேட்க, “இதை நீ கேட்குறது தெரிஞ்சா உன்னை ஏதாவது பண்ணிடுவாங்க. பரவாயில்லையா?” என்று நக்கலாக கேட்டான் மற்றொருவன்.

அவள் மூளையோ, ‘நமக்கு வேலை வேண்டும். அடுத்த வேளை சாப்பாடும் வேண்டும்’ என்று தீவிரமாக கணக்கிட்ட ஆரம்பிக்க, அவள் வாய், “கப்சிப்” என்று மூடி கொண்டது.

*** *** *** *** ***

 இடம்: தேவசேனா நிறுவனத்தலைவரின் அறை

“சார், மே ஐ கம் இன்” மீரா சற்று நட்போடு கேட்க, “எஸ் ப்ளீஸ்” என்றார் அவர் புன்முறுவலோடு.

  “சார்…” அவள் ஆரம்பிக்க, அவர் எதுவும் பேசவில்லை. தலையசைத்துக் கொண்டார். “சார், நான் சுத்தி வளைத்து பேச விரும்பலை. நேரடியாக விஷயத்துக்கு வரேன்.” மீரா கூற மீண்டும் அவரிடம் தலையசைப்பு மட்டுமே.

“சார், அன்னைக்கு காலையில் நாலு மணிக்கு நான் கஷ்டப்பட்டு படம் பார்க்க போனேன். நான் முகிலனின் நடிப்பை குறை சொல்லவே இல்லை.   ஒரு காலத்தில், நான் அவர் படத்தை ரசிச்சி பார்த்திருக்கேன். இப்பவும் அவர் நல்ல தான் நடிக்கிறார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. உடம்பை செம்ம ஃபிட்டா மெயின்டைன் பன்றார். அதையும் நான் ஒதுக்குறேன். இதெல்லாம் ஒரு படத்துக்கு போதுமா?” என்று மீரா கேள்வியாக நிறுத்தினாள்.

“மீரா, இதெல்லாம் நமக்கு தேவையா?” என்று அவர் எதிர்கேள்வி கேட்க, “நிச்சயமா சார்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

“படத்தில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. அப்படியே வானத்தில் பறந்து பறந்து அடிக்கறார். மாஸ்க்காக ஒரு ஸீன் வைக்கலாம். அதை கூட மன்னிச்சிடலாம். எல்லா சீனும் அப்படியே வச்சா, அதுல எதுக்கு சார் முகிலன் நடிக்கணும். பேசாம, சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் இல்லைனா  பேட் மேன் இப்படி யாராவது நடிச்சிருக்கலாமே சார். அவர் ஆரம்ப காலத்து ஃபைட் நல்லாருக்கும் சார்” மீரா படபடக்க, நிறுவனத் தலைவரின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

“சரி, லாஜிக் கூட விடுங்க சார். கேட்டா, ஃபேன்ஸ் கேட்குறாங்கன்னு சொல்லுவாங்க. அது கூட மன்னிக்கலாம் சார். கதையா சார் அது? ஒரு ஹீரோ ஹீரோ மாதிரி நடந்துக்கணும். இல்லை வில்லன் மாதிரி நடிக்க ஆசையா நடிச்சிக்கோ. ஆனால், நான் படத்தில் வில்லன்னு ஒதுக்கணும். ஹீரோ கிட்ட நாலு சாத்து வாங்கணும். ஆன்டி ஹீரோ அப்படின்னா, அவன் செய்றதுக்கு பின்னாடி நியாயமான காரணம் இருக்கணும்.” மீரா மூச்செடுத்து கொண்டாள்.

“முகிலன் இதில் பண்ணி வச்சிருக்கிற வேலையை பார்த்தீங்கன்னா, நீங்க டென்ஷன் ஆகிருவீங்க சார். யாதார்த்தவாதின்னு சொல்லிக்கிட்டு தப்பு பண்றதும், குடியும் சிகரெட்டும் ரொம்ப சாதாரணம் போல் ஊதி தள்ளுறதும்… ரொம்ப மோசம்” என்று முகத்தை சுளித்தாள் மீரா.

“அவரை ஆயிரம் பேர் ஃபாலோ பன்றாங்க. அவர் தனிப்பட்ட வாழ்க்கை பத்தி , ஐ டோன்’ ட் கேர். ஆனால், ஒரு முன்னணி நடிகரா அவருக்குனு ஒரு தார்மீக பொறுப்பு இருக்கு. அதை யாரவது சொல்லத்த தான் செய்யணும். அந்த பூனைக்கு மணி கட்டுறது யாருன்னு யோசிச்சா எப்படி முடியும். அது தான் நான் கட்டிட்டேன்” மீரா அடித்து கூறி மேலும் தொடர்ந்தாள்.

