ஜீவநதியாக நீ – 3

JN_pic-06f8051b

ஜீவநதியாக நீ – 3

ஜீவநதியாக நீ… 

அத்தியாயம் – 3

“ஹீரோ சொன்னால் தப்பாகுமா?” தாரிணி கேட்க,  ஜீவா கலகலவென்று சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” அவள் கேட்க, “இல்லை நீங்க என்னை ஹீரோன்னு சொல்றப்பல்லாம் எனக்கு சிரிப்பு தான் வருது.” அவன் கூற,

“உங்க சிரிப்பெல்லாம் நல்லா தான் இருக்கு. உங்க வேதாந்தம், சித்தாந்தம் எல்லாம் கூட சரியாத்தான் இருக்கு.” அவள் நிறுத்த, அவன் தன் கண்களை சுருக்கி அவளை பார்த்தான்.

“ஆனால், உங்க கோபம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.” அவள் நறுக்கென்று கூறிவிட்டு, அவன் கோபப்படுவானோ என்ற ஐயத்தில் அவனை சந்தேகமாக பார்த்தாள்.

ஏனோ இம்முறை அவன் கோபம் கொள்ளவில்லை. “ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு” என்றான் கேலியாக.

“நான் எல்லாருக்கும் எல்லாம் பயப்படமாட்டேன். வீட்டுக்கு மட்டும் தான் கொஞ்சம் பயம். வெளிய எல்லாரையும் உண்டு இல்லைனு செய்திருவேன். ஆனால், உங்களை மாதிரி, எல்லார் கிட்டயும் வம்பு வளர்க்கிறதில்லை.” அவள் படபடவென பேசிவிட்டு, “சரி… சரி… நேரமாச்சு நான் என் வீட்டுக்கு கிளம்புறேன்.” அவள் திரும்பி வேகமாக நடந்தாள்.

ஜீவாவிடம் பேசியதை அசைபோட்டபடி அவள் வீட்டுக்கு சென்றாள். அவளை சுற்றி வண்ணவண்ண பூக்கள் பூத்திருப்பது போல் அவளுக்கு தோன்றியது.

தாரிணி அவள் வீட்டிற்குள் நுழைய, “என்ன தாரிணி ரொம்ப சந்தோஷமா வர்ற மாதிரி இருக்கு?” அவள் தாய் கேட்க, “அப்படியாம்மா?” ஆச்சரியமாக கண்களை விரித்தாள் தாரிணி.

வீடு முழுக்க கண்களை சுழலவிட்டவள், “ரவி அண்ணா எங்க?” தன் தாயின் முன் நின்றாள்.

“தெரியலை தாரிணி.” தன் தாய் கூற, “அம்மா, இதெல்லாம் ரொம்ப ஓவர். நான் போனால் மட்டும் எங்க போற வரேன்னு ஆயிரம் கேள்வி கேட்குறீங்க? அவனை மட்டும் எதுவும் கேட்குறதில்லை. அவன் ஊர் ஊரா சுத்தறான். சிகரட் பிடிக்கிறான். நானே அவனை ஒரு நாள் ஒரு பெட்டி கடையில் பார்த்தேன்.” தாரிணி கூற, அவள் தாய் புஷ்பவல்லி அவளை யோசனையாக பார்த்தார்.

“என்ன அம்மா பார்க்கறீங்க?” தாரிணி கேட்க, “நீ பெட்டி கடை பக்கம் ஏன் போன?” அவர் தன் மகளை கூர்மையாக பார்த்தார்.

“அது சரி. அவன் ராத்திரி, நேரம் கழித்து வாரான். சில சமயம் கண்டதையும் சாப்பிட்டுட்டு  வாரான். அவனை கேட்காம, என்னை கேள்வி கேளுங்க. நான் சொன்னா மட்டும், ஆயிரம் குறுக்கு விசாரணை பண்ணுங்க. அவனை அப்படியே முழு சுதந்திரத்தோடு விட்டிருங்க. அவன் சொன்னால் மட்டும் சரி சரின்னு கேட்டுக்கோங்க.” மொந்தென்று கோபமாக அங்கு இருந்த தேக்கு மர சோபாவில் அமர்ந்தாள் தாரிணி.

அவள் பேசுவதை கேட்டபடியே வந்தார் தாரிணியின் தந்தை ஷண்முகம்.

தந்தையை பார்த்த நொடி தாரிணியின் முகத்தில் மெல்லிய பதட்டம்.

