தூறல் போடும் நேரம் – 11

தூறல் போடும் நேரம் – 11

பகுதி 11

“கூல்… கூல்… நீ வெட்கப்படலேனாலும், கோபம் கூட படலையே ஏன்?” என அவன்
எதிர்பார்த்ததைக் கேட்டான்.

“கோபப்படுறதுக்கும் துக்கப்படுறதுக்கும் இத விட எவ்வளவோ விஷயங்கள் என்ட்ட
நிறைய இருக்கு. சோ இதிலெல்லாம் என் கவனம் சிதறாது” எனத் தோள் குலுக்கினாள். அது
தான் ஏற்கனவே அவளைச் சிதறடிக்க தான் ஒருவன் இருக்கிறானே.

“ஓ! நீங்க வேற மேக்கா?” பன்மையைக் கையில் எடுத்திருந்தவன், கிண்டலாய்
சிலாகித்தான்.

“ஓ! நீங்க எந்த மேக்க எதிர்பார்த்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” எனத் தனக்கும்
அவன் சொன்ன மேக் வரும் எனச் சிலிர்த்தெழுந்தவள், அவனைப் போலவே சிலாகித்து அவனைக்
கிண்டினாள்.

“இல்ல புதுசா ஒரு பையன்ன பார்த்த வெட்கப்படனும்…” அவள் முறைக்கவும்,
“இல்ல… அட்லீஸ்ட் சங்கோஜப் பட்டிருக்கலாம்” அன்றைக்கு சகஜமாய் அவனுக்கு எடுத்து
கொடுத்த பொருளைப் பற்றி இன்று அவன் சங்கடப்படுகிறானோ?

ஏனெனில் தற்பொழுது அவளை சைட்டடிக்கும் உரிமை அவனுக்கு இல்லையே!

“புதுசா பார்த்தா தான… நான் தா நெறைய பசங்கள பார்த்திருக்கேனே… என் கூட
படிச்சவங்க, ஆபீஸ்ல, கடைல, வீட்டுக்கு பக்கத்…” எனக் கடித்தவளை, முடிக்கும்
முன்னே “ஐயோ போதும்… போதும்… முடியல” என அவனும் கடிப் பட்டிருந்தான்.

“போதுமா?… இல்ல இன்னும் டீட்டைல்ஸ்…” என அவள் முற்று போடாமல் இழுக்க, அவனோ
கையைக் கூப்பி, வணக்கம் போட்டு முற்றும் போட்டான்.

அதைக் கண்டவள், சிரித்தவாறே கண்களை மூடி தலைச் சாய்த்து காண்பித்து, ‘இனி நான்
உறங்கவா?’ எனச் செய்கையில் கேட்டவளுக்கு, மீண்டும் குனிந்த தலைக்கு மேலே
கைக்கூப்பினான்.

அதில் மேலும் மனம் விட்டு சிரித்தவள், அந்தச் சிரிப்பினூடே உண்மையாகவே உறங்க
ஆரம்பித்து விட்டாள்.

அதை ரசித்தவாறே கனவுலுகத்திற்கு கண் மூடி அவனும் சென்று விட்டான்.

திடீரென பேருந்து ஒலிப்பானின் சத்தத்தில் விழித்தவன், அருகில் இருந்தவளை
நோட்டமிட்டான். அவளோ உறங்காமல் தான் இருந்தாள் என்பதை அவள் செவிப்பொறி மாட்டி, அலைபேசியில்
பாட்டு கேட்பதிலேயே தெரிந்தது.

ஒரு வேளை அவளும் உறங்கி விட்டு, தன்னைப் போல் இடையில் விழித்திருப்பாளோ என
எண்ணியவன், அவளின் ஒரு பக்க செவிப்பொறியை எடுத்து, “என்ன தூங்கலையா?” என
வினவினான்.

அவளோ இதழ்களை பிதுக்கி, இல்லை எனத் தலையாட்டினாள்.

“தூக்கம் வரலையா?” எனப் பயணிக்கும் மற்றவர்களுக்கு இடையூறு இல்லா வண்ணம்
குரலைச் சிறுத்து கேட்டான்.