 “நான் மட்டும் சொல்லலை. பல யூடியூபெர்ஸ் சொல்லிருக்காங்க. ஆனால், நான் சொன்னது வைரல் ஆகிருச்சு. ஆகிட்டாங்க. தட்’ஸ் இட். நான் வீடியோ டெலீட் பண்ண முடியாது. அப்படி பண்ணினா, இந்த மீரா பண்ணினது தப்புன்னு ஆகிடும். என்னால், முன்னாடி வைத்த ஒரு அடியை கூட பின்ன வைக்க முடியாது. உங்க சேனலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிட்டேன். அதை தாண்டி, நான் வேலையில் இருந்து ரிசைன் பண்ணணுமுன்னா சொல்லுங்க பண்ணிட்டு போய்கிட்டே இருக்கேன்.” அவள் நிதானமாக கூறினாள்.

“நீங்க முகிலன் கூட கை கோர்த்துக்கோங்க” என்று அவள் அசட்டையாக தோள்களை குலுக்கினாள்.

“முகிலன் கூட கை கோர்க்குறது எங்க நோக்கம் இல்லைன்னு உங்களுக்கு தெரியும் மீரா. ஆனால், முகிலனை பகைத்துக்க வேண்டாமுன்னு நாங்க நினைக்குறோம். முகிலன் அடுத்ததா அரசியல் பக்கம் வரலாமுன்னு ஒரு பேச்சு அடிபடுது. அவருக்கு பல அரசியல் பலன்களோட தொடர்ப்பு இருக்கு. முகிலன் அவரை பகைச்சிக்காத வரைக்கும் கெட்ட மனிதர் கிடையாது.  இல்லை, நல்லவர்ன்னே சொல்லலாம்” அவர் பேச, “என்ன சார் மிரட்டறீங்களா?” மீரா நக்கல் சிரிப்போடு இடைமறித்தாள்.

“உங்களை மிரட்ட முடியுமா மீரா?” அவர் கேட்க, மீரா விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

“இவ்வளவு தான் சார். வீடியோ அப்படியே தான் இருக்கும். நான் இன்னைக்கு வெளிய கிளம்பும் பொழுது திரும்ப உங்களை பார்க்க வரேன். ரிசைன் பண்ணணுமுன்னா சொல்லுங்க, அப்படி பண்ணிட்டு கிளம்பறேன். தேங்க்ஸ் சார்” நன்றியை சொல்லிவிட்டு மடமடவென்று அவள் அறை நோக்கி சென்றாள் மீரா.

நிறுவனத் தலைவர் எரிச்சலோடு அமர்ந்திருக்க, அவர் அலைபேசி ஒலித்தது. ‘ஜெயசாரதி’ என்று பெயர் மின்ன, “சொல்லுங்க சார்” அவர் பவ்வியமாக எழுந்து நின்று பேசினார்.

 

“ராகவன், மீரா கிட்ட பேசினீங்களா?” எதிர்முனை சற்று ஆழமான குரலில் பேசியது.

“சார், உங்க பொண்ணு தான் என் கிட்ட பேசினாங்க. நான் பேசறதை எல்லாம் அவங்க கேட்கவே தயாரா இல்லை.” ராகவன் கூற, “ஓ…” என்றது எதிர்பக்கம்.

“வேலையை விட்டுட்டு போறேன்னு சொல்றாங்க” என்று ராகவன் கூற, “அய்யய்யயோ…” எதிர்முனை சற்று பதட்டமானது.

“வேண்டாம் ராகவன். மீராவுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம். நம்ம கூட தான் மீரா இருக்கணும். அதுவும் ஏற்கனவே எனக்கும் முகிலனுக்கும் இடையில் நிறைய பிரச்சனை ஓடுது. இந்த நேரத்தில் மீரா  வெளிய போக கூடாது” ஜெயசாரதி உறுதியாக கூறினார்.

“அவ போக்கிலே விட்டிருங்க. நம்ம பக்கத்து வழியா இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைன்னு மட்டும் சொல்லிடுங்க. ஆனால், மீரா நம்ம கிட்ட தான் இருக்கணும்” அவர் உறுதியாக கூறிவிட, “ஓகே சார்” என்று ராகவன் பவ்யமாக தலையாட்டி, தன் அலைபேசி பேச்சை முடித்தார்.

அலைபேசியை கீழே வைத்துவிட்டு, “இந்த அரசியல்வாதிகளோடு வேலை பார்க்குறது எவ்வளவு கஷ்டம்?” என்று முணுமுணுத்தார். 

*** *** ***

முகிலன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தன் காரில் வீடு திரும்பினான்.  அவனுக்கு சற்று ஆயாசமாக இருந்தது.