“தாரிணி மா நீ இந்த வீட்டுக்கு செல்ல பிள்ளை. உன்னை நாங்க பொத்திப்பொத்தி தான் வைப்போம். அதுவே, அவன் ஆம்பிள்ளை பிள்ளை. கொஞ்சம் முன்ன பின்ன தான் இருப்பான். அவனுக்கு உலகம் தெரிய வேண்டாமா? நம்ம தொழில் எல்லாத்தையும் அவன் தானே பார்த்துக்க போறான்?” செல்லமாக ஆரம்பித்து கேள்வியாக முடித்தாலும், அவர் குரலில் கண்டிப்பு இருக்க, மௌனமாக தலை அசைத்து தன் அறைக்கு சென்றாள் தாரிணி.

அவள் கண்முன் ஜீவா தோன்றினான்.

‘ஹீரோ, செம்மையா பேசுறாரே. இந்த வீட்டில் தான் எப்பப்பாரு நம்மை பொண்ணு பொண்ணுன்னு சொல்லி அடக்கி அடக்கி வைக்குறாங்க. அவரெல்லாம் அப்படி இல்லையே?’ தாரிணி புத்தகத்தை அடுக்கி வைத்தபடி அவனை பற்றி சிந்தித்தாள்.

நாட்கள் அதன் போல் நகர்ந்தன.

ஜீவா இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலைக்கு சென்று கொண்டிருந்தான். அவ்வப்பொழுது ஜீவா, தாரிணி வழியில் சந்தித்து கொண்டார்கள். அவர்களுக்குள் அறிமுகம் என்ற சொல் நல்ல பழக்கம் என்னும் வரை வளர்ந்திருந்தது.

கீதா, தன் போக்கில் படித்து கொண்டிருந்தாள்.

ரவி! தாரிணியின் சகோதரன். பணக்காரா வீட்டுப்பிள்ளை. பணக்கார வீட்டுப்பிள்ளை என்பதற்கான, அக்மார்க் முத்திரை என்பது போல் அதற்கே உண்டான குணம், பழக்கவழக்கம் என எல்லாம் உடையவனாக இருந்தான்.  தன் தொழில்களை பார்த்து கொண்டிருந்தான். அத்தோடு  கீதாவை அவளறியாமல் தொடர்ந்தும், கண்காணித்தும் கொண்டிருந்தான்.

ரவிக்கு கீதாவிடம் பேச வேண்டும் என்ற கொள்ளை ஆசை இருக்கத்தான் செய்தது. ஆனால், என்ன பேசுவது என்று தான் தெரியவில்லை. பேசுவதற்கும் சந்தர்ப்பம் அமைய வேண்டும். காலம் கனிய வேண்டும் என்று காத்திருந்தான் ரவி.

*** *** ***

வருடம் 1999

அடர்ந்த இருட்டு. ஒற்றையடி பாதை. இருப்பக்கமும் முள் பதர்கள்.

“அ… அ…” மூச்சு விட முடியாத சிரமத்தில் அவள் மூச்சு வாங்கியது.

“ஜீவா என்னால முடியலை” அவள் கால்களில் எதுவோ குத்திவிட அவள் அலறினாள்.

“தாரிணி, நமக்கு வேற வழி இல்லை. கொஞ்சம் பொறுத்துக்கோ” அவன் அவள் கைகளை இறுக பற்றி அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறினான்.

அவள் கண்களில் கண்ணீர் வழிய ஓடினாள்.  அங்கே வழியில் கிடந்த சருகுகளில் சரசரவென்று பாம்பு நெளியும் சத்தம். 

அவள் இதயம் ஒரு நொடி நிற்க, அங்கும் நான் இருக்கிறேன் என்பது போல் ஜீவாவின் கைகளை இன்னும் இன்னும் அழுத்தமாக பிடித்து அவள் ஓடினாள்.

அவர்கள் பின்னே தடதடவென்ற காலடி சத்தம். “ஜீவா, அவங்க வராங்க.” அவள் கூற, “வரட்டும் பார்த்துக்கலாம். பக்கத்தில் தான் கோவில் இருக்கு.” அவன் அவள் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான்.

பின்னே வந்த கூட்டம் இவர்களை நெருங்கவும், ஜீவா தாரிணியோடு அங்கிருந்த மரத்தில் சாய்ந்தான்.  அந்த இருட்டில் அவர்களுக்கு மெல்லிய வெளிச்சம் தெரிய, ஜீவா அங்கு சென்றான்.

   

வெள்ளி கண்கள் மின்ன அங்கு அமர்ந்திருந்தாள் அம்மன்.  அம்பாளின் கழுத்தில் இருந்த தாலியை தாரிணியின் கழுத்தில் கட்டினான் ஜீவா. அவள் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள்.

“உனக்கு இதுல?” அவன் தாலியை கட்டிவிட்டு சற்று தயக்கத்தோடு கேட்க, “ஜீவா… ஜீவா…” அவன் சட்டையை கொத்தாக பிடித்து, அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்.