அவளும் அவனுடைய பாணியிலேயே, “அது எப்போவும் வர்றது இல்ல”

“ஏன்?”

“சின்ன வயசுல இருந்தே அப்படி தான். பழகிப் போச்சு. நீங்க தூங்குங்க”

அவளுடன் நான்கு நாட்கள் பழகிய உரிமையில், சிறுவயதில் இருந்தா?’ எனத்
திகைத்தவன் “உங்க பாரென்ட்ஸ் எதுவும் கவனிக்கலையா?”

“இருந்தா தான கவனிக்க?”

“ஓ! ஆம் சாரி…”

அதன் பின் என்ன பேசுவது எனத் தெரியாமல், அவனோ வேடிக்கைப் பார்க்கும் சாக்கில்
வெளியே இருட்டை எட்டிப் பார்க்க, அந்த இருட்டைப் போல் தான் தன் வாழ்க்கையும்
பயணிக்கிறது என எண்ணினாள் ராதா.

அவளின் கண்ணோரம் பளபளப்பதைக் கண்ட ராம், ‘புதைந்து போன பழையனவற்றை திறந்து
பார்க்க செய்து விட்டோமோ’ என உணர்ந்தவன், அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு,
“உங்க நேட்டிவ் எங்க?” எனக் கேட்டான்.

காரைக்குடி அருகில் இருக்கும் குன்றக்குடி எனப் பதில் கொடுத்திருந்தாள்.

“நீங்க எப்படி உதயாவுக்கு ப்ரிண்ட் ஆனீங்க?” என அடுத்த வினாவினைத் தொடுத்தான்.

“நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ் ஒரே கிளாஸ்… அப்படியே ப்ரிண்ட் ஆகிட்டோம்”
எனப் பதில் தந்தவள், மீண்டும் அவனின் கேள்விக் கேட்க வரும் முகப் பாவத்தைப்
பார்த்தவள், “நான் இது வரைக்கும் உங்க வீட்டுக்கு வந்ததே இல்லை. அவ கூப்பிடுவா,
ஆனா நான் தான் வீட்ல பாட்டி தனியா இருப்பாங்கன்னு ரொம்ப வெளியவே போ மாட்டேன்.
அப்படியே போனாலும் பாட்டியோட தான் போவேன்”

“ம்ம்… நீங்க எங்க வேலைப் பார்க்குறீங்க? ஏதோ பிஃனான்ஸ்னு டாக்டர்ட்ட
சொன்னீங்களே” என விவரம் கேட்டான்.

“ஐஃப்சிஐ, இண்டஸ்ட்ரியல் பிஃனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா… ஏஸ்
அசிஸ்டெண்ட் மேனேஜர். சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப்” என அவனின் அடுத்தடுத்த
கேள்விகளை யூகித்து அவளே தெளிவாய் விவரித்தாள்.

“கெத்து தான் போங்க… கவர்ன்மென்ட் ஜாப்… அதுவும் சென்ட்ரல் கவர்ன்மென்ட்
ஜாப்… ம்ம்ம்…” எனத் தன் இதழ்களை விரித்து பாராட்டினான்.

அந்த பாராட்டிலேயே அவனைப் பற்றி கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவன் தூண்டி
விட, “நீங்க எங்க வேல பார்க்குறீங்க?” எனச் சம்பிரதாயத்திற்கு கேட்டு வைத்தாள்.

“உங்க அளவுக்கு பெரிய வேலைல இல்லைனாலும், கோர் கம்பெனில செக்ஷன் ஹெட்டா
இருக்கேன்” எனப் பதில் உரைத்தான்.

இருவரும் தங்கள் பணிகளின் பன்முகத்தைப் பற்றி சிறிது நேரம் அலசி ஆராய்ந்தனர்.
ராம் தான் கொட்டாவி விட்டு அதை முடிவுக்கு கொண்டு வந்தான். அதைக் கண்டவள், தானும்
கண்களை மூடிக் கொண்டாள்.