தன் படத்தின் வெளியீடு அன்று, அவன் மட்டுமே பேசுபொருளாக இருக்க வேண்டும். ஆனால், சம்பந்தமில்லாத ஒரு பெண் பேசுபொருள் ஆனது அவனுக்கு அவ்வளவாக, இல்லை இல்லை சுத்தமாக பிடிக்கவில்லை.

‘அவள் யார்?’ என்ற பூதாகரமான கேள்வி அவன் முன் நின்றது. ‘மானேஜர் பல தடவை கூப்பிட்டுட்டாங்க. என்னால் பேச முடியவில்லை. வீட்டுக்கு போயிட்டு, தான் பேசணும். மானேஜர் சொல்ற விஷயத்தில் பல குண்டுகள் கிளம்பலாம். பொறுமையா, எல்லா குண்டுகளையும் நமக்கு சாதகமா திருப்பிக்கணும்.’ சிந்தித்தபடி காரை அவன் வீட்டிற்குள் செலுத்தினான்.

பிரமாண்டமான மிக பிரம்மாண்டமான வீடு. ரசனையோடு அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே செடிகள். பல இடங்களில் விலை உயர்ந்த அலங்கார பொருட்கள். அழகான மின்விளக்குகள். 

வீட்டில், மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.   “அம்மா,  இன்னும் தூங்கலையா?” அவன் வீட்டிற்குள் உள்ளே நுழைந்து தன் தாயை பார்த்தபடி கேள்வி கேட்க, “இல்லை ப்பா. நீ ரிஃப்ரெஷ் ஆகிட்டு வா. நான் சாப்பாடு வைக்கிறேன்” அவர் கூற, அவன் சிரித்துக் கொண்டே, மாடி ஏறி தன் அறை நோக்கி சென்றான்.

சில நிமிடங்களில் அவன் வர, அவனுக்கு உணவை எடுத்து வைத்தார் அவன் தாய் அமிர்தவல்லி.

“உங்களை எனக்காக காத்திருக்க வேண்டாமுன்னு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன்” அவன் அக்கறையோடு கேட்க, “இந்த நடிப்பு உனக்கு வேண்டாமுன்னு நான் எத்தனை தடவை உனக்கு சொல்றேன்?” அவரும் அதே அக்கறையோடு கேட்டார்.

“சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வர முடியலை. தூங்க முடியலை. சாப்பிட முடியலை. அப்படி எதுக்கு இந்த வேலை?” அவர் கேட்க, “எனக்கு பிடிச்சிருக்கு அம்மா” என்றான் தன் தாயை பார்த்தது.

“இன்னைக்கு ரிலீசான படம் எப்படி?” என்று அவர் கேட்க, “நல்லா போயிருக்கு அம்மா” அவன் வாய் வார்த்தையாக கூறினாலும், அவன் நெற்றி சுருங்கியது.

“அந்த பெண்ணோட வீடியோ பத்தி யோசிக்கறியா?” அவர் ஆரம்பிக்க, “பார்த்தீங்களா அம்மா?” அவன் ஆச்சரியமாக கேட்க, “நான் வீட்டிற்குள் இருந்தாலும், உலகமும் வீட்டுக்குள்ள தானே இருக்கு. இன்னைக்கு ட்ரெண்டிங் வீடியோ அது தான்.” அவர் கூற, அவன் தலையசைத்துக் கொண்டே சாப்பிட்டான்.

“அந்த பொண்ணு யாருனு எனக்கு தெரியலை.  உன் மேல் நல்ல அபிப்பிராயத்தில் சொல்றாளான்னு தெரியலை. இல்லை கெட்ட அப்பிராயத்தில் சொல்றாளான்னு தெரியலை. ஆனால், அந்த பொண்ணு பேசுறது சரின்னு எனக்கு தோணுச்சு.” அவன் தாய் கூற, அவன் சட்டென்று சாப்பிடுவதை நிறுத்தி, தன் அன்னையை ஆழமாக பார்த்தான்.

“என்ன ஆச்சு முகிலா? அம்மா எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” அவர் பதட்டமாக வினவ, “இல்லை அம்மா, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்” என்று சிரித்து கொண்டான்.

உணவை முடித்துவிட்டு அவன் எழ, அவன் தந்தை கோவிந்தராஜனும் வர, “அப்பா நீங்களும் இன்னும் தூங்கலியா?” என்று கேட்க,  “அம்மாவும் பிள்ளையும் இங்க இருக்க, நான் மட்டும் எங்க தூங்க? சில கணக்கு வழக்குகளை பார்த்துகிட்டு இருந்தேன்” அவர் கூறிக் கொண்டே சோபாவில் அமர்ந்தார்.