“என்னால் தானே எல்லாம்.  நான் உன்னை… உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல?” தாரிணி அவன் மேல் சாய்ந்து கண்களில் கண்ணீரோடு கேட்க, அவன் அவளை அவளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

காதலியிடம் அவன் இத்தனை நாள் காட்டிய கண்ணியத்தை கைவிட்டு, அவன் கைகள்  அவளை மனைவியாய் அவளோடு சேர்த்துக்கொண்டது.

“தாரிணி அழக்கூடாது.” அவன் அவள் கண்களை துடைத்து விட்டான்.

“இந்த தாலி ஊரு உலகத்துக்கு முன்னாடி நமக்கு ஒரு பாதுகாப்புக்கு. ஆனால், நாம இங்க இருந்து தப்பிக்கணும்.” அவன் தீவிரமாக கூற, ‘எப்படி?’ என்பது போல் அவள் கண்கள் அச்சத்தில் விரிந்தன.

“நான் என் நண்பனை வர சொல்லிருக்கேன்.” அவன் பேசுகையில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அவன் சரேலென்று அவளை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினான்.

அந்த கூட்டம் அவர்களை தொடர்ந்தாலும், இவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து அவர்கள் கண்களை ஏமாற்றிவிட்டு அந்த கூட்டத்திற்குள் மாயமாக மறைந்து விட்டனர்

கிளம்பும் ரயிலில் ஏறி அமர்ந்தனர். அவ்வளவாக முதலில் கூட்டமில்லை. ரயில் கிளம்ப, “தாரிணி, நீ முகத்தை கழுவிட்டு வா. நானும் வரேன்” அவன் கூற, அவள் கால்களை கெந்தி கெந்தி நடந்தாள்.

“என்ன ஆச்சு?” வந்து சேர்ந்த ஆசுவாசத்தில் அவன் அனைத்தையும் மறந்து கேட்டான். “ஒண்ணுமில்லை, நான் முகத்தை கழுவிட்டு வந்து உட்காருறேன்” அவள் முகத்தை கழுவிட்டு வர, அவன் சட்டென்று அவளை கைகளில் ஏந்தி அமர வைத்தான்.

“ஜீவா, கூட்டம் ரொம்ப இல்லைனாலும், இருக்கிறவங்க நம்மை பார்க்குறாங்க” அவள் அவன் செவியோரம் கிசுகிசுத்தாள்.

“பார்க்கட்டுமே. என் பொண்டாட்டியை தானே நான் தூக்குறேன்? நீ மேஜர். நான் உன் கழுத்தில் தாலி கட்டிருக்கேன்.” சற்றுமுன் அவன் கட்டிய தாலியில் அவன் குரலில் உரிமை இருக்க, அந்த உரிமையில் அவள் முகத்தில் பெருமிதம் வந்து அமர்ந்தது.

“நாளைக்கு காலையில் மெட்ராஸ் போறோம். அங்க நமக்கு ரிஜிஸ்டர் மேரேஜ். அப்புறம், நம்ம உறவு இன்னும் பலமாகிரும். நம்மளை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது” அவன் கூற, அவள் அவன் கைகளை இறுக கட்டிக்கொண்டு, அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

“சென்னைன்னு தானே சொல்லுவாங்க?” அந்த நேரத்திலும் நான் பதட்டப்படவில்லை, உன்னை முழுதாக நம்புகிறேன் என்று நிரூப்பிக்கவே குறும்புத்தனம் மாறாமல்  சந்தேகம் கேட்டாள் தாரிணி.

“1996 இல் தான் மெட்ராஸை சென்னைன்னு பெயர் மாத்தினாங்க. எனக்கு மெட்ராஸ்ன்னு சொல்லியே பழகிடுச்சு” அவனும் அவள் நம்பிக்கையை காப்பாற்ற விழைபவன் போலவே இயல்பாக பேசினான்.

தாரிணி அவன் மீது சாய்ந்து கொண்ட விதத்தில், அவள் பேசும் விதத்தில், அவனுக்கு புரிந்தது அவள் அவனை எத்தனை தூரம் நம்புகிறாள் என்று!

‘இந்த ஒரு வருடத்தில் என் காதல் இப்படி வேர் விட்டு மரம் போல் வளரும் என்றும் நான் நினைக்கவில்லை’ அவன் தன் கண்களை மூடி பின்னே சாய்ந்தான்.

‘ஹீரோ…’ அவள் முதல்முதலாக அழைக்கையில் அவளுக்காக அவன் ஹீரோ போல் பல செயல்களை செய்வான் என்று அவன் நினைக்கவில்லை. காதல் மேலெழும்ப, தன் காதலியின் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டான் ஜீவா.