மூளைக்குள் உங்க பாரென்ட்ஸ் கவனிக்கலையா? என்ற அவனின் கேள்வியே ஒலிக்க, அவளின்
மூடிய விழித்திரையில் அதற்கு விடையாய் வரிவடிவத்தில் காண ஆரம்பித்தாள்.

எல்லோரையும் போல், அழகான குடும்பத்தில், அதுவும் கூட்டு குடும்பம் அல்லாத
பெற்றவர்களின் காதலால் கசிந்து உருகி உருவாக்கப்பட்ட குட்டி குடும்பத்தில்
பிறந்தவள் தான் ராதா.

அம்மா வேறு மாநிலத்தவர், பெங்காலி. அப்பா தமிழ் மாநிலத்தவர். தந்தை பணி
நிமித்தமாய் வேறு மாநிலத்துக்கு சென்ற போது, காதலித்து அம்மாவை மணந்து கொண்டார்.

காதலால் குத்து பட்ட குடும்பமாய் ஆன போது கூட சந்தோசமாய் தான் வாழ்ந்தார்கள்
அவ்விருவரும். ராதா ஒரு மழை நாளில் பிறந்தாள்… வளர்ந்தாள். அவள் வளர வளர, இவர்களை
வார்த்தைகளால் கொட்டிய பந்தமெல்லாம், பாசத்தைக் கொட்டினார்கள்.

அதிலும், ஒரே மகனைப் பெற்ற ராதாவின் பாட்டி தான், ஒற்றை ஆளாய் நின்று ஆளாக்கிய
தன் மகனை, ஒற்றை மகள் அருகில் இருந்தும், மறக்க இயலாமல் தவித்து வந்தார்.

பெற்று வளர்த்தவனை எவ்வளவு காலம் தான் புகைப்படத்தில் மட்டும் கண்டு நாள்களைக்
கழிப்பது. நேரில் கண்டு களிக்க வேண்டாமோ? அதுவும் தனக்கு ஒரு பேத்தியை ஈன்று
எடுத்துள்ளான் என்ற சேதியைக் கேட்ட பின்னும் சாதியாவது, கௌரவமாவது எனப் பொங்கி
எழுந்தார்.

அவரின் சமூகம் சொல்லிக் கொடுத்த சாதி பாடத்தை விடுத்து தன் சந்ததியைப் பார்க்கச்
சென்றார். அவர் வந்து போன ராசியோ என்னவோ, அம்மாவின் சொந்தமும் கொஞ்சம்… கொஞ்சம்…
எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

ஊரில் விசேஷம், திருவிழா காலங்களில் அன்னை தங்கையைப் பார்க்க, ராதாவோடு வந்து
போய் கொண்டிருந்தார்கள். சமயங்களில் ராதாவை பாட்டியிடம் விட்டும் செல்வார்கள்.

தீப்பெட்டி அடுக்குகளாய் பார்த்த பழகிய வீடுகளின் மத்தியில், மாட்டு
தொழுவமும், மண்டியும் சூழ மண் மனம் மாறாத, இயற்கைக் காற்றோடு கலந்த பாட்டி
வீட்டினைக் காணவும், அந்த இளம் குழந்தைக்கு மிகவும் பிடித்து விட்டது.

எப்பொழுதும் சதுர வடிவ வானைப் பார்த்து பழகிய குழந்தைக்கு, பரந்து விரிந்து
கிடந்த வானைக் கண்டதும் சிறகே இல்லாமல் பறக்க தொடங்கினாள்.அவளின் ரசனையைக் கண்ட
மேகமும் மழையோடு கூத்தாடியது.

காலணிகள் இல்லாத பாதங்களில் ஈர மணலின் இள வெப்பமும், அந்தக் குருமணிகளின்
குறுகுறுப்பும், அவளைப் பொழுது முழுவதும், அவர்களின் வயலிலேயே வீடு கட்டி விளையாட
வைத்தது.

“ஏத்தா… உம்ம பேத்தியா?” என வயக்காட்டுப் பக்கம் வருவோரும் போவோரும்
கேட்கையில், அவரின் பாட்டிக்கு பெருமைப் பொங்கும்.