“அப்படியே அம்மாவும் மகனும் என்ன ரகசியம் பேசறீங்கன்னு கேட்கலாமுன்னு தான்” அவர் தன் மனைவியையும் மகனையும் கேலி பேச, “அம்மா கிட்ட ரகசியம் சொல்றதுக்கு, நான் உங்களையும் கூட வச்சிக்கிட்டே சொல்லிறலாம்” அவன் தன் தந்தையை கேலி பேச, “டேய் முகிலா. பேச்சு அப்பாவுக்கும் உனக்கும். ஏண்டா என்னை இடையில் இழுக்கிற?” அவன் தாய் செல்லமாக கோபித்துக் கொள்ள, “நீங்க தானே அம்மா எல்லாம்” என்று அவன் தன் தாயின் தோளில் கைகளை போட்டுக்கொண்டு அவர் அருகே அமர்ந்தான்.

வேலையாட்கள் சமையலறையை சுத்தம் செய்ய, குடும்பத்தில் மூவரும் சினிமா தவிர மற்ற விஷயங்களை கொஞ்சம் நேரம் பேசிவிட்டு படுக்க சென்றனர்.

முகிலன் அவன் அறைக்கு சென்றதும் தன் மேலாளருக்கு அழைக்க, “சார், அவங்க பெயர் மீரா ஜெயசாரதி” என்று ஜெயசாரதியில் சற்று அழுத்தம் கொடுத்து கூற, “ஓ..” என்று சிரித்தான் முகிலன்.

அவங்க தேவசேனா குரூப்ஸில் வேலை பார்க்குறாங்க. மேலாளர் கூற, முகிலன் முகத்தில் மீண்டும் சிரிப்பு.

“நீங்க என்ன நினைக்குறீங்க?” அவன் மேலாளரிடம் கேட்க, “சார், தேவசேனா குரூப்ஸ், நமக்கு சாதகமா எதுவம் பண்ண மாட்டாங்க. ஆனால்,  நம்மளை இப்ப அவங்க எதிர்க்கனுமுனு நினைக்கலை. அதே மாதிரி தான் ஜெயசாரதி ஐயாவும்…” மேலாளர் இழுக்க, “அவங்க தரப்பில் இருந்து ஏதாவது நியூஸ் உண்டா?” என்று தன் புருவத்தை சுருக்கினான்.

“தேவசேனா கிட்ட இருந்து வந்த நேரடி தகவல் என்னனா அவங்களுக்கு இதுக்கும் சம்பந்தமில்லை. முழுக்க முழுக்க அந்த பொண்ணோட வேலைன்னு சொல்லிட்டாங்க. ஜெயசாரதி ஐயா பிரச்சனை வேண்டாமுன்னு சொல்லி பல வகையில் தடுக்க பார்த்தும், முடியலைன்னு சொல்றாங்க” மேலாளர் தனக்கு தெரிந்த விஷயத்தை கூறினான்.

“அவர் பொண்ணு தானே, ஏன் பல வழியில் தடுக்கணும்?” முகிலன் சந்தேகமாக கேட்க, “பொண்ணுக்கும் அப்பாவுக்கும் ஏதோ பிரச்சனை. பொண்ணு அப்பா சொல்றதை கேட்கலைன்னு…” சற்று நிறுத்திவிட்டு, “அந்த பொண்ணு யார் சொல்றதையும்  கேட்காதுனும் சொல்றாங்க சார்” மேலாளர் சற்று தயங்கியபடியே கூற, இப்பொழுது முகிலனின் நெற்றி சுருங்கியது.

“அந்த பெண்ணை நான் பார்க்கணுமே” என்றான் முகிலன். “சார், வேண்டாம் சார். வேற மாதிரி பிரச்சனையாகிட போகுது சார். அதுவும் நம்ம சினிமா ஃபீல்டுல ரொம்ப மோசமாகிரும் சார். இதே மாதிரி திரும்ப நடந்தா பார்த்துக்கலாம் சார்” என்று அவன் மேலாளர் அறிவுறுத்த, “இல்லை, நான் பார்க்கணும்” முகிலன் அழுத்தம் திருத்தமாக நிதானமாக கூறினான்.

‘யாரோ ஒரு பொண்ணா இருந்தா விட்டுடலாம். ஆனால், அந்த பெண்ணோட சுற்றுவட்டம் முழுசா நமக்கு எதிரா இருக்கு. பிரச்சனையா இருந்தா ஆரம்பத்திலையே கிள்ளிடனும்.’ அவன் மூளை கணக்கு போட, “சார், அப்படியெல்லாம் அவங்க மீட்டிங்க்கு எல்லாம் ஒதுக்க மாட்டாங்க” அவன் மேலாளர் கூற, “எப்படி வர வைக்கணும் நான் சொல்றேன். அதை மட்டும் பண்ணுங்க” முகிலன் கூறிய திட்டத்தில் அவன் மேலாளர் சற்று அதிர்ந்தே போனார்.    

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!