அவள் உடல் நடுங்க, “என்ன ஆச்சு தாரிணி?” அவன் பதட்டமாக கேட்டான்.

“கால்… கால்…” அவள் வலியில் துடிக்க அவன் சட்டென்று விலகி, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவள் பதறிக்கொண்டு விலக, அவன் அவள் கால்களை அழுத்தமாக பிடித்து அவள் பாதங்களை கைகளில் ஏந்தினான்.  அவன் விரல்கள் அவள் கால்களை தீண்ட, அவள் கால்கள் சிலிர்த்து கொண்டது.

வலியில் அவள் உடல் நடுங்க, அவன் தீண்டலில் அவள் தேகம் நாணம் கொண்டும் நடுங்கியது.

“தாரிணி…” அவன் ஆழமான குரலில் அழைக்க, “என்னை நம்பி தானே வந்த?” அவன் கேட்க, அவள் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

“இப்படி காயத்தை, வலியை என்கிட்டே மறைச்சா என்ன அர்த்தம்?” அவன் குரலில் அக்கறையோடு கேட்க, அவள் கீழே குனிந்து அவன் கைகளை பிடித்து கொண்டு மறுப்பாக தலை அசைத்தாள்.

வலியிலும், அவன் முதல் தீண்டல் அவளை ஏதேதோ செய்தது.

அவன் முகத்தின் அருகே அவள் முகம். அவள் உணர்வுகளை அவன் படிக்க முயன்றான். அதில் தெரிந்த வலியை தாண்டிய வெட்கத்தில், அவன் சிரித்து கொண்டான்.

அவளின் வெட்கம். அவனுக்கான வெட்கம். தன் மனைவியின் வெட்கத்தை அவன் உள்ளம் ரசித்தது.

அவன் தோள்களில் அவள் செல்லமாக குத்தினாள்.  அவள் கைகளை பற்றி, அவன் தன் இதழ்களை குவித்து புருவம் உயர்த்தினான். அவன் செய்கையை புரிந்து கொண்டவள் போல், அவள் முகம் இன்னும் சிவந்தது.

அவனுக்கு அவள் புன்னகை மிக ரசனையாக இருந்தது. அதை ரசிக்கவும் ருசிக்கவும் அவன் மனம் விழைந்தது. சுற்றுப்புறம் கருதி அவன் எண்ணத்தை ஒதுக்கி, அவன் தன் பெட்டியிலிருந்து, சிறு மருந்தை எடுத்து அவள் கால்களில் தடவினான்.

“எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” தாரிணி ஜீவாவை பார்த்து ஆச்சரியமாக கேட்டாள்.

“என் பெட்டியில் எப்பவும் சிலது இருக்கும்” ஜீவா அவளுக்கு விளக்கமளித்து கொண்டே, அவளுக்கு வலிக்காமல் மருந்தை தடவினான்.

“என்ன வீட்டை விட்டு ஓடி வந்துடீங்களா?” அருகே வந்தமர்ந்த வயது முதிர்ந்த பாட்டி, இவர்களை பார்த்தும், அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை பார்த்தும் நக்கலாக கேட்டார்.

ஜீவா சட்டென்று எழுந்து தாரிணி அருகே அவளுக்கு காவல் போல் அமர்ந்து கொண்டான்.

“எல்லாம் இப்ப சுகமாத்தான் இருக்கும். ஏதோ சாதிச்சிட மாதிரி தான் இருக்கும். வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்று அவர் பேச ஜீவா, தாரிணி இருவர் முகமும் அசூயையை காட்டியது.

“நான் பேசறது உங்களுக்கு கசக்க தான் செய்யும். வாழ்க்கை உங்களுக்கு நிறைய பாடத்தை காட்டும்.” அவர் தன் போக்கில் புலம்பினார்.

அவர் பேச்சில் தாரிணியின் முகம் கலங்க, “எல்லா கஷ்டத்தையும், நம்ம காதல் சமாளிக்கும்.” அவன் அவள் செவியோரமாக அவளுக்கு நம்பிக்கை அளித்தான்.

அவர்கள் ஏறிய ரயில் “கூச்…கூச்…” என சத்தம் எழுப்பிக் கொண்டு  சென்னை நோக்கி வேகமாக சென்றது.

அதே நேரம், “ரவி, எடுறா வண்டியை மெட்ராசுக்கு. மெட்ராஸ்  எழும்பூர் ஸ்டேஷன்ல, அவனை வெட்டி சாச்சிட்டு, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வாரோம். இல்லை, அவளையும் அறுத்து போட்டு தான் வரணும்.”  தாரிணியின்  தந்தை ஷண்முகம் தன் மகனிடம் கூற, இருவரும் காரில் சென்னை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். 

நதி பாயும்…                  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!