மேலும், “டவுன்கார புள்ளையா இருந்தாலும், அப்பத்தாவோடவே காடு கழனின்னு
திரியுதே” என மற்றவர்கள் சொல்ல கேட்கையில், பெருமை வழிந்தொடினாலும், ‘இந்த
பெண்ணாவது, அவர்கள் அம்மா வர்கத்தில் சேராமல், என்னுடனே பாசத்துடன் இருக்க
வேண்டும் கடவுளே’ என அடிக்கடி வேண்டியது அவர் மனது.

அவரின் வேண்டுதல் கடவுளை எட்டி விட்டது போலும். இதோ இப்பொழுது வரை அவருடனே
தான் இருக்கிறாள் ராதா.

ஆதலால், ஒவ்வொரு விடுமுறைக்கும் ராதாவின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு
நாட்களைக் கடக்க ஆரம்பித்தார் பாட்டி. அவள் எப்படி தன்னுடன் இருப்பாள் என்றெல்லாம்
எதார்த்தத்தை எண்ணிப் பார்க்கவில்லை.

அவர்கள் வேண்டும் என்றால், மீண்டும் ஒரு பையனைப் பெற்று கொண்டு, அவர்கள்
வர்க்கத்தோடு சேர்ந்தாலும் சரி சேராவிட்டாலும் சரி, நமக்கு இந்த குலக் கொழுந்தே
போதும் என எண்ணம் கொள்ள ஆரம்பித்தார்.

எல்லாம் மகனவன் செய்த மகத்தான செயலில், மனதொடைந்த இந்த மாதரின் மந்திர
சொல்லாயிற்று ‘குலக்கொழுந்து’. இனி வரும் காலங்களில், குலக்கொழுந்து என்பது ஆண்
என்ற பாலினம் மாறி, பெண் தான் என ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

தற்பொழுது எல்லாம் பெண் குழந்தைகள் தான் அன்னைத் தந்தையை நன்றாக கவனித்து
கொள்கிறார்கள். அதனால் மாறினாலும் தவறில்லை தான்.

பாட்டியின் எண்ணமோ, அல்லது எல்லாம் வல்லவனின் விதியோ, அந்தக் குட்டி
குடும்பத்தில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. விரிசல் விரிந்து… விரிந்து…
ராதாவின் தாய் தந்தையை விரோதிகளாய் மாற்றி, இருவரையும் இரு துருவங்களாய் தூர
விலக்கி நிறுத்தியது.

அதன் பலனாய் இருவரும் நீதிமன்றத்தில் எதிர் எதிர் கூண்டில் தனி தனியே
நிறுத்தப் பட்டிருந்தனர். இருவரும் போதாது என்று, புரிந்தும் புரியாத பருவத்தில்
இருந்த, எட்டு வயதே நிரம்பிய குட்டி ராதாவையும் நிறுத்தியிருந்தது அவர்களின்
விவாகரத்து.

ஏதேதோ கேட்டார்கள் அவளும் எதையோ சொன்னாள். எல்லாம் மங்கலாய் நியாபகம் இருந்தது.
இறுதியில் அவள் பாட்டியிடம் தான் வந்து சேர்ந்தாள். தினமும், திடீர் திடீரென அவளை
அரவணைத்து அழுவார், அவளது பாட்டி. அது ஏன் என அவளுக்கு அப்போது புரியவில்லை.

 பின்னர் தன் தந்தை மட்டுமே,
தன்னைக் காண வருவதும், தாயைக் காணவே முடியாமல் போகவும் தான், மெல்ல மெல்ல
விளங்கிற்று. அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு
அப்போது தான் புரிந்தது.

மீண்டும் ஒரு நாள் நீதிமன்ற படியேறினாள் ராதா. அன்றைக்கு தான், தன் தாயை
மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தாள்.

அப்போது கூட தன் பாட்டி “வேணாம் டா… இந்தப் பிஞ்சுக் குழந்தைய போட்டு, ஏன்
தான் பாடு படுத்துறீங்களோ. அவ என்னடா பாவம் பண்ணா?”

“ம்மா… நீ சும்மா இரு மா… அவ குழந்தைய… அதுவும் பெண் குழந்தைய அவ தான்
வச்சிருக்கணும். ஜீவனாம்சம் மட்டும் கேட்டு வாங்க தெரிஞ்சுச்சுல… எத்தன
வருஷத்துக்கு தான், நீ மட்டும் தனியா பார்த்துப்ப… ” என அவன் பக்க நியாயத்தை
எடுத்துரைத்தார், அவரது மகன்.

இது வீட்டிலேயே கூறப்பட்ட பதில் தான், இப்போது “பொம்பள அவளுக்கே அவ்வளவு
திமிர் இருக்கும் போது, எனக்கு இருக்காது. என்கிட்டயே சொல்றா, அவளோட கல்யாண
வாழ்க்கைக்கு ராதா இடைஞ்சலா இருப்பாளாம். அப்போ எனக்கு மட்டும் இருக்க மாட்டாளா?”
என்ற புதிய பதிலில் தான் பாட்டிக்கு விவரம் தெரிய வந்தது.

இருவரும் வேறு வேறு துணையைத் தேடிக் கொள்ளும் மும்முரத்தில், போட்டா போட்டிப்
போட்டுக் கொண்டு பெற்ற பிள்ளையை பிணைக் கைதியாக்க முடிவு செய்கிறார்கள் என்று
தெரிந்தது.

புதிய துணையின் வேண்டுகோளுக்கு இணங்க, இருவரும் ராதாவை இங்கும் அங்கும் பந்தாட
துணிந்து விட்டார்கள்.

அன்பின் அம்சமாய் ஆரம்பத்தில் பார்க்கப்பட்ட குழந்தை, இப்போது முரண்பாட்டில்
பிறந்த ஒரு குறைபாடாய் தான் பார்க்கப்பட்டாள்.

“உங்கம்மாவும் அப்பாவும் வேற வேற கல்யாணம் பண்ணிக்க தான், உன்ன இங்க வந்து
விட்டுட்டாங்க தெரியுமா?”

“டேய் ராதாலா பெரிய ஆளுடா… நமக்குலாம் ஒரு அம்மா ஒரு அப்பா தான… ஆனா
இவளுக்கு மட்டும் ரெண்டு அம்மா ரெண்டு அப்பா டா” என அவள் தந்தையின் தங்கை மைந்தன்,
அவளின் அத்தை மகன், வயதில் சற்றே இரண்டு வயது மூத்தவன், உடன் விளையாடிய
சிறுவர்களுக்கு மத்தியில் தண்டோரா போட்டு சிரித்தான்.

எல்லாம் அவனின் தாய் தந்தை, அவன் உறங்கி விட்டான் என நினைத்து, பேசும்
சங்கதியை தான், அவனுக்கு தெரிந்த மட்டும் கூறி, ஒலிப்பரப்பு செய்தான்.

ஆனால் இதெல்லாம் வதந்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணி தான், பாட்டி ராதாவோடு
மகன் சொல்படி அங்கு வந்திருந்தார். ஆனால் அவன் வாயாலே அதைக் கேட்டதும் ஸ்தம்பித்து
தான் போனார்.

 “தூ… நீயெல்லாம் என் வயித்துல
தான் பிறந்தயான்னு சந்தேகமா இருக்கு டா. முத அந்த மேனாமினிக்கிய கட்டும் போதே
சொன்னேன், நம்ம குடும்பத்துக்கு ஆகாது டான்னு, நீ கேக்கல. பிடிக்கல, பிரியறோம்னு
சொன்ன, குழந்தைக்காக பாருங்கன்னு ரெண்டு பேருகிட்டயும் மன்றாடினேன்… அதுவும்
கேக்கல.

இப்போ இந்த பச்ச மண்ண பரிதவிக்க விட முடிவு பண்ணிட்டீங்களா? ஒரு நாளும் அத
நடக்க விட மாட்டேன். என் உயிர் இருக்க வரைக்கும் அவள நானே பார்த்துப்பேன் டா.

இன்னியோட உனக்கும் எனக்கும் எந்தப் பந்தமும் இல்ல. பிள்ளைய பார்க்க வர உரிமை
கூட உனக்கு இல்லா டா” என ஆதங்கமாய் முடிவெடுத்து ஆங்காரமாய் கூறினார்.

“அம்மா… இது என் சொந்த விஷயம். நீ இதுல தலையிடாத. எல்லாம் பேச நல்லா தான்
இருக்கும். வயசான காலத்துல உனக்கு எதுக்கு இந்த சுமை?” என அவன் அன்பால் சுமக்க
வேண்டிய சுகமான சுமையை உணராமல், பொதி சுமக்கும் கழுதையாய் மாறும் தன் தாயை
நினைத்து அவரை தடுத்தான்.

மேலும் தன் அன்னையிடம் இருந்த குழந்தையின் கைப்பற்றி தடுத்தான். ஆனால்,
ராதாவின் பாட்டியோ உடும்பு பிடியாய் குழந்தையை பற்றியவர், “வேண்டாத கழுதைங்களுக்கு
தான்டா அது சும… விரும்பிய மனுஷிக்கு தெரியும்டா அதோட அருமை… நீயெல்லாம்
மனுஷனே இல்ல…

உன்னோட சுகத்துக்காக பெத்த பொண்ண போய் சுமையா நினைக்குறியே… என் வயிறு
எரியுது டா, அந்தப் பிஞ்சு முகத்த பார்த்தும் கூட, உங்க ரெண்டு பேர் மனசும்
இறங்கலேல… நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க டா… நாசமா தான் டா
போவீங்க” என மண்ணை வாரி அவன் மீது தூற்றி விட்டு, ராதாவை இடுப்பில் சுமந்து கொண்டு
அவ்விடம் விட்டு அகன்றார்.

சற்று தொலைவு சென்றதும், மக்களின் பரபரப்பில் தான் தன்னை மீட்டுக் கொண்டார்
பாட்டி. அவ்வளவு தூரம் நெஞ்சம் புண்பட்டு, புத்தி மதி கெட்டு அழுதது. கண்ணீர்
வழிந்தோடிய கன்னத்தை தன் முந்தானையில் துடைத்தவர், மெல்ல சூழ்நிலையைக் கிரகிக்க
ஆரம்பித்தார். அவர் கிரகிக்கும் பொழுது, மழையும் துணைக்கு வந்தது.

ஏதோ விபத்து நடந்ததற்கான அறிகுறியாய் சாலையின் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமும்,
அவர்களுக்கு மத்தியில் ஒரு தண்ணீர் லாரி மரத்தில் மோதி நின்றிருந்தது.

ஏதோ அபஸ்வரமாய் மனதில் தோன்ற, கூட்டத்தின் அருகே சென்றார். ராதாவை இடுப்பில்
இருந்து, தோளில் சாற்றியவர், அவள் முகத்தை தன் முதுகு பக்கமாய் திருப்பி போட்டு,
அவள் தலையினை ஒரு கையால் அணைத்தப்படி எட்டிப் பார்த்தார்.

அவரின் உதறல் உண்மையாயிற்று. அவரின் மகனும் மருமகளும் ஒரு சேர, அந்த கன ரக
வாகனத்தில் சிக்கியிருந்தனர்.

நிமிடத்தில் நாசமாய் போயிருந்தார்கள் இருவரும். ராதாவை அழைத்து கொண்டு சென்ற
தன் அன்னையை இழுத்து வர துணிச்சல் இல்லாமல், கை முஷ்டி இறுக பார்த்து
கொண்டிருந்தான். மேலும், மரத்தின் நிழலில் நின்றிருந்த முன்னாள் மனைவி அழைக்கவும்,
விபரம் சொல்ல சென்றான்.

மேற்படி வழக்கினை வேறொரு நாளில் வைக்கலாம் என்று உரைத்தவன், அன்றைக்கு ராதாவை
மட்டும் அழைத்து வர திட்டம் தீட்டியிருந்தான். ஆனால் மீண்டும் மீண்டும் அங்கு வர
இயலாத தன் நிலைமையினால், அவன் மீது உண்டான எரிச்சலை சொற்களால் தூவ
ஆரம்பித்திருந்தாள், முன்னாள் மனைவி.

இப்படியே சொற்போர் நடந்ததில், சாலையில் கனரக வாகனம் ஒன்று நிறுத்த இயலாமல்,
இங்கும் அங்கும் நெளிந்து, சுழிந்து வந்ததை அறியாமல் நின்றிருந்தனர்.

நொடியில் உணர்ந்து, விலகும் வேளையில் எக்குத்தப்பாய் சிக்கி
சின்னாப்பின்னமாயினர். தன் சாபம், சாயம் வெளுக்காமல் இப்படி சாவையே, சலவை செய்து கொணர்ந்து
விடும் எனப் பாட்டி எண்ணவில்லை.

தெய்வம் நின்று கொல்லும் எனபதை உணர்ந்தவர், மனதைத் தேற்றிக் கொண்டார்.
ராதாவுக்காகவேணும் அதைச் செய்தே ஆக வேண்டிய நிலையில் இருந்தார்.

நீதிமன்றத்திற்கு நீர் நிரப்ப வந்த தண்ணீர் லாரி, பிரேக் செயலிழந்த காரணத்தால்,
ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் என்ற வகையில் வந்த நஷ்ட ஈடை வைத்து ராதாவைப்
பள்ளி படிப்பைப் படிக்க வைத்தார்.

அவளின் ஒவ்வொரு மேற் படிப்புக்கும், மாட்டுத் தொழுவம், மண்டி, கழனி என
ஒவ்வொன்றாய் அவர்களிடம் இருந்து மறைய தொடங்கியது. மேலும் வீட்டின் மீது பங்கு
கேட்க, பாட்டியின் மகள், ராதாவின் அத்தை, அவர் கணவர் மற்றும் பிள்ளைகளால்
ஏவப்பட்டு அங்கு வந்தார்.

அந்தப் பங்கிற்கு ஈடாய் மீதம் இருந்த தன் கழனியை எழுதிக் கொடுத்தார். பெற்ற
கடமை அதோடு முடிந்தது. ஆனால், அவர்கள் விற்ற எல்லா இடமும், ஏன் சில பல பொருள் கூட,
ராதாவின் அத்தை வீட்டிற்கு தான் செல்வமாய் சென்றது.

அவர்களுக்கு அது தெரியாமல் இல்லை, ஆனால் அங்கு சிதம்பர ஆட்சி நடப்பதால், தன்
மகளை சடைத்து பயனில்லை என்பதைப் புரிந்து, அவர்களின் ஆட்டத்திற்கு எல்லாம் ஆடாமல்
அசையாமல் தன் வைராக்கியத்தை நிலைநாட்டினார்.

மற்றவர்கள் பிச்சைப் போட்டு வாழ்ந்த வாழ்க்கையில் இப்போது தான் தலை நிமிர்த்தி
சுவாசிக்க தலைப்பட்டாள், அதற்குள் பிச்சைப் போட, அதுவும் வாழ்க்கைப் பிச்சைப் போட
வந்து விட்டான் ஒருவன்.

இதற்கு முன்னும் வாழ்க்கைப் பிச்சை தான். ஆனால் அது உயிர் துடிக்க மட்டுமாய்
இருந்தது. இப்போதும் வாழ்க்கைப் பிச்சை தான், ஆனால் உயிரோடு மனமும் துடிக்க போடப்
படுகிறது.

ராதாவின் கண்கள் ஓரம் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க, தடுப்பார் யாருமின்றி
உருண்டு ஓடிய அவளின் நீர் துளிகள், கடைசியில் ராமின் கைகளில் மஞ்சமென தஞ்சம்
கொண்டது.

ராம் மஞ்சம் கொள்வானா? தஞ்சம் கொள்வானா?

 

தூறல் தூறும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!